தனித்திருத்தல்

நொடிகள் நடக்கிற
சத்தத்தை கேட்டபடி
உறங்கியும் விழித்தும்
கிடக்கிறது
என் அறை.
சூரியனையும்
சந்திரனையும் மற்றும்
சில பறவைகளையும்
மட்டும் காட்டுகிறது
சாளரத் திரை
தவம் எப்படி மூச்சு விடுகிறது
என்பதை ஸ்டெதஸ் கோப்பின்றி
கேட்க முடிகிறது.
ஊரடங்கு உத்தரவிற்கிணங்க
தான் இப்போதைக்கு
வருவதற்கில்லை
என்கிறது வரம்.
பாலை நிலத்து தாகமாய்
பேச்சு நீர்
குடிக்க அலைகிறது செவி.
வீழ்படிவு

அலைந்து அலைந்து ஆடிய திரவம் வீழ்படிவானதை
நேற்றைய தூக்கம் திரிந்த பொழுதில்
கண்டடைந்தேன்
மனசுக்கு இதமாய் இல்லை
பாவம் அதன் வெகுகால அலைச்சல் உறுத்தியது
சரி, அதனை கொன்று விடலாம் இன்னும்
உள் உறைந்து
குமைய வேண்டாம் என
மன ஆழ்ஊற்றில்
சுரந்த ஆபூர்வ திரவத்தில் வீழ்படிவத்தை கலந்து சமைக்கிறேன்.
இதை உண்ணும் போது
ஆடை உடுத்தியிருக்க கூடாது என்பதை அறிந்து இருக்கிறேன்.
இதோ இருள்
திரைச்சீலைக்குள்
என்னை இழுக்கிறது.
உணவின் வாசத்தில்
அதற்கும் இப்போது
பிறழ்வேறி போயிருக்கலாம்.