நண்பன்

ஸிக்ரிட் நூன்யெஸ்

தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன்

[நூன்யெஸ் எழுதிய ‘த ஃப்ரெண்ட்’ என்ற நாவலின் அத்தியாயம் 11]

***

கதையை எப்படி முடிக்க வேண்டும்? இது போல் முடிய வேண்டும் என்று இப்போது சில காலமாய் நினைத்துப் பார்க்கிறேன்.

தன் அபார்ட்மெண்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் ஒரு நாள் காலை, வெளியே போகத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். சூரியனும் மேகங்களும் சமபொழுது இருக்கும் வசந்த காலத்தின் துவக்க நாள்களில் ஒன்று. மாலையில் மழை பெய்யக்கூடும். காலையில் விடியும்போதே அந்தப் பெண் கண் விழித்துவிட்டாள்.

இப்போது மணி என்ன?

எட்டு மணி.

தூங்கி எழுந்தது முதல் எட்டு மணி வரை அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருந்தாள்?

படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மறுபடியும் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு குறிப்பிட்ட இவ்வகை தூக்கமின்மை இருக்கிறதா: அடிக்கடி கண் விழித்தல், தொடர்ந்து உறக்கம் பிடிக்காமை?

ஆமாம்.

இப்படி நடக்கும்போது மறுபடியும் தூங்குவதற்கு அவள் ஏதாவது ஒரு சின்ன உத்தி எதுவும் வைத்திருக்கிறாளா?

ஆயிரத்தில் துவங்கி தலைகீழாய் எண்ணுகிறாள். ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் அகர வரிசையில் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால், இன்று காலை எதுவும் வேலை செய்யவில்லை.

எனவே, அவள் எழுந்திருந்தாள். அதற்கு அப்புறம்?

காப்பி போட்டாள். சமீபத்தில்தான் வாங்கியிருந்த ஒற்றைக் கோப்பை மோக்கா பானையில் எஸ்ப்ரெஸ்ஸோ கொதிக்க வைத்துக் கலந்து கொண்டாள். இதற்கு முன் அவள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஃப்ரெஞ்ச் ப்ரஸ் காஃபி ஃபில்டரை போன மாசம்தான் தெரியாத்தனமாக உடைத்து விட்டாள். அதைவிட இது அவளுக்குப் பிடித்திருக்கிறது. பொதுவாகச் சொன்னால், காலை வேளையில் இந்தச் சடங்கு செய்வது அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டே காப்பி போட்டுக் குடிப்பது.

அந்தப் பெண் காதில் விழுந்த செய்தி என்ன?

உண்மையில், இன்று காலை அவள் ஏதோ நினைவாக இருக்கிறாள், நிஜமாகவே எதையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

அவள் ஏதாவது சாப்பிட்டாளா?

ஒரு கோப்பை வெறும் தயிரில், சில உலர்ந்த திராட்சைகளும் வால் நட்டுக்களும் கலந்து அதில் பாதி வாழைப் பழத்தை வெட்டிப் போட்டு ஊற வைத்துச் சாப்பிட்டாள்.

காலை உணவுக்குப்பின் என்ன செய்தாள்?

மின்னஞ்சல் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். ஒரு மடலுக்குப் பதில் போட்டாள். ஒரு பாடத்துக்கு தேவைப்படுகிறது என்று சில புத்தகங்களை அவள் கல்லூரிப் புத்தகக் கடையில் கேட்டிருந்தாள், அது தொடர்பாக அவர்கள் விசாரித்து எழுதியிருந்தார்கள். பல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கும் நேரத்தை உறுதி செய்தாள். குளித்தாள், ஆடை அணிய ஆரம்பித்தாள். ஆனால் அவள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது, நாள் அந்த மாதிரி இருந்தது. ஸ்வெட்டர் போட்டுக் கொண்டால் ரொம்ப புழுங்குமா? மழைக் கோட்டு மிகவும் சன்னமாக இருக்குமோ? குடை எடுத்துக் கொண்டு போகலாமா? தொப்பி? கையுறைகள்?

அந்தப் பெண் இன்று காலை எங்கே போகிறாள்?

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியிருக்கும் பழைய நண்பர் ஒருவரைப் பார்க்க.

கடைசியில் அவள் என்னதான் அணிந்து கொள்ள முடிவு செய்கிறாள்?

ஜீன்ஸ், உள்ளுக்குள்  கழுத்து வரை மூடிய சட்டை, அதன் மேல் பட்டன் வைத்த கம்பளி ஸ்வெட்டர், தலைவரை போர்த்துக் கொள்ளக்கூடிய மழையங்கி.

அந்தப் பெண் தன் நண்பரின் வீட்டுக்கு எப்படிப் போகிறாள்?

மான்ஹாட்டனிலிருந்து ப்ரூக்லின் வரை சப்வேயில் போகிறாள்.

வழியில் எங்காவது நிற்கிறாள்?

மான்ஹாட்டன் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு பூக்கடையில் சில டாஃபடில் மலர்கள் வாங்குகிறாள்.

நிறுத்தம் வந்து, இறங்கியவுடன் நேராகத் தன் நண்பரின் வீட்டுக்குப் போகிறாளா?

ஆமாம், அங்கே பார்த்தால் அவள் தன் நண்பர் இருக்கும் செங்கல் கட்டடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவள் பார்க்கப் போகும் நண்பரும் தனியாக இருப்பவரா?

இல்லை, அவர்  தன் மனைவியுடன் வாழ்கிறார். அவள் இன்று காலை வீட்டில் இல்லை, வேலைக்குப் போய் விட்டாள். ஆனால் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. கதவு மணி அடித்ததும் அது குலைக்கிறது  பார். கதவு திறக்கிறது, அவர்  வெளியே வருகிறார், அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து வரவேற்கிறார். அவர் அணிந்திருக்கும் ஆடையும் – ஓர் உடன்நிகழ்வாக – அவள் தன் மழையங்கிக்கு கீழே அணிந்திருப்பது போலவே இருக்கிறது: நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிறத்தில் கழுத்து வரை மூடிய சட்டை, பட்டன் வைத்த சாம்பல் நிற கம்பளி ஸ்வெட்டர். அவர்கள் தொடர்ந்து சில நொடிகள் ஒருவரையொருவர் இறுக்கிக் அணைத்துக் கொண்டு நிற்கிறார்கள், நாய், சின்னஞ் சிறிய டாக்ஸுண்ட் வகை நாய், குலைத்துக் கொண்டே அவர்கள் மீது தாவுகிறது. 

இப்போது அவர்கள் முன்னறையில் வசதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் செய்த தேநீரைப் பருகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தட்டில் வைக்கப்பட்ட சில ஷார்ட்பிரெட் குக்கிகள் தொடப்படாமல் இருக்கின்றன. ஜன்னல் படியில் வெளிச்சம் விழும் இடத்தில் ஒரு சிறு பளிங்குத் தாழியில் டாஃபடில் பூக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, அவை ஒரு நியான் ஒளிர்வுடன் பிரகாசிப்பது  அவற்றைப் போலி போல் காட்டுகிறது (என்று அந்தப் பெண்ணால் நினைக்காமல் இருக்க முடியவில்லை). ஒன்றின் தண்டுப் பகுதி வளைந்திருக்கிறது. குற்றம் செய்து விட்டு வெட்கப்படுவது போல் அந்தப் பூ குனிந்திருக்கிறது, அல்லது தன் மீது ஒளி விழுவதற்கு அது வெட்கப்படுவது போலிருக்கிறது.

நோய்ப் படுக்கையிலிருந்து மீண்டவர் போல் அவர் முகம் வெளிறியிருப்பதும், ஆள் இளைத்திருப்பதும் தெரிகிறது. அவரது குரலில் சிரமம் தெரிகிறது, உரக்கப் பேசுவதற்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது போல். ஏதோ ஒன்று வெடிக்கப் போகிறது, அல்லது, உடையப் போகிறது என்பது போல் காற்றில் ஒரு இறுக்கம் தெரிகிறது. அந்த நாய் இதை உணர்ந்து கொள்கிறது, அந்தக் காரணத்தால் அது தன் பிரப்பங்கூடையில் அசையாமல் படுத்திருந்தாலும்கூட, தன்னை தளர்த்திக் கொள்ளத் தவிக்கிறது, அவர் பேசுகிறார். நாய் தன் பெயர் கேட்டதும் வாலைத் தரையில் அடித்துக் கொள்கிறது.

 “ஜிப்பை நீ பார்த்துக் கொண்டதற்காக நான் உனக்கு மறுபடியும் நன்றி சொல்ல விரும்பினேன்.”

 “அவனால் ஒரு பிரச்சினையும் இல்லை,” என்று அந்தப் பெண் சொல்கிறாள். “அவனை வைத்துக் கொண்டிருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. உங்களுடைய புசுபுசுவென்ற ஓர் அம்சம் என்னோடு இருப்பது போலிருந்தது.”

 “ஹா,” என்கிறார் அவர், அந்தப் பெண் சொல்கிறாள், “என்னால் உதவி செய்ய முடிந்தது என்பதே சந்தோஷமாக இருந்தது.”

 “நீ ரொம்ப பெரிய உதவி செய்திருக்கிறாய்,” என்று அவர்  சொல்கிறார். “ஜிப் நல்ல பையன்தான், ஆனால் செல்லம் கொடுத்துக் கெட்டுப் போய் விட்டான், அவனை நிறைய நேரம் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாவம், என் மனைவி, அவளுக்கே எக்கச்சக்க பிரச்சினைகள். ஓர் இடைவெளி. அவர் தன் குரல் தாழ்த்துகிறார். “இருக்கட்டும், இதைக் கேட்க நினைத்தேன். அவள் உன்னிடம் என்னதான் சொன்னாள்?”

 “வேலை விஷயமாக வெளியே போயிருந்ததாகவும், டென்வரில் சூறைக் காற்று வீசியதால் விமானம் தாமதமாகி விட்டது என்றும் சொன்னாள். ஏர்போர்ட்டிலிருந்து உங்களை அழைக்க முயற்சி செய்தாளாம், ஆனால், நீங்கள்  எடுத்துப் பேசவில்லையாம். அதன்பின் விமானம் ரத்து செய்யப்பட்டது, அவள் வீட்டுக்கு வாடகைக் காரில் வந்தாள். இங்கே வந்ததும், உள்ளே வர வேண்டாம், என்று வேலைக்காரிக்கு நீங்கள்  எழுதி வைத்திருந்ததை அவள் பார்த்திருக்கிறாள். 911 அழைக்கச் சொல்லி எழுதியிருந்தீர்களாம்.”

பேசிக் கொண்டிருப்பவளை அவர்  பார்ப்பதில்லை. ஜன்னல் படியிலிருக்கும் டாஃபடில் பூக்களை வெறித்துக் கொண்டிருக்கிறார். அவற்றின் பிரகாசம் அவர் கண்களைக் கூசச் செய்வதால் கண்களை இடுக்கிக் கொள்கிறார் . அவள் பேச்சை நிறுத்தும்போது இன்னும் பேசட்டும் என்று எதிர்பார்ப்பது போல் காத்திருக்கிறார். அவள் மேலே பேசாததால், “ஒரு மாணவன் இதைக் கதையில் எழுதி இருந்தால், நம்ப முடியாத அளவு எளிமையாக இருக்கிறதே, என்று சொல்லியிருப்பேன்.” என்கிறார்.  

அக்கணம் ஒரு மேகம் சூரியனைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது, அறை இருட்டுகிறது. கண்களில் கொட்டுவாய் வைத்திருக்கும் கண்ணீரின் அச்சுறுத்தலை உணர்ந்ததும் பெண்ணின் மனதில் அச்சம் பீறிடுகிறது. 

 “அத்தனையையும் திட்டம் போட்டுச் செய்தேன்,” என்று அவர்  சொல்கிறார் . “ஜிப்பை நாய்க்  காப்பிடத்துக்குக் கொண்டு போய் விட்டேன். அறையைச் சுத்தம் செய்யும் பெண் அடுத்த நாள் காலைதான் வருவதாக இருந்தது.”

 “ஆனால் இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று அந்தப் பெண் சற்று சத்தமாகவே கேட்கிறாள். அது நாய்க்குத்  தூக்கி வாரிப் போடச் செய்கிறது. “இப்போது எப்படி இருக்கிறீர்கள்?”

 “அவமானமாக இருக்கிறது.”

அந்தப் பெண் ஆட்சேபிக்க ஆரம்பிக்கிறாள், ஆனால் அவர்  அவளைப் பேச விடுவதில்லை. “அது உண்மைதான். எனக்கு அசிங்கமாக இருக்கிறது. ஆனால், அது பொதுவாக எல்லாருக்கும் இருப்பதுதான்.”

எனக்குத் தெரியும், என்று அந்தப் பெண் சொல்வதில்லை. நான் தற்கொலை பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

 “ஆனால் அது மட்டுமல்ல,” என்று சொல்கிறார் , தன் முகத்தை உயர்த்தி நேராய்ப் பார்க்கிறார். “கடைசியில் நான் ஒன்றும் அவ்வளவு விசேஷமானவன் அல்லன் என்பது தெரிகிறது. தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போன பலரைப் போன்றவன்தான் நானும். என் உயிர் தப்பியது என்று சந்தோஷப்படுகிறேன்.”

என்ன சொல்வது என்று தெரியாமல் அந்தப் பெண் சொல்கிறாள், “சரி, இது நல்ல விஷயம்தான்!”

 “எனக்கு ஏன் இன்னும் அதிகம் வலிக்கவில்லை என்று தோன்றிக் கொண்டேதான் இருந்தது,” என்று அவர்  தொடர்கிறார்.

“பெரும்பாலான நேரம் எனக்கு மயக்கமாய் இருக்கிறது, அல்லது மரத்துப் போனது போல். எல்லாமே ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாதிரி – அல்லது எதுவுமே நடக்காத மாதிரி. ஆனால் அதற்கு மருந்தும் ஓரளவு காரணம்.”

மேகம் நகர்ந்து விட்டது. மீண்டும் ஒளி பொழிந்தது.

 “வீட்டுக்கு வந்து விட்டது உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமே,” என்கிறாள் அவள்.

அவர்  சற்று நேரம் அமைதியாக இருக்கிறார். “ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தது நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருந்தது. இரண்டு வாரம் இருந்தது போல் இல்லை, பல மாதங்கள் இருந்த மாதிரித் தோன்றியது. மனநோய் சிகிச்சைப் பிரிவில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. அதைவிட மோசம், என்னால் படிக்க முடியாமல் போனதுதான். மனம் எதிலும் நிலை கொள்ளவில்லை, ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்ததும் அது மறந்து போய் விடும். என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியக் கூடாது என்று நான் நினைத்ததால், என்னைப் பார்க்க யாரும் வரவும் முடியாது. அப்புறம் ஒன்று, என் குடும்பத்துக்கு வெளியே உன் ஒருத்திக்கு மட்டும்தான் முழுக் கதையும் தெரியும். இப்போதைக்கு இது இந்த மாதிரியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.”

அவள் தலையசைக்கிறாள்.

 “அது முழுக்க முழுக்க மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது,” என்று அவர்  மேலே சொல்கிறார். “நானும் திரும்பத் திரும்ப எனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தேன்: எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு மோசமான விஷயம் நடந்தால், அது எவ்வளவு மோசமாகவே இருக்கட்டும், அதில் எப்போதும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது.”

 “ஓ,” என்று அந்தப் பெண் நிமிர்ந்து உட்கார்கிறாள். “அப்படியானால் நீங்கள்  இதைப் பற்றி எழுதப் போகிறீர்களா?”

 “அதற்கான சாத்தியங்கள் நிச்சயம் உண்டு.”

“புனைவா, அல்லது சுயசரிதைக் குறிப்புகளா?

 “அப்படியானால், நீங்கள் இப்போது எழுதிக்  கொண்டிருக்கிறீர்களா? உங்களால்  எழுத முடிகிறதா?”

 “ஆமாம், உண்மையில் இதைப் பற்றிதான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்பட்டேன். சிகிச்சைப் பகுதியில் ஒரு சிறு பயிலரங்கு நடத்தினோம். குழுச் சிகிச்சையின் ஒரு பகுதி அது. அங்கே ஒரு பெண் இருந்தாள், மகிழ்வு முறை மருத்துவர் என்று சொல்கிறார்கள். அவள் எங்களை உரைநடைக்குப் பதில் கவிதை எழுதச் சொன்னாள் – நமக்கு அதிகம் நேரமில்லை, என்றாள் அவள், ஆனால் நிச்சயம் வேறு காரணங்களும் இருந்திருக்கும். அதன் பின் எல்லாரையும் அவர்கள் எழுதியதைச் சத்தமாகப் படிக்கச் சொன்னாள். விளக்கம், விமரிசனம், எதுவும் கிடையாது. வெறுமனே பகிர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான். எல்லோரும் மிக மோசமாக எழுதினார்கள், எல்லாரும் அதைப் பற்றி புளகாங்கிதப்பட்டுக் கொண்டார்கள். கவிதை என்று சொல்ல முடியாத அத்தனை மட்டமான கவிதைகள் – உனக்குப் புரிகிறதுதானே? நடுங்கும் குரல்கள், உடையும் குரல்கள். வாசித்து முடிக்க யுகாந்திரம் எடுத்துக் கொள்ளும் கவிதைகள். எல்லாரும் ரொம்ப தீவிரமாக இருந்தார்கள். தங்கள் ஈரல் குலையை அறுத்துக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதும் மற்றவர்களை அழச் செய்யும் அளவு நெகிழ்ச்சியாய் இருப்பதும் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை நீ புரிந்து கொள்ள முடியும். அது போக, கடவுளே, அழுதார்கள் என்றா சொன்னேன். ஒவ்வொரு கவிதைக்கும் வெகு நேரம் கை தட்டினார்கள். ரொம்ப வினோதமாக இருந்தது. நான் அத்தனை வருஷம் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறேன், அந்த அறையில் நான் அனுபவித்த உணர்ச்சி போலொன்றை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது, ரொம்ப வித்தியாசமாக இருந்தது.”

 “உங்களை அந்த மாதிரி நிலையில் என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.”

 “நான் சொல்வதை நம்பு, அந்த முரண்நகையை நானும் உணர்ந்தேன். இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். பொழுது போக்குவதற்காக அல்ல, எங்கள் பயம் குறையும் என்று நினைத்துக் கொண்டு, புத்தகங்களில் வண்ணம் பூசச் சொல்லி ஊக்குவித்துக் கொண்டே இருந்தார்கள் இல்லையா, அதில்கூட நான் கலந்து கொள்ள ஆசைப்படவில்லை, அந்த மாதிரிதான். ஆனால், எனக்கு இது பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் எல்லாருக்கும் நான் ஓர் எழுத்தாளன் என்பதும், எழுதச் சொல்லித் தருகிறவன் என்பதும் தெரிந்திருந்தது, நான் ரொம்ப கர்வம் பிடித்தவன் போல் இருந்திருக்கும். நான் சொன்னது போல், சிகிச்சைப் பகுதியில் வாழ்க்கை ரொம்ப சலிப்பாக இருந்தது. என்னால் படிக்க முடியவில்லை, வெளியே வேடிக்கை பார்க்கப் போகவும் மறுத்து விட்டேன் – தெரிந்தவர் யாரையாவது பார்த்துவிட்டால் அப்புறம் ஒரு தாதிப் பெண்ணும் கிறுக்குப் பயல்களும் இருக்கிற கூட்டத்தில் ஒருத்தனாய் நானும் ஒரு சினிமா தியேட்டரில், இல்லை, மியூசியத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும் என்று பயந்து நடுங்கினேன். ஒன்றுமில்லை என்றாலும் பயிலரங்கு எனக்குக் கவலைகளை மறக்க உதவும், ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று நினைத்தேன். அது போக, முழு உண்மையைச் சொன்னால், அங்கே ஒரு சிகிச்சையாளர் இருந்தார். அந்தப் பெண் அவ்வளவு பெரிய அழகியல்லள், ஆனால் அவள் சின்னப் பெண்ணாக இருந்தாள், அவளைப் பார்க்கவே கிளுகிளுப்பாக இருந்தது, உனக்குத்தான் என்னைத் தெரியுமே. அவள் என்னை கவனிக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கலாம், எனக்கு அவள் தாத்தா வயது இருக்கலாம், ஆனால்கூட அவள் என்னைப் பற்றி உயர்த்தியாய் நினைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உண்மையில், எனக்கு அவளைப் போட வேண்டுமென்று ஆசையாக இருந்தது – அது நடக்காது என்று எனக்கும் தெரியும். எப்படியோ, நான் கல்லூரியில் படித்த காலத்துக்கு அப்புறம் கவிதை எழுதியதில்லை. அத்தனை வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் அதற்குத் திரும்புவதில் ஏதோவொன்று மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்கள் கை தட்டியதை நான் சாகும்வரை மறக்க மாட்டேன். இதில் ஒரு பெரிய ஆச்சரியம், அதற்கு அப்புறமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

 “நீங்கள் கவிதை எழுதுகிறீர்களா?” அந்தப் பெண் உள்ளத்தில் அச்சம் பொங்கி எழுகிறது. இந்தக் கவிதைகளில் சிலவற்றை அவள் படிக்க வேண்டும் என்று சொல்வாரோ என்று நினைத்துக் கொள்கிறாள். அல்லது, அதைவிட மோசம், அவர் படித்துக் காட்டுவதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கச் சொல்லலாம்.

 “இப்போது அதெல்லாம் யாரிடமும் காட்டுகிற நிலையில் இல்லை,” என்கிறார் அவர். “ஆனால், இந்தச் சமயத்தில் சின்னச் சின்ன விஷயங்களைச் செய்வது எனக்கு சுலபமாக இருக்கிறது. வெளிப்படையாய்ச் சொன்னால், நீளமாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதே என்னை பீதியடையச் செய்கிறது. நான் எழுதிக் கொண்டிருந்த புத்தகத்தை மறுபடியும் எடுத்து எழுதுவது – நாய் தன் வாந்திக்குப் போவது போல்! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

அவள் புதியதாய் நடத்தத் துவங்கியிருக்கும் பாடம் பற்றிச் சொல்கிறாள். வாழ்வும் கதையும். சுயசரிதை வடிவில் புனைவு, புனைவு வடிவில் சுயசரிதை. ப்ரூஸ்ட், இஷர்வுட், ட்யூரா, க்னௌஸ்கார்.

 “அந்த சிறு பிள்ளைகளை ப்ரூஸ்ட் வாசிக்கச் செய்து விடுவாயா, வாழ்த்துகள். அப்புறம் நீ ஒரு விஷயம் எழுதிக் கொண்டிருந்தாயே, அது என்ன ஆயிற்று? அதை முடித்து விட்டாயா?

 “இல்லை, அதைக் கைவிட்டு விட்டேன்.”

 “ஐயோ, இல்லை. ஏன்?”

அந்தப் பெண் தோள்களை குலுக்கிக் கொள்கிறாள். “அது வேலைக்கு ஆகவில்லை. எனக்குக் குற்ற உணர்ச்சி இருந்தது என்பதும் ஒரு காரணம். யாரைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேனோ அவர்களை என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பது போல் தோன்றியது. எனக்கு ஏன் அப்படி ஒரு நினைப்பு வந்தது என்பதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது, ஆனால் அந்த மாதிரிதான் இருந்தது. உங்களுக்கே தெரியும், குற்றவுணர்ச்சி எப்படிப்பட்டது என்று. அது நெருப்பும் புகையும் போல: ஒன்றுமில்லாமல் அப்படி இருக்காது.”

 “ஆனால் அது பேத்தல்,” என்கிறார் அவர். “எல்லாமே எழுத்தாளனுக்கு உரிய விஷயம்தான். அதை நீ எப்படி பயன்படுத்துகிறாய் என்பதுதான் முக்கியம். நான் தவறு என்று நினைப்பதைப் பற்றி எழுதச் சொல்லி உன்னை ஊக்குவித்து இருப்பேனா?”

‘மாட்டீர்கள். ஆனால் உண்மையில் இந்தப் பெண்களைப் பற்றி எழுதச் சொன்னபோது நீங்கள் அவர்களை நினைக்கவில்லை, என்னைப் பற்றித்தான் நினைத்தீர்கள். அவர்களை எழுதுவது எனக்கு நல்லது என்று நினைத்தீர்கள். நான் எழுதுவது அச்சில் வரும், அதைப் படிப்பார்கள், எனக்குப் பணம் கிடைக்கும்.”

“ஆமாம், எழுத்தாளர்கள் செய்வது அதுதான், அதற்குப் பெயர்தான் பத்திரிகைத் துறை. ஆனால் வேறு நல்ல காரணங்கள் இருக்கவில்லை என்று நீ சொல்ல முடியாது.”

 “இருந்திருக்கலாம், ஆனால் அது முக்கியமில்லை. ஏனென்றால், என்னால் அதை எழுத முடியாது என்பதுதான் உண்மை. உண்மை என்றால் உண்மையாகவே. அவள், ‘ஃப்ரெஞ்ச் ஆக இருந்தால் ஒக்ஸானா, ரஷ்யனாக இருந்தால் ஆக்ஸானா, வெளிறிய வட்ட முகம் கொண்ட இருபத்து இரண்டு வயது பெண், சற்றே தூக்கலாகத் தெரியும் கன்ன எலும்புகள், ஆங்காங்கே செம்பட்டை இழைகளோடும் சுருள் முடி, கொஞ்சம் ரஷ்ய சாயலுடன் பேசுபவள்,” என்று எதையாவது எழுதுவேன். அதன்பின் நான் எழுதியிருப்பதையே மறுபடியும் படித்துப் பார்ப்பேன், குமட்டிக் கொண்டு வரும். அப்புறம் எழுத முடியாமல் போய் விடும். வார்த்தை வராது. இத்தனை விஷயங்களைத் தேடிப் பிடித்து வைத்திருக்கிறேன். இத்தனை குறிப்புகள் எடுத்திருக்கிறேன். வன்முறையைப் பற்றியும் குரூரத்தைப் பற்றியும் இத்தனை ஆதாரங்கள், இந்தக் கொடூரங்களின் நுண்விவரப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறேன், இது போல் என்னை நானே கேட்டுக் கொண்டு நானானால் உட்கார்ந்திருப்பேன். கவனத்தை ஈர்க்கும் கதையாகத் தொகுக்கப் போகிறேனா? அப்படிச் செய்தால், துல்லியமான சொற்களையும் பொருத்தமான தொனியையும் கண்டு கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் – அதன் உண்மையான, கழிசடைக் கொடுமையை அழகான, பிசிறில்லாத எழுத்தில் கொண்டு வர முடியும் என்றால் – அதற்கு என்ன அர்த்தம்? குறைந்த பட்சம், ஓர் எழுத்தாளர் என்ற வகையில் எழுதுவது எனக்கு உதவ வேண்டும், இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவ வேண்டும். ஆனால் இந்த எண்ணம் நடக்காத காரியம் என்பது எனக்கே தெரிகிறது. என் முன் நிற்கும் தீதைப் புரிந்துகொள்ள எழுத்து என்னை எந்த விதத்திலும் அருகில் கொண்டு செல்லப் போவதில்லை. அதற்கு பலியானவர்களுக்கும் எழுத்து எதுவும் செய்யப் போவதில்லை – அந்த சோகமான உண்மையும் தப்பிக்க முடியாதது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் உறுதியாகச் சொல்ல முடியும், இது போன்ற திட்டங்களுக்கு அது பொதுவாகவே பொருந்தும் என்று நினைக்கிறேன் – இதில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் எழுத்தாளர்தான். நான் செய்கிற காரியத்தில் சுயநலமான ஒன்று மட்டுமல்ல, குரூரமான விஷயமும் இருக்கிறது என்று உணரத் தொடங்கினேன்- ஈவு இரக்கமில்லாதது என்றுகூட சொல்லுவேன். இப்படிப்பட்ட வகை எழுத்துக்குத் தடயங்களைச் சேகரிப்பது போன்ற ஒரு பார்வை அவசியத் தேவையாக இருக்கும் போலிருக்கிறது, அது எனக்கு வெறுப்பாக இருக்கிறது.”

 “ஒரு வேளை இதை நீ புனைவாக மாற்றினால் இன்னும் சரிப்பட்டு வருமோ என்னவோ,” என்கிறார் அவர்.

அந்தப் பெண்ணுக்கு திடுக் என்று இருக்கிறது. “அது இன்னும் மோசம். இந்த இளம் பெண்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் உயிருள்ள, சுவாரசியமான பாத்திரங்களாக்க வேண்டுமா? அவர்கள் துன்பத்தைப் பெரும் கதையாக்க வேண்டும், நாவலாக்க வேண்டும்? மாட்டேன்.”

அவர் மிகையாகப் பெருமூச்சு விடுகிறார். “நான் இந்த வாதத்தைக் கேட்டிருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லாரும் உன்னைப் போல் நினைத்தால், அவசியம் தெரிய வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த உலகத்தில் யாருக்குமே தெரியாமல் போய் விடும். எழுத்தாளர்கள் சாட்சியம் சொல்ல வேண்டும், அதைச் செய்யத்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். அநீதிக்கும் துன்பத்துக்கும்  சாட்சியம் சொல்வதைவிட உயர்ந்த தொழில்முறை அழைப்பு ஓர் எழுத்தாளனுக்கு இருக்க முடியாது என்றுகூட ஒரு சிலர் சொல்லக் கூடும்.”

 “ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் நோபல் பரிசு பெற்றதிலிருந்து இதைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறாள் அவள். “உலகில் பலி கொள்ளப்பட்டவர்கள் ஏராளம், என்கிறார் அலெக்ஸியேவிச். பயங்கரமான விஷயங்களை அனுபவிக்கும் சாதாரண மக்கள், யாருக்கும் அவர்களைப் பற்றித் தெரிவதில்லை, கடைசியில் மறக்கப்படுகிறார்கள். ஓர் எழுத்தாளராகத் தனது நோக்கம் இவர்களுக்குச் சொல் அளிப்பது, என்கிறார் அவர். ஆனால் புனைவு கொண்டு இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. நாம் செகாஃப்பின் உலகைத் தாண்டி வந்து விட்டோம் என்கிறார் அவர், நம் யதார்த்த உண்மையை அடைய புனைவு இப்போதெல்லாம் பெரிய உதவியாக இல்லை. நமக்கு ஆவணத் தன்மை கொண்ட புனைவு தேவைப்படுகிறது, சாதாரண, தனி மனித வாழ்விலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கதைகள். இட்டுக் கட்ட வேண்டாம். ஆசிரியப் பார்வை வேண்டாம். தனது புத்தகங்களை அவர் குரல்களின் நாவல்கள் என்று அழைக்கிறார். அவற்றைச் சான்றாவண நாவல்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது கதை சொல்லிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆண்களைவிடப் பெண்கள் நல்ல கதை சொல்லிகள் என்று அவர் நினைக்கிறார். காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் உற்று நோக்குவதில் ஆண்கள் போலில்லை, இன்னும் உக்கிரமாக இருக்கிறார்கள், இன்னும் – ஏன் சிரிக்கிறீர்கள்?”

 “ஆண்கள் எழுதுவதை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்ற வாதம் நினைவுக்கு வந்தது.”

 “அலெக்ஸியேவிச் அப்படிச் சொல்வதில்லை. ஆனால் மானுட அனுபவம் மற்றும் உணர்ச்சிகளின் ஆழங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பெண்களைப் பேச விட வேண்டும் என்று அவர் சொல்லத்தான் செய்கிறார்.”

 “ஆனால் எழுதுபவளின் குரல் அடங்க வேண்டும்.”

 “ஆமாம். உண்மையாகவே துயரத்துக்கு வாழ்க்கைப்படுபவர்கள் அதன் சாட்சியமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம், அந்த ஆற்றலை அவர்களுக்கு அளிப்பதுடன் எழுதுபவரின் பங்கு நின்று விடுகிறது.”

“இது வேரூன்றி விட்டது, இல்லையா. எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்களோ, அது அடிப்படையில் வெட்கக் கேடானது, நாம் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் என்ற எண்ணம். நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வருஷமும் என் மாணவர்கள் பார்வையில் எழுத்தாளர்களின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைக் கவனித்திருக்கிறேன். எழுத்தாளர்கள் ஆக ஆசைப்படுபவர்கள் எழுத்தாளர்களை அவ்வளவு மோசமாக நினைக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? நியூயார்க் சிட்டி பாலே பற்றி நடனம் கற்றுக் கொள்ளும் மாணவி ஒருத்தி அப்படி நினைப்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அல்லது, ஒலிம்பிக் சாம்பியன்களைப் பற்றி விளையாட்டுப் பந்தயங்களில் போட்டி போடும் இளைஞர்கள்?”

 “இல்லை. ஆனால் நடனம் ஆடுபவர்களும் விளையாட்டு வீரர்களும் விசேஷ உரிமைகள் கொண்டவர்கள் என்று அறியப்படுவதில்லை, எழுத்தாளர்களைப் பற்றி அப்படிதான் ஓர் எண்ணம் இருக்கிறது. எழுத்தைத் தொழிலாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றாலே முதலாவதாக நீ ஓர் உயர்ந்த இடத்திலிருந்து வருபவனாக இருக்க வேண்டும். வசதியாக இருப்பவர்கள் இனி எழுதக் கூடாது என்ற உணர்வு இப்போது வந்து விட்டது – வேண்டுமானால், அவர்கள் தங்களைப் பற்றி எழுதாமலிருக்க ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால், அது ஆணாதிக்கத்தையும் வெள்ளை மேலாதிக்கத்தையும் நிலை நிறுத்தும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவுகிறது. இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள், ஆனால் எழுத்து ஓர் எலீடிஸ்ட், ஆணவச் செயல்பாடு இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், உலகில் முன்னேற வேண்டும் என்றுதான் இதைச் செய்கிறீர்கள், இந்த உலகை இன்னும் நியாயமான உலகமாக்க வேண்டுமென்றன்று. இதில் கூடவே சிறிது அவமான உணர்வும் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.”

 “மார்டின் ஏமிஸ் சொன்னது எனக்கு பிடித்திருக்கிறது:  ‘நாவலாசிரியர்களின் அகந்தையைக் கண்டனம் செய்வது என்பது குத்துச்சண்டை போடுபவர்களின் வன்முறையைக் கண்டிப்பது போன்றது.’ ஒரு காலத்தில் இது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஒரு காலத்தில் இளம் எழுத்தாளர்கள் எழுத மட்டுமே பிறந்திருக்கிறோம் என்று நம்பினார்கள் – எட்னா ஓ’ப்ரையன் சொன்னது மாதிரி, ஒரு கன்னியாஸ்த்ரீயாகவோ பூசகராகவோ இருப்பது போல். ஞாபகம் இருக்கிறதா?” 

 “ஆமாம், கவிஞராக இருப்பதைவிடத் தர்மசங்கடமான விஷயம் எதுவுமில்லை என்று எலிஸபெத் பிஷப் சொன்னதும் ஞாபகம் இருக்கிறது. சுய வெறுப்புப் பிரச்சினை புதியதன்று. எது புதியது என்றால், மிக அதிகமான அளவில் அநீதி இழைக்கப்பட்ட வரலாற்றின் பின்னணியில் வளர்ந்து வருபவர்களுக்குதான் காது கொடுத்து கேட்கப்படும் உரிமை மிக அதிகமான அளவு இருக்கிறது என்ற எண்ணம், கலைத் துறைகள் அவர்களுக்கு இடம் கொடுத்தால் மட்டும் போதாது, அவர்கள் ஆட்சி செலுத்தும் காலம் வந்து விட்டது என்ற எண்ணம்தான்.”

 “இது ஓர் அவிழ்க்க முடியாத சிக்கல், இல்லையா? பாத்தியப்பட்டவர்கள் தங்களைப் பற்றி எழுதக்கூடாது. ஏனென்றால், அது யதேச்சாதிகார வெள்ளையின ஆணாதிக்கத்தின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அவர்கள் மற்ற குழுக்களைப் பற்றியும் எழுதக்கூடாது. ஏனென்றால், அது பிற கலாச்சாரங்களை விழுங்கிக் கொள்வதாக இருக்கும்.”

 “அதனால்தான் எனக்கு அலெக்ஸியேவிச் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட குழு ஒன்றை இலக்கியத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், அவர்களைப் பேச விடவும் உங்களை வெளியே நிறுத்திக் கொள்ளவும் ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும். திறமை இருக்கிறவர்கள்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் சங்கடப்படுத்துகிறது என்றால், அது நிறைய குரல்களை விலக்கி வைத்து விடுகிறது. அழகான வாக்கியங்களில் எழுதுகிறார்களோ இல்லையோ, பிறர் குரல்கள் ஒலிப்பதை, அவர்களுடைய கதைகள் சொல்லப்படுவதை  அலெக்ஸியேவிச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். ஒடுக்கப்பட்ட ஒரு குழுவைப் பற்றி நீங்கள் எழுதினால் உங்கள் வருமானத்தை அவர்களுக்கு உதவி செய்யும் ஓர் அமைப்புக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்றுகூட பரிந்துரை செய்கிறார்கள்.”

 “அது நீங்கள் பிழைப்புக்காக எழுதுகிறீர்கள் என்றால் எழுத்தின் நோக்கத்தையே தோற்கடித்து விடுகிறது. உண்மையில், இப்படியெல்லாம் சட்டம் போட்டால், பணக்காரர்களுக்கு  மட்டும்தான் அவர்கள் நினைத்ததை  எல்லாம் எழுதக் கட்டுபடியாகும்! என்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்குப் புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். அது மாணவர்களிடம் நான் கவனித்த இன்னொரு விஷயம்: அவர்கள் ரொம்பவே தார்மீக கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், ஓர் எழுத்தாளனின் ஆளுமையில் ஒரு சிறிய குறையோ, போதாமையோ இருந்தால் அவர்களால்  கொஞ்சம்கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் நான் அப்பட்டமான இனவாதத்தையோ பெண் வெறுப்பையோ சொல்லவில்லை. நுண்ணுணர்வு இல்லாமை, அல்லது, பாரபட்சம் அல்லது, உளச் சிக்கலுக்கான ஆதாரம், நரம்புத் தளர்ச்சி, சுயமோகம், ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது, கெட்ட பழக்கங்கள், அல்லது எந்த ஒரு கிறுக்குத்தனமாக இருக்கட்டும், அது எள்ளளவு வெளியே தெரிந்தால்கூட போயிற்று. எழுத்தாளன் அவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடியவன் போலிருக்க  வேண்டும், அதாவது, ஒருத்தர் விடாமல் முற்போக்கானவர்களாக, சுத்தமான வாழ்க்கை நடத்துபவர்களாக இல்லாவிட்டால், அவர்கள் நாசமாய்ப் போகட்டும். நபோகாவ் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தால் என்ன, அவரைப் போன்ற ஒருவர் – கர்வி, பிறழ் விழைவுகள் கொண்டவர், என்று அவரைப் பற்றி நினைத்தார்கள் – அவர் யாருடைய வாசிப்புப் பட்டியலிலும் இருக்கும் தகுதி இல்லாதவர் என்று ஒரு முறை என் வகுப்பில் உள்ளவர்கள் எல்லாருமே ஒப்புக் கொண்டார்கள். ஒரு நாவலாசிரியன், மற்ற எந்த ஒரு நல்ல குடிமகனையும் போலவே, பிறருடன் ஒத்துப்போக வேண்டும், யார் என்ன நினைத்தால் என்ன என்று தான் விரும்பியதை ஒருத்தர் எழுதுவது என்பதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பயன்பாட்டில் இலக்கியம் தன் வேலையைச் செய்ய முடியாது. எழுத்து எந்த அளவுக்கு அரசியலாகி விட்டது என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது, ஆனால் என் மாணவர்கள் இதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். உண்மையில் இந்த ஒரு காரணத்துக்காகவே அவர்களில் சிலர் எழுத்தாளர்களாக ஆசைப்படுகிறார்கள். இதில் எதையாவது நீ ஆட்சேபித்தாய் என்றால், அவர்கள் மனதை மாற்ற முயற்சி செய்கிறாய் என்றால், உதாரணத்துக்கு கலைக்காகவே கலை என்று வாதம் செய்தால், அவர்கள் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள், பேராசிரிய-உபதேசம் செய்கிறாய், என்று உன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதனால்தான் நான் மறுபடியும் பாடம் எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ரொம்பவே தன்னிரக்கத்தில் விழுகிறேன் என்பதன்று, ஒருத்தன் தன் கலாச்சாரத்தை விட்டு, அதன் இக்கணத்தின் கருப்பொருட்களை விட்டு, இந்த அளவு முரண்படும்போது, எதற்காக இதெல்லாம் என்று தோன்றி விடுகிறது.”

ரொம்பக் குரூரமாக இருக்கக்கூடாது என்பதால்,  ‘ஆனால் நீ இல்லாதது ஒரு இழப்பல்ல,’ என்று சொல்லாமல் அவள் வாயை மூடிக் கொண்டிருக்கிறாள்.

 “எது எப்படியோ, நீ அதை எழுதவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்கிறார் அவர். “நீ அதை முடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உனக்கே தெரியும்.”

 “உண்மையைச் சொன்னால் வேறொரு காரணமும் இருந்தது,” என்று சொல்கிறாள் அவள், “என் கவனம் சிதறி விட்டது. நான் வேறொரு விஷயம் எழுதத் துவங்கி விட்டேன்.”

 “எதைப் பற்றி?”

“உங்களைப் பற்றித்தான்.”

 “என்னைப் பற்றியா! எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. என்னைப் பற்றி எழுத வேண்டும் என்று எது உன்னை முடிவெடுக்கச் செய்தது?”

 “நான் திட்டமிட்டு எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. கிறிஸ்துமஸ் சமயத்தில் ‘இட்ஸ் அ ஒண்டர்ஃபுல் லைஃப்’ என்ற படம் பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.”

 “பல முறை.”

“அது எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஸ்டூவர்ட்—ஜோர்ஜ் பெய்லி — தற்கொலை செய்து கொள்வதிலிருந்து ஒரு தேவதையால் காப்பாற்றப்படுகிறான். அவன் இந்த உலகத்தில் இல்லாமலே போயிருந்தால் அது எவ்வளவு பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்று அவனுக்கு அந்த தேவதை காட்டுகிறாள். அப்போது நான் ஜிப்புடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் – ஜிப்பை என் மடியில் வைத்துக் கொண்டிருந்தேன் – நான் உங்களைத்தான் நினைத்தேன். நடந்ததைக் கேள்விப்பட்டபின் நான் உங்களைத்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன், நீங்கள் நலமாகி, தேறி வந்து விடுவீர்களா என்று காத்துக் கொண்டிருந்தேன். (இப்போது அந்த ஆணின் பார்வை மீண்டும் ஜன்னல் படியில் இருக்கும் பூக்களை நோக்கித் திரும்புகிறது.) சாவுக்கு எவ்வளவு அருகில் போய் விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தை முற்றிலும் மறந்து விட்டேன், உங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். எப்படியானாலும், என்னால் அது பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. உங்களைச் சரியான நேரத்தில் பார்த்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? அதைப் பற்றித்தான் நான் எழுத வேண்டும் என்பது எனக்கு தெரிந்து விட்டது.”

அவர் முகம் இதற்கு முன் வெளிறியிருந்தது, இப்போது காகிதம் போல் வெளுத்துப் போய்விட்டது. “நான் ஒன்றும் தப்பாகப் புரிந்து கொள்ளவில்லையே? இல்லை என்று சொல், தயவு செய்து.”

“மன்னித்துக் கொள்ளுங்கள்,”என்கிறாள் அவள், “அது புனைவு என்று நான் சொல்லியிருக்க வேண்டும். எல்லாரையும் வேறு மாதிரி மாற்றிவிட்டேன்.”

 “என்னை ஒன்றும் ஏமாற்ற வேண்டாம். அதற்கு என்ன அர்த்தம் என்பது எனக்கு தெரியாது என்றா நினைக்கிறாய்? நீ என் பெயரை மட்டும் மாற்றியிருப்பாய்.”

 “உண்மையில் நான் பெயர்களைப் பயன்படுத்தவில்லை. எல்லாருடைய பெயர்களையும் நீக்கி விட்டேன். நாய்க்கு மட்டும்தான் பெயர் இருக்கிறது.”

 “ஜிப்? அதில் ஜிப்பும் இருக்கிறானா?”

 “ஆமாம், ஆனால் ஜிப்தான் என்று சொல்ல முடியாது. கதையில் ஒரு நாய் இருக்கிறது. அது ஒரு முக்கியமான பாத்திரம். அதற்கு ஒரு பெயர் இருக்கிறது: அபொல்லோ.”

 “ஒரு சின்ன டாக்ஸூண்ட் நாய்க்கு ரொம்பவே பெரிய பெயர், என்ன சொல்கிறாய்?”

 “அது இப்போது டாக்ஸூண்ட் நாய் அன்று. நான் சொன்னது போல், இது ஒரு புனைவு, எல்லாமே வேறு மாதிரி இருக்கும். சரி, எல்லாமே அல்ல. உதாரணத்துக்கு, நீங்கள் அதை ஒரு பார்க்கில் கண்டெடுத்த விவரம் கதையில் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் எப்படிக் கதையில் வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில விஷயங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்கிறோம், சில விஷயங்களை இட்டுக் கட்டுகிறோம், அரைகுறை உண்மைகள், அரைப் பொய்கள் ஏராளம் சொல்கிறோம். எனவே ஜிப் ஒரு பெரிய டேன் நாய் ஆகிறான். உங்களையும் ஓர் இங்கிலிஷ்காரனாக்கி விட்டேன்.”

அவர் உரக்க முனகுகிறார். “என்னரோர் இடாலியனாகவாவது மாற்றியிருக்கக் கூடாதா?”

அந்தப் பெண் சிரிக்கிறாள். “நிஜமான ஒருவரை புனைவுப் பத்திரமாக மாற்றுவது பற்றி இதைத்தான் க்ரிஸ்டொஃபர் இஷர்வுட்டிடம் கற்றுக் கொண்டேன். அது நீ காதல் வயப்படுவது மாதிரி, என்று அவர் சொல்கிறார். புனைவுப் பாத்திரம் நேசத்துக்குரியவன் போன்றது: எப்போதும் அசாதாரமானவன், ஒரு போதும் வெறுமே வேறொருவன் போன்றவனல்லன். எனவே மற்ற எந்த ஒரு மனிதனிடமும் இருக்கக்கூடியவை எதெல்லாம் ஒரு மனிதனிடம் இருக்கிறதோ, அந்த நுண்விவரங்களை நீ சொல்லக்கூடாது. மாறாக, அவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவோ அல்லது அவர்களைப் பற்றிப் புதிராகவே எது இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும், முதலில் அவர்களைப் பற்றி உன்னை எது எழுதச் செய்கிறதோ அந்த விசேஷமான விஷயங்கள், அவற்றை நீ மிகைப்படுத்துகிறாய். எல்லாருக்கும் இடாலியன் ஆகும் விருப்பம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அறிமுகமான நாள் முதல் நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு பிரிட் மாதிரிதான் இருந்திருக்கிறீர்கள்.”

 “அப்படியே நான் ஒரு யூதனல்லன் என்றும் நீ மாற்றி எழுதி விட்டாய்தானே?”

அந்தப் பெண் மீண்டும் சிரிக்கிறாள். “இல்லை. ஆனால் நீங்கள் உண்மையில் இருப்பதைவிட கொஞ்சம் அதிகம் பெண் பித்து பிடித்தவராக மாற்றி விட்டேன்.”

 “கொஞ்சம்தானே?”

 “ஆகா, நீங்கள் புண்பட்டு விட்டீர்கள்.”

 “எனக்கு மனக் கஷ்டமாக இருக்கும் என்பது உனக்கு தெரிந்திருக்கும்.”

“தெரியும். நான் அதை அறிந்திருந்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் பிறரைப் பற்றி எழுதுவதை எப்போதுதான் மற்றவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? ஆனால் நான் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. நானே சொன்னது போல், நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நிமிஷம் முதல் என்னால் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனவே ஒரு எழுத்தாளனாக இருந்து ஒரு விஷயத்தையே நினைத்துக் கொண்டிருக்கும்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்: அதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில், அல்லது, குறைந்தபட்சம் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள  ஒரு பிடி கிட்ட உதவியாவது செய்யும் வகையில்,  அதை ஒரு கதையாய் மாற்றினேன். இத்தனைக்கும், ஒரு போதும் நாம் நினைப்பது நடக்கப் போவதில்லை என்ற அனுபவம் நமக்கு இருந்தாலும்கூட.”

“ஆமாம், எனக்கு புரிகிறது, நீ இதைச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்தாளர்கள் உண்மையில் ரத்தக் காட்டேரிகள்தான், அதையும் நீ எனக்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. உன்னிடம் நானே இந்த விஷயத்தைச் சொல்லியிருப்பேன், அதில் சந்தேகமில்லை. மறுபடியும் சொல்கிறேன், இதன் முரண்நகை எனக்குப் புரியாமலில்லை. ஆனால் நீயே பாரேன், எனக்கு இது ஓர் அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. நீ என்ன செய்திருக்கிறாய்? இந்த நேரத்தில் அது ஒரு துரோகம் போல் இருக்கிறது. நிச்சயம் ஒரு துரோகம்தான். இப்போது இதைப் பேசி முடித்தபின், நான் உன்னைக் கேட்டாக வேண்டும்: என்னை வேட்டையாடுவதில் உனக்கு என்ன நியாயம் இருக்கிறது? நீ காத்திருக்கவாவது செய்திருக்கலாம். கடவுளே. இதோ ஆஸ்பத்திரியில் இருக்கிறேன், என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான நிலைமையில். நீயானால் கணினியில் பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். பார்ப்பதற்கே நன்றாக இல்லை. சரியாகவே இல்லை. உண்மையில், இது ரொம்ப நாராசமாக இருக்கிறது. எப்படிப்பட்ட நண்பர் – ஐயோ, சீ, நீ  வெட்கப்பட வேண்டும். உன்னால் பதில் பேச முடியவில்லை, அது தெரிகிறது. என் முகத்தில் உன்னால் விழிக்க முடிகிறது  என்பதுகூட எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், என் காதில் விழுந்தது சரிதானே, நாயைப் பற்றிச் சொன்னது? உன் கதையில் நாய் ஒரு முக்கிய பாத்திரமா? தயவு செய்து நாய்க்குக் கெட்டது எதுவும் நடக்காது என்று சொல்.”

***

One Reply to “நண்பன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.