
1
ஜன்னல் வெளியில்
நிலைத்த வெயில் போது
மழை மறுநாள்.
2
தோட்டத்தில் இருந்து
கவனமாக உள்ளே
தொடர்ந்தது அரவம்.
3
அடைந்த வீடு
காலை மாலை இரவு
எல்லாம் வெளியே
4
பழகிய மரம்
வீட்டுக்குள் நான், வெளியே
பறவை – இன்றும்
5
நிழலைத் தள்ள
நகர்ந்தேன். இன்னொரடி
இடித்து விட்டது.
6
வெளியூர் போன
நினைவு – வாசற்படி
சேர்ந்த குப்பைகள்.
7
கார் நிறுத்தத்தில்
இருந்து, கிளம்பிற்று
சின்னப் பறவை.
8
பகல் ஒளியில்,
நின்ற கடிகார முள் –
முடியாத நாள்.
9
கடைசி கலன்
அலசிய அரிசி
வேக எண்ணுகிறது.
10
நாங்கள் மூன்று பேர்
மூன்று அறைகள், வீடு
தனித்த அண்மை.
11
சராசரி தின
தொலைப்பேசி அழைப்பு
நோற்றல் நிறைவு.
12
கொரொனா கால
ஹைக்கூ – உதிரிலைகள்
தளிர்த்த மரம்
***
ஆசிரியர் குறிப்பு:
கொரொனா காலத்தில், அதைப் பற்றி இலக்கியம் படைக்க மிகவும் பதைப்பாக இருக்கிறது. இருந்தாலும், இப்படி கடத்தும் நாட்களின் அனுபவப் பதிவும் முக்கியமானது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், இது விசித்திரமான காலம். கூட்டுக்குள் அடைந்திருக்கும் காலம். நாம் வீட்டுக்குள் அடைந்திருக்க, இயற்கை தன் நேரப்படி மாறிக்கொண்டேதான் இருக்கிறது.
ஹைக்கூ, மரபாக இயற்கையை/இயற்கை மாற்றத்தை ஆவணப்படுத்தும் கவிதை வடிவம். ஒரு காட்சி, அனுபவ நொடி, அது கடத்தும் உணர்வு. மிக எளிமையாக, நுட்பமாக, குறிப்புணர்த்தும் முறை. தற்காலிகமாக அமெரிக்காவில் வசித்திருக்கும் எனக்கு, இங்குள்ள இயற்கை சூழல் புதியது. நீண்ட அந்திகளும், இலையுதிர் காலமும், பறவைகளும் புதியன. தினம் தினம் மாறும் மழையும் வெயிலும், சொல்லாமல் வரும் டொர்னடோக்களும் புதியன. இன்னொரு நாட்டில் இருந்து உலகை கவனிக்கும் அனுபவமும்.
இங்கு இருக்கும் 12 கவிதைகளும், நேரடியாக இந்த அவலத்தைப் பற்றி பேசாமல், அதை நாம் கடக்கும் காலத்தைப் பற்றி மட்டுமே பேச முனைகின்றன. இது போல நாம், அனைவரும் இந்த காலகட்டத்தில், கடக்கும் சில நொடிகள், மனதின் ஆழத்தில் பதிந்துவிடும் என்று நினைக்கிறேன்.
தீர்க்கமாக ஹைக்கூக்குள்… நீண்ட நாட்களுக்கு ஹைக்கூ மனநிலை அனுபவிக்கும் சந்தர்ப்பம். நன்றி
வாழ்த்துகள் உங்களுக்கு 🙂 சிங்கப்பூரிலிருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.