கைச்சிட்டா – 2

This entry is part 2 of 8 in the series கைச்சிட்டா

அ) Gun Island

சர்க்கரையை ஹிந்தியில் சீனி என்கிறோம். சீனாவில் இருந்து இறக்குமதியான சீனாக் கற்கண்டு என்பது மருவி, சுருங்கிச் சீனி என அழைக்கப்பட்டது என்பதை Sea of Poppies நாவலில் சொல்லியிருப்பார் அமிதவ் கோஷ். அமிதவ் கோஷின் (சற்றே) புத்தம் புதிய நாவல் Gun Island. அதில் பந்தூக் என்னும் துப்பாக்கியைக் கையில் எடுத்திருக்கிறார் கோஷ். பந்தூக் என்னும் வார்த்தை எவ்வாறு வெனிஸ் நகரத்திலிருந்து இறக்குமதியானது என்பதை உணர்த்துவதன் மூலம் உலகமே ஒரு நகரமாகவும் மொழி ஒரு தொடர்புச் சின்னமாகவும் ஆவது புரிகிறது.

ஓரிடத்தை விட்டு எது நம்மை அகல வைக்கிறது? கர்ண பரம்பரைக் கதையாக வங்காளத்தில் சொல்லப்பட்டு வரும் பந்தூக்கி சதாகர் மூலமாக இந்தக் கேள்வியை கோஷ் அணுகுகிறார். பந்தூக்கி சதாகர் ஒரு வேட்டு வியாபாரி. நாக தேவதையான மானஸா தேவியின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக உலகம் சுற்றியவர். ”நீயா” படத்தில் இருந்தே தெரிந்திருக்கும். நம்புபவருக்கும் நன்றாக நடத்துவோருக்கும் நாகங்கள் எப்போதும் நன்மையே புரியும்; பாம்பைப் பழித்தோரை பழிவாங்கும்.

மூல வினாவிற்கே வருவோம்: எது நம்மை விலக வைக்கிறது? நாம் என்பது விலங்குகள், மனிதர்கள்; ஏன்… பூதங்களும் பிசாசுகளும்கூட இருப்பிடத்தை விட்டு ஓடிப்போவது ஏன்? தேசங்கள் சில சமயம் பிரிகின்றன; மனிதர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்; பஞ்சம் பிழைக்க வேறெங்கோ வேர்களைத் தேடுகிறார்கள்; கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்படுகிறார்கள்; அன்னிய சக்திகளால் ஆளப்படுகிறார்கள்; காதலுக்காக நாடு விட்டு நாடு வருகிறார்கள்; தொழில் புரட்சி, கணினி யுகம் – இப்படிப் பல காரணங்கள். கடவுள்கள்கூட இதற்கு விதிவிலக்கல்லர்.

இந்தப் பூமியை எவ்வாறு மனிதன் அழிக்கிறான் என்பதை பதினேழாம் நூற்றாண்டின் கதையின் மூலம் நிகழ்காலத்தில் விவரிக்கிறார் அமிதவ். இட்டுக்கட்டிய கற்பனைக்கும் அறிவியலுக்கும் நடுவே கொஞ்சமே கொஞ்சம் இடைவெளிவிட்டு கதை கைகோர்த்துச் செல்கிறது. புவியில் நடக்கும் மாறுதல்களைப் புரிந்துகொள்வதற்கு பியா-வும், டீன்-னும் சிரமப்படுகிறார்கள். சிந்தா-வும், டிப்பு-வும் இவர்களுக்கு நேர் எதிர். அவர்கள் அனுமானங்களாலும், தெய்வீகமான தர்க்கங்களைத் தாண்டிய சக்திகளின் மேலும் அசையாத நம்பிக்கையைக் கொண்டவர்கள்.

காட்டை அழித்து வீட்டைக் கட்டுகிறோம். காட்டில் இருக்கும் தேளும் பாம்பும் வீட்டிற்குள் வருகிறது என அடிக்கிறோம். எதனுடைய வீட்டில் யார் இருக்கிறோம்? இயற்கைக்கு மீறிய செயல் என்பதை அமானுஷ்யம் எனலாம். இயற்கையை அழிக்கும் செயலை அறிவியல் எனலாமா என்னும் வினா எழுகிறது.

வெனிஸ் நகரத்தில் சந்திக்கும் சகாக்களிடம் “தேஷ் கொயி?” என்று தினநாத் வங்காள மொழியில் வினவி உரையாடலைத் துவக்குவார். இதன் அர்த்தமாக

 • எங்கிருந்து வருகிறீர்கள்?
 • எங்கே இருப்பிடம்?
 • நம் நாடு எங்கே இருக்கிறது?
 • நமக்கு நாடு என்றொன்று இன்னும் இருக்கிறதா?

என பல அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். அதைத்தான் “துப்பாக்கித் தீவு” நம்மை நினைவில் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது. ஒரிசா மாநிலத்தின் புயல் வெள்ளமும், பங்களாதேஷ் நாட்டின் பேரழிவுகளும் சூறாவளிகளும், தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பஞ்சமும், பக்கத்து பக்கத்து ஊர்களில் காணக் கிடைக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்த்தும் நாவல்.

 • Print Length: 320 pages
 • Publisher: John Murray (June 6, 2019)
 • Publication Date: June 6, 2019
 • Language: English
 • ISBN: 9780374719418

~oOo~

ஆ) The Culture Map: Breaking Through the Invisible Boundaries of Global Business

இந்தியாவில் இருந்து வருவதால் இந்தியக் கலாசாரம் நன்கு அறிந்திருப்பேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் குழுவுடன் என்னுடைய அமெரிக்கப் பணியகம் வேலை பார்க்கிறோம். இந்தியக் குழுவிடம் மொத்த பணியின் ஒரு பாகத்தை ஒப்படைத்திருக்கிறோம். அந்த வேலை எவ்வளவு நகர்ந்திருக்கிறது என்பதைக் குழுவில் உள்ள ஒருவரிடம் நேரடியாக விசாரித்தேன். அங்கே ஆரம்பித்தது என்னுடைய சனி தசை. நான் நேரடியாக மின்னஞ்சல் அனுப்பியவரின் மேலாளர், என்னை வில்லனைப்போல் பார்க்கத் துவங்கினார். அவரை விட்டுவிட்டுக் காரியத்க்ச் சாதிக்க நினைத்ததுபோல் கருதத் துவங்கிவிட்டார். அவரிடம் “இதெல்லாம் மேட்டரே இல்ல… சொன்ன காரியம் எப்படிப் போவுதுனு தெரிஞ்சிக்க நெனச்சேன்! அவ ஒண்டிதான் அப்ப அரட்டையில் பச்சை விளக்கு எரிய விட்டிருந்தா; அதனாலதான் கேட்டேன்” என்பதைப் படாத பாடுபட்டு விளக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு குழுவின் அங்கத்தினர் எவருக்கு அஞ்சல் அனுப்பினாலும், பாஸுக்கும் ஒரு பிரதி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

இது இந்தியப் பாணி. அதேபோல் சீனாக்காரரிடம் ‘பேசுங்கள்!’ என்று விளித்தால்தான் பேசத் தொடங்குவாராம். ருஷியாவில் எல்லாமே அதிரடியாக அதிகார தொனியோடு இருக்க வேண்டுமாம். டென்மார்க்கில் ரஷியாவிற்கு நேர் எதிர்: அன்பாகச் சொல்லி, தானாகப் புரிந்துகொண்டு, சமத்துவமாக தட்டிக்கொடுத்து புரியவைக்க வேண்டுமாம்.

அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அமெரிக்காவில் இப்படி பட்டென்று தெரிந்தவரிடம் போட்டு உடைக்கலாம். பதவியில் இருந்துகொண்டு இப்படிப் பேசினால், மேலதிகாரியின் வேலை பறிக்கப்படும்.

இந்த மாதிரி ஒவ்வொரு ஊரின் குணநலன்களையும் பண்புகளையும் எரின் மெயர் எட்டு வட்டங்களில் பட்டியலிடுகிறார்:

 1. தொடர்புகொள்ளுதல்: வெளிப்படை x இலை மறை காய்.
 2. மதிப்பிடுதல்: பூசி மெழுகிக் குறிப்பால் உணர்த்தலை விரும்புதல் x இதை மாற்றிக்கொள் என்னும் நேரடி அதிரடி மொழியை விரும்புதல்.
 3. ஏற்புடையதாக்கல்: உய்த்தறியும் சுய தரிசனம் x சிறப்புக் கூறுகளிலிருந்து பொதுவிதி காண்.
 4. தலைமைக் குணம்: சமத்துவம் x பொலிட்பீரோ படிநிலை முறை.
 5. முடிவெடுத்தல்: எல்லோரையும் கேட்டு ஒத்திசைதல் x மேலிருந்து ஆணையிடுதல்.
 6. நம்பிக்கை கொள்ளவைத்தல்: காரியத்தை முடிப்பதை வைத்து நம்புதல் x நண்பர் / உறவினர் என்பதாலும், இன்னார் சொன்னார் என்பதாலும் நம்புதல்.
 7. கருத்து மோதல் (அ) ஏற்க மறுத்தல்.
 8. திட்டமிடல் (அ) காலவரையீட்டுப் பணி: அன்றாடத் தேவைக்கேற்ப வளைந்து கொடுத்தல் x என்றோ எப்பொழுதோ போட்ட அட்டவணையை அகலாது பின்பற்றல்.

நூலை வாசித்தால் உலக மக்களின் பொதுப்படையான பண்புகளைப் புரிந்துகொள்ளலாம்.

 • Print Length: 290 pages
 • Publisher: PublicAffairs (May 27, 2014)
 • Publication Date: May 27, 2014
 • Language: English
 • ISBN: 9781610392501

~oOo~

இ) இயர் ஜீரோ – காலத்துகள்

சொல்வனத்தில் காலத்துகள் நிறைய எழுதியிருக்கிறார். பதாகையிலும் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

புத்தகத்தின் பின்னட்டையில் இருந்து: இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பைக் காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாகத் தம்மைக் கண்டடையும் நோக்கில், தன் நினைவுகளைக் கிளறி எழுத்தாக்கும்போது, அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று என காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ச் சொல்லலாம்.

தியாகு புத்தக நிலையம் – பெருமாள்சாமி தியாகராஜன் எழுதிய குறிப்பில் இருந்து:

சூழலில் கவலைகளோ, அழுத்தங்களோ, சந்தோசங்களோ எதுவாக இருந்தாலும் அடிப்படைப் புரிதலில் பள்ளிக் கல்வி நிறைவுறும் காலகட்டம் பதினைந்து பதினாறாவது வயதுக் காலம். பெரும்பாலானவர்களுக்கு அக்காலகட்டத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் பசுமையாக பதிந்திருக்கும்.

வயதின் மூப்பில் பள்ளிக்கால நினைவுகளின் மீது ஒரு ஏக்கம் மனதின் ஓரத்தில் மலர்ந்துகொண்டே இருக்கும். அந்தப் பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை அதே காலத்தில் படம் பிடித்துக் காட்டும் கதைசொல்லி, சூழலில் பொதுவில் நிகழும் நிகழ்வுகளை தன் படக் கதைக்குள் கோர்த்தும் வைத்திருக்கிறார்.

அதீத அளவு விவரணைகள் கதைத்தன்மையின் உச்சத்தை அடைவதற்கு சற்றே சுமையைத் தருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் நிகழ்வுகளில் நாற்பது வயதின் அறிவு முதிர்ச்சி தெறிகிறது. பன்னீர் தெளித்தது போன்ற ஒரு குழுமை இல்லாமல் வெறும் டைரிக் குறிப்புகள் போல் உள்ளது.

டைரியின் பக்கங்கள் இடைஇடையே கிறுக்கல்களும், காய்ந்த பூவின் இதழ்களும், அட்டையின் உள்ளே மறைத்து வைக்கப்பட்ட கைக்குட்டைகளும், நீண்ட ஒற்றை முடியும் இல்லாத எல்லாவித சம்பவங்களின் கோர்வையாக உள்ளது.

ஒற்றை மயிலிறகின் அழகு ஒட்டு மொத்தமாக ஒரு வண்டி மயிலிறகில் கிடைப்பதில்லை. ஏராளமான விவரணைகள் டைரிக் குறிப்புகளாக இருக்க, செம்மையான கதையாக மாறும் தருணத்தை தவற விட்டு விட்டாதாக உணர்கிறேன்.

நம்பி கிருஷ்ணன்: தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்   | கனலி

மனம் கனத்த கணங்களில் தன் அம்மாவின் கன்னத்தில் அப்பா அறைந்தது, அல்லது, அம்மா மண்ணெண்ணெய் கொட்டி கொளுத்திக் கொள்ளப் போவதாய் அதிர வைக்கும் ஆவேசம் கொண்டு மிரட்டியதும் அவன் நினைவுக்கு வரலாம். இப்படிப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்பார்த்துவிட்டது போலவோ என்னவோ, இந்த நாவல் ஆரம்பத்திலேயே அதன் மொழியை மாற்றிக் கொள்கிறது- இரண்டாம் பத்தியில் முக்கியமில்லாதது போல் தோன்றும் வாக்கியத்தில் இது நேர்கிறது: “அப்பன் வேலைக்குப் போவதை நிறுத்தியதிலிருந்து பாத்திரங்கள் வைக்குமிடத்தை பூஜையறையாக்கி விட்டான்.” முதல் பத்தியில் அத்தனை பதின்பருவ கேலிப் பேச்சுக்களையும் இரண்டாம் பத்தியின் முதல் வாக்கியங்களில் உலக அழகி பற்றிய கிண்டலையும் (“வாழக்கா மாதிரி மூஞ்சி நீண்டிருக்கு”) படித்த பிறகு, இந்த இறுதி வாக்கியம் அவ்வளவு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது என்பதால் கிட்டத்தட்ட அதில் வரும் “அப்பன்” என்பதை “அப்பா” என்றே பிழை திருத்தி படிப்பது போல் வாசிக்க முற்படுகிறோம். ஆனால் அது அப்படியல்ல என்பதை இந்த நாவலின் பிற்பகுதிகள் மிக ஆணித்தரமாகவே தெளிவுபடுத்தும். இப்போதைக்கு, நகைச்சுவை நாவல்கள் நாம் எதிர்பார்க்கும் வகையில் சிரிக்க வைக்கும் கதைகளாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதையும் நகைச்சுவையும்கூட வெறும் சிரிக்க வைக்கும் வெறும் பேச்சல்ல என்பதையும் நினைவுபடுத்த இது உதவுகிறது.

 • நூல் : இயர் ஜீரோ
 • ஆசிரியர்: காலத்துகள்
 • பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
 • விலை : ₹150
 • Language: Tamil
 • Publication Date: January 1, 2020
 • Categories: நாவல்
Series Navigation<< கைச்சிட்டாகைச்சிட்டா – 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.