முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2

ஹா ஜின்

தமிழாக்கம்: மைத்ரேயன்

[இக்கதையின் முதல் பாகம் சென்ற இதழில் வெளியானது. இது இறுதிப் பாகம்.]

பிறகு சமீப வருடங்களில் அவர் பிணைத்துக் கொண்ட இளம் பெண்களைப் பற்றிப் பேசத் துவங்கினார். அப் பெண்களில், என் முன்னாள் வகுப்புத் தோழியும், எங்கள் மாநிலத்தில் பாட்மிண்டனில் இரண்டாம் நிலையில் வைக்கப்படும் அளவு கௌரவம் கொண்டவளுமான ஒருத்தி இருந்தாள் என்பது எனக்கு வியப்பளித்தது. அவள் அதிகாரி ஒருவரை மணம் புரிந்திருந்தாள், நாய்களைக் கையாளும் வேலை அவருடையது, அதனால் அந்த நபர் அடிக்கடி ஊரில் இல்லாது போனவர். இந்தக் கட்டுமஸ்தான பெண்ணோடு இவர் எப்படிப் படுக்கையில் ஈடு கொடுத்திருக்க முடியும்? அதை யோசிக்கவே எனக்கு கிறுகிறுப்பாக இருந்தது. அவருடைய ஒழுங்கற்ற பேச்சால் எனக்குச் சங்கடமாக இருந்தது, ஆனாலும் நான் அதில் ஈடுபட்டதோடு மேலும் கேட்க விரும்பினேன். அவர்களில் ஒரு பெண் இவரைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருந்தாள், இவர் தன் மனைவியுடனான மண உறவை முறிக்க வேண்டும் என்று மட்டும் கேட்டாள், இவர் மறுத்திருக்கிறார். அவர் விளக்கினார், “நான் இதயமில்லாதவன் இல்லை, இளம் ஷா. என்னுடைய நோயாளி மனைவியை என்னால் கைவிட முடியவில்லை. நான் கிராமப் புறத்தில் இருந்தபோது, அவள் என்னை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க வந்தாள். இன்னொரு பெண்ணாக இருந்தால், அந்தச் சூழ்நிலையில் அவள் என்னை விவாகரத்து செய்திருப்பாள். ஆனால், அவள் மட்டும் தனியாகத் திண்டாடினாள், என்னோடு இருந்தாள், ஒரு போதும் குறை சொன்னதில்லை. எங்கள் மகன் ஊரிலிருந்து தொலை தூரத்தில் இருக்கிறான், அவளுக்குக் குடும்பத்து உறவு என்று நான் ஒருத்தன்தான் இங்கே இருக்கிறேன்.” மல்கிய கண்ணீரால் மங்கித் தெரிந்த அவருடைய கண்கள் என்னை உற்றுப் பார்த்தன.

இளம் பெண்களின் நோக்கில் அவருக்கு அப்படி ஒரு பீடம் எப்படிக் கிட்டியது என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய அறிவுச் சேகரிப்பா? அவரின் அதிகாரமா? அவருடைய உடல்பலமா? எழுத்துத் திறனா? அவருடைய சமத்காரங்களா? தளரா நம்பிக்கையா? இத்தனை பேரைக் கிறங்க வைத்திருக்க அவர் பயன்படுத்தும் மந்திரக்கோல் என்ன? என் நண்பனின் தங்கையை, ஆட்டுக் குட்டிக் கண் கொண்ட இளம் பெண்ணை நினைத்தேன், அவள் ஒரு சிற்றூர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்யத் துரத்தப்பட்டிருந்தாள். கிராமப்புறத்துக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், அவள் அத்தனை நிலை குலைந்து போயிருந்ததால், ஜன்னல் வழியே கீழே குதிக்கவிருந்தாள், தக்க தருணத்தில் அவளுடைய பெற்றோர் அவளைப் பிடித்து உள்ளே இழுத்துக் காப்பாற்றி இருந்தனர். அவள் இப்படி அழிக்கப்பட்டது பற்றி திரு. ஃபங் ஏதாவது குற்ற உணர்வு கொண்டிருந்தாரா?

“ஆ! பெண் கவிஞர்களை நான் எத்தனை பாராட்டி நேசிக்கிறேன்!” அவர் தன் அகன்ற மூக்கைத் தடவியபடி, தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

”ஏன் கவிஞர்களைச் சொல்றீங்க?” நான் கேட்டேன்.

”உனக்குத் தெரியல்லை, பெண் கவிஞர்கள் எத்தனை வெகுளிகளாக, இனிமையானவங்களா இருப்பாங்கன்னு. அவங்க எல்லாரும் மெ-மென்மையான இதயம் கொண்டவங்க. அவங்க கேட்க விருப்பப்படற சில வார்த்தைகளை நீ பேசினாப் போதும், நீ-நீ அவங்களை அப்படியே வாரி எடுத்துடலாம், அவங்க மனசை மஞ்சரிப் பூவிதழ்களைப் போலப் பறக்க விடலாம்.” அவர் கிளுகிளுவெனச் சிரித்தார்.

“அப்படின்னா, கதை எழுதறவங்க கூடாது, பெண் கவிஞர்கள்தான், அப்டியா?”

அவர் இளித்தார். “ஆமா. நா மறுபடி பிறந்து வந்தாக்க, நானே ஒரு கவிஞனா இருக்கவே முயல்வேன். இளம் ஷா, வரப் போற நாள்கள்லே எப்பவாவது நீ ஒரு பெண் கவிஞரைத் தெரிஞ்சுக்க வேணும்.”

“இல்லை, எனக்கு இளம் கன்னி ஒருத்திதான் வேணும்,” நான் சொன்னேன். அவர் எனக்கு நபொகாவின் பாத்திரமான ஹம்பர்ட் என்ற காமவிகாரனை நினைவுபடுத்தினார்.

“அப்ப சரி, இளம் கன்னியா ஒரு கவிஞர்.” அவர் வெடித்துச் சிரித்தார்.

பேராசிரியர் பான், இதைப் பார்த்தால் தெரியும், அவருடைய முன்னாள் மாணவனான எனக்கு, அதுதான் அவர் கொடுத்த ஆலோசனை. நான் எந்த கன்னிப் பெண் கவிஞரையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டேன். என் மனைவி பேரழகி இல்லை, ஆனால் அவளே எனக்குப் போதுமானவள். தவிர, என் தேக ஆரோக்கியம் சுமாராகத்தான் உள்ளது, யூஜீன் ஓநீலின் நாடகங்களில் இருக்கும் கீழைத் தேசப் புராணக் கதைகள் பற்றிய என் புத்தகத்தைப் பூர்த்தி செய்ய என் சக்தியை நான் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விருந்துக்குப் பிறகு, திரு. ஃபங்கை நான் எப்போது பார்த்தாலும், அவர் தப்பிக்க முயல்பவராக இருந்தார், அந்த வருடம் எங்கள் நகரில் பரவியிருந்த காமாலை நோயை நான் சுமந்திருக்கிறேன் என்பதுபோல, என்னிடமிருந்து விரைந்து விலகிச் சென்றார். என்னிடம் தன் ரகசியங்களை வெளிப்படுத்தியதற்கு அவர் வருத்தப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், நான் அந்த உரையாடலை அவருக்கு எதிராக எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகும், நான் அந்தத் துறையின் தலைவராக ஆனபோதும், நான் அந்த உரையாடல் பற்றிப் பேச்செடுக்கவில்லை. அவர் வெளியிட்ட ரகசியங்களால் அவரைப் பற்றிய என் எண்ணங்களை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

நாரெடிவ் டெக்னிக்ஸ் சஞ்சிகை நிறுத்தப்பட்ட பிறகு, அதன் சந்தாதாரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் என் துறைக்கு வந்த வண்ணம் இருந்தன, தொல்லை கொடுத்தன. அவர்கள் எல்லாம் தம் சந்தாக்களைத் திரும்பக் கேட்டனர். அந்தப் பணமெல்லாம் முன்பே கல்வியாளர்களுக்கு விடுமுறைக் கால போனஸாகக் கொடுக்கப்பட்டு விட்டதால், எங்களால் செய்யக் கூடியதெல்லாம் சந்தாதாரர்களிடம் அந்த சஞ்சிகையின் ஒரு புது இதழ் அவர்களுக்குக் கூடிய சீக்கிரம் கிட்டும் என்று உறுதி சொல்வதுதான். அந்த சமயம் எங்களில் திரு. ஃபங்கைத் தவிர வேறு யாராலும் அந்த சஞ்சிகையைப் பதிப்பிக்க வேண்டிய வேலையைச் செய்ய முடியவில்லை. ஆகவே இலையுதிர் காலத்தில், நாரெடிவ் டெக்னிக்ஸ் சஞ்சிகை மறுபடி ஆரம்பிக்கப்பட்டது, அவரே மறுபடி தலைமைப் பதிப்பாசிரியராக ஆக்கப்பட்டார், ஆனால் இப்போது புனைவிலக்கியப் பகுதியை நீக்கும்படி அவருக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்த முறை அந்தச் சஞ்சிகை முன்னைவிட கூர்மைப்பட்டதாகவும், மேலும் கவனிக்கத்தக்கதாகவும் ஆகியிருந்தது. ஒவ்வொரு இதழிலும் அட்டை பளபளப்பாக இருந்ததோடு, பின் அட்டையில் நவீன புனைவெழுத்தாளர்களில் ஒரு பிரபலஸ்தரின் படமும் அச்சிடப்பட்டது. நாளாவட்டத்தில், திரு.ஃபங்கின் புகழ் மறுபடியும் உயர்ந்தது. அவர் கடினமாக உழைத்தார்,’பூத்திருக்கும் பாலத்தில் இருந்து’ என்ற சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் ஒன்றையும் பிரசுரித்தார், அதை அவர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயிற்கு, ஏதோ அந்த அமெரிக்க எழுத்தாளர் இன்னும் உயிரோடு இருக்கிறார் போலவும், இவருடன் கடிதத் தொடர்பு கொண்டுள்ளது போலவும், அர்ப்பணித்திருந்தார். ஒருக்கால் ஹெமிங்வே இவருக்கு உந்துதல் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறார் என்று சுட்ட நினைத்தாரோ என்னவோ. இந்தப் புத்தகம் நிறைய விமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றது, சம கால எழுத்தாளர்கள் நடுவே மேலான எழுத்தாளர்களில் ஒருவராக அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. அடுத்த வருடம் அவர் முழுப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார், எங்கள் துறையில் அவர்தான் அப்படி உயர்வு பெற்ற முதல் நபர். ஓரளவு பரவலாகத் தெரியவரப்பட்ட இலக்கிய கர்த்தாவாக ஆகக்கூடியவர் என்று தோன்றியது, ஆனால் வெற்றி என்னும் ரங்கராட்டினத்தில் நிதானமாக இருக்கக் கூடியவர்கள் வெகு சிலரே.

அவருடைய வீழ்ச்சி 1987 ஆம் ஆண்டில் கோடையின் முன்பகுதியில், நாங்கள் அமெரிக்காவுக்குப் பயணம் போனபோது நேர்ந்தது. மாநிலத்துப் பண்பாட்டுப் பிரதிநிதிகள் குழுவிற்கு நாங்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம், அந்தக் குழு அமெரிக்க நகரங்களுக்குப் பயணம் போவதாக இருந்தது. நான் இங்கிலிஷில் ஓரளவு நன்றாக உரையாட முடிந்தவன் என்பதாலும், அமெரிக்க இலக்கியத்தில் நான் நல்ல பரிச்சயம் கொண்டிருந்தேன் என்பதாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். திரு. ஃபங் ஒரு புனைவெழுத்தாளராகவும், இலக்கிய ஆய்வாளர் என்பதாலும் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். கனெக்டிகட் மாநிலத்தில் இருந்த வெலிங்டன் பல்கலை எங்கள் பல்கலையின் சகோதரிப் பல்கலையாக ஆக விரும்பியதால். அந்தப் பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியை ஏற்றிருந்தது. அதனால்தான் அந்தப் பிரதிநிதிகள் குழுவில் பாதிப் பேர் எங்கள் பல்கலையில் இருந்து வந்தார்கள்.

இந்தப் பயணத்தில், திரு. ஃபங்கின் குணங்களில் நான் முன்பு கவனித்திராத இன்னொரு பகுதியைக் கண்டேன். அது அவருடைய சிக்கனம்.  நாங்கள் இருவரும் சேர்ந்து உணவுண்ட நேரங்களில், நான் கவனித்தது, அவர் செலவைப் பகிர்வதைத் தவிர்ப்பார். இரு முறைகள் நான் அவருக்கும் சேர்த்துச் செலவு செய்தேன். படுத்த படுக்கையாக ஒரு நோயாளி மனைவி இருந்தாலும், அவர் ஒன்றும் பஞ்சத்தில் இல்லை; அவருடைய மகன் ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை அனுப்பிக் கொண்டிருந்தான். எங்களைப் போல அன்றி அவருக்கு வங்கியில் அன்னியச் செலாவணிக் கணக்குகூட இருந்தது. இப்படி இலவசமாகப் பெறுவதை எங்களுக்குள், அதாவது சீனர்களுக்குள் மட்டும் அவர் எதிர்பார்த்தார் என்றால் அத்தனை பிரச்சனையாக இருந்திராது. எனக்கு எது ஆத்திரத்தைக் கிளப்பியது என்றால் அவர் இதே மாதிரி சில அமெரிக்கர்களிடமும் நடந்து கொண்டார் என்பதுதான். பல நேரமும் அவர்கள் தன் காஃபி, டீ அல்லது மது பானத்திற்குப் பணம் கொடுக்கும் வரை காத்திருப்பார், ஏதோ உலகில் இருக்கும் எல்லாரும் அவருக்குக் கடன்பட்டிருப்பவர்கள் போலவும் அவருக்காகச் செலவழிக்க வேண்டும் என்பது போலவும் இருந்தது. இப்படிப் பிச்சைக்காரர் போல ஏன் நடந்து கொண்டார் என்பது எனக்குப் பிடிபடவில்லை. நம் நாடு ஒவ்வொருவருக்கும் பிரதி தினம் கைச் செலவுக்கு இருபத்தி இரண்டு டாலர்கள் கொடுத்திருந்தது, அது அத்தனை அதிகத் தொகை இல்லைதான், என்றாலும் ஒரு மனிதருக்குக் கொஞ்சமாவது கண்ணியம் தேவை. இப்படி ஒரு கஞ்சப் பேர்வழியான திரு. ஃபங் எப்படிப் பெண்களைக் கவர்ந்திருக்கக்கூடும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு முறை அவர் தனக்கு வாங்கிய பாலாடைக் கட்டியால் செய்த கேக் ஒன்றிற்கு ஓர் அமெரிக்கப் பெண் நாவலாசிரியை செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்; சிறிதும் கவலையே படாமல் அந்தப் பெண்ணிடம் இவர் சொன்னார், “என்னிடம் ஏதும் பணம் இல்லை.”

சிவப்பு நிற முடி கொண்ட, உயரமான அந்தப் பெண் எழுத்தாளர் வான் நீல நிறத்தில் குட்டை மேலங்கியும், சிங் பரம்பரைக் காலத்துப் பெரிய நாணயங்களால் ஆன காதணிகளும் அணிந்திருந்தார், அது சீனர்களான எங்களைச் சந்திப்பதால் இருக்கும். அவருக்கு ஒரு எரிச்சலூட்டும் பழக்கம் இருந்தது, ஒவ்வொரு வாக்கியம் முடிந்ததும் அவர் கேட்பார், “நான் சொல்றது புரிஞ்சதில்லையா?” திரு. ஃபங் அப்படி நேரடியாகச் சொன்னதைக் கேட்டுப் பெண் எழுத்தாளர் துணுக்குற்று, ஒரு சிறு புன்னகை புரிந்தார், பிறகு அது வெறுப்பான முகச் சுளிப்பாக மாறியது; ஆத்திரமடைந்த நான், ஒரு பத்து டாலர் நோட்டை என் பையிலிருந்து உருவி எடுத்து அவரிடம் சீன மொழியில் சொன்னேன், “இதை எடுத்துக்குங்க, ஆனால் நாளை காலையில் எனக்கு இதைத் திரும்பத் தரணும்.” அது, ஒரு வழியாக, அவரைத் தன் பணப்பையைத் திறக்கச் செய்தது. அவர் சுயம்பாவம் என்பதையும் சுயநலம் என்பதையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டதால், முதலியப் பண்பாட்டையும், அமெரிக்க ஆன்மா என்பதையும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கலாம்.

அந்தப் பயணத்துக்குச் சில மாதங்கள் முன்னதாக, எங்கள் கல்லூரியில் ஃபாக்னர் பற்றி ஓர் உரை நிகழ்த்துவதற்காக, ஆலன் ரெட்ஸ்டோன் என்ற அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரை நாங்கள் அழைத்திருந்தோம். சிவந்த முகம் கொண்ட அந்தப் பேராசிரியர், கெண்டகியிலிருந்து வந்தவர், உண்மையிலேயே ஒரு வெற்று வேட்டு ஆசாமி; அவர் குதிரை வால் கொண்டை போட்டிருந்தார், பூப்போட்ட சட்டையணிந்து, பாஞ்சோ வாத்தியம் வாசித்தார். அமெரிக்காவில் சுயம்பாவம் என்பது நிச்சயமாக ஓர் அவசியம் என்றார், ஒரு நபர் எல்லா எத்தனங்களையும் செய்து தன் சுயத்தை நிறுவ வேண்டும், பெரும் சுயமைய குணம் என்பது எந்தத் தனி நபரின் வெற்றிக்கும் மிக அவசியம், இத்தியாதி, இத்தியாதி உளறல்கள், பேசினதெல்லாம் அபான வாயு. சுயத்தைப் பராமரிப்பதுதான் அமெரிக்கப் பண்பாட்டுக்கும், பொருளாதாரத்துக்கும் ஆதார சக்தியைக் கொடுக்கின்றன என்றும், நீங்கள் அமெரிக்கராக இருந்தால், உங்கள் வாழ்வின் மையமாக நீங்கள்தான் இருக்க வேண்டும் என்றும் அறிவித்தார். நான் சத்தியமாகச் சொல்கிறேன், அவரே ஒரு சீனராக இருந்திருந்தால், அவர் முடிக்கும் முன்னரே அந்த உரை அரங்கிலிருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டிருப்பேன். ஆனால் திரு. ஃபங் பிற்பாடு என்னிடம் அவருக்கு ரெட்ஸ்டோனின் உரை ஆழமான தாக்கம் கொடுத்ததாகச் சொன்னார். அது அவருடைய புத்தியைத் தறிகெட்டு ஓடச் செய்திருக்க வேண்டும். ஹார்ட்ஃபோர்டில் இப்போது, திரு. ஃபங் தன் சுயத்தை அழுத்தமாக நிறுவுவதற்கென, அந்த அமெரிக்கப் பெண்ணின் முன் கட்டுமீறி நடந்து கொண்டதில், நம் நாட்டின் முகத்தில் களங்கத்தைப் பூசவும் தயங்க மாட்டாரென்று தெரிந்தது. அவருக்குச் சிறிதும் வெட்கம் என்பதே இல்லாமல் போய் விட்டாற்போலத் தெரிந்தது. இத்தனை படித்த மனிதர், எப்படி இந்த மாதிரித் தான் கேட்டதை எல்லாம் நம்புகிற பேதையாக இருக்க முடியும்? இது எனக்கு இன்னும் புரியவில்லை.

அமெரிக்காவில் எங்களைப் போஷிக்கிறவர்கள் சனிக்கிழமை பல்கலையில் எழுத்தாளர்களின் கூட்டமர்வு இருக்கிறதென்று தெரிவித்தார்கள். அமைப்பாளர்கள் சீன எழுத்தாளர்களுக்கு ஒரு சிறப்புக் குழு உருவாக்க விருப்பம், அதாவது எங்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழு, என்றும் தெரிவித்தனர். நாங்கள் பங்கெடுக்க ஒப்புக் கொண்டோம், இப்படி ஒரு நேசமுள்ள அழைப்பால் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தோம். தற்காலச் சீனாவில் அமெரிக்க இலக்கியத்தின் நிலை பற்றிப் பேச நான் அழைக்கப்பட்டிருந்தேன், மற்ற ஆறு எழுத்தாளர்கள் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை, ஆனால் அவர்களுடைய எழுத்தையும், அனுபவங்களையும் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும் என்று தெரிந்தது. நாங்கள் எல்லாம் மிகவும் கிளர்ந்து இருந்தோம், இந்த நிகழ்வுக்காக எங்களுடைய சிறந்த உடைகளை அணிந்து கொண்டோம். என் உரையாடும் இங்கிலிஷை மேம்படுத்தவென, எல்லாரும் வெளியே கிளம்பும் முன்னர், நான் ஒரு மணி நேரத்துக்கு, நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் பத்திரிகையில் வந்த கட்டுரைகளை வாய்விட்டுப் படித்தேன்.

பல்கலை ஒரு சிறு நகரில் இருந்தது, அந்த நகரம் தோப்புகள் அடர்ந்த பள்ளத்தாக்கு ஒன்றில் இருந்தது. அது சுத்தமாகவும், அச்சமூட்டும் வகையில் அமைதியாகவும் இருந்தது, ஒருவேளை அப்போது கோடை விடுமுறை என்பதால் இருக்கலாம். பல்கலை வளாகத்தின் சாலைகளின் இரு மருங்கும் பெரும் டாமராக் மரங்களும், மேபிள் மரங்களும் அணி வகுத்தன. [1] பாலேட்டு நிறத்தில் ஒரு மினிவான் எங்களைக் குட்டையான செங்கல் கட்டடம் ஒன்றின் முன் இறக்கிவிட்டது, அங்குதான் ஒரே நேரத்தில் பல உரைகள் பல இடங்களில் நிகழ்த்தப்படவிருந்தன. எங்கள் அமர்வு மற்றவை போல விளம்பரப்படுத்தப் பட்டிருக்கவில்லை என்பதால், அந்தக் கூட்டமர்வுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலாருக்கு எங்கள் அமர்வைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் எல்லாம் பல வேறு அறைகளுக்குப் போய்க் கொண்டிருந்தனர். நான் படபடப்பாக இருந்தேன், என் தோழர்களிடம் ரகசியமாகச் சொன்னேன், “நமக்கு ஒரு டஜன் நபர்கள் வந்தால், அதுவே நல்லதுன்னு எடுத்துக்கணும்.”

நாங்கள் எத்தனை கவலைப்பட்டோம்! கான்லன், பெண் நாடகாசிரியர், தன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார், நாங்கள் இப்படி ஒரு திடீர் ஏற்பாட்டில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்று சொன்னார்.

திடீரென்று திரு.பங் தன்னுடைய உடைசல் இங்கிலிஷில் அந்த முன்னறையில் இருந்த நபர்களிடம் உரக்கக் கூவினார், “அட்டென்ஷன் ப்ளீஸ், லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென், நான் பேராசிரியர் ஃபங் பைச்சென், புகழ் பெற்ற தற்கால சீனக் கதாசிரியர். தயவு செய்து என் பேச்சைக் கேட்க வாருங்கள்!” அவருடைய சுட்டுவிரலால் எங்கள் அறையைப் பார்க்கக் காட்டினார், இன்னொரு கை சுற்றி இருந்த எல்லா அமெரிக்கர்களையும் வரச் சொல்லி அழைத்தது.

அங்கிருந்தவர்கள் சிறிது குழம்பினார்கள், சிலர் நேரடியாக உரக்கச் சிரிக்கத் துவங்கினர். நாங்கள் ஸ்தம்பித்துப் போனோம், அவர் என்ன செய்கிறார் என்பது எங்களுக்குச் சிறிதும் புரியவில்லை. கொஞ்சம் பார்வையாளர்களைத் திரட்ட இது ஒருக்கால் ஒரு கடைசி பட்ச முயற்சி போலிருக்கிறது என்று நான் நினைத்தேன்.  ஆனால் திரு.ஃபங்கின் ஆரவாரம் கணிசமான நபர்களை ஈர்த்தது – சுமார் முப்பது பேர் எங்கள் அமர்வுக்கு வந்தனர். நான் பேசுமுன், சிறிது அமைதி நிலையை அடைய முயன்றேன்.

நிகழ்ச்சிக்கான அந்தப் பெண் நடுவர் எங்களை அறிமுகப்படுத்தியபின், எங்களுக்கு பெரும் வியப்பு ஏற்படுத்தும் விதமாக, திரு. ஃபங் ஒலிபெருக்கியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார், தன் உரையை நிகழ்த்தத் துவங்கினார். அவர் நிகழ்ச்சிக்கு முன்னதாக எழுதி இருந்த ஒரு கட்டுரையை உரக்கப் படிக்கத் துவங்கினார். ஓர் அரசாங்க அதிகாரி எல்லாரையும் எச்சரிக்கும் அறிக்கையைப் படிப்பது போல அவர் குரல் ஒலித்தது. என் தலை அதிர்ந்தது, என் வாய் மரத்துப் போயிற்று.

“அவர் என்ன செய்கிறார்?” கான்லன் ரகசியமாகக் கேட்டார்.

“இது ஒரு ப்லைட்ஸ்க்ரீக் தாக்குதல்,” இன்னொரு எழுத்தாளர் சொன்னார். [2]

“பல்கலையாளரின் மனப் பிறழ்வு,” நான் மேலே சேர்த்தேன்.

நடுவர் அவரை ஏன் நிறுத்தவில்லை? நான் வியந்தேன். அப்போது அந்தப் பெண்ணின் முட்டை வடிவப் பழுப்பு முகம் என்னை நோக்கி ஏதோ புரிந்து கொண்டது போலச் சிரித்திருப்பது தெரிந்தது; நானும் ஃபங்கும் இடம் மாற்றிக் கொள்ள ஒத்துக் கொண்டோ என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

ஃபங்  மிக முன்னேறிய புனைவு உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான சோதனைகளை அவர் எப்படி நிகழ்த்தினார் என்று பேசிக் கொண்டிருந்தார். (அந்த உத்திகள் எல்லாம் மேற்கில் ஏற்கனவே காலாவதியான உத்திகள்.) மேலும் நனவோடை உத்தியைக் கையாளவதில் நிபுணத்துவம் பெறும் முயற்சியை மேற்கொள்ளுமாறு இளைய தலைமுறை சீன எழுத்தாளர்களுக்குத் தான் எப்படி உத்வேகம் கொடுக்க முடிந்தது என்று பேசினார். முதலில், அவருடைய உரத்த குரலால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் இருந்த மாதிரி இருந்தது; பின்னர் சிலர் தமக்குள் நகைக்கவும், சிலர் கேலியாகச் சிரிக்கவும் துவங்கினர்; பலர் இதை ஒரு வேடிக்கை என்பதாக, ஒரு நகைச்சுவை நடிகர் கேலிச் சித்திரம் ஒன்றை நடித்துக் காட்டுகிறார் போலப் பார்த்ததாகத் தெரிந்தது. எங்களுக்கு எத்தனை வெட்கமாக இருந்தது தெரியுமா! அறையில் இருந்த சீனர்களை முட்டாள்களாகக் காட்டி இருந்தார் அவர்! எங்களால் அவரைத் தாழ்ந்த குரலில் சபிக்காமல் இருக்க முடியவில்லை.

நான் தயாரித்திருந்த உரையைப் பேசவில்லை. முழுதும் நிலை குலைந்திருந்த நான், உரை நிகழ்த்தும் நிலையில் இல்லை. இதற்கிடையில், திரு. ஃபங், இரண்டு மடக்கு மேஜைகளின் நீளத்துக்கு அமர்ந்திருந்த தம் நாட்டு மனிதர்களைப் பார்த்துப் புன்னகைத்து அமர்ந்திருந்தார், அவருடைய கண்கள் சுய திருப்தியோடு ஒளிர்ந்தன. அவர் மீது உயரத்தில் இருந்த செஞ்சதுர ஜன்னல் வழியே வீழ்ந்த சூரிய ஒளி வீசிக் கொண்டிருந்தது. மறுபடி மறுபடி அவர் எங்களை இகழ்வோடு பார்த்தபடி “உங்களில் யார் அதைப் போல இங்கிலிஷில் ஓர் உரை நிகழ்த்த வல்லவர்?” என்று சவால் விடுகிறவர் போலத் தோற்றமளித்தார். என்னால் அவரை எட்டிப் பிடிக்க முடிந்திருந்தால், அவருடைய தொடையில் நறுக்கென்று கிள்ளி அவர் தன் நிதானத்துக்கு வரும்படி செய்திருப்பேன்.

பார்வையாளர்கள் எங்களிடம் சில மந்தமான கேள்விகளைக் கேட்டார்கள். நாங்கள் ஏனோதானோவென்று அவற்றுக்கு விடையளித்து வைத்தோம். நாங்கள் ஒவ்வொருவருமே கலங்கிப் போயிருந்தோம். என் இங்கிலிஷ் கோர்வையற்றுப் போயிற்று, கேள்விகளையும், பதில்களையும் மொழி பெயர்க்கையில் நிறைய இலக்கணப் பிழைகள் எழுந்தன. நிஜத்தில் என்னால் திக்கித் திக்கிப் பேசாமல் இருக்க முடியவில்லை, பாதியும் என்னுள் இருந்த கடும் கோபத்தால் எழுந்த தொண்டைப் பிடிப்பால் வந்தது. என் நாடித்துடிப்பு குறைந்தது நிமிடத்துக்கு 120 ஆகி இருந்திருக்கும்.

இறுதியாக எல்லாம் முடிந்தன, நாங்கள் எல்லாரும் சற்றுத் தேறுதல் அடைந்தோம். அப்பாடி, நாங்கள் பிழைத்து விட்டோம்!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திரு. ஃபங் மீது எங்களுக்கு எத்தனை அருவருப்பு எழுந்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்க முடியலாம். யாரும் அவரோடு எதையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. “பெரும் எழுத்தாளர்” என்ற ஒளி வட்டத்தை அவரே தனக்கு மட்டுமென அணியட்டும் என்று விட்டு விடவே விரும்பினோம். கான்லன், நாங்கள் எல்லோரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.  

நாங்கள் சீனாவுக்குத் திரும்பியது, கல்லூரியின் கட்சிக் குழு அவருக்குக் கண்டனம் தெரிவித்தது, முழுதாக சுய-விமர்சனம் செய்து அதை எழுதித் தருமாறு அவருக்குக் கட்டளை இட்டது. அவர் அதைச் செய்தார். மாநிலத்து எழுத்தாளர் கூட்டமைப்பு அவரை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கியது. அவர் மறுபடி யாராலும் அங்கீகரிக்கப்படாதவராக மாறினார். நாரேடிவ் டெக்னிக்ஸ் சஞ்சிகை அவருடைய பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது, இந்த முறை அறுதியாக அந்த மாற்றம் நேர்ந்தது. அவர் சாதாரண போதனையாளராக வேலைக்குத் திரும்பினார், கூட்டமர்வுகளுக்குச் செல்லவும், உரைகள் நிகழ்த்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.

பேராசிரியர் பான் அவர்களே, இதுதான் அவருடைய முடிவு என்று நான் கருதவில்லை. இல்லை, அவர் நிச்சயம் இன்னும் துடிப்பாகவே உள்ளார். அவருடைய குறிக்கத்தக்க குணாம்சங்களில் இது ஒன்று, அவர் அடக்கி வைக்கப்பட முடியாதவர், நிறைய சக்தி உள்ளவர், இடர்களிலிருந்து மீண்டு வரக் கூடியவர். சமீபத்தில் அவர் மார்ஷல் ஃபு வின் சுய சரிதையை இங்கிலிஷுக்கு மொழி பெயர்த்திருக்கிறார்; இந்தப் புத்தகம் இண்டர்நேஷனல் ஃப்ரெண்ட்ஷிப் பிரசுரத்தால் வெளியிடப்பட இருக்கிறது. இந்த வேலைக்கு அவருக்குக் கணிசமான தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டிலேயே இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பதில் தானே தலை சிறந்தவர் என்று அவர் சொல்லிக் கொள்வதாக ஒரு வதந்தி உலவுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம், அதுவும் பெய்ஜிங்கிலும், ஷாங்காயிலும் இருந்த சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இறந்துவிட்ட பிறகு அல்லது பெரும் வேலைகளில் இறங்க முடியாத அளவு முதியோராக ஆகிவிட்டதால், அவர் சொல்வது சரியாக இருக்கலாம். திரு. ஃபங் மறுபடியும் உயரே எழுகிறார், மறுபடியும் கவிழவும் செய்வார். இப்போதெல்லாம் தலைநகரில் தனக்கு நிறைய தொடர்புகள் உண்டு என்றும், அடுத்த வருடம் உங்கள் துறையில் மொழிபெயர்ப்பையும், நவீன பிரிட்டிஷ் இலக்கியத்தையும் போதிக்க இருப்பதாகவும், உங்கள் பல்கலைக்காக ஓர் இங்கிலிஷ் சஞ்சிகையைத் தான் பதிப்பிக்க இருப்பதாகவும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார்.

பேராசிரியர் பான் அவர்களே, இப்படி ஒரு நீட்டி முழக்கும் பதிலுக்காக என்னை மன்னியுங்கள். உண்மையைச் சொன்னால், இப்படி மனம் விட்டு எழுதுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிஜமாகவே இதுதான் முதல் தடவை, கணினி ஒன்றால் ஒரு கடிதத்தை நான் எழுதுவது. இது ஒரு தனி அனுபவம். இந்த எந்திரம் சந்தேகமின்றி என் எழுத்தில் சரளத்தைக் கூட்டி இருக்கிறது, ஒருக்கால் ஓரளவு ஆடம்பரமும் கூடி இருக்கலாம்; இந்த எந்திரம் தானாக வாக்கியங்களை எழுதி விடும் என்று எனக்குத் தோன்றுகிறது. சரி, இப்போது நான் கவனம் பிசகக் கூடாது. திரு. ஃபங்கைப் பற்றி என்னுடைய கருத்தை நான் இப்போது சுருக்கிக் கொடுக்கவிருக்கிறேன். ஆனால் அவர் மீது ஒழுக்க நோக்கில் என் தீர்ப்பை நான் அளிக்கப் போவதில்லை: அவர் மிகுந்த சக்தியும், படிப்பும், தந்திரமிக்க திட்டங்களும் கொண்டவர்; அவர் ஏற்கெனவே ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் இருக்கிறார் என்றாலும், இன்னும் வலுவுள்ளவராகவே இருக்கிறார், இன்னும் பல வருடங்கள் அவருக்கு உள்ளன; உங்களிடம் அவரைக் கட்டுக்குள் வைக்க வழி இருக்கும் வரையில் அவர் மிகவும் பயன் தருபவராக இருப்பார், உங்கள் துறைக்கு நிறைய வளம் சேர்ப்பார். வேறு விதமாகச் சொன்னால், அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நம்பக் கூடாது, இதில் அவர் அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் போலத்தான், அவர்கள் எல்லாருமே சில்லறைக் குற்றவாளிகளைவிட உயர்ந்தவர்கள் அல்லர்.

உங்களுக்கு என் மரியாதையுள்ள வணக்கம்!

ஷா நிங்ஷென், துறைத் தலைவர்,

அன்னிய மொழித் துறை,

மூஜி ஆசிரியர் கல்லூரி

மார்ச் 29

***

இங்கிலிஷ் மூலம்: ஹா ஜின் ; தமிழாக்கம்: மைத்ரேயன்

மூலக் கதைத் தலைப்பு: An Official Reply

இக்கதை {The Bridegroom}  என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

நூல் விவரம்: The Bridegroom / Stories; Published by Pantheon Books, New York; Year: 2000

———————

[1] டாமராக் என்பது லார்ச் என்ற பெயராலும் அறியப்படும் ஓர் ஊசியிலை மரம். இதன் பல பெயர்களில் மெஸ்கீட் (mesquite) என்ற பெயரும் இருக்கிறது. இதன் நிகர் இந்தியப் பெயர் சீமைப் பரம்பு அல்லது வன்னி மரம் என்று கொள்ளலாமா எனத் தெரியவில்லை.

[2] ப்ளிட்ஸ்க்ரீக் என்பது ஒரு வகைப் போர்த் தந்திரம்.  மிக்க வலு கொண்ட ஆயுதங்கள், வேகமான போக்குவரத்து வசதிகளோடு, விமானங்களின் பாதுகாப்போடு கடும் தாக்குதலை நிகழ்த்தி எதிரிகளின் போர்முனை அணிவகுப்பில் உடைப்பை நிகழ்த்தி உள்ளே நுழைந்து பின் புலத்தில் மிக வேகமாகத் தாக்கி நிலைகுலையச் செய்து வெல்வது. இது இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் ராணுவம் பல முறை பயன்படுத்திய தந்திரம்.

2 Replies to “முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2”

  1. திரு ஃப்ங் போன்றவர்களைச் சந்தித்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.தான் இளமையில் அதிகம் இழந்துவிட்டதாக நினைக்கிறார்.தன் புகழை, மேன்மையை திட்டமிட்டும், வெறி கொண்டும் நிறுவுகிறார்.தன் நோயாளி மனைவியை நேசிக்கையில்,அவரை விவாகரத்து செய்ய மறுக்கையில் நம் மதிப்பீடுகள் உயர்கின்றன.ஆனால், பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்துவது,பிற அனைவருமே ஏதோ ஒரு வகையில் தனக்குக் கடன் பட்டவர்கள் என நினைப்பது,அத்து மீறிய சலுகைகளை எதிர்பார்ப்பது என்று அவர் நடந்து கொள்ளும் போது நம் வெறுப்பிற்கும் உரியவராகிறார்.அறை தேடி வந்து அவர் பாடம் நடத்துவதில் கூட ஒரு கணக்கு உள்ளீடாக இருக்கிறது.கடைசியில் பல்கலை உரைக்கு கூட்டம் சேர்க்க அவர் கூவி அழைக்கையில்,’மார்க்கெடிங்’ என்ற போர்வையில் பல வணிக நிறுவனங்கள் தொ(ல்)லை பேசியின் மூலம் வலை விரிப்பதுதான் நினைவில் வந்தது.உண்மையான அவதானிப்புடன் எழுதப்பட்ட இந்தக் கதை மனித குண விசித்திரங்களின் நல்லதொரு பதிவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.