கைச்சிட்டா

This entry is part 1 of 8 in the series கைச்சிட்டா

அளிப்பவர்கள்: பாஸ்டன் பாலா, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன்

இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:

  1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
  2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
  3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.

எழுதியவர் : பாஸ்டன் பாலா

அ) Subtweet

கடந்த இருபதாண்டுகளில் விவேக் ஷ்ரயா ஆறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பல விருதுப் பட்டியல்களில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். அவரின் புத்தம் புதிய நாவல் ‘சப்ட்வீட்’. நீலாவும் ருக்மிணியும் நம்ம ஊரு சங்கீதக்காரர்கள். அவர்கள் இருவரிடையே நிலவும் கோபதாபங்களும், பொறாமையும், குற்றவுணர்ச்சிகளும், பரஸ்பர புரிதலின்மைகளும் இந்தக் கதையின் அடிப்படை.

வளரும் எழுத்தாளராக ருக்மிணி அறிமுகமாகிறார். ஊர் பேர் தெரியாத நீலாவின் கச்சேரியைக் கவனித்து விலாவாரியாக எழுதுகிறார். நீலாவின் வாழ்நாள் முழுக்கக் கிடைக்காத கவனிப்பை, அந்த ரசனைப் பத்தி கிடைக்கச் செய்து நீலாவை திக்குமுக்காட வைக்கிறது. நீலாவோ சங்கீதத்தைக் கடமையாகச் செய்பவர். சபா அரசியலும், பட்டுப் புடைவை விளம்பரமும், நகைக்கடை பொம்மையுமாக அரங்கேற விரும்பாதவர்.

பெண்களால் நட்பாக இருக்க முடியுமா? மாமியாரும் மருமகளும் சண்டைக் கோழிகள்; நாத்தனார் என்பவர் வில்லி; ஓரகத்தி எல்லோரும் போட்டியாளர்கள்; எதிர்த்த வீடு, பக்கத்து வீட்டுப் பெண்மணி அனைவரும் ஏதோ விதத்தில் ஏட்டிக்குப் போட்டியாகவே கருதப்படுபவர்கள். “அடுத்தாத்து அம்புஜத்தப் பார்த்தேளா…” என்னும் பாடல் முதல் இன்றைய வாட்ஸாப் வரை அண்டை வீட்டுப் பெண்மணிகளைச் சக்களத்திகளாகவே பார்க்கப் பழக்கப்பட்ட உலகம். இந்த இடத்தில் இனம், பணம், சாதி தாண்டி கைகோர்த்துக் கொள்ளும் மகளிர் தோழமையை நிறையப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது சப்-டிவீட்டில் வாசிக்கலாம்.

  • Print Length: 226 pages
  • Pages: 220 pages
  • ISBN: 9781770415256
  • Publisher: ECW Press
  • Publication Date: April 7, 2020

~oOo~

ஆ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

  • சைரஸ் மிஸ்திரி (ஆசிரியர்), 
  • மாலன் (தமிழில்):
  • சாகித்திய அகாதெமி வெளியீடு
  • Category: மொழிபெயர்ப்பு
  • Language: தமிழ்
  • Published on: 2020

ஞானக்கூத்தனின் புகழ் பெற்ற கவிதையை மேற்கோள் காட்டி இந்த அறிமுகத்தைத் துவக்கலாம்:

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய் வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய் ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடை தூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்

இந்த நாவல் எனக்கு அசிரமத்தையும் தர்ம சங்கடத்தையும் சுய மதிப்பீட்டையும் சற்றே அதிகமாக்கியது. மொழிபெயர்ப்பு என்றே சொல்ல முடியாத நடை. சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி. பரிசு என்ற உலகளாவிய விருது பெற சகல தகுதியுடைய ஆக்கம்.

கடைசிப் பக்கத்தில் இருந்து:

பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும் ஒதுக்கலுக்கும் உள்ளான பிணம் தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை. இறந்து போனவர்களின் உடல்களைச் சுத்தப்படுத்தி, அமைதி கோபுரம் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டப் பிணந்தூக்கிகள் ஒதுக்கி வைக்கப்பட்டும், ஏழ்மையிலும் வாழ்பவர்கள். செப்பியா என்ற பெண்ணுடன் ஏற்படும் காதலுக்காக, அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கிறான் பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதனா.

தொடர்பான பதிவுகளில் சில:

  1. Noelnadesan’s Blog

பாறுக் கழுகுகள் எனும் பிணந்தின்னும் கழுகுகள் மாடுகளுக்கு ஜுரம் மற்றும் வலியைக் குறைக்கக் கொடுக்கும் (diclofenac) வல்ராரன் எனப்படும் மருந்துகளே, கழுகுகள் அழிவதற்குக் காரணமாக இருந்தன. இறந்த மாடுகளில் இருந்து அந்த மருந்தினால், மாடுகளைத் தின்ற கழுகுகள் சிறுநீரகம் அழுகி இறக்கின்றன. இந்தியாவில் பல இடங்களில் இது நடந்துவருவதால் பாறுக் கழுகுகள் அருகி வருகின்றன….

நாவலின் கட்டுமானமாக இருக்காது, ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது. கதை சொல்லி பிரதான பாத்திரமாக இருப்பதால் கதைசொல்லியின் நினைவுகள் இங்கு முன்னிலைப் படுத்தப்படுகிறது.

2. சைரஸ் மிஸ்திரி – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்

மரித்துப் போன பார்ஸி பிணங்களைக் குளிப்பாட்டிச் சடங்குகளை நடத்திய பிறகு பார்ஸிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் அமைதித் தோட்டத்திலுள்ள உயரமான கோபுரங்களின் உச்சியில் பிணத்தைக் கழுகுகளுக்கு இரையாக வைப்பது பார்ஸிகளின் வழக்கம்.

சாகும் நேரத்தில் இயற்கைக்கு ஒரு பார்ஸி செய்யும் இறுதிக் கொடையாக இச்செயல் பார்க்கப்படுகிறது. பிணத்தைத் தூக்கி வந்து தயார் செய்வதற்காகப் பார்ஸிகளிடையே பிணந்தூக்கிகள் என்ற துணைஜாதி உருவாகியிருக்கிறது. மிகத் தூய்மையான பணியினைச் செய்பவர்கள் என்று இந்தப் பிணந்தூக்கிகளுக்குப் பெயரிருந்தாலும் அவர்களை ஏனைய பார்ஸிகள் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.

பிணந்தூக்கிகளுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் பார்ஸி சமூக அரசியல், அதன் பின்னணியில் அன்றைய இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பார்ஸி மதத்திலுள்ள பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்குமிடையே மதச் சடங்குகளைக் குறித்த விவரங்களை ஒட்டி நிகழும் பூசல்கள் என்று நாவல் 1990கள் வரை நீள்கிறது.

~oOo~

இ) Tamil New Poetry – KS Subramaniam

அமெரிக்காவில், கவிதைக்கும் பாடலுக்கும் உள்ள வித்தியாசங்கள் தமிழ்நாட்டைப் போலத்தான். கெண்ட்ரிக் லமார் என்பவர் புலிட்சர் வெல்லும் போதும், பாப் டிலன் என்பவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வெல்லும்போதும், இலக்கிய கவிஞர்கள் சற்றே அதிசயம் கலந்த அசுவாரசியத்தை வெளிப்பட்டுத்துவார்கள். அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது உங்களூரிலும் இதே நிலையா என்னும் கேள்வியும், உங்கள் நாட்டின் தகுதியான கவியாக்கங்களைச் சொல்லுங்கள் என்னும் வினாவும் வரும். பாரதியார், ஔவையார், கம்பர் எல்லாம் ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த் மாதிரி எப்பொழுதும் நினைவில் இருந்தாலும் தற்காலக் கவிஞர்களை அறிமுகம் செய்விக்க, சட்டென்று நிகழ்கால உணர்வுகளை வார்த்தைகளில் கொணர இரு புத்தகங்களை நாடுவேன்.

அதில் முதல் புத்தகம் இங்கே:

  • Published by Katha, 2005 
  • Motilal UK Books of India 
  • ISBN : 9788189020460

பின்னட்டையில் இருந்து:

Words translated. Thoughts in transit. Layered with dark humor and precise imagery, a collection of poems to plunge you into the core of meaning, Katha proudly presents its first anthology, tinted in every wash of life and dotted with the Sirissa trees and wailing Palms of the Tamil landscape. An art-tradition is living, breathing history, a contemporary past. Tamil Poetry traces its origin to thousands of years ago. Beautifully translated by Dr K S Subramanian, the anthology is the latest chapter in this history. Featuring a range of poets, from stalwarts like Na Pichamurthy to young artists like Kanimozhi, seeking a sun aflame as a “sandal bowl”, and a name that “does not respond/ To anyone’s voice;” it brings together diverse voices united in their expertise.

_________________________________________________________________________

~oOo~

எழுதியவர்: முனைவர் ராஜம் ரஞ்சனி

அ) திருவரங்கன் உலா – நினைவில் ஒட்டிய வரலாறு.



108 வைணவ திவ்ய தேசங்களுள் முதன்மையான ஶ்ரீரங்கம், அதன் விமானம் சத்ய லோகத்தில் வழிப்படப்பட்டது. பின்னர் இக்ஷ்வாகு குலத்தினரால் வழிபாடு செய்யப்பட்டு ஶ்ரீ ராமர் வரை தொடர்கின்றது. அவ்விமானத்தை ராமர் தன்னிடம் சரணடைந்த விபீஷணனுக்குத் தந்தருள, விபீஷணன் இலங்கை போகும் வழியில் இரு நதிகள் சங்கமிக்கும் இடமான ஶ்ரீ ரங்கத்தில் வைத்தார். ஶ்ரீ ரங்கநாதரே மனம் உவந்து அவ்விமானத்தில் தானே பிரதிஷ்டை செய்து கொண்டாரென கோயில் ஒழுகில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. கோபுரம், புஷ்கரிணி, மண்டபங்கள் என ஆகம முறைப்படி பெரிய ஆலயத்தை அரசர் தர்ம வர்மா எழுப்பினார். அரசர் தர்ம வர்மாவுக்குப் பிந்தைய வரலாறு பற்றிய தெளிவான குறிப்புகள் ஏதுமின்றி ஶ்ரீ ரங்கம், இரு நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்படைந்து, மண்ணால் சூழப்பட்டு வெளிப் பார்வையிலிருந்து முற்றிலுமாய் மறைந்து போனது.

ஒரு முறை அரசர் தர்ம வர்மா பரம்பரையில் வந்த கிளிச் சோழன் மரத்தடி ஒன்றில்ல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மரத்தில் இருந்த கிளி பின்வரும் இரு ஸ்லோகங்களையும் பல தடவை கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டு வியப்படைந்தார்.


காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேசய பிரத்யட்சம் பரமம் பதம்
விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:


அதாவது, இங்கே இருக்கும் காவேரியே வைகுந்தத்தில் உள்ள விரஜை நதி. விமானம்தான் ரங்க மந்திரம், வாசுதேவன்தான் ரங்கநாதனாக இருக்கிறார். இதுவே பூலோகத்தின் உள்ள வைகுந்தம் என்பதே மேற்குறிப்பிட்ட ஸ்லோகங்களின் அர்த்தமாகும். கிளிச்சோழன் புதையுண்டிருந்த ஶ்ரீரங்கத்தை வெளிக் கொணர்ந்தார் என்பது பெரும்பாலோர் அறிந்த செய்தி.
அதன் பின்னர் நெடுந்துயர் கொண்ட வரலாறும் எந்நாளும் மறக்கக்கூடாததாய் அமைந்துவிட்டது.

டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக்கின் மகன் உலூக்கான் கிபி 1323 ஆம் ஆண்டு டில்லியிலிருந்து பல போர் வீரர்களுடனும் குதிரைப் படையுடன் தென் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டான். விக்கிரங்கள், பொன், வைரங்களின் சுரங்கமாய் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அவனது முழு நோக்கமாக இருந்தது. கொள்ளையடிக்கும் செல்வங்கள் பல வருடங்களுக்குப் போதுமானதென அவன் அறிந்திருந்தான்.

‘திருவரங்கன் உலா’ எனும் நாவலில் இவ்வரலாற்றை எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் பதிவு செய்துள்ளார். ஒரு முறை கன்னிமாரா நூலகத்தின் சரித்திரப் பிரிவில் ஏதேச்சையாக ‘South India and her mohammadan invaders’ எனும் நூல் கண்ணில்பட ‘The sack of srirangam’ என்ற பகுதியை வாசித்து முடிக்கின்றார். பதினெட்டு வருட ஆராய்ச்சிகளுக்குப் பின் அதன் வெளிப்பாடே திருவரங்கன் உலா என நாவலின் முன் பகுதியில் நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிறந்த வரலாற்றுப் புனைவு நாவல்களில் ஒன்றெனக் கருதப்படும் இந்நாவலில் வரலாற்றுத் தகவல்கள் முக்கியமானவை.

உற்சவர் அரங்கன் நாச்சிமார்களோடு காவேரிக் கரையை நோக்கிப் புறப்பட நாச்சியாரின் மூலவரை வில்வ மரத்தடியின் கீழ் புதைத்து விட்டனர். டில்லி வீரர்கள் கோயிலுள் உற்சவர் விக்கிரகம் இல்லாததால் வெகுண்டெழுந்த கோபத்தில் வராகமூர்த்தி சன்னிதி முன்புள்ள மண்டபத்தில் கூடியிருந்த ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றனர். அன்று ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் மொத்தம் 12,000. திருவரங்கனைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்த பஞ்சுகொண்டானும் உயிர் துறந்தார். இவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அரங்கப் பெருமாள் வடக்கு வாசலில் எழுந்தருளும் போதெல்லாம் பஞ்சு கொண்டானின் பெயரைப் பாடி, மரியாதை அளிப்பது வழக்கமாக இருந்ததை நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்து கொத்தாக இறந்து கிடந்த வைணவ அடியவர்களின் திருமேனிகளுள் ஒன்றாகக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தார் சுதர்சன ஆசிரியர். இவர் நடாதூர் அம்மாளின் சீடர், சுருதப் பிரகாசிகையை வடித்தவர். ஶ்ரீ ராமானுஜர் இயற்றிய ஶ்ரீ பாஷ்யத்தை உபன்யாசமாக நடாதூர் அம்மாள் காஞ்சிபுரத்திலுள்ள ஶ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வழங்கி வந்தார். அதைச் சுதர்சன ஆசிரியர் பனையோலையில் குறிப்பெடுத்தார். அதுவே சுருதப் பிரகாசிகை என போற்றப்படுகின்றது. சுதர்சன ஆசிரியர், வேதாந்த தேசிகரிடம் சுருதப் பிரகாசிகையுடன் தம் இரு மகன்களையும் சேர்ப்பித்தார். திருவரங்க நகரம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டு சுவாமி வேதாந்த தேசிகர், அபீதிஸ்தவம் என்ற 28 பாசுரங்களை இயற்றினார்.

திருவரங்கன் ஊர்வலம் திருச்சிக்கு அருகாமையில் இருந்த தொண்டைமான் காட்டுக்குள் நுழைந்தது. அந்நாளில் அக்காட்டினுள் பல கள்வர் கூட்டங்கள் இருந்தன. அதையும் ஊர்வலத்தினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் புழங்கிய யவன நாணயங்களுக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ரோம் நாட்டிலிருந்து பண்டமாற்ற முறையில் தருவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மேற்புறத்தில் ஒரு வெட்டு இருக்கும். அந்த நாணயங்களிலுள்ள தங்கத்தின் மதிப்புக்காக, மக்களை மிகவும் கவர்ந்திருந்தது. புனைவின் பகுதியாக குலசேகரன், வாசந்திகா, ஹேமலேகா வருகின்றனர்.

நாவலின் வாசிப்பு நெடுகிலும் அல்லது முற்றிலும் தோன்றக்கூடிய சில கேள்விகளுக்கும் நாவலிலேயே பதில் புதைந்துள்ளது இன்னும் சிறப்பு. உதாரணமாக, ‘எங்கள் படைகள், உங்கள் கோவிலைக் கொள்ளையிட்டபோது, உங்கள் விக்கிரகங்கள் ஏன் வாளாவிருந்தன. இதிலிருந்து தெரியவில்லையா அவை தெய்வங்கள் அல்ல என்று!’ என்ற தளபதியின் கேள்விக்கு,

‘எம் தெய்வங்களுக்குப் பொன்னோ பொருளோ பொருட்டல்ல. அவை இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிடினும் ஒன்றுதான். நாங்கள்தான் எங்கள் விசுவாசத்தையும் பக்தியையும் காண்பிக்கும் பொருட்டு வாழ்க்கையில் எதை உயர்ந்ததாக கருதுகிறோமோ, அவைகளை எம் தியாக உணர்ச்சியின் பேரில், படையல்களாக எம் தெய்வங்களுக்குத் தந்திருக்கிறோம். எம் பார்வையில்தான் அவை உயர்ந்தவையே அன்றி, எங்கள் தெய்வங்களின் பார்வையில் அல்ல. அவை இருந்தும் ஒன்றுதான், இல்லாமலும் ஒன்றுதான்!’ என எளிமையான பெண்ணொருத்தி இவ்வாறு பதிலளிக்கின்றாள்.

அதே போலப், பிள்ளை லோகாசர்யர் ‘பிள்ளாய்! பக்தனாக இருந்தால் யாவற்றையும் லீலையாக கொள்வதன்றோ உத்தமமானது. அப்படி நோக்கினால்தானே நமது துயரங்களோ துக்கங்களோ இலகுவாகக் காற்றில் பறந்து போகின்றன. நம் பெருமாள் திருவரங்கர் இத்தனை நாளாக அரங்கத்திலேயே இருந்து வந்தார். இன்று நாட்டைச் சுற்றிப் பார்க்க உலா போகிறார். இது ‘திருவரங்கன் உலா’ இந்த அற்புதமான உலாவில் நாமெல்லாம் பங்கெடுத்திருக்கிறோம். இது நமது பாக்கியம். இது பகவானது லீலையாகக் கொள்ள வேண்டுமெயன்றி வேறு ஏதாகவும் கொள்ளக்கூடாது’ எனச் சீடரொருவரிடம் விளக்குவதும் படிக்கும் வாசகர் உட்பட அனைவரது கேள்விக்கும் உகந்த பதிலாய் பிரதிபலிக்கின்றது.

அரங்கனின் ஊர்வலத்துக்கு முக்கியப் பொறுப்பு வகித்தவராக பிள்ளை லோகாசர்யர் ஶ்ரீவசன பூஷணத்தில், ‘கேவல நாஸ்திகனைத் திருத்தலாம். ஆஸ்திக நாஸ்திகனைத் திருத்த ஒண்ணாது’ என இரு முக்கிய வாக்கியங்களை அருளியுள்ளார். அதாவது இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கு எவ்வித துயரமும் ஒரு பொருட்டாக இருக்ககூடாது. அவ்விதம் இல்லையெனில், அவர்களே ஆஸ்திக நாத்திகர்கள். அவர்களைவிட நாத்திகர்களைத் திருத்துவது இன்னும் எளிது என்பதே பொருளாகும். திருவரங்கன் உலா பாகம் (1, 2) முழுவதும் இதை நித்தமும் உணர வைக்கும் பகுதிகளே அதிகம்.

  • எழுதியவர்: ஸ்ரீவேணுகோபாலன் [Sri Venugopalan]
  • Paperback – பாகங்கள் 1 மற்றும் 2
  • பக்கங்கள்: 680 pages
  • Published 2002
  • ISBN: 9789387303102
  • வெளியீட்டாளர்: லக்ஷ்மி ஸ்ரீ பதிப்பகம் (மற்றும்) நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
  • வகை: சரித்திர நாவல்

~oOo~

____________________________________________________________________________

எழுதியவர்: அருணா சுப்ரமணியன்

அ) அட்சயபாத்திரா – குறுநாவல்



ஒரு நாவல் வாசகனை ஆரம்பம் முதல் இறுதிவரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னிடத்தே கையகப்படுத்தி ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்குமானால் என்னை பொறுத்தவரை அது மிகச் சிறந்த நாவல். அட்சயப்பாத்திரா அந்த விதத்தில் நூறு சதவிகிதம் மிகச் சிறந்தவோர் நாவல். நாவலில் சொல்லப்பட்ட கதை இவ்வுலகில் நடக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. எனினும் , இதுவரை எங்கும் சொல்லப்படாத ஒரு கோணம் என்றே கருதுகிறேன்.
கதையின் மையக்கரு வங்கிக் கொள்ளையாக இருப்பினும் என்னை மேலும் கவர்ந்த சில விஷயங்கள் உண்டு.

நவீன கால காதல் கதையை போன்று தொடங்கும் இக்கதை மெல்ல வேறொரு பரிமாணம் எடுக்கிறது. இப்போதைய தலைமுறையின் மனப்போக்கை உறவுகளின் பால் அவர்களின் அணுகுமுறையை படம் பிடித்துக் காட்டுகின்றது. உறவுகள் பொருள்சார் நன்மைகளை நோக்கி வழிநடத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதில் பங்கு உண்டு. உண்மையான அன்பும் அர்த்தமுள்ள உறவுகளும் இன்று மலிந்து போயின. பணமே பிரதானமாய் இந்த மில்லினியத்தில் எந்தவொரு உறவின் போக்கையும் வழிநடத்துகிறது. இந்த உண்மையை நாவல் நன்றாக சித்திரிக்கின்றது.

நவீனத்துவம் என்னும் போர்வையில் சிதறுண்டு போகும் இன்றைய காதலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பொருண்மை உலகில் தொலைந்து கொண்டிருக்கும் உன்னதங்களை மறைமுகமாக மேற்கோள் காட்டிவிடுகிறது. வர்ஷா, விமல் மற்றும் அரவிந்த் இடையில் உருவாகும் ஒரு விநோத ஒப்பந்தத்திற்கு மூலமாய் “அட்சயபாத்திரம்” கண்டெடுத்த அரவிந்தின் மூளை இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைத் தன்னகப்படுத்திக்கொள்ள இவர்களில் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்று நாவலைத் தொடர்ந்து வாசிக்க நம்மை இருத்தி வைக்கின்றது. எதிர்பாராதொரு முடிவோடு இக்கதை மனதில் குடிகொண்டுவிடுகிறது.

  • நாவல் விபரம் : அட்சயபாத்திரா
  • ஆசிரியர்: ராம்பிரசாத்
  • வாதினி பதிப்பகம்

Series Navigationகைச்சிட்டா – 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.