நண்பன்
என்ன செய்ய முடியும்
சிரிப்பதைத் தவிர
எதோ சொல்லி வைக்கலாம் பேருக்கு
அவன் தப்பித்துக் கொள்ள வரட்டுமா எனலாம்
அதில் நானும் தப்பித்துக் கொள்ளலாம்
நானும் அவனும் சம்பந்தப்பட்ட
கடந்த காலம் பொக்கிஷம் போல் அப்படியே இருந்தது
முரண்பாடுகள் இயற்கையாகவும்
அழகாகவும் மலர வேண்டும் நண்பா
காந்தத்தின் நட்பில்
வடக்கும் தெற்கும் உண்டுதானே
இரண்டுபேர் என்றால்
இரண்டு பேர் மட்டும்தானா
பேச முடியவில்லை
பேசினாலும் தீரவில்லை
இறக்கும்போது வரும் செய்தி
ஒன்று நீ சிந்திக்க வேண்டியிருக்கும்
அல்லது நான்
ஆண்டுகால நட்பு அந்தரத்தில் நிற்கிறது
உறவுகளின் வழக்கத்தில் எரிகிறது
அவர்களின் இணைப்பறுந்து
வெகுகால நதியில் தத்தளித்தார்கள்

விடுதலை
சட்டம் சொல்கிறது விதி என்று
பறவையின் இறக்கையிலும் இருக்கிறது என
ஒரு கல்லில் உண்டு
ஒரு மரத்தில் உண்டு
ஒரு வார்த்தையிலும் உண்டு உனக்குப் புரியவேண்டும் என்று
அறுந்து போகும்வரை உடல் இருக்கும்
போவதும் வருவதும் என
நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகை கொள்ளாது நிலை பெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்
என் கைவிலங்கை அறுத்தபின் நான் மாறுகிறேன்
ஒன்று உள்ளே போகிறேன் அல்லது வெளியே வருகிறேன்
உலகம் புதிதென நம்பும் மூடனாகிறேன்
எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம்
வீசியதில் சிக்கியதில் தொடங்குது கவனம்
கடந்தகாலத்தின் அனுபவம் என்னோடு கலந்துவிட்டதால்
அதுதான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது
தடுமாறுகிறேன் நான் ஆனால் இருக்கிறேன்
***