புதர் மண்டியிருந்த மன வீடு

ஸ்ரீரஞ்சனி

ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின் குளிரூட்டியை வண்ண வண்ண நிறங்களில் அலங்கரித்திருந்தன. கடையில் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க நேர்ந்தபோதல்லாம், காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளிவிட்டது போல ஆளுக்கு ஆள் விலகியோடியதையும், ஏதோ ஒரு கள்ள வேலை செய்கிற மாதிரி அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்துப் பொருள்களைக் கூடையில் போட்டதையும் அவை அவளுக்கு நினைவூட்டின.

“ம்ம், ஆளுக்காள் அவையவைக்குப் பிடிச்ச திரையளோடை அடைஞ்சு கிடக்கிற இந்தச் சந்ததியை அப்பிடியேயிருங்கோ எண்டு இந்தக் கொரோனா இன்னுமெல்லோ ஊக்குவிக்குது. இப்பிடியே போச்செண்டால் மற்ற ஆக்களின்ரை சகவாசம் தேவையில்லாத ஒண்டாய்ப் போயிடும்,” என்ற அவளின் மனஓட்டம் அவளுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

“ரண்டு கிழமைக்கொருக்கா எண்டாலும் வாறவன் இப்ப ரண்டு மாசமாகியும், எட்டியும் பாக்கேல்லையே,” அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“அம்மா, என்னாலை உங்களுக்கு வருத்தம் வந்திஞ்செண்டால் என்னாலை தாங்கேலாதம்மா, எந்த நாளும் வட்ஸ்அப்பிலை கதைக்கிறம்தானே …”

அப்படி அவன் அடிக்கடி சொல்வது அவளுக்கு ஆறுதலுக்குப் பதில் ஆற்றாமையைத்தான் கொடுத்தது.

“தாய்க்கு வருத்தம் வந்திடக் கூடாதெண்டு கராஸுக்குள்ளையே உடுப்பைக் கழட்டிப் போட்டிட்டு, குளிச்சிட்டுத்தான் மஞ்சு டொக்டர் வீட்டுக்குள்ளை போறவவாம்.”

அன்று கலா போனில் சொன்னது அவளின் மனசுக்குள் நின்று அவளை மிகவும் அலைக்கழித்தது. ‘நான் அவனோடை இருந்திருந்தா என்ன செய்திருப்பான், ஹொஸ்பிற்றலுக்குக் கிட்டவா இருக்கப் போறன் எண்டு போனதால்தானே இண்டைக்கு நான் தன்னன் தனியனா …,’ அவளுக்கு அவனில் கோபமாக இருந்தது.

அவளின் நூலக வேலை ஒரு அத்தியாவசியமற்ற வேலையென்று கொரோனா அதைப் பறித்த பிறகு வீடு முழுவதும் வெறுமை சப்பணம் கட்டிக்கொண்டு இருப்பதுபோல அவளுக்கு விரக்தியாகவிருந்தது.

போன் ஒலி எழுப்பியது, வட்ஸ்அப் வீடியோவில் சீலன்தான் அவளை அழைத்திருந்தான்.

“அம்மா என்ன செய்யிறியள், நடக்கப் போனனியளோ, அடிக்கடி கடையளுக்குப் போகாதேயுங்கோ, என்ன…? கணியன் பூங்குன்றனாரின்ரை எல்லா ஊரும் ஒண்டு, எல்லா மனிசரும் சமமெமண்ட தத்துவம் சரியெண்டு கொரோனாவும் சொல்லுது … என்னம்மா நான் கதைக்கிறன், நீங்க ஒண்டும் பேசாமலிருக்கிறியள்.”

“ஓம், ஓம், என்னத்தைச் சொல்லுறது, சொல்லுறதுக்கும் ஏதாவது புதிசா இருந்தால்தானே … ம்ம், வாறகிழமை என்ன செய்யப்போறாய்?”

“ஆரா இங்கை வாறணெண்டு சொல்லியிருக்கிறா.”

“என்ன … கொரோனாக் காலத்திலை அப்பிடிச் சந்திக்கிறது பயமில்லையே?” அவளின் முகம் இறுகியது.

“அம்மா, அவ சைக்கிளிலைதான் வாறா. ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ…”

“என்னட்டை வரக்கூடாதென்றாய், பிறகு அவவைச் சந்திக்கிறாய்”

“அம்மா உங்கடை வயசெல்லோ பிரச்சினை, என்னோடை நீங்க நீண்ட காலமிருக்கோணும். அதுதான் நான் உங்களிட்டை வாறேல்லை… நாங்க சந்தியாமலிருப்பம் எண்டுதான் ஆராவுக்கும் சொன்னனான்… ஆனா அவ வரப்போறன் எண்டு நிக்கிறா, அவவைப் பற்றின முடிவுகளை அவ எடுக்கிறதுக்கு நான் மரியாதை குடுக்கோணும்தானே.”

“ம்ம், என்னவோ சொல்லு, என்னட்டை வாறது உனக்கு முக்கியமாய்ப் படேல்லை, அவ்வளவுதான்”

“அம்மா அம்மா, நான் உங்களிலை எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறன் எண்டது உங்களுக்குத் தெரியும். சரி நாளைக்குக் கோல் பண்ணுறன்.”

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவன் வேலை செய்யத் தொடங்கிய பின்னர் வந்த அவளின் பிறந்த நாட்கள் அனைத்துக்கும் அவளை எங்காவது அழைத்துச் செல்வது அவன் வழக்கம். இந்த முறை அவளைப் புளோரிடாவுக்குக் கூட்டிச் செல்லவென அவனெடுத்த லீவு ஆராவுக்குத்தான் பயன்படப் போகுது என்பதில் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

சமைக்கவும் பிடிக்கவில்லை. மனதைத் திசை திருப்புவதற்காக கொம்பியூட்டரை ஓன் பண்ணினாள். நேற்றிரவு அவள் பார்த்த அத்தனை இணையப் பக்கங்களும் தானாகத் திறந்து கொண்டன. ஐந்து வருடங்களுக்கு முதல் அதே நாளில் அவள் முகப்புத்தகத்தில் பகிர்வதற்காக ஸ்கான் பண்ணியிருந்த அவளின் திருமணப் படத்தை கூகிள் போட்டோ ஞாபகப்படுத்தியது.

அதில் அவளும் மகேனும் மிகவும் சந்தோஷமாகச் சிரித்தபடி நின்றிருந்தனர்.

அந்தக் காலங்கள் அவளின் மனதில் விரிந்தன. லீவில் வீட்டுக்கு வரும் போதெல்லாம், தேங்காய் திருவட்டா, இறைச்சி வெட்டட்டா என அவன் அவளைச் சுற்றிசுற்றி வளைய வருவான். உல்லாசமாக இருப்பதற்காக எங்காவது அவளைக் கூட்டிச்செல்வான். அப்படி ஒரு நாளில் நயினா தீவுக்கு அவர்கள் படகொன்றில் போய்க் கொண்டிருந்தனர்.

ஒரு வயதுகூட நிரம்பாத சீலன் அவளின் மடியில் நித்திரையாக இருந்தான். திடீரென அவளுக்கு நேர் முன்பாக அமர்ந்திருந்த மகேன் நெஞ்சைக் கையால் பொத்தியபடி, ஆ, ஆ சரியாய் வலிக்குது என அணுங்கினான். அவனின் முகம் முழுவதும் வலியின் ரேகைகள் படர்ந்திருந்தன. அவனின் நெற்றி வியர்த்திருந்தது.

“என்னப்பா, என்னப்பா செய்யுது,” மிகுந்த பதட்டத்துடன் அவனின் கையை அவள் இறுகப் பற்றினாள். சில செக்கன்களுக்குள் அவளின் கைக்குள் அவனின் அந்தக் கை அடைபட்டிருக்க அவனின் உடல் படகில் சரிந்தது. கரைக்குப் போவதற்கிடையில் எல்லாமே முடிந்துவிட்டன. அவள் கதறிய சத்தத்தில் காகங்கள் எல்லாம் சிதறிப் பறந்தன.

மகேன் கொழும்பிலும், அவள் யாழ்ப்பாணத்திலும் இருந்தபடியால் அவர்கள் கணவன் மனைவியாக உயிர்ப்புடன் வாழ்ந்த நாட்களைக் கணக்கிடலாம். இருபத்திரண்டு வயதில் வாழ்க்கையை இழந்து நின்றவளிடம் அதைச் சொல்லிச் சொல்லி அவளின் அம்மா அழுதாள். அவளின் அண்ணா எப்படியும் அவளை மீளவும் வாழ வைக்க வேண்டுமென முயற்சித்தான். ஆனால், அவளின் பிஞ்சுக் குழந்தைக்கு மாற்றான் தந்தையாக ஒருவர் வருவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடிவில் மகேனின் அண்ணா விமல், அவர்களைக் கனடாவுக்குக் கூப்பிட்டுவிட்டார்.

பிள்ளையுடன் தனிமையில் அவள்பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ கழுகுக் கண்களிடமிருந்து அவள் தப்பி வாழ வேண்டியிருந்தது.

ஒரு தடவை, திருமணமொன்றுக்குப் போவதற்காக தைக்கக் கொடுத்த சாறி பிளவுசை, “கனக்க வேலை இருந்ததாலை கொஞ்சம் சுணங்கீட்டு, இவரிட்டைக் குடுத்து விடுறன், போட்டுப் பாத்திட்டுச் சொல்லுங்கோ,” என முதல் நாள் இரவுதான் தையல்காரச் சரசக்கா அனுப்பியிருந்தா. “அக்கா, சரியான லூசா இருக்கு, கொஞ்சம் பிடிச்சுத் தைக்கோணும்,” போனிலை சொன்னவளிடம், “அவரோடை ஒருக்கா டக்கெண்டு வந்தியள் எண்டால் உடனை அடிச்சுப் போட்டுத் தந்திடுவன், அஞ்சு நிமிசத்திலை போயிடலாம்,” என்றா சரசக்கா.

பத்து வயதுச் சீலன் நித்திரையாயிருந்தான், என்ன செய்யலாமென யோசித்தவள், அம்மா 10 நிமிஷத்திலை வந்திடுவனென்று ஒரு பேப்பரிலை எழுதி அவனுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அவசரம் அவசரமாக அவன் காரில் போய்த் திரும்பி வந்தாள். திரும்பி வந்தபோது மகன் எழுந்திருக்கவில்லை என்பதில் அவளுக்கு ஆறுதலாவிருந்தது.

ஆனால் அடுத்த நாள், “வீட்டிலை இருந்தியள் எண்டால் கதைப்பமெண்டு வந்தன்,” சரசக்காவின்ரை மனிசன் கதவடியில் நின்று வழிகிறார். “நான் இப்ப கொஞ்சம் வேலையாயிருக்கிறன்,” கதவின் இடுக்குக்கூடாகச் சொன்னவளுக்கு இதயம் பலமாக அடித்துக்கொண்டது. போனவர் அடுத்த நாள் இரண்டு தரம் போன் பண்ணியும் பார்த்தார். ‘காரிலை கூடப் போனோடனை என்னவும் செய்வாள் எண்டு நினைச்சிட்டார் போல’ – அவளுக்குக் கோபம் உச்சியில் அடித்தது.

இப்படி எத்தனையோ பேரைக் கடந்துதான் அவள் வாழ வேண்டியிருந்தாலும் பிள்ளைக்கொரு மாற்றுத் தகப்பன் வேண்டாமென்பதில் உறுதியாயிருந்தாள். ‘அப்பிடி வளத்த பிள்ளை இப்ப தன்ரை வாழ்க்கையைப் பாக்கிறானா,’ நினைக்க அவளுக்கு விம்மல் வந்தது.

இரவு நீண்டநேரமாக அவளுக்கு நித்திரை வரவில்லை. தலை வேறு இடித்தது. கட்டிலில் படுத்திருந்து உருண்டாள். ‘தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கக் குடுத்து வைக்காததாலை என்ரை பிள்ளையிலையே எனக்கு பொறாமையா இருக்கா,’ வாய்விட்டுக் கதறி அழுதாள்.

“விமல் அத்தானின்ரை மனிசி அவையின்ரை உறவைப் பத்திப் புழுகிக் கொண்டிருக்கிறதைக் கேட்கேலாமா இருக்கெண்டுதானே அவையின்ரை வீட்டை போறதையும் அவவோடை கதைக்கிறதையும் குறைச்சனான். இப்ப என்ரை தாபமும் தவிப்பும் என்ரை பிள்ளையைப் பாத்தே ஏங்கச் செய்யுதா,” தனக்குத் தானே சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.

‘அவனுக்கென அமைஞ்ச ஒரு உறவை ஆதரிக்கிறதுக்குப் பதிலாக புழுங்குறனே, தாயெண்ட உறவையும் மேவின ஆதங்கம்தானே இது,’ அவளுக்குத் தன்மேல் பச்சாதாபமும் கோபமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. ‘என்ரை விதி இப்படியானதுக்காண்டி, என்ரை பிள்ளையும் காயுறதே?’ அவள் நினைவுகள் சங்கிலியாகத் தொடர்ந்தன.

அடுத்தநாள் காலையில், வேலைக்குப் போகத் தேவையல்லைத்தானே என டை பூசாமல் அசட்டையாய் விட்டிருந்த தலைக்கு முதலில் டை பண்ணி முழுகினாள். பான்கேக் செய்தாள். அதன்மேல் பட்டரும் மேபிள் சிரப்பும் போட்டு சில புளூபெரிகளையும் ராஸ்பெரிகளையும் அடுக்கினாள். டைனிங் ரேபிளில் வந்தமர்ந்தாள்.

‘வட்ஸ்அப்பிலை சீலன் கூப்பிடேக்கை ஆராவோடையும் கதைக்க வேணும், கொரோனா முடிய ரண்டு பேரையும் வீட்டுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு குடுக்கோணும்,’ அவள் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது.

அவளின் பின்வளவுக்குள் அணில்கள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. ‘சாம்பல், கபிலம், கறுப்பு, பாதி சாம்பல் பாதி கறுப்பு, செம்மஞ்சள் – அணில்களில் இத்தனை நிறங்களா?’ அவளுக்கு அதிசயமாயிருந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

அங்கிருந்த ஒரு கதிரையில் இருந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். மெல்லியதாக வீசிய காற்றும் இளவெய்யிலும் அவளை ஆசுவாசப்படுத்தின. ரியூலிப் கன்றுகள் அதன் கிழங்குகளிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவள் மனம் ஆரவாரப்பட்டது.

***

2 Replies to “புதர் மண்டியிருந்த மன வீடு”

  1. எல்லாக் கால தேசங்களுக்கும் பொருந்தும், தனிமையில் வாழும் ஒரு மடந்தையின் எண்ண ஓட்டங்களை, இந்தக் கொரோனாக் கால பதிவிலும் அழகாகக் கொணர்ந்து, ஒரு புதிய விடியல் தரும் நம்பிக்கையைப் போன்றதொரு வரிகளுடன் முடித்துமிருக்கிறார். அழகிய கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.