கெவுரவம்

சுஷில் குமார்

புதிய வாடிக்கையாளர் ஒருவருக்கு பேட்டரியைக் கொண்டு கொடுப்பதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்த போது எனக்கு ஓர் அழைப்பு வந்தது. வண்டியை நிறுத்திப் பேச நேரமில்லை. எட்டு மணிக்குள் இந்த பேட்டரியைக் கொண்டு மாட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பினால்தான் இன்று நைட் ஷிஃப்ட்டுக்குப் போக முடியும். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பி.பி.ஓ கம்பெனியில் நெட்வொர்க் என்ஜினீயராக வேலை செய்கிறேன். பெரும்பாலான நாட்களில் நைட் ஷிஃப்ட் தான். எனக்கும்கூட அதுதான் வசதி. பகலில் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத் தூக்கம். பின், சிறிய அளவில் நான் நடத்தும் இன்வெர்ட்டர் பேட்டரி வியாபாரம். நண்பர்களின் தொடர்புகள் மூலமாக ஒரு மாதத்திற்கு ஒரு பத்து பேட்டரிகள் விற்பனையாகும். இது போக அவ்வப்போது பராமரிப்பு அழைப்புகள். 

வண்டியை ஓட்டிக்கொண்டே ஃபோனை  ஆன் செய்து “ஹலோ” என்றேன்.

“நாராஜா, எங்கருக்க?” பேசியது பிரபு.

“மாப்ள…சொல்லு மக்கா..ஒரு டெலிவரி மக்கா..செட்டிக்கொளத்துக்கு தான் வாறேன்…சொல்லு மாப்ள…”

“மாப்ள, ஒரு மேட்டரு..கொஞ்சம் வண்டிய நிறுத்து மாப்ள…” அவன் குரலில் ஓர் அவசரம் தெரிந்தது. பிரபு அப்படி சீரியஸாகப் பேசுகிற ஆளில்லை. வண்டியை நிறுத்தி, “சொல்லு மக்கா..என்னல…எங்கயாம் மட்ட ஆய்ட்டியா?”

“இல்ல மாப்ள..நம்ம டைம் இன்னும் ஆவலல்லா…நா பகல்ல குடிக்க மாட்டம்லா மொக்கா..”

“செரிதா மாப்ள, எதாம் அர்ஜென்ட்டா மாப்ள..நைட் ஆபீஸ் இருக்கு மக்கா..”

“செரி செரி..மேட்டரக் கேளு…சப்பையன் எம் முன்னாடி தான் கெடக்கான் கேட்டியா…”

“என்ன மொக்கா சொல்லுக..அவன் சிங்கப்பூர்லல்லா இருக்கான்..”

“மயிருன்னு சொல்லு…நீ இங்க வா மக்கா…செம சீன் கேட்டியா…ராஸ்கல், ஒரு தெரு நாயக் கெட்டிப்புடிச்சிட்டுக் கெடக்கான்….தாயளி…நாய்க்க குண்டிய தடவிட்டுக் கெடக்கான் மொக்கா..என்னா பவுசு காட்டுனான்..தாயளி, இன்னா ரோட்டுல வந்து கெடக்கான்..”

….

சித்தப்பு என்று எங்களால் அழைக்கப்பட்ட வள்ளி நாயகம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் ஆள். எந்த ஒரு புதிய நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தாலும் அவர்களிடம் அவன் கேட்கும் முதல் கேள்வி “ஒங்க தாத்தா பேரென்ன பாஸ்?” என்பதுதான். விளையாட்டாகக் கேட்கிற மாதிரிதான் இருக்கும். ஆனால் அதற்கு வருகிற பதில் அவனது சொந்த சமூகத்திற்கு நெருக்கமாக இருந்தால் மட்டுமே அவர்களுடன் கைகொடுத்துப் பேசி நெருக்கமாவான். இல்லையென்றால் ஒரு உதாசீனப் புன்னகையோடு உரையாடலை முடித்துக் கொள்வான். 

கணினித் துறையில் அவன் ஒரு நிபுணன். உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல லட்சங்களைப் பார்த்துவிட முடியும். பார்ப்பதற்கு ஒரு மாடல் போல இருப்பான். நானும் அவனும் ஒரு கலர் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதுவொரு மிகச்சிறந்த கருப்பு வெள்ளைப் புகைப்படமாக இருக்கும். சரி, ஜோக்ஸ் அப்பார்ட். பிரபு மூலமாகத்தான் எனக்கு வள்ளிநாயகம் அறிமுகம். கணிதவியல் இளங்கலைப் பட்டம் முடித்து எதிர்காலம் பற்றிய தெளிவில்லாமல் நான் இருந்தபோது அவன் எனக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து வைத்தான். ஆரம்பத்தில், அவ்வளவு எளிதாக அவன் என்னை அவனது நட்பு வட்டத்திற்குள் அனுமதித்து விடவில்லை. அவன் வீட்டிற்குத் தேவையான பல சிறு சிறு வேலைகளை நான் எளிதாகவும் சிக்கனமாகவும் முடித்துக் கொடுத்த பிறகுதான் முதல் முறையாக அவன் வீட்டில் எனக்கொரு டீ கிடைத்தது. 

அவன் அழைத்தபோதெல்லாம் சென்று அவனுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தேன். மிகவும் நாசூக்காகக் கேட்பான், “மக்கா..நா எங்க அப்பாவ ஆஸ்பத்திரிக்கி  கூட்டிட்டுப் போணும் மக்கா..நீ கொஞ்சம் தவசிக் கடைக்குப் போவியா மக்கா? வெஞ்சனச் சாமானெல்லாங் கெட்டி வச்சிருப்பான்..கொஞ்சம் எடுத்து வீட்ல குடுத்துரு மக்கா..” 

நான் மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல் என்னால் முடிந்ததையெல்லாம் செய்து கொடுப்பேன். சில நாட்கள் அவனுடைய பைக்கில் நெடுந்தூரம் அழைத்துச் செல்வான். திருவட்டார் ஆதிகேசப் பெருமாள் கோவில், திற்பரப்பு அருவி, சில நாட்களில் அப்படியே கேரளாவிற்குள் சென்று கோவளம் பீச், ஆதிகேசவன் கோவில். இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் அவனுடன் சென்றதுதான் முதல் முறை. 

வக்கணையாக ரசித்து, ருசித்து சாப்பிடுவான். மீன் சாப்பாடென்றால் டதி ஸ்கூல் ஜங்சன் அஜித் மீன் சாப்பாட்டுக் கடைதான். நாட்டுக்கோழிப் பொரிப்புக்கு கிருஷ்ணன்கோவில் குட்டியப்பன் ஓலைக் கடை, பழம்பொரிக்கு மீனாட்சிபுரம் செல்வம் டீக்கடை, போளிக்கு வடசேரி ராமலெட்சுமி மிட்டாய்க் கடை, பரோட்டாவுக்கு எடலாக்குடி பாய்க்கடை…இதெல்லாமே எனக்குப் புதிது. இப்படியெல்லாம் கூட வகை வகையாக சாப்பிட முடியுமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். 

வாரத்திற்கு ஒரு முறை நாங்கள் சேர்ந்து குடிப்பதும் உண்டு. குடிக்க ஆரம்பித்தால் கண்மூடித் தனமாகக் குடிப்பான். கொஞ்ச நேரத்தில் உளர ஆரம்பித்து விடுவான். எல்லா இடங்களிலும் வார்த்தைகளை விட்டால் சரி ஆகாது இல்லையா? சில இடங்களில் தகராறுகள் ஏற்பட்டு, அவனைக் காப்பாற்றிக் கொண்டு வருவதே பெரும் பாடாகிவிடும். ஒரு முறை நான், சித்தப்பு, பிரபு மூவரும் குடித்துக் கொண்டிருந்தபோது ஏதேதோ பேசி, கொஞ்ச நேரத்தில் பிரபுவுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சித்தப்பு எதோ ஒரு வார்த்தை விட பிரபு சட்டென்று அவனை அறைந்து விட்டான்.

“தாயளி, இந்த வாயி மயித்த ஒன் வீட்டோட வச்சுக்கோ கேட்டியா…இனி என் கண்ணுல பட்டுராத நாய…” என்று கத்திவிட்டு சென்றுவிட்டான் பிரபு. அதன் பிறகு அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை.

 சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சித்தப்பு அவனது அறைக்குள் முதல் முறையாக என்னை அழைத்துச் சென்றான்.

நான் அதுவரை பயந்து வந்த கணினி உலகத்தைத் திறந்து காட்டினான். அந்தச் சிறிய இயந்திரத்தில் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை எனக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான். எனக்கு அதெல்லாமே பிரமிப்பாக, அதே நேரம் பயமுறுத்துவதாக இருந்தது. பேருக்குத்தான் பி.எஸ்.சி எல்லாம். நான் உட்பட, பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்த சமயத்தில் கணினி பரிட்சயம் பெரிதாக இல்லை. இன்டர்நெட் சென்டர்கள் எல்லாம் பாலியல் திரைப்படங்களை வைத்து அதிகமாகக் கவர்ந்த நாட்கள். ஆனால், சித்தப்பு என்னவெல்லாமோ சொன்னான். MCSE, CCNA, Networking, Cisco இன்னும் பல.

”நீ கவலப் படாத டே..நா இருக்கம்லா…ரெண்டு செர்டிஃபிகேசன் பண்ணு போதும்..ஒரு MNC-ல ஏறிரலாம்..”

“செரி, சித்தப்பு…ரொம்ப செலவாவும்லா வோய்..”

“ஆமா மொக்கா..ஆனா வொர்த்துல்லா…..நீ ஒங்கப்பாட்ட சொல்லு..நா வேண்ணா வந்து பேசுகேன்..”

எனக்கும் ஆசையாக இருந்தது. அந்தத் துறையில் ஏறிவிட்டால் ஓரளவு சம்பாதித்து வீட்டு நிலவரத்தை சரி செய்துவிடலாம் என்று நம்பினேன். 

“மக்கா..ஒழுகினசேரி ஆத்தங்கரைல ஒங்கப்பாவப் பாத்தனே…”

“ஆமா சித்தப்பு..அங்க ஒரு தோப்பு இருக்கு வோய்..அப்பா தான் பாத்துக்கிடுகாரு…”

“ஒங்க தோப்பா மொக்கா? சொல்லவேல்லிய டே .. நீ அப்போ பச உள்ளவந்தான், என்ன டே?”

“அட நீரு வேற…அது பொறம்போக்கு நெலம் வோய்…ஆத்தங்கரைனால எவனும் கேக்க மாட்டான்னு அவரே தெங்கு வச்சி வளத்துட்டாரு..”

“சூப்பர் மக்கா..அப்ப நமக்கு ஒரு பத்து காயி கொண்டாந்து போடு மக்கா..பேச்சிப்பாற தண்ணில்லா..காயி ஜம்முன்னு இருக்கும்லா டே..”

எவ்வளவோ திறமை இருந்தும் அவன் ஏன் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், கையில் எப்போதும் நல்ல பணம். அவனுடைய அப்பா எஸ்.பி.ஐ-யில் மேனேஜர். அண்ணன் அமெரிக்காவில் இருந்தான். 

“வோய் சித்தப்பு…ஒமக்குத் தெரியாத மேட்டரே இல்லய வோய்..எந்த MNC-லயும் மால போட்டுல்லா வோய் கூப்பிடுவான்..ஆனா, யேன் எங்கயும் போவ மாட்டுக்கீரு…”

“மக்கா..அதுல ஒரு மேட்டரு இருக்கு…ஒனக்கு அதெல்லாம் புரியாது…விடு மக்கா.. லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவோம் மக்கா..நம்மூரு மீங்கறி US-ல கெடைக்குமா சொல்லு….எங்களுக்குல்லாம் அவியலா, லட்சம் ரூவாயான்னு கேட்டா அவியல்னு தா சொல்லுவோம்…விடு டே..ஒனக்குப் புரியாது..”

அதென்ன? எங்களுக்கெல்லாம்?

என் அம்மாவின் பூர்வீகம் காட்டுப்புதூர் தாண்டி ஒரு மலைக் கிராமம். ஃபோர் ரூட் எஸ்டேட் என்றுதான் சொல்வார்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் வெள்ளையர் காலத்திலேயே 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 999 ஏக்கர் மலைப்பகுதி. முழுவதும் நல்லமிளகுப் பயிரிடுதல் தான். ஆச்சி, தாத்தா இருவருமே இன்னும் அங்குதான் வேலை செய்கிறார்கள். வறுமையின் பிடியில் இருந்த அம்மாவின் குடும்பம் ஒட்டு மொத்தமாக கிறிஸ்துவத்தை நாடி கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்திருக்கிறார்கள். அப்பாவின்  சொந்த ஊர் பணக்குடி. விறகு வெட்டிக் குடும்பம், கூடவே சமையல் தொழிலும். அந்த நாட்களில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் கொடையில் பத்தாயிரம் பேர் சாப்பிடும் அன்னதானம் எங்கப்பா குடும்பத்தின் கைப்பக்குவம்தான். 

அந்த கிறித்துவ சபையின் ஒரு திருவிழாவிற்கு சமையல் செய்யப்போன அப்பா, அம்மாவை கூட்டிக்கொண்டு வந்து கல்யாணம் செய்திருக்கிறார். பார்த்ததும் காதல், அடுத்த நாளே திருமணம். அம்மா குடும்பம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, பெண் நல்ல இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள் என்கிற நிம்மதி. தாத்தா காலத்திற்குப் பிறகு சமையல் தொழில் அவ்வளவாக எடுபடாததால் ஒழுகினசேரிக்கு வந்து, திருநெல்வேலி நெடுஞ்சாலையில் டீக்கடை வைத்தார் அப்பா. அப்பாவின் நேர்மையான உழைப்பாலும் சாமர்த்தியத்தாலும் வாழ்க்கையில் ஒரு பிடி கிடைத்தது. டீக்கடை நிலைத்தது. பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் இத்தனை வருடங்களில் யாரிடமும் கையேந்தி நிற்காமல் என்னையும் தங்கச்சியையும் படிக்க வைத்து, வாழ்க்கையை சொல்லிக் கொடுத்திருக்கிறார் அப்பா. அவர் வாழ்க்கையை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம். 

பத்து வயதில் ஆரம்பித்தது…அப்பாவுக்குத் துணையாக காலையிலும் மாலையிலும் கடைக்குச் சென்று உதவி செய்வேன்.  காலை நான்கு மணிக்கு எழுந்து நான்கு கிலோ பெரிய வெங்காயத்தை நீள நீளமாக வெட்டுவோம், பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி இவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கடலை மாவு, சீரகம், காய்ந்த மிளகாய்ப் பொடி, காயப்பொடியுடன் சேர்த்துப் பிசைந்து, பின் தேவையான உப்புப் போட்டு கைப்பிடி அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்ச்சட்டியில் போட்டால் வருமே ஒரு மணம்….எங்கள் கடை உள்ளி வடையென்றால் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம், காத்திருந்து பத்து, இருபதென வாங்கிச் செல்பவர்களும் உண்டு. அவ்வப்போது அப்பா வெளியே செல்லும்போது, நானே டீ பாய்லரை கவனித்துக் கொள்வேன். 

எங்கள் டீக்கடைக்கு வழக்கமாக வரும் பிரபுவுடன் ஏற்பட்ட நட்பினால்தான் உயர்படிப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஓரளவிற்குத் தெளிவு கிடைத்தது. ஆற்றங்கரைப் புறம்போக்கு நிலத்தில் இருந்த ஒரு சிறு வீட்டில் வாழ்ந்த நாங்கள், சேர்த்து வைத்த பணத்தில் அவன் தந்த சில அறிமுகங்களால் ஒரு சிறு துண்டு நிலத்தை வாங்கினோம். என் அப்பாவின் சேமிப்பு பணமாக மட்டுமில்லை. எங்கேயாவது ஒரு சிறு மரம் முறிந்து விழுந்து கிடந்தால் கூட அதை வெட்டித் தூக்கிக் கொண்டு வந்து விடுவார். ஆற்றில் மிதந்து வரும் உடைந்து போன பொருட்கள், பழைய ஆக்கர் கடையில் கிடைக்கும் உடைந்த மரச்சாமான்கள் என ஒவ்வொன்றாகச் சேர்த்து வைப்பது அவரது நீண்ட நாள் பழக்கம். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் செங்கற்களைக் கூட சேர்த்து வைத்திருந்தார்.

எங்கள் வீட்டு அஸ்திவாரக் குழியை முழுதும் நானும் அப்பாவும்தான் தோண்டினோம். அம்மாவும் சளைத்தவர் அல்ல. நாற்று நட, களை பிடுங்க, கொத்தன் கையாளாக என்று தினமும் ஏதோ ஒரு  வேலைக்குச் சென்று அவரால் முடிந்ததைக் கொண்டு வருவார். ஒருவாறாக எங்கள் சிறு தேன்கூட்டில் குடியேறினோம். இல்லையென்று யாரும் வந்தால், கையிலிருப்பதை அப்படியே கொடுத்து விடுவார் அப்பா. எங்கள் டீக்கடையிலேயே தினமும் ஒரு பத்து டீயாவது காசு வாங்காமல் கொடுப்பார். வயிறு நிறைய வடை தின்ன வைத்துதான் அனுப்புவார். அம்மா கூட சில சமயம் முறைத்துப் பார்ப்பார். அப்பாவுக்குக் கேள்வியேயில்லை. 

“மனுசங்க தான் மொக்கா முக்கியம்..பணம் காசு மயிரெல்லாம் தானா வரும்..நம்மளுக்கு நாலு பேரு செஞ்சாம்லா மொக்கா?…நம்மளும் பின்ன செய்யாண்டாமா? சாமி எல்லாவனுக்கும் பொதுவாதான படச்சிருக்கான்…அப்ப நம்மளும் சாமிய மாதிதான செய்யணும்?…பூட்டிப் பூட்டி வச்சி என்ன செய்யப்போறோம்? நம்ம எப்படிச் சீரழிஞ்சாலும் இன்னொருத்தன் வாழ்ந்துட்டுப் போறான் மக்கா…என்ன கொறஞ்சிரப் போவு?”

அப்பாவின் குணங்களில் எத்தனை என்னிடம் இருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பேன். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவர்தான் மேலே உயரத்தில் இருக்கிறார். மிகப் பெரிய சண்டைகளில் கூட கடைசியில் மன்னிப்புக் கேட்டு வருவது அப்பாவாகத்தான் இருக்கும். 

“என்னப்பா நீங்க? அவன் அப்டி கேக்கான்? நீங்க சும்மா விட்டுட்டு வாறியோ? சப்புன்னு நாலு வச்சா தாயளி வாய மூடிட்டுப் போயிருப்பாம்லா?” 

“இல்ல மக்கா..அது செரிப்பட்டு வராது… நாளக்கி அவன் மொகத்தப் பாக்காண்டாமா? எனக்குப் பொறவு ஒனக்கு நாலு பேரு வேணும்லா டே? மானம் போனா போய்ட்டுப் போவு..ஒனக்கு ஒண்ணுன்னா நாளக்கி அவன் ஒங்கூட வந்து நிப்பான்லா…”

இதுதான் அப்பா. 

எனக்குப் பார்த்த முதல் பெண்ணை அப்பா வேண்டாமென்று சொல்லியது ஏனென எனக்குப் புரியவேயில்லை. பெண் அழகு தான். ஓரளவு நல்ல வசதியும் கூட. நல்ல குடும்பம் என்றும் கேள்விப்பட்டிருந்தோம். அப்பாவிடம் கேட்ட போது, “அது செரி வராது மக்கா..வேற பாப்பம்..” என்று முடித்து விட்டார். 

பிரபு போய் அப்பாவிடம் கேட்டிருக்கிறான். “ஓய் மாமா, ஒமக்கு என்ன மண்டக்கி வழியில்லயா வோய்? நல்ல சம்பந்தம்லா வோய்? வேண்டாம்னு சொன்னேராம்?” 

“மருமவன..அது ஒரு காரியம் உண்டு கேட்டியா…அந்தப் பிள்ளக்கி நல்ல மாருக் கெட்டு இல்ல மக்கா…நம்ம வேற பாப்பம் மருமவன..”

இது தான் அப்பா.

“மக்கா நாராஜா…மத்தவன் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இரி கேட்டியா? பய கொஞ்சம் வெசமாக்கும்…” ஒரு நாள் வள்ளிநாயகத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது பிரபு சொன்னான். 

“ஏம் மக்கா அப்டி சொல்லுக?”

“இல்ல மாப்ள.. பயட்ட நல்ல மேட்டரு உண்டும்..ஆனா, கெவுரவம் புடிச்ச பயலாக்கும்..பாக்க அப்டித் தெரியாது..கொழஞ்சிக் கொழஞ்சிப் பேசுவாம்..எல்லாம் காரியம் ஆவுற வரக்கிந்தான்..”

“என்ன மாப்ள இப்டி சொல்லுக…எனக்கெல்லாம் இந்த ஃபீல்ட் பத்தி ஒண்ணுமே தெரியாதுலா..அவந்தான மக்கா எல்லாஞ் சொல்லிக் கொடுக்கான்…அடுத்த வருசம் பெங்களூர்ல ஒரு இன்டர்வியு எற்பாடு பண்ணித் தரேன்னாம் மக்கா…நீ இப்டி சொல்லுகியே…”

“அதெல்லாம் செரி மக்கா…அவன் வீட்டுக்குள்ள நீ எத்தன தடவ போயிருக்க? சொல்லு…நீ எங்க வீட்டுல வந்து அடுப்பங்கரைல இருந்து நீயே சோத்தப் போட்டு சாப்பிடுவல்லா? அவன் வீட்ல ஒனக்கு ஒரு நாள் கூட சாப்பாடு போட்ருக்க மாட்டான?”

எனக்கு குழப்பமாக இருந்தது. பிரபு என் நல்லதிற்காகத்தான் சொல்லுவான். 

“மாப்ள, எங்க போனாலும், என்ன ஒரு பைசா செலவு பண்ண விட மாட்டான மக்கா..”

“எதுக்கு செய்யான் நாராஜா? அவன் கூட எப்பவும் கம்பெனிக்கி ஒரு ஆளு வேணும் பாத்துக்க..நீ இல்லன்னா இன்னொருத்தன்..செரி விடு…பாத்து இருந்துக்கோ மக்களே..”

…..

சித்தப்புவின் அக்கா திருமணத்தில் மூன்று நாள் சரியான வேலை. சந்தைக்குப் போய் காய்கறி வாங்குவதில் இருந்து, மண்டபம், மேடை அலங்காரம், சமையல் செய்யுமிடத்தில் மேற்பார்வை, பந்தியின் போது கறிகளை வாளிகளில் எடுத்து நிரப்பிக் கொடுப்பது, பெஞ்சு துடைக்கும் அக்காமார்களை விரட்டி வேலை வாங்குவது வரை எல்லா வேலைகளையும் நானும் இன்னொரு நண்பனும் தான் பார்த்துக் கொண்டோம். சித்தப்பு ஒன்றிரண்டு முறை கண்ணைக் காட்டிவிட்டுச் சென்றான். பிரபு சொன்னதை நான் பெரிதாக மனதில் வைக்கவில்லை என்றாலும் அந்தத் திருமணத்தின்போது நடந்த சில விசயங்கள் லேசாக உறுத்தின. 

திருமணத்தன்று காலையிலிருந்து இரவு வரை சாப்பிடக்கூட உட்கார முடியவில்லை. அந்த ஆக்குப்பிறையின் உள்ளேயே நான் அடைத்து வைக்கப்பட்டது போலத் தோன்றியது. வந்து ‘சாப்டியா மக்கா’ என்று அவன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. பந்தி விளம்பும் இடத்திற்குக் கூட நான் செல்ல முடியவில்லை. அது தற்செயலாக நடந்ததோ என்னவோ? 

அது கூட பரவாயில்லை. நம் வீட்டுக் கல்யாணத்திற்கு வருபவர்களை ஒருவர் விடாமல் கூப்பிட்டு மாப்பிள்ளை பெண்ணுடன் போட்டோ எடுக்கச் சொல்வோம் இல்லையா? இவன் பேருக்குக் கூட கூப்பிடவில்லை. சரி, எதையும் யோசிக்க வேண்டாம் என என்னால் முடிந்த எல்லா செயல்களையும் செய்து கொடுத்தேன். 

அவன் ஏற்பாடு செய்திருந்த இன்டர்வியுவில் நான் தேர்வாகி வேலை கிடைத்து பெங்களூருக்குச் சென்றேன். ஓரளவிற்கு நல்ல சம்பளம். அப்பா அம்மாவுக்கு நான் வெளியூர் போவதில் துளியும் விருப்பமில்லை. ஒரு வழியாகச் சமாளித்து பெங்களூரில் சென்று வேலையில் சேர்ந்து இன்னும் நிறைய கற்றுக்கொண்டேன். என்னென்ன வித்தியாசமான, கேள்விப் பட்டிருக்காத விசயங்கள்! காட்டுப்புதூருக்கும் பெங்களூருக்கும் இடையில் எத்தனை வருட வித்தியாசம்! மனிதர்களுக்குள் எத்தனை பெரிய இடைவெளி!

அவ்வப்போது சித்தப்புவை போனில் அழைத்துப் பேசுவேன். அவனும் சில பல யுத்திகளை சொல்லிக் கொடுப்பான். 

ஒரு நாள் அவனே ஃபோனில் அழைத்தான், “மக்கா நாக ராஜா? ஒரு மெசேஜ் அனுப்பிருக்கேன்..அந்த அக்கவுண்ட் நம்பருக்கு ஒரு பத்தாயிரம் போட்டு விட்டுரு…என்ன..” என்று சொல்லி வைத்து விட்டான். 

எனக்கிருந்த சூழ்நிலையில் திடீரென பத்தாயிரம் எடுத்து அனுப்புவது மிகச் சிரமமான காரியம். இருந்தாலும் ஏதோ அவசரமாக இருக்கும் என்று நினைத்து அனுப்பி வைத்தேன். என்ன, அந்த மாசம் சமாளிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இது அத்தோடு நிற்கவில்லை. இன்னும் ஒன்றிரண்டு முறை இப்படிக் கேட்டான். நானும் ஏதும் சொல்ல முடியாமல் அனுப்பி வைத்தேன். பின், ஏதோ EMI கட்டுவது மாதிரி ஒவ்வொரு மாதமும் அவனுக்கு அனுப்ப வேண்டி வந்தது. 

இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அதிகாலை ஃபோனில் அழைத்தான். அப்போதுதான் ஷிஃப்ட் முடித்து வந்து படுக்கையில் கிடந்தேன்.

“மக்கா நாகராஜா..வண்டிய எடுத்துட்டு கலாசிப்பாளயம் ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு வா..”

“வோய் சித்தப்பு…வெளாடாதீரும் வோய்..நைட்டு அடிச்சது தெளியலயா வோய்?”

“நாகராஜா…ஒரு விசயமா வந்தேன் மக்கா..வா..வெயிட் பண்ணுகேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டான். சிலர் போனை வைக்கும் விதத்திலும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் போல.

நான் கிளம்பிச்சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்தேன். 

“வோய்..நேத்தே சொல்லிருக்கலாம்லா வோய்..நானே வந்துருப்பனே..”

“இல்லடே..சள்ளையாயிட்டு கேட்டியா…ஊர விட்டு யாருக்கும் தெரியாமலாக்கும் வந்துருக்கேன்..”

“என்ன வோய் சொல்லுகேரு? என்னாச்சி வோய்?”

“அத விடு மக்கா..நா பாத்துக்குறேன்..நீ எனக்கு ஒரு ரெண்டு லட்சம் எடுத்துக் குடு மக்கா..நாளைக்கு தந்தாப் போரும்..”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்போது என்னுடைய மொத்த சேமிப்பே அவ்வளவுதான் இருந்திருக்கும். எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் யோசித்தேன். 

“சித்தப்பு…என்ன வோய் சட்டுன்னு ரெண்டு லட்சம் கேட்டுட்டேரு!”

“நாகராஜா…நா வெளயாடல…ரெடி பண்ணு…” என்று சொல்லி ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டான். எங்கு போகிறான் என எதுவுமே சொல்லவில்லை. இடையில் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. 

‘நாகராஜா, இன்னிக்கு ஆபீஸ்க்கு லீவ் சொல்லிரு’ என்று ஒரு மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பினான். என்ன பொய்யெல்லாமோ சொல்லி லீவ் போட்டு சமைத்து வைத்துக் காத்திருந்தேன். 

இரவு ஒரு ஒன்பது மணி வாக்கில் இரண்டு வெளிநாட்டு விஸ்கி பாட்டில்கள் வாங்கி வந்தான். “மக்கா..ரெண்டு கப்ப எடு…மண்ட காயி…சீக்கிரம்..”

நான் எதுவும் சொல்லாமல் அவன் கேட்டதையெல்லாம் எடுத்து வைத்து உட்கார்ந்தேன். எனக்கும் ஊற்றினான். எப்படி இவனிடம் பண விசயத்தைப் பற்றிச் சொல்லுவது என்று யோசித்தவாறே மெதுவாகக் குடித்தேன். நான் ஒரு ரவுண்ட் முடிப்பதற்குள் அவன் இரண்டு முடித்திருந்தான். இடையில் வேறு வேறு விசயங்களைப் பற்றி என்னவெல்லாமோ பேசினான். எனக்கு எதையுமே கவனிக்க முடியவில்லை. போதையின் உச்சத்திற்கே அவன் போய்விட்டிருந்தான்.

“நாகராஜா..நாளக்கி நான் போணும்..நீ பைசா ரெடி பண்ணிட்டேலா?”

சொல்லி விடுவது என்று துணிந்து, “வோய் சித்தப்பு..சாரி வோய்…என் நெலம ரொம்ப டைட்டு வோய்..”

வள்ளி நாயகம் என்கிற சித்தப்பு மேலும் கீழும் என்னைப் பார்த்து ஒரு மாதிரி நக்கலாக சிரித்தான். பின் அவனது முகம் இறுகியது. “என்ன ல சொன்ன..மயிரு..டைட்டாம் மயிரு…”

எனக்குத் தலைக்கு ஏறியது. “சித்தப்பு..என்ன வோய்..இப்டி பேசுகேரு..நெஜமாவே நெலம டைட்டு வோய்..ஒமக்கே தெரியும்லா வோய்..தங்கச்சிக்கி கல்யாணச் செலவு இருக்கு வோய்..”

“தங்கச்சிக்கி கல்யாணம்… மயிரு..ஒனக்கு நா முக்கியமா அவ கல்யாணம் முக்கியமால? தாயளி…த்தூ…நன்றி கெட்டப்பயல…” எனக்குச் சட்டென்று அப்பாவின் முகம் கண் முன் வந்து போனது. 

“சித்தப்பு..மரியாதயாப் பேசும் வோய் ப்ளீஸ்..நம்ம நாளக்கி காலைல பேசுவோம் வோய்..வாரும். படும்…”

“நீ என்னல மயிரு எனக்கு ஆடர் போடது? நாஞ்சொல்லத நீ கேளுல நாய…”

“செரி வோய்…விடும் வோய்…நாளக்கிப் பாப்போம் வோய்..எதாம் செஞ்சி அரேஞ்ஜ் பண்ணுகேன் வோய்…” 

அவன் எழுந்து நின்று தன் இடுப்புக்குக் கீழே கையால் காட்டி, “வா..இங்க வந்து சொல்லு…தாயளி, இந்த விஸ்கிய நீ கண்ணால பாத்துருக்கியால நாய….இது என்ன ரேட்டுன்னு தெரியுமால ஒனக்கு?…தாயளி, நீ என்னல எனக்கு அரேஞ்ஜ் பண்ணித் தாரது…பிச்சக்காரப் பயல…”

நானும் எழுந்து விட்டேன், “சித்தப்பு, நிறுத்தும்..இதுக்கு மேல செரியா வராது..போய்ப் படும்…”

“நீ போலத் தாயளி….தாயளி….சாதிகெட்டப்பயல…எனக்கு பைசா அரேஞ்ஜ் பண்ணுவானாம் ஈனப் பய…ஒங்கப்பென் ஒனக்கு எத்தன ரூவா அரிசி ல வாங்கிப் போடுவான்? பிச்சக்காரத்தாயளி…நா அம்பது ரூவா அரிசி சாப்பிடுகவம்ல…ரேசன் அரிசி சாப்புடுக நாயி, நீ எனக்குப் பிச்ச போடுக இல்லியா…..நீ பாக்க இந்த வேல நா போட்ட பிச்சதாம்ல நாய….நாய்க்குப் பொறந்த பயல…”

அதன் பிறகு நடந்த எதுவும் என் கையில் இல்லை. சப்பென்று ஓர் அறை விட்டதில் அப்படியே சரிந்து விழுந்தான். எனக்குள் எழுந்த மூர்க்கம்…தொடர்ந்து அவன் வாயில் குத்திக் கொண்டே இருந்தேன்…அவனை ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் நான் ஏன் அப்படி உறுமினேன் என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை..பக்கத்தில் இருந்த தொட்டிச் செடியை எடுத்து அவன் மூஞ்சியில் போட்டு உடைத்தேன்…

“லேய்..ஒனக்க நல்லநேரம், ஒன்ன உயிரோட விடுகம்னு நெனச்சிக்கோ.. நாளக்கி நா வரும்போ நீ இங்க இருக்கக் கூடாது ராஸ்கல்..” என்று சொல்லிவிட்டு நான் பக்கத்துத் தெருவில் இருந்த இன்னொரு நண்பனின் அறைக்குச் சென்றுவிட்டேன்.

….     

பேட்டரி கொண்டு செல்ல வேண்டிய வாடிக்கையாளருக்கு ஃபோன் செய்து ஓர் எமெர்ஜென்சி என்று சொல்லி விட்டு பிரபு சொன்ன இடத்திற்கு வண்டியை விட்டேன். பழைய காட்சிகள் ஒவ்வொன்றாக திரும்பத்திரும்ப மனதில் வந்துகொண்டே இருந்தன. 

பயோனியர் முத்து மஹாலின் அருகே சென்று வண்டியை நிறுத்தினேன். பிரபு புகை பிடித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கைகாட்டினான், எதிரே இருந்த கடையை கண்ணால் சுட்டிக் காட்டினான். அவனுக்கே உரிய நக்கலான ஒரு சிரிப்பு.

“மாப்ள…செரியான அடி கேட்டியா…இப்பதான் PC வந்து சாத்திட்டுப் போறான்..எப்டி இருந்த நாயி..இவனுக்கு இதெல்லாம் தேவையா…ராஸ்கல்…” காரி எச்சில் துப்பினான்.

தள்ளாடித் தள்ளாடி எழுந்து கொள்ள முயன்று கொண்டிருந்தான் வள்ளிநாயகம். பக்கத்தில் நின்றிருந்த ஒரு இளைஞன், “லே, மரியாதக்கி எந்திச்சி வீட்டுக்கு ஓடிரு..அடி வாங்கிச் செத்துறாத…” என்று கத்தினான்.

முன்னால் போன என்னை கையைப் பிடித்து இழுத்தான் பிரபு. “மாப்ள, விடுல, கெடந்து சாவட்டும் தொட்டித் தாயளி…”

“நீ வா மாப்ள எங்கூட” என்று அவனையும் இழுத்துக்கொண்டு எதிர்ப்புறம் சென்றேன். 

நாங்கள் வந்ததை அவன் கவனித்த மாதிரி இல்லை. எழுந்து நின்று விழுந்து விடுவது போலத் தள்ளாடினான்.

“மாப்ள..விடுல லே…அவனுக்கு போதமேல்ல..தெளிஞ்சா எந்திச்சிப் போவான்…” என்று எரிச்சலோடு சொன்னான் பிரபு.

“சித்தப்பு..வோய்…சித்தப்பு…”

அவன் தலை தொங்கிக் கொண்டிருந்தது.

“சித்தப்பு, சித்தப்பு…வோய்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன். நிமிர்ந்து பார்த்தான். அந்த மாடல் போன்ற முகம் காணாமல் போய், முழுவதும் மண் படிந்து, கண்களைச் சுற்றிக் கருப்படித்து, வேறொரு முகமாக இருந்தது. போதையின் உச்சத்தில் இருந்தான். சட்டையெங்கும் காய்ந்து போன வாந்தி.  

ஒரு நொடி அவன் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. சட்டென என் கையை உதறி முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஏதோ வேகம் வந்தவன் போல நடந்து செல்ல ஆரம்பித்தான். தனக்குத்தானே ஏதோ புலம்பிக் கொண்டு போனான். 

வண்டியை எடுத்துக் கிளம்பி சில அடிகள் சென்று திரும்பிப் பார்த்தேன். அவன் படுத்துக் கிடந்த இடத்தில் ஒரு வெளிநாட்டு விஸ்கி பாட்டில் காலியாகக் கிடந்தது. பக்கத்தில் அவனது காலணிகள். 

***

2 Replies to “கெவுரவம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.