சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)

(பகுதி 1 இங்கே இருக்கிறது)

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரொனா வைரஸ்ஸுக்கும், கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு சினிமா பார்க்கப்போன நான்கு கல்லூரி மாணவர்களுக்கும், கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீசுக்கும், சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் ஒரு மணிக்கூண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ? பல வருடங்களாகச் சொல்வனம் தளத்திற்கு வந்து போகும் வாசகர்களுக்கு இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு உடனே நினைவுக்கு வரலாம். இவையெல்லாம் இவ்வுலகில் வளைய வந்து கொண்டிருக்கும் பல்வேறு சிந்தனைச் சோதனைகளில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பதுதான் அந்த தொடர்பு. நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிவந்த 12 பகுதிகள் கொண்ட ஒரு தொடரை இன்னும் இரண்டு பகுதிகள் சேர்த்து, நிறைய மெருகேற்றி ஒரு மின் புத்தகமாக பதிப்பித்திருந்தோம். இப்போது அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறோம். இந்தப் புதிய புத்தகத்தைச் சொல்வனம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உங்கள் ஆதரவை நாடுவதே இக்கட்டுரையின் நோக்கம். 

பதினான்கு அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக் கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள்கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்குத் தீனி போடும். அமெஸான் நிறுவனம் காகித வடிவிலும் புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறது. புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்புகள் இதோ: 

அமெசான்: https://tinyurl.com/TESVAmazon
கூகிள்: https://tinyurl.com/TESVGoogle

இந்தியாவில் பதிப்பகங்கள் திரும்ப இயங்க ஆரம்பித்தவுடன் சில நூறு பிரதிகள் அச்சடித்து ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மூலம் விநியோகிக்க இருக்கிறோம்.  200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலையை இந்தியாவில் $2.99 என்றும், பிறநாடுகளில்  $3.99 என்றும்‌ நிர்ணயித்திருக்கிறோம். புத்தகத்தை விற்பதில் இருந்து கிடைக்கும் லாபமனைத்தும் நூறு சதவீதம் சொல்வனம் தளத்தைப் போய்ச்சேரும். சுய முயற்சியில் ஓரளவு தரமான ஒரு புத்தகத்தை பிரசுரிப்பது என்பது, எவ்வளவு கடினம் என்பது இந்த இரண்டு (தமிழ், ஆங்கிலம்) அனுபவத்தின் மூலம் புரிய வந்தது. 

மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் புத்தகத்தை அறிமுகப்படுத்த எழுதிய இந்த கட்டுரையில் இருக்கும் அதே கோரிக்கைகளை வாசகர்கள் முன் திரும்ப வைக்கிறோம்:

 1. புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி படித்துப் பாருங்கள். கூகிள்/அமெஸான் இரண்டு தளங்களில் உங்களுக்கு எதன் வழியாக வாங்குவது சுலபமோ அதன் வழியே வாங்குங்கள். முடிந்தால் இன்னும் பத்து  பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்குங்கள்.
 2. ஒரு நாவலை படிப்பதுபோல் விறுவிறுவென்று படித்து முடிக்க முயலாமல், முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல், மெதுவாக புத்தகத்தைப் படித்து, இணைய தளங்களில் புத்தகத்தின் குறை நிறைகளை விமரிசனம் செய்யுங்கள். நானும், சொல்வனம் குழுவினரும் எதிர்காலத்தில் பிரசுரிக்க இருக்கும் புத்தகங்களின் தரத்தை உயர்த்த உங்கள் விமரிசனங்கள் மிகவும் உதவும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புத்தகத்தை வாங்கிப் படித்து விமர்சிக்குமாறு கொஞ்சம் விளம்பரம் செய்யுங்கள்.
 3. இந்தப் புத்தகத்தை நிச்சயம் படித்து ரசித்து விவாதிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றும் ஒரு சில ஆசிரிய / மாணவ /மாணவிகளின் முகவரிகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். அச்சுப் புத்தகம் வெளிவந்தவுடன் எங்கள் செலவில் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்ப முயற்சிக்கிறோம்.

அன்புடன்
சுந்தர் வேதாந்தம்

9 Replies to “சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)”

 1. தங்கள் ஆதரவுக்கு நன்றி. தமிழில் அச்சடித்த புத்தக பிரதிகளை யாரும் வாங்காததால், அவற்றை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக்கூட நூலகங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்கொடையாக கொடுத்து விட்டோம். கொரொனா வைபவம் முடிந்து அச்சகங்கள் திரும்ப இயங்க ஆரம்பித்தவுடன் ஆங்கில பிரதிகளை அச்சடிக்க இருக்கிறோம். அப்போது தமிழ் புத்தகத்தையும் திரும்பக் கொஞ்சம் அச்சடித்து https://www.nhm.in/shop/Sindhanai_Sodhanaigal.html இணைய தளத்தின் வழியே வழங்க முயற்சிக்கிறோம்.

 2. கிண்டில் ஈ நூலாக ஆங்கிலத்தில் வாங்கியுள்ளேன்.நிதானமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.படித்த வரையில் அறிவார்ந்த தெளிவும், எளிமையும் ஈர்க்கின்றன. சந்தேகங்கள் ஏதாவது எழுந்தால் திரு.சுந்தர் வேதாந்தம் அவர்களுக்கு மின்னஞ்சல் நேரடியாக அனுப்பலாமா?

  1. தங்கள் பதிவுக்கு நன்றி. கருத்துக்கள்/சந்தேகங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் நேரடியாகவோ, இங்கு பின்னூட்டலாகவோ எழுதுங்கள். நிச்சயம் தெரிந்த அளவு பதிலளிக்கிறேன்.

 3. திரு.சுந்தர் வேதாந்தம் அவர்களுக்கு,

  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  சில மாதங்களுக்கு முன், தங்களின் இந்த “சிந்தனை சோதனைகள்” புத்தகம் ஒரு பழைய புத்தகக் கடை ஒன்றிலிருந்து எனக்கு கிடைத்தது.

  அட்டைப்படத்தின் மூலம் புத்தக கருத்துக்கள் ஒன்றும் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு உந்துதலில் இந்த புத்தகத்தை வாங்கினேன். முழுவதுமாக ஒரே மூச்சில் படிக்கவும் செய்தேன்.

  சில மாதங்கள் காண்பவர்களிடமெல்லாம் (புரிந்துகொள்ளும் தகுதி உடையவர் என்று நான் நினைக்கும் நபர்களிடம்) இந்த புத்தகத்தைப் பற்றியும் இதிலுள்ள சோதனைகள் பற்றியும் விளக்கி பரவசமடைந்தேன்.

  உண்மையில் தமிழில் இந்த வகையிலான புத்தகத்தை நான் இதுவரை கண்டது இல்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இல்லை என்றே நினைக்கிறேன். மிக அபாரம். ஒவ்வொரு பக்கங்களும் நம் அறிவுக்கு தீனி போடும் விதத்தில் மிக சுவாரஸ்யமாக அமைந்துள்ளதுடன், படிக்கவும் விறுவிறுப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். என்னிடம் இருக்கும் புத்தகங்களில் சிறப்பான வெகு சில புத்தகங்கள் பட்டியலில் தங்களின் இந்த புத்தகமும் தற்போது சேர்ந்துள்ளது.

  ஆனால் இந்த புத்தகம் சரியாக விற்பனை ஆகாததால் நூலகங்களுக்கு, பள்ளிகளுக்கும் தந்து விட்டதாக கூறியிருந்தீர்கள். ஆச்சர்யமில்லை.

  தற்காலத்தில் நல்ல புத்தகங்கள் பலரால் வாசிக்கப்படுவதும், வரவேற்பை பெறுவதும் அரிதிலும் அரிதே. கவலை வேண்டாம். அறிவார்ந்த சமூகம் தங்களை பாராட்டும். (என்னைப் போல).

  எழுதும் பணியில் தொய்வு கொள்ள வேண்டாம். தங்களின் அறிவுக்கும், உழைப்பிற்கும் இந்த புத்தகம் ஒரு மணிமகுடம் என்றே நான் கருதுகிறேன். மேலும் தங்கள் பணி வளர, சிறக்க, எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.

  அன்புடன்.
  அபிமன்யு.

  1. திரு. அபிமன்யு அவர்களுக்கு,
   தங்கள் பதிவுக்கு நன்றி. காகித வடிவில் அச்சடிக்கப்பட்ட சிந்தனைச் சோதனைகள் புத்தகங்கள் அனைத்தும் ஆசிரியர்களுக்கும், பள்ளி நூலகங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன என்பதால், அப்படிபட்ட ஒரு பிரதிதான் பழைய புத்தகக் கடையைச் சென்றடைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் புரிதல் தந்த சின்ன வருத்தம், அந்தப்பிரதி உங்களைச் சென்றடைய, நீங்கள் எவ்வளவு தூரம் புத்தகத்தை ரசித்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டபோது சுத்தமாய் விலகி நிறைய சந்தோஷத்தை அங்கே நிரப்பி விட்டது. உங்களைப்போல் நான்கு பேர் புத்தகத்தை படித்து உங்களவு உற்சாகத்துடன் தெரிந்தவர்களிடம் படித்தவற்றை பகிர்ந்துகொண்டிருந்தால் போதும், எழுதியதன் பலன் கிடைத்துவிட்டது என்று நிச்சயம் சொல்லி விடலாம்.

   முடிந்தபொழுது உங்கள் கருத்துக்களை புத்தகத்தின் அமெசான்/கூகிள் தளங்களிலும் பதிவு செய்யுங்கள். தமிழ் புத்தகம் வெளிவந்து மூன்று வருடங்கள் ஆகி இருந்தும் இதுவரை ஒரே ஒரு வாசகர் கருத்துதான் இந்த அமேசான் தளத்தில் பதிவாகியிருக்கிறது: https://www.amazon.com/Sindhanai-Sodhanaigal-Panachchelavillaa-Prabanjachsuttrula-Tamil-ebook/dp/B073BLZJZH/ref=sr_1_2?dchild=1&keywords=sundar+vedantham&qid=1588961988&sr=8-2.

   தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாருங்கள். எழுதுபவர்களை ஊக்குவிக்க அதைவிட பெரிய மருந்து ஏதுமில்லை.

   அன்புடன்
   சுந்தர் வேதாந்தம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.