நீ உன்னை அறிந்தால்

பானுமதி ந.

https://www.livescience.com/why-freud-was-wrong.html?fwa)
An article by Benjamin Plackett reviewing a book by Frederick Crews titled ‘Freud: The making of an Illusion(Metropolitan Books 2017)

மனிதர்கள் கொள்ளும் ஆழ் மன உணர்வுகளைப் பற்றிய கருத்துக்களுக்காக உலகப் புகழ் பெற்றவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ஆனால், அவைகளை அறிவியல் பூர்வமான கூற்றென்று கொள்ள முடியுமா என்று ஃப்ரெட்ரிக் க்ரூஸ் கேட்கிறார். கலிபோர்னியா பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், ப்ராய்ட்டின் சிந்தனைகளை ஒரு காலத்தில் கொண்டாடி ஏற்றுக்கொண்டவருமான க்ரூஸ் சொல்கிறார்:

“ப்ராய்ட் சொன்ன ஒன்று, உலக அளவில் பேசப்பட்டது, நாம் அனைவரும் நம்மைப் பெற்றவர்களுடன் உடலுறவு கொள்ளும் ஆவலை அடக்கி ஆள்கிறோம் என்பது; ஆனால், இக்கருத்தினை அறிவியல் தரவுகளிலிருந்து அவர் பெற்றிருக்கவில்லை. இப்படியான ஒரு சிந்தனையுடன் தொடங்கி அவர் பின்நோக்கிச் சென்று, தன் கருத்தினை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அங்குமிங்குமச் சிற்சில செய்திகளைக் கோர்த்துத் தன் கருத்தே சரி என்று வாதிட்டார். அவைகளை நிராகரிப்பவர்களை அவர் புறம் தள்ளினார்.”

“ப்ராய்ட் தன்னைத் தானாகவே அறிவியல் வல்லுனர் என்று அறிவித்தவர். எதிர் கருத்துக்களுக்கு அவர் மதிப்பே அளிக்கவில்லை. அந்த மாதிரி மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் பார்த்துச் சிரித்து, அவரை ‘மன நோய் உள்ளவர்’ என்று எளிதாகச் சொல்லிவிடுவார்.”

2017-ல் க்ரூஸ், ‘ப்ராய்ட்: மாயையின் கட்டமைப்பு’ என்ற ஒரு நூலை ப்ராய்டின் கருத்துக்களைப் பரிசீலிக்கும் விதமாக எழுதினார்.

“புள்ளி விவரங்களின்படி நேர்மையற்ற, வழுக்கும் இயல்புள்ள ப்ராய்ட் போன்ற மனிதர்கள் சில உண்மைகளைச் சொல்லவும் கூடும்; என்னால் முடிந்த அளவு அவர் சொன்ன கருத்துக்களை ஆராய்ந்தேன். இவைகளின் பின்னே உள்ள அனுபவச் சான்றுகள் என்னென்ன? இத்தகு கேள்விகளுக்கு அங்கே பதிலில்லை என்பதால் நமக்கு நம்பிக்கையற்றுப் போகிறது.”

மிகக் கடுமையான ஒரு கணிப்பு என்று இதைச் சொன்னாலும், மனப் பகுப்பாய்வுத் துறையின் தந்தையென மருத்துவர் ப்ராய்ட் கருதப்படுகிறார்.

20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞராக அவரது காலத்திலேயே கொண்டாடப்பட்டவர் அவர். மனிதனின் மன நோய்க்குத் தீர்வாக நனவிலி எண்ணங்களை நனவிற்குள் கொண்டு வந்து சீர் செய்ய முடியும் என்று சொன்னவர்.

‘ஈடிபஸ் உளச் சிக்கல்’ என்ற அவரது கருத்தாக்கம் அவரது பல்வேறு சிந்தனைகளில் முக்கியமான ஒன்று எனலாம். சிறுவர்கள் தத்தம் அன்னையருடன் உறவு கொள்வதற்காகத் தந்தையரைக் கொலை செய்யும் ஆழ்விருப்புடன் இருக்கிறார்கள்; ஆனால், தந்தைதான் தம் புரவலர் என்றும் அவர்களுக்குத் தெரியும்; எனவே, அந்த ஆவலை அல்லது எண்ணத்தை அடக்குகிறார்கள் என்பது இந்தக் கருத்தாக்கம். இதை அவர் பெயரிட்ட விதம், அதன் கிரேக்க புராண மூலாதாரத்தைச் சுட்டுகிறது.

க்ரூஸ் சொல்கிறார்: “உலகில் மிகக் கிறுக்குத்தனமான சிந்தை அது”. அவரிடம் சிறு பெண்களைப் பற்றி இதே கேள்வி எழுப்பப்பட்ட போது உடனடியாக ‘தந்தையிடம் மகளுக்கு உருவாகும் பால் ஈர்ப்புச் சிக்கல் அவர்களுக்கு இருக்கிறது, அவர்கள் தந்தையை அப்படி நினைக்கிறார்கள்’ என்றார். “சிறுபிள்ளைத்தனமானதும், நகைப்பதற்கு உகந்ததுமான இது வெட்டி ஒட்டும் செயல் அன்றி வேறென்ன?”

“இந்த இரண்டு கருது கோள்களுக்கும் அடிப்படை ஒன்றே – அது அடக்கப்பட்ட உணர்ச்சிகள் என்பதே. இதை வைத்துக்கொண்டே தன் கருத்துக்கு உடன்படாதவர்களை ப்ராய்ட் மறுதலித்தார். “தன்னுடைய நோயாளிகளிடம் என்ன குறைபாடு உள்ளது என்று தனக்குத் தெரியும் என்பதில் திணிவு கொண்டு அவர்கள் இவரது கருத்திற்கு இசைந்து வரும் வரையில் அவர்களுக்கு மந்திரிப்பார்(!) மாறாக, அவரது நோயாளிகள் அவரது கருத்தை ஏற்கவில்லையென்றால், ஒருக்கால் தான் நினைப்பது சரியில்லையோ என நினைக்க மாட்டார்; பதிலாக அவருக்கு மிகப் பிடித்தமான  மனக் கோட்பாடுகளில் ஒன்றான ‘அழுத்தி வைத்தல்’ என்னும் கூர்வாளை எடுத்துக் கொண்டு ‘இந்த நோயாளி என்னுடைய கருத்துக்களை உள்ளூர ஒத்துக்கொள்கிறான், ஆனால் எதிர் கொள்ளப் பயப்படுகிறான்’ என்ற முடிவிற்கே ப்ராய்ட் வருவார்,” என்று எழுதும் க்ரூஸ் “ஒரு சிந்தனையைப் பரிசோதிக்கும் முறை இதுவன்று” என்றும் சொல்கிறார்.

ஆனால், எல்லோருமே க்ரூஸைப் போல ப்ராய்டை விமர்சிக்கவில்லை. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மன நல மருத்துவத்துறை பேராசிரியரான ராபர்ட் ஸ்டிக்கோல்ட் (Robert Stickgold) ‘கனவுகள், நாளின் வண்டல்கள்’ என்ற ப்ராய்ட்டின் கூற்று சரியானது என்கிறார். ஆனால், உளப்பகுப்பாய்வுகள் மற்றும் சிறு வயதின் புணர்ச்சி ஆசைகள் ஒருவரின் மீது கொணரும் தாக்கம் அவ்வளவு நம்பத்தகுந்ததன்று என்றும் முடிவு கொள்கிறார்.

‘நாளின் வண்டல்’ என நீங்கள் நினைப்பது அதுவே. நிஜத்தில் நடை பெற்றவையின் சாயல்கள் நம் கனவுகளில் இடம் பிடிக்கும். புணர்ச்சிகளைப் பற்றிய கோளாறான சிந்தனைகள், பெண்களின் ‘அச்ச மன உளைச்சல்’ பற்றிய கருத்துக்கள், மூளையின் சில பகுதிகளை அறியா வண்ணம் ஆக்கிரமிக்கும் வன்முறைகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துச் சொல்லாக மாற்றி கருத்துக்களைச் சொன்னதினால் ப்ராய்ட் மேதாவி எனக் கொள்ளப்படுகிறார்.

ந்யூயார்க், ஃபோர்டம் பல்கலையில் (Fordham University) உளவியல் போதிக்கும் பேராசிரியர்  ஹெரால்ட் தகோசியான் (Harold Takooshian)  அவரை  ‘எண்ணங்கள் உற்பவிக்கும் தொழிற்சாலை’ என்று சொல்கிறார்.  “அவர்  தன்னைப்  புள்ளி விவர  நிபுணத்துவம்  உள்ளவராகக்  கருதவில்லை.  மற்றவர்கள்  தகுந்த தரவுகளைக் கொண்டு  தன் கருத்துக்களை  ஏற்றுக்கொள்வதற்கோ  அல்லது நிராகரிப்பதற்கோ முன்வருவார்கள் என்றே நினைத்தார்.”

“தரவுகளின் மூலம் நிரூபணம் செய்யப்படும் கருத்துக்களை அவரால் சொல்ல இயலவில்லை; ஏனெனில் அவை பொருள் தோய்ந்தவையாக இல்லை. அதை எப்படிச் சோதிக்க முடியும்? அவை முழுமை பெறா வாக்கியங்கள் மட்டுமே” என்று சாடுகிறார் க்ரூஸ்.

https://www.livescience.com/do-dreams-reveal-deep-secrets.html

An article by Isobel Whitcomb in Live Science dt Jan 19,2020

ப்ராய்ட் கனவுகளைப் பற்றி, அவை அடக்கி வைக்கப்படும் ஆசைகளின் வெளிப்பாடு என்பதைப் பற்றிச் சொல்லியுள்ளதால் நாம் கனவுகளைப் பற்றி மேற்குறிப்பிட்ட கட்டுரையாளர் சொல்வதையும் பார்ப்போம்.

குளிக்கும் துண்டு ஒன்றை மட்டும் கட்டிக்கொண்டு வேலை நேர்காணலுக்கு நீங்கள் போவதாகக் கனவு கண்டு பதறி எழுந்து நடு நிசியில் உங்கள் படுக்கையில் விழித்துக்கொள்கையில் அது கனவுதான் என்று புரிவதே சிறிது நேரத்திற்கப்பால்தான். வேலையைப் பற்றிய உங்கள் அதீத கவலையோ, சங்கடமான அல்லது வெட்கும் விஷயமோ, சுயத்தின் வெளிப்படுத்தும் இச்சை போன்ற ஒன்றை அடக்கி வைத்து நீங்கள் வாழ்வதோ இந்தக் கனவுகள் சொல்லும் செய்தியாக இருக்கும். அப்படியெனில் நம்முடைய புதைந்த இரகசியங்களைக் கனவுகள் வெளிப்படுத்தும் சாத்தியங்கள் உண்டா?

நம் உள்ளோட்டங்களைக் காண்பிப்பவையாக கனவுகள் இருக்கும் என நீங்கள் ஹாலிவுட் மற்றும் உங்களின் பிரிய நாவல்கள் சொல்லுவதை நம்புபவராக இருந்தாலும் அப்படியான ஒரு தொடர்பை இன்னமும் நிரூபிக்க முடியவில்லை.

டியர்ட்ர பாரெட் (Deirdre Barrett), ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உளவியலாளராகப் பணியாற்றுகிறார். அவர் சொல்வது: ‘கனவுகளுக்குக் குறிகள் கிடையாது. கனவைப் பகுத்துச் சொல்பவரோ, அகராதிகளோ, கனவுகள் உணர்த்தும் செய்தி என்ன என்று சொல்ல முடியாது.’

மனிதர்கள் கனவுகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள காலங்காலமாக முயன்று வருகின்றனர். கடவுளின் செய்தி என்று மொசபடோமியர்களும், எகிப்தியர்களும் கருதினர். கிரேக்கர்களும், ரோமானியர்களும் அவற்றைக் கொண்டு எதிர் காலத்தைத் தீர்மானித்தனர். ஆனால், கனவுகளின் குறிகள் என்பவை நம்மைப் பற்றிய இரகசிய உண்மை என்று 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ராய்ட் சொன்னார். நம்முடைய அந்தரங்க ஆசைகளை, விருப்பங்களை காட்டும் முகமாக கனவுகள் வருகின்றன என்றார் அவர்.

அவருடைய காலத்திற்குப் பிறகு கனவுகளைப் பற்றிய அறிவியல்  வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ப்ராய்ட் சொன்னதை விடவும் உயர்வான ஒன்றை அது சொல்கிறது. கனவுகள் விசித்திரக் கற்பனைகள் அல்ல, அவை இரகசியங்களும் அல்ல. உண்மையில் நீங்கள் பகலில் எண்ணுவதை ஒத்திருக்கிறது இரவில் வரும் கனவு; என்ன ஒன்று, அதை அப்படி நாம் உணர்வதில்லை. இதற்குக் கனவுகள் அர்த்தமற்றவை என்பது பொருளல்ல. சாதாரணமாகப் பகலில் நமக்கு ஏற்படும் சிந்தைகள், ஆர்வங்கள், ஞாபகங்களைத்தான் இரவிலும் உள்ளூரக் கொள்கிறோம்.

‘விந்தையான, மகிழ்ச்சியான நிகழ்வுகள் பற்றிய விருப்பங்கள், பயங்கள், மிரட்டல்கள், நம் சமுதாய வாழ்வு, நாம் நேசிப்பவர் ஆகியோரைப் பற்றிப் படருகிறது நம் கனவு. எனவே, உளவியல் ரீதியாக, அவற்றை நாம் விழித்திருக்கும் போது ஏற்படும் கவலை போன்றவற்றின்  நீட்சியாகத்தான் கனவிலும் காண்கிறோம்’ என வில்லியம் டாம்ஹாஃப் (William Domhoff) சொல்கிறார். கலிபோர்னியா பல்கலையில் அவர் கனவு ஆராய்ச்சியாளர்.

நம் அன்றாட வாழ்க்கையின் பிரதியாக அவை உள்ளன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வினோதமான ஒன்று நடக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்துப் பாருங்கள்- (உங்கள் அம்மா எந்த விளக்கங்களுமற்று வேறோர் உயிரினமாக மாறுவது போன்றவை).

கனவுகள், நாம்  விழித்திருக்கும் போது கொள்ளும் ஆசை, பயம், கவலை போன்றவற்றை ஒத்திருக்கும் என்று நாம் அனுமானித்துக்கொண்டாலும், நம் மூளை நாம் தூங்குகையில் வேறு விதமாகச் செயல்படுகிறது என்பதும் அறியற்பாலதே.

பேரெட் சொல்கிறார்: “நம் மூளை உயிர்வேதியியல் நிலையில் நாம் உறங்குகையில் செயலாற்றுகிறது. அப்படியென்றால், நம் இரசாயன மதுக்கலவை தூங்குகையில் வேறாகிறது. சில பகுதிகள் செயலோய்ந்தும், சில பகுதிகள் சுறுசுறுப்பாகவும் செயல்படும். உதாரணமாக ‘இரண்டாம் பார்வைப் புறணி’ உருவங்களைத் நமது கனவுகளில் காண்பிப்பதற்கு ஏதுவாக சுறுசுறுப்பாக இயங்கும். அந்தச் சமயத்தில், முன்னிருக்கும் புறணி, நம் எண்ணங்களின் வடிகட்டி, ஒய்ந்திருக்கும்.’

சில உளவியலாளர்கள் இதை முக்கியக் கருவியாகக் கருதுகின்றனர். உளவியாளரும், உளவியல் பகுப்பாளருமாகிய கார்ல் ஸ்டுகன்பெர்க் (Karl Stuckenberg) , கனவுகளைப் பொருள் பொதிந்த குறியீடுகளாகவோ, நம்முடைய அடக்கப்பட்ட ஆசைகளை வெளிக்கொண்டு வரும் வழியாகவோ ஏற்பதில் அவ்வளவு உடன்பாட்டினைக் காட்டாவிட்டாலும் தன் மாணவர்கள், மற்றும் நோயாளிகளிடம் ‘கனவின் மூலம் அறிதல்’ பரிசோதனைகளை மேற்கொள்கிறார். குறியீடுகளைக் கொள்ளும் மனதிற்கும், தர்க்க ரீதியான மனதிற்கும் இடையே நடைபெறும் உரையாடல் என இதைச் சொல்லலாம் என்கிறார் அவர்.

கனவுகளைப் பகுத்தறிய சூத்திரங்கள் இல்லை என்கிறார் பேரெட்.  “அவை ஒன்றும் தற்சமயச் சேமிப்பான ஈஸ்டர் முட்டைகள் அல்ல. ஆனால், இந்த உலகை, நம் கனவுகளைக் கொண்டு எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம் என அறிய கனவுகள் உதவும். இவ்விதத்தில் ப்ராய்ட் சரியான ஒன்றைத்தான் சொன்னர். ‘கனவுகள் பொருள் பொதிந்தவையே’ என்பது அவர் கூற்று. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவிப்பவை அவை.”

அகம், புறம் என வகுத்து நம் சங்கத் தமிழ் நூல்கள் இருக்கின்றன; இருந்தும் அவற்றை இணைப்பதின் வழியாகவே அவை வாழ்வைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக ‘நெடுநல்வாடை’ ஒரே பொருள் மன நிலைக்கேற்றவாறு நல்லதாகவும், அல்லதாகவும் அமைவதைக் காட்டுகிறது. பரிபாடல் காமத்தையும், தெய்வத்தையும் அப்படி இணைத்து உள்ளாழம் உணர்த்துகிறது. காமம் புறத்தில் செயலூக்கியாகவும், அகத்தில் களவு வரை செல்வதாகவும் அமைந்துள்ள பாடல்கள், அகத்தின் காமம்தான் புறத்திலும், புறத்தின் தெய்வம் அகத்திலும் என்று சொல்வதை நாம் உளவியல் கூறென்றே சொல்லலாமல்லவா?

“பிணத்தினை விரும்பும் காக்கையே போலே, அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய இழி பொருள் காணில் விரைந்ததில் இசைவாய்; இன்பமே நாடி எண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங்காத்துத் துன்பமே யழிப்பாய், இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், தன்னை அறியாய், சகத் தெலாந் தொளைப்பாய்” மனதைப் பெண்ணாக உருவகித்து பாரதி சொன்ன கவிதை இது.

       

சில வெளிப்படையான சிந்தனைகளுக்கு இக்கட்டுரை இட்டுச் செல்கிறது.

கனவு ஆராய்ச்சியாளர்களில் சிலர் மூளையையும், மனத்தையும், ஒன்றாகக் கருதுகிறார்கள் எனத் தோன்றுகிறது. மேலும் வயதிற்கும், வாழ்வியல் சூழலுக்கும்,காணும் கனவுகளுக்கும் இருக்கும் தொடர்பினை ஆராய்ந்திருக்கிறார்களா என்பதும் சிக்கலான கேள்விதான். மூளையும், மனமும் வெவ்வேறு தன்மை கொண்டவையாக இருக்கும் வாய்ப்பே அதிகம். மூளை பெளதிக உருவுள்ளது; மனம் அப்படியா? மூளை ஓர் அதிகாரி மட்டுமே; உரிமையாளர் இல்லை. நரம்புகளை, உடற் செயல்பாட்டை, நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை, உடல் வலிகளைக்  குறிப்பிட அதனால் முடியும்.அதன் மடிப்புகளில் நினைவு சேகரிப்பும் உண்டு. நம் கோப்புகளைப் பாதுகாத்து தேவையெனில் எடுத்துத்தரும் செயல்பாடும் அதற்கு இருக்கிறது.

அனுபவச் சேமிப்பால் பகுத்தாயும் திறனும் தனித்தே அதற்கு இருக்கிறதா? மனம் என்பது உணர்வு. என்னைப் பொறுத்தவரை அது ஐந்து நிலைகள் கொண்டுள்ளது. உணர்வு நிலை, ஏடு படிந்த உணர்வு நிலை, ஆழ் மன உணர்வு நிலை, மேல் கீழ் ஆழ் மன உணர்வு நிலை, தூய உணர்வு. இதற்கானத் தரவுகள் ப்ராய்ட்டைப் போலவே என்னிடமுமில்லை; அதில் முனைப்போடு செயல்படும் எண்ணமும்….

***

2 Replies to “நீ உன்னை அறிந்தால்”

  1. பிராய்டின் கருத்துகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. சமூக கட்டடமைப்புகளுக்கு பணிந்து வாழ்வதால் சிலர் உள்மனச்சிக்கலுக்கு வார்த்தை வடிவமும் எழுத்து வடிவமும் கொடுக்க முன்வருவதில்லை.

    1. ப்ராய்ட் தன்னத்தானே நிறுவியவர். ஆனால்,அனுமானங்களைக் கொண்டுதான் எதையும் சொன்னார். அறிவியல் பூர்வமாக எதையும் நிறுவ முயலவில்லை. தன் முடிவுகளைப் பற்றிக்கொண்டு அது மனிதர்களுக்குப் பொதுவானது என்றே வாதிட்டவர் அவர். ஆனாலும், நிலவறையில் ஒரு சிறு வெளிச்சம் பாய்ச்சியவர் அவர். மனத்தின் ஐந்து நிலைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று சொல்வீர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.