நோயாளி எண் பூஜ்யம் -1

This entry is part 1 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

ஹ்வான் வீயாரோ[i]

(ஸ்பானிய மொழி மூலக் கதையின் இங்கிலிஷ் மொழியாக்கம்: வில் வாண்டர்ஹைடென். தமிழாக்கம்: பானுமதி ந. )

பாகம்-1

  1. உலகத்தில் என்ன  மீதமிருக்கிறது?

வெனிலா பனிக்குழை மஞ்சளாக இருந்த அந்த முந்தைய காலத்தைச் சேர்ந்தவன் நான். அப்போது அந்த நிறத்தில்தான் அது இருக்க வேண்டுமென்று உலகம் விரும்பியது. 21-ஆம் நூற்றாண்டில் அது சிவப்பாக மாற்றப்பட்டது. இப்போது அது முன்னைவிடக் கூடுதலாக நுகரப்படுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். மக்களுக்கு சிவப்பான பொருட்கள் வேண்டி இருக்கிறது.

மூலிகைகளின் மேல் அளப்பரிய காதல் கொண்டவர் டாக்டர் ஃபாங். (Dr.Fong.) அவரது ஐஸ்க்ரீம் காஃபி நிறத்தில் இருக்கும். நான் அவரிடம் கேட்டேன், “இதில் சிவப்புச் சாயம் ஏற்ற விரும்பவில்லையா?”

“எதார்த்தம், நிறங்களை நகல்தான் எடுக்கிறது. நாம் செய்யவேண்டிய தேவை இல்லை.”

மூன்று நாள்களுக்கு ஒரு முறை அவருடன் சதுரங்கம் விளையாடச் செல்வேன். ஊதா நிற மேகங்கள் நிறைந்த ஸியூடாட் சபாட்டா நகரில் (Ciudad Zapata) செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை. இங்குள்ள காற்றுக்குக் குறிப்பிட்ட வகை அடர்த்தி உண்டு; தினம் காலையில் என் மேஜையிலிருந்து தூசிப் படலத்தை நான் சுத்தம் செய்கிறேன்.  அந்தத் தூசி முடிவேயில்லாத கழிவுகளிலிருந்து வருவது.

அந்தத் தூசிகளைத் துடைத்து அகற்றுகையில், இந்தத் தூசியெல்லாம் என்ன வகைப் பொருட்களும், மனிதர்களுமாக இருந்திருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்யத் தொடங்கினால் எனக்குத் தலை சுற்றலே வந்துவிடும் என்று நினைத்தேன், ஆனால் வியக்கத்தக்க வகையில் எனக்கு அப்படி ஏதும் உணர்ச்சி எழவில்லை. 91 வயதில், பழக்கம்தான் எனக்கு மருந்து போல.

யாரும் கதைகள் சொல்வதை நிறுத்திப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டன என்பது தெரிந்திருந்தாலும், ஃபாங் என்னைக் கதை எழுதும்படி கேட்டுக்கொண்டார். நான் பல காலம் வாழ்ந்திருக்கிறேன் என்பதால் வாழ்வின் கடைசியில் அநேகமாக நடப்பதுதான் எனக்கும் நடந்தது; ஆம், நான் வேலையை இழந்தேன். (என் தந்தை ஓர் அச்சகத்திலும், என் தாத்தா தந்தித் துறையிலும் வேலை பார்த்தார்கள்.) முப்பது வருடங்களுக்கு முன், 2020-ல், நான் ஒரு டாக்ஸியில் ஏறினேன். கார் ஒட்டுனர் என் தொழில் என்னவென்று கேட்டார் – நான் சொன்ன பதில் அவருக்கு அர்த்தமாகவில்லை. “இலக்கியமா?!” என்று அவர் வியந்தார். அவர் அறியாதவர் என்று நான் அப்போது நினைத்தேன். அவர் தீர்க்கதரிசி என்பது இன்று எனக்குத் தெரிகிறது.

வயதானவர்கள் தடகள வீரர்கள்தான். எங்களது ஒவ்வொரு அசைவுமே மிகக் கடினமான விளையாட்டுதான். ஒரு நாற்காலியில் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்துவிட்டால், எழுந்து நிற்கையில் என்ன ஆகுமென்று எனக்குத் தெரியும்: உடலின் ஒவ்வொரு இணைப்பும் வலிக்கும்; கழிவறைக்கு எந்நேரமும் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நடக்க வேண்டுமென்றாலே வலி நினைவில் தோன்றி முட்டிகளை வதைக்கும். காயங்களுடன் விளையாடும் வீரர்களுக்கு இது என்னவென்று நிச்சயம் தெரியும். அவர்கள் முதுமையை முன்கூட்டியே அடைந்தவர்கள்!

அசைவற்ற நிலையிலிருந்து  இயக்க நிலைக்குச் செல்வது எனக்குக் கடினம்தான் என்றாலும் என் பங்களாவிற்கும், குடிமக்கள் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை நான் நடந்து கடந்துவிடுவேன். அது பாதுகாப்பான பாதை. குற்றப் புள்ளி விவரங்களை இப்போதெல்லாம் அவர்கள் பிரசுரிப்பதில்லை. தனியார் காவல் படைகளின் எண்ணிக்கை மிகுவதையும், குறைவதையும் வைத்துக் குற்றச் சூழல்களை நாங்கள் அனுமானித்துக் கொள்கிறோம். வயதானவன் ஒருவனின் மாரதான் ஓட்டமாக,  நான் நடந்து ஃபாங்கை பார்க்கச் செல்வதைப் பாராட்டும் விதமாகக் காவலர்கள் தங்கள் முஷ்டியை இறுக்கி உயர்த்திக் காட்டுவார்கள். இந்தக் காவலர்களில் சிலர் பழைய படைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், சீருடைகள் கலந்து கட்டி இருக்கும், கால் பந்தாட்டக்காரர்கள் தங்களிடையே மேல் சட்டைகளை பரிமாறிக் கொள்வது போல். 

உள்ளே செல்வதற்கான வாயிலில்  உலோகச் சோதிப்புக் கருவி ஒன்று உள்ளது, சுத்திகரிக்கப்பட்ட பாலிமர்கள் எங்கும் காணப்படும் இந்தக் காலத்தில், அதனால் ஒரு பயனும் இல்லை! என்னுடைய செயற்கை இடுப்பிலும், ஒருவேளை பற்களிலும் உள்ள உலோகத்தால்கூட, நான் நுழைகையில் அந்தக் கருவி எச்சரிக்கத் துவங்கும். ஒப்பீட்டில் அந்தக் காவலர்களின் வேலைக்கான ஆயுதங்களில்கூட அத்தனை உலோகம் இராது.

நான் வீட்டிலிருந்து 4 மணிக்குக் கிளம்புவேன்- அது அற்புத நேரம் – இயந்திரங்கள் வெளியிடும் வெப்பம் என்னை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, குளிரில் நடுங்கும் விரல்கள் ஆசுவாசம் அடையும் உன்னதப்பொழுது. நியான் அறிவிப்புகள் ஒளிர ஆரம்பிக்கும் முன்பாகவும், மதுவோடு உணவளிக்கும் சீன உணவகங்களில் உயிரூட்டும் மெக்ஸிக மாரியாச்சிக் குழுக்களின் இசைப் புலம்பல்கள் காற்றில் நிறைவதற்கு முன்பாகவும் நான் வீடு திரும்பிவிடுவேன்.

புலம் பெயர்பவர்கள் வேலை தேடித்தான் இந்த ஸியூடாட் ஸபாட்டா நகருக்கு வருகிறார்கள். பகல் முழுதும் நிழல்கள் போலவும், கோட்டுருக்களாகவும் பெருகுகிறார்கள்; இரவில் நகர் நடுவில் திறந்த வெளிகளில், வானின் கீழ் உறங்குகிறார்கள். வீட்டுக்குத் திரும்பிப் போகையில், படுக்கை வாக்கில் உள்ள தீக் கனாக்களாக அவர்களைக் காண்கிறேன்: பேரழிவினால் பாதிக்கப்பட்டுக் குறுக்கும் நெடுக்குமாகக் கிடக்கும் பிணங்களைப் போலக் கிடக்கிறார்கள்.  மழைகூட அவர்களை விரட்டுவதில்லை. காத்திருக்கிறார்கள், சில சமயம் அங்கேயே இறந்தும் போகிறார்கள், ஏதோ விடா முயற்சியே தங்களுக்கு உரிமைகள் பெற்றுத்தரும் என்று நினைப்பதுபோல.  கடும் வெப்பமான நாள்களில், காற்று என் பங்களாவை நோக்கி வீசுகையில், நாம் கவனிக்கத் தவற முடியாத வாடை, வறுமையின் கசப்பான நெடி என்னை வந்தடையும். அது சங்கடப்படுத்துகிறது, ஆனால் என் பழக்கங்களை மாற்றுவதில்லை. (அவை என் மருந்து.)

ஃபாங் இந்த நாட்டைப் பற்றியும் குறையொன்றும் சொல்வதில்லை. இங்கே மிகப் பரந்த கழிவு நிலங்களை நிர்வகிக்க அனுப்பப்படுவதற்குமுன், தென்கிழக்கு ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும், செயல் திட்டங்களுக்குத் தலைமை வகித்து நடத்தி இருக்கிறார். வேறு யாராவதாக இருந்தால் அதைப் பற்றி பெருமை பாராட்டியிருப்பார்கள். இவரது தன்னடக்கத்தை மீறி, எனக்குத் தெரியும், அவர் பிராணிகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்களை ஆராயும் துறைப் படிப்பில் சிறப்பாகத் தேறி வந்தவர்[ii]. கொசுக்களில் செய்யப்பட்ட மரபணு மாற்றம் மலேரியா போன்ற நோய்களை அழிக்க உதவியது என்றாலும், அது மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பும் இதர மிருகங்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. புது வகைக் குரங்குத் தொற்றுகளிலிருந்தும், பன்றிக் காய்ச்சலிலிருந்தும் மனிதர்களைக் காக்கும் சுகாதார அரண்களை[iii] ஏற்படுத்தியவர் அவர். பொதுவாக பிற மனிதர்கள் சாகசங்கள் நடத்தப்பட்ட காலமாகக் கொள்ளும் அந்தக் கால கட்டத்தை, அவர்  “ஹெக்டகோம்பின் காலம்” என்பார், ஹெக்டகோம்ப் என்பது  “நூறு எருதுகளைக் கொல்லும் சடங்கு” என்றும் விளக்குவார்.

சதுரங்கத்தில்  என் ராஜாவிற்குக்  குறி வைத்துக்கொண்டே, மனிதர்கள் வாழும் பொருட்டு  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான  விலங்குகளைப் பற்றி அவர் பேசுவார்.

“குப்பைகளை அழிப்பது என்பது நிறைய மன நிம்மதி தரும் வேலை,” என்று சிரித்தபடி சொல்வார்.

தன்னுடைய தேசத்தைப் பற்றிப் பேசுகையில், புள்ளி விவரங்களின்மீது மரியாதையோடு பேசும் அவர், பஞ்சங்கள், இறப்புகள் மற்றும் தொற்று நோய்ப் பரவல்கள் பற்றிய விவரங்களைத் தருவார். அவரிடம் பழைய நினைவுகளில் திளைக்கும் தொல்லை இல்லை: சீனர்களின் சமூகத்திற்கு உணவகங்களாக இருக்கும் ஸ்வாலோஸ் நெஸ்ட், லக்கி ஸ்டார் போன்ற விடுதிகளுக்கு அவர்  போவதேயில்லை. அவர் வீட்டில் வேலை செய்யும் இடம் சௌகரியமாக இருந்தது, அது மேற்கின் பழங்காலப் பொருட்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது – இரு ஆடும் நாற்காலிகள், ஒரு மேலங்கி அலமாரி, முன்னதாக ஒரு சர்ச்சில் புனித நினைவுச் சின்னங்கள் வைக்கப் பயன்பட்ட, பல இழுப்பறைகள் கொண்ட ஓர் அறைகலன், பல வகைகளில் பின்னப்பட்ட, ஆனால் நொய்ந்து போயிருந்த தரை விரிப்புகள். அறையில் பிரதானமாக ஹெரானிமஸ் பாஷின்  ‘த எக்ஸ்ட்ராக்‌ஷன் ஆஃப் த ஸ்டோன் ஆஃப் மாட்னெஸ்’[iv] ஓவியத்தின் பிரதியும் இருந்தது. அந்த மிக விரிவான அதீதப் புனைவை நான் வியந்தேன், ஆனால் அதற்கு  முதுகு காட்டி அமரத்தான் எனக்குப் பிடிக்கும்.

ஜன்னல் வழியாக பசுமை இல்லத்தில் அவர் வளர்க்கும் ஆர்கிட் செடிகள் கண்களில் படும். அந்த பசுமை இல்லத்தின் கண்ணாடிச் சுவர்கள் மிகக் கனமானவை – வெளியில் குப்பைகள் மெதுவாகச் சக்தியாக மாற்றப்படுகின்றன, அங்கிருந்து வரும் வெப்பக் கதிர் வீச்சுகளும், தட்ப நிலை ஏற்ற இறக்கங்களும் செடிகளைத் தாக்காமல் காக்கின்றன.

ஒரு முறை, நான் அவரது அலுவல் அறைக்குப் போனேன், அது அவரது சொந்த வசிப்பிடத்திலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தது. அவரது உதவியாளன், (அவன் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் நான் ’தம்பி’ என்று அழைப்பதை அவன் பொருட்படுத்தவில்லை) அவனுக்குத் தன்  “செயல் நிரலிப்படி உருப்பெறும் பொருளை”த் தரும் சாதனம் ஒன்றின் மீதுதான் மிகப் பெருமை. ஒரு விசையை அழுத்தினால் போதும், ஓர் அலைபேசியை மடிக்கணிணியாக மாற்றி விடுவான். அந்தக் கருவியில் இருக்கும் கேடம்களின் (‘களிமண் மின்பொறிகள் + அணுக்களின்’) வலை இந்த மாற்றத்தைக் கட்டமைக்கிறது என்று ஃபாங் எனக்கு விளக்கினார். இந்த உருமாற்றம் ஒரே நேரம் அதி புத்திசாலித்தனமாகவும், முற்றிலும் தேவையற்றதாகவும் தெரிந்தது (ஒரு தவளையை முயலாக மாற்றுவது போல்), ஆனால், அந்தத் தம்பியின் கேளிக்கைக்காக உருவாக்கப்பட்டிருந்தது அது.

1965-ல் வெளிவந்த மூரின் விதி, கணினிகளின் திறம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டை மடங்காகும் என்கிறது. ஆனால் அப்புறமோ க்வாண்டம் விரிவு வந்துவிட்டது. தொழில் நுட்பம் புரிந்து கொள்ள இயலாத மின்னணு சாதனங்களைக் கண்டு பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், ‘தம்பி’ என்னவோ தம்பிதான்: ஒரு விசையைத் தட்டினால், ஒரு வியப்பை அவன் எதிர்பார்க்கிறான்.

 “செயல் நிரலிப்படி உருப்பெறும் பொருளை” எனக்குக் காட்டிய பிறகு,“ஞாயிறன்று ஏதும் செய்யப் போகிறீர்களா?” ஃபாங் கேட்டார்.

 “ஏதும் இல்லை,” நான் சொன்னேன், அது பொய். (உண்மையில் ‘ஹோலோக்ராமில்’ பார்த்து லிங்  வாங்கிய பொருட்கள் அதில் குறிப்பிடப்பட்ட தரத்தில் இல்லாததால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க, அவளுடன் சலிப்பூட்டும் கிடங்குகளுக்குப் போவதாக இருந்தேன்.)

அந்த உரையாடல் விசித்திரமாகத் தெரிந்தது, ஏனெனில் ஃபாங் ஞாயிறு என்று ஒன்று இருப்பதாக நினைத்ததுதான். அவர் ஏதாவது ஒரு நாளை விடுமுறையாக எடுக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை.

சீன மேலாளர்களின் ஊழல்களைப் பற்றிய வதந்திகளை நானும் கேள்விப்பட்டிருந்தேன். ஒரு காலத்தில், அதாவது, நான் சித்தாந்தங்களில் இன்னும் அக்கறை கொண்டிருந்த காலத்தில், முதலியத்தின் குறைபாடுகளையும், கம்யூனிசத்தின் குறைபாடுகளையும் இணைத்தே அவர்கள் உலகில் மேல்நிலை பெற்றவர்களாக உருவெடுத்துள்ளார்கள் என்று புரிந்து கொண்டிருந்தேன். பின்னர் தெளிவு கொண்டேன், அது உணவுச் சங்கிலியின்  இயற்கையான விளைபொருள். கடைசித் துணுக்கை யாராவது எடுத்துக்கொள்ள வேண்டும் – அது – எங்களை ஒரு விதத்தில் காப்பாற்றிய சீனர்களாகத்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே?

ஃபாங்குக்கு ஒழுங்கை நிலை நிறுத்துவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஒழுங்கை நிலை நிறுத்த வதந்திகள் தேவையானவை.  குற்றம் என்ற மாயத் தோற்றமே – யாரோ ஒருவர் இனிமேல் குற்றம் புரியலாம் என்ற கருத்தே – ஆசுவாசம் தருகிறது, ஏனெனில் அது கனவே அன்றி வேறன்று.  ஊழலைப் பற்றி உரையாடுவது, மனிதரிடம் ஒழுங்கின்மைக்கான ஆசைகளில் எஞ்சியிருப்பதை திருப்திப்படுத்துகிறது, அந்த ஆசை வேட்டையாடும் பிராணிகளிடம் உள்ள ஒரு விருப்பம். குற்றம் என்பது (அதே போல) அடையவியலாத சாத்தியப்பாடாக ஆகிவிட்டது, இப்போது ஊகங்களில் மட்டுமே நடக்கக் கூடியதாக ஆகியிருக்கிறது.

இது எனக்கு இப்போது தெரிகிறது, ஆனால் நான் கதையில் நடப்பதை முன்கூட்டிச் சொல்லக் கூடாது.

2. ஈயம், கரி, சிலிக்கான்

அந்த ஞாயிறன்று, ஃபாங்குடன் நான் நகருக்கு வெளியே சென்றேன். அவர் என்னை அழைத்துப் போக, தனக்காகத் தனியே வடிவமைக்கப்பட்ட ட்ரக் ஒன்றில் வந்தார். அது ஈயக் கவசத் தகடுகளால் காக்கப்பட்ட ட்ரக்.  தாக்குதல்கள் அடிக்கடி நடந்த காலத்தில், போக்கு வரத்துச் சட்டம் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர்களாகக் குறைத்திருந்த காலத்தில் பிரபலமாக இருந்த வடிவமைப்பு.

வண்டியின் முன்பாகத்தைக் காட்டி ஃபாங் சொன்னார், “ஈயம் அக்காலத்தில் குண்டுகளிடமிருந்து, இப்போது கதிரியக்கதிலிருந்து காக்கிறது. எனக்குப் பிடித்தமான மூலப் பொருட்களில் ஒன்று.”

அவரைத் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டிருக்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்டேன் :  “நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”

“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”

அங்கிருந்து, நாங்கள் ஐ சிங்க்(I Ching) பற்றிப் பேசினோம், தேவராட்டிகள் வழி அதில் ஏற்பட்ட சிதைவுகள் பற்றி அந்த மருத்துவர் பேசினார். பிறகு

சிலிக்கானிலிருந்துதான் பேச்சு துவங்கியது என்று நினைவு கூர்ந்து,“கற்பனையான உருமாற்றங்கள் நல்லவை, நிஜ உருமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை, மிகவும் நிஜமான உருமாற்றங்கள் தான் உண்மையான பிரச்சனைகள்.”

 “மிகவும் உண்மையாக எப்படி ஏதும் இருக்கும்?” என்றேன் நான்.

“அது கற்பனையால் எட்ட முடியாது போகும் போது.”

 “எனக்குப் புரியவில்லை.”

“நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”

‘91 வயது எனக்கு; எதையும் கற்றுக் கொள்வது பற்றி என் எதிர்பார்ப்பு மிகக் குறைவு.”

“பேராசிரியரே, அவ்வளவு விரைவில் களத்தை விட்டுப் போக வேண்டாம்,” அவர் சிரித்தபடி சொன்னார்.

நாங்கள் எங்கள் வழியே மெதுவாகச் சென்றோம். என் வயோதிகப் பருவத்தில் நான் ஓய்வை அடைந்தாலும், கவலைப்படுவது நிற்கவில்லை. இந்தப் புது வண்டிகளின் குறைந்த வேகம் எரிச்சலூட்டுகிறது. ஆனால், அவரோ எந்தச் சூழலுக்கும் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். நெருப்பான சுயக்கட்டுப்பாடு மூலம் தன் உணர்வுகளை அவர் அமுக்கி வைக்கிறாரா, அல்லது மனத் துன்பம் ஏற்படாமல் தவிர்க்க உதவும் நெகிழ்வான சுபாவம் கொண்டவரா என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால், அவர் குறை சொல்லி ஒருபோதும் நான் கேட்டதில்லை.

நிறையப் பெய்த மழையாலும், சுத்தமாக பராமரிப்பு என்பதே இல்லாததாலும், நெடுஞ்சாலை பூராவும் பெரும் பள்ளங்கள்: ஒன்றில் கழுகுகள் ஒரு விலங்கின் உடலைக் கொத்திக் கொண்டிருந்தன. எங்கள் வேகம் குறைந்தது, அரை நிர்வாணக் குழந்தைகள் சூழ்ந்து கொண்டு சில்லறை கேட்டனர். நிலத்தடி நீருக்குள் கசிந்து விட்ட இரசாயனக் கழிவுகளால் அவர்களின் பற்கள் பழுப்பு நிறமாக இருந்தன. ஞானஸ்னானம் முடிந்த பிறகு காசுகளை வீசும் போஷிப்பாளரைப் போல, அமைதியான முக பாவத்துடன், வண்டியின் ஜன்னலை இறக்கி சீனத்து  மிட்டாய்களடங்கிய ஒரு பையை ஃபாங் அந்தக் குழந்தைகளிடம் வீசினார்.

ஃபாங் என்னைத் துணையாக அழைக்க விரும்பியதில் எனக்குப் பெருமிதம். உலகின் மிகப் பெரும் குப்பை சக்தி தொழிற்சாலையை நிர்வகிக்கும் ஒருவர், என்னிடம் ஆர்வம் காட்டுகிறார். வயோதிகம் உங்கள் விந்துப் பையையோ, கருப்பையையோ அழிக்கலாம், ஆனால், வறட்டுப் பெருமையை ஒருபோதும் அழிப்பதில்லை.

குப்பைக் குவியல்களிடையே ஒழுங்கற்ற சில தோட்டங்கள், சில சிறிய கடைகள் காணப்பட்டன. சிற்றூரை ஒத்த ஒரு இடத்தை அடைந்தோம்: வண்ணங்கள் பூசிய சிறு வீடுகள், பொத்தல்களிட்ட, பளீர் வண்ணக் காகிதங்களில் வெட்டப்பட்ட கொடிகள் ஒரு காலத்தில் அலங்கரித்த கம்பி வளைவுகள், கித்தான்களால்  உருவான ஊசல் படுக்கை விற்கும் கடை, செடிகள் விற்கும் ஒரு சாலையோரக் கடை, ஒருவேளை அவை பழமரங்களாக இருக்கலாம். தார் சாலை சரளைக் கல்பாதையாக மாறியது, ஒரு கூடைப் பந்துக் கூடத்தை அடைந்தோம். எறியப்படும் பந்து இடித்துக் கூடையில் விழ உதவும் பின்புறப் பலகைகள் சந்தையில் இப்போது இல்லாத பானமொன்றை விளம்பரம் செய்தன, வலை இல்லாத கூடைகள், மைதானத்தின் நடுவே ஒரு மேஜை இருந்தது. அரை டஜன் நாற்காலிகளில் நான்கில் ஆட்கள் வீற்றிருந்தனர்.

கடுகு மஞ்சள் நிற இலைகள் கொண்ட ஒரு புன்னை வகை மரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த இரு நாற்காலிகளை நோக்கிச் சென்றோம்.

 “உலகின்  விளையாட்டரங்கிற்கு உங்களை வரவேற்கிறோம!” என்று அங்கே இருந்தவர்களில் மூத்தவர்- என்னை விட மிகவும் இளையவர்- சொன்னவர், மேலும் சொன்னார்,  “தெளிந்த புத்தி உள்ள மனிதர் ஒருவரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.”  “ஆண்டுகள் கடக்கலாம், விளையாட்டு மாறுவதில்லை: ஒரு வளைவு பகலுக்கு வழி காட்டும், மற்றொன்று இரவுக்கு; ஒன்று பெண்ணுக்கு, மற்றொன்று ஆணுக்கு, நிரந்தர இருமைகள். இதைப் பற்றி நீங்கள் கட்டுரை எழுதியுள்ளீர்கள்.”

புன்னகைத்தேன்; ”பல நூறாண்டுகளுக்கு முன்.”

“தொப்பி கொண்டு வரவில்லையா நீங்கள்?”ஒரு பெண் கேட்டார்.

முழு வெயிலில் இருந்தோம். ஃபாங் பனை ஓலைத் தொப்பி அணிந்திருந்தார். மறைந்து போன ஒரு அரசியல் கட்சியின் விளம்பரம் கொண்ட ஒரு தொப்பியை ஒருவர் எனக்குத் தர முன் வந்தார்.

குழந்தைத்தனமான கையாலாகாத கோபத்துடன், “இதை விட வெயில் தாக்கையே ஏற்பேன்,” என்றேன்.

“இந்தச் சூடு சீனர்களின் தவறு,” என்று நகைச்சுவையாகச் சொன்னார் ஒரு பெண்.

அதென்னவோ உண்மைதான். குப்பை சக்தி தொழிற்சாலைகள் சூழலில் நிலவும் வெப்பத்தை 5 பாகை கூட்டித்தான் விட்டன. (அது அருமையானது, நமக்கு 91 வயதாகிற போது!)

அவர்களில் ஒருவர் அணிந்திருந்த தொப்பியை எனக்குக் கொடுத்தார்கள். அவரின் வியர்வை என் நெற்றியை நனைத்ததை உணர்ந்தேன்; ஆனால், நான் அதைக் கழற்றவில்லை.

அவர்கள் பழங்குடி மக்கள் குழுமப் பிரதிநிதிகள், அவர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியின் பிரச்சனைகளைக் கவனிப்பேன் என ஃபாங் விளக்கினார். தொடக்கம் முதல் முடிவு வரை பிரதிநிதிகளே (இரு ஆண்களும், இரு பெண்களும்)  உரையாடலை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் ஃபாங் பேசும் விஷயத்தை மாற்ற விரும்பியபோது அவர்கள் முன் திட்டத்தை மதிக்கும்படி சொன்னார்கள். மிகுந்த மரியாதை காரணமாகவோ அல்லது அவரது இராணுவப் பயிற்சியாலோ அவர் உடனே அவர்கள் சொன்னதற்கு ஒத்துக் கொண்டார்.

அவர்கள் எந்தக் குழுவின் அல்லது அமைப்பின் பிரதிநிதிகள் என எனக்குப் புரியவில்லை. அவர்கள் அங்கம் வகித்த ‘குழுமம்’ ஒரு கற்பனைக் குழு அல்லது சங்கம் என்று நான் அனுமானித்துக் கொண்டிருந்தேன். தேசத்தை தன்னுடையதான சொத்து மட்டுமே என்று நினைக்கும் ஒரு நில உடமையாளர் போல இந்த தேசத்தந்தை என்று அவர்கள் சொல்கையில் எனக்கு சற்று அசௌகர்யமாக இருந்தது. அதை விட நான் அவர்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் என்று அவர்கள் சொல்கையில் நான் வெலவெலத்துப் போனேன். (ஒருவர் என்னை ஏற்கனவே சந்திருப்பதாகவும் சுட்டினார்.) நான் அங்கிருந்து கிளம்ப முயற்சித்த போது, என் கரத்தை ஃபாங் பற்றிக் கொண்டார்.

இந்த தேசத்தந்தை பன்னெடுங்காலமாக ஆட்சி செய்கிறார் என்பதால் அந்த கால அளவை யோசிப்பதும் கூடப் பயனற்றது. (‘என் தேசத்தின் மக்கள் விரும்பும் வரை நான் ஆட்சி செய்வேன்’ என்பது அவரது கோஷம்.) அவரது பெரும் கூட்டங்களில் அவர் தனது எதிரிகளை ‘சாத்தான்கள்’ என்றெல்லாம் இழிக்கும் சல்லிசான அணுகலில் இறங்குவதில்லை. ‘பொறுப்பற்றவர்கள்’, ‘தேவையற்றவர்கள்’, ‘மனநோயாளிகள்’, ‘அகம்பாவிகள்’, ’சந்தர்ப்பவாதிகள்’ என்றுதான் சொல்வார். இதில் கடைசி வசை எனக்குப் பிடித்தமான ஒன்று; தாமாக வெற்றி பெற்று வாழாமல், அரசு அளிக்கும் வாய்ப்புகளை மட்டும் நம்பி வாழ்பவர்களைச் சுட்டுகிறது அது.

நான் அப்படி ஒரு சந்தர்ப்பவாதி ஆக இருந்தாக வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தேன்.  “உலகின் விளையாட்டரங்கம்” என்று சொல்லப்பட்ட இந்த கூடைப்பந்து மைதானத்தில் தேசத் தந்தையின் உண்மையான எதிரிகளுடன் நான் இருப்பதாக உணர்ந்தேன். “நாம் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறோம். இங்கே கல்லில் அதிக தாதுக்கள் உள்ளன. கரி இங்கிருந்து தகவல் தர முடியாது.” என்று அவர்கள் என்னை அமைதிப்படுத்த முயன்றது என் பயத்தை மேலும் அதிகரித்தது.

என்னைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், ‘உயிரி பாதுகாப்பு’ என்பதன் அவசிய நியதிகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து என் கவலையுணர்வு தவறவில்லை. இது என்னை மேலும் அதிகமாகக் கவலைப்படச் செய்தது. நான் ஏதோ ஒரு வகை ‘நடவடிக்கை’யில் பங்கெடுக்கிறவனாக ஆகிக் கொண்டிருந்தேன். ஃபாங் ஏன் என்னை இந்த எதிர்பாராத தாக்குதலுக்குள் இழுத்து வந்தார்?

அப்பெண்களில் ஒருவர், பழைய செய்தித்தாளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒன்றைக் காட்டினார். மங்கலாக இருந்தும் என் முகம் அதில் தெரிந்தது.

“நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்,” என்றார் அவர்.

அடையாளம் காண முடியா ஒரு நகரின் பொது இடம் என்பதைத் தவிர அந்தப் புலத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், குழப்பமான புலனுணர்வும் மேலெழுந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கொண்டிருந்த செயல்பாடுகளை ஒருவாறு மறக்குமாறு என்னையே பழக்கியிருந்தேன். அப்போது ‘இன அரசியல்’ கொழுந்து விட்டெரிந்தது. பல்வேறு பொருட்களில் பல்வேறு பழங்குடி இனங்களின் கலாச்சார சின்னங்கள் பொதியப்பட்டிருந்தன அப்போது -செருப்புகள், கோப்புகளுக்கான உறைகள், ப்ளாஸ்டிக் டப்பிகள், மேலங்கிகள், காகித நாப்கின்கள், மேஜை விரிப்புகள், நீச்சல் உடைகள், தொலைபேசி உறைகள், பைஜாமாக்கள், என்று எல்லாம் இனுவெட், ஆண்டிலியன், ஆஃப்ரிக்கன், மத்திய அமெரிக்கன் (எல்லாரையும் சேர்த்து நோக்கினால் அவர்கள் ஓஷியானியா பகுதி மக்களை ஒத்து இருந்தனர்[v]) இனக்குழுக்களைச் சுட்டின. இவைகளின் பின்னே தந்திரமாக ஒன்றிருந்தது. பழங்குடி மக்களிடம் ஆதரவு காட்டுவது போல் தாராளமாக பேசிக் கொண்டே, அவர்களின் நிலங்களிலிருந்து அவர்கள் துரத்தப்பட்டார்கள்.  ‘முற்போக்கான வளர்ச்சித் திட்டம்’ என்று முழங்கி தேசத்தந்தை தன் திட்டத்தை செயல்படுத்துவதை அனுமதிக்கும் சுவரொட்டிக் காகிதமாகிப் போயின இந்த இனக் கலைச் சின்னங்கள் நிரம்பிய அந்தப் பொருட்கள். நான் அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன்? எனக்கு அதை நினைக்க விருப்பமில்லை.

ஃபாங் இடைமறித்தார். சீனர்களும், மத்திய அமெரிக்க நாகரீகங்களும் பெற்றிருந்த உன்னதத்தைப் புராணக் கதைகள் வழியேதான் அறிய முடிகிறது. பெய்ஜிங்கிலோ, மெக்சிகோ நகரத்திலோ தற்காலம் பண்டைக் காலத்தளவு வலுவாக ஒரு போதும் இருக்க முடியாது. ஜூனோஸிஸில் ஒரு நிபுணராக அவர் இரு நாடுகளும் புதுத் தொற்றுகளின் எழுச்சியைப் பற்றிய செய்தியை வெளியிட்டதை நினைவு கூர்ந்தார் (பன்றிக் காய்ச்சல் 2009 இலும், கொரோனா வைரஸ் 2020 இலும்).

“நாம் தொற்று நோயால் பீடிக்கப்படும்போதுதான் நம்மைக் கணக்கிலெடுக்கிறார்கள்,” என்றார் ஃபாங்.

 “எந்த மக்கள் நோய்களுக்கு மிக்க எதிர்ப்பு சக்தி கொண்டவர்களோ அவர்களே அந்த நோய்களால் மிக்க இழப்புகளையும் சந்தித்தவர்கள்,” என்று எங்களை அந்த இடத்தில் வரவேற்றவர்களையும், அதே நேரம் மெக்ஸிகோவில் பதிவேடுகளிலோ, புள்ளி விவரங்களிலோ விளிம்பில் மட்டுமே வாழ்ந்து கண்ணில் படாதவர்களாக இருக்கும் சீனர்களையும் சேர்த்துக் குறித்தார் ஃபாங்.

உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகம்[vi] தொடங்கியபோது நாட்டின் பூர்வீகக் குடிகளைப் பற்றியோ அல்லது சீன மக்களின் எண்ணிக்கை பற்றியோ நம்பத் தகுந்த தரவுகள் அதனிடம் இல்லை. இன்றும்கூட அது இருண்ட பகுதிதான். தேசத்தந்தைக்கு ஒரு பொருட்டே இல்லாத பகுதி, ஏனெனில் அவர்கள் சிறுபான்மையினர் தானே? (அவர் தனது கோடிக்கணக்கான அபிமானிகளின் எண்ணிக்கையை மட்டும் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்.)

ஃபாங் என்னிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தார் என்று கவனித்தேன். மற்றவர்கள் இதை ஏற்கனவே அறிந்தவர்கள் என்பதால், உணர்ச்சி ஏதும் காட்டாமல் கேட்டுக் கொண்டிருப்பது என்னைக் கலவரப்படுத்தியது: “பதிவேற்றம் பெறாத குடிகளுக்கிடையே ஒரு கூட்டுறவு வெகு காலம் முன்பே ஏற்பட்டிருக்கலாம்; ஆனால் சீனக் குடியேறிகள் தங்கள் சிறு கடைகளுக்கே முழுக் கவனம் செலுத்தினர், இறந்தவர்களின் கடவுப் புத்தகங்களைப் பயன்படுத்தி இருந்தனர். பூர்வ குடிகளோ அவர்களின் நிலத்திலிருந்து விரட்டப்பட்டிருந்தனர். பல வருடங்களுக்கு முன் நான் இங்கே வந்தபோது, தொழிற்கூடங்களில் வேலை செய்தவர்களில் புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஊகித்தேன். அவர்கள் கவனமற்றவர்களாகவும், தம் விருப்பப்படி செயல்படுவோராகவும் இருந்தார்கள், ஆனால் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களைப் போல நடித்தார்கள். அவர்களுடைய நடத்தையின் வினோதம் அவர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தைத் தூண்டியது, நான் அவர்களின் நடத்தையை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை.

நான் பழங்குடி மக்கள் குழுவினைச் சந்தித்த போது அவர்களும் உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின்  (கண்காணிப்புக்) ‘கரிச் சில்லுகளை’ பொதிந்து கொள்ளவில்லை எனத் தெரிந்து கொண்டேன்.”

நாங்கள் தேனீர் அருந்திக் கொண்டே சதுரங்கம் ஆடுகையில் அவர் எம்முறையில் பேசுவாரோ அந்த உணர்ச்சி உதிர்ந்த தொனியில் மேலும் சொன்னார்: “தொற்று நோய்களை வென்ற பிறகு, நம்முடைய நோயை நாமே தேர்ந்தெடுக்கும் சாத்தியப்பாடு எனக்கு ஆர்வமூட்டியது.”

பேசிக்கொண்டே அவர் மென்மையாக கீ-போர்ட்டில் தட்டுவது போல் அந்த மேஜையில் தாளம் தட்ட பெண்களில் ஒருத்தியும் அதே போலத் தட்டினாள். அவர்கள் மோர்ஸ் சங்கேதத்தில் உரையாடுவது போல் தோன்றியது. அந்தப் பெண்ணின் சைகை தன்னுடையதோடு ஒத்துப் போவதைப் பார்த்து ஃபாங் புன்னகைத்தார்.

“நான் சீனாவிலிருந்து வந்த சீனன். புலம் பெயர்ந்த பழைய சீனர்களோடு என்னைச் சேர்க்க முடியாது.” தன் இரு விரலால் தலையைத் தொட்டு, தன் தலையில் கரிக் கடத்திகள் பதிக்கப்பட்டு இருப்பதைச் சுட்டினார், “ஆனால், இதைப் பற்றிப் பேச நாம் இங்கு வரவில்லை.”

அவர்கள் ஒரு ஆவணத்தைக் காட்டினார்கள், அது நான் ஏன் அங்கே வந்திருக்கிறேன் என்பதை விளக்கியது. அதன் வார்த்தைகளைச் சரி பார்க்கச் சொன்னார்கள். அது, முதல் குடிகளின்  உரிமைகளை பண்டை மொழியில் செய்தியாகக் கொடுத்தது, அது பூராவும் நம்பிக்கை என்ற சொல் விரவிக் கிட்டியது. எனக்கு அந்த வார்த்தைகள் சரியெனப் பட்டன; வழக்கொழிந்த வார்த்தைகளை நீக்கி, முன்னர் அவசரத்தில் இடப்பட்டிருந்த  நிறுத்தற் குறிகளை சரி செய்து கொடுத்தேன்.

“நாம் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறோம்.” இந்தச் சொற்களை டாக்டர் சொன்னதும், நான் செய்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மற்றவர்கள் நன்றி தெரிவித்தனர், எனக்கு ஒரு பின்னல் வேலைப்பாட்டைக் கொடுத்தார்கள். அதில் சிரிக்கும் சூரியன் பின்னல் வேலைப்பாட்டில் பதித்திருந்தது. வறுத்த சோளத்தின் மணம் காற்றில் வந்தது. சந்திப்பு வேகமாக முடிந்தது, சாப்பிட ஏதும் கொடுக்க மாட்டார்களா என்று நான் அச்சப்பட்டேன். ஆனால் வழிப் பயணத்திற்கென்று டமாலெக்களைக் கொடுத்தனர்[vii]. ஃபான் அன்புடன் தன் பங்கையும் எனக்குக் கொடுத்து விட்டார். நறுஞ்சுவையுள்ள மாஸா நிறைந்த அவற்றை என் பிள்ளைப் பிராயத்திற்குத் திரும்பி விட்டதைப் போல உண்டேன். ‘தெளிவான புத்தியுள்ள மனிதன்’ என்று அவர்கள் என்னை முதலில் அழைத்தபோது அதன் கருத்து எனக்குப் புகழ்ச்சியாகப் பட்டிருந்தது, ஆனால் எனக்கு அதைப் பொருத்துவது நகைமுரணாகத்தான் இருக்க முடியும்.

ஒரு காட்சி இந்தப் பயணத்தின் சாரத்தைக் கொடுத்தது; நான் திருத்தப்பட்ட ஆவணத்தை அவரிடம் கொடுக்கையில், தன்னுடைய  “செயல் நிரலிக்கேற்ப அமையும் பொருளுக்கு” அவர் தரும் அதே நேசப் பார்வையை என்னிடம் காட்டியதைக் கண்டேன்.

என்னை அவர் அந்தப் பழங்குடிக் குழுவை சந்திக்க அழைத்து வந்தது எனக்குத் தரப்பட்ட ஒரு சோதனை.

(தொடரும்)

***


[i] இக்கதையின் மூல ஆசிரியர் ஒரு புகழ் பெற்ற மெக்ஸிக எழுத்தாளர். Juan Villoro என்று மூல மொழியில் எழுதப்படும் பெயர். இவர் ஸ்பானிய மொழியில் கதைகள் எழுதுகிறவர். இவரது சமீபத்துக் கதை இது. ஸ்லேட் பத்திரிகை இங்கிலிஷில் மொழி மாற்றிப் பிரசுரித்தது. அது பற்றிய தகவல்கள் இங்கே: https://slate.com/technology/2020/03/paciente-cero-juan-villoro-short-story.html

[Short story by Juan Villoro/ Translated by Will Vanderhyden.This story is about China turning Mexico into a massive recycling plant for U S Garbage.]

அவரது கதைகள் சமீபத்தில்தான் இங்கிலிஷில் மொழி பெயர்ப்பாகிக் கிட்டத் தொடங்கியுள்ளன. அதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே பார்க்கலாம்: https://lareviewofbooks.org/article/juan-villoro-at-last-an-english-translation-brings-his-seriously-funny-take-on-identity-to-new-audiences/ இவருடைய ஸ்பானிய மொழி காணொளிகள் யூட்யூபில் ந்றையவே கிட்டுகின்றன.  

[ii] Zoonosis என்பது அந்தத் துறை. அதில் ஆய்வாளர் ஃபாங். மருத்துவரும் கூட.

[iii] கார்டொன் ஸானிடேர்ஸ் (Cordons Sanitaires) என்ற சொல் மூலத்தில் உள்ளது. இதன் பொருள் கடும் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு அரண் என்பதாகும்.

[iv] Hieronymous Bosch’s ‘The Extraction of Madness’ என்பது ஒரு புகழ் பெற்ற ஓவியமாகும். அது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்: https://www.museodelprado.es/en/the-collection/art-work/the-extracting-the-stone-of-madness/313db7a0-f9bf-49ad-a242-67e95b14c5a2

[v] ஓஷியானியா என்பது ஆஸ்த்ரேலியாசியா, மெலனேசியா, மேலும் பாலினேசியா பகுதிகளின் மொத்தம். இதில் ஆஸ்த்ரேலியாவும் நியுஸீலாந்தும்தான் பெரிய நாடுகள். ஜனத்தொகை சுமார் 50 மிலியன் இருக்கும். இதில் ஃபிஜி, டோங்கா, கிரிபாடி, டுவாலு ஆகிய நாடுகளும் சேர்த்தி.

[vi] Ministry of Bio Security இங்கு உயிரிகள் பாதுகாப்பு அமைச்சரகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

[vii] டமாலே என்பது  சோள மாவோடு அரைக்கப்பட்ட மாமிசம் அல்லது அவரை வகைப் பருப்புகளை சுற்றி, மிளகாய்ப்பொடு தூவி, சோளத்தின் மேல் தோலில் பதித்து வேக வைத்த உணவுப் பண்டம். சில நேரம் காய்கறிகள், பழங்கள், மிதமான மிளகாய் வகைகள் கூட பொதிக்கப்பட்டிருக்கலாம். வேக வைக்கும் திரவமும் மணப் பொருட்கள் சேர்த்ததாக இருக்கலாம். இது பழங்குடிகளின் உணவு, ஸ்பானியர்களுக்குப் பரவியது. பொது வருடத்துக்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்தே இந்த உணவு அமெரிக்கக் கண்டங்களில் இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆஸ்டெக், மாய, ஓல்மெக், டோல்டெக் நாகரீகங்களும் இவற்றைப் பயன்படுத்தி இருக்கின்றன. இது கடவுளரின் உணவு என்பதால் புனிதப் பண்டமாகவும் கருதப்பட்டது என்று விக்கி சொல்கிறது. ***

Series Navigationநோயாளி எண் பூஜ்யம்- 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.