புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்

தனிமை


இப்பொழுதாவது இந்த காலமானபொழுது
என் கையிலே இருக்கிறதே என்றெண்ணி இருந்தேன்
வீடு அதன் சுவர்கள் என் அறை என்று
எந்த பொருளும் விளங்காமல் மாறுகிற போது
நானும் அலைந்து கொண்டிருக்கிறேன் இங்கிருந்தபடியே
குதிரைகள் ஓடியது விமானங்கள் பறந்தன
நான் கட்டுகிறேன் கொஞ்சம் கொஞ்சமாக
சேமிக்கும் நிஜங்களை வைத்து
நான் என்னை என்று யாராவது ஒருவராக மாறிக்கொண்டேயிருக்கிறது
எனக்கு கிடைக்கும் அத்தனையும் போதவில்லை என்பது
என்னால் இயலவில்லை என்பதுதான்
யாருமற்றவனுக்கு முன்பு இருந்தவர்கள் எங்கே
நான் நகர்ந்து போய்விடவேண்டும்
தேடுபவனும் தேடப்படுகிறவனும் நான் என்றால்
என்னிலும் மற்றும் எல்லோரின் நினைவிலும்


இளமை


ஒரு நுங்கின் இளமை தட்டுகிற படிமத்தின் பிரத்யேகமான
மனிதனின் தலைவழி நுழைந்து அவனது சின்ன வரலாற்றின்
தேர்ந்தெடுத்த காலமதை கடத்திய ஒரு பகுதியான
கனவுகளின் தோல்வியின் காரணத்தில் அந்த வார்த்தையின்
அர்த்தத்தில் இருக்கும் காலத்தை பற்றிய கனவு இது
ஒவ்வொருவரின் அனுபவத்திற்கு பின்னால் தோன்றும்
வசந்தகாலத்தின் நினைவுகளை சமன் படுத்தும் தசையை
சுமக்கும் வயோதிகனின் அலையும் நிகழ்காலம்
என் வசதிக்கு ஏற்ப நிகழ்வுகளை உரசிப் பார்க்க
கடவுளற்ற உலகில் ஆபத்தில் இருந்தும் அதன்
மிச்சத்தில் இருந்தும் உயிர்வாழும் அதிசய
பருவத்தின் திமிர்தனில் ஆசைகள் விதைகளாகி
ஆயுள்முழக்க இச்சையின் பெரும்பாடு பூசிய
கதவுகளை தட்டும் கைகள்


சிலை


அவனது கால்சட்டையின் முனைகள் மடிக்கப்பட்டிருந்தன
அவன் இன்னும் உழைத்துக் கொண்டிருந்தான்
உழைப்பின் பெருமை காலத்தை மீற
அவன் துல்லியமான சிலையாக வடிக்கப்பட்டான்
வெவ்வேறு நாட்டவரின் கால்களின் சத்தம்
பளிங்கு கற்களில் எதிரொலித்தது
கடந்துபோன நான் ஒருநாள் அதன் காலடியில் அமர்கிறேன்
தலையில் எச்சமிட்ட புறாக்கூட்டங்கள் தரையில் அமர்ந்தன
அதன் ரகசியத்தை நான் அறிந்தேன்
நான் முற்றிலும் மாறியது யாருக்கும் தெரியவில்லை
கனம் கூடியது எனக்கு
சாதாரணமானது சங்கடமாகியது
நோய்வாய்ப்பட்டேன் அழுகியது உடல்
பிறகு விட்டுகொடுத்துவிட்டேன் என்கிற பாவனையில்


கலைஞன்


அவனொருவன் இவனொருவன் எவனொருவன்
யார் வந்தால் என்ன ஒன்றிலே ஒன்று
எழுதப்படுவதும் எல்லாமும் ஒன்றொன்றாக
மீதி என் கேள்விகள் தேவைகள் விருப்பங்களென
நான் தேடுகிறேன் குப்பைகள் பறக்கும் என் மனதில்
காத்திருக்கிறேன் காரியம் கைகூடுமென
வரிந்து கட்டிக்கொண்டு ஆழ்மனத்திலிருந்து
வந்து விழுகிறது நம்பிக்கை தரும் கனமான சொல்லொன்று
அதுவே இதுகாறும் பிறப்பித்த விதையின் விருட்சம்
மெல்லத் தலைகாட்டும் நான்
மழையின் முதல் துளியென
பியானோவின் ஒற்றை சுவரம்
காற்றில் கலந்திட்ட மறைவழக்கமான விஞ்ஞானத்தின்
கறாரான முடிவின்மையில் நானொருவன்
புரியாமல் போவதுதானே உண்மை
நானாகப் போகிறேன்
அது என் செயல்
கரைந்துபோகக் காத்திருக்கும் மனவழி உலகமதை
கலைஞன் அறிவான் எல்லாபாதைகளையும்


நானானவன்


நான் மாறுகிறேன் மற்றும் இல்லாமலாகிறேன்
ஏதோ ஒன்றிலன்றி ஒருபோதும் நான் இருந்ததில்லை
என்னை ஏமாற்றிக்கொள்ளாமல் இங்கிருந்திட முடியாது
ஒரு மனிதனின் தோற்றமுடையவனாகவும்
அவனுக்கு உண்டானதும் என
மற்றவர்களுக்கு தோன்றுவதோடு சரி
ஒன்றுமில்லாத தாளில் எழுதி அழித்து கொள்கிறேன்
சென்றவன் வருவது விதியை சமன் செய்வது மட்டுமல்ல
பயம் என்னை தடுக்கிறது
நான் காணாமல் போய்விடுவேன் என்று
போகிற பாதையிலே போகிறேன்
சலிக்காத என் இருப்பு ஆச்சர்யம் தான்
கடந்த காலத்தால் நினைவுக்கொள்ளபடுகிறேன்
நான் நகர முடிகிற திசைகளை
எந்திரத்தை விழுங்கிய மனம் முடிவு செய்கிறது
என்னால் முடிந்தது எனக்கான நியாயம் என தோண்றியது
நான் எனதருகே இருப்பதற்கு என் நடிப்பும் ஒரு காரணம் என


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.