அளவு மீறினால் பாலும் விஷமோ?

கடலூர் வாசு

பிறந்த முதல் நாளிலிருந்து இறக்கும் வரை,  ஏன் இறந்த  பின்னும்  நம்  வாயினுள் செல்லும் ஒரே பானம் பால்தான் என்பதில் யாருக்குமே  சந்தேகம்  இருக்காது.  இந்து மதம்  பாற்கடலையே  பரந்தாமனின் இருப்பிடமாக  கருதுகிறது. பசுவை  மற்ற பிராணிகளை  போலல்லாமல்  ஒரு தெய்வமாகவே  இந்துக்கள்  பார்க்கின்றனர்.  தேவர்களும்  அசுரர்களும்  மரணத்தை  வெல்லும்  அமிருதத்தை  எடுக்க  வேண்டும்  என்று  பாற்கடலை  கடைந்து  கொண்டேயிருந்தபோது  ஆலஹாலம்  எனும்  கொடிய விஷம்  வெளிக்கிளம்பி அதன் நச்சுத்தன்மையை  தாங்க  முடியாமால்  சிவனிடம்  அவர்கள் சரணாகதி அடைய அவ்விஷத்தை  விழுங்கி  தொண்டையில்  நிறுத்தியதால்  கழுத்தில்  நீலம்  பரவி  நீலகண்டன்  என பெயர்  பெற்றார் என்று  புராணம்  கூறுகிறது.  அளவுக்கு  மீறினால்  அமிருதமும்  விஷமாகும்  என்ற  இப்புராணக்  கூற்றுக்கேற்றபடி  அளவுக்கு  மீறி  அருந்தினால்  தேவ அசுரர்களை போல  நாமும்  பாலின் நச்சுத்தன்மையினால் பாதிக்கப்படலாம்  என்பதைத்தான் நவீன  விஞ்ஞானம் சொல்கிறதோ?

பாலும்  வளர்ச்சியும்:

பாலும்  பாலிலிருந்து  செய்யப்படும்  தயிர் , பாலடைக்கட்டி  போன்ற  பொருட்களும்  மேற்கத்திய  நாடுகளின்  உணவில்  முக்கிய  பங்கை  வகிக்கிறது.  அமெரிக்காவில் மூன்று 8 அவுன்சு(270 மில்லி) பாலோ அல்லது பாலைசார்ந்த பொருட்களையோ தினமும் உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 9 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டிய கால்சியம்  எலும்பில் சேருவதால் பிற்காலத்திய எலும்புச் சிதைவை தடுக்கலாம்  என்ற எதிர்பார்ப்புதான்.  ஆனால் இது  இன்று வரை உறுதிப்படுத்தபடவில்லை  இந்த அளவு பால் உணவில் சேர்ந்தால்  உடலுக்கு ஊறு விளையும்  வாய்ப்புள்ளது  சராசரி அமெரிக்கர் அருந்தும் அளவு பரிந்துரைப்பதில் பாதிதான்

பாலூட்டிகளின் வளர்ச்சிக்கு  இன்றியமையாததனால்   பால்  ஒரு முழு சத்துணவாகும்  அதிக அளவு பால் சுரப்பதற்காக  இன்சுலின்  போன்ற   வளர்ப்பு  காரணி 1 (Insulin Growth Factor 1 (IGF 1) யை  அதிகமாக  சுரக்கும்  கறவை  மாடுகளின்  இனப்பெருக்கம்  எல்லா  நாடுகளிலும்  ஊக்குவிக்கிப்படுகிறது.  கிட்டத்தட்ட  எல்லா  நேரமும்  இக்கறவை  பசுக்கள்    சினையாக  இருப்பதால்  ஈஸ்ட்ரோஜென்,  ப்ரோஜெஸ்டின்  போன்ற  இயக்குநீர்கள் பாலில்  அதிக அளவில் உள்ளன.

தாய்ப்பால்  பற்றாதபோது  பசும்பால்  சிசுவின்  வளர்ச்சியிலும்  ஊட்டத்திலும்  முக்கிய பங்கேற்கிறது.  ஆனால் சிறுவர்களின்வளர்ச்சி பாலில்லாமல்,   பி 12,  டி  வைட்டமின்கள் போதுமான அளவு இருக்கும் வரை,  தடைப்படுவதில்லை  ஆனால் பால் சத்துள்ள உணவுடன் சேரவில்லையெனில் உயரம்  குறைகிறது.  இதன்  காரணம்  பாலிலுள்ள ஐசோலூஸின் ,  வேலின் போன்ற  அமினோஅமிலங்கள்  உயரத்திற்கு  தேவையான  ஊட்ட நீரை   அதிகரிக்கிறது.  அதிகமான  உயரம்  கவர்ச்சிகரமான  விஷயம்  மட்டுமல்ல உடல்  நலத்தோடும்   சம்பந்தமுள்ளதுதான்.  உயரமானவர்களிடம் இதயக் கோளாறுகள் ஏற்படுவது   குறைவாக இருந்தாலும்    புற்று நோய் ,  இடுப்பெலும்பு முறிவு,  ரத்த உறைவு(Blood clots)  ஆகியவை  அதிகமாகக்   காணப்படுகின்றன.  எந்த நாடுகளில் பாலும் கால்சியமும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ  அந்நாடுகளில்தான்  எலும்பும்  முறிவும்  அதிகமாக  இருப்பதுதான்   விசித்திரமாக  உள்ளது.  குறைவான  அளவு  பால்  அருந்துபவர்களிடையே  எலும்பு  முறிவும்  குறைவாகவே காணப்படுகிறது.

அருந்த வேண்டிய  பாலின் அளவு  தற்சமயத்தை  விட  மூன்று மடங்கு அதிகமாக  இருக்க வேண்டும்  எனும் பரிந்துரைக்கு காரணம் ஒரேஒரு ஆய்வுக் கட்டுரை மட்டுமே 155 நபர்களின் கால்சியம் உப்பை சமநிலையில் 3 வாரங்கள் இருத்துவதற்கு   உட்கொள்ளவேண்டியஅளவு 741 மில்லிகிராம் என இக்கட்டுரை  முடிவு  அறிவிக்கின்றது.  பெரு நாட்டினரின் கால்சியம் உட்கொள்வு  மிகக் குறைவாகும்  இவ்வாராய்ச்சியை  இவர்களிடையே நடத்தியபோது   200 மில்லிகிராம் அளவே சமநிலையை பராமரிக்கப் போதுமானதாக இருப்பது தெரிய வந்துள்ளது.  அமெரிக்க  ஆய்வில் பங்கேற்ற  நபர்களின்  உணவில்  கால்சியம்  சேர்க்கை  அதிகம என்பதும்  குறிப்பிடத்தக்கது.  உணவில்  கால்சியம்  குறைவாகும்போது  ஜீரண  சக்தி  அதிகரிக்க்கிறது அதிக அளவு உட்கொண்டால்  விரயமாகிறது என்பது இவ்விரு  ஆய்வுகளின் மூலம் தெரிய வருவதால் பாலின்   அளவை  அதிகரிக்க  வேண்டும்  எனும்  ஆலோசனை  தவறானது எனும் முடிவுக்கே  வரவேண்டியுள்ளது.   எலும்பின் நெருக்கம்  1-2 கிராம்  கால்சியத்தை  உட்கொண்டால்  1 வருடத்திற்கு பிறகு  ஒன்றிலிருந்து  மூன்று சதவீதம் அதிகரித்தாலும்   ஒரு வருடத்திற்கு பிறகு  இந்த நெருக்கம் மாதவிடாய் நின்றுபோன மாதர்களிடம் தொடரவில்லை.  அதுமட்டுமல்லாமல் கால்சியம் உண்பதை நிறுத்தி விட்டால் எலும்பின் அடர்த்தி பழைய நிலைக்கே சென்று விடுவதும் இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டது.  மேலும்,  சில வாரங்களோ சில மாதங்களோ நடத்தும் ஆராய்ச்சிகளின் முடிவிலிருந்து  கால்சியத்திற்கும் எலும்பு அடர்த்திக்கும் முறிவுக்கும் உள்ள சம்பந்தத்தை நிர்ணயம் செய்வது அர்த்தமற்றதாகவுள்ளது .  10000  ஆடவர்பெண்டிரின் கால்சியம் சேர்க்கைக்கும்  எலும்பின் நெருக்க அளவிற்கும் தொடர்பேயில்லை.  கால்சியம் அளவு 550  மில்லிகிராமாயிருந்தாலும் 1100 மில்லிகிராமாயிருந்தாலும்  எலும்பின் அடர்த்தி மாறுபடுவதாக தெரியவில்லை வாரத்தில்  1 ½ அல்லது 30 கோப்பை பால் அருந்துபவர்களிடையே இலுப்பெலும்பு  முறிவு வித்தியாசமாக காணப்படவில்லை.  பொதுவாக  இவ்வாய்வுகளெல்லாமே  வைட்டமின் டி யோடு  சேர்ந்த  கால்சியத்தையே  உபயோகப்படுத்தியுள்ளதால்  கால்சியத்தின்  பங்கை  பிரித்தறிவது  சுலபமல்ல.  கால்சியத்தை  மட்டுமே  உபயோகித்துள்ள  5 ஆய்வுளை  சேர்த்து ஆராய்ந்ததில் 814 எலும்பு முறிவானவர்களிடையே கால்சியத்திற்கும் வெற்று மாத்திரைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.  மேலும்,  கால்சியம் எடுத்துக் கொண்டவர்களிடையே எலும்பு முறிவு எண்ணிக்கை அதிகமாக  இருப்பது எதிர்பாராத ஒரு முடிவாகும்.

4லிருந்து 8 வயது வரை கால்சியம் நுகர்வு 1 கிராமாக  இருக்கவேண்டும் என்று அமெரிக்காவிலும் 500 மில்லிகிராமே போதுமென்று  இங்கிலாந்திலும்  அதை சார்ந்த  நாடுகளிலும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  .  ஆனால்,  பருவத்திற்கு  வந்துள்ள  பெண்களிடையே  கால்சியம் நுகர்வு 400  மில்லிகிராமிற்கும் குறைவாக இருந்தபோதிலும் அதன் சமநிலை மாறுவதில்லை சிறுவர்களிடையேயும் கால்சியம் நுகர்வின்    அதிகரிப்பினால் அதிகரிக்கும் எலும்பின் அடர்த்தி ஒரு வருட காலம்  மட்டுமே   நீடிப்பதால்  சிறுவயதில் எலும்பில்  சேரும் கால்சியம் வயது வந்தவர்களின் எலும்புக்கூட்டை ஊட்டமாக வைத்துக் கொள்ளும் எனும் நம்பிக்கை ஆதாரமற்றதாகவுள்ளது.  பருவத்திற்குள்நுழைந்து கொண்டிருக்கும்  குழந்தைகளின்  கால்சியம்   உணவில் 800மில்லிகிராமுக்கும் குறைவாக இருந்தால்,  பாலோ பாலை சார்ந்த பொருட்களையோ 3 கோப்பையளவு 18  மாதங்களிற்கு அதிகரித்தபோதும் எலும்பின் வளர்ச்சி அதிகரிக்கவில்லை.  மேலும்,  பாலை  அதிகரித்தால் உயரம் அதிகரிப்பதும் உயரமானவர்களிடையே எலும்பு முறிவு அதிகமாகக்  காணப்படுவதாலும்,   ஒரு ஆய்வு  இளம்பிராயத்தில் அருந்தும் பாலின்அளவிற்கும் பிற்காலத்திய எலும்பு முறிவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிய முனைந்ததில்  ஒவ்வொரு கோப்பை பாலின் அளவு அதிகரிப்பு ஆண்களிடையே இடுப்பெலும்பு முறிவை 9 சதவீதம் அதிகரிப்பது தெரிய வந்தது.

பாலும் உடற்பருமனும்:

பால்  உடற்பருமனை குறைக்க உதவும்  என்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தாலும்  29  ஆய்வுகளின் கூட்டாய்வு இதை ஆதரிக்கவில்லை.  மேலும் முழுகொழுப்பு பால்,  மற்றும்  பாலடைக்கட்டியிலிருந்து  கொழுப்பு  குறைந்த  பாலிற்கு   மாறுவதின்   மூலம்  பருமன்  குறைவதாக  தெரியவில்லை.  ஆனால்,  தயிருக்கு  மாற்றிக்கொண்டால்  பருமன்  அதிகமாவது  குறைகிறது.  பாலிற்கு  பதில்  தயிரை  சேர்த்து  கொள்வதால்  பருமனாவது  குறைவதோடு    குடல்வாழ்  நுண்ணுயிர்களுக்கும்  இது    சாதகமாக இருப்பதால்  இதர ஆதாயங்களுக்கும் வழிவகுக்கிறது.

குழந்தைகளிடையே  பாலுக்கும்  பருமனுக்கும்  உள்ள தொடர்பைப்   பற்றி  அதிக  அளவில்  ஆய்வுகள்  செய்யப்படவில்லை.  ஒரு  ஆய்வில்  கொழுப்பு(1%)  குறைந்த  பால்  மட்டுமே  அருந்தும்  12000க்கும்  மேற்பட்ட  குழந்தைகள்  3  வருடங்களில் உடல்  பருத்து  விடுவது  கண்டறியப்பட்டது.  இதன்  காரணம்  கொழுப்பு  குறைந்த  பால்  விரைவில்  செரிப்பதால்  பசி அதிகமாகி உடல் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளை உண்பதேயாகும்.  கொழுப்பு நிறைந்த பாலருந்தும் குழந்தைகளை  கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பற்ற  பாலை அருந்தும்  குழந்தைகளுடன் ஒப்பிட்டபோது  முழுக்கொழுப்பு பாலருந்திய குழந்தைகள் உடல் பருக்கவில்லை  ஆனால்,  கொழுப்பற்ற பாலருந்தியவர்களின் உடல் தடிமனாவது  தெரிய  வந்துள்ளது.  இங்கிலாந்து  கூட்டரசின்  1-5  வகுப்பிலுள்ள குறைந்த  வருமானமுள்ள  குடும்பத்திலிருந்து  வரும்  580  குழந்தைகளுடைய  மத்திய  உணவோடு  தினம்  7  அவுன்சு  பாலை தொடர்ந்து   21 மாதங்கள்  கொடுத்தபோது  உயரம் அதிகமானதே  தவிர எடை  கூடவில்லை.  மொத்தத்தில்,  அமெரிக்க அரசாங்கத்தின் விவசாயத்துறை  பரிந்துரைக்கும்  கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பற்ற பால் முழுக்கொழுப்புப் பாலை விட எவ்விதத்திலும் உயர்ந்ததாக தெரியவில்லை

பாலும் இதய,  ரத்தக்குழாய்களும்:

ரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகளில் சோடியம்  குறைவாகவும்    காய்கறி பழங்கள் அதிகமாக இருப்பதாலும் பாலின் பங்கு .  எத்தகையது என்று  பிரித்தறிவது  அரிதாயுள்ளது  மாரடைப்பு,  பக்கவாத  நோயாளிகளுக்கு   கொழுப்பு கொழுப்பில்லாத பால் இரண்டுமே சிவப்பிறைச்சியை விட உயர்ந்ததாகவும் மீன், கொட்டைகளை விட தாழ்ந்ததாகவும் உள்ளது  நிறைவுறா  கொழுப்பு (polyunsaturated fat) ம்,   தாவர   கொழுப்பு  பதார்த்தங்களும்  பாலை விட  உயர்ந்ததாகக்  கருதப்படுகிறது.

பாலும் சர்க்கரை வியாதியும்

சர்க்கரை மிகுந்த பானங்களையும் பழரசங்களையும்  ஒப்பிடும்போது பாலருந்துபவர்களிடையே சர்க்கரை வியாதி குறைவாக உள்ளது  ஆனால்,  காப்பி  அருந்துவர்களை  விட  பாலருந்துபவர்களைதான்  சர்க்கரை  வியாதி  அதிகமாக  பாதிக்கிறது.

பாலும் புற்று நோயும்

பால்  IGF-1(Insulin Growth Factor-1) எனும் இயக்கு நீரை அதிகரிப்பதால்   பாலின் நுகர்விற்கும் மார்பக (Breast)  மற்றும்  ஆண்மை  சுரப்பி (Prostate) புற்று நோய்களுக்கும்  தொடர்பிருந்தாலும்  ஆய்வுகள்   ஆண்மை  சுரப்பி  புற்று  நோய்க்கும்  பாலுக்குமுள்ள   தொடர்ப்பைத்தான்  உறுதிப்படுத்துள்ளன.  பாலின இயக்கு நீர் மாத்திரை (ஈஸ்ட்ரோஜென்) எடுத்துக் கொள்ளாத  மாதவிடாய்  நின்ற  மாதர்களின்  பால் நுகர்விற்கும்   கர்ப்பப் பை   புற்றுநோய்க்குமுள்ள  தொடர்பும்   ஆய்வுகளின்  மூலம்  தெரிய  வந்துள்ளது.

பாழும்  அதன்   ஒவ்வாமையும்  (அலர்ஜி)

நாலு சதவீத கைக்குழந்தைகளுக்கு பால் புரதம் ஒத்துக் கொள்ளாததால்  வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படலாம்.  மரபுவழி ஒவ்வாமை(Atopy)யுள்ள  குழந்தைகள்  பசும்பாலை  அருந்துவதால்  இளைப்பு,  தோலரிப்பு,  உணவு  வகைகளின் ஒவ்வாமை ஆகியவை அதிகரிக்கின்றன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.  பசும்பால் சேராத குழந்தைகளை சோயா பாலிற்கு மாற்றிய பின் 65  குழந்தைகளில் 44 குழந்தைகளுடைய  உபாதைகள்  வெகுவாக குறைந்து விட்டது.  மேலும்,  பசும்பால் இளைப்பு உள்ளவர்களுடைய உபாதையை அதிகரிக்கவும் செய்யகைகூடும்.  .  உலகளவில்,  பாலிலுள்ள லாக்ட்டோஸ் ஜீரணம் செய்யமுடியாத நபர்கள் அதிகரித்துள்ளதால் பால் நுகர்வு பொதுவாகவே குறைந்துவிட்டது.

பாலும் இறப்பும்:

மூன்று மக்கள் குழுக்களை முப்பது வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில்,  முழுக்கொழுப்புப் பால் அருந்துபவர்களின்  இறப்புவீதம் அதிகமாயிருப்பது  தெரியவந்துள்ளது. கொழுப்புகுறைந்த பாலும் பாலடைக்கட்டியும் இறப்போரின் எண்ணிக்கையை  இக்குழுக்களில் அதிகரிக்கவில்லை.  பால்புரதம்  சிவப்பிறைச்சி,  முட்டையுடன் ஒப்பிட்டபோது, இறப்பு  வீதம்  குறைந்தும்,  சிவப்பிறைச்சி, கோழி மீன்களுடன் சம   அளவிலும், தாவர புரதங்களை  விட அதிகமாயிருப்பதும் தெரிய வந்துள்ளது

கரிமப் பாலும் (ஆர்கானிக்,  புல்லுண்ட(grass-fed) மாட்டுப்பால் உற்பத்தியும்:

சாதாரண பாலைப் போல் வளர்ச்சி இயக்குநீர்,  பூச்சிக்கொல்லிகள் கிருமிநாசினிகள் ஆகியவை   சேரவில்லை என்பதால்  கரிமப்பாலிற்கு ஊக்கமளிக்கப்பட்டாலும்,   உடல்நலத்தை பொறுத்தவரை இரண்டு பாலிற்கும் வித்தியாசமில்லை என்று நீண்டகால ஆய்வுகள் சொல்கின்றன.  கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வளர்ப்பு சுரப்புநீர்கொடுக்கப்பட்ட பசும்பால் விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டது.  இதன் காரணம் இச்சுரப்பு   நீரினால்  ஏற்படும் மார்பக வீக்கம், காலடி உபாதைகள்,  குறைவான கருவளம் ஆகியவற்றை பசுக்களிடையே தவிர்ப்பதற்காக எடுத்த முடிவாகும்  இரண்டு வித பாலிலும் பாலின சுபரப்புநீர் அதிகமாகஉள்ளதிற்கு காரணம் சினைமாடுகளை தொடர்ந்து கறப்பதேயாகும்.

பாலும் சூழ்நிலை பாதிப்பும்:

பாலுற்பத்தியை  மிகப்பெரிய அளவில் செய்வதனால் உண்டாகும் பசுமையில்ல வாயுக்கள்,  பருவநிலை மாற்றம்,  தண்ணீர் விரயம்,  மாசு  படிந்த  காற்று  ஆகியவை  வெகுவாக  அதிகரிக்கின்றன. .  சோயாபுரோட்டின்,  பருப்பு வகைகள் தானியங்களின் விளைச்சலை  விட பால் புரத உற்பத்தி 5 லிருந்து 10   மடங்களவு இப்பாதிப்புகளை அதிகரிக்கிறது.  பாலுற்பத்தியை  கட்டுப்படுத்தினால்  சர்வதேச  அளவில்  நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினுள்   பசுமையில்ல  வாயுக்களின்  வெளியேற்றத்தை  கொண்டு  வர  பெரும்  உதவியாக  இருக்கும்.

இறுதிச்  சுருக்கம்:

பால் ஊட்டத்திற்கும்  வளர்ச்சிக்கும்  தேவையான காரணிகளை கொண்டுள்ளது இக்காரணிகள் பாலை  தவிர மற்ற பொருட்களிலிருந்தும் பெறலாம்

பாலின் அளவை அதிகரிப்பதால் பிற்காலத்தில் எலும்பு முறிவை குறைக்க முடியாது

பால் அருந்துவதால் எடையேறுவதையோ சர்க்கரை வியாதியையோ மாரடைப்பையோ குறைக்க இயலாது

பாலருந்துவதை அதிகரித்தால் ஆண்மை சுரப்பியிலும் ,  கர்ப்பப் பையிலும்   புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பால்  சிவப்பிறைச்சியை  விட  உயந்ததாகக்  கருதப்பட்டாலும்  கொட்டை மற்றும்  இதர   தாவர  புரதங்கள்  பாலை  விட  சிறந்ததாக  ஆய்வுகளின் மூலம்  தெரிய  வருகிறது.

தாய்ப்பால்  இல்லாதபோது  பசும்பால்  அதனை  ஈடு  செய்கிறது.

உணவில்  புரதச்  சத்தும்  மாச்சத்தும்  குறைந்துள்ள  இடங்களில்  ஊட்டச்சத்து  மிகுந்த  பால்  இன்றியமையாத  உணவாகும்.  ஆனால்  ஊட்ட  உணவுப்   பற்றாக்குறையில்லாத   நாடுகளில்  அதிக  அளவு   பால்  நுகர்வு  பிற்காலத்தில்  எலும்பு  முறிவின்  எண்ணிக்கையை  அதிகரிக்க  வழிவகுக்கிறது.

பால் நுகர்வை எல்லோருமே  3  பரிமாறல்களாக அதிகரிக்க வேண்டும் எனும் ஆலோசனை   சரியானதாக  தெரியவில்லை  பாலின் அளவு மற்ற உணவுகளின் ஊட்டத்தை பொறுத்துள்ளதாக  அமைய  வேண்டும்.

பாலின் பற்றாக்குறையை கால்சியம் வைட்டமின்டி  உள்ள இதர உணவுகளின் மூலம் சரிசெய்ய முடியும்.

புதிய ஆய்வுகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரும் வரை,  பாலின் நுகர்வு வயது வந்தவர்களிடையே 0-2 பரிமாறல்களாகவும்,  கொழுப்பு குறைந்த , கொழுப்பற்ற பால் வகைகள் முழுக்கொழுப்புப் பாலை விட சிறந்தது  என்று வலியுறுத்தாமலும்  சர்க்கரை சேர்ந்த பால் பானங்களுக்கு  அதிக எடை கொழுப்பு மிகுந்த சமூகங்களில் ஊக்கமளிக்காத வகையிழும்   வழிகாட்டும் ஆலோசனைகளே   சரியானதாகும்.

ஆதாரம்:

Walter C. Willett,  M. D. ,  Dr. P. H. ,  & David S.  Ludwig,  M. D.  Ph. D. N ENGL J MED 382;7 Feb 13,  2020.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.