
கௌஹாத்தியிலிருந்து திப்ருகார் செல்லும் ரயில்களை திடீரென ரத்து செய்திருந்தது ரயில்வே நிர்வாகம். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டியிருந்தது.
செய்தியைப் படித்ததும் ராகவன் நொந்து போனார். அவரும் அவருடைய யாத்ரா குழுவினரும் நாளை பயணம் செய்யவிருந்த ரயில்தான் ரத்து செய்யப்பட்டிருந்தது. திப்ருகார் வழியாக தீன் கோசின் செல்லும் ப்ரோக்ராமுக்கு வில்லங்கம்.
ராகவன் கடந்த ஆறு வருடங்களில் நேபாளம், கேதார்நாத் வைஷ்ணவிதேவி, புத்தகயா, உஜ்ஜயினி, ஜெய்பூர் என பல யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.. கொஞ்சம் காசு கூடத்தான் வாங்குவார். யாத்ரீகர்களைத் தங்க வைக்குமிடங்கள் எல்லா வசதிகளோடுமிருக்கும்.
எங்கு போனாலும் தமிழ்நாட்டுச் சாப்பாடு.என்று நல்ல பெயரைச் சம்பாதித்திருந்தார். வயதானவர்கள் நடுவில் மங்களா யாத்ரா சர்வீஸ் பிரபலம்.
இந்தமுறை அசாமில் காமாக்யா, காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயம், தீன்கோசின், ஷில்லாங் மற்றும் திரும்பி வரும்போது கல்கத்தா, தட்சிணேஸ்வர் என்று யாத்திரயை ஏற்பாடு செய்திருந்தார். ஆறு வருடங்களில் ஒருமுறைகூட வராத சிக்கல்கள் இந்தமுறை தொடர்ந்து வருகின்றன. கடைசிநிமிடத்தில் 3 பேர் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டார்கள்.
யாத்ரா சர்வீஸ் அலுவலகத்திலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு பயணிகளை ஏற்றி வந்த வேன் நடுவழியில் பழுதாகிவிட்டது. போக்குவரத்து நெரிசலில் எல்லாரும் மூட்டை முடிச்சுடன் கீழேயிறங்கி நடைபாதைக்கு வந்து தனித்தனியாக ஆட்டோ பிடித்துக் கொண்டு சென்ட்ரல் வந்தபோது இரயில் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. ஒரு ட்ராலி ஏற்பாடு செய்யக்கூட அவகாசமிருக்கவில்லை. பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு முதியவர்களும், மூதாட்டிகளும் ஓட்டமும் நடையுமாய் ரயிலேறுவதற்குள் மூச்சுத் திணறலே வந்துவிட்டது.
பலரும் ராகவனைக் கடிந்து கொண்டனர். ராகவன் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்க நேர்ந்தது. குதூகலமான மனோநிலையில் துவங்கவேண்டிய பயணம் கசப்பாகவும் எரிச்சலாகவும் துவங்கியது. போதாக்குறைக்கு வரும் வழியில் ஒரு பாட்டி டாய்லெட்டில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டுக் கொண்டார். நல்ல வேளை, கிழவி மண்டையைப் போடாமலிருந்தாளே என்று ராகவன் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாலும், இந்த நிகழ்வுகள் ராகவனுக்கு நிறைய மன அழுத்தம் தந்திருந்தன. இந்த முறை யாத்திரை அசம்பாவிதம் எதுவும நிகழாமல் யாத்ரீகர்களை பத்திரமாய் சென்னை சேர்த்தால் போதுமென்ற ஆதங்கம் அவருள் குடிகொண்டது. பயணிகளுக்கு சென்னையில் ஏற்பட்ட அதிருப்தியை நீக்கியிருந்தது கௌஹாத்தியில் ராகவன் ஏற்பாடு
செய்திருந்த கல்யாண மண்டப வசதிகள், ஹெட்குக் மணி அய்யரின் நளபாகம், காமாக்யா தரிசனம், அசாம் பட்டுச் சேலைகள். அனைவரும் ஒரு மகிழச்சியான மனோ நிலையிலிருந்தார்கள், அத்தனையும் திப்ருகார் செல்லும் ரயில் ரத்தானதில் உடைந்த பலூனாகிவிட்டது. .
யாத்திரையின் ஏற்பாடுகள் சங்கிலித் தொடர் போன்றவை. நடுவில் ஒரு சங்கிலி அறுபட்டாலும் மொத்த டூர் ப்ரோக்ராமும் தாறுமாறாகும்.. நிறைய பண நட்டமேற்படும். இத்தனை நாள் யாத்ரீகர்களிடையே உருவாக்கிய நல்லபிப்ராயம் மறைந்து போகும். அதனால் ரயில் இல்லையென்றால் பஸ்ஸிலாவது பிரயாணத்தை தொடரவேண்டும்.
ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால்? பயணத்தை தொடர்வதா வேண்டாமாவென்ற தருமசங்கடம். ராகவனை அரித்துத் தின்றது. பயணிகள் எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து கருத்து கேட்டார்..
‘இன்னொருமுறை இவ்வளவு பணம் செலவு செய்துகொண்டு இவ்வளவு தூரம் வரமுடியாது. லக்சுரி பஸ் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். திட்டமிட்டபடி தீன் கோசினுக்குப் போவோம் என்றார்கள் அதுவே பெரும்பான்மைக் கருத்தாகவிருந்தது. அதுதான் ராகவனுக்கும் தேவைப்பட்டது. அதை ஒரு தீர்மானம் போல எழுதி எல்லாரையும் கையெழுத்திட வைத்தார்.
‘யாரும் தப்பா நெனச்சுக்க வேண்டாம் நெருப்புன்னா வாய் சுட்டுவிடாது.. .ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் உங்களுடைய கையெழுத்து போலீசிலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்று அறிவித்தார் ராகவன்.
‘பஸ்ஸில் எத்தனை மணி நேரம் பிரயாணம் செய்யவேண்டும்?’ ஒரு பெண்மணி கேட்டார்.
‘பத்து மணி நேரம்’ என்றார் ராகவன்.
‘அவ்வளவு நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்வது பெண்களுக்கு எத்தனை அசௌகரியம். யாரும் யோசிக்கமாட்டீர்களா?’ ஒரு நடுவயதுப் பெண்மணி கோபித்துக் கொண்டாள்.
‘மேடம். நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது..வழியில் இரண்டு மணி நேரத்துக்கொருமுறை பஸ்ஸை நிறுத்தச் சொல்வோம். டீ சாப்பிட பாத்ரூம் போக சௌகர்யமாயிருக்கும்’ என்றார் ராகவன்.
மற்ற யாத்ரீகர்கள் ஆமோதித்தனர்..
லக்சுரி பஸ் ஏற்பாடு செய்வதாக முடிவு செய்யப்பட்டது. ஐம்பதுகளிலிருந்த இருவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சொகுசுப் பேருந்துக்காக பல ட்ராவல்சுகளை அணுகினார் கிடைக்கவில்லை. ஒரு தனியார் பஸ் கம்பெனியின் ஓட்டை ஸ்பேர் பஸ்தான் கிடைத்தது.
அந்த பஸ்தான் ராகவனையும் அவருடைய யாத்ரீகர்களையும் ஏற்றிக்கொண்டு திப்ருகாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. (திப்ருகாரில் ஒரு இரவு தங்கி மறுநாள் காலை தீன்கோசினுக்குச் செல்வதாக திட்டம்}. பேருந்தில் ஏறியதிலிருந்து தீவிரவாதிகளை மனதுக்குள் சபித்துக் கொண்டிருந்தார் ராகவன். தீவீரவாதிகளால் அவர்களுக்கும் நன்மையுமில்லை. பொதுமக்களுக்கும் ஒரு நன்மையில்லை. கண்கூடாகப் பார்த்ததுதானே? மேற்கு வங்காளத்தில் தீவிரவாதிகளால் ஜனங்களுக்கு என்ன நன்மை நிகழ்ந்தது? அப்பாவிகள்தான் குண்டுவெடிப்புக்கும் துப்பாக்கிக்கும் பலியானார்கள். பஞ்சாபில் என்ன நடந்தது? எதற்காகச் சாகிறோமென்றே தெரியாமல் எத்தனையோ பேர் இறந்து போனார்கள். எதற்காக ஒருவரைக் கொல்கிறோம் என்பதே தெரியாமல் தீவிரவாதிகள் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். பிறகு அவர்களும் பொற்கோவிலில் கூண்டோடு கைலாசம் போனார்கள்? என்ன சாதிப்பதாய் நினைத்து இளைஞர்கள் தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள்? தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் யானையும் தீவிரவாதிகளும் ஒன்றுதான். நாசமாய் போக!
ராகவனின் சிந்தனை தடைப்பட்டது.
தொலைவில் ஒருவன் பேருந்தை நிறுத்தச் சொல்லி கை காட்டிக் கொண்டிருந்தான்.
டூரை ஆரம்பித்ததிலிருந்து ஏதேனும் ஒரு சிக்கல் வந்து கொண்டேயிருக்கிறது. இங்கே ஒருவன் பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் கைகாட்டுகிறான். எவனாவது தீவிரவாதியாக இருந்து தொலைக்கப் போகிறான்?
பஞ்சாபில் தீவிரவாதிகள் ஒரு பஸ்ஸில் பயணிகள் அனைவரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் ராகவனுக்குஏனோ ஞாபகம் வந்தது.
பத்திரமாக சென்னை சேர்ந்ததும் ஆஞ்ஜநேயருக்கு வடைமாலைசாத்துவதாக வேண்டிக்கொண்டார். ‘ஆன் காண்ட்ராக்டு அல்லது டூரிஸ்ட் பஸ் போர்டு மாட்டியிருக்கிறீர்களா?’ ஓட்டுநரைக் கேட்டார் ராகவன்.
ஓட்டுநர் தலையாட்டினானர்.
‘பிறகு ஏன் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கை காட்டுகிறான்?’ நீங்கள் ஏன் நிறுத்துகிறீர்கள்?
தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் மீண்டும் கேட்டார்.. அசாமில் இந்தி புரிபவர்கள் குறைவு. நல்ல வேளையாக ஓட்டுநருக்கு இந்தி புரிந்தது. கொஞ்சம் பேசவும் செய்தான். அவனுக்கு நிறைய கேள்விஞானமிருந்தது. ஆங்கிலத்தில் வாக்கியமாகப் பேசவரவில்லையென்றாலும் சில ஆங்கிலச் சொற்களோடு செய்கைகளால் தான் சொல்ல நினைத்ததை ராகவனுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தான்.
‘இந்த வட்டாரத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. சொந்த இரு சக்கர வாகனங்களிருப்பவர்களுக்கு கவலையில்லை. மற்றவர்கள் இப்படித்தான் போகிற வேன்களை பஸ்களை நிறுத்தச் சொல்லி கைகாட்டுவார்கள். இருக்கை காலியிருந்தால் ஏற்றிக் கொள்வோம். அந்தக் காசு எங்களுக்கு வழிச் செலவுக்கு உதவும். ஓனர்களே சீட் காலியாயிருந்தால் சம்பாதித்துக் கொள் என்பார்கள்.’’
நான்கு இருக்கைகள் காலியாகவிருந்தன. ஓட்டுநர் ராகவனின் வாயை அடைத்துவிட்டார்.
பஸ் நின்றது. ஒரு இளைஞன் ஏறிக்கொண்டான். இருபத்தைந்து வயதிருக்கும். சுமாரான உயரம் முகத்தில் ஒரு சிறுவனுக்குரிய விஷமமும் விளையாட்டுத்தனமும் தெரிந்தது. கழுத்துக்கு இருபுறமும் இரு நேர்க்கோடுகள் போட்டாற் போல் தோள்கள் தோளில் குறுக்காக ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கவிட்டிருந்தான். முதுகுப்புறம் ஒரு கருப்பு ஜர்னி பேக். பயங்கர கனம் போலும். முதுகை வளைத்து நின்றான். காம்பேட் யூனிபார்ம் அணிந்திருந்தான். ராகவனுக்கு விடுதலைப்புலிகள் ஞாபகத்துக்கு வந்தார்கள்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலையை நினைவுபடுத்தினார்….
முதுகுப் புறமிருந்த கனத்த கருப்பு ட்ராவல் பேக்கை லக்கேஜ் வைக்குமிடத்தில் திணித்தான். எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். அசாமிய மொழியில் ஓட்டுநரிடம் பேசியவாறு பானட்டின்மீது உட்கார்ந்தான்.
‘என்ன வக்கிரம்! காலியாயிருக்கும் ஒரு சீட்டில் உட்கார வேண்டியதுதானே?’- நினைத்துக் கொண்டார் ராகவன்.
ராகவன் பின்னால் திரும்பிப் பார்த்தார் .பெண்கள் அரட்டையடித்துக்கொண்டு வந்தார்கள். ஆண்கள் நோயுற்ற கோழிகள் போல் மார்பில் தலையை நட்டுக் கொண்டு தூங்கினார்கள்.
சாலையின் இரு புறங்களிலும் பார்வையைத் திருப்பினார் ராகவன். வழிநெடுக பலாமரங்கள் மூங்கில்கள் வெற்றிலைக் கொடிகள் வளர்ந்திருந்தன. பசுமைக்கு குறைவில்லை. மனிதர்கள் அவ்வளவு செழிப்பாகத் தெரியவில்லை வீடுகள் நீலநிற தகரக்கூரைகளும் சுவர்களுமாயிருந்தன. ஓட்டுநர் சொன்னதுபோல் அதிகப் போக்குவரத்தில்லை.
ராகவனின் பார்வை பானட்டின்மீது அமர்ந்திருந்த வாலிபன் மேல் சென்றது.
‘நமஸ்தேஜி’ வணக்கம் சொன்னான் அந்த இளைஞன். ‘ஐ ஆம் தீபக்’ கை குலுக்கினான்.
ஆங்கிலத்தில் அவன் ஆரம்பித்தது சற்று ஆறுதலாயிருந்தது. ‘ஐ ஆம் ராகவன்.”
‘எதுவரை போகிறீர்கள்?’
‘திப்ருகார் வரை’
‘எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘கௌஹாத்தியிலிருந்து.’
‘கௌஹாத்தியிலிருந்து திப்ருகாருக்கு ரயில் வசதியிருக்கிறதே?’
‘ரயிலை ரத்து செய்துவிட்டார்கள்.’
’அடப் பாவமே, ஏனாம்?’
‘தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாம்.’
தீபக் கைகொட்டிச் சிரித்தான். ‘நம் நாட்டில் தூங்கு மூஞ்சி அரசுகளை, மக்கள் விரோத அரசுகளை எதிர்ப்பவர்கள் எல்லோருக்கும் தீவிரவாதிகள் என்று பெயர் வைத்துவிடுகிறார்கள். போலீசும் அரசும் தீவிரவாதிகள் என்று சொல்லும் ஒருவன் உண்மையில் துப்பாக்கியையே பார்த்திருக்கமாட்டான். ..வேடிக்கை. அது கிடக்கட்டும், காமாக்யா கோவிலுக்குப் போனீர்களா?’
‘போனோம்.’
‘கல் யோனியை தரிசித்தீர்களா? காமாக்யாவில் கல்யோனி பூஜையும் பெண்யோனி பூஜையும் மிகவும் பிரசித்தம்,’ பற்கள் தெரிய உரக்கச் சிரித்தான். ஓட்டுநர் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
‘தரிசித்தோம்,’ ராகவனும் லேசாகச் சிரித்தார்.
‘தீர்த்தம் கொடுத்தார்களா?’
‘கொடுத்தார்கள்’
‘காசு கேட்டார்களா?’
‘ஐநூறு ஆயிரமென்று கேட்டார்கள்..’
‘நீலாஞ்சல மலையில் அந்த இடத்தில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. பண்டிட்ஜிக்கள் அந்த சுனை நீரை மொண்டு தருகிறார்கள். ஒரு டீஸ்பூன் தண்ணீருக்கு நூறு ரூபாய் வசூலிக்கிறார்கள். முதலில்லாத வியாபாரத்தில் கை நிறைய காசு பண்ணுவதில் எங்கள் பண்டிட்ஜிக்கள் கில்லாடிகள், நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்?’
‘ஆளுக்கு அம்பது ரூபாய்தான் கொடுத்தோம், அவர்களும் பிழைக்க வேண்டுமில்லையா?’
’எந்த மாநிலத்திலிருந்து வருகிறீரகள்?’
‘தமிழ்நாட்டிலிருந்து.’
‘தமிழ்நாட்டுக்காரர்கள் கஞ்ஜூஸ்,’ என்றார் ஓட்டுநர்.
‘ஆயிரக் கணக்கில் செலவழித்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து அசாமுக்கு வருகிறார்கள். பண்டிட்ஜிக்களுக்கு தட்சிணை தருவதென்றால் சிக்கனம் பாரக்கிறார்கள்.’
’மரியாதைக் குறைவாகப் பேசக்கூடாது.’ தீபக் ஓட்டுநரை எச்சரித்தான்.
மனம் பேச்சில் திசைமாற ராகவனின் மன இறுக்கம் தளர்ந்தது..கௌரவமான இளைஞன்தான் என்று எண்ணிக் கொண்டார் ராகவன்.
அவன் தன் ஜோல்னாப் பையைத் துழாவினான். அதிலிருந்து ஒரு பொட்டலத்தையெடுத்துப் பிரித்தான்.
வெற்றிலைச்சுருளை வாயில் அடக்கிக் கொண்டான். பேச ஆரம்பித்தான், நல்ல வாசனை வந்தது. ‘நான் கல்கத்தாவில் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். கன்யாகுமரியில் சூர்யாஸ்தமனம் மறக்கமுடியாத அனுபவம். மதுரையில் நாயக்கர் மஹால், தஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மஹால் லைப்ரரி, காஞ்சிபுரம் மகாபலிபுரம் எல்லாம் சுற்றினோம். மை காட்!
‘எவ்வளவு பெரியகோவில்கள்! அவையெல்லாம் ராஜாக்கள் காலத்தில் கோட்டைகளாகத்தான் இருந்திருக்கவேண்டும்.’ அவன் கண்களில் வியப்பு தெரிந்தது.
‘உண்மைதான். நான் சிறுவனாயிருந்தபோது பெரியகோவிலில் உடையாருக்கருகில் ஒரு சுரங்கப் பாதையைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு குதிரையின் உயரத்துக்கிருக்கும். தஞ்சையிலிருந்து உறையூர் காளிகோவில்வரை அந்த சுரங்கப்பாதை இருந்ததாகச் சொல்வார்கள். இப்போது மூடிவிட்டார்கள்……………. தமிழ்நாடு உங்களுக்குப் பிடித்திருந்ததா?
‘ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தமிழ்நாட்டில் ஆட்டோவில் மட்டும் ஏறக்கூடாது. மொட்டை அடித்துவிடுவார்கள். நாங்கள் புக் செய்திருந்த லாட்ஜ்……என்ன தெரு…….வண்டிக்காரன் தெரு…… மதுரை ரயிலடிக்கு எதிரே இருந்தது. நாங்கள் ஊருக்குப் புதியவர்கள் என்று தெரிந்ததும் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நூறு ரூபாய் வாங்கிவிட்டார்கள். மற்றபடி, தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் பொறாமையாக இருந்தது. அடேங்கப்பா! தமிழ்நாட்டில் பஸ் வசதி எக்சலண்ட். அதையெல்லாம் இங்கே நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.. ஓட்டல்களில் டிபன் வகைகள் சூப்பர். வெரைட்டி..தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாகத் தெரிகிறார்கள். தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன. வாழ்க்கைத் தரமும் எங்களை விடஉயர்வு.. தமிழ்நாடு வெல் டெவலப்டு,’ என்றான் தீபக்.
ஓட்டுநருக்கு கண் சாலையிலும் காது ராகவன்- தீபக் பேச்சிலுமிருந்தது. அவன் தமிழ் நாட்டைப் பற்றிப் பேசும்போது ஊஹும் ஊஹும் என்று ஆச்சரியத்தை ஓரிரண்டு முறை தெரிவித்தான். இப்போது அவனுக்குச் சாமியாடியைப்போல ஆவேசம் வந்தது.
உரத்த குரலில் பேசினான்..
‘எல்லா மாநிலமும் அசாமைவிட வளர்ச்சியடைந்த மாநிலமாகத்தானிருக்கும். 1947ல் சுதந்திரம் வாங்கினோம். இது என்ன வருடம்? 1995. ஏறக்குறைய 50 வருடம் ஓடிப்போய் விட்டது. நோ டெவலப்மெண்ட்.. தோ சால் ஏக்தா பிரம்மபுத்ரா. வாட்டர். கரீபீ ஆத்மி கா கர் கதம். கிருஷி கதம். வில்லேஜ் சைட் ஸ்கூல் கம் சே கம் தீன் கிலோமீட்டர். சில்ரன் வாக்கிங்.
‘நோ இஞ்ஜினீரிங் காலேஜ்.. கோ கல்கத்தா. கவர்மெண்டு ஆஸ்பிடல் கோ கௌஹாத்தி கோ திப்ருகார் சர்க்கார் கும்பகர்ண் ஹை! நோ டெவலப்மெண்ட் இதெல்லாம் போதாதென்று பங்க்ளா தேசத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் இங்கே வந்து குடியேறுகிறார்கள். எங்கள் பிழைப்பைக் கெடுக்கிறார்கள். இங்கே வயசுப் பையன்கள் துப்பாக்கி எடுத்த பிறகுதான் தில்லி சுல்தான்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். அப்போதும் என்ன? மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் கவனமில்லை. ராணுவம் போலீசை வைத்து கலவரத்தை அடக்குவதுதான் அவர்கள் நோக்கம்.. ஜி, நான் படிக்காதவன். நான் சொல்வது உண்மையா இல்லையா என்று இந்தப் படித்த பையனைக் கேளுங்கள்.’
தீபக் ஓட்டுநர் சொல்வதை ஆமோதித்தான்.
அசாமி, ஹிந்தி ஆங்கிலம் மூன்றையும் கலந்து ஓட்டுநர் பேசும்போது ராகவனுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். வியப்பாகவுமிருந்தது. புரிந்து கொள்ள சில கணங்கள் தாமதமாயிற்று. சற்று நேரம் அமைதி.
‘நீங்கள் எதுவரை போகிறீர்கள்?’ என்றார் ராகவன்.
‘போகிற வழியில் ஜோர்ஹாட் என்னும் ஊர் வரும். அங்கே சர்க்கார் அலுவலகத்தில் ஒரு வேலை.. காலையில் போவேன். பழைய ஆவணங்களைத் தேடி எடுக்கவேண்டும். சாயந்தரம் வாருங்கள் என்பார்கள். மாலையில் போவேன். என்ன இவ்வளவு லேட்டாக வருகிறீர்கள்? ஆவண அறைக்குள் மின்சார இணைப்பு இல்லை. இருட்டு..இப்போது முடியாது. நாளைக்கு வாருங்கள் என்பார்கள். இத்தனைக்கும் அது என் சொந்தவேலையில்லை. ஆபீஸ் வேலை. படித்தவர்களையே இந்தப் பாடு படுத்துகிறார்களே, பாமர மக்கள் கதி என்ன என்று யோசித்துப் பார்ப்பேன். அசாமில் மக்கள் எத்தனை பொறுமைசாலிகள்.! ஐம்பது வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். எந்த விமோசனமுமில்லை. இப்போது போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். ஐம்பது வருட அலட்சியம்தான் தீவிர வாதத்தை உருவாக்கியிருக்கிறது,’ என்றான் தீபக்.
‘நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ ராகவன் கேட்டார்.
‘மிலிட்டரி இஞ்ஜினீரங் சர்வீசீல் ஜே.சி.ஓ வாக இருக்கிறேன்.
சாலையின் இரு பக்கமும் அடர்ந்த மரங்களிலிருந்து வந்த இளங் குளிர் காற்றில் ராகவன் அப்படியே தூங்கிப் போனார். விழித்துக் கொண்டபோது தீபக் இறங்கத் தயாராக நின்று கொண்டிருந்தான். கையை நீட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் கையில் காசைத் தந்துகொண்டிருந்தான்…
ராகவன் எதிர்பார்க்கவில்லை.
சட்டென்று அவர் காலைத் தொட்டு வணங்கினான், தீபக்.
ராகவன் ‘சர்வ மங்களமும் உண்டாகட்டும்’ எனச் சொல்லி அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்…
தீபக் இறங்கிச் சென்றான்..
ராகவன் மீண்டும் தூங்கி எழுந்தபோது பேருந்து திப்ருகாரை நெருங்கியிருந்த்து. ராகவன் வாட்டர்பாட்டிலிலிருந்து சற்று தண்ணீரையெடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். ஆஞ்ஜநேயருக்கு நன்றி சொன்னார். ஓட்டுநரிடம் ஒரு பிரபல கம்பெனியின் பெயரைச் சொல்லி அவர்களுடைய டீ எஸ்டேட்டுக்குப் போகச் சொன்னார். பேருந்து டீ எஸ்டேட்டுக்குள்ளிருந்த பங்களாவுக்கு முன் நின்றது. ஓட்டுநருக்கு நன்றி மற்றும் டிப்ஸ் தந்து அனுப்பிவிட்டு ராகவன் மேனேஜரிடம் தங்கும் அனுமதி கடிதத்தைக் கொடுத்தார். அங்கிருந்த பணியாட்கள் எல்லாருடைய பெட்டி பைகளை பங்களாவுக்குள் கொண்டு சேர்த்தனர். அறைகளை ஒதுக்கினர்.
பிரம்மாண்டமான ஹால், ஏராளமான அறைகள், ஐந்து நட்சத்திர ஓட்டல்வசதிகளைக் கண்டதும் அனைவர் முகத்திலும் புன்னகையைக் கவனித்தார் ராகவன்.
‘’ஓய்வெடுப்பவர் ஓய்வெடுங்கள். குளிக்கப்போகிறவர்கள் குளியுங்கள்.’ ஒரு மணிநேரத்தில் சாப்பிடலாம்,’ அறிவித்தார் ராகவன். கௌஹாத்தியில் செய்து கொண்டு வந்திருந்த சப்பாத்தி, தயிர்சாத பொட்டலங்களை விநியோகித்தார்கள் ஹெட்குக் மணி ஐயரும் அவருடைய உதவியாளரும் உணவருந்திவிட்டு ஹாலிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினார் ராகவன்.
ஆங்கிலச் சேனலில் ஒலிபரப்பானது அண்மைச் செய்தி.
ஜோர்ஹாடிலுள்ள அரசு அலுவலகம் இரவு ஏழு மணி சுமாருக்கு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. ராகவன் தீபக்கை நினைத்துக் கொண்டார். தன்னையறியாமல் ‘ஆஞ்ஜனேயா, ஆஞ்ஜனேயா’ என்று சொல்லிக் கொண்டே கரம் கூப்பினார்.
***