கரி

காளி பிரசாத்

மருத்துவமனையின் அடித்தளத்தில் பாதுகாவலர் விறைப்பாக நின்றிருந்தார்.  காரிலிருந்து ஐயா சன்கிளாஸ் அணிந்திருந்தபடியே இறங்கி, பணியாளர்கள் பயன்படுத்தும் பாதை வழியாக நடந்தார். காரிலிருந்த ஐயாவின் கைப்பெட்டியை எடுத்துகொண்ட மருத்துவமனையின் பாதுகாவலரும் அவரது பின்னால் வந்தபடியே இருந்தார். லிஃப்டை உபயோகிக்காமல் படியேறி வந்த ஐயா இரண்டாவது மாடியின் பாதிவரை ஏறி வந்து  கொண்டிருந்தார்.

இரண்டாம் மாடியில் ஒரு அறை இருந்தது. ஒட்டுமொத்த மருத்துவமனைக்கான மைய குளிர்சாதன அமைப்பின் காற்றளவை கையாளும் இயந்திரம் அங்குதான் உள்ளது. அந்த அறைக்கான சாவியைப் போட்டு திறந்து உள்ளே நுழைந்தான் பாபு. அறை இருண்டு இருந்தது. முன்னிருந்த சிறு விளக்கை ஒளிரச் செய்தான். அது மங்கலாக ஒளிரத் துவங்கியது. இயந்திரத்தின் பின்புறம் இருளாகவே இருந்தது. மெல்ல அது ஓடும் ஓசை ரீங்காரமாய் கேட்டபடி இருந்தது.  கதவைப் பூட்டாமல் சாத்தியபடி கதவின் பின்புறம் இருந்த சட்டத்தில் பொருத்தப் பட்டிருந்த கொக்கிகளில் இருந்த சீருடைகளில் தன் சீருடையை தேடினான். திடீரென மனதுக்குள் ஒரு அச்சம் உண்டானது. முதுகுத் தண்டுக்குள் ஊசி சொருகுவது போன்ற ஒரு உணர்வு. மனதை ஒருநிலைப் படுத்த கண்களை மூடினான். ஒரு படபடப்பு இருந்தது. மெல்ல மூச்சிழுத்து விட்டான். ஆனால் நெஞ்சு படபடத்தபடியே இருந்தது. யாரோ அறைக்குள் அவனுடன் கூட இருக்கும் ஒரு உணர்வு.  முன்பு ஒருநாள் இரவுவேளைப் பணியின் போது ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட அதே உணர்வு. அவன் கை மெல்ல கை நடுங்கியது. தான் அணிந்து  வந்த உடையைக் கழற்றிவிட்டு சீருடையை எடுத்துக் கொண்டான். மெல்ல தன் உடையை கொக்கியில் மாட்டினான். ஒரு சல சல ஓசையோ அல்லது ஒரு மயக்கும் வாசமோ எது முதலில் வந்தது என்று தெரியவில்லை. அநிச்சையாக பின்னால் திரும்பிப் பார்க்கத் தோன்றிய எண்ணத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டான். முகம் வியர்க்கத் துவங்கியது. ஆனால் யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வு நீடித்தபடியே இருந்தது. மெல்ல பின்னாலேயே நடந்து சென்று இயந்திரத்தின் அந்தப் புறமாக நோக்கினான். இருட்டில் ஒரு உருவம் அமர்ந்திருந்தது போல இருந்தது. உற்றுப் பார்த்தபோது இருளுக்குள் அது நன்றாக கையை ஊன்றி அமர்ந்திருந்தது தெரிந்தது. பெண். அந்த உருவம் தலையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தது. ப்பே..ப்பே.. என்று அலறியபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினான் பாபு. 

நேராக இருந்த படியில் இறங்கிய வேகத்தில் பாபு, எதிரே ஏறி வந்து கொண்டிருந்த ஐயா மீது மோதினான். ஐயா ஏடாகூடமாக கீழே சாய அவர் தலைக்கு பூசியிருந்த சாயம் அவர் சட்டையின்  வயிற்றுப் பகுதியில் சற்று ஒட்டிக் கொண்டது. இருவரும் சமாளித்து எழுந்து நின்றனர். 

அதற்குள் துரிதமாக செயல்பட்ட பாதுகாவலர் தன் ஊதலை ஊதிக்கொண்டு அனைத்து விளக்குகளையும் எரியச் செய்து ஏசி அறைக்குள் சென்றார். சென்ற வேகத்தில் விரைவில் வெளியே வந்தார். ஊதலைக் கேட்டு அருகருகே இருந்த வார்டு பாய்களும் ஆயாக்களும் மற்ற செக்யூரிட்டிகள் அங்கு வருவதற்குள்ளாகவே ஓடி வந்துவிட்டிருந்தனர். அவர்கள் வரும்போது ஏசி ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்த பெருமாளையும் அவன் பின்னால் வந்த பாக்யலட்சுமியையும் கண்டனர். அவர்களுக்கு எதிரே படிக்கட்டுகளில், வேட்டி ஒருபுறம் அவிழ்ந்திருந்தாலும் சட்டை கறைபடிந்து கசங்கியிருந்தாலும் சன்கிளாஸ் கலையாமல் ஐயா நின்றிருக்க அவரை அணைத்தபடி, சீருடையைக் கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான் பாபு

முதலில் செக்யூரிட்டிதான் சிரிப்பை அடக்க ஆரம்பித்தார். அப்புறம் வார்டுபாய் ஆயா எல்லாரும் வாயை இறுக்க மூடிக்கொண்டு கண்களால் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பின்னால் யாரோ ஒருவன் சத்தம்போட்டு சிரிக்க அனைவரும் பதறி தளத்துக்கு உள்ளே ஓடினர். ஆங்காங்கு சிரிப்புச் சத்தம் கேவல் போல தளம் முழுதும் சிறிது நேரத்திற்கு கேட்ட படியே இருந்தது

–X–

’அதுக்கப்புறம் பெருமாளையும் பாக்யலட்சுமியையும் டிஸ்மிஸ் பண்ணிய ஆர்டரை கொடுத்த அலுவலக மேனேஜர் சிரித்துக் கொண்டுதான் கொடுத்தார். அவங்க யூனிஃபார்மை வாங்கி வச்சு கணக்கு தீர்த்த லேடி சிரிச்சுகிட்டேதான் வாங்கி வச்சா. ஐயா ரொம்பநாளுக்கு அந்தப் பக்கமே வரலை. ரொம்பநாள் கழிச்சு அவர் திரும்ப வந்தப்போக் கூட ஹாஸ்பிடலின் முன் வாசல் வழியாத்தான் போனார். கதவை திறந்து விட்ட ஆபீஸ் பையன் வாயை இறுக்க மூடி சிரித்துகிட்டு இருந்தான். அவனைப் பார்த்த லிஃப்ட் ஆப்பரேட்டர் சிரித்துகிட்டு இருந்தான்.. கொஞ்சநாளுக்கு சாப்பாட்டு மேஜைவரை அந்த சம்பவம் தான் மையமா இருந்துச்சி. சொல்லப்போனா அந்த சம்பவத்தப்போ நான் ஒரு ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு அந்தப் பாதை வழியாகத்தான் வந்தேன். அதை பார்த்த எனக்குமே சிரிப்பு அடக்க முடியலதான். அப்படியே பாக்ய லட்சுமியைப் பார்த்தப்போ அவளும் என்னைப் பார்த்தாள். உதட்டில் ஒரு எள்ளல் இருந்துச்சி. நான் தலையை குனிஞ்சு திரும்ப வந்துட்டேன். என்ன இருந்தாலும் பெண் பாவம் நமக்கு எதுக்கு”

’இத்தனை வருஷம் கழிச்சும் டாக்டர் அப்படியே ஒண்ணுவிடாம சொல்றதப் பாத்தா.. அந்தப் பொண்ணு  செமயா இருப்பா போலிருக்கே.. ” என்றான் சேகர்

”டாக்டர் சொல்றதை பார்த்தா அப்படித்தான் தெரியுது..” என்றான் ராமன் காரின் ஸ்டியரிங்கை ஒடித்தபடி. வைத்தியலிங்கம் முன் இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

”எப்படிச் சொல்றதுன்னு தெரியல.. தனித்தனியா சொல்ல ஒண்ணும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமா அவள் உடல்வாகும் முகவடிவும் ஒரு தினுசா இருக்கும். சராசரி உயரம்தான். மாநிறம்னு கூட சொல்லமுடியாது. கருப்புத்தான். அனால் ஒருவாட்டி அவளைப் பார்த்தவங்க திரும்ப பார்க்காம இருக்க மாட்டாங்க. அதுவும் ஹாஸ்பிடல் யூனிஃபார்ம்ல அவ மாஃப் போட்டு படியை துடைக்கும்போது வார்டுபாய்லாம் வேணும்னே லிஃப்டை விட்டுட்டு படிக்கட்டுலதான் போவாங்க.. அப்ப அவளைப் பார்க்கணுமே..” என்று சொன்னபடியே அருகிலிருந்த பையை எடுத்து மடியில் வைத்து உள்ளே இருந்த முறுக்கு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தேன்..

’ஐயா தினம் பின் படிகட்டு வழியா வந்தது கூட அவளைப் பார்க்கத்தான்னு செக்யூரிட்டிங்க சொல்லுவாங்க..” 

’அப்புறம் என்ன ஆச்சு..?’ 

’அவங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டாங்க.. ஆனால் பாபு  அங்கேயே இருந்ததால் அவன் வரும்போதும் போகும்போதும் அனைவருக்கும் சிரிப்பு வரும். ஆனால் பாபு அதுக்கப்புறம் சிரிச்சு நான் பார்க்கவே இல்லை.  பொதுவாவே, அவன் மூஞ்சில எப்பவுமே ஒரு அப்பாவித்தனமான சிரிப்பு தயாரா இருக்கும். எதையுமே நாம் தப்பாத்தான் செய்வோம்னு அவனுக்கு ஒரு எண்ணம் இருக்கும் போல. எக்ஸ்ரே ரிப்போர்ட் போர்டுக்கு பின்னால இருக்கும் ட்யூப்லைட்டை மாத்தும்போது கூட நாலுவாட்டி தடவுவான். ட்யூபை மாட்டினதும் அதை நாலுவாட்டி இழுத்து பார்ப்பான்.  எனக்கே ஸ்டெத்த எடுத்து வச்சிட்டு அவன் கைலேந்து ஸ்குரூ ட்ரைவரை வாங்கி டைட் வச்சு அனுப்பிடலாமான்னு தோணும். ஆனால் அந்த எண்ணம் வரும்போது அவன் நம்மள பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பான். நமக்கே பரிதாபமாயிடும்..டேய் நாயுடு.. சைக்கிளை எடுத்துட்டுபோயி அஜந்தா பாக்கு வாங்கிட்டு அப்படியே ஒரு ஸ்பெஷல்சாதா வாங்கிட்டு வான்னு அவன அனுப்பலாம். சரிங்கன்னு ஸ்குரூ டிரைவரை வச்சுட்டுப் போய் வாங்கிட்டு வந்து தருவான்.. அந்தளவு பணிவு” 

’ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவன் மூஞ்சில இருந்த அந்த அப்பாவித்தனம் போயிடுச்சி.. முகத்தை ஒருமாதிரி கடுகடுன்னு வச்சுகிட்டான்.  தெரு முனைக்கடையில நின்னு தம் அடிச்சுகிட்டு இருப்பான். கூப்ட்டு ஏதாவது வேலை சொன்னா ஒரு அலட்சியமா இருப்பான். கடைசியா வேலைய விட்டுப் போறப்போ ஆள் ரொம்ப மாறிட்டான்.. வந்து என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனான். அவன் போனப்புறம் அவன் லாக்கரை இன்னொருத்தனுக்குக் கொடுத்தாங்க்ன்னும்  அவன் அதில் இருந்து கத்த கத்தையா செக்ஸ்புக்க  வச்சிருந்தான்னு சொல்லுவாங்க. அப்பாவிப்பய என்னென்ன வச்சிருந்திருக்கான் உள்ளன்னு ஆயா ஒண்ணு சொல்லிச்சு. கொஞ்சநாள்ள நானும் அந்த் ஹாஸ்பிடல்லேந்து மாறி ஊரோட இருக்கலாம்னு ஊர்ல இருந்த ஆஆர்ஜி கிளீனிக்குக்குப் போயிட்டேன். அம்மா அப்பாவைப் பாத்துகிட்ட மாதிரியும் ஆச்சு.. பெத்தவங்கள பாத்துக்க வேண்டியது நம்ம கடமைதான.. அதான முக்கியம்”

’ஆமாம்தான். அதைவிடு.. அதுக்கப்புறம் பாபுவை இன்னைக்குப் பார்த்ததுதானா.. ரொம்ப வருஷம் ஆயிருக்குமே.. ஆள மறந்துட்டான் போலிருக்கு.. இப்ப கோயில்ல பார்த்தப்போ ஒண்ணும் உன்னைத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேடா..” என்றான் சேகர்

”இல்ல.. நடுவுல எங்க ஊர்ல அவனை இன்னொரு வாட்டி கூட பார்த்தேன்..”

முன் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வைத்தியலிங்கம் மெல்ல கனைத்தார். ‘ இன்னும் திருவள்ளூரே வரலையா.. கொஞ்சம் ஓரங்கட்டுங்கப்பா.. ஒண்ணுக்குப் போகணும்’ என்றவாறு சிகரெட்டை எடுத்துக் கொண்டார்

ராமன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். போக்குவரத்து ஏதும் இன்றி சாலை இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது. நானும் இறங்கி வேட்டியை சரியாக கட்டிக்கொண்டேன்.. ராமன் அவரிடமிருந்து ஒரு சிகரெட்டை வாங்கிக் கொண்டான்

’ராத்திரி பதினோரு மணிக்கு கூட கோயில்ல என்னா கூட்டம்.. திண்னனூர் கூட்டம் திருப்பாச்சூர்ல இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.  நாம திருப்பாலைவனம் போறதுக்குள்ள நாலாம் கால பூஜை ஆரம்பிச்சுடும். சிவனோட கருணை இருக்கனும். அப்பதான் சிவராத்திரி தரிசனம் நல்லவிதமா கிடைக்கும்‘  என்றவாரு நெட்டி முறித்தார்

’நாளைக்கு லீவுநாள்தான் அதனால சிவரத்திரிக்கு எல்லாரும் கண்ணு முழிப்பாங்க.. கூட்டம் இருக்கும்னுதான் தோணுது..” என்றான் சேகர்

’சரி போயிருவோம்.. எப்படி நடக்குதோ நடக்கட்டும்.. ஆனா காலையில எப்படியும் நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். இல்லாட்டி ஆளுங்க டிமிக்கி கொடுத்துடுவானுங்க. இப்பதான் பட்ட தீட்டி ரெடி பண்ண ஆர்டர் வரும்..  அட்சய திருதியைதான் டார்கெட்டு..’ என்றான் ராமன்

’நீங்க பட்டை தீட்டுவதுண்டா” என்றார் வைத்தியலிங்கம் ராமனிடம்

’சூரத்ல இருக்கும்போது பண்ணியது. இப்ப வாங்கி நகைக்கடைக்கு அனுப்பறதோட சரி…’ என்றான் ராமன்

’ஆமாம்.. அங்கதான் நிறைய கிடைக்கும்னு சொல்லுவாங்க..  ஹைதராபாத் கூட சொல்லுவாங்க.. கோஹினூர் கூட தெலுங்கானாலதான கிடைச்சது..”

’ஆமாம் இப்பகூட ஆற்றோர வைரத்துக்கு நல்ல மதிப்புதான். சுரங்கத்தில வெறும் கரிதான் கிடைக்கும். அதை எடுத்து தீட்டி…’’ ஆர்வமாக சொல்லிக்கொண்டே சென்றான் ராமன்

எனக்கு வைத்தியலிங்கம் மீது எரிச்சல் வந்தது. எங்கள் சிவராத்திரி உலாவில் வருடா வருடம் வருவார். கூடவே இருப்பார். எங்களுடன் பேசவும் மாட்டார். சம்பந்தம் இல்லாமல் இப்படி ஏதாவது பேசுவார். 

‘அவர் நம்மகூட என்னைக்கு பேசிருக்காரு.. தூங்குவாரு ஒன்ணுக்கு போவாரு. தம்மடிப்பாரு.. தொல்லையில்லாத ஜீவனப்பா” என்றான் சேகர்

”அதுதான் பிரச்சனை.. சும்மா ஒருத்தர் கண்மூடி நம்மகூட இருப்பது எதுக்கு.. அவரு இதுவரைக்கும் என்னைக்காவது சந்நதிக்குள்ள வந்திருக்காரா.. வெளியவே நிப்பாரு.. அட்லீஸ்ட் சிவராத்திரிக்கு கண்ணு முழிப்பாரா. அதுவும் கிடையாது. குறட்டை விட்டுத் தூங்குவாரு..  நாம சேர்த்து இருப்பதே இப்படி எப்பயாவது ஒருநாள்தான்.. நாமளும் இந்தவாட்டிதான் சிட்டியை விட்டு வெளிய போறோம்..”

”ஒரு இடம் காலியா இருக்கு… வர சொல்லுப்பா..” என்று அடித்துக் கூறி முடித்தவன் ராமன் தான்.  முழுதும் பேச்சில் ஒட்டமுடியாமல் இரவு முழுவதும் ஒவ்வொரு சிவன் கோயிலாக கார் ஓட்டிவரும் அவனுக்கு அப்படி ஒருவர் வருவதில் சற்று ஈர்ப்புதான்

நாங்கள் திருப்பாச்சூர் போனபோது, கூட்டம் குறைந்திருந்தது. நள்ளிரவாகியிருந்தது. ஒரு ஓரமாக மக்கள் நின்று உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். வைத்தியலிங்கம் ஓடிப்போய் சாம்பார் சாதம் வாங்கி உண்ண ஆரம்பித்தார். 

“போயிட்டு வாங்க.. நான் இங்க நிக்கிறேன்..”

நாங்கள் உள்ளே சென்று வணங்கி, வெளியே வந்து பிரசாதம் வாங்கி உண்டபோது அவர் வெளியே தம்மடித்துக் கொண்டிருந்தார்

“குஜராத்ல சுரங்கத்துக்குள்ளல்லாம் போயிருக்கீங்களா?’ என்றார் ராமனிடம்

”இல்லைங்க.. ஆனால் ஃபேக்டரில வேலை பண்ணிருக்கேன்.. அங்கதான் கத்துகிட்டேன்..” என்றான் ராமன்

வண்டியை எடுத்ததும் மீண்டும் உறங்க ஆரம்பித்தார். மெல்ல ஒரு குறட்டை ஒலிக்க ஆரம்பித்தது.. 

‘என்னடா க்ளட்ச்லேந்து கால எடுத்ததுமே  தூங்கிடறாரு..” என்றான் வண்டியைத் திருப்பியபடி

நான் அந்த கோவில் சுவற்றில் இருந்த பாபுவின் போஸ்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. திண்ணனூர் கோவிலில் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு போனது சுருக்கென்றிருந்தது. அப்படியே அவன் குழுவினருடன் போய்விட்டான். அல்லது அவன் குழுவினர் அவனை சுற்றிவர சூழ்ந்து இழுத்துச் சென்றனர். ஆனால் அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டது மட்டும் உண்மை

”அப்புறம் ஊர்ல பாத்தப்போ என்னாச்சு” என்றான் சேகர் போஸ்டரைப் பார்த்தபடி

’அப்ப நான் ஊர்ல இருந்த ஹாஸ்பிடல்ல ட்யூட்டி டாக்டரா இருந்தேன். டாக்டர்களை ஒரு அரசியல்வாதி அவமானமா  பேசிட்டார்னு கண்டிச்சு எல்லாரும் போராட்டம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ஆனால் டாக்டரோட முதல் கடமை மக்களைப் பார்ப்பது தான. அதனால, மக்களுக்கு அவசரம்னா ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆள் வேணுமேன்னு நான் ட்யூட்டிக்கு வந்துட்டேன். அப்ப தேர்தல் நேரம் வேற. பெரிய கோஷத்தோட ஒரு கும்பல் வந்தது. அதுல ஒருத்தனுக்கு நல்ல அடி. நம் இனத்தைக் காட்டிக் கொடுத்த, கொன்றொழித்த படுபாவிக்கா ஓட்டுன்னு நோட்டீஸ். ரோட்டுல கோஷம் போட்டு கத்திருக்காங்க. சம்பந்தப்பட்டக் கட்சிக்காரங்க ஆளுங்களோட வந்து அடி பின்னிருக்காங்க. நெத்தில, கால்ல எல்லாம் ரத்தம். ஸ்டெரெச்சர்ல படுத்துக் கிடந்தான். பாபுதான் அது. ரொம்பநாள் கழிச்சு பார்க்குறதால நான் அவனைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சேன். அவன் என்னைப் பார்த்து “மயக்க ஊசில்லாம் போடாதீங்க அய்யா.. அப்படியே தையல் போடுங்க” ன்னான்.  என்னைத் தெரிஞ்சமாதிரியே காட்டிக்கலை, ஆனால் அவன் என்னை அடையாளம் கண்டுகிட்டான்னு அவன் பார்வையே சொன்னது. மறுநாள் காலையில கண்முழிச்சான். அப்புறம் போலீஸ் வந்து நியூசென்ஸ் கேஸ்ல கூப்பிட்டுப் போயிருக்காங்க. கண்முழிச்சப்போ வார்டுபாய்ட்ட,’ தோழர், இங்க சித்த மருத்தவர் யாரும் இல்லையான்னு கேட்டிருக்கான்..”

“ஆளு நாயுடுன்னு சொன்னியே..” என்றான் சேகர்

”அது ஒரு காமெடி.. அவன் முழுபேரு சந்திரபாபு.. அதனால நாயுடுன்னு கூப்புடறது. ஆனால் அவன் தெலுங்குப் பேசி பார்த்ததில்லை..”

”அப்புறம் நான் கல்யாணம் பண்ணி திரும்ப சென்னைக்கே வந்துட்டேன். மாமனாருக்கு சொந்த கிளினிக் சென்னைல இருக்கு. அதனால இங்கேயே தங்க வேண்டியதா ஆயிடுச்சி. அப்பா அம்மா நிலத்த பாத்துகிறேன்னு ஊரோட இருந்துட்டாங்க. கூப்டாலும் வரலை. ஆறேழு வருஷம் அப்படியே போயிட்டிருந்தப்பத்தான் திரும்ப அவனைப் பார்த்தேன்… அன்னைக்கு எங்க ஊர் எம்.பி. ஒரு பேஷண்டை நலம் விசாரிக்க வந்திருந்தாரு.. அதனால கொஞ்சம் பரபரப்பா இருந்தது. அதுக்கப்புறம் அந்த ரூமுக்கே ஒரு தனி கவனம். சாதாரண மைனர் ஆபரேஷன்தான். ஆனால் விஐபி வந்ததால நானும் போயிருந்தேன்.  அங்க பெட்ல இவந்தான் இருந்தான்.. விஐபிங்க பலபேருக்கு ஏதோ லாபி பண்ணி அவங்களுக்குத் தேவையான வேலையை இவந்தான் முடிச்சு கொடுக்கறதா சொன்னாங்க..’

“தம்பிய நல்லா பாத்துக்கங்க. எந்த நேரத்துல என்ன வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க. தம்பி என்னை தொந்தரவு பண்ண வேணாம்னுதான் சொல்லுவாரு. அதனால கொஞ்சம் நீங்களே பி.ஏ.க்கு சொல்லிடுங்க” ன்னாரு எம்.பி என்னிடம்

அவன் இடைமறித்து, ‘“உடல் ஒரு பக்கம் இருக்கு. நாம் ஒரு பக்கம் இருக்கோம். ஏன் பாவம் பிஸியா இருக்கிறவங்கள தொல்லை பண்றீங்க ஐயா.. அவங்க பார்க்க வேண்டிய பாவப்பட்ட நோயாளிங்க இருப்பாங்க. அவங்களுக்கு இவர் கவனம் தேவை. என்னை நான் பாத்துக்கமாட்டேனா.. தம்பி அவரை சும்மா அழைக்காதீங்க…” ன்னு சொன்னான்

நான் சரின்னு தலையாட்டினேன்.. எனக்கே கூச்சமாதான் இருந்தது. உங்களை கோடாரிக்காம்புன்னு சொல்லி அடி வாங்குனது இவருதாங்கன்னு சொல்லலாம்னு வாய் வரை வந்துச்சி.. ஆனால் விட்டுட்டேன்.. சொன்னா சிரிப்பீங்க.. அவன் என்னை தம்பின்னு கூப்டதே எனக்கு கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் உரைச்சது.. ஆனால் நல்லா தெரியும் அவன் என்ன மறக்கலைன்னு”

சேகரும் ராமனும் சிரித்துக் கொண்டே இருந்தனர்.

’அவன் ஏன் உன்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காம இருக்கானாம்? ஏதாவது புரிஞ்சதா?’

‘தெளிவாத் தெரியல.. ஆனால் அவன் பயந்து ஓடி வந்து களேபரம் பண்ணினான்ல அந்த  கலாட்டா நடக்கறதுக்கு முன்னாடி பலதடவை நைட் ஷிஃப்ட்ல அந்த பாக்யலட்சுமி பொண்ணு வேலை செய்யுற இடத்துல அவன் வந்து நிப்பான்.. நான் எதேச்சையா ரவுண்ட்ஸ் போறப்போ பார்த்திருக்கேன்.. முதல்ல ஏதோ சும்மா வந்திருப்பான்னு நினைச்சேன். அப்புறம்தான் அவன் வேணும்னுதான் வறான்னு புரிஞ்சது..” என்றேன் நான் என் பையை மடியில் இருத்தி உள்ளே தின்பண்டங்களைத் தேடியவாறு..

“ஏன் அப்படி என்ன அங்க..”

’அவன் வர்ற நேரம் அந்த பொண்ணு வேலை முடிஞ்சு தூங்கிருக்கும். அப்ப சும்மா வந்து நிப்பான்.. உள்ள போக கூட தைரியமில்லாத பய. சும்மா எட்டி நின்னு பார்ப்பான். அது சிலநேரம் இப்படி அப்படி புரண்டு படுக்கும். அதுக்கே வேர்த்துவுட்ரும் பயலுக்கு. சிலநேரம் அவன் வறானான்னு பார்க்கவே நானும் போவேன். அது எப்படியோ அவனுக்கு தெரிஞ்சிருக்கனும். அவன் சங்கதி தெரியும்னுதான் இப்ப என்னை அவாய்ட் பண்ற மாதிரி நடந்துகிறான்னு நினைக்கிறேன்..’

“அது சரி.. அப்பாவிப்பய அங்கிருந்து ஆரம்பிச்சுத்தான் இப்ப சாமியாரா ஆயிருக்கானா.. ” 

”ஆமாம்.. மனச அடக்கத் தெரியல அப்புறம் என்ன சாமியாரு. இப்ப பேசப்பேச எனக்கே நல்லா புரியுது. என்கூட இருந்தவங்களை எல்லாம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அவங்க கிட்ட ஞாபகம் வச்சுப் பேசறான். ஆனால் அவன் என்னை மட்டும்தான் தெரியாத மாதிரியே நடிக்கிறான். ஏன்னா நான் ஒருத்தன் அவன் அங்க நாக்கைத் தொங்கப் போட்டு அவன் நின்னதை பார்த்திருக்கேன்”

”ஆமாம்.. அதுவும் சரின்னுதான் தோணுது..”

”ஆனா இப்படி திடீர்னு ஒருநாள் சாமியாரா வந்து நிப்பான்னு எதிர்பார்த்தேன் தான். பரிணாம வளர்ச்சில அடுத்த கட்டம் அதுதான. தூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான்.  நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல.  ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..” 

”ஏண்டா என்ன குறைச்சல்ங்கிற.. ஒரு இன்கம் டேக்ஸ் கூட கிடையாது. தொல்ல கிடையாது..” என்றான் சேகர்

 ”ஆனால் இவன் வாழ்க்கைல மிஸ் பண்ற ஒண்ணும் இருக்கு.  அவன் தேடி அலையறது அவனுக்கு கிடைக்கனுமே..” என்றேன்

”இப்பல்லாம் சாமியாருக்கு ஏகபோக விளைச்சல்னுதான் கேள்விப்படறோமே.. இப்ப எல்லாத்தையும் கடந்திருப்பான்ன்னு நினைக்கிறேன்..” என்றான் ராமன் சப்தமாக சிரித்தபடி

”ஹாஹா!! அப்படியே கிடைச்சாலும் அதை வச்சு என்ன பண்ணுவான் அவன். எதை எங்க தேடனும்னு தெரியாம விட்டேத்தியா அலையறான்..  குடும்பம்ங்கிற ஒரு அமைப்பு நம்ம சுத்தி இருக்கு. நம்ம மேல அன்பா இருக்கிற உயிர்கள் இருக்கு. அவங்களுக்கு ஒண்ணுன்னா நாம பதறரோம். நமக்கு ஒண்ணுனா அவங்க பதறராங்க.. இப்ப இவன் நினைச்சாலும் இப்படி கட்டதுக்குள்ள வர முடியாதுதான. நாயி.. கடைசிவர இப்படியே அலையட்டும். வேஷக்காரனுக்கு அதான் கதி..”

”திருநின்றவூர் பூசலார் சந்நிதில இவன் பேசினத கேட்டியா.. நெஞ்சுக்குள்ள ஒளி இருந்தா போதுமாம்.. கடவுள் தானா வந்திடுவாராம். அப்படித்தான் இவன் மனசுக்குள்ள கடவுள் வந்தாராம்.. இவன் நெஞ்சுக்குள்ள ஒளி எங்கடா இருக்கு.. வக்காள ஓழி… வெறும் கரிதான இருக்கு..” என்றேன் நான் தொடர்ந்து ஆவேசமாக

திருப்பாலைவனம் கோயில் நிரம்பி வழிந்த படி இருந்தது. வழக்கம் போல வைத்தி கோயிலுக்குள் வரவில்லை.  நாங்கள் உள்ளே சென்றோம்

அங்கும் பாபுவின் போஸ்டர் இருந்தது. அவனது பக்தர்களும் ஆங்காங்கு இருந்தனர்.

“உங்காளு உள்ளதான் உட்காந்திருக்காரு பாரு..” என்றான் சேகர்

திரை சாற்றப்பட்டிருந்தது

பாபுவின் பெயர் இப்பொழுது  ஸ்ரீலஸ்ரீ சந்திரானந்தா சுவாமிகள் என்றாகியிருந்தது. அவன் என் எதிரில் தான் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்து இப்பொழுதும் முகத்தில் மாற்றம் ஏதுமில்லை.  புன்னகையுடன் அமர்ந்திருந்தார் சுவாமிகள்.

“ஒரு பாலை மரத்தோட வைரம்தான் இந்த லிங்கம்னு சொல்லுவா.. சோழ அரசன் மரத்தை வெட்டினப்போ இது தட்டுப் பட்டிருக்கு..” என்று அருகில் இருந்தவர் அவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்

வைரம்தான் மனசு. சுத்தி இருக்கிற கரியை வெட்டினா இது கிடைக்கும். இப்படிப் பொதஞ்சு போன வைரம்தான் கரியாகி திரும்ப வைரக்கல்லா ஒளிர்ந்து கிடைக்குது என்றான் பாபு கணீர்க்குரலில். அவன் பேசத் துவங்கியதும் ஒரு அமைதி எழுந்தது.

அவன் தொடர்ந்து, “கரிதான் எல்லாம் கரிதான். இங்கபாருங்க இங்க நாம கும்புடற இந்த லிங்கமே கூட கரிதான”  என்றான்

அவன் சொல்லவும் உள்ளே திரை விலக்கப் படவும் சரியாக இருந்தது. நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். உள்ளே கரி இல்லை. லிங்கமும் ஆவுடையும் வெண்ணிறமாய் ஒளிர வெள்ளை வெளேர் என ஒளியாய் மின்னிக் கொண்டிருந்தார் ஆவுடையப்பன்.

எனக்குப் படபடத்தது. யாரோ என்னைப் பார்ப்பது போலத் தோன்றியது. ஏதோ உந்துதலில் அவன் முகத்தைப் பார்க்க, அவன் முகமும் அதிர்ச்சியில் நின்றிருந்தது. அவன் என்னைப் பார்த்தான் கண்களைச் சுழட்டி என் பின்னால் பார்த்தான். அவன் பார்வையில் ஒரு அச்சம். அல்லது என்னிடம் ஏதோ சொல்ல வருகிறானா? நான் எனக்குப் பின்னால் அவன் பார்வை சுட்டிய இடத்தில் நோக்கினேன். அங்கு கைகளில் விளக்கை ஏந்தியபடி பாக்யலட்சுமி நின்று  கொண்டிருந்தாள். சாந்தமும் தீவிரமும் ஒன்றாய்க் கூடிய அதே முகம். இத்தனை வருடத்திலும் சற்றும் மாறாத அதே உடல்வாகு. உதட்டில் அதே புன்னகை. மெல்ல தலையை உயர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். அன்று நான் சிரித்த போது என்னை ஊடுருவிப் பார்த்த அதே பார்வை. இத்தனை வருடங்களாய்க் கரிபூசி எதையும் மூடிவிடவில்லை. எல்லாமே வெளிச்சமாகத்தான் இருந்திருக்கிறது. என் உடல் நடுங்கத் துவங்கியது.  பே… என அலறியபடி கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வெளியேறி எங்கள் வண்டியை வந்தடைந்தேன்

மெல்ல வேட்டியை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டேன். வண்டியை அவசரமாக திறந்து உள்ளே அமர்ந்தேன். பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். வியர்த்து வழிந்தது உடல்.

வண்டிக்குள் வைத்தியலிங்கம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார். உறக்கத்தினூடே, “வைரத்தை எதை வச்சு அறுப்பீங்க” என்றார்

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.