பானுமதி ந.

கோள வடிவான கடிகாரங்களில் முட்கள் நகர்வது நம் பார்வையில் படுகிறது; காலம் செல்வதை உணர்கிறோம். அப்படியில்லாமல், இலக்க முறை நேரங்காட்டி எதையும் உணர்த்தாமலே அந்நேரத்திற்குச் சட்டென்று வந்து விடுகிறது அல்லவா? அதைப் போலவே, மனித முகங்கள் இக்காலத்தில் தென்படுகின்றன. முன்பு, முகங்கள் மெதுவாக உணர்த்திக் கொண்டே காலத்தினை முன்னெதிர் கொண்டு சென்றன; ஆனால், இப்போது அப்படியில்லை; பல வருடங்கள் உறைந்து பின்னர் வெகு விரைவாக கட்டுக்கடங்காத வகையில் மாறுதல் அடையும் முகங்கள். இந்தப் புதிருக்கு அதிகரித்து வரும் ஒப்பனை அறுவை சிகிச்சை மட்டுமே காரணியன்று. ‘நம் காலம் இளமையின் காலம், என்றென்றும் இளமை தரும் போகம்’ என்று சமூகம் ஒட்டு மொத்தமாக இதில் திளைக்கிறது. ‘இவருக்கு இந்த வயது இருக்கலாம்’ என்று அனுமானித்துச் சொல்ல முடியாத வகையில் முகங்கள் கொள்ளும் மாறுதல்கள் இப்போது இயல்பாகிவிட்டன. இது எந்த அளவிற்குப் போயுள்ளதென்றால், நமக்குத் தெரிந்த ஒருவரின் முகத்தில் திடீரெனத் தென்படும் மாறுதல்களை, நாம் அவருக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டிருக்கக்கூடுமென நினைக்கிறோமே தவிர, காலம், தோற்றத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் என ஒத்துக் கொள்வதில்லை. தாறுமாறான, பேரழிவின் சூசகமாக, கட்டுப்படுத்த இயலாத ஒன்று என்று தோற்ற மாற்றத்திற்கான காரணங்களைப் புனைந்து கொள்கிறோம்.
எண்முறை கடிகாரம் 11:59 லிருந்து 12:00 க்கு நழுவுவதைப் போல் மனித முகங்கள் சட்டென்று மாறுகின்றன. புலப்படாமலும், அறிவிப்பே இல்லாமலும், முன்பு இயற்கை எனக் கருதப்பட்டவை இன்று அதைப் புறந்தள்ளும் வகையாகவும் மாறுபாடு கொள்கின்றன. முகங்களுக்கு ஒரு சாபம் இருக்கிறது இப்போது – ‘அதே போலவே பல வருடங்கள் இரு, கண்டுபிடிக்க இயலாதபடி சட்டென்று மாறி விடு.’ இந்தக் கவசம், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் நம் இறப்பிற்குப் பிறகும்கூட நம்முடன் இருக்கக் கூடும், அல்லது இறப்பின் முன்னறிவிப்பெனக் கழலக்கூடும். பல ஆண்டுகளாகப் பேணிப் பாதுகாத்த அது இறப்பின் அறிவிப்பாக வருவது என்றும் பொருள் கொள்ளும். வருங்காலத்தில் ஒருவரின் முகம் அவர் வாழ்நாள் சரிதத்தைச் சொல்லாது, அவரின் வாழ்க்கைப் பயணங்களை, அவரது அனுபவங்களை, அவரது குணாதிசயங்களை, எதையுமே உணர்த்தாது. அகத்தின் அழகு முகத்தில் தெரியாது. இன்றைய ஆறுதல் என்னவென்றால் இன்னமும் நாம் முகங்களைக் கவனித்து, அவரது இயல்புகளை, வாழ்வியல் முறைகளை உணர்ந்து கொள்ள முயன்று, நெருங்கலாமா, விலகலாமா என்ற எண்ணத்தினுள் செல்வதற்கு முயற்சி செய்யலாம்.
நாம் காணும் நபரின் சொந்த முகத்தை, அதன் மூலம் ஓரளவிற்காவது அவரது அகத்தை அறிவதில் முனையும் நம்முடைய இந்தப் பழக்கம், சிக்கலைக் கொண்டுவரும். ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனதன் தன்மை வாய்ந்த முகங்கள் உண்டல்லவா? இன்று காணும் ஒரு முகம், பழங்காலத்தைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகளை அம்முகம் கொண்டிருக்கும். ஒருக்கால், இன்று செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் நாம் காணும் முகங்கள், உணர்வு மிக்கதாக, ஆற்றல் உள்ளவையாக, கவனிக்கத் தக்கவையாக, (முக்கியமாக இறந்து போன இந்தப் பெருமையாளர்கள்) நமக்குத் தோன்றலாம்; ஆமாம்.. ஒருக்கால்தான். காலப் போக்கில் நாம் சில பல நல்லெண்ணங்கள் கொண்டு அந்த முகங்களை நினைவுகூர முயல்கையில் உணர்வின் ரேகை படியாத அந்த முகங்கள், வாழ்வின் சுவடுகள் காணப்படாத அந்த உறைந்த முகங்கள்தான் தென்படும்.
முகச் சுருக்கங்கள், சிறு தேமல்கள் இவைகள் ஒப்பனையாலோ, நெகிழி அறுவை சிகிச்சைகளாலோ மறைக்கப்படுவதில் மனித முகங்கள் தக்க வைக்கும் மாறுதலற்ற முகங்களைப் பற்றி மட்டுமே இங்கு பேசவில்லை. மிக மோசமான இழப்பு, மிக அதிகமான மகிழ்ச்சி, அவசரத்தில் எடுத்த முடிவுகளின் பயங்கரப் பின் விளைவுகள், அல்லது தவறவிட்ட தருணங்கள், வெற்றி அல்லது வீழ்ச்சி, மறக்கவே முடியாத நிகழ்வுகள் இவைகளைக்கூட முகங்கள் காட்டுவதில்லை. ‘இவ்வாறு எனக்கு நடந்தது என்பதை என் முகம் வெளிக்காட்டுவது அவமானகரமான விஷயம்’ என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
பகுத்தறிய முடியாத, உணர்ச்சிகள் உள்ளே உறங்க, தன்னடக்கத்தோடும், இரகசியங்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடும் மனிதர்களின் முகங்கள் அணியும் கவசம் சரிதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நடப்பது அதுவன்று. முகங்கள் இளிவரலைச் சூடிக்கொள்கின்றன. பொருத்தமற்ற கை கால் அசைவுகள் சகிக்க முடியாததாகின்றன. கேரி கூப்பர், ஜான் வேய்ன் போன்ற நடிகர்கள் ஒரு பார்வையில் சொன்ன செய்திகளை இன்றைய நடிகர்களிடம் பார்க்க முடியவில்லையே? ராபர்ட் டி நீரொவின் வெற்றுப் பார்வையை என்னவென்று சொல்வது? ரெக்ஸ் ஹாரிசன், ஹென்றி போன்ற நடிகர்களின் முகங்களில் இருந்த அந்த சொந்த ஜீவிதக் களையை இன்று காண முடியவில்லை. அவர்களின் முகங்கள் நினைவுகூரத் தக்கவையாக இருக்கின்றன. இன்றோ நெகிழி முகங்கள்.
இது ஏதோ, பிரபலமானவர்களைப் பற்றி மட்டுமே சொன்னதாகாது. தொலைக்காட்சிப் பெட்டி நமக்கு ஒரு வரம்தான். நாம் குறிப்பாகவும், சற்று விசனமற்றும் நடிகர்களைப் பார்த்துவிடலாமே! நாம்தான் அவர்களுக்குத் தெரியப் போவதில்லையே! அது காட்சி ஊடகம், அதில் உருவம், குரல், உச்சரிப்பு எவ்வளவு உயிர்ப்புடன் இருக்க வேண்டும்? அந்தோ பரிதாபம்! அவர்களின் முகங்கள் செயற்கையாக, இயல்பற்று உங்களை அந்த நிகழ்ச்சியிலிருந்தே விலக்கி விடுகின்றன. ஓர் இனத்தின் சரிவினைப் போல் உற்சாகமற்ற முகங்கள்! அவர்களுக்கு பத்திரிகையியல் மற்றும் காட்சி ஊடகத்தில் திறமை இருக்கலாம் – அதைப் பற்றிய பேச்சில்லை இப்போது. திரையில் தோன்றும் தகுதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமோ என்னவோ?
அந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் – பிக் பாஸ் போன்றவை என வைத்துக் கொள்ளுங்களேன் – அவைகளில் எப்போதாவது வருபவர்கள்கூட தங்கள் சொந்த முகங்களைக் கழற்றி வைத்துவிட்டுச் செயற்கையாகச் சிரித்து, பழித்து, தன்னைத்தானே மெச்சி, சிரிப்பே வராத (திருடியதோ அல்லது கடன் வாங்கப் பட்டதோ) நகைச்சுவையைச் சொல்லித் தானே மகிழ்ந்து, சுய அடையாளமற்ற, பொய்ப் பணிவு காட்டும் யாரோ ஒருவராகக் காணப்படும் கொடுமையை என்ன சொல்ல? தான் ஒரு தனி மனிதன் என்ற அடையாளமே வேண்டாம் அவர்களுக்கு; குழுவின் ஓர் அங்கமெனக் காட்டிக்கொள்வதே போதும்; அதில் அந்தந்த வட்டாரங்களின் குணங்கள் பிரதிபலிப்பதில்லை என்று சொல்ல வரவில்லை. (அவை தேவையற்ற விகிதத்தில் அதிகரித்து வருகின்றன.) சுயமாக வெளிப்படுவதை, தன் தனித்துவத்தைக் காட்ட விழையாத ஒரு விசித்திரத்தில் இன்றைய முகங்கள் சிக்கியுள்ளன. பல தொழில் செய்வோர், சமூகத்தின் பல படிகளில் உள்ளோரைச் சமன்படுத்தும் நிகழ்வாகவும் அவை இருப்பதில்லை. யாரோவாக தம்மை ஏன் காட்டிக்கொள்கிறார்கள்? அதே சூழலில் இருக்கும் நபரைப்போல் நடந்துகொள்ளக் கூடாது என்று திண்மையாக நம்பி, தம்மையும் தொலைத்து விடுகிறார்கள். பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பும் இச்செயலின் பின்னே உள்ள சிந்தனைகள் – அதுவும் அவமானப்படுத்தும், வளைந்து கொடுக்கும் இயல்பில்லாத இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளிலும்கூட இவ்வாறு நடந்து கொள்ளும் இந்த நெகிழி முகங்கள், கொடுப்பது வேதனை ஒன்றுதான்.
என் சம காலத்தவரின் முகங்கள் ஒன்று போல, கணிக்கத் தகுந்ததாக இருக்கின்றன. வயதும், காலமும் கொணரும் முக மாற்றங்கள், உடல் நலக் குறைகளோ அல்லது மரணமோ நெருங்கும் வரை தள்ளிப் போகின்றன. இலக்கமுறை கடிகாரத்தைப் போல் மாற்றம் வெளிவராத மாறுதல்கள். பழமை காட்ட மறுக்கும் முகங்கள், எதிர்காலத் தோற்றம் கொள்ள மறுக்கும் முகங்கள் என்றும் சொல்லலாம் அல்லவா? என்றென்றும் சிரஞ்சீவிகளோ? இன்னமும் கடினமானது ஒன்றுண்டு – வாழும் காலம் நம் மீது கொண்டு வரும் தாக்கம்; நம் முகங்களுக்கும் இதுதான் விதிக்கப்பட்டுள்ளது போலும்!
‘அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’
என்பது பொய்யா மொழி. திருவள்ளுவர் இன்று இருந்தால் ‘புனைவு முகங்கள்’ என்று ஓர் அதிகாரம் எழுதக்கூடும்!!
https://www.threepennyreview.com/samples/marias_sp20.html ல் வந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.
Javier Marias ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர். சமீபத்தில், அவரது நாவல் Berta Isla வெளிவந்துள்ளது. 1992-லிருந்து Margaret Jull Costa இவரது படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.
***