சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்

பிரியா, பெல்ஜியம்

மீனாட்சி அம்மன் கோவிலைத் தன் அடையாளமாகக் கொண்ட மதுரையில் தொடங்குகிறது கதை. தூங்கா நகரமாகிய மதுரையில் ஒரு சாதாரண தினத்தின் காலைப்பொழுதை அறிவியலின் “பிரௌனியன் இயக்கத்தோடு” ஒப்பீடு செய்வதற்கு சுஜாதாவால் மட்டுமே முடியும். ஒரு நகரத்தின் பரபரப்பு என்பது கொதிக்கும் நீரில் தேயிலையை கலந்தவுடன், ஏற்கெனவே வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் திரவ மூலக்கூறுகளுடன் தேயிலைத் துகள்களும் சேர்ந்து ஏற்படுத்தும் அதிவேக சீரற்ற இயக்கத்தைப் போன்றது. இந்தக் கதையை வாசித்த பிறகு எந்த நகரத்திற்குச் சென்றாலும் இந்த உவமை என் கண்ணால் வந்து போகும். நீங்கள் நிதானமாகவராகவும், உங்கள் பணி அவசரமில்லாததாக இருப்பினும்கூட, நகரத்தின் செயல்பாடுகளால் நீங்களும் பதட்டத்திற்கு ஆளாவீர்கள். அனைவருமே ஏதோ போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற யத்தனிக்கும் மனநிலையில் இருப்பார்கள். நகரத்தின் உச்ச நேரம் மட்டுமல்லாது நாள் முழுவதுமே எங்கோ எதற்காகவோ திரள் திரளாக மக்கள் கூட்டம் ஓடிக் கொண்டிருப்பதை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த தினங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குறுநகரில் பிறந்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு பெருநகரங்களில் வாழ்வது என்பது ஆரம்ப காலத்தில் பெரும் சவாலாக இருந்தது. ஓர் இன்சொல்லோ, புன்னகையோகூட பரிமாற்றிக் கொள்ள நேரமில்லாது, வேறு சிந்தனைகள் ஏதும் இல்லாது, முழுக்க முழுக்க சுயநலத்தோடு, எந்தவித பச்சாதாபமுமின்றி, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு அதன் இலக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பயணிப்பது போன்று மந்தை மந்தையாக மக்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஸ்தம்பித்திருக்கிறேன்.

இந்தச் சிறுகதை அப்படிப்பட்ட நகரத்தின் பெரிய அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கும் ஒரு படிப்பறிவில்லாத அறியாப் பெண்ணானான வள்ளியம்மாளைப் பற்றியது. அவள் அன்றைய தினம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சந்திக்கப் போகும் இடர்பாடுகளும், படித்தவர்களின் மெத்தனத்தால் அந்நாளின் இறுதியில் அவளுக்குக் காத்திருக்கும் கருணையற்ற கொடூரத்தைப் பற்றியதும்தான்.

வள்ளியம்மாளின் பெண் பாப்பாத்திக்கு முதல் தினத்திலிருந்தே நல்ல ஜுரம். அவர்கள் வாழும் மூணாண்டிபட்டியின் கிராமத்து ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் பாப்பாத்தியை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட, அடுத்த நாள் விடிந்தும் விடியாததுமாக முதல் பேருந்தில் ஏறி அரசு மருத்துவமனையின் புற நோயாளிகளுக்கான பிரிவில் வந்து காத்திருக்கிறாள்.

கிழிந்த நாராக ஸ்ட்ரெச்சரில் கிடக்கும் பாப்பாத்தியை ஒரு ‘மாதிரியாகக்’ கொண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பெரிய டாக்டர், பாப்பாத்தியின் மீது சில பரிசோதனைகளைச் செய்து விட்டு, இது “Acute case of meningitis” என்றும், அதற்கான அறிகுறிகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார். திராணியின்றிக் கிடக்கும் தன் மகளையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் வள்ளியம்மாளுக்கு அவர்கள் பேசுவது ஒன்றுமே விளங்கவில்லை.

சிறுமி பாப்பாத்தி கேஸைத் தானே பார்த்துக் கொள்வதாகவும், அவளை உடனே மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளும்படியும் தனசேகரன் என்பவரிடம் உத்தரவிட்டுத், தான் அடுத்து எடுக்கப் போகும் வகுப்பிற்கு விரைகிறார் பெரிய டாக்டர். அவரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டிய சூழலில் இருக்கும் தனசேகரன் வெளிநோயாளிகளுக்கான பிரிவில் பணியாற்றும் ஸ்ரீனிவாசனிடம் விஷயத்தைக் கூறிவிட்டு நகர்கிறார்.

பலவிதமான நோயாளிகளை தினசரி பார்த்துப் பழகி சலிப்பான மனநிலையிலிருக்கும் நிர்வாக ஊழியர்கள் பாப்பாத்தியுடைய நோயின் தீவிரத்தைப் பற்றி உணராததால், அடுத்தடுத்துப் பந்தாடப்படுகிறாள் வள்ளியம்மாள். கைப்பந்து விளையாட்டுக் களத்தில் கைப்பந்தைத் தட்டித் தள்ளிவிடுவது போல நோயாளியின் எதிர்காலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பந்தாடப்படுகிறது.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருக்கும் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அந்தப் பெரிய ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்கள், சம்பிரதாயங்கள், நடைமுறைகள் எல்லாம் தலை கிறுகிறுக்க வைக்கின்றன.

“Patient பேரு என்ன?” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரை கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே?” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு!” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.

சேர்க்கை நடைமுறைகளுக்காக பாப்பாத்தியை விட்டுப் பிரிந்த அவள் மருத்துவமனையின் மூலை முடுக்கெல்லாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. குழந்தையை எங்கோ ஒரு மூலையில் விட்டுவிட்டு அவள் அலையும் போது, அந்தத் தாயோடு சேர்ந்து நம் தாய்மையும் கலங்குகிறது; பதறுகிறது; வயிற்றைப் பிசைகிறது. திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளும், அடுத்துப் போகுமிடத்தைக் காண்பிக்கும் குறியீடுகளும், எண்களும், படிப்பறிவில்லாத வள்ளியம்மாளை நிலைகுலையச் செய்கின்றன.

வள்ளியம்மாளோடு சேர்ந்துப் பயணிக்கும்போது ஓர் அரசு ஆஸ்பத்திரியின் அத்தனைக் காட்சிகளையும் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர். ஒரு வழியாகப் பாப்பாத்தியை மருத்துவமனையில் சேர்க்கும் இடத்தைத் தேடிக் கண்டடைகிறாள். துரதிர்ஷ்டவசமாக அன்றைக்கு அதற்கு மேல் நோயாளிகளைச் சேர்த்துக் கொள்ள இடமில்லாததால், மறுநாள் காலை ஏழரை மணிக்குத் திரும்பி வரச் சொல்கிறார்கள்.

செய்வதறியாது புற நோயாளிகள் பிரிவுக்குத் திரும்பிப் போக யத்தனிக்கும் வள்ளியம்மாளுக்கு, அந்தச் சக்கர வியூக மருத்துவமனையில் திரும்பிச் செல்லும் வழி மறந்து விடுகிறது. எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரிடம் உதவி கேட்டுத் திரும்புகிறாள். இருப்பினும் பாதி வழியில் மீண்டும் விக்கித்து நிற்க, அப்போது வரை அவளுக்குள் இருந்த பயமெல்லாம் திகிலாய் மாற அழ ஆரம்பித்து விடுகிறாள் வள்ளியம்மாள்.

அப்போது ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று அழச் சொல்கிறான். “அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.” என்கிற வரி தினந்தோறும் பல நூறு அவலங்களைச் சந்திக்கும் மருத்துவமனை ஊழியர்கள் எவ்வாறு பச்சாதாபமில்லாத இயந்திரர்களாய் மாறியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

இறுதியில் சுதாரித்துக் கொண்டு அவள் புற நோயாளிகள் பிரிவை அடையும்போது அங்கு உள்நுழைய கால அவகாசம் முடிந்து கதவு பூட்டப்பட்டிருக்கிறது. தன் மகள் உள்ளே இருப்பதைச் சொல்லிக் கதறும் வள்ளியம்மாளிடம், உள்ளே அனுமதிக்கக் கையூட்டு கேட்கும் காவலாளியின் மொழி அவளுக்குப் புரியவில்லை. வேறு யாரோ உள்நுழையும்போது அவளும் இடையில் நுழைந்து தன் பெண்ணைச் சென்றடைகிறாள்.

வகுப்புகளை முடித்து விட்டுத் திரும்பும் பெரிய டாக்டருக்கு பாப்பாத்தியின் கேஸ் நன்றாக நினைவிருக்கிறது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு விட்டாளா என்று விசாரிக்கும் அவரிடம், இடமில்லை என்பதால் மறுநாள் காலை அவர்களை வரச் சொல்லியிருப்பதாக விபரம் தெரிவிக்கப்படுகிறது. அதீத கோபம் கொண்டு அவர் உரக்கக் கத்துகிறார். “வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! ” என அவர் சொல்லும் தருணம் நம் காலடியிலிருந்து உலகம் நழுவிச் செல்வதைப் போல் தோன்றுகிறது. எப்பாடு பட்டேனும் பாப்பாத்தியைக் கண்டுபிடித்து வந்து சேர்க்கச் சொல்லி உத்தரவிடுகிறார். அவருக்கு வேண்டப்பட்டவர்களோ என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள். நாற்புறமும் சிதறியடித்து ஓடுகிறார்கள். இடமே இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணிற்கு எப்படியேனும் ஓர் இடத்தை ஒதுக்கவும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அதீத முனைப்பு காட்டுகிறார்கள். தீடீரென ஏனிந்த மாற்றம்? பாப்பாத்தியின்மீது பெரிய டாக்டருக்கு இருக்கும் விசேஷ கவனம்!

அந்த நாள் முழுவதும் உடல்நலமில்லாத குழந்தையைத் தன்னந்தனியே விட்டுவிட்டு அலைக்கழிக்கப் பட்டிருந்த வள்ளியம்மாள், மூனாண்டிபட்டிக்கே திருப்பிச் சென்றுவிட முடிவெடுக்கிறாள். ஆஸ்பத்திரியின் நடைமுறைகள் அவளைக் கலக்கங் கொள்ள வைத்திருக்கிறது. வெறும் ஜுரம்தானே? கிராமத்திற்கே திருப்பிச் சென்று வைத்தியரிடம் காட்டிக் கொள்ளலாமென்றும், வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விட்டால், எல்லாம் சரியாகி விடுமென்றும் எண்ணிக் கொள்கிறாள். சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வள்ளியம்மாள், “பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்” என்று வேண்டிக் கொள்வதோடு கதை முடிகிறது.

சொல்லவொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தும் இடம் இது. வாசித்த ஓரிரு நாட்கள் உறக்கம் இழக்கச் செய்யும் வேதனை அது. ஒரு சுவாரஸ்யமிக்க கதையாக மட்டுமே அது வரை வாசித்து கொண்டிருக்கும் எதிர்வினையாற்ற முடியாத வெற்று வாசகனை, “நம்மால் ஏதேனும் செய்ய இயலாதா?” என்று பரபரக்க வைக்கிறது. கதைக்குள் ஒரு பாத்திரமாக நுழைந்து, ஓடிச் சென்று வள்ளியம்மாளிடம், “திரும்பிப் போகாதே, அங்கே உன் பெண்ணை அனுமதித்துக் கொள்ள சிறப்பாய் ஏற்பாடுகள் நடக்கிறது, ஏனெனில் உன் குழந்தைக்கு வந்திருப்பது சாதாரண ஜுரம் அல்ல, நாளை காலை வரைகூட அது உன் மகளை உயிருடன் விட்டு வைத்திருக்காது!” என்று உரக்க கத்திச் சொல்ல வேண்டும் என்கிற வெறி எழுகிறது.

சிறுகதைகள் வாழ்விலிருந்து உதிப்பவை. எனக்கோ, உங்களுக்கோ, எவருக்கோ, வாழ்வில் என்றோ, எங்கோ நடந்த ஒரு சம்பவமோ அல்லது பல சம்பவங்களின் தொகுப்புதான் சிறுகதையாக வடிவெடுக்கிறது. சிறுகதைகள் எந்தத் தீர்வையும் சொல்வதில்லை. சுபம் போட்டு முடிவதில்லை. எந்த நீதியையும் வழங்குவதில்லை. அவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றன – பல பரிமாணங்களில்; பல கோணங்களில். குடைந்தெடுக்கும் கேள்விகளை எழுப்பி நம்மை தீவிர விவாதத்திற்கு இட்டுச் செல்கின்றன. சுஜாதாவின் நகரம் சிறுகதை, நான் இந்தச் சமூகத்தின் பிரஜை என்னும் முறையில் என்னிடம் சில கேள்விகளை எழுப்பி அப்படி ஒரு தீவிர விவாதம் புரிந்தது.

மருத்துவர் என்பவர் யார்? மருத்துவத் தொழிலின் முதன்மை தர்மம் எது? கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் உயிரோடு இருப்பதே அரிது என்கிற வகையில் போராடிக் கொண்டு இருக்கும் ஒரு சிறுமியை ஒரு பெரிய மருத்துவர் எவ்விதம் கையாண்டிருக்க வேண்டும்? அந்தப் பெண்ணை மாதிரியாக வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பதோடு, மனிதாபிமானத்தை அல்லவா போதித்திருக்க வேண்டும்? அதன் அறிகுறிகளை குறிப்பெடுத்துக் கொள்ளச் சொல்லும் போதே அதன் தீவிரத்தை பற்றியும் சிகிச்சைக்கான நடவடிக்கைளையும் அல்லவா செயலாற்றிக் காட்டிருக்க வேண்டும்? அந்தப் பாமரத் தாயிடம் அவள் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலைமையை எடுத்துரைத்திருக்க வேண்டும் அல்லவா? உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுமியைக் காப்பாற்றும் பணியைவிடவா வகுப்புகள் முக்கியம்? ஓர் அவசர உணர்வு இருந்திருக்க வேண்டாமா?

மூன்றாம் உலக நாடுகள் அல்லது வளரும் நாடுகள் என்று அழைக்கப்படும் அதிக மக்கள்தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் மனிதர்களின் உயிர்கூட அவர்களின் கையிருப்பை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. இருவேறு பொருளாதார துருவங்களைக் கொண்ட நாடு, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரத்துக்கு செய்வதுதான் என்ன? ஆணவமும், அதிகாரமும், சிபாரிசும், பொருளாதார வளமுமே இங்கு எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.

சேவை மனப்பான்மையோடு செய்ய வேண்டிய கடமைகளுக்கு ஏன் மருத்துவமனை ஊழியர்கள் இவ்விதம் அலுத்து கொள்கிறார்கள்? சலிப்புடன்ஒரு அப்பாவிப் பெண்ணைக் கடிந்து கொள்ளும் ஸ்ரீனிவாசனிடம் தொடங்கி, அங்குள்ள நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்காக அவளை அலைக்கழிக்கும் மற்ற ஊழியர்கள், ஓரமாக நின்று கொண்டு அழச் சொல்லும் ஒரு பரோபகாரி, காலங்கடந்ததால் உள்ளே செல்ல அனுமதிக்கக் கையூட்டு கேட்கும் காவலாளி என அங்கு யார் மீது சினம் கொள்வது? ஏன் ஒருவரிடத்திலும் பச்சாதாபம் இல்லை என கேள்வி எழலாம். ஆனால் அது அவர்களின் தவறு அல்ல. ஒன்றிரண்டு அல்ல ஓராயிரம் பேரை அன்றாடம் பார்த்து சலித்து இயந்திரர்களாய் மாறிப் போயிருக்கிறார்கள்.

நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ, நிறைய முது நம்பிக்கைகளோடு வாழப் பழக்கப்பட்டிருக்கிறோம் நாம். “வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்” என்ற எண்ணத்தோடு கிளம்பிவிடும் வள்ளியம்மாளின் அறியாமை நம்மைக் கடுங்கோபம் கொள்ளச் செய்தால், நம்மையும் நாம் சுய பரிசீலனை செய்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். வாழ்வில் எல்லாமே சார்பியல்தானே? அவள் அறிவுக்கு எட்டிய விதத்தில் அவள் யோசிக்கிறாள். ஆனால் நாம்? கொரோனா என்கிற கொள்ளை நோயால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் வேளையில்கூட எத்தனையோ விவேகமற்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம் அல்லவா?

இப்படிப் பல கோணங்களிலிருந்து வினா எழுப்பும் இந்தச் சிறுகதை, எத்தனை முறை வாசித்தாலும் கதைதானே என்று கடக்க இயலாதது. வள்ளியம்மாள் போன்ற அப்பாவித்தனமான, வறிய பெண்களுக்குப் போர்க் களமாய்க் காட்சியளிக்கும் மருத்துவமனைகளைக் கொண்ட இது போன்ற நகரம் நகரமே அன்று, அது “நரகம்” என்பதை உணர்த்திச் செல்கிறது சுஜாதாவின் இந்தச் சிறுகதை. ஒருவேளை “நகரம்” என்கிற இந்தத் தலைப்புக்கூட தட்டச்சுப் பிழையா, இல்லையா என்பது சுஜாதா மட்டுமே அறிந்த ரகசியம். ***

6 Replies to “சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்”

  1. ‘நகரம்’ சிறுகதையின் பாத்திரங்களோடு நம்மை அவரது உணர்ச்சிகரமான வரிகளால் தீவிர வாசிப்பினூடே நகர்த்தியுள்ளார் ப்ரியா பெல்ஜியம் அவர்கள். தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்..

  2. `நகரம்’ வெளிவந்த காலம் முதல், பல நபர்களின் ( ரெங்கசுப்ரமணி… etc..etc..) விமர்சனங்களைப் படித்துவிட்டேன். `சுஜாதா’ வின் சிறுகதைகளில், படிப்பவர்களின் மனம் நெகிழச்செய்வதுடன், நம் நாட்டில் நிலவும் ஊழல்களையும் பல அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற வேலைகளையும் நினைத்து வாசகர்களை சீற்றம் கொள்ளவைத்து, சிந்திக்கவும் வைக்கும் சிறுகதை இது. இச்சிறுகதை வந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும், நம் நாட்டில் நிலைமை இன்னும் மாறவில்லையே..என்று நினைக்கும்போது…

    1. சுஜாதாவின் நகரம் சிறுகதையே கண்ணீரை சுரக்கிறதென்றால் பிரியா அவர்கள் விளக்கியவிதம் மதுரை ராஜாஜி.சென்னைGH.போன்ற ஆஸ்பிட்டல்களில் ஏழைஎளியவர்கள் வள்ளியம்மையின் போர்வையில்
      கொரானா வரை விளக்கீய விதம் சுகாதார சிப்பந்திகளின் கையூட்டு அவலங்களையும் ஒழுக்க சீர்கேட்டினையும் விளக்கியவிதம் அருமை

  3. நல்ல வாசிப்பனுபவம். இன்று ஆஸ்பிடல் நிலைமைகள் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் மனித குணங்கள் இன்னும் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. வழிகள் அடைபட்டு போனவனுக்கு நம்பிக்கை மட்டுமே கைக்கோல். அது மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது. அதற்கு எந்த அறிவியலும் அவசியமற்றதாக இருக்கிறது. இந்த மனித குணாதிசயங்களால்தான் இந்த கதை எப்போதும் பேசப்படுவதாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.