- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
வடிவெள்ளம்

பொன்னியின் செல்வன் ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் வீர நாராயண ஏரிக்கரையில் தொடங்குகிறது. ஒப்பற்ற அக்கதைக்கு அந்த அழகான இடத்தையும் சந்தோஷமான சுபதினத்தையும் கல்கி தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தின் பெயரில் அடங்கியிருக்கிறது.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலை மோதிக்கொண்டு இருப்பது வழக்கம்.
அருள்மொழியின் மேற்பார்வையில் சோழப் பேரரசு புது வெள்ளம்போலப் பெருக்கெடுக்கப் போகிறது. அதன் பொருளாதாரம் தங்கு தடையின்றி வளரப்போகிறது. அதாவது, வரப்பு உயர, வரப்பில் நீர் உயர, நீருடன் குடி உயர… அந்த வளர்ச்சிக்கு எப்போதும் இருக்கும் சூரியனின் ஒளிக் கதிர்களுக்கும் மேலாக, எங்கோ பெய்த பெரு மழையால் வந்த வெள்ளத்தின் இலவச சக்தி. அக்காலத்தில் விவசாயம் பொருளாதாரத்தின் பிரதான அங்கம். நெல் பயிரிடுவதில் தண்ணீர் பாய்ச்சுவது ஒரு முக்கிய வேலை. புது வெள்ளம் பாய்ந்து ஏரிகளையும் கிணறுகளையும் நிரப்பி அந்த வேலையை எளிதாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும். மக்கள் தொகை பெருகும். சாப்பிட்ட பிறகும் விவசாயிகளிடம் உணவு மிஞ்சும். அதை விற்றுக் கையில் காசு புழங்கும். வரி வாங்க அரசன் மக்களை வருத்த வேண்டாம். விவசாயத்தின் உபரி சக்தியில் தச்சர்கள், கொல்லர்கள், சிற்பிகள், போர் வீரர்கள், அரச குலத்தினர். அவர்களுக்கு நல்வாக்கு சொல்ல ஜோசியர்கள். அரண்மனையின் நிலவறையில் தங்கமும் நவரத்தினங்களும். கோவில்கள் கட்டலாம், மரக் கலங்களில் கடல் கடந்து சென்று நாடுகளை வெல்லலாம். வயிற்றுப்பாட்டை நினைக்காமல் புலவர்கள் காவியங்கள் இயற்றலாம். ஆண்டி முதல் அரசன் வரை எல்லாருக்கும் மகிழ்ச்சி.
ஆறுகளில் நீரோட்டம் மெலிந்து வெள்ளம் வடிவது இயற்கையின் நியதி. சோழப் பேரரசும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு வலிமை இழக்கத் தொடங்கியது. வரப்பில் நீர்மட்டம் தாழ, பயிர்களின் விளைச்சல் குறைய, குடிகளின் எண்ணிக்கை சுருங்க, கனிப் பொருட்களின் வளம் குன்ற, வாள் வேல் கவசங்கள் துருப்பிடிக்க, நிலவறைகள் காலியாக, அகழிகளும் அரண்மனைகளையும் மெல்ல அழிந்துபட… புதிய கோவில்கள் இல்லை, பெருங்காப்பியம் பாடும் கவிஞர்களும் இல்லை.
ஆனாலும், தமிழகம் அழிந்துவிடவில்லை. அதிக ஏற்ற இறக்கம் இல்லாத ஒத்தின் இசை போல சமுதாயம் நடக்கத்தான் செய்தது.
முன்பு கட்டப்பட்ட கோவில்களில் ஆராதனை, பண்டிகைகளின் போது விருந்து. சிற்றிலக்கியங்கள் இயற்ற குமரகுருபரர், திரிகூடராசப்பர். முக்கூடற்பள்ளு காட்டும் வாழ்க்கை நெறியில் எண்ணற்ற கிராமங்கள். கலைகளை ஆதரிக்க மதுரை, தஞ்சை, காஞ்சி என சிற்றரசர்களின் ஆட்சியில் ஒரு சில ஊர்கள். தமிழ் வளர்த்த ஆதீனங்கள், வடமொழியைப் பாதுகாத்த மடங்கள், சங்கீதத்தைப் பெருக்கிய ஆலயங்கள்.
காவிரி பாயும் இடங்களில் மக்கள் அடர்ந்து வசித்தாலும் மொத்தத் தமிழ்நாட்டில் பத்து லட்சம் அளவில் மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. காடுகளை, அவற்றை இல்லமாகக் கொண்ட ஆதி குடிகள் மற்றும் வன விலங்குகளை, இந்த மாற்றங்கள் அதிகம் பாதித்திராது. இயற்கை அன்னை தன் எதிர்காலத்துக்குக் கவலைப்பட வேண்டாம்.
நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஓர் ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர் விளைவிப்பதின் பெரும் பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்து சதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச் சேர்ந்த ஒரு சில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப் பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத் தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கை வீரர்கள்.
இருபதாம் நூற்றாண்டில் இன்னொரு பெரு வெள்ளம். பெட்ரோலிய ஊற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் தரைக்கு அடியில் எண்ணெய் எடுக்கப்பட்டாலும், அதன் முழு வேகத்தையும் அடுத்த நூற்றாண்டில்தான் காண்கிறோம். இந்த வெள்ளத்துக்குப் பல மடங்கு வலிமை. அதனால் மனித குலம் அதுவரை காணாத அதிசயங்கள். நூறு மாடிக் கட்டடங்கள், டைரானசாரஸ் ரெக்ஸைப்போல அறுபது மடங்கு கனமான பறவை, அணு குண்டு, ஏவு கணைகள். பௌதீக உலகில் மட்டும் அல்ல, நம் உணவு வழக்கங்களில், வாழ்க்கை நெறிகளில், சமுதாய உறவு முறைகளில், அரசியல் வழிகளில், அறிவுத் துறைகளில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள். குறுகிய காலத்தில் உருவான அம்மாற்றங்களுக்கு நாம் இன்னும் நம்மை பழக்கிக் கொள்ளவில்லை.
ஹைட்ரோகார்பனின் அடர்சக்தியை (ஒரு லிட்டரில் பத்து நாள் மனித உழைப்பு) முதலில் யூ.எஸ்.ஸும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அனுபவித்தன. அதன் கையிருப்பு குறைந்தபோது அதற்காக போர் தொடுத்தன. பிறகு, உலகின் பிற நாடுகளும். இந்த வெள்ளத்தில் ராக்கஃபெல்லர்கள் கோடி கோடியாகச் சொத்து சேர்த்தது மட்டும் அல்ல. ரூபாயில் மலிவாக வாங்கிய கல்வியறிவை அதிக விலைக்கு டாலரில் விற்கும் அயல் வாழ் இந்தியர்கள், அலைபேசியைக் கையில் பிடித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் என நாம் எல்லாருமே உல்லாசமாக மிதக்கிறோம். பழையாறையில் இருந்து ஆனைமங்கலத்துக்கு யானை மீதிலோ, பல்லக்கிலோ போக அக்காலத்தில் அரசகுமாரிகளாக இருக்க வேண்டும். இக்காலத்தில் ஒரு சாப்பாட்டிற்கான செலவில் சாதாரண மக்களும் அந்தப் பயணம் செய்யலாம்.
பெட்ரோலியத்தின் சக்தியை உணர ஓர் எண்ணப் பரிசோதனை. உங்களைச் சுற்றிப் பாருங்கள்! அதிலிருந்து உருவாக்கப்பட்ட அல்லது அதை எரித்துத் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் மனத்தளவில் அகற்றுங்கள். கடைசியில் நீங்களும் உங்கள் ஆடைகளும் தான். பின்னவை செயற்கை உரம் இடாமல் வளர்த்த பருத்தியில் நெய்யப்பட்ட கதர் உடையாக இல்லையென்றால், நீங்கள் மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட இயற்கை உணவை விறகு அல்லது கரி அடுப்பில் சமைத்து ஜீவித்து இராவிட்டால், காவார் கிணறுகள் இறைக்க இறைக்க வற்றாமல் சுரக்க அல்லாவை வேண்டிக்கொள்ளுங்கள்!
சந்ததியைப் பெருக்க வரிசையாகக் குழந்தைகள், வண்ண வண்ண ஆடைகள், பேரொளி விளக்குகள், தொலை தூரத்தில் விளைந்த உணவு வகைகள், உல்லாசக் கப்பல்கள், கையில் பிடித்த தொடர்பு சாதனங்கள் என நம் கணக்கற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்ததோடு பெட்ரோலியம் இன்னும் பல ‘பரிசு’களை நாம் கேட்காமலே வழங்கி இருக்கிறது. பூமியின் மிகையான வெப்பம், சாரம் இழந்த வயல்கள், வற்றிய ஆறுகள், ஏரிகள், வேகமாக மறைந்து வரும் உயிரினங்கள்… எல்லாவற்றிலும் முக்கியமாக, அர்த்தம் இழந்த மனித வாழ்க்கை.
மேற்கு மலைத்தொடரில் காடுகளை வெட்டாவிட்டால், அதன் பாதையில் அணைகள் கட்டாவிட்டால், காவிரியில் ஒவ்வொரு ஆடியிலும் வெள்ளம் வரும். அதன் வேகம் குறைந்தாலும், கோதாவரியில் மிஸிசிப்பியில் வெள்ளம் பெருகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த பெட்ரோலிய வெள்ளம் சௌதி அரேபியாவிலோ வெனிஸுவேலாவிலோ உற்பத்தியானாலும் உலகம் முழுவதற்கும் பொதுவான டாலர் ஆற்றில் ஓடுகிறது. இது ஒரு பருவத்தில் பெய்த மழையின் சேமிப்பு இல்லை, அடுத்த ஆண்டும் வரும் என எதிர்பார்க்க. பல மில்லியன் ஆண்டுகள் பூமி சேமித்து வைத்த சூரியவொளி. இப்போது வெள்ளம் வடியப் போகிறது. அதன் வேகம் ஏற்கெனவே உச்சத்தைத் தாண்டிவிட்டது. இன்னொரு வெள்ளப் பெருக்கு நிச்சயமாக இல்லை.
இவ்வெள்ளம் ஒரே கணத்தில் நின்றுவிடலாம், இல்லை சிற்றாறு, ஓடை என ஓடி நிற்கலாம். எதுவானாலும் அதன் விளைவு பிருமாண்டமாக (பிரளயம், ஊழித்தீ, கடல்கோள்) இருக்கும் என்பதில் அணுவளவு கூட சந்தேகம் இல்லை.
விஜய நகரத்தின் அழிவுபோல வேகமான வீழ்ச்சியில் அதிகம் மிஞ்சாது. உலக முழுதும் பரவியிருக்கும் இயந்திர நாகரிகம் ஒரேயடியாக (ஒரு பயிர் விளையும் பருவத்துக்குள்) தரைமட்டம் ஆகலாம். அருகிவரும் பெட்ரோலியத்துக்காக ஒரு கதிரியக்க யுத்தம், மிகையான சூட்டில் ஒரு கோடைக் காலம், டாம்போரா போன்ற ஓர் எரிமலை வெடிப்பு – எதாவது ஒன்று போதும். உணவும் தண்ணீரும் வெளியில் இருந்து ஒரு மாதம் கொண்டு வரப்படாவிட்டால் நியுயார்க், டோக்யோ, மெக்ஸிகோ சிடி, மும்பாய் போன்ற பெருநகரங்கள் சொல்ல முடியாத அவதிக்கு உள்ளாகும். நாகரிகத்தில் இருந்து தொலை தூரத்தில் வசிக்கும் ஆதி குடிகள் மற்றும் தாங்களே பயிரிட்டு, பறவை மிருகங்களை வளர்த்து, தண்ணீருக்கும், கழிவுப் பொருளை அகற்றுவதற்கும், மின்சாரத்தை நம்பியிராத சிறு குழுக்கள் மனித இனத்தை தொடரச் செய்வார்கள் என்பது என் நம்பிக்கை.
சோழப் பேரரசின் இறக்கம் போல பெட்ரோலியம் சிறுகச் சிறுகக் குறைந்துப் படிப்படியாக (படிகளின் இறக்கம் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறுபடும்) மனித ஆதிக்கத்தின் சுருக்கத்தைக் கொண்டு வருவது எனக்குப் பிடித்த பாதை. நாகரிகத்தின் சாதனை என எவற்றை நினைக்கிறோமோ (திருக்குறள், நவீன அறிவியல் கொள்கைகள், கணித சமன்பாடுகள்) அவற்றை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு நாம் பாதுகாத்து வைக்க முடியும்.
மனிதர்கள் சிக்கியிருக்கும் இந்த அதி தீவிரமான நெருக்கடி, நெடுங்கால உயிரியல் வரலாற்றையும் இனி வரப் போவதையும் ஒரு சேரப் பார்த்ததுமே தெரிகிறது. இருந்தாலும் அதை முழுவதும் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. அவர்களில் விஞ்ஞானிகள் (ஊகோ பார்டி, டாம் மர்ஃபி), பொறியியலாளர்கள் (ஜீன்-மார்க் யான்கோவிச்சி, ஜார்ஜ் மோபஸ்), கலைஞர்கள் (ராபின்சன் ஜெஃபர்ஸ், பால் கிங்ஸ்நார்த்), சமூக அறிவாளிகள் (எரிக் லின்ட்பெர்க், ராபர்ட் ஜென்ஸன்) என பல துறைகளைச் சேர்ந்தவர்கள். குறைவான எண்ணிக்கைக்கு காரணம்? பசியும், இனக் கவர்ச்சியும் போல… குறுகிய கால நோக்கும், துயரமான நிஜத்தைவிட சொகுசான சொப்பனத்தினால் கவரப்படுதலும் நம் இயற்கை. உலக மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த இக்கட்டுக்குத் தீர்வும் கிடையாது. ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளவோ, காருக்குப் பதில் சைக்கிளில் போகவோ, உல்லாசக் கப்பல் பயணங்களைத் தவிர்க்கவோ எத்தனை பேருக்கு ஒப்புதல்? ஜான் டேவிட் ராக்கஃபெல்லர், தான் அமைத்த சந்தோஷச் சக்கர வியுகத்திற்குள் நம்மை கைநீட்டி அழைத்தபோது முழு விவரம் கேட்காமல் நாம் சுலபமாக உள்ளே நுழைந்துவிட்டோம். அபிமன்யு போல வெளியே வரும் வழிதான் நமக்குத் தெரியவில்லை. அவன் கதிதான் நமக்குமா?
இன்னும் முப்பது ஆண்டுகளிலா, இல்லை ஐம்பது ஆண்டுகளிலா என்பது தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான்கு குதிரை வீரர்களுக்கும் (மரணம், பஞ்சம், யுத்தம், கொள்ளைநோய்) ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை காத்திருக்கிறது. சுயநலம், பகைமை, பழிவாங்கும் மனப்பான்மை, மாறுபட்ட மனிதர்கள் மேல் வெறுப்பு, வஞ்சகம் ஒரு பக்கம். பொதுநலம், மனிதாபிமானம், ஒத்துழைப்பு, மன்னிப்பு, இரக்கம், சமுதாய உணர்வு இன்னொரு பக்கம். இரண்டின் வலிமையையும் காலம் சோதிக்கப்போகிறது.
பெட்ரோலியத்தின் இறங்கு முகத்தின்போது உண்டாகும் விளைவுகளைப் புள்ளி விவரங்களிலும் அட்டவணைகளிலும் தராமல் கதைகள் மூலம் காட்டுவது என் நோக்கம். சூழ்நிலையின் விவரங்களைவிடத் தனிமனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் எப்படி இக்கட்டான நிலமையை எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் எப்போதுமே கதைகளின் சுவாரசியம். கான்க்ரீட் பரப்பின் விரிசலில் வேர்விட்டுப் பூவுடன் வளரும் செடிபோல துயரங்கள் நிறைந்த நிலையிலும் மகிழ்ச்சி காண முடியும் என்கிற எதிர்பார்ப்பையும், தன் முதுகில் ஒட்டியிருக்கும் மணல் இலங்கைக்குப் பாலம் கட்ட உதவுமா என யோசிக்காத அசட்டு அணிலின் நம்பிக்கையையும் சித்திரிக்க ஆசை. இவ்வரிசைக் கதைகள் விவரிக்கும் பிரச்சினைகளில் சில இந்நூற்றாண்டிற்கே உரியவை. மற்றவை முன்பே இருந்தாலும், தற்போது தீவிரம் அடைந்திருக்கின்றன.
சுருக்குவலை
(The Purse Seine, 1937)
ராபின்சன் ஜெஃபர்ஸ்
கடற்கரை வளைவில் ஒரு குன்று
அங்கிருந்து பார்வைக்கு எட்டிய வரை
மேலைக்கடலின் கரிய நீர்ப்பரப்பு
நிலவின் மங்கிய வெளிச்சத்தில்
கடல்மீன்களின் மின்வெட்டும் பளபளப்பு
பால் சிந்திச்சிதறியது போல் ஒரு மீன்கும்பல்
வட்டமிடும் இயந்திரப்படகில் இருந்து
அதைநோக்கி வீசப்பட்ட சுருக்குவலை
அது பரந்து மெல்லத்தாழ்ந்து
வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து
அதன் திறந்த அடிப்பகுதியின் வட்டம்
மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி
வேகமாகச் சுருங்கி இறுக்கிக்கொள்ள,
சரக்கை படகுக்கு இழுத்த வலியகரங்கள்.
எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை
அழகான ஆனால் அச்சுறுத்தும் காட்சி
சிக்கிக்கொண்ட கடல்மீன்களின் கூட்டம்
நீரில் இருந்து நெருப்புக்குள் பாய்ந்த
அழகிய வடிவான வெள்ளிக்கத்திகள்
வலையின் ஒரு புறத்தில் இருந்து எதிர்ப்புறத்துக்கு
வாலை வேகமாகத்துடித்து நீந்தினாலும்
வலையின் கயிறுகள் தான் எல்லை
வேடிக்கை பார்த்த கடல் சிங்கங்கள்
வானம்வரை இரவு விரித்த கறுப்புத்திரை
அம்மீன்களுக்கு எட்டாத தொலைவில்.
கடற்கரையின் எதிர்ப்பக்கம்
நாற்புறம் விரிந்த ஒரு நகரம்
வண்ண ஒளிவிளக்குகளின் வரிசை
அழகான ஆனால் அச்சுறுத்தும் காட்சி
இயந்திரச் சிறையில் சிக்குண்ட மனிதர்கள்
தனித்தன்மை இழந்த
தனித்து இயங்கும் திறனைத் தொலைத்த
இயற்கையில் இருந்து துண்டிக்கப்பட்ட
தானே உணவுதேடி உயிர் பிழைக்கத் தெரியாத
நகர மாந்தர்கள்
இனி தப்பிக்க வழியில்லை.
பூமியின் வீரபுத்திரர்கள் அவர்கள் எப்போதோ
இப்போது வளர்ச்சி என்கிற மாய
சுருக்கு வலையில் சிக்கித் தவிக்கும் வெள்ளி மீன்கள்
வலையின் வடம் குறுகக்குறுக
வாயின் வட்டம் மெல்ல மெல்லச் சுருங்க
படகு நோக்கி வலை இழுக்கப்பட
அவர்கள் அதை ஏன் உணரவில்லை?
வலை எப்போது முழுவதும் மூடிக்கொள்ளும்?
நம் காலத்திலா, நம் குழந்தைகள் காலத்திலா?
யாரால் அதைச் சொல்ல முடியும்?
வலை சுருங்குவது மட்டும் நிச்சயம்
சர்வாதிகார அரசின் வலியகரங்கள்
அனைத்தையும் அபகரிக்க,
மனிதர்களின் தவறுகளுக்கு இயற்கை தண்டிக்க.
நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
அழுகை ஆர்ப்பாட்டம் பயன் தராது.
விரக்தியோ வாய்விட்டு சிரிப்பதோ வேண்டாம்
வியப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை
வாழ்க்கையின் முடிவு இறப்பு நிச்சயமாக
இந்த சமுதாயத்தின் எதிர்காலம் சிதைவு.