மகரந்தம்

குறிப்புகள் எழுதியது : கோரா

ஹார்வர்ட் ஆய்வு : 2022 வரைக்கும் சில சமூக விலக்கல் நடவடிக்கைகள் தேவைப்படும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலாகக் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்து  ஒரு மாதம் ஒரு நாள் கழிந்தபின், இன்று (14-2-2020)-ல் சயின்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும்  ஹார்வார்ட்-இன்  T. H. Chan பொது சுகாதாரக் கல்விக்கூட ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒப்புருவாக்க (modeling) ஆய்வு முடிவு, சமூக விலகல் வெகு விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு – அல்லது இந்த ஆண்டிலேயே எப்போதாவது தனிமைப்படுத்திக் கொள்ளவதிலிருந்து ஒரு கணிசமான தாற்காலிக விடுதலை வேண்டுபவர்களுக்கு, மறைந்திருக்கும் பேரிடியாக வந்திருக்கிறது.  

“தீர்வுகட்ட (critical) சிகிச்சை வசதிகளின் கணிசமான அதிகரிப்பு  அல்லது சரியான வைத்தியம் அல்லது தடுப்பூசி மருந்து எதுவும்  கிடைக்காத நிலையில் , விட்டுவிட்டு நிகழும் சமூக விலகல்கள் 2022 வரை தேவைப்படும்” என ஆராய்ச்சியாளர்கள் எழுதி இருக்கின்றனர். முந்தைய இரு பீட்டா கொரோனா வைரஸ்களின் பருவகாலத் தன்மை, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுக்கு (cross) எதிர்ப்புத் திறன் குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில், ஹார்வார்ட் குழு இந்த நீண்ட காலக்கெடுவைத் தீர்மானித்தது. மேலும், ஆரம்பத் தீவிர அனைத்துலகப் பெரும் கொள்ளைநோய் (COVID-19)-க்குப் பின்னர் திரும்பவும் அதன் குளிர்காலத் திடீர்  எழுச்சிகள் பெரும்பாலும்  வரலாமென ஆய்வு  முன்னறிவிக்கிறது.

இந்த முன்வீச்சு (projection) ஆறுதலற்றதாகத்  தெரிந்தபோதிலும் , இதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை. பலரும் இப்படிச் சொல்கிறார்கள். அறிவியல் எழுத்தாளர்களும்,  கல்வித்துறை ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ்ஸுடன் வாழ்வது புதிய பருவகால சகஜ நிலையாகிவிடப்  போகிறது என்று எச்சரித்திருக்கிறார்கள். மார்ச் ஆரம்பத்தில் பிசினஸ் இன்சைடர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,  ஜான் ஹாப்கின்ஸ் உடல்நலப் பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் வல்லுநர் கூறியதாவது: “இது மனித இனங்களுக்கான கொள்ளைநோய்; தடுப்பூசி மருந்து இல்லாமல் தானாக விலகப் போவதில்லை.” இதே வார செவ்வாய்க் கிழமை அட்லாண்டிக் பத்திரிக்கையில் வந்த “மூடிக்கிடக்கும் நாட்டை  மீண்டும் திறப்பது எப்படி?” என்ற தலைப்பில் நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தின் ஒரு தொற்று நோய் – கொள்ளைநோயியலாளரான மைக்கேல் ஆஸ்டெர்ஹோல்ம், எட் யாங் – கிடம்  சொன்னது: “நாம் பேசியது, அடுத்த சில வாரங்களைக் கெடுவாக வைத்தன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. பேசியது,  இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் சாத்தியமாகப் போவதைப் பற்றிதான்.”  

நீண்ட கால இழுவைக்கு எவ்வித சமூக விலக்கல் தேவைப்படும் என்று அறிய, நோய்ப்  பரவல், நோயெதிர்ப்பின் நீட்சி ஆகியவற்றின் மீதான பருவகாலத்  தாக்கங்கள் பற்றி அதிக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஹார்வர்ட் ஆய்வு கூறியிருக்கிறது .

https://nymag.com/intelligencer/2020/04/harvard-study-some-social-distancing-required-into-2022.html


விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?

ஆப்ரஹாம் மாஸ்லோவ்

மனிதனை பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்  “மனிதன் மகத்தான சல்லிப் பயல்”என்றுதான் சொல்வேன் – இந்த எதிர்மறை வார்த்தைகளை உதிர்த்தவர்  ஜி. நாகராஜன் (1929-1981) என்னும் தமிழ் எழுத்தாளர். மெத்தப் படித்த மேதைகள் சிலரும்கூட மனிதனைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக் கொண்டவர்கள்தாம். அமெரிக்க உளவியலாளரும், நடத்தையியல் கோட்பாட்டாளருமான (Behavioral Theorist ) B .F .ஸ்கின்னர்(1904-1990) கூறுவது:

“சரியான நடத்தைக்குப் பரிசும், தவறான நடத்தைக்குத் தண்டனையும் கிடைப்பதாலேயே, மனிதர்கள் எது வேண்டத்தக்க நடத்தை மற்றும் எது வேண்டத்தகாத நடத்தை என்று புரிந்துகொண்டு தம்மைச்  சீராக்கிக் கொள்கிறார்கள்.”

B .F .ஸ்கின்னர்

ஆஸ்ட்ரிய உளநோய் மருத்துவரும் , உளவியலின் உளப்  பகுப்பாய்வுச் (Psychoanalysis) சிந்தனை முறையை உருவாக்கியவருமான சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud 1856-1939), தன்னுணர்வில் இல்லாத செயல் தூண்டுதல்களே (Motives) மானுடரின் நடத்தையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன என்கிறார். அதாவது ஒவ்வொரு மனிதனும் உளப் பாகுபாட்டுக்கு உட்பட வேண்டிய மனநோயாளி என்றார் . 

“இவ்விரு கோட்பாடுகளும் மனித வாழ்க்கையின் எதிர்மறை அம்சங்களில் அதீதக் கவனக் குவிப்பு கொண்டுள்ளன; மனித இனத்திடம் மிகுந்து காணப்படும் ஆற்றல் வளத்தையும் (potential)  ஆக்கத்திறனையும் (creativity) முழுதுமாகப்  புறக்கணிக்கின்றன”

என்றார்,  ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) (1908-1970) என்னும் அமெரிக்க உளவியலாளர்.

இவரது புகழ்பெற்ற மேற்கோள்: “ஆண்களும் பெண்களும் அடிமாட்டு விலைக்குத் தம்மைத்தாமே  விற்றுவிட்ட சோகக்  கதையே மனித இனத்தின் கதை.”  

மனிதன் தம் பலவிதத் தேவைகளையும், அவற்றின் படிநிலைகளையும்  அறிந்திருக்கும் ஒப்பற்ற மிருகம். தேவைகளில் சில, அடிப்படைத் தேவைகள் என்றும், சில வளர்ச்சித் தேவைகள் என்றும் அறிந்தவன். தேவைகள் நிறைவேற நிறைவேற மேலும் தேவை நிறைவேற்றத்தைத் துரத்திச் செல்பவன் அவன். இவற்றை ஆராய்ந்த மாஸ்லோ, 1943-ல்  மாஸ்லோவின்  தேவைப் படியமைப்பு (Maslow’s hierarchy of Needs) என்ற உளவியல் கோட்பாட்டை முன்மொழிந்தார்.  மாஸ்லோ தம் கோட்பாட்டைத் தொழிற்சாலை சூழலில் பயன்படுத்திப் பார்க்கவில்லை . இருப்பினும் இந்த உளவியல் கோட்பாடு  தொழிற்கூடங்களில் ஒரு ஊக்குவிப்புக் (motivational ) கோட்பாடாகப் பயன்படுகிறது.

படியமைப்புக் கோட்பாட்டின் மாதிரி, மனிதரின் தேவைகள் ஐந்து படிகள் கொண்ட படியமைப்பில் ஒரு பிரமிடினுள் இருப்பதாகக் காட்டுகிறது. படிகள் முறையே, உடல் தேவைகள் (1),  பாதுகாப்பு (2), சமூகம் (3), சுய கௌரவம் (4) மற்றும் சுய மெய்யாக்கம்  (Self actualisation) (5).  1 முதல் 4 வரையிலான தேவைகள் பற்றாக்குறைத் தேவைகள் என்றும், 5ஆவது தேவை வளர்ச்சித் தேவை என்றும் கருதப்படுகிறது. கீழ்மட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மேல்மட்டத் தேவைகள் தலை தூக்கும். நிவர்த்தி செய்யப்பட்ட தேவைகள் ஊக்குவிப்புக்கு உதவாது. தடுக்கவே உதவும். 

1960களில், மாஸ்லோவின் மாணவரான டக்ளஸ் மெக்க்ரெகோர் (Douglas MacGregor) என்ற மேலாண்மைப்  பேராசிரியர் (MIT Sloan school of Management), இரு மாறுபட்ட ஊக்குவிப்பு மற்றும் நிர்வாகக் கோட்பாடுகளை உருவாக்கினார். அவை  கோட்பாடு X மற்றும் கோட்பாடு Y. 

 X கோட்பாடு: உழைப்போர் பற்றிய  பாரம்பரிய அணுகுமுறை கொண்டது; அதாவது அவர்கள் சோம்பேறிகள்; வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள்; பொறுப்பேற்க மாட்டார்கள்; மாற்றத்தை விரும்பாதவர்கள்; குறிக்கோள் இல்லாதவர்கள்; சுயலாபத்தை மட்டுமே கருதுபவர்கள்; நிறுவனத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரமாட்டார்கள். இவ்வகைத் தொழிலாளிகளைக் கையாளுவதில் மேலாளர் மேற்கொள்ளவேண்டிய கடும்  மேற்பார்வை, பரிசுகள் மற்றும் தண்டனைகளின்  முக்கியத்துவத்தை  x-கோட்பாடு  விவரிக்கிறது. 

 Y கோட்பாடு: உழைப்போர் பற்றிய அண்மைக் காலத்து மனிதாபிமானமுள்ள  நேரிய  அணுகுமுறை கொண்டது; அவர்கள் உழைக்க விரும்புகிறவர்கள், பொறுப்பேற்பவர்கள்; உற்சாகமானவர்கள்; இலக்கை அடைய முயற்சி செய்பவர்கள்; நிறுவனத்தின் பிரச்னைகளைத் தம் ஆக்கத்திறனைப் பயன்படுத்தித் தீர்ப்பவர்கள்; கடும் மேற்பார்வை தேவைப்படாதவர்கள்.

Y-கோட்பாட்டின்படி,  இவ்வகைத் தொழிலாளர்கள் பணியாற்றுமிடத்தில் தனிப்பட்ட மற்றும் நிறுவன இலக்குகள் ஒன்றாக ஆகிவிடும் . ஊழியர்கள் சுய வழிகாட்டல், சுய கட்டுப்பாடு, சுய ஊக்குவிப்புடன் பணியாற்றுவார்கள். இவ்வகைப்  பணியாளர்களுக்கு முழு பொறுப்பையும் அளித்துப் பதவி வித்தியாசம் பாராமல் அனைவரும் பங்கேற்கும்  தலைமை பயனளிக்குமாகையால் அதைத் தருவது மேலாளரின் கடமை என்கிறது y-கோட்பாடு. 

மாஸ்லோ 1950-களின் இறுதியில் நிறுவிய மானுடவாதி உளவியல் இயக்கம், மக்களின் நன்மதிப்பைப்  பெற்றது. மனிதன் சாதிக்க முடிகிற அனைத்தையும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பிறந்தவன் என்பது இந்த இயக்கத்தின் அடிப்படை நம்பிக்கை.  

ஆய்வைத்  தொடர்ந்து மேற்கொண்டு வந்த மாஸ்லோ, 1970-ல் அவர் இறப்புக்கு முன்னர்  தேவைப் படிகளின் உச்சமான சுயமெய்யாக்கம் மேலும் உயர்ந்து இன்னும் அதிக ஊக்குவிப்பு பெற்று, எல்லை கடந்த நிலையை (Transcedence) அடையும் என்ற உள்ளொளி (insight )யைப் பெற்றார். அதற்கு கோட்பாடு-Z என்று பெயரிட்டார்.

மற்றொரு கோட்பாடு-z -ம் உண்டு. அது மெக்க்ரெகோர் கோட்பாட்டின்  தொடர்ச்சியாக,  வில்லியம் வுச்சி (William Ouchi ) என்னும் பொருளாதார நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்டு 1980-ல் அறிமுகப் படுத்தப்பட்டது. கட்டுரை சொல்லும் கோட்பாடு-z இதுவல்ல.

இணைப்பில் உள்ள கட்டுரையில் எல்லை கடந்தவர் (transcender), இருத்தலின் மதிப்பு (value of being ), meta needs, meta motivations போன்ற பதங்களைக் கொண்டு கோட்பாடு-z விவரிக்கப் படுவதுடன், அது விவேகம் (wisdom ) என்பது நாம் குறிப்பிடுவதுதான் என்றும் சொல்லப்படுகிறது. 

இணைப்பு :

https://blogs.scientificamerican.com/beautiful-minds/what-humans-could-be/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.