டெம்பிள் க்ராண்டின்: பேட்டி

ராஸ் ஸிமானீனி

[ த பிலீவர் பத்திரிகையில் ஃபிப்ரவரி / மார்ச் 2019 இதழில் வெளியான பேட்டியின் தமிழாக்கம்.]

என்னிடம் ஒரு பேட்டிக்கு ஒப்புக் கொள்ளும்முன், டெம்பிள் க்ராண்டின், அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசச் சொன்னார். அவர் என் குரலின் தொனியைக் கேட்க வேண்டும் என்றார். ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலரைப் போல, மின்னஞ்சலின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதை விட – ஏனெனில் அது உணர்ச்சி ரீதியாக தெளிவற்றதாகவும், மிக எளிதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்கும் – குரலின் தொனியைப் புரிந்துகொள்வதை எளிதாகக் காண்கிறார் க்ராண்டின்.

க்ராண்டினின் குரலின் தொனியே தனி வகைப்பட்டதாக உள்ளது – துடுக்காகவும், ஆள்வதாகவும் ஒலிப்பதோடு, சிறுவயதை பாஸ்டன் நகர்ப்புறத்தில் கழித்திருக்கிறார் என்பதைச் சுட்டுவது போலச் சுழன்று, வசீகரமான இழுப்போடுள்ளது. அவருடைய நாலாவது பிறந்த நாள் வரை அவர் பேசவில்லையாம். இப்போது அவருக்கு வயது எழுபத்தி ஒன்று, அவர் பல பயணங்களை மேற்கொண்டு, உரைகளாற்றுவதைத் தன் வேலையாகக் கொண்டிருக்கிறார்.[1] உரைகளாற்றுவதும், பல்கலையில் போதிப்பதும் அவர் பணிகள்.

அவருடன் உரையாடுவது, நமக்கு உரமளிப்பதாகவும், புத்துணர்வு கொடுக்கும் வகையில் நேர்மையானதாகவும் இருக்கிறது. நாங்கள் பேசியபோது, என்னிடம் அவருடைய முதல் குறிப்பு – வழக்கமான, ஹௌ ஆர் யு போன்றன ஏதும் பரிமாறிக் கொள்ளும் முன்னரே – என்னுடைய தொலைபேசி மூலம் நான் அவருக்குக் கொடுத்த செய்தி அவருக்குக் குழப்பமளிப்பதாகவும், விட்டேற்றியாகவும் தொனித்தது என்பதுதான். அவர் அப்போது ஒரு விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார், பத்து நிமிடங்கள் என்னிடம் விமான நிலையத்தில் பாதுகாப்புக்காகப் பயணிகளைச் சோதனை போடும் முறையைத்தான் அனுபவித்ததைப் பற்றிப் பேசினார். (அது வியப்பளிக்கும் வகையில் மிக சுலபமாக இருந்ததாம்.)

ஆடிஸத்தால் பாதிக்கப்படுவோர் அநேகமாகச் சாதாரண நிகழ்வுகளைக்கூடத் தீவிரமாக உணர்கிறார்கள். க்ராண்டின் பிறந்தபோது ஹாப்டிக் என்பதற்கு அவர் மிகத் தீவிரமாக மறுவினை செய்பவராக இருந்தார் – அதாவது, எந்த விதமான தொடுகையும் அவருக்கு மிக வலியுண்டாக்குவதாக இருக்கும். அவருடைய ஆடிஸம் (மன இறுக்கம்) அவருக்கு மிகக் கூர்மையாக்கப்பட்ட கவனத்தையும், கறாரான அலசி நோக்கும் தன்மையையும் கொடுத்தது. பதின்ம வயதில் அவர் இருக்கையில், இந்தத் திறமைகளைப் பயன்படுத்தி ‘இறுக்கும் எந்திரம்’ ஒன்றைக் கட்டமைத்தார்.[2] அதன் மூலம், தாம் நுண்மையாகவும் தீவிரமாகவும் உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க முயன்றார். அந்தக் கருவி ஒரு பெட்டி போன்றது, அதன் சுவர்கள் உள்நோக்கி நகரக் கூடியவை, அது அவர் தமக்குத் தாமே ஓர் அணைப்பைக் கொடுத்துக் கொள்ள உதவியது. அதன் இறுக்கத்தை அவரால் கட்டுப்படுத்த முடியும். அப்படி இறுக்கத்தை உணர்ந்தபின் அவர் கூடதிகமாகத் தூண்டப்பட்டுள்ள தம் நரம்புகளை நிதானமாக அமைதிப்படுத்த முடிந்தது.

ஆடிஸமுள்ள நபர்கள் பலர் இக்கருவியை இப்போது உலகெங்கும் பயன்படுத்துகிறார்கள். க்ராண்டின், இந்த எந்திரத்தை இப்போது கால்நடைகளை அமைதிப்படுத்தவும் பயன்படுத்துவதாகக் கேள்வி. அதுவே அவருடைய நீண்ட கால வேலையாகவும் – கால்நடைகளைக் கையாள்வதில் கரிசனத்தைக் கூட்டுவது எப்படி என்று திட்டமிடுவது –  ஆகிவிட்டது. (மாமிசத் தயாரிப்புத் தொழில் துறையினர் நடுவே) கால்நடைகளை நடத்துவதைப் பற்றிய சிந்தனையை மாற்றி அமைக்கவும், அந்த நடைமுறைகளை மேலும் கருணையுள்ளதாகவும், சீர்ப்பட்டதாகவும் ஆக்க அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

பேச்சு வழித் தொடர்பை அவர் விரும்பினாலும், க்ராண்டினின் வாழ்க்கைப் பாதை எழுத்தால்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. 1980இலிருந்து, அவர் பத்துப் புத்தகங்களைப் பிரசுரித்திருக்கிறார், ஆடிஸம் உள்ள சிந்தனை, கால்நடை நடத்தை, மேலும் இவை இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றிப்  பல அறிவியல் கட்டுரைகளைப் பிரசுரித்திருக்கிறார், அவருடைய மிகச் சமீபத்துப் புத்தகம், ‘காலிங் ஆல் மைண்ட்ஸ்: ஹௌ டு திங்க் அண்ட் க்ரியேட் லைக் அன் இன்வெண்டர்’ புத்தாக்கங்களின் வரலாற்றை விரித்துரைக்கிறது. பட்டங்கள், பாய்மரப் படகுகள், ஸ்டீரியோ ஸ்கோப்கள், மேலும் மனித வரலாற்றில் நெடுகக் காணப்பட்ட பல பயனுள்ள கருவிகளைக் காட்டிப் புத்தாக்கங்களின் அவசியத்தை அது விளக்குகிறது.  இப்புத்தகம் எல்லா வயதினருக்குமானது என்றாலும், க்ராண்டின் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து தெளிவாவது என்னவென்றால், அவர் இந்தப் புத்தகம் குழந்தைகளுக்கு (குறிப்பாக  ‘மாறுபட்ட புத்திகள்’ என்று அவர் அழைக்கிறபடி உள்ளவர்களுக்கு) தனது வாழ்வைப் புத்தாக்கம் என்பது மாற்றி அமைத்ததைச் சுட்டிக்காட்டி, அவர்களும் புத்தாக்கங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பது எப்படி என்பதை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்.

நான் கொலராடோ மாநிலப் பல்கலையின் ஒலிப்பதிவு நிலையம் ஒன்றிலிருந்து க்ராண்டினுடன் பேசினேன், அந்தப் பல்கலையில் அவர் மிருக அறிவியலில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் என் அனைத்துக் கேள்விகளுக்கும் கூர்மையான நேரடித் தன்மையோடும், தன் பதில்களை முடிக்கையில் இறுக்கமானதொரு மௌனத்தோடும் பதிலளித்தார். ஒரு கட்டத்தில், அவர் பேட்டியை நிறுத்திவிட்டு, என் கேள்விகளின் மூலம் நான் எங்கே செல்ல முயல்கிறேன் என்று கேட்டார். நான், பின்தங்கிவிடாமல் அவரோடு செல்ல முயல்கிறேன் என்று அவருக்குப் பதிலளித்தேன்.

—- ராஸ் ஸிமோனீனி ***

த பிலீவர் பத்திரிகை பேட்டியாளர், ராஸ் ஸிமோனீனி: 

‘புத்தாக்கம்’ என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?[3]

டெம்பிள் க்ராண்டின்: சரி, புதிதான ஒன்றைக் கட்டமைப்பது, அது முற்றிலும், முழுதாகவும் புதியதாக இருக்க வேண்டும். ‘எல்லாப் புத்திகளையும் அழைப்பது’[4] என்ற புத்தகத்தை நான் எழுதும்போது, காப்புரிமை வழங்கும் அலுவலகத்தின் வரையறுப்புப்படி ‘புத்தாக்கம்’ என்பது என்ன என்பதைப் படிக்க வேண்டி வந்தது.  அது புதுமையாகவும் இருக்க வேண்டும், உடனே புலப்படாததாகவும் இருக்க வேண்டும். சமீபத்தில் காப்புரிமை பெற்றவற்றில் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன், அவை இந்த வர்ணனைக்கு ஒத்து வராதவை, ஆனால், அந்த விவரணைதான் புத்தாக்கம் என்பதற்கு மூல விளக்கம்.

பி: நீங்கள் புத்தாக்கம் செய்வதற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

டெ: நான் சிறுமியாக இருந்த போது, எனக்குப் பிடித்த புத்தகம் புகழ் பெற்ற புத்தாக்கக்காரர்களைப் பற்றியதாக இருந்தது. உங்களுக்குத் தெரிந்திருக்கும், பல பொருட்களை உருவாக்குவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் ரொம்பவே சாதுரியம் காட்டினர். தையல் எந்திரத்தைப் பற்றிப் படித்தேன் என்பது நினைவிருக்கிறது, தைக்கும் ஊசி உடைந்து கொண்டே இருப்பதை நிறுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது, அதனால் அவர்கள் ஊசியின் துளையைக் கூர் முனைக்கு அருகில் மாற்றினார்கள். அந்த மாதிரி விஷயங்கள் என்னை மிகவும் வசீகரித்தன. நான் மிகவும் சிறு பிராயத்தில் இருக்கையில், ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், நான் மணிக்கணக்காக தட்டிக் கொட்டி, பறவைகளைப் போன்ற பட்டங்களைச் செய்து பறக்கவிட முயற்சித்தேன். பாரசூட்கள், ஹெலிகாப்டர்கள், மேலும் அது போன்ற பல புதுப் பொருட்களாக அவை இருந்தன. என் தாத்தா என்னோடு சேர்ந்து கொண்டிருந்தார். அவர் விமானங்கள் தாமாகப் பறக்க உதவும் ஆட்டோ பைலட் கருவியைக் கண்டு பிடித்தவர். அதைக் கண்டுபிடிக்க அவர் ஏராளமாக தட்டிக் கொட்டிச் செய்ய வேண்டி இருந்தது! இன்னொரு அறிவியலாளரோடு சேர்ந்து அவர் அந்தக் கருவியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, அதற்கு அவர்கள் மறுபடி மறுபடி எதையெல்லாமோ செய்து அதை வேலை செய்ய வைக்க வேண்டியிருந்தது. அவர் மூன்று அசையாத சுருள் கம்பிகளைக் கண்டு பிடித்தார், அவை காந்த விசையில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டுபிடிக்கும், அது விமானம் ஓட்டுபவருக்கு அந்த விமானம் எந்தத் திசையில் செல்கிறது என்பதைச் சுட்டும். அது எளியதொரு கருத்தாக்கம், பறக்கும் சாதனங்களைத் தயாரிக்கும் நிபுணர்கள் பலர் அதை முற்றிலும் கேணத்தனமான கருத்து என்று நினைத்தனர், ஆனால் அது சரியாக வேலை செய்தது.

பி: தற்கால புத்தாக்கக்காரர்களில் யார் சமூகத்தை உருமாற்றி அமைக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

டெ: உலகளாவிய வலையைக் கண்டுபிடித்தவர். அவர் சாதாரணமாகச் சொன்னார், அது “WWW dot domain name dot com.” மற்றவர் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த நபர். உங்களுடைய பெயர், அளிப்புக் கருவி ஒன்றில் எங்காவது இருந்தால் போதும். இவை மிகச் சுலபமான யோசனைகள், ஆனால் சில நேரம் எளிய யோசனைகள்தாம் கண்டுபிடிக்கக் கடினமானவை. என் கவலை எல்லாம் சமூக ஊடகங்களில் நடப்பவற்றைப் பற்றிதான். பத்து வருடங்களுக்கு முன்பு, கால்நடைகளைப் பற்றிய ஒரு கூட்டத்தில் நான் உரை ஒன்றை நிகழ்த்தினேன், அப்போது நான் சொன்னபடி, சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரிகள் மேலும் தீவிர இடதுசாரிகளின் குரல்களை மிகவும் பெருக்கிக் காட்டுகின்றன. ஒரே வகையானவர்கள், தம்மிடையே பேசிக் கொள்கிறார்கள்.

அதனால்தான் நிகழ்ச்சிகளில் உரையாற்றலை நான் ஏற்கும்போது, நான் சில நேரம் கால்நடைகளைப் பற்றிப் பேசுகிறேன்; சிலவற்றில் தொழில்களைப் பற்றிப் பேசுகிறேன்; சிலவற்றில் மதியிறுக்கம் (ஆடிஸம்) பற்றிப் பேசுகிறேன்; வேறு சிலவற்றில் பலவகைப் புத்திகளைப் பற்றி, குறிப்பாக உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில், ஏனெனில் நான் அத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் போகையில், அங்கு எல்லா விதமான பொறியியலாளர்களையும் பார்க்கிறேன், அவர்களில் அநேகர் மிதமான அளவு மதியிறுக்கம் கொண்டவர்கள் என்பது இன்னும் மருத்துவ ரீதியாக அறியப்படாமல் இருப்பது தெரிகிறது.

பி: அவர்கள் மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுதல் தேவை என்று நினைக்கிறீர்களா? அது உதவுமா?

டெ: என்னிடம் முதுநிலைக் கல்வி பெறும் மாணவர்கள் பயின்றிருக்கிறார்கள், அவர்களில் சிலர் இப்படிச் சோதித்து அறியப்படாத மதியிறுக்க நிலை உள்ளவர்களாக இருந்திருக்கலாம். அவர்களில் ஒருவர் மிக நல்ல வேலை ஒன்றை அடைந்து அதில் நன்கு பணியாற்றுகிறார்.  முதியோர்களுக்கு, சோதனையால் அறிவது, அவர்களுடைய உறவுகளைப் பற்றிய புரிதலைப் பெற உதவக்கூடும். நான் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன், ‘Different… Not Less [Inspiring Stories of Achievement and Successful Employment from Adults with Autism, Asperger’s and ADHD] என்பது தலைப்பு. பதினான்கு பேர் ஆடிஸம் விரிதளத்தில் மிதமான பாதிப்பு உள்ளவர்கள், அவர்கள் வாழ்வில் பிற்காலத்தில்தான் கண்டறியப்பட்டனர், ஏனெனில், அவர்களுடைய திருமண வாழ்விலும், உறவுகளிலும் பல பிரச்சினைகள் எழுந்தன. 

சென்ற வாரத்தில் வயதானவர்கள் இரண்டு பேர் கடிதம் எழுதிச் சொன்னார்கள், “ஆமாம், என் குழந்தைகள் ஆடிஸ விரிதளத்தில் பொருத்தப்படுவோராக அறியப்பட்டபின் நானும் சோதித்ததில் அந்த விரிதளத்தில் பொருந்துகிறேன் என்று தெரிந்து கொண்டேன்.” இருந்தாலும், இந்தத் தாத்தா வாழ்நாள் பூராவும் ஏதோ வேலையில் உள்ளவராகவே இருந்திருக்கிறார், ஏனெனில் பதினோரு வயதிலேயே அவருக்கு செய்தித்தாள் விநியோகம் செய்யும் வேலை கிட்டி இருந்தது. எனவே, இப்போது நான் பெற்றோருக்குச் சொல்கிறேன், இப்படிச் செய்தித்தாள் விநியோகத்துக்கு ஈடாக ஏதாவது புது வேலைகளைக் கண்டு பிடியுங்கள், நாய்களை உலாவ அழைத்துப் போதல், சமூக மையத்தில் வேலைகள், சர்ச்சில் தன்னார்வல வேலைகள் இப்படி. அந்த வகை இளைஞர்கள் ஏதாவது வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், குடும்பத்துக்கு வெளியே ஏதாவது கால நேரப்படி செய்ய வேண்டும், அது ஒரு வேலையாக இருக்க வேண்டும்.

பி: எல்லாருமே ஆடிஸம் விரிதளத்தில் எங்காவது இருப்போம் என்று நினைக்கிறீர்களா?

டெ: என்னவென்றால், ஆடிஸம் என்பது ஒரு தொடர்ச்சியான நீள் கோடு. “பிறரோடு பழகுவதில் சங்கடப்படுபவர்” எப்போது சோதிக்கப்பட வேண்டியவராகிறார், அதுதான் கேள்வி? நாம் வேறு சிலரைப் பார்க்கிறோம், இவர்கள் ஏகப்பட்ட சமூக உறவுகள் கொண்டிருக்கிறார்கள், இவர்கள் மறு கோடியில் உள்ளவர்கள். ஐன்ஸ்டைன் இன்று நிச்சயமாக ஆடிஸம் உள்ளவராகவே அறியப்படுவார். மூன்று வயது வரை அவருக்குப் பேச்சே வரவில்லை. புகழ் பெற்ற இசைக் கலைஞர்களிலும், அறிவியலாளர்களிலும் பல பேர் இன்று குழந்தைகளாக இருந்தால் ஆடிஸம் பாதித்தவர்களாகவே காணப்படுவார்கள். நான் சிலிகான் பள்ளத்தாக்குக்குப் போயிருக்கிறேன். அங்கே உள்ள ப்ரொக்ராமர்களில் பாதிப் பேராவது இந்த விரிதளத்தில் இருப்பவர்கள்தான், அவர்களுக்கு சமூக உறவுகளைப் பராமரிக்கும் திறமைகள் அநேகமாக இல்லை.

பி: நீங்கள் அடிக்கடி ‘பல புத்திகளை’ அங்கீகரிப்பது அவசியம் என்று பேசி வருகிறீர்கள். ஆடிஸம் கொண்ட புத்திகளைத் தவிர வேறெந்த வகைப் புத்திகளை நீங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள்?

டெ: எந்திரங்களைக் கையாள்வதில் மேதையாக உள்ள இளைஞர் ஒருவருக்கு, சரியான வாய்ப்புகளைக் கொடுத்தால் கணினிகளுக்கு இயங்குதிட்டம் வகுப்பதிலும் மேதையாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றிப் பேசுகிறேன். அந்த இளைஞர் இயங்குதிட்டம் வரைவது பற்றி ஏதும் அறியாமல் இருந்தால் எப்படி அதைக் கற்றுக் கொள்ளப் போகிறார்? இப்போது விடியோ விளையாட்டுகளைப் பற்றி நான் என்ன தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றால் அதைப் பயிலுவோர் இயங்குதிட்டம் வரைவதைக் கற்பதில்லை என்று பார்த்தேன். முன்பெல்லாம் விடியோ விளையாட்டை விளையாடியவர்கள், இயங்குதிட்டம் வரைவதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் அன்று விளையாட்டுகள் அத்தனை முன்னேறாதவையாக இருந்தன. ஆனால் இன்று அம்மாக்கள் என்னிடம் வந்து சொல்கிறார்கள், “அவனுக்கு இருபத்தி இரண்டு வயதாகி விட்டது. அவனை கீழ்த்தள அறையிலிருந்து கிளப்ப என்னால் முடியவில்லை. அவனுக்கு விடியோ விளையாட்டு இயங்குதிட்டம் வரைவதில் ஒன்றும் பிரமாத வேலை வாய்ப்பு இல்லை.”

பி: ஆனால், உலகிலேயே பிரும்மாண்டமான ஊடகத் தொழில்களில் அது ஒன்றாயிற்றே?

டெ: உலகத் தேக நல அமைப்பு சமீபத்தில் விடியோ விளையாட்டு மனச்சிக்கல் என்பதைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது வைனையோ அல்லது ஆல்கஹாலையோ குடிப்பதை ஒத்தது. மிக மிதமான நுகர்வு இருக்கையில் சரியாக இருக்கும். எப்போதோ ஒரு தடவை ஒரு கோப்பை வைனையோ அல்லது பியரையோ அருந்துபவர்கள் உலகில் பலர் உண்டு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு, அது ஒரு போதை அடிமைத்தனமாகிவிடும்.

பி: நீங்கள் விளையாடுவதுண்டா?

டெ: இல்லை. நான் அடிமைப்பட்டு விடுவேன் என்று அச்சப்படுகிறேன்.

பி: வைனைப் பொருத்து எப்படி?

டெ: எனக்கு அதன் தாக்கம் பிடிப்பதில்லை. ஒரு வாய் அருந்தி அதன் ருசியை மட்டும் அறிவது எனக்குப் போதுமானது.

பி: புத்தாக்கங்களுக்கான யோசனைகளைப் பற்றி நீங்கள் எவ்வளவு சிந்திக்கிறீர்கள்?

டெ: அதைக் கேட்டால், தருணத்தைப் பொறுத்தது என்பேன். நான் வார்த்தைகளால் சிந்திப்பவள் இல்லை. ’யோசனை (ஐடியா)’ என்று நீங்கள் சொல்கையில், எனக்கு ‘ஐகியா’ கடையின் படம் மனதில் எழுந்தது. அது பொருத்தமான தொடர்பு அன்று, ஆனால், சொல் ஒலிப்பில் ஒத்திருக்கிறது. நீங்க பார்த்தீங்களா, நான் வார்த்தைகளால் (நேராக) யோசிப்பவள் அல்லள்.

பி: ஐடியா என்பதற்கும் ஐகியா என்பதற்கும் உள்ள தொடர்பு வலுவானதுதானே.

டெ: ‘ஐகியா’ என்ற சொல் என் மனதில் எழுந்ததற்குக் காரணம் என்னவென்று நான் யோசிக்கையில் என் நினைவுக்கு வந்தது, ‘ஐகியா’ நிறுவனத்தின் தலைவர் எனது ஸ்லைட் படக்காட்சி ஒன்றில் காட்டப்படுகிறார், ஏனெனில் அவர் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம் (டிஸ்லெக்ஸியா)’ என்பதால் பாதிக்கப்பட்டவர். கவனக் குறைவும் மிகை நடவடிக்கையும் ஒருங்கே அமைவதாலோ, எழுத்துக் கோர்வைக் குழப்பத்தாலோ பாதிக்கப்பட்டாலும் புகழ் பெற்றுள்ளவர்களை உதாரணங்களாகக் கொடுக்க விரும்புபவள் நான்.

இந்த இளைஞர்களுக்கு, அவர்களது குறைபாடுகள் தடையாக இல்லாமல், அவர்கள் நன்கு செயல்படக்கூடிய ஏதாவது விஷயங்களைக் கண்டுபிடிக்க நாம் வசதி செய்ய வேண்டும். அதைத்தான் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்னார். நான் சிறு வயதினளாக இருக்கையில், ஓவியக் கலையில் என் ஈடுபாடு எப்போதும் உற்சாகப்படுத்தப்பட்டது, ஏராளமான பொருட்களின் படங்களை வரைய நான் ஊக்குவிக்கப்பட்டேன். குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ அவற்றை அவர்கள் மேலும் விரிவுபடுத்திப் பயன்படுத்த நாம் வழி செய்ய வேண்டும். அவனுக்குக் கார்கள் பிடிக்கிறதா, அவனுக்குக் கார்கள் எப்படி வேலை செய்கின்றன என்று நாம் கற்றுக் கொடுப்போம். கார்கள் எப்படி எல்லாம் உருவாகின என்ற வரலாற்றைக் கற்றுக் கொடுப்போம். வேறு விதமாகச் சொன்னால், கார்களை, அவனுடைய புத்தியுடனான தொடர்புக்கான சாதனம் ஒன்றாகக் கொண்டு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

பி: நீங்கள் இன்னும் கலைப் படைப்புகளைச் செய்கிறீர்களா?

டெ: இல்லை, இப்போது நான் எழுதுவதையும், உரையாற்றுவதையும்தான் பெரும்பாலும் செய்கிறேன்.

பி: படங்களில் இத்தனை ஊன்றி இருக்கும் நீங்கள், இப்படி வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறீர்களே?

டெ: ஆமாம், ஆனால் நான் எப்போதுமே வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருக்கிறேன். எழுபதுகளில், ஆண்களின் தொழில் உலகாக இருந்த துறை ஒன்றில், பெண்ணான நான் என் வாழ்வைத் துவங்குவது அத்தனை சுலபமாக இல்லை, தெரியுமா. என்னை எது உந்தியது என்றால், என் திறமையை நிரூபிக்க என்னாலும் அதைச் செய்ய முடியும் என்று காட்டவேண்டும் என்ற எண்ணம். நான் ஒன்றும் முட்டாள்தனமாக இதைச் செய்ய வரவில்லை என்று நிரூபிக்க விரும்பினேன். நான் மாமிசம் தயாரிக்கும் எல்லாப் பெரிய நிறுவனங்களிலும் வேலை செய்திருக்கிறேன். பல பெரிய நிறுவனங்களுடைய தலைமை நிர்வாகக் குழுக்களில் பங்கெடுத்திருக்கிறேன். 

ஆண்கள் சிலர், சில நேரங்களில் எடுக்கும் தவறான முடிவுகளால் பெரும் பொருள் நஷ்டம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படுவதையும், ஆனாலும் அந்த ஆண்கள் தம் வேலையைப், பதவியை இழக்காமல் இருப்பதையும் நாம் இன்னமும் பார்க்க முடியும், இதைக் கவனித்தால் நமக்கு இப்போது மனச் சோர்வுதான் கிட்டும்.

பி: அதே நேரம் ஒரு பெண் இப்படிச் செய்திருந்தால்?

டெ: ஓ, பெண் ஒருத்தி இப்படி ஏதும் செய்தால் உடனே வேலையை விட்டு அனுப்பப்பட்டிருப்பாள். நான் வேலையில் மிக மிகக் கருக்கைக் காட்ட வேண்டி இருந்தது, தெரியுமா.

பி: ஒப்பீட்டில் இப்போது உங்களுக்கும், பிற பெண்களுக்கும் நிலைமை சுலபமாகி இருப்பதாக நினைக்கிறீர்களா?

டெ: இப்போது மிகவும் சுலபமாகி இருக்கிறது. இன்றைய – சரி, உதாரணமாக மாட்டு மாமிசத் தொழிலில், இப்போது பல பெண்கள் இருக்கிறார்கள். நான் துவங்கும்போது இந்தத் துறையில் கால்நடைகளுடன் கூடங்களில் வேலை செய்ய ஒரு பெண்கூட இருக்கவில்லை. அரிஜோனா மாநிலத்தில் முதலில் வேலை செய்யத் துவங்கிய பெண்களில் நானும் ஒருத்தி. இப்போது பல பெண்கள் அதில் இருக்கிறார்கள்.

பி: இந்தத் தொழிலைப் பெண்கள் அணுகும் விதம் மிகவும் மாறுபட்டது என்று நினைக்கிறீர்களா?

டெ: என்னைத் தேடி வருபவர்களும், மிருக நலம் பற்றிக் கற்க விரும்புவோரும், எனக்கு மின்னஞ்சல் அனுப்புவோரும் என்று பார்த்தால் அவர்கள் அநேகமாகப் பெண்களாகவே இருக்கிறார்கள்.

பி: காட்சி வழிச் சிந்தனையாளரான நீங்கள் வலையுலகுடன் எந்த வித உறவு கொள்கிறீர்கள்?

டெ: முக்கியச் சொற்களைக் கொண்டு கோப்பு ஒன்றைத் தேடி எடுப்பதைப்போல, என் காட்சி வழி நினைவுச் சேமிப்பில் தேட முடியும். நான் தங்கிய அனைத்து விடுதி அறைகளும் எனக்கு நினைவில் இல்லை, ஆனால் முழுதுமே மோசமானவை எல்லாவற்றையும் நினைவு வைத்திருக்கிறேன், விபரீதமாக இருந்தவை எல்லாம் நினைவில் உள்ளன. ஆனால் முக்கியச் சொற்களை என் மனதில் பொருத்தினால், என்னால் பிம்பங்களை வெளியே எடுக்க முடியும்.

ஆகவே வலையில் விஷயங்களைத் தேடுவது எனக்கு எளிதாக உள்ளது. தட்டச்சுப் பலகை மூலம் தேடுவதில், பலருக்கு அத்தனை படைப்பூக்கம் இருப்பதில்லை. என் மாணவர்களிடம் நான் பேசும்போது, ‘கால்நடை’ (cattle) என்ற சொல்லில் ஐந்து முக்கியச் சொற்கள் உள்ளன என்பதை நினைவு வைத்துக் கொள்ளச் சொல்கிறேன் – பசுக்கள், காளைகள், கன்றுகள், கறவை மாடுகள், மலட்டுக் காளைகள். (cows, bulls, calves, heifers and steers.) தேடும்போது இந்த ஐந்து சொற்களையும் கொண்டு தனித்தனியே தேடினால்தான் தேவையான எல்லா ஆய்வுக் கட்டுரைகளும் கிட்டும், இல்லையேல் சில கட்டுரைகள் கிடைக்காமல் போகும். ஆக, நான் வலையில் செலவழிக்கும் நேரத்தில் அநேகமாக அறிவியல் தகவலைத்தான் தேடுகிறேன்.

நான் அடித்தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று யோசிப்பவள், ஆகவே வலையுலகும் அப்படித்தான் வேலை செய்கிறது என்று அறிந்தபோது நான் திகைத்துப் போனேன். நான் மேல் நிலையில் அரூபமான கோட்பாடுகளை (abstract theory) உருவாக்குவதில்லை. எனக்குக் கிட்டும் தகவல்களை வைத்துக் கோட்பாடுகளை நான் உருவாக்கிக் கொள்கிறேன், அந்தத் தகவல்களை நான் தக்க பிரிவுகளில் போட்டு வைத்துக் கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு இப்படித்தான் வேலை செய்கிறது என்று அறிந்தேன், அது எனக்கு திக்பிரமிப்பூட்டுவதாக இருந்த தகவல்.

பி: நீங்கள் எழுதும்போது குறிப்பான, தனிப்பட்ட தகவல், விவரங்களிலிருந்து துவங்குவீர்களா?

டெ: என்னவென்றால், நான் தொழில் சம்பந்தப்பட்ட எழுத்தைத்தான் நிறைய எழுதுகிறேன், உதாரணமாகக் கால்நடைகளைக் கையாள்வது பற்றி இருக்கும். நான் அதைப் பார்க்கிறேன், கால்நடைகளை எப்படி இடம் மாற்றுவது என்பதைப் பற்றி எழுதுகிறேன், அதைக் காட்டச் சித்திரங்கள் வரைகிறேன். ஆனால் எழுதும்போது நான் அதை எல்லாம் மனதில் பார்க்கிறேன். அது அருவமாக இல்லை. உண்மை நிலை என்னவென்றால், நான் அதை எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் பொருத்திப் பார்க்கிறேன். தெரிகிறதா – அது சற்றும் அரூபமானதே அன்று. அந்த மாட்டுப் பண்ணையின் பெயரைக்கூட நான் சொல்கிறேன், அல்லது தீவனப் பண்ணையைப் பெயர் சொல்லிக் காட்டுகிறேன். என்னை மக்கள் கேட்பதுண்டு, “கால்நடைத் தொழிலில் ஆக்க பூர்வமான மாறுதலைச் செய்ய எது உங்களுக்கு உதவியது?” பாருங்கள், நான் ஆரம்பித்தபோது, நான் நிறைய நிறைய எழுதினேன். செயல்திட்டம் ஒன்றை வரைவு செய்வேன், பின்னர் அதைப் பற்றி எழுதுவேன்.

பி: படிப்பது பற்றி என்ன சொல்வீர்கள்? அது அநேகமாகத் தொழில் சம்பந்தப்பட்டதா?

டெ: இப்போது நான் சில அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆய்வு முறைகளில் வேறுபாடுகள் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் தாம் என்ன புள்ளியியல் மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வலு அன்று. வேறொரு சஞ்சிகை ஆசிரியர் அதைப் பற்றி ஆயட்டும் என்று விட்டுவிடப் போகிறேன். ஆனால் நான் ஆய்வு முறைகளைப் பற்றிப் பார்க்கவிருக்கிறேன். எந்த வகைச் சோதனையை அவர்கள் நிஜத்தில் செய்தனர்? சஞ்சிகைகளுக்குக் கட்டுரைகளை மறு பார்வை பார்ப்பதைச் செய்தபோது, நான் சொல்லி இருக்கிறேன், “கொஞ்சம் பொறுங்கள்: எந்த வகையான பன்றிகளைப் பயன்படுத்திச் சோதனை செய்தீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லையே. அது விளைவுகளை மாற்றக்கூடும் இல்லையா.” அதனால் நான் சோதனை முறைகளில் எல்லா விவரங்களையும் சோதிக்கிறேன், பல வகையான பொருட்களை, விஷயங்களைப் பற்றிய பல வகை ஆய்வுத் திட்டங்களில் சோதனை முறைகளில் சிறு மாறுதல்களைச் செய்தால்கூட விளைவுகள் முற்றிலும் மாறக் கூடியவை.

ஸையன்ஸ் அல்லது நேச்சர் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வந்தது, உயிரியல் – மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை, அந்தச் சோதனைகளை மறுபடி செய்து பார்க்கையில், திரும்பப் பெற முடியாதது என்பது ஒரு பிரச்சனையாகி இருப்பதைப் பற்றியது அந்தக் கட்டுரை – உயிரணுக்களை ஆட்டுவதற்கும், அவற்றை மெல்ல சுழற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு – சில புற்று நோய் பற்றிய பரிசோதனைகளின் விளைவுகளை முழுதுமாக மாற்றி இருந்ததாம். எனவே ஆய்வு முறைகள் பற்றிய விவரங்கள் மிக அவசியமானவை.

பி: நீங்கள் நாவல்கள் படிப்பதுண்டா?

டெ: நாவல்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். மர்ம நாவல்கள் பிடிக்காது, ஏனெனில் அவற்றில் மிகையாகத் திருகல்கள் கொண்ட கதையமைப்பு இருக்கும். வரிசையாகச் சொல்லப்படுவதைக் கையாள்வதில் எனக்குத் திறமை போதாது. எங்கோ தொலைவில் உள்ள, சுவாரசியமான இடங்களைப் பற்றி விவரிப்பவற்றை எனக்குப் பிடிக்கும், அப்போது அவற்றைப் படிக்கையில் என்னால் மனதில் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பது போல உணர முடியும். வேறொரு கிரகத்தை, அல்லது வருங்காலத் தொழில் நுட்பத்தை விவரிக்கும் அறிவியல் நவீனங்கள் இதற்குப் பொருத்தம். அப்போது அவற்றை என்னால் பார்க்க முடியும்.

பி: நாவல்கள் கவித்துவத்தோடு எழுதப்பட முடியும்?

டெ: சில நாள்கள் முன்பு புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது எனக்குத் தோன்றியது, இதெல்லாம் என்ன? அலங்காரமான வருணனைகளை வைத்துக் கொண்டு ரொம்ப அலப்பலாக ஆக்கி இருந்தார்கள் அந்தப் புத்தகத்தில்.

பி: சரிதான். அந்த மாதிரி ‘கலா பூர்வமான’ எழுத்துக்கு நீங்கள் எப்படி மறுவினை செய்வீர்கள் என்று நான் யோசித்தேன்.

டெ: என்ன, எனக்குப் பல வகையான விதங்களில் மனிதர் சிந்திப்பது பற்றி உண்மையிலேயே மிகவும் ஈடுபாடு இருக்கிறது, நமக்குப் பலவகை புத்திகள் சேர்ந்து இயங்குவது அவசியம். காட்சி வழி யோசிப்பவர் சில நேரம் ஏதாவது ஒன்றை எப்படிக் கட்டமைக்கலாம் என்று யோசித்துவிட முடியும், ஆனால் பொறியியலாளர்கள்தான் அதைச் செயல்படுத்துவது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நடந்ததற்கு ஐ ஃபோன் ஓர் உதாரணம்.

பி: அறிவியல் நவீனத்தைப் பற்றிச் சிறிது முன்னால் பேசினீர்கள், எனக்கு எப்போதுமே அது புத்தாக்கங்களுக்கு உகந்த ஓரிடமாகத் தெரிந்திருக்கிறது. அறிவியலில் உடனே ஏற்கப்படமாட்டாத பல யோசனைகளுக்கு அது புகலிடமாக இருக்கிறது.

டெ: ஆர்தர் சி. க்ளார்க் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் பற்றி யோசித்து எழுதியபோது, அப்படி ஒரு பொருளைக் கட்டமைக்கும் யோசனையே எங்கும் இருக்கவில்லை, அது பின்னும் பல பத்தாண்டுகளில்கூட சாத்தியமாகவில்லை. அடுத்ததாக, டாப்லெட் கணினியை எடுத்துக் கொள்வோம். காலத்தில் பின்னே போய், 1968 இல் வெளியான ’2001: அ ஸ்பேஸ் ஆடிஸி’ திரைப்படத்தில், ஓரிடத்தில் மேஜையில் அந்தக் கணினிபோல ஒன்று இருக்கும். அந்நாளில் இதை எப்படிச் செய்தார்கள் என்று நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 16 மில்லி மீட்டர் காமிரா ஒன்றை அந்த மேஜையின் கீழே வைத்து அந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அது டாப்லெட் கணினியை முன்கூட்டியே நமக்கு உருவாகக் காட்டி இருக்கிறது.

பி: செவ்விலக்கியப் புத்தகங்கள் என்பன உங்களுக்கு எவை?

டெ: சரி, நான் சிறுமியாக இருக்கையில் ‘த ஒண்டர்ஃபுல் விஸார்ட் ஆஃப் ஆஸ்’ புத்தகத்தை நான் மிக விரும்பினேன். இதைக் கவனித்தால், அந்தப் புத்தகத்துக்கான சித்திரங்களும், அதன் திரைப்படமும்தான். அந்தப் படத்தை நான் இருபது தடவைகளாவது பார்த்திருப்பேன். அதனால் எனக்கு அந்தப் படங்கள் நினைவிருக்கின்றன.

பி:மிருகங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் சொற்களை விட்டு விலகி, படங்கள் மூலம் அவற்றை மேலாகப் புரிந்து கொள்ளலாம் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறீர்கள்.

டெ: ஒரு மிருகத்தின் நினைவு, மற்றும் அந்த மிருகம் செய்யும் எல்லாமே உணர்வுகள் வழியே நடப்பன: படங்கள், ஒலிகள், முகர்வுகள், தொடுகை உணர்வுகள் போன்றன அவை. இது எனக்கு ஆலிவர் ஸாக்சின் கட்டுரை ஒன்றை நினைவுபடுத்துகிறது, அதில் ஒருவர் ஏதோ ஒரு மருந்தை உட்கொண்டதால் அவருடைய முகர்வுணர்வு தீவிரமாகும். நாய்கள், மோப்பங்களால் ஆன உலகில் எப்படி உணரும் என்பதைத் தன்னால் கற்பனை செய்ய முடிந்தது போல இருந்ததென்று அவர் அப்போது சொல்லி இருந்தார்.

பி: நீங்கள் ஒலிகளைப் பற்றியும், அவற்றோடு மிருகங்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் நிறையப் பேசி இருக்கிறீர்கள். இறைச்சிக் கொட்டில்களுக்கு நிர்மாணத் திட்டம் வரையும்போது ஒலிகளை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறீர்களா?

டெ: ஆம், இறைச்சிக் கூடங்களுக்கு நான் மதிப்பெண் முறை ஒன்றை உருவாக்கி இருந்தேன். கால்நடைகள் பெரிதாகக் கூக்குரலிட்டால், அவற்றை நீங்கள் சரியாகக் கையாளவில்லை என்று பொருள். அதனால் மிருகக் குரல்களை வைத்து மோசமான பிரச்சினைகளுக்கு மதிப்புப் போடும் முறையை உருவாக்கினேன். அக்கூடங்களில், ஏதாவது மோசமாக நடந்து கொண்டிருந்தால், மின்சார அதிர்ச்சி கொடுக்கும் குச்சிகளால் மாடுகளை விரட்டுவது அதிகமாக இருந்தால், அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தும் கருவிகள் மிகவும் நெருக்கினால், அல்லது கதவுகளை அவற்றுக்கு முன்னும் பின்னும் அறைந்து சாத்தினால், அக்கூடத்தில் குரலெழும்புவதன் மதிப்பெண் பிராணிகளின் குரலாலேயே 20 அல்லது 30 சதவீதம் அதிகரிக்கும். அந்த வழக்கங்களை நான் நிறுத்த முடிந்தபோது, அதே ஒலியெழும்புவதின் மதிப்பெண் 5 சதவீதமாகக் குறைந்துவிடும். அப்போது அங்கு பயன்படும் முறை நல்லது என்றாகும்.

பி: இறைச்சிக் கூடத்தில் அம்மிருகங்களைச் சூழ்ந்திருக்கும் இதர ஒலிகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்?

டெ: நான் என்ன கண்டேன் என்றால், கால்நடைகளுக்கு பார்வை வழியேதான் அதிகமாகக் கவனம் சிதற வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்பதை. மிக எளிய விஷயங்கள்கூட கால்நடை ஒன்றை அசைய மறுக்கச் செய்யும். உதாரணமாகக் கை துடைக்க உதவும் காகிதச் சுருள் பிடிமானத்திலிருந்து ஒரு துண்டுக் காகிதம் தொங்கி கால்நடையின் முகத்தருகே இருந்தால் அந்த மிருகம் முன்னே செல்ல மறுக்கக்கூடும். அல்லது யாராவது அந்த மிருகத்தின் முன்னே குறுக்கே நடந்து போனாலும் இப்படி ஆகும். அல்லது அங்கு தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கும் ஓர் உலோகத் துண்டு, தரையில் சிந்திய நீரில் ஒளிபட்டு அது சிதறலாக ஆடினால் என்று பல காரணங்கள் இருக்கும். நான் அங்கு இருந்த ஒளியூட்டும் முறையை மாற்றி ஒளிப் பிரதிபலிப்புகளை அகற்றிய பிறகு, கால்நடைகள் வெட்ட இட்டுச் செல்லும் குழாய் வரை நேரே தாமாக நடந்து போயின.

பி: இந்த கவனச் சிதறல்களுக்குத் தூண்டல்கள் வேறேதோ நினைவுகளோடு தொடர்புள்ளனவா?

டெ: இங்கே பார்த்தால், நீங்கள் இதை ஓர் அருவக் கோட்பாட்டுக்கு எடுத்துப் போக முயல்கிறீர்கள். இங்கே தொடர்பு என்பது: நீங்கள் ஏதோ ஒன்றை என்னிடம் சொல்கிறீர்கள், அது கூகிளில் ஒரு முக்கியச் சொல்போல. நீங்கள் கூகிள் பிம்பங்களைப் பயன்படுத்துகிறீர்கள். முக்கியச் சொற்களை உள்ளிடுகிறீர்கள், உங்களுக்குப் படங்கள் கிட்டுகின்றன. பிறகு, சில நேரம் அது விஷயத்தைத் தாண்டி வேறெங்கோ செல்கிறது. அதைத்தான் நான் ‘தொடர்புபடுத்தும்’ என்ற சொல்லால் வருணிக்கிறேன்.

பி: செவ்விசை மிருகங்களை அமைதிப்படுத்தச் சிறந்ததா, அப்படிச் சொல்கிறார்களே?

டெ: செவ்விசை என்று நீங்கள் சொல்கையில்,   ‘2001: அ ஸ்பேஸ் ஆடிஸி’ படத்திலிருந்து அந்தக் காட்சியை நான் பார்க்கிறேன். ஒரு பான் ஆம் விண்வெளி ஷட்டில், ஒரு விண்வெளி நிலையத்தோடு இணையும், அப்போது ‘த ப்ளூ டான்யூப்’ என்ற இசைக் கோர்வையை இசைப்பார்கள். ‘த ப்ளூ டான்யூப்’ என் மனதில் என்றென்றைக்குமாக அந்த விண்வெளி ஷட்டில் இணையும் காட்சியோடு ஒன்றி இருக்கிறது.

பி: அதுதான் தொடர்புபடுத்தல்.

டெ: என் புத்தியில் எல்லாமே தொடர்புபடுத்தல்தான், சில சமயம் நான் படங்களைக் காண்பேன், வேறு சமயங்களில் இசை மூலம் தொடர்புபடுத்தல் நடக்கும். உதாரணமாக, நான் காரோட்டி வரும்போது ஒரு பழைய நைந்து போன மர கார் ஷெட்டைப் பார்த்தேன். உடனே நான் ‘கோ க்ரானி! கோ க்ரானி, கோ! பார்க்ட் இன் அ ரிகெட் ஓல்ட் கராஜ் ஈஸ் அ ப்ராண்ட் நியூ ஷைனி ரெட் சூப்பர் ஸ்டாக் டாட்ஜ்‘ [  “த லிட்டில் ஓல்ட் லேடி ஃப்ரம் பாஸடீனா”  என்ற பீச் பாய்ஸ் பாடலிலிருந்து வரிகள்] என்ற பாட்டைக் கேட்க ஆரம்பித்து விட்டேன். (அந்தப் பாட்டு வரிகளைப் பாடுகிறார்.)

அந்த கார் ஷெட், அந்தக் காருக்கு மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

பி: முன்பு, நீங்கள் குரலின் தொனியால் நுட்பமாகப் பாதிக்கப்படுகிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறீர்கள்.

டெ: குரல் தொனி என்பது என்னால் புரிந்து கொள்ளப்படக்கூடிய சில சமூகச் சுட்டல்களுள் ஒன்று. என் வேலையைப் பொருத்து என் வாடிக்கையாளருக்கு ஏதோ மனக்குறை இருக்கிறது என்று நான் கவலையில் இருந்தால், அவர்களை அழைத்துப் பேசிவிடுவேன், அவர்களின் குரலில் ஏதும் குறை சொல்லும் தொனி இருக்கிறதா என்று கவனிப்பேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, இல்லையா என்று என்னால் சொல்ல முடியும்.

பி: உங்களுடைய உணர்வுத் தூண்டுதல்கள் சிலவற்றைக் குறைத்துக் கொள்ள நீங்கள் முயன்று வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

டெ: ஆ, இப்போது பிறர் என்னை அணைப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிகிறது, என்னிடம் ஓர் இறுக்கிப் பிடிக்கும் எந்திரம் உண்டு, அதைப் பயன்படுத்தி என் உணர்தல் திறனைக் குறைத்துக் கொள்கிறேன். உணர்வுத் தூண்டுதல்களைக் குறைத்துக் கொள்ள ஒரு சிகிச்சை முறை இப்போது இருக்கிறது. ஒரு குழந்தைக்குத் தூண்டுதல் மீது ஏதும் கட்டுப்பாட்டைச் செலுத்த முடிந்தால், அந்த வகைத் தூண்டுதலை அக்குழந்தையால் பொறுத்துக் கொள்வதில் பெரும் முன்னேற்றம் இருக்கும். நான் அந்த இறுக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தும்போது, எனக்கு அதன் மீது கட்டுப்பாடு இருக்கிறது. ஒரு குழந்தைக்கு வாக்குவம் க்ளீனரைப் பார்த்துப் பயம் இருந்தால், அந்தக் குழந்தையை அந்தக் க்ளீனர் எந்திரத்தோடு விளையாட விடவேண்டும். அந்தப் பையனோ, பெண்ணோ அந்த எந்திரத்தை ஓடவிட்டு, நிறுத்தி மறுபடி மறுபடி விளையாடினால், அதன் மீது தனக்குக் கட்டுப்பாடு இருப்பதாக உணர்வார்கள். [அச்சப்படுவது குறையும்.]

ஓர் ஆய்வுக் கட்டுரை இருக்கிறது, அது நிஜமாகவே சிறப்பான கட்டுரை, “என்வைரோன்மெண்டல் என்ரிச்மெண்ட் ஆஸ் ஆன் எஃபெக்டிவ் ட்ரீட்மெண்ட் ஃபார் ஆடிஸம்” என்பது அதன் தலைப்பு. இது வேறு சில சிகிச்சைகளோடு சேர்ந்துச் செய்யப்படும் சிகிச்சை. இதில் என்ன செய்கிறோம் என்றால், ஒரே நேரம் இரண்டு புலன்களைத் தூண்டுவோம், ஒருக்கால் செவ்விசையைக் கேட்டுக் கொண்டே, வாசனை சிகிச்சைக்காக வாசனை ஒன்றை முகர்வோம். நாம் தொடர்ந்து இந்த ஜோடி புலன் தூண்டல்களையும், புலன்களின் இணையையும் மாற்றியபடி இருப்போம். இரண்டு புலன்களில் ஒன்று மட்டும் எப்போதும் மிகப் பண்டைக் காலத்திலிருந்து நம்மிடம் உள்ளதாக இருக்கும், தொடுகை, முகர்தல் அல்லது சமநிலையில் இருப்பது என்று. நாம் எப்போதுமே தூண்டப்படும் புலன்களின் இணையில் ஒன்றை மாற்றியபடி இருப்போம், சோதனையில் உள்ளவர்களைக் கண்காணிக்கும் உளநிலைச் சோதனையாளர்கள் எதை மாற்றினோம் என்பதை அறியாமல் வைக்கப்பட்டிருப்பார்கள். அப்போது அந்தச் சிகிச்சை வேலை செய்வதாகத் தெரிகிறது. இவை சாதாரணமாக வீட்டிலேயே கிட்டும் பொருட்கள், வசதிகளைக் கொண்டு செய்யப்படும் பதினைந்து நிமிட சிகிச்சைகள், ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் செய்யப்படுவன என்பதால் மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் இருப்பவர்களால்கூட இவற்றை மேற்கொள்ள முடியும்.

பி: வேறு உணர்புலன்களை தீவிரமாக உணரும் நிலையிலிருந்து குறைக்க நீங்களே முயல நேர்ந்ததா?

டெ: காட்சி மூலம் தூண்டப்படுவது ஒருபோதும் எனக்குப் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் வேறு சில நபர்களுக்கு, காட்சி வழித் தூண்டுதல்கள் பிரச்சினையாக இருக்கலாம் – குறிப்பாக ஒளியிலும் இருட்டிலும் வலுவான வேறுபாடுகள் கொண்ட கோடுகள், கட்டங்கள் ஆகியன மிகவும் கடுமையான பாதிப்பைக் கொடுக்கலாம். வேறு சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாகத் தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கிவிடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன். ஆனால் ஐந்து மாணவர்கள் தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தோற்று வெளியேற்றப்படாமல் தடுக்க அவர்களிடம் இந்த மாற்று நிறக் காகிதம் பற்றிச் சொன்னது உதவியது.

கால்நடை வியாபாரத்தில் மிக முக்கியமான பதவியில் இருக்கும் ஒரு நபரை எனக்குத் தெரியும், அவர் தன் எழுத்துக் கோர்வைக் குழப்பத்தை அகற்ற, ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவிட்டிருக்கிறார். இப்போது அவர் தன் வியாபாரத்தில் லாவெண்டர் நிறக் காகிதங்களைப் பயன்படுத்துகிறார், பிரச்சினை தீர்ந்தது, அவர் இதை மிக மெச்சுகிறார். இது எல்லாருக்கும் வேலை செய்யாது, ஆனால் யாருக்காவது இந்த டிஸ்லெக்சியா இருந்து, அவர்கள் எழுத்துகள் குலுங்குவது போல உணர்கிறார்கள் என்றால், அவர்களே எஸ்கலேட்டர்களைப் பார்த்து அச்சப்படுபவர்கள் என்றால் – அவர்களால் எப்படி அதில் காலெடுத்து வைப்பது, எப்படி அதிலிருந்து இறங்குவது என்பதை உணர முடிவதில்லை – மேலும், அவர்கள் பழைய பாணி குழல் விளக்குகள் எரிகையில் ஒளி விட்டு விட்டு அதிர்வதையே பார்க்கிறார்கள் என்றால் (இவை இப்போது புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன) இந்த மாதிரி நபர்களுக்கு மாற்று வண்ணக் காகிதங்களில் அச்சடிப்பது நிஜமாகவே உதவும்.

 பி: எல்லா மனிதர்களும் இசை, கணிதம் அல்லது சொற்கள் வழி யோசிப்பவர்கள் என்று நினைக்கிறீர்களா?

டெ: ஒரு நபர் ஆடிஸம், டிஸ்லெக்ஸியா, கவனக் குறை மிகைச் செயல் சீர்கேடு ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டவர் என்று கவனிக்கப்பட்டிருந்தால், அவரிடம் இந்தத் திறன்களில் சீரற்ற நிலை இருக்கும். ஒன்றில் மிகவும் திறனும் வேறொன்றில் படு மோசமாகவும் இருக்கும் நிலை நிலவும். நான் அல்ஜீப்ராவில் மிக மோசமாக இருந்தேன். அது எனக்குச் சற்றும் அர்த்தமாகவில்லை. நான் பொருட்களைக் காட்சி ரூபமாக அறிபவள். இன்னொரு விதமான சிந்தனையாளர் பாணிகளைக் கவனிப்பவர். இவர்கள்தான் உங்கள் கணிதவியலாளர்கள், உங்கள் பொறியியலாளர்கள், உங்கள் கணினிச் செயல்நிரல் எழுதுவோர். இவர்கள் ஒழுங்குடைய பாணிகளில் சிந்திக்கிறவர்கள். வேறு சிலர் முழுதுமே சொற்களால்தான் சிந்திக்கிறார்கள், இவர்களை நான் வானொலி அமைப்புகளில் நிறையப் பார்க்கிறேன். ஒரு வானொலி நிலையக்காரர் என்னிடம் சொன்னார், “நான் வானொலிக்கு வந்ததற்குக் காரணம், எனக்கு தொலைக்காட்சி வெறுப்பாக இருந்தது, எனக்குப் படங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று புரியவில்லை.”

பி: நீங்கள் படங்கள் வழியே சிந்திப்பவர்களோடு பல பொது அம்சங்கள் உங்களிடம் இருப்பதாக உணர்கிறீர்களா?

டெ: மற்ற வகைச் சிந்தனையாளர்களோடு எப்படிச் சேர்ந்து இயங்குவது என்பதை நாம் கற்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு வகையாளரும், பிற வகையாளர்களுக்கு ஏதோ விதங்களில் பூர்த்தி அடைய உதவுவோராக இருப்பார்கள். என் சில புத்தகங்களுக்கு இணை -ஆசிரியர்கள் உண்டு, அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், நான் காட்சி வழி சிந்தனை செய்பவள் என்பதால்  தடம் மாறிப் பலதையும் பற்றி எழுதுவேன் – அதெல்லாம் தொடர்புள்ளவை என்பதால். எனவே, எனக்கு சொற்களின் வழியே சிந்திப்பவர் ஒருவருடைய உதவி என் சிந்தனைகளை ஒழுங்கில் வைக்கத் தேவைப்படும்.

சில நேரங்களில், எளிய முறையில் படங்களில் புத்தாக்கங்கள் செய்வதுதான் சிந்திக்கக் கடினமானவையாக இருக்கும். இடர் அல்லது இன்னல்கள் என்ற பிரச்சனையைப் பார்ப்போம். பொறியியலாளர்கள் ஒரு நகரத்தை நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய பெரும் புயல் தாக்கி அழிப்பதில் உள்ள ஆபத்தை, இடர்களைப் பற்றி யோசித்துக் கணக்கிட முயல்கிறார்கள். பொறியியலாளர்கள் இடரைக் கணக்கிட முயல்வார்கள், காட்சி அல்லது படங்கள் வழி சிந்திப்பவர் இடரைப் பார்ப்பார். ஃபூகஷீமா அணு உலை மின் சக்தி நிலையம் எரிந்தபோது, அது ஏன் எரிந்தது என்பதைப் பற்றிப் படித்த என்னால் அதை நம்பவே முடியவில்லை. காட்சிப்படுத்தலில் அவர்கள் அப்படி ஓர் அடிப்படைப் பிழையைச் செய்திருந்தனர், அவர்கள் அதைச் செய்தனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடலுக்குப் பக்கத்தில் நீங்கள் ஓர் அணு சக்தி நிலையத்தை அமைத்தால், அதில் உள்ள மிக மிக முக்கியமானதும், மின் சக்தியால் இயங்கக் கூடியதுமான அவசர நிலைக்கானதும், குளிர்விக்க நீரைக் கொணர்வதுமான இறைப்பு எந்திரங்களை நீர் புகக் கூடிய நிலவறையில் வைப்பது நல்ல யோசனையே அல்ல. குறைந்தது அந்த அறைக்கு நீர்புகாமல் தடுக்கும் கதவுகளைப் பொருத்தி இருந்தால்கூட இப்படி ஒரு பேரிடர் நேர்ந்திராது. என்னால் நீர் அந்த நிலவறைக்குள் போவதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பொறியியலாளர் அங்கு நீர் புகும் என்று எதிர்பார்க்கவில்லை.

பி: நீங்கள் அடிக்கடி இடர்களைப் பற்றி யோசிக்கிறீர்களா?

டெ: நான் தானாக இயங்கும் கார்களைப் பற்றிக் கவலை கொள்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு கார்களில் உள்ள விபத்துப் பாதுகாப்புக்கான காற்றுப் பைகளில் பிரச்சினை ஏற்பட்டு அவை குழந்தைகளையும், சிறார்களையும் கொன்று கொண்டிருந்தன. நான் அப்படி ஒரு தவறை நிச்சயம் செய்து இருக்க மாட்டேன். சில விடியோக்களைப் பார்த்த உடனேயே நான் சொல்லி இருப்பேன், “ஓ, இது உதவப் போவதில்லை. அந்த முழுதும் வளர்ந்த மனிதனைப் பாதுகாப்புப் பெல்ட்டை அணிய வையுங்கள்.” ஏனெனில், இருக்கையின் பெல்ட்டை அணியாத ஒரு முழுதாக வளர்ந்த ஆணைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய அளவு உறுதியானதாக ஒரு காற்றுப்பை இருந்தால், அது நிச்சயம் குழந்தைகளையும், சிறார்களையும் கொல்லவே செய்யும். நான் ஒருக்காலும் அப்படி ஒரு பிழையைச் செய்திருக்க மாட்டேன். அந்தப் பொறியாளர்கள் கணக்குப் போட்டு அதற்கு ஏற்ப எந்திரத்தைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

பி: உலகம் இப்போது மனிதர்களின் நேரடி மேற்பார்வை இல்லாது கணினிகளின் இடையீட்டால் இயக்கப்படுவதைப் பற்றி உங்களுக்குக் கவலை இருக்கிறதா?

டெ: நான் அது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். ‘எல்லா புத்திகளையும் அழைப்பது’ (Calling All Minds) என்ற புத்தகத்தை நான் எழுதக் காரணமானவற்றுள் ஒன்று, எப்படி இன்றைய குழந்தைகள் தம் கைகளால் தாமே எந்த வேலையையும் செய்யாமல் வளர்ந்து வருகிறார்கள் என்பதே.  இருபத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக, கால்நடைகளை எப்படிக் கையாள்வது என்பது பற்றி நான் பாடம் நடத்தி வருகிறேன், மாணவர்கள் அதற்குக் கால்நடைகளைக் கையாளும் தொழில் நிலையம் ஒன்றின் படத்தை வரைய வேண்டும். நாங்கள் என்ன கண்டோம் என்றால், கடந்த ஐந்தாறு வருடங்களில், இப்படி வரைவது மாணவர்களுக்கு மேன்மேலும் கடினமாக உள்ளது என்பதை. வரைகருவியான காம்பஸ் என்பது என்ன என்றே தெரியாத மாணவர்கள் என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வரைகோல் (ரூலர்) கொண்டு கோடு வரையத் தெரியாது. அளவுக்குத் தக்கபடி வரைவது (ஸ்கேல் ட்ராயிங்) என்பது அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நுணுக்கம். இன்னுமே எளியதாக ஒன்றைப் பார்ப்போம்: நீங்கள் இந்தப் பெரிய சாய்மான இருக்கையை வாங்கினீர்கள். இது உங்களுடைய அடுக்ககத்தில் பொருந்துமா? வரைகோல் ஒன்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிய இது ஓர் எளிய காரணம். தூலமான பொருட்களிலிருந்து முழுதும் அகற்றப்பட்டவர்களாகப் பல மாணவர்கள் இப்போது வந்து கொண்டிருக்கின்றனர். நமக்கோ, எலெக்ட்ரீஷியன்கள், தவிர கைத்திறன் உள்ள தொழில்களில் பயிற்சி உள்ளவர்களுக்கான தேவைக்கேற்ற ஆள்கள் இல்லாமை இப்போது பெரிய பிரச்சினை. கொலராடோ மாநிலப் பல்கலையின் வளாகத்தில் இப்போது பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன, நான் இரண்டு மேலாளர்களிடம் பேசினேன், அவர்கள் தங்களுக்குத் தேவையான எலெக்ட்ரீஷியன்கள் கிட்டுவது பெரும்பாடாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். குறிப்பாக, வெள்ளங்கள் வந்துபோன பிறகு மின் சாதனங்களுக்கு ஏற்படும் சேதத்தை நிவர்த்தி செய்யும் வேலைக்கு, மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளைப் பழுது பார்த்தல் மற்றும் குழாய் வேலைகள் செய்பவர்கள், உந்து எந்திரங்களைப் பராமரித்துப் பழுது பார்க்கும் மெகானிக்குகள், உலோக ஒட்டு வேலை செய்பவர்கள் (வெல்டர்) போன்றார் தேவை, கிட்டவில்லையாம். பெரும் பற்றாக்குறை உள்ளதாம். இந்த வேலைகள் எல்லாம் எங்கேயும் போய்விடப் போவதில்லை. இவற்றை கணினிகளால் செய்ய முடியாது.

பி: இதை உங்கள் மாணவர்களிடமும் காண்கிறீர்களா?

டெ: கல்லூரி மாணவர்களிடையே எழுதும் திறமை படு மோசமான நிலையில் உள்ளது. முடிவில்லாது, இடைவெளி இல்லாது தொடரும் வாக்கியங்களில் எழுதுகிறார்கள். என்னை எப்போதும் கேட்கிறார்கள்: கால்நடைத் தொழில் முறைமீது உங்களுக்கு எப்படித் தாக்கம் கிட்டியது? நான் மிக நன்றாக எழுத வல்லவள், தொழில் பத்திரிகைகளிலும், அறிவியல் சஞ்சிகைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதினேன், ஆனால், இன்று வரும் மாணவர்கள் எழுதுவதில், உயர்நிலைப் பள்ளி அளவில் செய்யும் பிழைகளுக்குத்  திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு நான் கல்வி அமைப்பைத்தான் குறை சொல்ல முடியும்.

நான் என்ன பார்க்கிறேன் தெரியுமா? ஒரு விமானப் பயணத்தில் நான் படிக்கிற கட்டுரைகளில், உள்ளீட்டுக்குப் படிப்பதைவிடப் பிழை திருத்தவே அதிக நேரம் செலவழிக்கிறேன். விமானத்தில் பாதி தூரத்துக்கும் பின்னே, உள்ளே ஓரிடத்தில் நடைப்பக்கம் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். அது ஜெட் ப்ளூ விமானப் பயணம் என்று நினைக்கிறேன், ஆகவே எனக்கு நிஜமாகவே கால் நீட்ட இடம் இருக்கிறது. இதைப் பார்த்தீர்களானால், நான் அந்தக் காட்சியைக் காண முடிகிறது. பிறகு சமீபத்தில் ஒரு வகுப்பறையில் நாங்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டி இருந்தது, அதில் நாங்கள் எப்படி வரைகோலைப் பயன்படுத்துவது, அது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கித் தகவல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது நான் ஒரு கூட்டமர்வு அறையில் உட்கார்ந்திருக்கிறேன், என்னால் அது எந்த அறை என்பதையும், நான் என்ன இருக்கையில் அமர்ந்திருந்தேன் என்பதையும் நினைவு கூர முடிகிறது.

பி: தொடர்புகள் வழியே நீங்கள் சிந்திப்பதை விளக்குகையில், அது மிகவும் திக்குமுக்காட வைக்கும் அனுபவமாக இருக்கிறது. ஏதோ உடலை விட்டு வெளியே போய் நின்று பார்ப்பதுபோல இருக்கிறது.

டெ: ஆ, அந்தப் பிம்பங்கள் வரும், போகும்.

பி: காட்சி வழி சிந்திப்பவராக, நீங்கள் சித்திரக் கலையை நோக்கி ஈர்க்கப்படுகிறீர்களா?

டெ: எங்கள் வளாகத்தில் ஓர் இயற்பியல் சிற்பம் இருக்கிறது, பதிவுக் கூடத்துக்கு வருகையில் அந்த சிலைக்குக் கீழாகத்தான் நடந்து வந்தேன். அதில் நியூட்டனின் மேற்கோள் ஒன்றுண்டு, அந்த மேற்கோள், தாம் தொலைதூரம் பார்க்க முடிந்ததற்குக் காரணம், பல பெரும் மனிதர்களின் தோள்கள்மீது தான் நிற்பதே என்று அவர் சொன்னதாக வரும். அது நிஜமாகவே உண்மைதான்.

பி: நீங்கள் யாருடைய தோள்களில் நின்றுள்ளீர்கள்?

டெ: நான் கல்லூரியில் படித்தபோது மிருகங்களின் நடத்தை பற்றிய ஒரு சிறப்பான வகுப்பு இருந்தது, அது என்னை மிருக நடத்தைமீது ஈடுபாடு கொள்ள வைத்தது. அதுவோ பி.எஃப். ஸ்கின்னரின் தூண்டுதல் / மறுவினை கோட்பாடு ஆண்ட காலம் – எல்லாம் தூண்டலுக்கு மறுவினையாக அமைவன என்ற கருத்து நிலவியது. ஆனாலும், எனக்கு மிருக நடத்தை பற்றிய வகுப்பு ஒன்றை நடத்தியவர்  ஊர்ந்து செல்லும் பிராணிகளை ஆராய்பவர். அவர் மிருகங்களுக்கு எப்படி உள்ளுணர்வு, மேலும் ஏற்கெனவே உள்ளே பொதிந்த நிலையான செயல் பாணிகள், அல்லது நடத்தைப் பாணிகள் உண்டு என்று போதித்தார். இது எனக்கு முக்கியமான கற்றல், ஏனெனில் அப்போது மற்றெல்லாம் தூண்டுதலுக்கு மறுவினைதான் என்று போதித்தன. எல்லாமே கற்கப்பட்டது; எல்லாமே தூண்டுதல். பண்டை மிருக நடத்தையாளர்கள் அப்படிச் சொல்லவில்லை. அது என்மீது மிகுந்த தாக்கமுள்ள ஒரு பாட போதனை.

பி: மிருகங்களோடு இத்தனை தூரம் வேலை செய்கிற நீங்கள், எப்போதாவது வளர்ப்புப் பிராணிகளை வைத்திருந்தீர்களா?

டெ: நான் இப்போது 85 சதவீத நேரம் பயணங்களில் இருக்கிறேன். அதனால் என்னால் அப்படி ஏதும் வளர்க்க முடியாது.

பி: ஆனால் அப்படி வளர்க்க விரும்புவீர்களா?

டெ: ஆமாம்.

பி: நாய்களா இல்லை பூனைகளா?

டெ: அநேகமாக ஒரு நாய்.

பி: நீங்கள் நாய்களை விரும்பும் நபர் போலத்தான் இருக்கிறீர்கள்.

டெ: என் உதவியாளர் சிறிய நாய் ஒன்றை வைத்திருந்தார், ஆன்னி என்று பெயர். அது ஒரு ப்ளூ ஹீலர் நாய். (ஆஸ்த்ரேலிய மேய்ப்பாளர் நாய்) ஆன்னிக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவருடைய வீட்டுக்கு நான் காரோட்டிப் போவேன், ஆன்னி ஓடி வருவாள். அதனால் அவளுடைய வயிற்றை நீவி விடுவேன். ஆன்னியோடு நெருங்கிய தோழியாக இருந்தேன். அவளுக்குத் தன்னை வளர்த்தவரைவிட என்னை அதிகம் பிடித்தது என்று நினைக்கிறேன்.

***


[1] கட்டுரை 2019 இல் வெளியானது. அதில் குறிப்பிடப்படும் வயது 71. டெம்பிள் க்ராண்டின் ஆகஸ்ட் 1947 இல் பிறந்தவர். இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியாகும் ஏப்ரல் 2020 இல் அவருக்கு 72 வயதாகி இருக்கும்.

[2] Squeeze Machine என்று இங்கிலிஷில் இது அழைக்கப்படுகிறது. தொடுகையால் அதிகமாகத் தூண்டப்படுவதை விரும்பாத இளைஞராக இருந்த டெம்பிள் க்ராண்டின், கல்லூரியில் படிக்கையில், தான் இறுக அணைக்கப்படுவதையும் வேண்டுவதாக உணர்கிறார். அதே நேரம் யாரும் தன்னை அணைத்துப் பிடிப்பதையும் அவரால் பொறுக்க முடிவதில்லை. எனவே இந்த எந்திரத்தை அவரே கட்டமைக்கிறார். இது இன்று ஆடிஸம் உள்ள குழந்தைகள், இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தகவல்கள் சொல்கின்றன. இது பற்றி ஒரு விக்கி குறிப்பும் உள்ளது.

[3] Invention என்ற சொல் மூலத்தில் உள்ளது. இந்த மொழியாக்கத்தில் ‘புத்தாக்கம்’ என்ற சொல்லை அதற்கீடாகப் பயன்படுத்துகிறேன்.

[4] Calling All Minds என்பது புத்தகத்தின் தலைப்பு. ***

One Reply to “டெம்பிள் க்ராண்டின்: பேட்டி”

  1. அலைபாயும் சிந்தனைகள் பேட்டியாக வந்துள்ளன. காட்சியாகப் பார்க்கும் டெம்பிள் க்ராண்டின் சொல்லிலும் வல்லமை பெற்றுத்தான் இருக்கிறார். புத்தாக்கங்கள் பற்றிய விளக்கம் சிறப்பு.எது வழி அறிதல் ஒரு குழந்தைக்கு எளிதாக இருக்கிறதோ, அது வழிச் செயல்படுதல் அவசியம்.எதுவும் குறைபாடு அல்ல, அணுகும் நம் முறையைத் தவிர.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.