சுவீடன் ஒரு சோஷலிச நாடா?

கடலூர் வாசு

அமெரிக்கா சுவீடனிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள்.

நான் வெஸ்ட் வர்ஜினியா பல்கலைக்கழகத்திலும், அதைச் சார்ந்த மருத்துவமனையிலும் வேலையிலிருந்த சமயம், ஒரு சுவீடன் நாட்டுப் பெண்மணி எங்களது நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்றாம் வருட மேல்நிலைப் பயிற்சியில் இருந்தபோது, அமெரிக்க நபர் ஒருவரைத் தம் தாய்நாட்டில் திருமணம் புரிந்துத் திரும்பி வந்தார். திருமணம் நடந்தது ஒரு பெரிய கோட்டையில். நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள். மிகச் சிறப்பான திருமணம் என்பதைப் புகைப்படங்கள் எடுத்துக் காட்டியன. இதற்கான செலவு ஆயிரம் டாலருக்கும் குறைவானது என்று அவர் சொன்னதைக் கேட்டு வியந்துபோனேன். சுவீடன் ஒரு சோஷலிச நாடென்னும் எண்ணம் என் மனத்தில் ஆழப் பதிந்திருந்ததால், அவரது கல்யாணச் செலவையும் அரசாங்கமே ஏற்றதோ என்று நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை. பயிற்சி முடியும் தருணத்தில் பெரிய மருத்துவமனைகளிலிருந்து பல அழைப்புகள் வந்தவாறு இருந்தன. சம்பளமும் 2,00,000 டாலருக்கும் மேலே என்பதால் மிகச் சந்தோஷமாக இருந்தார். திடீரென்று ஒருநாள், அவரும், அவரது கணவரும் சுவீடன் நாட்டிற்கே திரும்புவதாகவும், அப்சலா பல்கலைக்கழகத்தில் 1,00,000 டாலருக்கும் குறைவான சம்பளத்திற்கு வேலையை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னார். அவரது அமெரிக்கக் கணவர், சுவீடன் நாட்டில்தான் குடியேற வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாலும், சுவீடன் நாட்டிலுள்ள சகோதரியிடம் பேசியபோது, அவருக்குக் கிடைக்கப்போகும் சம்பளம் சுவீடனில் மேல்மட்டத்திலுள்ள பத்து சதவீதத்தினரது என்றும், அமெரிக்காவின் 3,00,000 டாலருக்குச் சமமானது என்று சொன்னதால் இம்முடிவை எடுத்ததாகச் சொன்னார். சோஷலிச நாடாயிருந்தாலும், அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற நம்பமுடியாத செய்தியை நான் கேள்விப்பட்டிருந்தாலும், அதனை அவருடன் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், நான் சமீபத்தில் படித்த கட்டுரை சுவீடனைப் பற்றிய எண்ணங்களை முற்றிலும் மாற்றிவிட்டது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகக் கட்சியின் போட்டியிலிருந்து சமீபத்தில் விலகிய திரு. பெர்னி சாண்டர்சை, மேலோங்கி நிற்கும் ஒரு சோஷலிச நாட்டைச் சுட்டிக் காட்டுமாறு கேட்டபோது, அவர் தாம் தேன் நிலவிற்குச் சென்ற ரஷ்யாவையோ, பொருளாதாரம் முழுவதையும் தன கைக்குள் அடக்கி வைத்திருக்கும் இதர சோஷலிச அரசாங்க நாடுகளையோ சுட்டிக்காட்டாமல் சுவீடன் , நார்வே போன்ற நாடுகளை முன்வைத்தார். இக்கட்டுரையைப் படித்தபின், இதர ஜனநாயகப் போட்டியாளர்கள், அவர் சோஷலிசத்தை ஆதரிக்கிறார் எனக் குற்றம் சாட்டியது அர்த்தமற்றதாக எனக்குத் தோன்றுகிறது. நியூ யார்க் மாகாண ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி அலெக்ஸான்ட்ரா ஓகாசியோ கார்டெஸ் அவர்களும், அமெரிக்காவைத் தற்போதைய வெனிசுலா நாட்டைப்போல் ஆக்கும் எண்ணம் அவருக்கில்லை என்றும், சுவீடன், டென்மார்க் போன்ற சோஷலிச நாடுகள்தான் தம் கருத்தில் இருப்பதாகக் கூறுகின்றார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். நார்வே, சுவீடன், டென்மார்க் நாடுகளில் இதர சோஷலிச நாடுகளைப்போல் ரொட்டி வாங்கக் காத்துக் கிடக்கும் மக்களையும், கட்டாய உழைப்பாளர் முகாமையும் நாம் பார்க்கவில்லை என்பதாலும் இருக்கலாம். ஆனால், இதிலுள்ள பெரிய தவறு – சுவீடன் ஒரு சோஷலிச நாடே இல்லை என்பதுதான் என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார்.

அமெரிக்கா இன்றைய சுவீடனைப்போல் மாறினால் எவ்வாறிருக்கும்? வர்த்தகம் சுலபமாகும்; பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் குறையும்.; Fannie Mae, Freddie Mac போன்ற அரசாங்கத்தின் நிதியுதவியை நம்பியுள்ள வர்த்தகங்களைக் காணமுடியாது; தொழில் செய்ய உரிமம் வேண்டியிராது; குறைந்த அளவு ஊதியம் இவ்வளவாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படமாட்டாது; சொத்து வரி, கொடை வரி, பரம்பரைச் சொத்து வரி ஆகியவை நீக்கப்படும்; சமூகக் காப்புறுதித் திட்டம் மாற்றி அமைக்கப்படும். இத்திட்டத்திலிருந்து திரும்பப் பெறும் பணம், முன்னர் செலுத்திய பணத்தைப் பொறுத்தே இருக்கும். தனியார் நிறுவனங்களும் இதில் பங்கேற்க உரிமை அளிக்கப்படும். பள்ளிக் கல்விக்கு விரிவான பற்றுச்சீட்டுச் (Voucher) சலுகை, பொதுக் கல்விக் கூடங்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளுக்கும் அளிக்கப்படும். சுவீடனில் இருக்கும் தனிநபர் சுதந்திரம் அமெரிக்காவில் இல்லை என்று தெரிய வரும்போது சுவீடன் ஒரு சோஷலிச நாடு; அமெரிக்காதான் சுதந்திர நாடு என்று அமெரிக்க மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. என் மகன் சில வருடங்களுக்கு முன், ”நான் ஓர் அமெரிக்கன் என்று பெருமைப்பட நான் வருடம் தவறாமல் வரி செலுத்துகிறேன் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமிருப்பதாகத் தோன்றவில்லை,” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. கட்டுரை ஆசிரியரும், இது சோஷலிசம் என்றால் என்னைத் தோழர் என்று அழைக்கலாம் என்கிறார். சுவீடனில் உள்ள தனிநபர் சலுகைகளைக் காணும்போது, அமெரிக்காவில்தான் தோழர் உரிமை பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது.

கொதிக்கும் தண்ணீரில் போட்டால் எம்பிக் குதித்து வெளியேறும் தவளையைப் பச்சைத் தண்ணீரில் போட்டு மெதுவாகக் கொதிக்கவைத்தால், அதிலேயே வெந்துசாகும் என்பதைப்போல, அமெரிக்களிடமிருந்து சிறிது சிறிதாக தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதால் எந்த அளவு சுதந்திரத்தை நாம் இழந்து விட்டோம் என்று அறியாமலே இருக்கிறோம். ஆமாம், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளை விட்டுவிட்டுச் சுவீடனை ஏன் சோஷலிச நாடு என்று சுட்டிக்காட்டுகிறோம்? இதற்குக் காரணம் பெரும்பான்மையான அமெரிக்கர்களின் மூளை, 1970 களில் உறைந்து கிடப்பதுதான். ஆம். அச்சமயத்தில் சுவீடன் சோஷலிசத்தை நோக்கி விரைந்தோடிக் கொண்டிருந்த நாடுதான். ஆனால், அது அந்நாட்டை அழிவின் எல்லைக்கே தள்ளிய ஒரு பிறழ்ச்சியாகும. 1970ல்தான் சுவீடன் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. எவ்வாறு ஒரு நாடு, அரசாங்கத்தின் தலையீடு அதிக அளவில் இருந்தாலும், மற்றைய சோஷலிச நாடுகளைப் போலல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியுள்ளது என்று வியந்தனர். வட்டம் எவ்வாறு சதுரமாகியது? சுவீடன் நாட்டினரையே கேட்டிருந்தால் அதன் காரணம் தெரிந்திருக்கும் . ஓர் ஊதாரி செல்வந்தரின் செல்வ வளம் உயர்ந்திருப்பதற்குக் காரணம் அதைப்போல் பல மடங்கு சொத்து, ஆரம்பத்தில் இருந்ததுதான் என்று கூறியிருப்பார்கள்.

சுவீடனில் பொருளாதார புரட்சி:

1950திலேயே சுவீடன் நான்காவது பணக்கார நாடாக ஆகிவிட்டது. 5வது திறந்தவெளிப் பொருளாதார நாடாகவும் இருந்தது. வரியும், மொத்த உள்நாட்டு விளைபொருள் மதிப்பில் 21 சதவீதமே. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைவிடக் குறைவாகும்.

சுவீடனின் வளர்ச்சிக்கான வித்து 19வது நூற்றாண்டின் மத்தியில் ஊன்றப்பட்டது. இச்சமயத்தில்தான், சுவீடனில் நிர்வாகமும், ஆட்சியும் தொன்மையானதும், பொதுமக்களின் வாழ்க்கை நலத்தை உயர்த்தும் பொருளாதாரத்தின் வல்லுனர்களின் கைக்கு வந்தது. இவ்வல்லுனர்களின் தலைவர் ஜொஹான் ஆகஸ்ட் கிரிப்பேன்ஸ்டெட் என்பவர் நிதியமைச்சரானார். இவர் பிரெடெரிக் பாஸ்டியாட் என்ற அரசியல் பொருளாதார வல்லுனரால் கண் திறக்கப்பட்டவர். அவர் சிபாரிசு செய்த தடையற்ற வர்த்தகத்தின் மதிப்பினை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டவர். ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்பட்டன; வர்த்தகத் தடைகள் முறிக்கப்பட்டன; பெண்களை வேறுபடுத்தும் சட்டங்கள் அகற்றப்பட்டன. குடியேற்றம், குடியிறக்கம் இவற்றிற்கான தடைகள் நீக்கப்பட்டன. இதற்காகவே காத்திருந்தது போல், பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவிற்குக் கப்பலேறிச் சென்றனர். அவர்கள் விவரித்த அமெரிக்காவின் சுதந்திரத்தையும், வணிக நிறுவனங்களின் அமைப்பையும் கேள்விப்பட்டுச் சுவீடன் நாட்டினர் மேலும் உற்சாகமடைந்தனர். கிரிப்பேன்ஸ்டெட், அவரது சீர்திருத்தங்கள் ஏழை நாடான சுவீடனை மிகப் பணக்கார நாடாக மாற்றப்போகிறது என்று உறுதிமொழி கூறினார். ஆனால், 1866ல் அவர் அரசாங்கத்திலிருந்து விலகியபோது, அவருடைய சீர்திருத்தங்களின் விபரீத விளைவுகளைச் சந்திக்கும் துணிவில்லாத கோழை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அரசாங்கக் கட்டுப்பாடுகளின் தளர்வு, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கப் போகிறது. அந்நிய வணிகர்கர்களோடு போட்டியிட முடியாமல் உள்நாட்டு வியாபாரிகள் அழிந்து போவார்கள் என்ற முற்கணிப்பை மக்களிடையே அவருடைய எதிராளிகள் பரப்பினர்.

புரட்சியின் விளைவுகள்:

ஆனால் நடந்தது என்ன? 1870தில் இருந்து 1913 வரை சுவீடனின் தொழில்வளம் கிடுகிடுவென்று உயர ஆரம்பித்தது. உள்நாட்டுப் பொருள் வளர்ச்சி (GDP) வருடத்திற்கு 2 சதவீதமாக உயர்ந்தது. அதே சமயம், அரசாங்கத்தின் செலவு, பொருள் வளர்ச்சியில் பத்து சதவீதத்தைக்கூடத் தாண்டவில்லை. இரண்டு உலக யுத்தங்களிலும் சுவீடன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல், வியாபாரச் சந்தையை முன்போலவே தடையற்றதாகவும், வரிகளைக் குறைவாகவும், அரசாங்கச் செலவுகளைச் சிறிதளவே உயர்த்தியும் இருந்தது. சமதர்ம ஜனநாயகக் கட்சி (Social Democratic Party) 1932இல் பதவியேற்ற பின்பும், அக்கட்சியில் பெரும்பான்மையோர் திறந்தவெளி வர்த்தகத்தை வலதுசாரியைவிடத் தீவிரமாக ஆதரிப்பவர்களாக இருந்ததால், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்தாம் மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை கணிசமான விலையில் கொடுக்க முடியும் என்றறிந்து, முதலீட்டுச் செலவுகளுக்கு வரி விலக்கு அளித்தனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. செல்வமும் பெருகியது. இதைச் சீரழிக்காமல் விநியோகிப்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருந்ததால், நாட்டின் செல்வம் மேலும் கூடியது. உள்நாட்டு வர்த்தகங்களும், மற்றைய நாடுகளோடு மோத வேண்டியிருந்ததால், தக்க சீரமைப்புகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியதால், தோளோடு தோள் நின்றன. தொழிற்சங்கங்களும், விவசாயம், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் போன்ற வெள்ளை யானைகளை மூட்டை கட்ட அனுமதித்தன. மிகவும் ஏழை நாடாயிருந்த சுவீடன், கிரிப்பேன்ஸ்டெட் ஏற்படுத்திய இம்மாற்றங்களால், அவர் அரசாங்கத்திலிருந்து விலகிய நூறு வருடங்களுக்குப்பின் மிகப் பணக்கார நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாறியது.

சோஷலிச வெள்ளோட்டம்: (1970 – 1990)

நாட்டின் செல்வ வளமும், பொருளாதார முன்னேற்றமுமே அந்நாட்டை 20ஆம் நூற்றாண்டில் பிரபலமாயிருந்த சோஷலிச அரசியல் சித்தாந்தத்திற்கு சோதனைக்கூடமாக ஆக்கியது. குன்னர் மிர்தால், ஆல்வா மிர்தால் என்ற இரண்டு சுவீடன் நாட்டுச் சோஷலிச சித்த்தாந்தவாதிகள், சுவீடனும் மற்ற ஸ்கேண்டிநேவியன் நாடுகளும், மக்கள் நல நாடுகளாக மாற்றப்படுவதற்கு ஏற்றதாக உள்ளன என்று அறிவித்தனர். செல்வம், சிறந்த வணிகம், பணியாளர்கள், நேர்மையான நம்பகமான அரசாங்க ஊழியர்களைக் கொண்ட சுவீடன் நாட்டில் சோஷலிசம் வேலை செய்யாவிட்டால் வேறெங்கும் செல்லாது என்று நினைத்தனர் கல்வி, மருத்துவத் துறைகளில் சோஷலிச முறைகளை மெதுவாக நுழைத்தனர் சமூகக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், வேலையிழந்தவர்களுக்கான ஊதியம், பிறந்த குழந்தைகளின் தந்தையர்களுக்கு ஊதிய விடுமுறை போன்ற சலுகைகளை அமலாக்கினர் . அதன் பின்னரும் அரசாங்க கஜானாவில் பணம் நிரம்புவதைப் பார்த்த சோஷலிச ஜனநாயக அரசாங்கம், வர்த்தகம் மற்றும் மக்கள் மீதான பிடியை இறுக்கியது. 1960இலிருந்து 1980க்குள் அரசாஙக்ச் செலவு உள்நாட்டுப் பொருளுற்பத்தியில் 60 சதவீதமாகியது. வணிகம் மற்ற தொழில்களின் மீதான கட்டுப்பாடுகள் மேலும் அதிகமாயின. இந்நிலையிலுள்ள சுவீடன் நாடுதான், பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்களின் கவனத்திற்கு வந்து அங்கேயே தங்கிவிட்டது. சோசலிசத்தின் மதிப்பு உச்சநிலையில் இருந்த சமயம் இது. சுவீடன் அதன் காட்சிப் பெட்டியாகியது. உச்சியில் இருந்த சுவீடனைப் பார்த்த சாண்டர்ஸ் போன்றவர்கள் அது எவ்வாறு அச்சிகரத்தை அடைந்தது என்பதை ஆராயத் தவறியவர்கள்.

விபரீத விளைவுகள்:

ஏழை நாடான சுவீடன் பணக்கார நாடவதற்கு நூறு வருடங்கள் தேவைப்பட்டன. ஆனால், அதைச் சோஷலிஸப் பாதை இருபதே வருடங்களில் சிகரத்திலிருந்து அடிவாரத்திற்கு உருட்டிவிட்டது. மற்ற நாடுகளெல்லாம் சுவீடனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே சமயம் திறமையும், செல்வமும் வரிச் சுமையைத் தாங்கமுடியாமல் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. வர்த்தகங்கள் தங்கள் தலைமையகத்தையும் முதலீடுகளையும் இதர நாடுகளுக்கு எடுத்துச் சென்றன. ஐகியா, டெட்ராபாக் போன்ற பெரிய வர்க்கங்களும், போர்க், இன்க்ரிட் பெர்க்மென் போன்ற நட்சத்திர மனிதர்களும் சுவீடனைவிட்டு வெளியேறினர். சுவீடனின் பிரதமர் வொலாஃ பாமே, சுவீடன் ஒரு நரகமாகிவிட்டது என்று குறைப்பட்டுக் கொண்டார். மற்றைய நாடுகளையெல்லாம் முந்திச் சென்றுக்கொண்டிருந்த சுவீடனின் பொருளாதாரம் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. 1970திலிருந்து 1995 வரை, தனியார் நிறுவனங்களில் புதிய வேலைகள் ஒன்றும் ஆரம்பமாகவில்லை; புதிய ஆட்களும் வேலையில் அமர்த்தப்படவில்லை. மிர்தால் எண்ணியபடி சோஷலிசம் சுவீடனிலும் வேலை செய்யவில்லை. பணி நெறிமுறைகளைக் கடைபிடித்தவர்கள் திறந்தவெளி வியாபாரத்தில் ஊறிச் சுயக் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்ட பழைய தொழிலாளிகள் மட்டுமே. புதிய தலைமுறையோ, வேலை செய்தால் வரிகள் அதிகம்; வேலையில்லாவிட்டால் சலுகைகள் அதிகம் – என்பதை வெகு விரைவிலேயே கண்டுகொண்டனர். ஏமாற்றமடைந்த மிர்தால், “சுவீடன் நாட்டு மக்கள் ஏமாற்றுக்காரர்களாக மாறிவிட்டார்கள்” என்று வசை பொழிந்தார். சலுகைகளைப் பெறுவதற்காகப் பொய் சொல்வது தப்பன்று என்பவர்களின் எண்ணிக்கை 1960இல் 5 சதவீதமாக இருந்தது, 2000த்தில் 43 சதவீதமாகியது. நோய் விடுமுறை நாள்களை வெகுவாக அதிகரித்த பின்னர், உலகத்திலேயே ஆரோக்கியத்தில் முதன்மையாக இருந்த சுவீடன், உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி விடுமுறை எடுக்கும் நாள்களில் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. கடன், பணவீக்கம் ஆகியவைகளின் மூலம் கொஞ்சம் காலத்தைத் தள்ளிய சுவீடனின் பொருளாதாரம் 1990இல் கவிழ்ந்தது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. நிதிப் பற்றாக்குறை உள்நாட்டுப் பொருள் வளர்ச்சியில் 11 சதவீதமாகியது. 1992இல் சில நாள்களுக்குச் சுவீடனில் மத்திய வங்கி பணவீழ்ச்சியைத் தவிர்க்க வட்டி வீதத்தை 500 சதவீதமாக்கியது.

எதிர்ப் புரட்சி:

சோஷலிஸக் கொள்கைகள் ஏற்படுத்திய வேதனைகளைத் தாங்கமுடியாமல் அரசாங்கம் மத்திய – வலதுசாரிக் கட்சிக்குக் கைமாறியது. 1991 – 94ல் கார்ல் பில்ட் என்ற பிரதமர், சோஷலிசத்திற்கு முன்பு 100 வருடங்களாக இருந்த பழைய திட்டங்களை அமலாக்கினார். அரசாங்கத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டது. வருமான வரி குறைக்கப்பட்டது. சொத்து வரி, உடைமை வரி, கொடை வரி, பரம்பரைச் சொத்து வரி ஆகியவை நீக்கப்பட்டன. பொதுப் பணிகள், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐரோப்பியக் கூட்டரசுடன் சேர்ந்ததனால் சுவீடன் நாட்டுப் பொருட்களுக்கு வரி விலக்கு கிடைத்தது. பொதுத் துறையில் விருப்பமுள்ளவர்கள் போட்டியின் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பற்றுச் சீட்டுகள் மூலம் பள்ளிகளைத் தேந்தெடுக்கும் உரிமை பெற்றோர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது. காப்புறுதித் திட்டங்களும் முன் கூறியதுபோல் மாற்றி அமைக்கப்பட்டதால் அரசியல்வாதிகளின் வாக்குறுதியை நம்பியிராமல், பொருளாதாரத்தின் உறுதியைப் பொறுத்ததாக மாறியது. இம்மாற்றங்களால் பொருளாதார சுதந்திரம் 2 புள்ளிகள் மேலே சென்றது. அமெரிக்காவின் தரம் இதே சமயத்தில் அரைப் புள்ளிதான் மேலே சென்றது என்பதை நினைவு கூறவேண்டும். 1970லிருந்து1995 வரை சோஷலிசச் சொர்கமாகத் தோன்றிய சுவீடனின் பணவீக்கம், மக்களின் சம்பள உயர்வையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. 1995திற்குப் பிறகே பணவீக்கம் அல்லாத பணவரவு 65 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓர் அமைச்சர் சொன்னது, ”சோஷலிசம் எங்கள் பேச்சில் மட்டுமே; எங்கள் கொள்கைகள் மத்திய வலதுசாரியைச் சார்ந்தவை”. சமூகச் செலவு 26 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது அமெரிக்காவைவிட அதிகமாக இருந்தாலும் சுவீடன் நாட்டினரின் மருத்துவம், குழந்தைப் பராமரிப்பு, கல்லூரிக் கல்வி, புதிய பெற்றோர்களுக்கான விடுமுறை போன்ற செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறிருக்க, பெர்னி சாண்டர்ஸ் இலவச மருத்துவம் இலவசக் கல்லூரி என்ற இரண்டு திட்டங்களை முன்வைத்ததற்கே, அவரது கட்சியினரே அவரைச் சோஷலிஸ்ட் என்று சாடுகின்றனர்.

மாற்றங்கள் எவ்வாறு சாத்தியமாயின?

இத்தகைய சலுகைகளால் சுவீடனில் பொருளாதாரம் சரிவடையாமல் தாங்கிக் கொள்வதுடன், எவ்வாறு மேலும் வளர்கிறது என்று கேட்டால் சுவீடன் நாட்டினர் பதில் சொல்லத் தயங்குவர். செல்வந்தர்கள்மீதுதான் இவ்வரிச்சுமை திணிக்கப்பட்டிருக்கிறது என்று நாம் நினைத்தால் மற்ற எண்ணங்களைப்போல இவ்வெண்ணமும் தவறானதேயாகும். 97 சதவீத அரசாங்க வருமானம் சம்பளப் பட்டியல் வரியாகும். மூன்றில் ஒரு பங்கு வருமானம் வரியாகப் பிடிக்கப்படுகிறது இவ்வரிப் பணத்தை வழக்கறிஞர்கள் மூலம் மீட்க முடியாது, பஹாமாஸ் போன்ற நாடுகளில் மறைத்து வைக்கமுடியாது என்று அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கிறது. மூன்று சதவீதம் மட்டுமே செல்வந்தர்களின் வருமானத்திலிருந்து வருகிறது. அமெரிக்காவில் 45% வருமான வரி வருமான உச்சியில் உள்ள பத்து சதவீதத்தினரிடமிருந்து பெறப்படுகிறது. சுவீடனில் இது 27 சதவீதமேயாகும். அரசாங்க வருமானத்தில் கால் பாகம் விற்பனை வரியிலிருந்து வருவதாகும் .இது ஏழை – பணக்காரர் பாகுபாட்டைச் சேர்ந்ததன்று என்பது எல்லோரும் அறிந்ததே. என்னை பொறுத்தவரை, இவ்வரி தேவையற்ற பொருட்களைச் சேகரிப்பதையும், வீண் செலவுகளையும் தவிர்க்கிறது என்றே நினைக்கிறேன்.

முடிவுரை:

அமெரிக்கர்களுக்கு சுவீடன் சொல்லித் தரும் பாடமென்ன?

பெரும்பான்மையான அமெரிக்கர்கள் – என்னையும் சேர்த்துதான் – நினைப்பதைப்போல் சுவீடன் ஒரு சோஷலிச நாடன்று. 70திலும், 80திலும் சோஷலிஸப் பாதையில் தவறாக இறங்கி, மீண்டு, திருந்தி வந்த நாடு.

இன்றைய சுவீடன் நாட்டு பொருளாதாரம் அமெரிக்காவைவிடத் தாராள மனப்பான்மை உடையதாக உள்ளது. சுவீடன் நாட்டினர் அனுபவிக்கும் சலுகைகளை அமெரிக்க மக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

இவ்வாறிருந்தும், 42 சதவீத அமெரிக்க மக்கள் சோஷலிசத்தைச் சிறந்த கொள்கையென்று ஒரு தேர்வில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் – பெர்னி சாண்டர்ஸ் உட்பட – இவர்கள் எவருமே சோஷலிசத்தை அனுபவித்தவர்கள் அல்லர். ஆனால், அமெரிக்கர்களால் சோஷலிச நாடென்று கருதப்படும் சுவீடனில், சோஷலிஸ்ட் என்று சொல்லிக்கொள்பவர்கள் 9 சதவீதம் மட்டுமே. 1996லிருந்து 2006 வரை சுவீடன் நாட்டுப் பிரதமராயிருந்த கோரான் பெர்ஸ்ஸான், தாம் சோஷலிஸ்ட் என்பதை வன்மையாக மறுக்கிறார் இதற்கு அவர் சொல்லும் காரணம், “நான் அவர்களை போல் பைத்தியக்காரனல்லன்” என்பதே. வெஸ்ட் வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற மருத்துவப் பெண்மணி தம் அமெரிக்கக் கணவருடன் தாய்நாட்டிற்கே திரும்பியதன் பின்னுள்ள காரணம், பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் இக்கட்டுரையைப் படித்த பின்னரே விளங்கிற்று.

ஆதாரம் : Sweden’s lessons for America By Johan Norberg

Cato Policy report;Jan/Feb 2020 Vol XLII No 1.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.