நோயாளி எண் பூஜ்யம்- 2

This entry is part 2 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

ஹ்வான் வீயாரோ[1]

(ஸ்பானிய மொழி மூலக் கதையின் இங்கிலிஷ் மொழியாக்கம்: வில் வாண்டர்ஹைடென். தமிழாக்கம்: பானுமதி ந. )

(இதழ் 221இல் முதல் பாகம்: நோயாளி எண் பூஜ்யம் -1 )

பாகம் – 2

3. பசும் தேனீர்

என்னுடைய மூன்றாம் ஓய்விற்குப் பினனரே நான் ஸியுடாட் சபாட்டா நகருக்கு வந்தேன். பண்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைந்ததால், நான் மூன்று ஓய்வூதியங்களைப் பெறும்வரை உழைக்கும் நிலை வந்தது. ஒரு பத்திரிகையில் பல பத்தாண்டுகளுக்கு எழுதினேன்,  கைத்தொழில் படைப்பைப்போல அது அச்சுப் பத்திரிகையாகவும் வெளியான பெருமையைப் பெற்றது. பிறகு, செய்தித் தொகுப்புகளை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன், அதன் பிறகு அரசு நடத்திய பிரசுர நிறுவனத்தில் வேலைசெய்த பிறகு எனக்கு ஓய்வு கிட்டியது. நான் மூன்று முறைகள் திருமணம் செய்யாமல் இருந்தால் நிலைமை மிக எளிதாக இருந்திருக்கும், யார் அதை மறுக்க முடியும்? இன்றைய சட்டங்களின்படி நீங்கள் சுக்கிரன் கிரகத்தில் குடியேறினால்கூட ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து தப்ப முடியாது! நான் குறை சொல்லக்கூடாது: நிலவு தேய்ந்து வளர்வதைப் போலத் தொடர்ந்து லிங் என்னோடு வருகிறாள். இங்கே என்னுடன் இருந்தாலும், அவள் வருவதும் போவதுமாக இருக்கிறாள். என் கண்களைக் காப்பதற்கோ, என் வாழ்நாளை நீட்டிப்பதற்கோ, அவள் என் கண்களில் அதிகத் துன்பம் தரும் மருந்துச் சொட்டுகளை விடும் நேரம் தவிர எங்களுக்குள் உடல் தொடுதலெல்லாம் இல்லை. மேஜையிலிருந்து எழும்போது அல்லது போய் வருகிறேன் என்று சொல்லும்போது அப்படி ஒரு விலகிய கனிவோடு என்னைத் தொடுவாள். அவளுடன் நான் இருப்பது அதனாலன்று. (விமானங்களின் போகையில் பின்னே) வானில் நீளும் இரு வெண்தடங்கள் போல எங்கள் வாழ்க்கைகள் குறுக்கே கடந்தன. அந்தக் காட்சி என்னைப் பலமுறை வசீகரித்து நிறுத்தி இருக்கிறது: ஒரு வெள்ளை வாயுவின் தடம் தலைக்கு மேல் கரையத் தொடங்குகிறது, அப்போது இன்னொன்று அதனூடே கடந்து போய்க்கொண்டே, அதற்குப் புது அர்த்தத்தைக் கொணர்கிறது.

அவள் ஏன் என்னுடன் இருக்கத் தீர்மானித்தாள்? (அதற்கு ஒத்துக் கொண்டாள் என்று சொல்வது துயரம் தரும்.) தாயாகும் உரிமை அளிக்கப்படாத 90 சதவீதப் பெண்களில் அவளும் ஒருத்தி. இளைஞன் ஒருவனைத் துணைவனாகப் பெறுவது, அவளுக்கு குழந்தைப் பேறின் நலன்களைக் கொணராது. உறவுகள் மதிப்பிழந்த காலமிது. காதலைக்  குறிக்கும் கிரகமான சுக்ரனில் முக்கியமான தண்டனைக் காலனியைக் கட்டலாம் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாடியுள்ள இளைஞர்களை லிங் விரும்புகிறாள். அவர்களுடன் அவள் வெளியிடங்களுக்குப் போகிறாள், ஆனால் அது அவர்கள் கட்டுப்பாடிழந்து அழத் தொடங்கும் இரவு வரைதான். “அழகான வாலிபர்கள் பூஞ்சையானவர்கள்,” என்கிறாள், தான் குரூபி என்பது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லாத அளவு முதுமையடைந்த ஒருவரிடம் இதைச் சொல்லும் ஒரு நபருக்கு இருக்கக்கூடிய பூரண அமைதி அவளிடம் இருக்கிறது.

காம வேட்கை என்பது எனக்கு, கோட்பாட்டில் மகிழ்வு கொடுக்கும் ஒரு வகை. லிங் பிறருடன் கொள்ளும் காம உறவுகளை நான் கற்பனை செய்கையில் எனக்கு அவள் மீதிருந்த பாசம் குறைவதில்லை.  ஒருவரிடமிருந்து மற்றவர் மிகவும் குறைவாக எதிர்பார்க்கும் உறவில்தான், ஒட்டுறவுடன் நாம் சேர்ந்து வாழமுடியும்.

ஸியூடாட் சபாட்டா நகரத்தைத் தோற்றுவித்தவர்களுடன் வந்தவள் லிங்க். நானும் அவளும் தலைநகரில் சந்தித்தோம். 2030-ம் வருடம், என் 73ஆவது வயதில், தலைநகரில், ஓய்வூதியம் தராத அந்த என்னுடைய கடைசி வேலையில்,  ‘மொழியை இயல்பாக’ப் பேசுவதைப் போதித்துக் கொண்டிருந்தேன். உலகெங்கும் பெருகிய குப்பைகள் பெரும் அச்சுறுத்தலாக ஆகிவிட்ட அந்த நேரத்தில் என் மாணவர்கள் மெக்ஸிகோவுக்கு வந்திருந்தனர். பல பத்தாண்டுகளாக, அமெரிக்காவிடமிருந்து குப்பைகளை வாங்கித் தன் எல்லைகளுக்குள்ளேயே அவற்றுக்குத் தீர்வு காணும் செயலைச் செய்து வந்தது சீனா. சமூக எதிர்பார்ப்புகளாலும், சுகாதாரத்தில் ஏற்பட்ட அவசரமான சிக்கல்களாலும் சீனாவால் உள்நாட்டில் தொடர்ந்து அத்தனை பிரும்மாண்டமான அளவு குப்பைகளைச் சமாளிக்க முடியாமல் போயிற்று. (தரையில் தட்டையாகப் பரப்பினால், இந்தக் குப்பை மலையானது ஆஸ்திரேலியாவின் மொத்தப் பரப்பையும் மூடிவிடும் அளவு இருக்கும்.) இத்தனை குப்பைக்கும், புது நிலப்பரப்பு தேவைப்பட்டது, அதுவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு  அருகிலேயே இருப்பது விரும்பப்பட்டது. ஆகவே, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, மிச்சொவகன், கியெர்ரெரோ, ஹாலிஸ்கோ, நய்யரீட், கலீமா[1] போன்ற மாநிலங்களைத் தர தேசத்தந்தை முன்வந்தார்.  ‘சந்தர்ப்பவாதிகள்’ எனப்பட்டவர்கள், பசிபிக் கடற்கரைகள் வாடகைக்கு விடப்பட்டு குப்பைக் கிடங்காக மாறப் போகின்றன என்று எச்சரித்தனர். ஆனால், தேசத்தந்தைக்கு வேறொரு திட்டமும் இருந்தது: அது அந்த வட்டாரத்தில் நிலவி வந்த, நன்கு வேரூன்றிய குற்றக் கும்பல்களை ஒடுக்குதல் என்பது. போதை மருந்துகளை உலகெங்கும் விநியோகித்த பெரும் குற்றக் கும்பல் அமைப்புகளை, சீனர்கள் உதவியோடு தலைநகரிலிருந்து அனுப்பப்பட்ட ஆக்கிரமிப்புப் படைகள் அந்தப் பகுதியிலிருந்து ஒழித்துக் கட்டியபின், போதை மருந்தைவிட அதிகப் பணம் புரளும் வியாபாரம் வந்தது: உலகத்தின் குப்பைக் களஞ்சியம்.

நான் நடத்திய துவக்க நிலை ஸ்பானிஷ் மொழி வகுப்பில் லிங்க் சேர்ந்தாள். தேசத்தந்தை, தாம் தம் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்துகிற குறைவான வார்த்தைகளின் தொகுப்பைக் கொண்டே அனைத்தையும் பேசிவிடலாம் என்று சொல்கிறார்.  இலக்கியத்தின் பல வகையறாக்கள் காணாமல் போயின அல்லது உள்ளொடுங்கின. கறாராகச் சொன்னால், இந்தக் கதைகூட சங்கேதக் குறிகளில்தான் எழுதப்படுகிறது.  

காணாமல் போன இலக்கியத்துக்கு நான் ஏங்குகிறேன். ஆனால், லிங்கிற்குத் தெரிகிற குறைவான சொற்றொடர்கள், உணர்ச்சிச் சிக்கல்கள் எழாமல் தடுத்துவிடுகின்றன. சில நேரம் அவளுக்கு திட்டமேதும் இல்லாமல், கவிதைக்கான உந்துதல் எழுகிறது. 24 மணி நேரமும் குப்பைகள் எரியும் ஸியூடாட் சபாட்டா நகரின் சிவந்த வானின்கீழ் நீளும் நிழல்களைப் பற்றி ஒருமுறை சொல்லி, ‘உங்கள் நிழலை அங்கே காண விரும்புகிறேன்,’ என்றாள்.

வேலை செய்யும் இடத்தில் ஆசை கொண்டு அணுகுதல்களுக்கு இடமில்லை. லிங்கை  நெருங்க நான் சிறிதளவும் முயலவில்லை. அறுபது வருடங்களும், ஆயிரக்கணக்கான வார்த்தைகளும் எங்களைப் பிரித்தன. தன்னை மறந்து சூரிய அஸ்தமனத்தை உற்று நோக்கும் ஒருவனைப்போல, அலையாகப் புரளும் கூந்தலும், பட்டைப்போல வெளி உடலும் கொண்ட அவளை நான் வியந்து கொண்டிருந்தேன். ஆனால்  நான் அவளுக்குச் சொல்லிக்கொடுத்த சில வார்த்தைகளில் அவள் எதையோ கண்டுகொண்டாள். என் நிழலைப் பற்றி அவள் பேசினாள், நான் வேலையை விட்டுவிட்டு அவளுடன் போனேன்.

அவள் குடும்பம் ட்லால்டௌக்ட்லி[2] திட்டத் துவக்கத்தோடு மெக்ஸிகோவுக்கு வந்தவர்கள். பிணங்களை உண்டு கொண்டே உயிர்களைப் பிறப்பிக்கும் ஆஸ்டெக் மக்களின் தேவதைக்குப் பெருமை சேர்க்கத்தான் – அந்தத் தேவதை மறுசுழற்சிக்கு எத்தனை பொருத்தமான சின்னம் – இந்த நகரத்திற்கு தேசத்தந்தை இப்பெயரை வைத்தார். ஆனால், சீனர்களுக்கு இந்த உச்சரிப்பு சரிப்பட்டு வரவில்லை. எனவே இந்த மையத் தொழில் பேட்டையும், அதனுடன் உள்ள கட்டடங்களும் ஸியூடாட் சபாட்டா எனப் பெயரிடப்பட்டன. ஊடக வெளிகளில் வந்த அந்தப் படங்கள் இன்னும் எனக்கு நினைவிலிருக்கின்றன – தேசத்தந்தையும், சீன அதிபரும் கலந்துகொண்ட விருந்தில், செந்நிறத்தில் – வெனில்லாவின் புது நிறம் அது – ஐஸ்க்ரீம் பரிமாறப்பட்டது.

உயிரற்ற இந்தத் தொழில் நகரை எனக்குப் பிடிக்கவில்லை. வேடிக்கையான தகவல்களைச் சேகரிப்பதில் கர்மசிரத்தை கொண்ட ஐ.நா., இன்னமும் தெரு நாய்கள் உலவும் வீதிகள் உள்ள நாடுகளில் மெக்ஸிகோவும் ஒன்று என்று சொல்கிறது. அவற்றில் எதுவும் ஸியூடாட் சபாட்டா நகரில் இல்லை. நான் கழிவுகளைத் திருத்தும் இயந்திரங்களின் தொணதொணப்பு ஒலிகள், சிவந்த சூரிய அஸ்தமனங்கள், காற்றில் கலந்துள்ள இலேசான இரசாயன வாடை ஆகியவற்றைப் பாராட்டினேன், ஆனால் சீனர்கள் ஏன் மெக்ஸிக மதுவான டெக்கீலாவிலும், மெக்ஸிகோவின் நாட்டுப் பாடல்களான ராஞ்சேரா இசையிலும் தஞ்சம் புகுந்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருந்தேன்.

மருத்துவர் ஃபாங்க், லிங்கின் பெரிய மாமா. எனக்கு ஏதேனும் வேலை கொடுக்க எண்ணி அவள் அவரிடம் என்னை அழைத்துச் சென்றாள். நாங்கள் ஏதோ ஓர் ஒப்பந்தத்திற்கு வந்ததைக் கொண்டாடுகிறோம் என்பதுபோல எங்களைத் தனியே விட்டுச்சென்றாள். என்னைவிட அறுபதாண்டுகள் இளையவளான பெண்ணுடன் நான் வாழ்வதைப் பற்றி அவர் என்னை விமர்சிக்கக்கூடும் என எதிர்பார்த்தேன் – ஆம், ஒரு வகையில் சொல்லவும் செய்தார். “வஞ்சம் தீர்க்கப் புறப்படுகையில் இரு சவக் குழிகளைத் தோண்டவும்” என்ற கன்ஃபூசியசின் மேற்கோளைச் சொன்னார். இதை எதிர்க்க அவருக்குக் காரணம் உண்டு, ஆனால், அதை அவர் நாடவில்லை. இப்படி உரசல் தவிர்க்கப்பட்டதிலிருந்து எங்கள் நட்பு உதித்தது.

அவர் ஓர் உயிரியலாளர், விலங்குகளிலிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர், ஆனால் அவருடைய பயிற்சியில் படிகவியல், எண்ணியல் செயல்திட்ட வரைவு, மொழியியல், மேலும் சூழலியல் போன்றவையும் அடங்கும். அவருடைய நாட்டில் அவருக்கு இராணுவப் பதவியும் உண்டு. தன் புட்டியில் எத்தனை வலி நிவாரணி மாத்திரைகள் உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர் போன்று அவரது செயல்முறைகள் இருந்தன. (இதை நான் எனக்கு ஒரு முறை தலைவலி இருந்தபோது சோதித்தேன், அவருக்கு அவற்றின் எண்ணிக்கை தெரிந்திருந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கவில்லை.) தனது பொழுது போக்குகளைக்கூட நிபுணரைப் போலத்தான் கையாண்டார்: எங்கள் சதுரங்க விளையாட்டில் என்னை வெள்ளைக் காய்களுடன் தொடங்க அனுமதிப்பார்; ஆனால், எங்கள் விளையாட்டுகளில் அவர்தான் எப்போதும் வெல்வார். பழங்காலத்து முறைகளின் கறார் தன்மையோடு ஸ்பானிய மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். தேசத்தந்தை ‘மறுசுழற்சிகளின் நாற்றங்கால்’ என இந்த நாட்டைச் சொல்கிறாரே எனக் கேட்டபோது, “நான் ஆபத்தானவர்களான புவியியலாளருடன்  இணைந்து வேலை பார்த்ததுண்டு. நாங்கள் எண்பத்தைந்து  இலட்சம் ஆண்டுகளாக இருந்த தாவரங்களை அழித்திருக்கிறோம்” என்றார்.

அவர் தேசத்தந்தைக்கு எதிராகப் பேசியிருந்தால்தான் நான் வியப்படைந்திருப்பேன். அவர் செய்யவில்லை, ஆனால், புவியியலாளர்களைப்  ‘பயங்கரமானவர்கள்’ என்று அடைமொழியோடு சேர்த்துச் சொன்னது என் மனதில் தங்கியது.

ஃபாங் அருந்தும் மூலிகைத் தேனீரால் அடி நாக்கில் ஒரு விசித்திரமான சுவை இருந்தது ; நான் முதலில் அது நீர் பிரிவதைத் தூண்டி அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கழிப்பறைக்கு அனுப்பும் என்று பயந்தேன். அந்தப் பானம் சற்று வினோதமான வாசனையுடன், பாசி போன்று இறுகலாக இருந்தது. நானோ பல பத்தாண்டுகளாக , ஜீவனாம்சம் தரத் தேவையான சக்தி வேண்டும் என்ற பதட்டத்தில், காஃபி குடிப்பவன். எனக்குத் தேனீர் பற்றி ஒன்றும் தெரியாது; இருந்தாலும் என்னால்கூடக் காண முடிந்தது, இந்தப் பானத்தில் ஏதோ தனியான ஒன்று இருந்தது. இதைப் பற்றி ஏதும் கேட்காமல் ஒத்திவைத்தேன் என்பதால் அது ஒரு ரகசியம்போல ஆகியிருந்தது. நான் அங்கே செல்வது வழக்கமானபின், இதைப் பற்றிக் கேட்கத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டேன்.

ஃபாங் பதில் சொன்னார்: “இதில் அருவதா செடியின்[3] இலைகள் உள்ளன.  உங்களுக்கு பெட்ரோ பராமோ நினைவிருக்கிறதா? அதன் நாயகன் தன் அம்மாவின் உருவப்படத்தை சில அருவதா இலைகளின் நடுவில் வைத்திருப்பான். ரூல்ஃபோவுக்குத் தெரிந்திருந்தது, அருவதா இலை ‘கெட்ட திருஷ்டியை’ எதிர்க்கும் என்று சொல்வார், அவர் தெரிந்துதான் சொல்லி இருக்கிறார்.’

அவர் இப்படித்தான் சொன்னாரா அல்லது அந்தத் தேனீரின் மகிமையால் என் காதுகளில் இப்படி விழுந்ததா? அவர் விளக்கத் தொடங்கினார்: “இதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது. ரூ- ரூடா க்ராவியோலென்ஸ்[4] – ஓர் ‘அருள் பாலிக்கும் மூலிகை.’ இது வலிமை வாய்ந்த மின் சக்தியைத் தருகிறது,  சாபங்களாலும், பெரும் சலிப்பாலும் வருவதாகச் சொல்லப்படும் நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. [அவர் நிறுத்திவிட்டு, நீண்ட மடக்கு ஒன்றைக் குடித்தார், அவர் வேறு வகைத் தேனீர் குடிக்கிறாரோ என்று யோசித்தேன்.] “இது கார்பன் அணுக்களையும் செயலிழக்கச் செய்யும்,” என்று முடித்தார்.

சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது? நான் வாயடைத்து உட்கார்ந்திருந்தேன், அதுதான் சாக்கென்று அவர் என்னைப் படமெடுத்தார். அந்தக் கண்ணாடி வில்லை ஒற்றைக்கண் ராட்சதனின் கண் போலவோ, அல்லது காளைத் தலையும் மனித உடலும் கொண்ட மினாடௌரஸின் கண் போலவோ தோன்றியது. ஃபாங் புன்னகைத்தபடி சொன்னார், “உங்கள் உருவப்படத்தை அருவதா இலைகளோடு சேமிப்பேன்.”

‘உங்களுக்கு இந்தச் செடிகள் எங்கிருந்து கிடைக்கின்றன?’

“நாம் கூடைப் பந்தாட்டக் களத்தில் சந்தித்தவர்களிடமிருந்து.”

அவர் நடந்து போனார், 82 வயதான அவரது துடிப்பான நடை பொறாமையைத் தூண்டியது. போய், ஜன்னலை ஒட்டியிருந்த சுவரை அடைந்தார். திரை ஒன்றை விலக்கினார், பின்னால் இருந்த வண்ண நூல்களால் ஆன சித்திரம் ஒன்றைப் பார்க்கக் காட்டினார். அதில் நான் நட்சத்திரக் குறிகளையும், சுருள்களையும், மான்களின் கொம்புகளையும், கண்களையும் பார்க்க முடிந்தது.

“அழகாக இருக்கிறது, இல்லையா? இது ஊய்ச்சோல் கலை. மிக சுவாரஸ்யமானது என்னவென்றால், இது நோயைக் குணப்படுத்த உதவியது. இதைப் பார்த்ததால் நோயாளி ஒருவர் குணமானார்.”

அவர் குரல் அந்த இறுதிச் சொற்களில் நடுங்கியது. நான், அவர்தான் அந்த நோயாளி என்று புரிந்துகொண்டதாக நினைத்தேன்.

“கார்பனுக்கு என்ன ஆகும்?” நான் கேட்டேன்.

“சில விஷயங்கள் நான் சொல்ல வேண்டியவை, சில நீங்களாகச் சிந்திக்க வேண்டியவை.”

அவர் வார்த்தைகள் குறி சொல்வோரின் ஆசரித்தல்போல  இருந்தாலும், எனக்கு மகிழ்ச்சி தந்தன. நான் அவரின் சீடனாகி விட்டிருக்கிறேன். என்னிடம் அவர் காட்டிய மேலாட்சி, என்னை அவருக்கு இளையோனாக உணரச் செய்தது.

“த எக்ஸ்ட்ராக்‌ஷன் ஆஃப் ஸ்டோன் மாட்னெஸ்” ஓவியத்தை நோக்கி என் கண்கள் நகர்ந்தன. சதுரங்கத்தில்  தோற்கடிக்க மட்டுமே இந்த மருத்துவர் என்னை அழைக்கவில்லை எனப் புரிந்தது.

“இருட்டத் தொடங்கிவிட்டது; நீங்கள் பத்திரமாக இருக்க வீட்டுக்குத் திரும்ப வேண்டும்.”

அந்தத் தேனீர் எனக்கு உற்சாகமூட்டியிருந்தது; வீடு திரும்பும்போது நியான் விளக்குகள் வழக்கத்தைவிடப் பளீரென்று ஒளிர்வது போலிருந்தன, என் சுவாசம் சுலபமாக இருந்தது.

லிங்க் இன்னமும் வீடு திரும்பவில்லை. அடித்தளத்தில் நடத்தப்படும் மோசமான மதுக் கடையில்,  மெழுகுவர்த்தி பொருத்தும் கண்ணாடிக் குவளைகளில் தரப்படும் மதுவை அருந்திக்கொண்டு சித்தம் தடுமாறிய நிலையில் உள்ள ஆண்களுடன் அவள் இருப்பதை எண்ணிப் பார்த்தேன். அங்கே ஒரு முறை அவள் என்னை அழைத்துச் சென்றிருந்தாள், அதை என்னால் கற்பனை செய்யமுடிகிற நிலையில் இருந்தேன். அங்கு பின்புறத்தில் க்வாடலூபேயின் கன்னி மேரியின் உருவம் மின்னும் விளக்குகளில் மிளிர்ந்தது. அப்போது அது என்னைப் பாதிக்கவில்லை; இன்று அதை நினைவுகூரும்போது, அது தாங்க முடியாததாக இருக்கிறது. அந்தத் தேனீர் எனக்குச் சங்கடமேற்படும் அளவுக்குத் துடிப்பூட்டி இருக்கிறது.

அவள் குளிக்கப் போயிருக்கையில், நான் அவளது கைப்பையை ஆராய்ந்தேன். இடைமாற்றம் செய்யும் ‘சிப்’களின் நடுவே ஃபாங் எடுத்த என் புகைப்படம் இருந்தது. நான் ஆச்சர்யப்பட்டேன். இவள் எதற்கு இதை வைத்திருக்கிறாள், என்மீது இருக்கும் அன்பாலா, மூடநம்பிக்கையாலா,  அருகிவரும் வழக்கமான மனித உறவுகளைப் பேணுதல் என்பதை ஒட்டியா? நான் என்னைப் பார்க்கும் விதத்தில் அவளால் என்னைப் பார்க்க முடியாது. நானோ அவளது கீழ்க்கழுத்தில் இருக்கும் இரு மச்சங்கள், மணிக்கட்டில் உள்ள ஓர் அரிசி அளவிலான வெள்ளைத் தழும்பு இவைகளைப் போற்றுகிறேன்.

இரவில் என்னையே – எனக்கும் புகைப்படத்திற்கும்  உள்ள ஒற்றுமையை அல்லது என்னை வேறு யாரோபோல் கற்பனை செய்து அவள் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

4. பரிசோதனை

ஒரு மாலை நேரம் நான் ஃபாங்கைப் பார்க்கப் போனேன், எப்போதும் போல சதுரங்கம் விளையாடினோம். எனக்கு நினைவிருக்கிறது, என் கையில் குதிரை வீரன் காயிருந்தது, விரல்களிலிருந்து நழுவியது, திடீரென நான் மயக்கமுற்றேன்.

கவனிக்கத்தக்கதாக ஏதுமில்லாத ஓர் அறையில், எரிச்சல் தரும் விளக்கொளியில் எனக்கு நினைவு திரும்பியது. சற்றுத் தொலைவில் பார்க்க எத்தனிக்கையில் கழுத்தில் தாங்க முடியாத வலி. அந்தத் ‘தம்பி’யைப் பார்த்தேன். அவன்மீது எனக்கு அதிகம் மதிப்பு இல்லை, ஆனால் அவன் அங்கே இருப்பதே ஆறுதலாக இருந்தது. அவனது உருண்ட உடலும், சாதுவான தோற்றமும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று காட்டின. ஓர் கைக்கருவியின் தொடுதிரையைத் திறமையோடு, குவிந்த கவனத்தோடு தன் விரல் நுனிகளால் அவன் தொட்டான்.

என்னை என்ன தாக்கியது ? என் வயதில், கீழே விழுவது எதுவும் கடும் விளைவுகளைக் கொணரும். நான் மறுபடி நடப்பேனா?

 “தம்பி…” அப்படி அவனை அழைக்கச் சங்கடமாக இருந்தது, ஆனால் அவனின் நிஜப் பெயரைத் தெரிந்துகொள்ளும் நேரமில்லை இது.

உடனே, சிறு உலோகக் குவளை ஒன்றோடு வந்தான்.

“தண்ணீர்.”

எழுந்து உட்கார உதவினான்.

பொறாமைப்படத்தக்க சுறுசுறுப்பான நடையோடு மருத்துவர் ஃபாங் உடனடியாக வந்தார். தம்பியிடம் ஏதோ சொன்னார். (அவர் சீன மொழியில் சொன்னதால், அவற்றில் எந்த வார்த்தைகள் தம்பியின் நிஜப் பெயர் என்பது எனக்குப் பிடிபடவில்லை.) அவன் உடனே அங்கிருந்து போனான். என் அருகில் அமர்ந்த அவர், “என் உதவியாளருக்கு யாரையும் தொடுவது பிடிக்காது. ஆனாலும், உங்களைக் கவனித்துக்கொள்ள அவனைவிட நம்பிக்கையானவர் எவருமில்லர். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றார்.

சற்று தலைச் சுற்றலும், இடது காதில் இரைச்சலும் இருப்பதாக உணர்ந்தேன், அதைச் சொன்னேன்.

“அப்படித்தான் இருக்கும்; சீக்கிரம் போய்விடும். உங்களைப் பழங்குடி ஆட்சிக் குழுவினர்தான் பல நாள்களாகப் பார்த்துக் கொண்டார்கள்”

‘எத்தனை நாள்கள்?’

“சிகிச்சையை முடிக்கத் தேவைப்படும் அளவு. உங்களுக்கு ஏதும் நினைவிருக்கிறதா?”

‘ஒன்றும் நினைவில்லை. இப்போது எங்கிருக்கிறோம்?’

“பாதுகாப்பான வீட்டில். சுவர்களில் உலோகம் இருக்கிறது. வெளியிலிருந்து மின்சாரம் உள்ளே வராது. உண்மையான ‘ஃபாரடே கூண்டு’; ஆனால், அது உங்களுக்கு ஏதும் அர்த்தமாகாது என்பது என் ஐயம்.”

‘ஆம். நீங்கள் சந்தேகித்தது சரிதான்.’

என்னுடைய பையில் ஒரு பின்னல் துண்டு இருப்பதைக் கண்டேன். சிரிக்கும் நிலா  பின்னலாகப் பதிக்கப்பட்ட ஒன்று. முன்பு கூடைப் பந்தாட்டக் களத்தில் நான் அந்தக் குழுவைச் சந்திக்கையில் அவர்கள் சிரிக்கும் சூரியனைக் கொண்ட பின்னல் துண்டைக் கொடுத்தார்கள், அதன் துணை இந்த நிலாவின் பின்னல்.  “உலகமெனும் விளையாட்டரங்கில்” உள்ள இருமைகளைப் பற்றி அன்று அவர்கள் பேசி இருந்தனர். ஆயிர வருடப் பழமையான பந்து விளையாட்டின் குறியீட்டு அர்த்தங்கள் இன்னமும் செல்லுபடியாகின்றன. நான் அந்தப் பின்னலை முகர்ந்தபோது கிட்டியவை – காணாமல் போய்விட்ட பழங்களின் வாசனை, ஒரே தொனிக்காகச் சுண்டப்படும் வயலின் தந்தியின் துள்ளலொலி, தொலைவிலிருக்கும் ஒரு தொடுகை.

அன்று, அந்த பழங்குடிக் குழுவினர் தயங்கியபடி இலேசாக என் விரல்களைத் தொட்டனர். ஆனாலும், உடல் உழைப்பு எவ்வாறு அவர்கள் உள்ளங்கைகளை மிருதுவாகவும், விரல்களில் காய்ப்புகளையும் கொடுத்திருக்கிறது என உணர்ந்தேன். இதே கரங்கள்தாம் நான் சுய நினைவற்று இருக்கும்போது என்னைப் பராமரித்தன என உள்ளுணர்வால் அறிந்தேன்.

தளராத பொறுமையுடன், ஃபாங் என்ன நடந்தது என்று என்னிடம் சொன்னார். குழப்பத்தோடு, பின்னர் பயத்துடன் – கடைசியில், தவிர்க்க இயலாது போய்விட்டதை எரிச்சலோடு ஏற்கும் பாங்குடன் நான் அவற்றைக் கேட்டேன்.

“என்ன நடந்தது என்று எழுதுங்கள்,” அவர் சொன்னார். அது ஒரு யோசனை இல்லை, ஆனால் நட்பான தொனியில் இடப்பட்ட கட்டளை.

அறையை விட்டுச்சென்று, திரும்புகையில் ஒரு பேனாவும், நோட்டுப் புத்தகமும் கொண்டுவந்தார்.

ஜன்னலில்லா அந்த அறையில் எத்தனைக் காலம் செலவிட்டேன் என்று எனக்குத் தெரியாது. ஷவர் இல்லாத குளியலறை பின்புறம் இருந்தது. நாளில் மூன்று வேளை  உணவு கொண்டுவந்தனர், ஆனால், நான் நாள்க் கணக்கெடுப்பதை நிறுத்திவிட்டேன். ஃபாங் தகவல்களைச் சரிபார்க்கவோ, விட்டுப் போனவற்றை நிரப்பவோ வந்தார். கூடவே வந்த தம்பி, மௌனமாகத் தன் திரையில் மூழ்கியிருந்தார். வசியத்திற்கு ஆட்பட்டவர்போல் அந்தத் திரையுடனே வாழ்ந்த அவருக்கு புத்தியில் இலேசான குறைபாடு இருக்கிறது என நினைத்தேன். மிக்க நிபுணத்துவப் பயிற்சியால் அவருக்கு அந்த  மந்தத்தனம் ஏற்பட்டிருக்கிறது என்று அந்த நாள்களில் நான் கற்றறிந்தேன். ஃபாங்கின் விளக்கத்தின்படி அவர் சிக்கலான படிமுறை வரைவுகளை வடிவமைக்கும் வித்தகர். அவருடைய சமீபத்திய முயற்சி என்னைப் பற்றியது.

வேறு யாரோ ஒருவர் என்னிடம் சொன்ன கதையைச் சுயசரிதைக் கதையாக நான் எழுதுவது சுலபமாக இல்லை. 

“இது பரிசோதனையின் பகுதி,” ஃபாங் சொன்னார்.   “நீங்கள் நன்றாகச் சொன்னீர்களானால், அதில் பரிசோதனையாக இராது. வெற்றி பெற்ற பரிசோதனை பிறகு அது பரிசோதனை இல்லையே.”

என்னை அடைத்து வைத்திருப்பது கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் அதை வெல்ல வேண்டியிருந்தது. 91 வயதில் என் கௌரவத்தை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நான் சாதாரணமாக லிங்கை மறுபடி பார்க்க விரும்பினேன், அப்படி நான் பார்க்க விலையாக ஃபாங் கேட்டது என் கதை.

ஸியூடாட் சப்பாட்டாவுக்கு நான் போகலாம் என அவள் யோசனை சொன்னதில்தான் இதெல்லாம் ஆரம்பம். அவள் செய்தது ஒன்றும் தற்செயலன்று. என் தற்பெருமையால் அவள் தானாகவே என்னைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறாள் என எண்ணியிருந்தேன். அவளுடன், அவளது மாமாவும்,  ‘தம்பி’யின் கணினியும், பழங்குடிக் குழுவினரின் நெடுங்கால நினைவுகள்  எல்லாவற்றின் இணைப்பால்தான், அவர்களால் என் முன்னாள் செயல்களை மறுபடியும் கட்டமைக்க முடிந்திருக்கிறது. என் வேலை வெட்டப்பட்டது, தாறுமாறாகிப்போன என்  காதல் வாழ்க்கை எல்லாமே என்னை அவர்களுக்கு ஒரு சுலபமான இரையாக்கிவிட்டன.  இப்படி நான் உபயோகப்படுத்தப்பட்டது எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இன்னும் சற்று எஞ்சியிருந்த சுய கௌரவம், லிங் என்மீது முற்றிலும் அக்கறை இல்லாதவள் அல்லள் என்று என்னை நம்பச்செய்தது. தனது குறிக்கோளை  அடைய அவளுக்கு இருந்த மனக் கட்டுப்பாடு, அந்த வேலையில் அவள் மகிழ்ச்சி பெறுவதற்கு எதிரானதாக இருந்திருக்கத் தேவை இல்லை. இவற்றை எண்ணுவதில் நான் மூழ்கி இருந்ததால், ஃபாங் என்னைக் கவனமாக இருக்கச் சொன்னார். உணர்ச்சியற்ற செயல் நோக்கத்தோடு அவர் மேலும் சொன்னார், “சிறு வயதினரைவிட உங்கள் வயதுக்காரர்களிடம் பரிசோதனையில் ஈடுபடுவதில் ஆபத்து குறைவு.”

பரிசோதனை தோல்வியில் முடிந்தால், அது ஒரு வாழ்வைக் குலைத்திராது, சாவைச் சற்றே துரிதப்படுத்தி இருக்கும், அவ்வளவே.

அவர் சொன்னவை குழப்பமான உருக்களை எழுப்பின. அவர் திரும்பச் சொல்கையில் அவரது கதை மெள்ள நினைவுகளாகின. அவை உண்மையா அல்லது தூண்டப்பட்டனவா? குவி மையமற்ற உண்மைகளைப் பார்க்கும் ஒருவனைப்போல், தெளிவில்லாத விதத்தில், அது என்னுடைய கதைதான் என்று நினைத்தேன். அப்படி நினைக்கும்போதே, வேறொரு காலத்திலிருந்து அதிர்வு ஒன்றை உணர்ந்தேன்.

அவர் அளித்த  தேனீர் அருந்திய பிறகுதான் நான் பிரக்ஞை இழந்திருந்தேன். ஒரு கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தேன், அங்கே பழங்குடிக் குழுவின் பிரதிநிதிகள் என்னைப் பேட்டி கண்டார்கள். நான் எந்த மூலிகை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டேன் என்று ஃபாங் சொல்லாதபோதும் என் மூளை இணைப்புகள் சிதறவும், பிறகு மறுபடி இணைப்புகள் உருவாகவும் காரணி அந்த அருவதா இலைகள்தான்.

தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்துகொள்ள இதய மின்பதிவுத்[5] தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்துகொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவு திறமையாக ஏற்றுக்கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்குச் சதி வேலையாகத் தெரிந்தது.

அந்தக் கார்பன் நுண்கடத்திகள்[6] தேசத்தந்தையின் பேரணிகளை நாங்கள் கேட்க உதவின; ஆனால், முக்கியமான  விஷயம் என்னவென்றால் அவை எங்களது எண்ணங்களை, பழக்க வழக்கங்களை, எங்களைத் தூண்டும் விஷயங்களைப் பதிவு செய்தன. வெளியிலிருந்து அவை பெற்றதைவிட,  அவை வெளி நோக்கி ஒலிபரப்பு செய்தவை அதிகம். முன்னொரு காலத்தில் கணிணியிலிருந்தும், அலைபேசி வாயிலாகவும் தனிநபர் வாழ்வு பற்றித் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இப்போது சமூக ஜீவ அணு[7] உங்கள் மூளையிலிருந்தே நேரடியாக, அதி உண்மையாக பொறுக்கப்படுகிறது. நன்கு தெரிந்த இந்த விஷயம், முக்கியத்துவமும் இல்லாதது. ஏனெனில் இதய மின் அலை வரைவுகள் நிலையான ஏற்புடை மனோபாவத்தை ஊக்குவிக்கின்றன. இந்தத் தகவல் யாருக்கும் அதிர்ச்சி தருவதில்லை. மூளை என்பதே ஒரு பரிமாற்றம்தான்.

ஃபாங் பேசப் பேச தம்பி தன் திரையில் வேலை செய்து கொண்டிருந்தார். முடிவு எடுத்தல் என்பது குறித்து ஒரு கட்டத்தில் அவர் பேசினார். பல பத்தாண்டுகளாக நரம்பு – உடலியல் நிபுணர்களுக்குத் தெரிந்த விஷயம், முடிவு என்பது சுயவிருப்பத்தால் வருவதன்று, மாறாக மூளையில் ஏற்படும் மின் தூண்டல்களால் நடப்பது. முடிவு எடுக்கப்பட்ட பிறகு, மூளை அதைக் கவனித்துக் குறித்துக்கொள்கிறது.

தனி நபரின் சுய தகவல்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், மக்களைத் திசை திருப்புவதோடு, அவர்களுக்குக் கிட்டுவன அவர்கள் விரும்பியவைதான் என்றும் நம்பவைக்க முடியும். தம்பியின் படிமுறை வரைவுகள், தேர்வுக்கான வகைகளை படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்தன.  முரண் புதிராக அந்தச் செயல் விடுதலை உணர்வைக் கொணர்ந்தது: ஒருவரைச் சுயவிருப்பு என்பதிலிருந்து பாதுகாத்தது.[8]

“தேர்வு செய்வது பெரிய சுமை,” ஃபாங் சொன்னார், பிறகு மேலும் சொன்னார், “தேசத்தந்தை தன் கட்டுப்பாட்டைச் சுமத்தவில்லை: மக்கள் அவரை ஆதரிப்பது என்ற ஒற்றைத் தொனிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். இவையே ‘சந்தோஷமான பத்தாண்டுகள்’ என்று அவரால் அழைக்கப்படுவன. நடப்பதை ஒத்துக் கொள்ளாது மாற்றுச் செய்திகள் கொடுப்பன ’குறி சொல்லும் மிட்டாய்கள்தான்”[9].  அவர் புன்னகைத்தார்,“ஏனெனில் அவை இன்னும் கூடுதலான சந்தோஷம் சாத்தியம் என்று சொல்கின்றன. தேசத்தந்தை ‘சந்தர்ப்பவாதிகளையும்’, ‘எதிராளிகளையும்’ பற்றிப் பேசுகிறார், அப்போதுதான் நாம் இன்னமும் ‘எதிர்ப்பு’ என்பது சாத்தியம் என்று நம்புவோம்.”

தம்பியின் கைகளிலிருந்த திரைக் கருவியை வாங்கி எனக்குப் புரியாத ஒரு வரைபடத்தைக் காட்டிச் சொன்னார்: “முப்பது வருடங்களாக நீங்கள் செய்திருந்த முடிவுகள் இவை.”

எனக்கு அந்த வரைவு சோகமானதாகத் தெரிந்தது.

 “நீங்கள் தவறுகள் ஏதும் செய்யவில்லை: முன் மாதிரியான குடிமகன்,” ஃபாங் சொன்னார், ஏதோ  ஒரு ஸிலிகோன் பாலிமரால் செய்யப்பட்ட அச்சு வடிவு ஒன்றைப் பற்றி, அதுவும் அவருக்கு ஏமாற்றம் தந்த ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல இருந்தார்.

அப்போது லிங் என்னிடம் ஏதோ பொருந்தாத அம்சத்தைக் கண்டுபிடித்தது எனக்கு நினைவில் எழுந்தது. வகுப்பு ஒன்றில், ஒரு காலத்தில் வெனிலா ஐஸ்க்ரீம் மஞ்சளாக இருந்தது என்று சொன்னேன். பழைய காலத்தைப் பற்றிய அந்த என் பரிவுணர்வு அவள் கவனத்தை ஈர்த்தது. நான் எதிர்ப்பைக் காட்டி இருக்கவில்லை; ஆனால், ஆவணப் பதிவுக்குப் புறம்பான ஒன்றை நினைவு கூர்ந்திருக்கிறேன்: வேறொரு கால கட்டத்திலிருந்த நிறம் பற்றி.

5.உண்மையின் ஒழுங்கின்மை

நான் அந்தப் பழங்குடிக் குழுவினருடனான சந்திப்பை இப்போது வேறு விதமாகப் புரிந்து கொண்டேன். அவர்களுக்குப் பிரதியைத் திருத்த ஒரு எடிட்டர் தேவையாக இருக்கவில்லை.  அந்தச் சந்திப்புக்கான அவர்களின் உள்நோக்கமே வேறாக இருந்திருக்கிறது. பழைய அரசியல் கட்சியின் தொப்பியைக் கொடுத்து என்னை அவர்கள் சோதித்திருக்கிறார்கள். தாதுக்கள் நிறைந்த அந்தச் சந்துத் தெருவில்,  ‘கார்பன் உணர்விகள்’ வேலை செய்யவில்லை, எனவே நான் அந்தத் தொப்பியை நிராகரித்தேன். பின்னர் அவர்கள் மற்றொருவரின் வியர்வை படர்ந்த தொப்பியைக் கொடுக்கும்போது நான் மறுக்காமல் அணிந்து கொண்டேன். அது அவர்களுக்கு என்பால் நம்பிக்கையை வளர்த்தது. அவர்கள் என்னிடம் ஒரு பழைய ஆவணத்தைக் கொடுத்தனர், நானும் வார்த்தைகளை வெட்டி, நிறுத்தற் குறிகளைச் சீர் செய்து கொடுத்தேன்.

எங்களிடையே பகிரப்பட்ட கதை இந்த இடத்துக்கு அவர் வந்ததும், ஃபாங் சற்று நிறுத்தினார்: “எழுத்தாளர் ஒருவரின் படைப்புகளில் அதிக மாறுதலுக்கு உள்ளாவது நிறுத்தற் குறிகள்தாம்; அங்குதான் முதியோரின் அறிவு முதிர்ச்சிக்கான குறிகள் தெரியவருகின்றன. இந்தப் பிரதியை முன்பு எழுதியவர் யாரென நினைக்கிறீர்கள்?”

நீதி, பழங்குடியினரின் நிலங்களை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தல், அடித்தளத்திலிருந்து நம்பிக்கையைப் பாதுகாத்தல் என்று அந்தக் கருத்துகளை நான் எடுத்துக் கையாண்ட முந்தைய நாளின் கணத்தை நான் நினைவு கூர்ந்தபோது, என் வயிற்றில் ஒரு பள்ளம் எழுந்தது,  அந்தப் பிரதி முன்பொரு சமயம் (2017?) நம்பமுடியாத விதமான காலத்தில் உருவானது. அப்போது இன்னமும் தேர்தல்களும், போராட்டங்களும் சாத்தியமாக இருந்தன. அப்போது ஒரு பழங்குடி வேட்பாளரின் சார்பில் நான் களப்பணி செய்தேன்;அவர் தோற்றுப்போனார். அவர்கள் அதை மறக்கவில்லை.

மயக்க மருந்தின் பிடியில் நான் இருந்தபோதோ, அல்லது விழித்திருந்தாலும் அதை என்னால் நினைவுகூர முடியாதபோதோ, அந்த நாள்களில் எல்லாம் மூலிகைகள் என்னிடம் வேலை செய்தன. என் கார்பன் உணர்விகள் செயலிழந்து போகச் செய்யப்பட்டுவிட்டன.

“புது நோய் ஒன்றின் முதல் நோயாளி நீங்கள்,” என்றார் ஃபாங், அது ஏதோ நல்ல செய்தி என்பதுபோல.

அவர் திரையின் அருகே சென்றார், பின் நடந்தவை பயங்கரமாக இருந்தன.

பல வருடங்களாக, உங்களுக்குத் தூரத்தில் கேட்கும் மரமரப்பு ஒலிகளைப்போல, கடல் அலைகளைப்போல, இயந்திரங்களின் விர் ஒலியைப்போல,  பசுமை இல்லக் கண்ணாடியின்மீது விழும் மழை போலவெல்லாம்தான் நான் தேசத்தந்தையின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். திரையில் இப்போது நான் பார்த்த அந்த வார்த்தைகள் சமீபத்தில் எழுதப்பட்டவை போலத் தெரிந்தன, ஆனால் அந்த வார்த்தைகளின் வேர்மூலம் மிகத் தூரத்திலிருந்ததாகவும், மிகத் தெளிவாகவும் தெரிந்தது: நான்தான் அவற்றை எழுதியிருந்தேன்.

 “தோல்வியடைந்த எழுத்தாளராக” (நன்கு தெரிந்த ஒன்றைக் குறிக்க அளவு மீறிச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு மன்னியுங்கள்) இருந்ததற்காகத் தண்டனையை அனுபவித்த அலுவலகத்தை நினைவு வைத்திருந்தேன். இரவுகளில் கலகத்தை எழுப்பும் பிரதிகள் எனக் கருதப்பட்டவற்றை எழுதினேன்; பகலில் தேசத்தந்தை தன் உரைகளில் பகட்டான சொற்களில், ஆனால் எந்த பின்விளைவுகளும் அற்றுப் பேச அதே கருத்துகளை எழுதினேன் . என் இரவு நேர எழுத்து, என் பகல் நேர எழுத்தின் பயனற்ற தன்மைக்கு எதிராகச் செய்யப்பட்டது. நான் வாய்ச்சொல் வீரர்களுக்கும், புரட்சியாளருக்கும் பணி புரிந்தேன். அதிகாரத்தை எதிர்த்த நான், அது காலம்தோறும் நிலைத்து நிற்பதற்கு, புரட்சிக் கருத்துகளை வெறும் சவடாலாக ஆக்கும் சூத்திரங்களையும் எழுதினேன். நான் பின்னணி எழுத்தாளராகச் செய்தவற்றைப் பற்றி அறிந்த நண்பர்கள், “நீயும் எப்படியாவது பிழைக்கத்தானே வேண்டும்,” என்று நையாண்டி செய்வார்கள்.

இதில் மோசமான அம்சம் என்னவென்றால், சரியாக நோக்கினால் என் குறிக்கோள்கள் பணமாக இல்லை. நிஜமாகவே நான், பழங்குடி மக்கள் கீழ்மட்டத்திலிருந்து மாற்றத்தை ஒரு நாளும் கொணர முடியாது என்றுதான் நினைத்தேன். அரசின் அமைதி வழி சீர்திருத்தங்களில் என்னால் முடிந்த அளவு தாக்கத்தை உண்டாக்க விரும்பினேன், என் சாதனைகளுக்குக் கிட்டப்போகும் பெருமை எந்நேரமும் கிட்டலாம் என்றும் எதிர்பார்த்திருந்தேன்.  யாருக்கும் செவி சாய்க்காத தேசத்தந்தை என் பேச்சைக் கேட்பார்.

இவ்வளவு காலம் கழிந்தபின் அந்தத் தவறை நினைவுகூர்வது தேவையா? என்னை இந்தச் சித்திரவதைக்கு உள்ளாக்கியதற்கு நான்  ஃபாங்கை வெறுத்தேன், என்னை அமைதியாயிருக்கவிடச் சொன்னேன்.

அவர் என் சுய பெருமையைத் தூண்டும் விதமாக, “91 வயதில் நீங்கள் இன்னமும் ஏதாவது புதிதாகத் தொடங்க முடியும்” என்றார். “அநீதி, வன்முறை எல்லாம் இன்னும் இருக்கின்றன, ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை. மக்கள் திருப்தியுடன் பணிந்து வாழ்கிறார்கள்.” சதுரங்கப் பலகையில் ஒரு பிஷப் காயை நகர்த்தும் கடுமையோடு அவர் மேலும் சொன்னார்: “பணிதல் என்பது ஒரு படிமுறை.”

“அநீதி, வன்முறை இதையெல்லாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை; நிறைவுடன் பணிகிறார்கள்” என்றவர்,  சதுரங்கத்தில் பாதிரியை நகர்த்தும் தீவிரப் பாவனையுடன், “பணிதல் என்பதும் ஒரு படிமுறை வரைவுதான்; அதனால்தான் உங்களுக்கு நோயை உண்டாக்கினோம்; பிழைதான் உங்களுக்கு நலம் கொடுக்கும்.”

அவர் அளித்த தேனீரை அருந்தியதற்காக வருந்தினேன். மறைவுகளற்று எதிரே நிறுத்தப்பட்ட உண்மை தாங்க முடியாததாக இருந்தது: அதை நானே படைத்திருக்கிறேன்.

 “உங்களுக்கு இதில் என்ன லாபம்?” தீர்மானம் தரும் அந்தக் கேள்வியைக் கடைசியில் கேட்டேன்.

பதில் சொன்னபோது அவர் கன்ஃபூஷியஸ்ஸை நினைத்துக்கொண்டு இருந்திருக்கலாம். “எனக்குப் பழி வாங்கும் எண்ணமில்லை. உலகின் மிகப் பெரும் வளத்தோடு நான் பணி புரிகிறேன்: அது குப்பை, மனிதக் கழிவு. உலகின் சவங்கள் இங்கே வருவது எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டு போகிறது. சீனர்களிடம் தங்கள் குப்பையை நிர்வகிக்குமாறு கேட்டபோது, அமெரிக்கா இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. உடல்களில் தனிமனிதர் வாழ்வு பற்றிய தகவல்கள் கொண்ட நுண்கடத்திகளை உருவி எடுத்துவிட்டு உடல்களைச் சாம்பலாக்குகிறோம். ஆனால், தகவல்களை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். மனிதர்களின் தகவல்களைச் சேகரிக்கும் பண்டாரங்களிலேயே மிகப் பெரியது இது, இதுதான் எத்தனை பிரும்மாண்டமானது என்பது உங்களுக்குத் தெரிகிறதா? ஒவ்வொரு நாகரீகமும் அதன் ஈமச் சடங்குகளால் அடையாளப்படுத்தப்படுகிறது,” அவர் இங்கே சற்று நிறுத்தினார். “ஏதோ உடன்நிகழ்வு என்னை இங்கு கொணர்ந்தது. அன்னியக் குப்பைகளைக் கொண்டு தன்னைக் களங்கப்படுத்திக்கொள்ள என் நாடு ஒப்புக்கொண்டது, உங்கள் நாடு குப்பையாக இருப்பதை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டது, ஆனால் கொஞ்சமாவது மாற்றங்களைக் கொணர இன்னும் காலம் கடந்துவிடவில்லை. எழுதுங்கள், நண்பரே, உங்கள் கதையை எழுதுங்கள்.”

 “இப்போது கதைகளை யாரும் படிப்பது கிடையாது.”

“ஓர் ஆபத்தை எதிர் கொள்ளுங்கள்: நாம் வருங்காலத்தை மறக்க முடியாது.”

 “நமக்கு வலி தருபவை மதிப்பு மிக்கவை.”  

மறதி நோய் பீடித்த மனிதர்களால், நாளை நடக்கப்போவதை ஊகிக்க முடியாது என அவர் விளக்கினார். கடந்த காலத்தை அழித்தால், எதிர்காலத்துக்குள் ஊடுருவி நோக்க முடியாது. ஒரு நோயாளியாக, நானோ, எதிர் நிலையில் இருந்தேன். நடைமுறையிலிருந்து அழிந்து போன பழக்கங்களைக் கையாள்வதன் மூலம், வரப்போவதைக் கற்பனை செய்ய நான் உதவுவேன்.

அவருடைய கலையறையில் இருந்த ஊய்ச்சோல் ஓவியத்தையும், திரையைத் திறந்து அதை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் நான் நினைவுகூர்ந்தேன். “நோயாளி ஒருவர் இதைப் பார்த்துக் குணமானார்,” என்று அவர் சொல்லி இருந்தார். அதைப்பற்றி அவரிடம் கேட்டேன்.

“நாம் இதற்கு வருவோம் என நம்பினேன். இந்தத்  தொழிற்சாலை உருவாக்கப்படும்போது எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது. இயந்திரங்கள் இப்போது அலறிக்கொண்டிருக்கும் இந்த இடம் முடிவற்ற தோட்டமாக இருந்தது, சொர்க்கத்தின் ஒரு கிளை. அகழும் இயந்திரங்கள் அவற்றை அழிப்பதைப் பார்ப்பது பெரும் துன்பமாக இருந்தது. ஆயிரக்கணக்கான பழ மரங்கள் அழிக்கப்பட்டன. ஆரஞ்சுகளின் மணம், சேற்றின், பெட்ரோலின் நெடிகளோடு கலந்து வெளியை நிரப்பியது. யாரோ ஒருவர் என்னிடம் ஒரு குன்றின்மீது இன்னமும் ஆரஞ்சு மரங்கள் இருக்கின்றன என்று சொன்னார் , நான் அங்கே போனேன். என்றென்றைக்குமாக காணாமல் போகவிருக்கும் ஒன்றைப் பார்க்க நான் விரும்பினேன். நான் அவ்வளவு ஓய்ச்சலாக இருந்ததால்.

அங்கே சரிவு ஒன்றைக் கவனிக்காமல் ஒரு முகட்டிலிருந்து கீழே விழுந்தேன். நீங்கள் கூடைப் பந்துக் கூடத்தில் சந்தித்த பழங்குடியினர் என்னைக் காப்பாற்றினார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த மூலிகை கஷாயங்கள் எனக்கு ஒருமையை, நான் ஒளித்து மறந்திருந்த குறைகளை மீட்டுக்கொடுத்தன. நான் முன்பு சொன்ன மாதிரி, நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறோம். அதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்: அந்த ‘மனித இயல்பை’.

 “ஆக, நான் முதல் நோயாளி இல்லை, அது நீங்கள்தான்.”

“ஒரு விதத்தில் நான்தான். நான் ஜன்னி வேகத்தில் கலையறையில் இருக்கிற ஓவியத்தின் முன்பு, பல நாள்கள் இருந்தேன். அதன் அரபிய வேலைப்பாடுகள் எதார்த்தமென்று எண்ணினேன். அவை எதார்த்தத்திலிருந்து நான் பருகிய விஷம் என ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டேன். ஆம், அதில் என்ன சுவாரசியம் என்றால், அது ஓர் அழகிய விஷம். நமக்கு வலி தருபவை மதிப்பு மிக்கவை. யார் நோயாளி எண் பூஜ்யம் என்பது ஒரு பொருட்டன்று. நீங்கள் உங்கள் கதையை எழுதத்தான் வேண்டும்; தவறுகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாம் அவற்றைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்துள்ளீர்கள். பல வகை நிறுத்தல் குறிகளின் காலங்களைக் கடந்து வந்துள்ள ஒருவரின் கண்ணோட்டத்தோடு உங்களால் எழுத முடியும்.”

 “ஆனால் நீங்கள்?”

“நான் கதைகள் சொல்பவன் அல்லன், நண்பரே. என் பிழைகள் தொழில் சார்ந்தவை. உங்கள் பிழைகள் வேறு வகை. எழுதுங்கள்: தவறு செய்யுங்கள். அவற்றைத் தரம் பிரிக்காதீர்கள்: பிழைகள் பெருமதிப்புள்ளவை.”

ஒரு கணம், என் வாக்குமூலத்தைக் கொண்டே என்னைக் குற்றவாளியாகப் பிணைக்கப் பார்க்கிறார் ஃபான் எனத் தோன்றியது, ஆனால் அவருக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். அப்படி நான் நம்புவது எனக்கு அவசியம். அவரது புரட்சிக்கு, அறிவியல் அடிப்படை இருக்கிறது. அவர் எப்படிச் சதுரங்கம் ஆடுகிறார் என்பது எனக்குத் தெரியும். விதிகள்  தூண்டுதலைக் கொணர்பவை என்றால் மட்டுமே அவருக்கு அவை பயனுள்ளவை, எதார்த்தத்தை எதிர்கொள்ள வேறு விதி முறைகளை இப்போது தேடுகிறார். ஃபாங்கோடு சேர்ந்து நான் குடித்த, அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட மூலிகைகளின் அடர்த்தியான தேனீரின் உபயத்தால், பூர்வீகக் குடிகள், வெகு காலம் முன்பே புலம் பெயர்ந்து வந்த சீனக் குடியேறிகள், தங்கள் கார்பன் கடத்திகளைச் செயலிழக்கச் செய்து, அதன் மூலம் முரண்படும் எதார்த்தத்திற்குத் திரும்பும் இதர மனிதர்கள் ஆகியோர்  எதிர்ப்புப் போராட்டத்துக்காகத் தம்மிடையே பின்னியுள்ள சமூக வலைகளைச் சுருக்கமாக விளக்க,  தம்பி சிக்கலான வரைவு ஒன்றை அடைய முயல்கிறாரோ என்னவோ. ஃபாங்கும் அதே தேனீர்தான் குடிக்கிறார் என்று என்னையே நான் நம்ப வைத்துக் கொண்டிருந்தேன். ஏராளமாக, டன்களின் கணக்கில் கழிவுப் பொருட்களை அரைத்துக்கொண்டே அவர் மறைமுகமாகச் செய்கிற இந்த வேலைகளில், மிகச் சமீப காலம்வரை அவை தர்க்க நியதி அற்றதாக எனக்குத் தெரிந்திருக்கலாம் என்றாலும், ஏதோ ஒரு கொள்கை இருக்கிறது என்று நம்ப எனக்கு விருப்பம்தான். அந்த ’நூறு எருதுகளைப் பலியிடும்’ கால கட்டத்தில் விலங்குகளின் தொற்று நோய்களிலிருந்து பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காத்தவர் அவர். இப்போது நம்மிடமிருந்தே நம்மைக் காக்கும் வேலையென்ற பெரும் சவாலை ஏற்றுள்ளார். என்னுடைய நோக்கமோ தெளிவானது: நான் நிச்சயமற்ற தன்மையை விரும்புபவன், முன் காலங்களில் அது  “இலக்கியம்” என்று அழைக்கப்பட்டது.

குப்பைகளிடமிருந்து பெறும் தகவல்களுடன் இந்தப் பக்கங்களையும் அவர் சேர்ப்பார் என நினைத்தேன். அவர் போட்டுள்ள வியூகத்தின் வீச்சு எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் அதில் ஒரு கருவி மாத்திரமே! என் பங்களிப்பு என்பது  முழுமையாகவும் என்மேல் சுமத்தப்பட்டதில்லை, என் சொந்த நம்பிக்கையும் என்னை வழி நடத்தியிருக்கிறது என்பது ஓர் ஆறுதல். ஒரு பெண் என்மேல் ஆர்வம் காட்டியிருக்கிறாள், ஏனெனில் கடந்த காலத்தில் வெனிலாவின் நிறம் பற்றி நான் பேசினேன்.

நான் மயங்கி விழுந்த சதுரங்க விளையாட்டுக்குப் போகும்முன், அந்த பங்களாவின் சமையலறையில் அன்று லிங்கைச் சந்தித்தேன் என்று எனக்கு நினைவிருந்தது. என்னைப் பார்த்தபோது, அவள் அவசரமாக எதையோ எடுத்து வைத்தாள். நாங்கள் சிறிது நேரம் உரையாடினோம், அவள் தன் அறைக்குத் திரும்பினாள். மேஜை மீது தேனீர் இலையின் துகள்கள் இருந்தன. என் மூக்கினருகில் அவற்றைக் கொணர்ந்து முகர்ந்து பார்த்தேன். மருத்துவர் ஃபாங் கொடுக்கும் தேனீரின் மணமேதான் அவற்றுக்கும்.

லிங்கும் ஒழுங்கற்ற தன்மையை விரும்புகிறாள். ஸியூடாட் சபாட்டா நகரின் அடர்ந்த, சிவப்பான வானப் பின்னணியில் அவளது கோட்டுருவைப் பார்த்தேன். அவளது எதிர்காலம் பற்றிக் கற்பனை செய்தேன், அந்த எதிர்காலத்தை நான் பார்க்கமாட்டேன்.

இந்த வாக்கியத்தை லிங்க் படிக்கிறாள், புரிந்து கொள்கிறாள்; உண்மையின் ஒழுங்கின்மையை அவள் ஏற்கிறாள் (அதன் விதிவிலக்குகளையும், பிழைகளையும்கூட); அவள் உணரவும், ஒருக்கால் அன்பு செலுத்தவும், ஒரு வழியைக் காண்பாள்.

(முற்றும்)


[1] Michoacan, Guerrero, Jalisco,Nayarit, Calima

[2] ‘Tlaltecuhtli’ நடுக்காலத்து அமெரிக்கப் பழங்குடியினரின் தேவதை. உலகின் படைப்பிற்குக் காரணமான உக்கிரத் தேவதையாகக் கருதப்படுபவள். இந்தப் பெயர் நௌவாட்ல் என்ற மொழிச் சொல். இந்த மொழி இன்னமும் புழக்கத்தில் உள்ளதோடு செவ்விலக்கியங்களும் கொண்ட மொழி. இம்மொழிக் குழுவினரில் பெரும்பான்மையினர் மத்திய மெக்ஸிகோ பகுதிகளில் வாழ்கிறார்கள்.

[3] அருவதா செடி இலை = Rue leaves

[4] Ruta graveolens (லத்தீன் பெயர்)

[5] இதய மின் பதிவு = எலெக்ட்ரொ கார்டியோ க்ராம் (ECG or EKG என்று இப்போது அறியப்படும் தொழில்நுட்பம். இதையே கதையில் இந்த எழுத்தாளர் சற்றுப் பகடி செய்யும் விதமாக ECOG என்று கொடுத்திருக்கிறார். கதை, சூழலியல் சார்ந்த கதை என்பதால் அப்படி இருக்கலாம். அந்தப் பகடியான பொருளோடு சொல்லைத் தருவதானால் சூழல் வரைபடம் என்றோ சூழல்ஜி என்றோ மொழி பெயர்த்திருக்கலாம். இங்கு அதன் நேரான பொருளைத் தரும்படி மொழி பெயர்த்திருக்கிறேன்.  கதையில் பின் பகுதியில் எலெக்ட்ரோ கார்டியோக்ராம் என்றே பயன்படுத்தப்பட்டிருப்பதும் காரணம்.

[6] நுண்கடத்தி= Nanoconductor

[7] சமூக ஜீவ அணு = சோஷீயல் டி என் ஏ (Social DNA)

[8] இந்த இடத்தில் ‘சுயவிருப்பு’ என்பது ஏற்கெனவே அரசால் கைப்பற்றப்பட்டு, அதன் கட்டுப்பாட்டுக்குள் மக்களைக் கொணரப் பயன்படுத்தப்படும் கருவியாக ஆகியிருந்ததால், ‘தம்பி’யின் படிமுறை வரைவு (அல்கொரிதம்) தேர்வுகள் இல்லாத நிலையை நமக்குக் காட்டுவது, எதார்த்தம் எத்தனை கட்டுப்பாட்டை நம்மீது திணிக்கிறது என்று வெளிப்படுத்திவிடும். இது நமக்குச் சுதந்திர உணர்வைக் கொடுக்கும் என்று பொருள். கதையில் இது சூட்சுமமாகச் சொல்லப்படுகிறது.

[9] குறி சொல்லும் மிட்டாய் = சீன உணவகங்களில் உணவுக்குப் பின்னர் தரப்படும் ஃபார்ச்சூன் குக்கி எனப்படும் இனிப்பு வகைகள். இவற்றின் உலர்ந்த ஓட்டை உடைத்தால் உள்ளே காகிதத் துண்டு ஒன்றில் எதிர்காலம் பற்றிய ஒரு குறிப்பு கிட்டும். ஒவ்வொரு குக்கியிலும் வெவ்வேறு குறிப்புகள் இருப்பதால், அவை நமக்கான தனிச்செய்தி என்ற உணர்வைத் தருவன.

Series Navigation<< நோயாளி எண் பூஜ்யம் -1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.