ரசவாதம்…

குமரன் கிருஷ்ணன்

“என்னம்மா ஆச்சு மாப்பிள்ளைக்கு? இவ்வளவு அவசரமா புறப்பட்டு வரச்சொன்னே…”  என்று கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்த கந்தசாமி, காய்ந்து போன சுரைக்காய்கள் மேல்புறம் வெட்டப்பட்டு குடுவையாய் வீடு முழுவதும்  ஆங்காங்கே வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அப்படியே பேச்சை நிறுத்தினார்.

“பயமா இருக்குப்பா அதான் உங்கள போன் பண்ணி ஊருலேர்ந்து உடனே கிளம்பி வரச் சொன்னேன்.  நீங்க கவலைப்படுவீங்கன்னு நிறைய விஷயம் உங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்பா. அவர் வேலையை விட்டு ரெண்டு வருஷமாச்சு. அவருக்கு ஏதோ புதுக்கிறுக்கு பிடிச்சுருக்குப்பா. தங்கம் தயாரிக்கப் போறேன்னு எங்கேயோ போறாரு என்னவெல்லாமோ கொண்டு வர்ராரு. அந்த ரூம் ஃபுல்லா என்னவெல்லாமோ புத்தகமா வாங்கிக் குவிச்சுருக்காரு. தானே பேசிக்கறாரு. அடிக்கடி கொல்லிமலைக்கு போறேன்னு கிளம்பி போயிட்டு வாரக்கணக்கா வீட்டுக்கே வரதில்லை.  சேர்த்து வச்சது எல்லாமே கண் முன்னாலேயே கரைஞ்சு போயிட்டுருக்கு…மூணு குழந்தைங்களை வச்சுகிட்டு என்ன பண்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்பா. பத்து நிமிஷம் முன்னாடிதான் வந்துகிட்டிருக்கேன்னு போன் பண்ணினாரு. அவர்கிட்ட பேசி எப்படியாவது பழைய மனுஷனா மாத்திருங்கப்பா…எல்லாம் சரியாகற வரைக்கும் என் கூடவே தங்கிருங்கப்பா,” என்று அழத்துவங்கினாள் லதா.

அவளின் முகமெங்கும் தென்பட்ட கவலையின் ரேகைகள் கந்தசாமியை நிலைகொள்ளாமல் குடுவைகளையும் வாசலையும் மாறி மாறி பார்க்க வைத்தது.

“வாங்க மாமா எப்ப வந்தீங்க…” என்றபடி நுழைந்தான் சுதாகர். சவரம் செய்ய மறந்து போன முகம், கவனம் இன்றி கலைந்து போன சிகை.

“என்ன மாப்ள இப்படி இருக்கீங்க என்ன இதெல்லாம்…உங்களுக்கு என்னாச்சு,” என்று கரிசனமும் கவலையுமாய் பதறினார்.

இடையில் புகுந்த லதா, ”அவருக்கு என்னாச்சா? அங்க பாருங்க அவரு பார்த்துகிட்டு இருக்கற வேலையை,” என்று டஜன் டஜனாய் வைக்கப்பட்டிருந்த மண் பானைகளை காட்டினாள்.

“எல்லாம் தண்ணி மாமா…ஒரு வருஷமா கொல்லிமலை முழுசா அலைஞ்சு எடுத்த தண்ணி,” என்று சிரித்தான் சுதாகர்.

“தப்பா எடுத்துகிடாதீங்க மாப்ள…இதெல்லாம் வேற மாதிரி இருக்கறவங்க செய்யறது. விளையாட்டா ஆரம்பிச்சு வினையாயிடும் பாருங்க…ஆரம்பத்துல உற்சாகமா இருக்கும். போகப் போக வெளிய வர வழி தெரியாம மனுசன உருக்கிடும் மாயை மாப்ள…ஆராய்ச்சிங்கற பேருல எத்தனையோ குடும்பம் உருத்தெரியாம போயிருக்கு, நமக்கிது வேணாம் இந்த வேலையெல்லாம். நம்பள உசுரோட சாப்பிட்டு ஏப்பம் விட்டுறுமப்பா, தயவு செய்து விட்ருங்க…உங்களுக்கு ஏதாச்சும் பணமுடைனா சொல்லுங்க அங்கிங்க புரட்டிகிடலாம் வேற ஏதாவுதுனாலும் மனசு விட்டுச் சொல்லுங்க…” என்றபடி கையெடுத்து கும்பிட்டார்.

“எத்தனைக்கு நாளைக்கு மாமா மெடிக்கல் ரெப்பாவே வண்டி ஓட்டறது முப்பதாயிரம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கறதுக்குள்ள நாக்கு தள்ளிரும்போல…மூணும் பொண்ணாப் போச்சு கட்டிக் கொடுக்க வேணாமா அப்பா விட்டுட்டுப் போன இந்த‌ வீட்டைத் தவிர வேறென்ன இருக்கு புதையலா வச்சிருக்கோம்,” என்றான் சுதாகர். 

“மாப்ள, சித்தர்கள் எல்லாம் யோகிங்கப்பா அவங்க தங்களுக்குன்னு சுயநலமா எதுவும் செஞ்சிகிட்டது  இல்ல. அதுனாலதான் இதெல்லாம் அவங்களுக்கு கைகூடுது. நாமெல்லாம் ரொம்ப சாதாரண மனுஷங்கப்பா,” என்றார்.

சுதாகரோ, “நான் கூட எனக்காக எதுவும் செய்யல மாமா. லதாவுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தான் செய்யறேன். அதனால எனக்கும் கைகூடும் இல்லையா,” என்றான்.

நீண்ட விவாதம் தோல்வியில் முடிந்ததில் துவண்டு போய் அமர்ந்தனர் லதாவும் கந்தசாமியும்.

ஏதும் நடக்காதது போல, “டீ போட்டு கொண்டா லதா,” என்றபடி சாக்பீஸால் 1,2,8,9,10,30,48,60 என்று பானைகளின் மீது எழுதி வைத்தான். ஒரு பேப்பரை விரித்து, கொண்டு வந்திருந்த பையை கவிழ்த்தான். மாம்பழம், வெற்றிலை,வெங்காயம், பெருங்காயம் , வசம்பு என்று விதவிதமாய் பேப்பரில் விழுந்தன.  அதை தனித்தனியே எடுத்து ஒவ்வொரு பானையின் முன்னும் வைத்தான்.

டீ எடுத்த வந்த லதா “இது எங்க போய் முடியுமோ,” என்று தலையிலடித்தபடி டிவியை ஆன் செய்து பார்க்கப் போனாள். பெருங்காயத்தை ஒன்றாம் நம்பர் பானையிலும் மாம்பழத்தை பிழிந்து 2ஆம் நம்பரிலுமாய் போட்டபடி வந்து, வெற்றிலையைக் கசக்கி 60ஆம் நம்பரில் போட்டு ஒரு சாக்கை போட்டு அனைத்து பானைகளிலும் வெளிச்சம் புகாமல் மூடிவிட்டு, ”என்ன படம் போட்டிருக்கான்,” என்று கேட்டபடி லதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

பாசம் ஒரு புறமும் பயம் மறுபுறமுமாய் அலைக்கழிக்க,  என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள் லதா. “கவலைப்படாத. நான் சரியா போயிட்டிருக்கேன். இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ பாரு நீ என்ன நடக்குதுன்னு,” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

கந்தசாமி தன் நண்பருடன் வீட்டுக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பானையின் வாயருகில் சென்று நன்றாக மூக்கை உறிந்து “இல்லை இல்லை” என்று சொல்லி மண்டியிட்டபடி நகர்ந்து கொண்டிருந்தான் சுதாகர்.  கடைசிப் பானையைக் கடந்தபின் இயல்புக்கு வந்தவன் போல்,  “அடடே பாக்கவேயில்ல வாங்க,” என்றான்.

விரக்தி கலந்த சிரிப்புடன் கந்தசாமி “இவர் என்னோட ஃபிரண்டு உங்கள மாதிரியே ஆராய்ச்சியில ஆர்வம் உள்ளவர் அதான் கூட்டி வந்தேன்,” என்றார். அவனிடம் வந்து கைகுலுக்கியபடி “ஐம் கண்ணன். கந்தசாமியோட க்ளோஸ் பிரண்டு. டாக்டரும் கூட. பிரண்டு-டாக்டர் இதுல உங்களுக்கு எது விருப்பமோ அப்படி நினைச்சு என் கூட பேசலாம்” என்றார்.

“எதுக்கு மாமா சுத்தி வளைக்கறீங்க எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சான்னு பாக்க டாக்டரை கூட்டி வந்தீங்களா,” என்று சொல்லிச் சிரித்தான்.

கண்ணன் மிகவும் நட்பான தொனியில், “எனக்கும் இந்த மாதிரி விஷயங்களிலே ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு. சித்தர்களோட மகிமை பத்தியெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்கன்னு விளக்கமா சொன்ன என்னால புரிஞ்சுக்க முடியும்,” என்றார், கந்தசாமியையும் லதாவையும் ஓரக்கண்ணால் ஜாடை காட்டியபடி.

 “அந்த கண்றாவியை அவர் வேற விளக்கமா சொல்லணுமா?? சம்பாதிச்சதை எல்லாம் புஸ்தகத்துலையும் பானையிலையும் போட்டு ஒழிச்சாச்சே… போங்க போய் அந்த ரூமுக்குள்ளாற போய் பாருங்க,” என்றாள் லதா.

அறை முழுவதும் சிதறிக் கிடந்தன புத்தகங்கள். இதுவரை கேள்விப்பட்டிராத பெயர்கள்…”மலையாள எல்லை பூரிமலை செவ்வாழை மரக் கற்பம்”, “கருவூரார் வாத காவியம்”, “கொங்கணர் முக்காண்டம் 3000” , “குதம்பை கருங்கரிப்பான்”, “புலஸ்தியர் 300”, “நாள் வேதி உதகம்” என்று பெயர்களை வாசித்துக் கொண்டே போன டாக்டரின் புருவங்கள் உயர்ந்து கொண்டே போயின. சுவர்கள் முழுவதும் கிறுக்கல்களாய் ஏதேதோ பாடல்கள்.

“பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே”

என்ற பாடலில் “உதஞ் செய்யும்” என்பதை சிவப்பு மையால் வட்டமிட்டிருந்தான்.

கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே…”

என்று சுவரில் ஒட்டியிருந்த மற்றொரு பேப்பரில் “பத்துக்கு ஒன்று மீட்கவே உருக்கி” அடிக்கோடு போட்டிருந்தான்.

“வேதிக்க கொங்கணவர் எழுகடை என்றார்
எழுதாமல் இது ரெண்டை மறைத்துப் போட்டார்…”

என்று இன்னொரு கிறுக்கல். அதில் “ரெண்டை மறைத்து” என்பதின் மீது கேள்விக் குறி…

“பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவிமதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆட்டும் போது
நேர்மையுடன் காரம் விட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்லொண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே…”

என்னும் வரிகளை பெரிய பேப்பரில் பிரிண்ட் எடுத்து ஒட்டியிருந்தான். அதில் ரவிமதி, ஏழு, பரி, திகள், காரம் என்று நிறைய சிவப்பு மை வட்டங்கள்…

ஹாலுக்கு வந்த டாக்டரின் முகம் மிகத் தீவிரமாய் மாறியிருந்தது. “என்ன சார் நான் பைத்தியமா இல்லையா?” என்றான் சிரித்தபடி.

 “இந்த பானையில எல்லாம் என்ன இருக்கு மிஸ்டர் சுதாகர்,” என்றார் டாக்டர்.

 ரூமுக்குள் சென்று வந்தபின் டாக்டருக்கு தன் மேல் மதிப்பு கூடிவிட்டதோ என்று தோன்றியது அவனுக்கு.

“சார், மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள‌ ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும். உதாரணமா கொல்லிமலை உச்சியில இருக்கற குகைகளுக்குள்ள இருக்கற குழித்தண்ணிய சித்திரை பங்குனியிலதான் எடுக்கணும். இந்த மாதிரி தேங்கற தண்ணிக்கு உதக நீர் அப்படின்னு பேரு.  நாம் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி லேப்ல டைட்ரேஷன் செஞ்சிருப்போம். சித்தர்கள் அந்த காலத்திலேயெ பயங்கரமான டைட்ரேஷனெல்லாம் பண்ணியிருக்காங்க. கெமிஸ்ட்ரி, திரவத்தையும் திரவத்தையும் தான் டைட்ரேட் பண்ணும். ஆனா சித்தர்களோ, திடத்தையும் திரவத்தையும் அல்லது திரவத்தோட கலரையும் திடப்பொருளோட வாசனையையும் கூட டைட்ரேட் பண்ணிருக்காங்க…இந்தப் பிராஸஸை சித்தர்கள் “வேதி” அப்படின்னு சொன்னாங்க. உதக நீர் வேதியில பத்து வகை இருக்கு. அதைத்தான் நான் செஞ்சுகிட்டிருக்கேன். இப்படி டைட்ரேட் பண்ணின உதக நீரை வச்சு என்ன வேணும்னாலும் செய்யலாம். என்ன மலைச்சு போய் நிக்கறீங்க?  இத வச்சு தங்கம் என்ன? என்ன வேணாலும் செய்யலாம். உங்களை கல்லாக் கூட மாத்தலாம். வேணும்னா அந்த கல்லை திருப்பி உங்களாவே ஆக்கலாம். அவ்வளவு ஏன் உங்களை இருபது வயசு பையனாக் கூட மாத்திரலாம்…,” என்றான்.

கந்தசாமி தன்னையறியாமல் “திருச்சிற்றம்பலம்,” என்றார்.

 “இங்க நம்பர் போட்டு வச்சுருக்கேனே, அந்த ஒவ்வொரு பானையிலேயும் உதக நீரோட வேற வேற பொருள் சேர்த்து போட்டிருக்கேன். அந்த பொருளோட வாசனை இல்லாம போக நாள் கணக்கு இருக்கு. அந்த கணக்குதான் சாக்பீஸ்ல போட்டிருக்கற நம்பர். இதுக்கு “நாள் உதகம்” அப்படின்னு பேரு. அப்படி வாசனை இல்லாம மாறின உதக நீர், யூஸ் பண்ண ரெடியாயிருச்சுன்னு அர்த்தம். அப்புறம் அடுத்த ஸ்டேஜ் போயிரலாம்,” என்றான்.

டாக்டரிடமிருந்து பெருமூச்சு கிளம்பியது.

 “இவரு சும்மா கண்டதையும் படிச்சிட்டு மந்திரம் ஏதோ செய்யப் பாத்துகிட்ருக்காரு. அங்க பாருங்க தலைமுடியெல்லாம் கட்டி வச்சிருக்காரு,” என்று குறுக்கிட்டாள் லதா.

அவள் காட்டிய திசையைப் பார்த்த கந்தசாமியிடமும் டாக்டரிடமும், “மந்திரமில்லை. சயின்ஸ் பிளஸ் நம்பிக்கை. அது தலைமுடியில்லை குதிரைமுடி. உதக நீருக்குள்ள இருக்கற எதையும் குதிரைமுடியால தான் எடுக்கணும். உதக நீரை நம்ம இஷ்டத்துக்கு தொட முடியாது, ஒரு கலத்துலேர்ந்து இன்னொரு கலத்துக்கு மாத்த முடியாது. பவர் போயிடும். அதையோ அல்லது அதை தொடற பொருளையோ குதிரை முடி வச்சு மட்டும்தான் நாம் தொட முடியும். ஏன் குதிரைமுடி மட்டும்னு நீங்க நெனைச்சா நீங்க கோரக்கர் கிட்டத்தான் இந்த கேள்வியை கேக்கணும்,” என்ற சுதாகரிடம் விலகாத அதிர்ச்சியுடன் கைகுலுக்கி,  “நா அப்பப்ப வந்து பார்க்கிறேன். பெஸ்ட் ஆப் லக்,” என்று கூறி விடைபெற்றார் டாக்டர். 

வாசல் வரை வந்த லதாவிடம் “ஹி இஸ் நாட் நார்மல்.  ஆனா உடனே அட்மிட் செஞ்சா அவர் வயலண்டா பிஹேவ் செய்யலாம். அது இன்னும் ஆபத்து. கொஞ்சம் ஜாக்கிரதையா நாம அவரை அப்ரோச் பண்ணனும்,” என்று கிளம்பினார்.

வாரம் ஒரு முறை வந்து பார்த்தார் டாக்டர். சுதாகரின் செய்கைகளில் விசித்திரத்தன்மை ஏறிக்கொண்டே போனது. இரண்டு மாதங்கள் ஓடின.

டாக்டர் வரும் பொழுது குதிரை முடியில் கட்டிய செப்புத் தகடுகளை சுரைக்குடுவைக்குள் இருக்கும் உதக நீருக்குள் ஏதோ முணுமுணுத்தபடி இறக்கிக் கொண்டிருந்தான் சுதாகர். அவனின் தாடி மார்பு வரை வளர்ந்து பார்ப்பதற்கு சித்தன் போலாகியிருந்தான்.

கந்தசாமி பயமும் பக்தியும் கலந்த நிலையில் அதை பார்த்தபடி இருந்தார். “வாங்க டாக்டர். கிட்டதட்ட முடிஞ்சிருச்சு. நாளைக்கு காலைல ரிஸல்ட் தெரிஞ்சிரும்,” என்றான் சலனமற்ற முகத்துடன்.  

“பத்து காம்பினேஷன் போட்டிருக்கேன். எப்படியும் அதுல‌ ஒன்னாவது கிளிக் ஆயிரும்,” என்றவனின் கண்கள் தீந்தழல் போல் ஜொலித்தன.

டாக்டரால் அவன் கண்களை நேர் கொள்ள முடியவில்லை. வாழைக்காயை பிளந்து அதில் துத்தநாகமும் பாதரசமும் கலந்து குதிரைமுடியில் கட்டி ஒரு குடுவையில் போட்டிருந்தான். மற்றொரு இடத்தில் பூசணிக்காய் முழுவதும் துளையிடப்பட்டு அதில் கந்தகமும் பாதரசமும் இடப்பட்டு உதகத்தில் மூழ்கும்படி தொங்க விட்டிருந்தான்… திரும்பிய இடமெல்லாம் ஏதேதோ குடுவைக்குள் என்னவெல்லாமோ தொங்கியபடி இருந்தன. காட்டுக்குள் மழை பெய்கையில் அடிக்கும் ஒரு பச்சை வாசனையைப் போல அந்த வீடு முழுவதும் ஒரு மணம் பரவியிருந்தது. ஆனால் எந்தக் குடுவையிலிருந்தம் அந்த வாசனை வரவில்லை.

“பாத்துக்குங்க…” என்று சொல்லிவிட்டு மிகுந்த யோசனையுடன் நகர்ந்தார் டாக்டர்.

விடிகாலை லதாவின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்தார் கந்தசாமி. கண்கள் குத்திட்ட நிலையில் 60ஆம் நம்பர்  பானையின் அருகில் கிடந்தான் சுதாகர். வெறி பிடித்தவள் போல் பானைகளையும் குடுவைகளையும் வீசியெறிந்தாள் லதா. தெருவே கூடி வேடிக்கை பார்த்தது. போலீஸ்…போஸ்ட்மார்ட்டம்…விசாரணை…இத்யாதி…இத்யாதி…

அடுத்த நாள் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு செல்போன் அழைப்புகள் அடுத்தடுத்து வந்தன.

அழைப்பு 1: “போஸ்மார்ட்டம் ரிபோர்ட் வந்துருச்சு சார். பெகூலியரான கேஸ். உள்ள கொஞ்சம் மெர்க்குரி டெபாஸிட் ஆயிருக்கு. அதோட, காப்பர் செடிமெண்ட்ஸும் இருக்கு. ஆனா அவர் இது எதையும் சாப்பிடலை. ரிபோர்ட் அனுப்பியிருக்கேன். ஷுட் பி இண்ட்ரஸ்டிங்.”

அழைப்பு 2: “சுதாகர் கேஸ்ல எல்லா லேப் பிராஸசிங்கும் முடிஞ்சிருச்சு. ஒரு முக்கியமான விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் …அவரோட சட்டைல அங்கங்க கிளிட்டர்ஸ் மாதிரி கிரான்யூல்ஸ் இருந்தது. லேப்ல டெஸ்ட்ல ஒரு சர்பிரைஸ். நம்ம ஆசாரிகிட்ட காட்டியும் கன்ஃபர்ம் செஞ்சிட்டேன். சொக்கத் தங்கம் சார் சொக்கத் தங்கம். எப்படியும் ஒரு 50 கிராம் தேறும். இன்னும் ஃபைல் போடலை. நேர்ல வாங்க பேசி முடிவு பண்ணுவோம்.”

கந்தசாமிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர், “சாரி, போஸ்ட்மார்ட்டத்துல‌ சுதாகர் மெர்க்குரி முழுங்கி தற்கொலை பண்ணிகிட்டார் அப்படின்னு ரிப்போர்ட் வந்திருக்கு…” என்று சொல்லிவிட்டு பாலுவை பார்க்க தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார்.

***

One Reply to “ரசவாதம்…”

Leave a Reply to SaranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.