பேரழிவின் நுகத்தடி

உத்ரா

பேரழிவின் நுகத்தடியில் இணைக்கப்பட்ட இரு கவிதைப் புத்தகங்கள் இவை என்றே சொல்லலாம் – ‘Toxican and Arachne[1].

ஜோயெல் மக்ஸ்வீனி, (Joyelle Mcsweeney)  அவருடைய மூன்றாவது குழந்தையை  சுமந்திருந்த வேளையில் எழுதப்பட்ட ‘டாக்சிகானில்’ சொல்கிறார்: “என் உடலை நச்சு உள்ளதாக, பயங்கரமானதாக நான் கற்பனை செய்கிறேன்; அது கறைகளின் கூடு அல்லது சப்ததாரைப் பொறி, உள்ளே  தலையற்ற கொக்கின் உடல்; அக் குழந்தை வரப்போகும் உலகும் கொல்லுகிற ஆபத்துக்களின் உறைவிடம். சதைப் பற்றுக்காக இரக்கமின்றி  வளர்க்கப்படும் தொழிற்சாலைக் கோழிகள் உற்பவிக்கும் வைரல்கள், தங்கள் நீண்ட நெடும் வாய்க்கொடுக்குளால் (இயற்கையாக நிகழ வாய்ப்பற்ற) கிருமிகளை மனித உடல்களில் செலுத்தி  நீலநிற  விஷங்கள் கக்கும் ஜீகா கொசுக்கள் நிரம்பிய உலகம்.” இக்கவிதைகள்  அடர்த்தியான வண்ணக் கலவைகளின் மீது மீண்டும் மீண்டும் பயணித்து ஓவியத்திலிருந்து வெளி வருவதான தோற்றம் ஏற்படுத்தி[2]  பயங்கரமான செய்திகளை, உளைச்சல்களைச் சொல்கின்றன.

ToXiCon இல் ‘T’யும் ‘X”ம்’ ‘C’யும் பிறழ்வடைந்து ஒரு சொற்றொடரிலிருந்து மற்றொன்றாகப் பயணிக்கின்றன.  அராக்னே [3] இதனுடைய தொடர்ச்சி.

எட்டு பவுண்ட் எடையும், கரும் கேசமும், போராடினாலும் இயங்கா இதயமும், வாழ்வதற்கு விசித்திரமாக விதிக்கப்பட்ட 13 நாள்களும் கொண்டு பிறந்த குழந்தை.

மக்ஸ்வீனி பயப்படுகிறார்: “என் பெருங்கோபத்தின் குருதிக் கசிவில் பயம் வருகிறது. நான் கசிவு தொடங்குமிடத்தில் படுத்திருக்கிறேன். வீட்டை எரியூட்டிவிடுவேன்; தெருவில் இறந்து கிடப்பேன்.” ‘டாக்சிகான்’ கொடுங்கனவை நோக்கி இழுத்துச் செல்லும் பாதாளம் என்றால் ‘அராக்னே’ தாளமுடியாத, கற்பனை செய்ய இயலாத ‘கோடா’.[4]

Norte Dame பல்கலையில் ஆசிரியராகப் பணிபுரியும் மக்ஸ்வீனி இதற்கு முன்பாக மூன்று கவிதைத் தொகுப்புகளும், நாவலும், வசன கவிதையும், கதைகளும், தன்னைப் பற்றி ஆழ்ந்த குறிப்பும் எழுதியுள்ளார். (“The Necropastoral: Poetry, Media and Occults”). ‘நெக்ரோ பாஸ்டோரலில்’ (தர்க்க ஒழுங்கற்ற, வரையறைக்கு உட்படாத) அவர் எழுதுகிறார்: “இயற்கை விஷப்படுத்தப்பட்டு விட்டது, பிறழ்கிறது, மாறுபடுகிறது, விசேஷமாகக் கவர்கிறது, தீய பாதிப்புகளை, விளைவுகளைக் கொண்டுவருகிறது.”

இறந்தவர்களின் வார்த்தைகளோடு உயிரோடிருப்பவரின் சொற்கள் ஒன்றாகக் கலக்கின்றன. தங்கள் முன்னோர்களின் மொழியை சற்றேனும் அகழ்ந்து எடுத்து கவிஞர்கள்  கவிதைகளை எழுதுகிறார்கள். கசிந்தோ, கலந்தோ, அவர்களின் மொழியுடன் தன் மொழி இணைவதை அவர் இவ்வாறு சொல்கிறார் : “வண்டுகள், பூச்சிகள், கிருமிகள், களைகள் அறியா வண்ணம் நுழைந்து தங்கள் வேலையைத் தொடர்வது போல் என் மொழி அமைந்துவிடுகிறது.” அமானுஷ்யத் தன்மை இருந்தும், மக்ஸீவீனிக்கு  கவிதை யேட்ஸைப்[5] போலவோ,ஜேம்ஸ் மெர்ரிலைப்[6] போலவோ ஓர் ஆவி உலக அனுபவமன்று;அது மொழித் தொற்றுள்ள உயிர் ஆபத்து.

அவரது படைப்புகள் சாலினியரின் வாக்குபோல, குறி சொல்வனபோல அமைந்திருப்பதால், உலகை ஆட்டிப்படைக்கும் இந்தத் தொற்று நோய்  பரவியுள்ள நேரத்தில் வெளியானதில் விசித்திரம் ஒன்றுமில்லை. ஒலியின் வெளிப்பாடுகளைத் தளர்த்தி அதை எழுத்தில் மறிப்பது அவரது பாணியாக இருக்கிறது. அவரது “Toxic Sonnets: A Crown for John Keats”-  பதினான்கு, பதினான்கு வரிக் கவிதைகளில் பல்நிலைத் தொடர் அருவியெனக் கொட்டுகிறது. காச நோயின் எலும்புடைப்பால் கீட்ஸ்[7] இறந்ததைப் பற்றி மக்ஸ்வீனி, தாம் தங்கியிருந்த வழிப்போக்கர் விடுதியில் ஒரு திரையில் படிக்கிறார், அந்தத் திரையின் ஒளி ”அறையைச் சுற்றிப் போர்த்தி ஒளிரச் செய்தது.”

இன்று மீண்டும் உயிர் பெற்று வரும் ‘சொனெட்டின் மகுடம்’ எனப்படுவது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாக்கிய அடுக்குகள் எனலாம். ஒவ்வொரு கவிதையின் கடைசி வரியும் சிதறிச் சென்று அடுத்த கவிதையின் முதல் வரியென வரும். இணையமாகிய முயல் வளையின் வசீகரம், அதில் சிக்குண்டு மீற முடியாமல், அதைப் பற்றும் மனிதர்கள், என்ற இந்தச் சுழலைச் சொல்ல மிகவும் ஏற்ற படிவம் இதுதான். இணையத்தில் திறந்து வைக்கப்பட்ட தளங்களின்  வாயிலாகக் கொள்ளும் பெருமிதம்தான் எத்தனை  பயங்கரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. “சாவின் முகவரியில் வாழ்வு தன் பணத்தை மாற்றுகிறது.”

டாலர் நோட்டுக்கள்: வதைத்து விலங்குகளைக் கொல்லும் தளங்கள்:

டி- திசுக்கள்:[8] இரசாயனச் சிதறல்கள்; திருகுச் சுழற்றல்கள்: எலும்புகளில் பற்களைப் பதித்த தீக்கங்குகள், அதைத் தங்களின் செயல் முடுக்கிகளெனக் கொள்ள: முரட்டுத்தனமான, வேட்டை விலங்குகளென படமெடுக்கும் கருவியுடன் ட்ரோன்கள்: சிற்றோடையென ஆயிரம் மடிப்புகளுடனான சரிகை நாடாக்கள் தொண்டையில்: பணத்தாலோ, காம ஊக்கத்தாலோ, பிணங்களை உயிர்ப்புடன் காட்டும் முனைப்புகள்: சிறப்பு விருந்தாளி: கல்லறையின் தொடர்பாளர்கள்:

நீக்கியக் கோப்புகளைக் கொணரும் செயலி: சேமியுங்கள்: கொட்டி வையுங்கள்: கொடிய பாம்பினை ஒத்த குழாய் வழியே கட்டியை அகற்றும் கீமோ.

“உறவுகள் எங்கும் நிற்பதில்லை” என்று ஹென்றி ஜேம்ஸ் எழுதினார். ஆனால், மக்ஸ்வீனி இதை அழகாக வடிவமைத்து, தன் பித்தைக் குழைத்து அதை நிலையிழக்கச் செய்கிறார். வரி இடைவெளிகள் உந்திச் செலுத்துகின்றன; சுழற்றியும் எடுக்கின்றன. “எலும்பும், வளர்ப்பும்” என்ற சொற்றொடரில் ‘வளர்ப்பு’ ஒரு பெயர்ச் சொல்லாக வருகிறது, அதுவே ‘தன் செயல்முடுக்கி’ என்று இணையும் சொற்றொடரில் வினைச்சொல்லாக மாறுகிறது. செல்வ வளத்தையோ, குருதிச் செழுமையையோ குறிக்கும் ‘தசைத்திரள்’ பணத்தையும், காமப் பேராசையையும் சுட்டுகிறது. இம்மாதிரியான உணர்வினைச் சொல்ல சில கவிஞர்கள் சிரமப்படுவார்கள். இவரோ, வெள்ளத்தில் மூழ்கி வடிவத்தை அடைந்துவிடுகிறார். ‘வாழ்க்கைச் சரிதத்தில்’ (Bio Pic) தன்னுணர்வற்ற கூடல்களாகச் சொற்றொடர்கள் அமைந்து வருவதுபோல் தோன்றுகிறது; அல்லது அச்சமூட்டும், ஊகிக்கக்கூடும் தொழில்நுட்பம் முந்திக்கொள்ளும் சுய திருத்தல்கள், சொல்லப்படக்கூடிய வாக்கியங்கள்.

“அழிக்கப்பட்ட இடத்தில் தொங்கும் காற்றாடிபோல், உங்கள் மின்னணுப் பொருட்களில் நீங்கள் நீக்கும் ஒரு ‘வி…சை’ காற்றில் ஆடுகிறது.”

நம் சாதனங்கள், நம்மைப்பற்றி அனுமானித்து, முகம் காட்டாமல் மறைந்து நின்று சில நேரங்களில் ஒத்தபடியும், பெரும்பாலும் எதிராகவும் எழுதும் போக்கினை அவர் இவ்வாறு சொல்கிறார். “Potentate, Pomegranate, palm or pomade, hand grenade.” நாம் ‘அ’ என்று தட்டச்சுகையில்  தொழில்நுட்ப மென்பொருள் ‘அன்பு’ ‘அறம்’, ‘அன்னம்’ என்று எகிறி வந்து நம் சிந்தையைத் திசை திருப்பிவிடுவதை அறிவோமே! தன்னிச்சையாக அவை முந்துறுவது எத்தனைக் கடுப்பு!

இவரது  தீவிரமான உள்வாங்குதலை எழுதும் எழுத்தாளர்கள், உடலில் விழும் பலத்த தொடர் அடிகள்போல், அவரது பாணியில் நிலைகுலைந்து போகிறார்கள். அந்த வன்முறை, அந்தப் பேரழிவு, அந்தத் தொழில்நுட்ப வண்ண நிழற்பட முறை, அந்த நரகக் காட்சிகள் தாங்குவதற்குக் கடினமானவையே. ‘டாக்ஸிகான்’ அந்தக் கர்ப்பத்தின் வெறுமையைக் காட்டும் ஒரு கடவுள் வழிபாடு; அந்த நிலையை நச்சு வீர்யத்துடன்  விளக்கும் ஒன்று. அவரை மருத்துவ மனையின் அட்டவணைக் குறிப்பேடுகள், குற்றங்களைக் காட்சிப்படுத்தும் நிழற்படங்கள், மோப்ப வளைகள் எல்லாமே அதிர வைக்கின்றன. ‘கைக்கடிகாரம்’ என்பது ‘கைக்குண்டு’ என மனதில் ஒலிப்பதால் கொடூரமான விபத்துக்கள் அவர் மனக் கண் முன் எழுகின்றது. அவர் சொல்கிறார், “இது, பதின் பருவத்தினர் போக்குவரத்து வழியைக் கைப்பற்றுகையில், அவளது பின் சுமையும் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சினை ஒத்துத் தானாகவே அந்த நெரிசலில் வழுக்கிச் செல்வதுபோல.”

‘அராக்னே’ சகுனத்துடன் தொடங்குகிறது; தன் கருவில் இருக்கும் மகளின் வளர் சிதை மாற்றம் அவருக்கு, உடைபட்ட குருவியின் முட்டைகளின் இடத்தில், கதிரியக்க மணல் வழிப்பாதை எனத் தெரிகிறது.  தன் தனிப்பட்ட இழப்பைச் சொல்ல, மக்ஸ்வீனி செம்மையாக்கிப் பயன்படுத்தும் தனித்துவமான மொழி, அவலக் கேலி போல நம்மை பயப்படுத்துகிறது. “தயாராக இல்லாத மனிதனும்” கூட “பேரழிவின் விருந்தாளி” யாக மாறுவது இதற்காகத்தானா என்று ‘தி ப்ரிலூட்’டில் வேர்ட்ஸ் வொர்த் தன்னைத்தானே கேட்டுக்கொள்வதை இவரும் எதிரொலிக்கிறார். பிறந்த குழந்தைகளுக்கான ட்ரெஃப்ட் சோப்[9] இவருக்குக் குழந்தை இறக்கப் போவதின் அறிகுறியெனத் தோன்றுகிறது. (என்ன ஒரு பெயர்-Dreft plus bereft- இழுத்து அகற்று) இதைத் தொடர்ந்து வரும் பத்தி கடும் இருள் அவலத்தின் குரலென ஒலிக்கிறது.

“ரோஜாவே, பாழான குருதிக்கட்டிகளின் வரைபடமே,
கண்களை எனக்காகத் திறக்க வேண்டாம் இப்போது
நாங்கள் இன்னமும், உனக்கான ‘ட்ரெஃப்ட் சோப்பிற்காகவும்,
 கல்லறையை வெளிக் கொணர்வதற்காவும் தயாரித்துக் கொண்டுள்ளோம். நான் சொல்வதை அறி மகளே! அந்தக் குழாய்-ஆம், மூடியிட்ட அந்த நெகிழித் தொட்டிலில் உன்னை வைத்து, உருட்டி…”

குழந்தையை இழந்தவர்கள், அந்தத் துயர் ஒரு கவிதையாக தடயவியல் நுணுக்கங்களுடன் வரக்கூடும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; சிலர் அது அவ்வாறு இடம் பெற வேண்டாமெனவும் விரும்புவார்கள். ‘அராக்னே’ யில் அவர் அதைத்தான் செய்கிறார். மக்ஸ்வீனி இந்தக் கவிதையை எழுதியிருப்பது பற்றி என்னால் கற்பனை செய்ய இயலும் -அது வெகு விரைவில் வந்த புதிய துக்கம், கவிதை மொழியில் துயரமெனச் சுருள்கிறது, பாழ்பட்ட எதிர் -மகிழ்ச்சியாகிறது. அந்தத் துக்கம் நிகழ்ந்த பின்னரும், சுமந்திருந்த போது மூளையில் சுரந்த இரசாயனங்கள் குளமெனத் தேங்குகின்றன. முகநூலில், வண்ணப் படங்களில் பெற்றோர்கள் பார்த்த, குழந்தைக்கான பொருட்களான, பக்கங்களில் தடுப்புடனான சிறு படுக்கை, மகிழ்வான சுவரொட்டிகள், ட்ரெஃப்ட் சோப், போன்றவை, ‘இரங்கற்பாவில்’ வருகின்றன.

“பேரழிவு என் மகுடம்.” என்பவர் மேலும் சொல்கிறார் “அது என்னைத் தக்க வைக்கிறது.” ஆனால், இதற்கான விலை மிக அதிகம். கீட்ஸ், ஆன் ப்ராட்ஸ்டீர்ட், தாமஸ் ப்ரௌன் போன்ற முந்தையத் தலைமுறை கவிஞர்களிடம் கடன் வாங்கி, அவர்களின் ஆவி நிலவும் வெளியில், தொன்மையான அந்த அழகிய ஆங்கிலச் சொற்களில், அவர் சொல்கிறார்: “நான் என் தற்பெருமையைக் கட்டளையிட்டு அழைக்கிறேன்.”

“கைவிடப்பட்ட அந்தக் குழந்தைகள் பள்ளியில்
என் விமானத்தை மோதுங்கள்
&என் மூளைப் புயலை நொறுக்குங்கள்
சிதைந்த அந்த அறையில்
அண்டத்து விளிம்பில்
பெண்குறியான விண்மண்டலத்தின்
ஓரங்களில் படர்ந்த
பெயரற்ற களை போல,
பிராணவாயுவின் தேவையால்
தன்னையே உண்ணும்
ஆட்டின் தீனக்குரலில் கத்தும்
அந்த என் மூளைத்தண்டைச்
சுட்டிச் சொல்கிறேன்.”

அறிவார்ந்தும், பயங்கரமாகவும், இருக்கும் இந்த நூலில், இனிய மூளைப்புயலுக்குப் பதிலாக,[10] காமிகேஸ் விபரீதம் போல் விலங்குகளின் மூளைத்தண்டின் எதிர்செயல்பாடுகளைப் பார்க்கிறோம். முழுமையான தோல்வி: முறிவு, துகளெனச் சிதறுதல். இப்போது நிலைமை முற்றிலும் மாறுபட்ட நிலையில், குழந்தைகளின் பள்ளியில் இசைக்கப்படும் அந்த பாப் பாடல், ஓர் அவல நகைச்சுவையென ‘நிரந்தரம்’ என மெதுவாக ஒலிப்பதை நீங்கள் கேட்கிறீர்கள்.

***

தமிழில் தழுவி எழுதப்பட்ட இக்கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் பிரசுரமான இடம்: https://www.newyorker.com/magazine/2020/04/13/joyelle-mcsweeneys-poetry-of-catastrophe

இந்த விமர்சனத்தின் இலக்கான கவிதைத் திரட்டுகளை எழுதிய கவிஞர் ஜோயெல் மக்ஸ்வீனி  1976-ல் பிறந்தார்.  நாவல், கவிதை, நாடகம், விமர்சனம் என்று பல்வேறு தளங்களில் செயல்படுபவர்.

இங்கிலிஷில் இந்தக் கவிதைகளைப் பற்றிய விமர்சனம் எழுதியவர் Don Chiasson. 2007லிருந்து ந்யூயார்க்கரில் தொடர்ந்து எழுதி வரும் இவரும் ஆசிரியர், கவிஞர், விமர்சகர்.


[1] Toxicon and Arachne- 112 pages/ Nightboat Books/ April, 2020.

[2] Impasto – இது ஓவியம் தீட்டுவதில் ஓர் உத்தி. ஒளி தீவிரமாக ஒரு பரப்பில் வீழ்வதைச் சித்திரிக்கப் பயன்பட்ட முன் கால உத்தி நவீன கால ஓவியர்கள் கையில் சுய வெளிப்பாட்டுக்கான முறையாக மாறி இருக்கிறது. சாயத்தைத் தடித்த திட்டுகளாகப் பரப்பில் விட்டு வைப்பது இதில் ஒரு வகைப் பயன்பாடு. வேறு பல வகைகளும் உண்டு – உதாரணமாக, வான் கோவின் பாணியிலிருந்து ஜாக்ஸன் போல்லாக் பாணி எத்தனை வேறுபடுகிறது என்று நாம் கவனிக்கலாம்.

[3] ‘Arachne’ கிரேக்க-ரோமானிய புராணங்களில் வரும் ஒரு பாத்திரம்; நூற்புத் திறன் மிக்க சிலந்தி.

[4] Coda- இசைத் தொகுப்பின் முடிவுக்குப் பிறகு கொடுக்கப்படும் ஓர் இணைப்பு. இது பல நேரம் மையத் தொகுப்பிலிருந்து மாறுபட்ட அமைப்பைக் கொண்டிருக்கலாம்.

[5] வில்லியம் பட்லர் யேட்ஸ் – ஐரிஷ் கவிஞர்.

[6] ஜேம்ஸ் மெர்ரில் – அமெரிக்கக் கவிஞர்; ‘டிவைன் காமெடீஸ்’ கவிதைக்காக புலிட்ஸெர் பரிசு பெற்றார்.

[7] ஜான் கீட்ஸ் – 19ஆம் நூற்றாண்டின் இங்கிலிஷ் கவிஞர். கிளர்வுதரும் புதுப் புனைவுகளைக் கொணர்ந்த கவிஞர்களில் இரண்டாம் தலைமுறைக் கவிஞர் என்று அறியப்படுபவர். பார்க்க: https://www.poetryfoundation.org/poets/william-butler-yeats

[8] T Cells

[9] Dreft- பிறந்த குழந்தைகளின் துணிகளின் சலவைக்கான டிடெர்ஜெண்ட். மிக மென்மையான தோலுக்கு ஒவ்வாமையைக் கொணராமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மிதமான சலவைத் தூள் என்று விளம்பரம்.

[10] ஜப்பான் மொழியில் இதற்கு  தெய்வீகக் காற்று எனப் பொருள். இரண்டாம் உலகப் போரில் தற்கொலை வான் படையினர்  தங்கள் விமானங்களை எதிரிகளின் போர்க் கப்பல்களில் மோதி தாங்களும் இறந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.