குளக்கரை

முடங்கிய உலகம் – அசராத கரிவளி

எழுதியது: உத்ரா

நீங்கள் பல சமூகத் தளங்களிலும், முகநூலிலும் பார்த்துப் பரவசப்பட்டிருப்பீர்கள் – மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்க, யானைகளும், சிறுத்தைகளும், மான்களும், சாலைகளில் சுதந்திரமாக வலம் வந்ததை. சென்னையில் கூட்டமாகப் பச்சைக் கிளிகள் பறந்தன. கொக்குகளும், அயலகப் பறவைகளும் அதிக எண்ணிக்கையில் நீர்நிலைகளில் துள்ளித் திரிந்தன. மாசற்ற காற்று வீசுகையில், கவசமணிந்து நடமாட வேண்டிய நிலையில் மனிதர்கள்! கரி உமிழ்வின் அளவு பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 5.5 சதவீதம் குறைந்துள்ளது.

சிந்தியுங்கள், நாம் வழக்கம்போல் விமானத்தில் செல்லவில்லை, வாகனங்களை இயக்கவில்லை, பல நிறுவனங்கள் செயல்பட முடியாமலிருக்கின்றன. அப்படியெனில் ஏன் கரிஉமிழ்வு 100% குறையவில்லை? 5.5% குறைவு என்பதே நல்ல செய்தி என்றாலும், புவி வெப்பமயமாவதைத் தடுக்க நாம் செல்லவேண்டிய தொலைவு அதிகம் என்பதைத்தான் இது சொல்கிறது.

கேவின் ஸ்மிட் (Gavin Schmidt), நாசா காடர்ட் விண்வெளி அமைப்பில் (NASA Goddard Institute for space studies) இயக்குனராகப் பணியாற்றுகிறார்; இவர் காலநிலை ஆய்வாளரும் (Climatologist) ஆவார். இவர் சொல்கிறார்: “கரி உமிழ்வைப் பெரும்பாலும் மக்கள் தங்கள் நிலையில் வைத்தே, அதாவது தாம் பயன்படுத்தும் எரிபொருள் சார்ந்த சாதனங்களைக் கொண்டே மதிப்பிடுகிறார்கள்; கரி உமிழ்வை அதிகரிக்கும் வடிவமைப்பு மாறுதல்கள்தான், அவர்கள் கருத்தில் எழ வேண்டும்.”

மரபான அல்லது புதைபடிவ எரிபொருளை உபயோகிக்கும் போக்குவரத்து சாதனங்கள் சற்றேறக்குறைய 20% கரியை உமிழ்கின்றன. மாற்று எரி பொருட்களான மின் சக்தி, சூர்ய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தினால்கூட இன்னமும் 80% கரி உமிழ்வு நம் சுற்றுப்புறத்தில் வலம் வருகிறதே! உலகில் 40% கரி உமிழ்வு மின்சாரத்தினாலும், வெப்பமூட்டுதலாலும் ஏற்படுகிறது. மரம், நிலக்கரி, இயற்கை வாயு போன்றவை உலகில் பல இடங்களில் சமைக்கவும், குளிர்காயவும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

இந்த ஊரடங்குக் காலத்தில் நாம் வீட்டிலிருந்து பணி செய்தாலும், மின் தேவையானது அலுவலகச் சூழலிலிருந்து வீட்டிற்கு மாறியுள்ளது – அவ்வளவுதான். மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளில் இருக்கின்றன; இல்லையெனில் வீட்டிலிருந்தும் பணி செய்ய முடியாது. அவை புதைபடிவ எரி பொருளைப் பயன்படுத்துகின்றன. ஐக்கிய அமெரிக்க நாட்டில் 60% மின்சாரம் – கரி, எண்ணெய் போன்ற மரபார்ந்த எரி பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

உற்பத்தித் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் 20% கரியை உமிழ்கின்றன. எஃகுத் தொழிலகங்கள், அலுமினிய உருக்காலைகள், இந்தத் தொற்றுக் காலத்திலும்கூட மரபான எரி பொருட்களைக் கொண்டே செயல்படுகின்றன. ஒவ்வொரு வருடமும், கரி உமிழ்வு 7.6% குறைக்கப்பட வேண்டும்; அப்போதுதான், தொழிற் புரட்சிக்கு முந்தைய அளவுகோல் நிலையான 1.5 சதவீதத்தைக் கடக்காமல் புவி வெப்பநிலையை வைத்திருந்தால்தான், மிக மோசமான சூழல் கேடுகளைத் தவிர்க்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சூழலியல் அறிவிப்பு தெரிவிக்கிறது. உலக முடுக்கமும், பொருளாதாரத் தேக்கமும், இந்த வருடம் கரி உமிழ்வை 7.6% குறைத்தாலும், தொடரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமான அளவில் கரி மாசு குறைய வேண்டும்.

‘தூயப் பெருநீர் யமுனைத் துறை’ என்று ஆண்டாள் பாடியது போல் இந்தியாவில் யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நாம் ஆடலாம் இப்போது. (யமுனையில் மாசு குறைந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது.) காற்றை, நீரை மாசுபடுத்தாத போக்குவரத்து தேவைதான். ஆனால், போக்குவரத்து மட்டுமே சூழல் கேடுகளை விளைவிப்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாத கரி வாயு, மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்தும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் காற்றில் கலந்து பரவிக்கொண்டே இருக்கிறது. இயற்கை எரி வாயு நிலையங்களும், பசுஞ்சாண மின்னுற்பத்தி நிலையங்களும் மீத்தேன் வாயுவைக் கக்குகின்றன. குறையும் கரி உமிழ்வு புவி வெப்பமயமாதலில் மாறுதல்களைக் கொண்டுவராது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் “ வளி மண்டலத்தில் இருக்கும் கரிவளி ஒழுகும் நீர்த்தொட்டியில் விழும் தண்ணீர் போல.” வளி மண்டலத்திலிருந்து வரும் உமிழ்வும், அதற்குள் செல்லும் உமிழ்வும் நிகர் பூஜ்யமாக இருந்தால்தான் புவி வெப்பமயமாகாது. இப்போது இந்த வருடம் ஏன் 2016-ஐவிட அதிக வெப்ப நிலையிலுள்ளது என்பது தெளிவாகியிருக்கும். குறைந்துள்ள மாசு பூமியை இன்னமும் வெப்பமயமாக்குகிறது என்பது முரண்நகை!

கலிபோர்னியா பல்கலையின் கடல்சார்வியல் துறையில் பேராசிரியாகப் பணியாற்றும் வீரபத்திரன் இராமநாதன் சொல்கிறார்:

“பல மாசுத் துகள்கள் ஒரு கவசமெனக் காக்கின்றன;அவை பசுமை இல்ல வாயு உமிழும் வெப்பத்தைக் கொண்டு சூரியக் கதிர்களின் வெப்பத்தை ஈடுகட்டுகின்றன. இந்தச் செயல்பாடு குறைந்தால் வெப்பம் அதிகரிக்கும்.”.

கரி உமிழ்வு குறைதல் என்பது ஒரு கொண்டாட்டமில்லை, அதை எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும்.

“நினையாத விளைவெலாம் விளைந்துகூடி நினைத்த பயன் காண்பதவள் செய்கையன்றோ”- பாரதி


முதலியமும்  உணவழிப்பும் – 1

எழுதியவர்: கோரா

Poultry farm (aviary) full of white laying hen
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
(அறத்துப்பால் - கொல்லாமை)

அமெரிக்காவில் கோழி, பன்றி மற்றும் கால்நடைகள் பல்லுயிர்களில் ஒன்றாகக்  கருதப்படுவதில்லை. அவை இரைபோடும் மனிதனுக்கே இரையாக விதிக்கப்பட்டவை. அதனால் கொன்ற பாவம் தின்றால் போய்விடுமாம். கொன்று தின்ன முடியாதபோது அவற்றை அழித்துவிடுவதும் பாவமில்லையாம்.

முதலில் கறிக்கோழி (meat chicken)யைப் பற்றி:

தாயின்  வயிற்றிலிருந்து முட்டையாகப்,  பின்னர்  முட்டையிலிருந்து குஞ்சாக, இருமுறை பிறப்பெடுக்கும் குஞ்சுகள்,  தாயின் கதகதப்பும் வளர்ப்பும் அறியாமல், பாம்பு, பருந்து, காக்கை பயமின்றி, அதிநவீன கோழிப்  பண்ணைகளின் செயற்கைச்  சூழலில், முட்டையிடும் கோழிகளாவும் , இறைச்சிக் கோழிகளாகவும் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பறவைக் காய்ச்சல் வந்துவிட்டால் எல்லாக் கோழிகளும் சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் இரக்கமின்றி கழுத்து திருகப்பட்டு  நொடியில் உயிர் விடுகின்றன. இப்படி அழிப்பதை நாசூக்காகக் கூட்டத்திலிருந்து நீக்குதல் (culling) என்று குறிப்பிடுகிறார்கள். பறவைக் காய்ச்சலுக்கு  மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்க  யாரும் முன்வருவதில்லை.

அமெரிக்க நாட்டில், கொரோனாத் தொற்றுக்கு ஆளான தொழிலாளர்கள் வேலைக்கு வராததாலும், பிற கோவிட்-19 சம்பந்தப்பட்ட காரணங்களாலும்  உயிர்க் கோழிகளைக் கொன்று பக்குவப்படுத்தும் தொழிற்சாலைகளில் சில மூடப்பட்டுவிட்டன.  பிற,  குறை கொள்திறனில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால்  உணவு விநியோகச் சங்கிலி (supply chain) அடைப்பு ஏற்பட்டு அமெரிக்காவின் டெலாவார் (Delaware) மற்றும் மேரிலாண்ட் (Maryland) மாகாணங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 2 மில்லியன் கோழிகள் குடியிறக்கம் (depopulate) செய்ய நேரிடும் என்கிறது Delamarva poultry Industry Inc . மிருகங்களைக்  கொல்வதின் மங்கல வழக்கு (euphemism )தான்  குடியிறக்கம் (depopulate) செய்வது. “இது கோழிகளின் நலம் சம்மந்தப்பட்ட பிரச்னை அன்று. நாங்கள் இதில் தலையிட மாட்டோம் . குடியிறக்கம் செய்வது உங்கள் தனிப்பட்ட முடிவு” என்று சொல்லிவிட்டது  மேரிலாண்ட் விவசாயத்துறை.

ஏன் இந்தக் குடியிறக்கம்? கறிக் கோழிகள் விரைவாக வளர்பவை.  42 – 47 நாள்களில் கொலை செய்து உணவாக்கினால் சுவையாக இருக்கும்.  மூத்த கோழிகள் விலை போகாததுடன் இறந்தும் போகும். கோழிப் பண்ணைகளில் உணவுக்கும், இருப்பிடத்துக்கும், பற்றாக்குறை வந்துவிடும் – இது கோழிப் பண்ணை உரிமையாளர்கள்  கூறுவது.

இணைப்பிலுள்ள கட்டுரை-2 இல்  மிருகக் கொலைகள் பற்றிய மேலதிக விவரங்கள்  தரப்பட்டுள்ளன.

– மேலே குறிப்பிட்ட  2 மில்லியன் கோழிகள் அனுமதிக்கப்பட்ட முறைகளில்  (நுரையால் மூடி மூச்சுத் திணறவைத்தோ அல்லது கொட்டகையின் காற்றோட்டத்தை முற்றிலும் நிறுத்தியோ) கொல்லப்பட்டுவிட்டன . இன்னும் பல கோழிகள் காத்திருக்கின்றன.

விவசாயிகள் இழப்புக்கான நஷ்ட ஈடு பெறுவார்கள்.

– அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் கொரோனா சம்பந்தப்பட்ட கொலைக்கள (Slaughter house) மூடல்கள் இறைச்சிப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. வளர்ப்பு மிருகங்களைக் கொல்லும்படி வற்புறுத்தப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அத்துடன் நிலைமையைச் சமாளிக்க வாரத்துக்கு 7 லட்சம் வீதம் பன்றிகள் அழிக்கப்படுவது  மாபெரும் உணவு வீணடிப்புமாகும் .

  • இந்த வாரம் அமெரிக்க அதிபர் இறைச்சிக் கம்பெனிகளின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் எல்லா கொலைக்களங்களும் இயக்கப்பட வேண்டுமென ஆணையிட்டார். அதன் பயனாக மூடப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட கொலைக்களங்களில் சில திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இறைச்சி விநியோகச் சங்கிலியில் கொலைக்களம்  ஒரு  பலவீனமான அங்கமாகி விட்டது. 
  • கடந்த சில பத்தாண்டுகளாக  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் நடந்து வரும் கொலைக்கள கம்பெனி இணைப்புகளால் (consolidation) ஒரு சில ராட்சத இறைச்சி பக்குவப்படுத்தும் ஆலைகளின் ஏகபோகம் என்ற  நிலை வந்துவிட்டது.  சப்ளை செயின் பிரச்னைகளுக்கு  அதுவே  காரணம்.
  • ஐரோப்பாவில் எல்லா கொலைக்களங்களும் இயங்குவதால்  ஊரடங்கு காலங்களில்  உணவுப் பிரச்னை எதுவும் வரவில்லை.  மேலும்,  ஊரடங்கில் வீட்டுச் சமையலுக்காக பொருட்கள் எக்கச்சக்கமாக வாங்கப்படுவதால் ,  பன்றி, பறவை வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பயன் அடைந்து வருகிறார்கள்.  

சுட்டி 1:

https://www.cnn.com/2020/04/25/us/chickens-depopulated-delmarva-plants-delaware-maryland/index.html

சுட்டி 2:

https://www.theguardian.com/environment/2020/apr/29/millions-of-farm-animals-culled-as-us-food-supply-chain-chokes-up-coronavirus


முதலியமும்  உணவழிப்பும் -2

எழுதியவர்: கோரா

ஃ ப்ளோரிடா மாகாணம்.

இது அமெரிக்காவின் தென்கோடி மாகாணம். இதற்குக்  கதிரொளி (Sunshine) மாகாணம் என்றும்,  தீபகற்ப (peninsular) மாகாணம் என்றும் செல்லப் பெயர்கள் உண்டு. இது அமெரிக்காவின் நான்காவது பெரிய முதலியப் பொருளாதாரம். தனி நாடாகக் கருதப்பட்டால் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), உலகின் 17-ஆம் இடத்தைப் பிடிக்கும்.  அமெரிக்காவின் மாநிலங்களுள் ஃப்ளோரிடா,  சுற்றுலா மற்றும் விவசாய முதன்மை ஏற்றுள்ள ஓர்  ஒப்பற்ற பல்வகைமைப் (diverse) பொருளாதாரமாக விளங்குகிறது.

பிற அமெரிக்க மாகாணங்களைப் போல் இங்கே  4 பருவ காலங்கள் கிடையாது. வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்திருப்பதால் ஈரம் (wet)  மற்றும்  உலர் (dry) என்ற இரு பருவங்களும், சம தட்பவெப்ப நிலையும் கொண்ட வளங்கொழிக்கும் மாநிலம்.  சத்துள்ள நிலம், மிகுதியான  நன்னீர், முப்போக விளைச்சல், திறமைமிகு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியவற்றின் சேர்க்கையால் ஃப்ளோரிடாவின் விவசாயத் தொழில்  நாட்டின் வலிமைமிக்க தொழில்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது. ஃப்ளோரிடாவின் தட்பவெப்ப நிலை பலவகைப்பட்ட பயிர்களை விளைவிக்க ஏற்றது. விவசாயிகள் வருடம் முழுவதும் ஏதாவது ஒன்றைப் பயிர் செய்துகொண்டே இருக்கின்றனர். இந்த மாநிலம் காய்கறி விளைச்சலில் இரண்டாம் இடத்தை (முதல் இடத்தில் கலிபோர்னியா உள்ளது) தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.  இலையுதிர்காலம்  மற்றும் குளிர்காலம் முழுவதும் மிளகு, வெள்ளரி, அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கத்திரி, லெட்டூஸ், ப்ரோக்கோலி எனப்  பலவகைக் காய்கறிகளையும் பழங்களையும் சாகுபடி செய்து புத்தம் புதியதாகப் பிற மாகாணங்களுக்கு அனுப்பும் ஒரே மாநிலம் ஃப்ளோரிடா.

ஃப்ளோரிடா வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்கால காய்கறி சாகுபடியில்  முதலிடம் பிடித்தது. மார்ச் – 2020  கொரோனா தாக்குதலைத் தொடர்ந்த லாக்-டவுனின் முதல் பலியும் அதுவே. உணவு விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம், பள்ளிக்கூட  சிற்றுண்டிச்சாலைகள், விமான நிறுவனங்கள், தீம் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டதால்  உற்பத்தியாளர்கள், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்ற ராமலிங்க வள்ளலாரின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.  அமெரிக்காவில்  உணவு – சேவைத் துறை என்பது வீட்டுச் சமையல் தவிர பிற அனைத்தையும்  குறிப்பிடுகிற தனியார் உணவுச் சேவை. நாட்டின் புதிய காய்கறி பழ வகைகள் உற்பத்தியில் 40 விழுக்காடு இந்தத் தனியார் உணவு சேவைக்குப் போகிறது.  மளிகைக் கடைகள் மூலம் நடைபெறும் காய்கறி சில்லறை விற்பனை என்பது மிகக் குறைவு.  ஏனெனில்  அமெரிக்கர்கள் பிறர் சமைத்த காய்கறிகளையே விரும்பி உண்கிறார்கள். (அவர்களுக்குச் சமைத்துண்ணத் தெரியாது என்பது வேறு விஷயம்.)

விரைவில் கெட்டுப் போகக்கூடிய காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் உரிய விலை கிடைக்காமலோ, வாங்க ஆளில்லாமலோ  போய்விட்டால் அவற்றை அழிப்பது அல்லது அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது விவசாயிகளுக்குப் பழகிப்போன  விஷயம். சிலர் நஷ்டஈடு கேட்பதும் உண்டு. (நம் நாட்டில் ஏழை விவசாயிகள்   இத்தகைய கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி மறந்து விடுவார்கள்.) அமெரிக்க விவசாயம் பெரும் முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அவர்களில் சிலர் அரசியல் செல்வாக்குப்  பெற்றவர்கள். நஷ்டத்தைத் தாங்கக்கூடிய பணபலம் படைத்தவர்கள். இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இருந்த காலங்களில், அமெரிக்க முதலியம் அதிக விளைச்சலால் உணவு தானியங்கள்  விலை படுவீழ்ச்சி அடையாமலிருக்க உபரி கோதுமையைக்  கடலில் கொட்டியதை  என் வயதுக்காரர்கள் அறிந்திருப்பார்கள். உணவுப் பொருட்களை அழிப்பதோ அல்லது  தானமாகக் கொடுப்பதோ அமெரிக்க  உணவு உற்பத்தியாளருக்குப்  புதிதன்று.  எனினும் உணவுப்  பாதுகாப்பு அச்சங்கள் சூழ்ந்த இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் பெரும்பாலான விவசாயப் பயிர்களை அழிக்கவேண்டி இருப்பது  அவர்களுக்குப் பெரும் உறுத்தலைத்  தருகிறது .

“தொழிலில் சர்வ நாசம் எங்களுக்கு. இலவசமாக  லட்சக் கணக்கில் காய்கறிகளை அருகிலுள்ள  உணவு வங்கிகளுக்கு அனுப்பினேன். பஹாமஸுக்கு ஒரு சரக்குக் கொள்கலன் நிறைய காய்கறி அனுப்பினேன். எல்லாமே சொந்தச் செலவில் அறுவடை செய்தவை.  இதற்கு மேலும் நஷ்டத்தை என்னால்  தாங்க முடியாது. இப்போதுள்ள நிலையில்  முடிவு செய்ய வேண்டியது  எந்தப் பயிரை  அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது என்பதே.” என்கிறார் முன்னிலை உணவுப் பொருள் உற்பத்தியாளரான ஆலன். பிறரின் நிலைமையும் இவ்வாறானதே.

மார்ச் மாதம் அமெரிக்க லாக் டௌன் தொடங்கி ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில், பல விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் தம்மிடமிருந்த,  விரைவில்  அழிந்துபோகக்கூடிய, 1 பில்லியன் டாலர்  விளை பொருட்களைக் கொள்முதல் செய்யுமாறு அமெரிக்க விவசாயத் துறைக்கு அவசர மனுக் கொடுத்தார்கள்.

ஃபுளோரிடா காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, ஃபுளோரிடா விவசாயிகள் பலரைக் கூட்டாண்மை உணவு கொள்முதல் மற்றும் வழங்கல் திட்டத்தில் சேர்க்குமாறு  விவசாயச் செயலாளரிடம் பரிந்துரைத்தனர். இருப்பினும் எக்கச்சக்கமாகக் குவிந்திருக்கும் அழியக்கூடிய உணவுப் பொருட்களைப் பயன்படுத்த அரசு எந்த அணுகுமுறையைக் கையாளப் போகிறது என்பதை உற்பத்தியாளரிடம் விவாதிக்க விவசாயத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

கொரோனா வைரஸ் என்னும் பேராபத்து, எந்த அளவுக்கு விவசாயத் துறையின் கொள்முதல் அமைப்பு சிவப்பு நாடாவின் பிடியில் சிக்கி இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது என்கிறார் கட்டுரையாளர். சாதாரணக் காலங்களில் கொள்முதல் வழிமுறை ஆரம்பம் முதல் முடிவுவரை பல மாதங்கள் பிடிக்கும்.  காலங்காலமாக அவர்களின் கவனக் குவியத்தில் இருந்தவை  அதிகக் காலம் வைத்திருக்கக்கூடிய டின்களில் அடைத்த பழங்கள், இறைச்சி, பாலாடைக்கட்டி போன்றவையே. இப்போதுதான் முதன்முதலாக வற்புறுத்தலின் காரணமாகப் புத்தம் புதிய காய்கறி மற்றும் பழக் கொள்முதல்  பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

எப்படியோ ஏப்ரல் மத்தியில் USDA, வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் விரைவில் வீணாகும் பொருட்களை விவசாயிகளிடம் வாங்கவென 16 பில்லியன் டாலரும், நஷ்டஈடாக  3 பில்லியன் டாலரும் ஒதுக்கீடு செய்திருந்தது. நஷ்டஈடு கணிசமாக இருந்தபோதிலும், அதைப் பங்கீடு செய்யப்போகும் முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

விளைபொருள் அனைத்துக்கும் ஒரே வீதமாகவும், உற்பத்தியாளர் ஒவ்வொருவரும் பெறக்கூடிய அதிகபட்ச நஷ்டஈடு ஒரே தொகையாகவும் USDA  உறுதி செய்திருந்தது, பெரும் உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது. அதிக செலவில் உற்பத்தி செய்யப்படும்  சோயா, முட்டைகோஸுக்கும், குறைந்த செலவில் விளையும் தக்காளிக்கும்  ஒரே நஷ்டஈடு என்றால் எப்படிச் சரியாகும் என்று அவர்கள்  ஆதங்கப்பட்டார்கள்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டாலர் புதிய காய்கறி பழங்கள் வாங்கவும், மேலும் 100 மில்லியன் டாலர் பால் பொருட்கள் மற்றும் சமைத்த இறைச்சி வாங்கவும்  அதைப் பங்கிட்டுப் பொட்டலம் கட்டி, ‘அறுவடைப் பேழை’ என்ற பெயரில் விநியோகிக்கவும் விவசாயத்துறை திட்டமிட்டுள்ளது. முதல் முறையாகப்  புத்தம் புதிய விளைபொருட்களை வாங்கி பொட்டலம் கட்டி உணவு வங்கிக்கும், பிற தன்னலமற்ற சேவையமைப்புகளுக்கும் அனுப்ப மே மாதக் கடைசி ஆகிவிடும். அதற்குள் கொரோனாவால்  உணவு சப்ளை செயின் வெடித்து இரண்டு மாதம் கழிந்திருக்கும். ஃபுளோரிடாவின் குளிர்கால சாகுபடியும்  முடிவுக்கு வந்திருக்கும். பொருளாதாரச்  சரிவைத் தனியாக எதிர்கொண்ட ஃபுளோரிடா விவசாயிகள் கையிருப்பு  விலைபொருளை  விற்று பெறப்போவது சொற்பமே. ஒருவேளை கொரோனா தொடர்ந்தால், ஃப்ளோரிடா விவசாயிகளின் அடுத்த குளிர்காலச் சாகுபடியால் உணவுவங்கித் தேவைகளை ஏற்க முடியலாம்.

கட்டுரைத் தலைப்பில் USDA மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை அது நியாயமில்லை.  இவ்வளவு குறைந்த அவகாசத்தில், அழுகக்கூடிய விவசாயப் பொருட்களை வாங்கி விநியோகிக்கத் திட்டமிட  அரசாங்கத் துறையால் முடிந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.

POLITICO: USDA let millions of pounds of food rot while food-bank demand soared. https://www.politico.com/news/2020/04/26/food-banks-coronavirus-agriculture-usda-207215

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.