மிகப்பெரிய அதிசயம்

This entry is part 12 of 17 in the series 20xx கதைகள்

2020-3

நசி சைக்கிளின் பெடலை சிரமப்பட்டு அழுத்தினாள். அடுத்த சாலை சந்திப்பு வரை ஏற்றம். முன் கூடையிலும் பின் சக்கரத்தின் இரு பக்கக் கூடைகளிலும் பால் காய் பழங்கள். அவளால் சைக்கிள் ஓட்ட முடியுமா என அவள் தாய்க்குச் சந்தேகம். வலைத்தளத்தில் அது சாத்தியம் என்ற நம்பிக்கை கிடைத்தது. அவளுடைய பழைய வண்டிக்குப் பயிற்சி சக்கரங்கள் இணைத்து நசிக்குக் கற்றுக் கொடுத்தாள். சில மாதங்களாக ஒரு புது வண்டி. கடையில் இருந்து சாமான்கள் வாங்கி வர, காகிதங்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் மறுசுழற்சிக்கு எடுத்துப் போக, மற்றும் உடற்பயிற்சியகம் போய் வர காருக்குப் பதில் சைக்கிள். அது மட்டுமல்ல, அவள் வாழ்வில் இன்னும் பல மாற்றங்கள்.
காலியாக இருந்த அவள் அறையின் சுவர் முழுக்கப் படங்கள். பள்ளிக்கூடத்திற்கு முன் நீல ஜாக்கெட்டில் தனியாக உட்கார்ந்த க்ரெட்டா. ‘நிலையான தட்பவெப்ப நிலைக்குப் பள்ளிக்கூட நிறுத்தம்’ அட்டையைப் பிடித்த க்ரெட்டா. இரட்டைப் பின்னல் முன்னால் பறக்கும் சிறுமி. கையில் மைக் பிடித்துப் புன்னகைக்கும் பெண். கன்னத்தில் குழி விழ சாந்தமே உருவெடுத்த முகம்.

நசியின் இன்னொரு மாற்றம், கூந்தலை வெட்டாமல் நீள வளர்த்துக் கட்டிய இரட்டைப் பின்னல். நசிக்கு க்ரெட்டாவைப் பிடித்துவிட்டது என்றால் அது மெலிவான கூற்று. ஒரே வயது. அவளுக்கும் அதே கவலை. அவளும் சிறப்புப் பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டாள். வரப்போகும் உலகத்தில் பயன்படும்படி அங்கே எதுவும் கற்றுத் தருவது இல்லை. அவளால் அறிஞர்களிடம் தைரியமாகப் பேச முடியும், பேசியிருக்கிறாள். விதி வேறு விதமாக விளையாடியிருந்தால் க்ரெட்டாவின் பெருமையும் புகழும் அவளுக்குக் கிடைத்திருக்கும். ஆனால், அவளுக்குப் பொறாமை சிறிதும் இல்லை. க்ரெட்டாவும் அவளும் ஒரு காம்பில் பூத்த இரு மொட்டுக்கள். ஒரே ஊட்டத்தில் வளர்ந்து ஒரே சமயத்தில் பூத்து… இரண்டு மலர்களும் ஒரே சமயத்தில் வாடிவிடுமோ? அத்துடன் பொறாமை, வளர்ந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்கிறவர்களின் குணம்.

அவள் பெருமை நசியின் பெருமை. அவள் வார்த்தைகள் நசியின் மனதில் பலமுறை எதிரொலித்த எண்ணங்கள். அவற்றை எழுத்தில் வாசிக்கும்போது முன்பே கேட்டது போல பரிச்சயம்.

அவளை யாராவது குறை சொல்லும்போது கண்ணீர் துளிக்கிறது.
‘ஏ டிசூஸா! அவளை நாஸிப்பெண் என்று திட்ட உனக்கு வெட்கமாக இல்லை? அவள் உன் வழிக்கு வரவில்லை. நீ ஏன் அவளை வம்புக்கு இழுக்கிறாய்? உனக்கும் ஒரு பெண். பதினாறு வயதில் அவள் எப்படி இருந்தாள்? உன் ஆடம்பர வாழ்க்கையும் கட்டுப்பாடு இல்லாத நாக்கும் எத்தனை நாளைக்கு என்று பார்க்கலாம்!’

மேட்டின் உச்சிக்கு வந்துவிட்டாள். கிடுகிடுவென இறங்குவதற்கு சைக்கிளின் வேகத்தைக் குறைத்தாள். பிரகாசமான மஞ்சள் கார் ஒன்று அவளைத் தாண்டிச் சென்று தெருவோரத்தில் நின்றது. அவள் அதை நெருங்குவதற்கும் அதன் இடப் பக்கக் கதவு திறப்பதற்கும்…

ருந்தகப் பொறுப்புகள் முடிந்து ஆய்வகம் போவதற்குமுன் விபத்துக்கு உள்ளான ஒரு பெண்ணின் தகவல் அவருக்கு வந்தது. ‘விபத்து’ அபாய உணர்ச்சியைக் கொடுத்தாலும் முழு மருத்துவ விவரங்களைப் படித்ததும் அப்படியொன்றும் சீரியஸான கேஸ் இல்லை என்கிற நிம்மதி. காறை எலும்பில் மயிரிழை விரிசல் இருக்கலாம், கட்டுக்கூட போட வேண்டாம், விரைவில் அதுவாகவே சரியாகிவிடும், கவலைப்பட ஒன்றும் இல்லை. அதைச்சொல்லி நோயாளிக்குத் தைரியம் கொடுக்க, அறிவும் பல வருஷ அனுபவமும் சேர்ந்த ஒரு மதிப்பான மருத்துவர் என அவரை அழைத்திருக்கிறார்கள். அந்தக் கடமையை அவர் பலமுறை நிறைவேற்றி இருக்கிறார்.

சிகிச்சைப் பிரிவில் நுழைந்த அவரை ஒரு நர்ஸ் கதவு திறந்த அறைக்கு அழைத்துப்போனாள்.

படுக்கையில் வயதுக்கு வளர்ச்சி குன்றிய பெண். அவள் குறைபாட்டை நோயாளிக் குறிப்பில் படித்த அவருக்கு அது ஆச்சரியமாக இல்லை. அவள் கவனம் கூரையில் தொங்கிய தொலைக்காட்சியில். இரண்டு வெள்ளை ஆண்கள் ஃப்ரெஞ்சுப் புரட்சியின்போது நடைமுறைக்கு வந்த மெட்ரிக் அளவுகளை உலகில் பிற நாடுகள் பின்பற்றினாலும் தங்கள் தனிப் பெருமையை நிலைநாட்ட யூ.எஸ். புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.
தொலைக்காட்சியில் விளம்பரம் வந்ததும் அதை நிறுத்திவிட்டு அவர்கள் பக்கம் திரும்பினாள்.

“எத்தனையோ தீவிரப் பிரச்சினைகளை விட்டுவிட்டு இதற்கு ஒரு வெட்டிப்பேச்சு.”

“என் எண்ணமும் அதுதான்” என்றார்.

“நசி! உன் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியாகிவிட்டது. வந்துகொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு நர்ஸ் அகன்றாள்.

அவர் கட்டிலை ஒட்டிய நாற்காலியில் அமர்ந்தார். முதலிலேயே,
“யூ வில் பி ஃபைன்!” என்று பிரகாசமாகச் சொன்னார்.

“என் சைக்கிளுக்குத்தான் கொஞ்சம் காயம். வாங்கி வந்த பால் பழம் காய்கள்…”

“உன்னை இங்கே அழைத்து வந்தவள் எடுத்து வைத்திருப்பாள். தேவைப்பட்டால் புதிதாக வாங்கிக்கொள்ளலாம்.”

அவள் சமாதானம் அடைந்ததாகத் தெரிந்தது.

அவளுடைய தந்தை அல்லது தாய் வந்ததும் அவர்களுக்கு நம்பிக்கை தந்துவிட்டால் அவருடைய பொறுப்பு முடிந்துவிடும். அதுவரையில்…

“தெருவோரத்தில் காரை நிறுத்தி அதன் கதவைத் திறப்பதற்குமுன் கதவின் கண்ணாடியில் யாராவது தெரிகிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம்.”

“கார் பயணம் செய்கிற எல்லாருக்கும் உங்கள் ஜாக்கிரதை உணர்வு தேவை.”

அது இல்லாததால் எத்தனை பேருக்கு சிராய்ப்பு.

விபத்துக்குக் காரணம் வேறொருவராக இருந்தாலும் அது மனதின் சமன நிலையைப் பாதிக்கும், தூக்கத்தைக் கெடுக்கும். அதனால்,
“நீ விரும்பினால் சைக்கிள் ஓட்டுவதைச் சில நாள் தவிர்க்கலாம்.”

“ஏன்? அடுத்த முறை கனமான ஊர்தி இடித்து நான் இறந்து விடுவேனா?”

இறப்பு என்கிற கனமான வார்த்தை சிறு அதிர்ச்சியைக் கொடுத்தது.

“நான் அதற்காகச் சொல்லவில்லை” என்று அவளைப் பரிவுடன் பார்த்தார்.

அவளுக்கு அவர் மேல் மதிப்பு விழுந்திருக்க வேண்டும். எழுந்து கட்டிலின் ஓரத்தில் அவர் எதிரில் அமர்ந்தாள்.

“இறப்பதற்கு பயம் இல்லை. தொடர்ந்து வாழ்வதை நினைத்தால்தான் எனக்கு ஒரே கவலை.”

பதினாறு வயதுப் பெண்ணின் விரக்தியான வார்த்தைகள் அவரை நிமிர வைத்தன.

அவர் நன்கு அறிந்த இளையவர்கள் யாருக்கும் இது போன்ற கவலை இல்லை. அவர் பார்த்த போதெல்லாம் அவர்கள் கையில் ஒரு அலைபேசி, காதில் ஒலிக்கருவி. பள்ளிப் படிப்பை முடித்ததும் எதிர்காலத் திட்டம், எம்பிஏ., அதைத் தொடர்ந்து சமுதாயத்துக்குச் சிறிதும் பயன்படாத நிறுவனங்களில் உயர் வருமானப் பதவி. கடந்த ஆண்டில் அவர்கள்… ஒரு வாரம் கரீபியன் கடலை அனுபவிக்க ஐம்பதாயிரம் டாலர் வாடகையில் உல்லாசப் படகு. சுற்றிப் பார்த்த இடங்கள் ஆஸ்திரேலியா, இத்தாலி, மொராக்கோ. பயணம் வணிக வகுப்பில், தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதிகள். இந்தப் பெண்ணைப் போல சமைக்கத் தேவையான சாமான்களை சைக்கிளில் வாங்கிவரும் வழக்கம் அவர்களுக்குக் கிடையாது. தயாரான சாப்பாடு அவர்களைத் தேடிவரும்.

“ஏன் அப்படி சொல்கிறாய்?”

“உங்கள் வயதை நான் அடையும்போது ஆண்டு 2070. அப்போது உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! அதுகூட வேண்டாம், 2030இல் எனக்கு இருபத்தியாறு வயது.

பட்டாம் பூச்சிகளும் பாயும் புலிகளும் மறைந்துவிடலாம். அமேஸான் காடுகளும் பசுமையான சமவெளிகளும் சென்ற நூற்றாண்டில் அச்சடித்த வரைபடங்களில் மட்டும்தான்.

“ஐஃபோன்-20. ஆனால், அதில் என்ன படம் எடுக்க முடியும்? என் சாதா முகத்தையும் கட்டைத் தலை மயிரையும்.

“எதிர்பார்க்க வாழ்க்கையில் எனக்கு எதுவும் இல்லை. நான் இறப்புக்கு ஏன் பயப்பட வேண்டும்?”

குரலில் அடங்கியிருந்த சோகம் அவரைச் சுட்டது. மருத்துவர் என்ற முறையில் எத்தனையோ ஓலங்களையும் சாவுகளையும் பார்த்திருக்கிறார். முற்றிய புற்று நோயாளிகளின் நெருங்கிய உறவினர்களிடம், ‘மிஞ்சிப்போனால் ஒரு மாதம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இது வித்தியாசம். மாய வாழ்க்கையில் நிஜத்தை மறந்த மனிதர்களுக்கு நடுவில் மாயக் கண்ணாடியில் எதிர் காலத்தைப் பார்த்து அதற்காக வருந்தும் ஒரு பெண். துயரத்தைத் தவிர்க்க தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கைவிட்ட கையறு நிலைமை. அவள் கணிப்பு அவர் நோக்கிலும் சரி. அவளை மகிழ்விக்க அதை மறுப்பது பொய் சமாதானம்.

தன்னுடைய பதினாறு வயதை நினைத்தார்… எதிர்கால மூட்டையில் அவருக்கு எத்தனை பரிசுகள் ஒளிந்து இருக்கின்றன!

துலாபாரம் (மலையாளம்) வெளிவந்த சமயம். அடிப்படைத் தேவைகளுக்கு நிர்வாகத்துடன் போராடும் தொழிலாளர்கள் மற்றும் பசியில் வாடும் குழந்தைகளின் துயரம் பொறுக்காமல் அவர்களுக்கு விஷம் கொடுத்துத் தானும் அதை விழுங்கும் தாய். கலைப் படங்களில் பார்த்து ரசிக்க வேண்டிய அவலம். தானும் ஒருபிடி சோறுக்கு ஏங்கும் நிலை வரலாம் என்கிற எதார்த்தம் வசதியான குடும்பத்தில் பிறந்ததால் அவருக்கு வரவில்லை.

வங்கக் கடலைத் தாண்டி நியாயமற்ற வியட்நாம் போர். அதுபற்றி செய்தித் தாள்களில் படிக்க நேர்ந்தாலும், மனித உயிர்களின் இழப்பையும் காடுகளின் அழிவையும் இயற்கை சமாதான காலத்தில் சரிப்படுத்திவிடும் என்கிற சமாதானம். நிலவில் மனிதன் காலடி வைக்கப்போகிறான். அது வருங்கால விஞ்ஞான சாதனைகளின் முதல் படி.

இளமைப் பருவம் முடிவதற்குமுன் எதிர்காலம் பற்றிய கனவுகள். ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவை நிறைவேறும் என்கிற நிச்சயம். அவர் வாழ்க்கை பிரசுரத்துக்கு ஏற்கப்பட்டு அச்சிடத் தயாராக இருக்கும் கதை.

கல்லூரியில் ஓர் ஆண்டு முடித்து, வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. அது சுலபமானது இல்லை. உயிரியல், கணிதம் என எல்லா பாடங்களிலும் பெங்களூர் பல்கலைக்கழத்துக்கே முதல். கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் எழுத்துத் தேர்வில் கடினமான கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்கள். நேர்முக சந்திப்பில் தேர்வாளர்களின் நன்மதிப்பைச் சம்பாதிக்கும் உரையாடல். இளம் வயதிலேயே எதையோ சாதித்த பெருமிதம். எம்.பி.,பி.எஸ். பட்டத்துடன் அங்கிருந்து வெளியேறும்போது எத்தனையோ கதவுகள் தட்டாமலே திறக்கும் என்கிற தன்னம்பிக்கை. முக்கியமாக, யூ.எஸ்.ஸின் பிரபல பல்கலைக்கழகத்தில் உயர்மட்ட பட்டம். அதையும் தாண்டி உதவி மருத்துவர் பயிற்சி. பிறகு பல்கலைக்கழகப் பதவி. மனதுக்குப் பிடித்த மருத்துவ சேவையும் மனிதர்களின் உடல்நிலையை உயர்த்தும் ஆராய்ச்சியும். வளரும் யூ.எஸ். பொருளாதாரத்தில் மானியங்களுக்குப் பஞ்சம் இல்லை.

சக மாணவியுடன் காதல். பெற்றோர்களின் ஒப்புதலுடன் திருமணம். எல்லா முயற்சிகளிலும் துணையான மனைவி, ஒன்றிரண்டு குழந்தைகள்.

எந்த பல்கலைக்கழகம் எந்த ஆராய்ச்சி என்ற சில்லறை விவரங்கள் மாறுபட்டாலும் இளமையின் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாகவே அவர் வாழ்வில் எல்லாம் நடந்துவிட்டன. ஆசைப்பட்டதை வாங்கக்கூடிய பணமும், அதையும் தாண்டி சயாலிக் ஆசிட் பற்றிய அறிவில் உலக அளவுக்கு நிபுணர் என்ற பெயரும் புகழும்.
உடலைப் பற்றிக் கவலைப்பட ஒன்றும் இல்லை என்று ஆறுதல் சொல்லவந்த அவர், அவளுடைய இதயத்தின் ஆழ்ந்த சோகத்துக்கு தேறுதல் சொல்ல வேண்டும்.

எப்படி என்று ஒருகணம் யோசித்தார்.

“இறப்பு அச்சம் என்கிற வார்த்தைகளை நீயே சொன்னதால் அவற்றை இணைக்கும் என் சாதனை ஒன்றை நான் சொல்லப் போகிறேன்” என்று பெருமைடிக்கும் குரலில் சொன்னார். இமைகளை இலேசாக மூடி உதடுகளை இறுக்கித் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து கர்வப் பார்வை பார்த்தார்.

நசி கவலையை மறந்து சிரித்தாள்.

“என்ன அது?”

“மஹாபாரதா கேள்விப்பட்டு இருப்பாய்.”

“முன்னூறு பக்க சுருக்கத்தைப் படித்திருக்கிறேன்.

“ஓ!” என்ற ஆச்சரியத்துப் பிறகு, “அதில் நச்சுப்பொய்கை என்று ஒரு கதை. யக்ஷன் தருமனைக் கேட்கிறான். ‘உலகில் எது மிகப்பெரிய அதிசயம்?’ அதற்கு தருமனின் பதில்…” அவள் ஆர்வத்தைக் கிளற நிறுத்தினார்.

அவளோ, “தினம் மனிதர்கள் இறந்து யமலோகம் போகிறார்கள். அதைப் பார்த்தும் மற்றவர்களுக்கு வாழ்ந்துகொண்டே இருக்க ஆசை. இதைவிடப் பெரிய அதிசயம் எதுவாக இருக்கும்?”

புத்தகங்களை மேலோட்டமாக அல்ல, ஆழமாகவே வாசிக்கிறாள். அவளைத் தேற்ற அவர் எடுத்த வழி சரியானது.

“இந்த உரையாடல் நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்திலேயே, மனித உயிரின் முடிவைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு ஞாபகம் வரும். தருமனின் விவேகத்தைச் சோதிக்கும் கேள்வி – பதில் என்றாலும் இதில் ஏதோ ஒரு தத்துவம் அடங்கி இருந்ததாக எனக்குத் தோன்றும். உதவியாளர்களுடன் நான் செய்த அறிவியல் ஆராய்ச்சிக்கு நடுவில் அது என்ன என்று யோசிப்பேன். சில ஆண்டுகளுக்கு முன் இதே வழியில் மனதைச் செலுத்திய இன்னொரு சிந்தனையாளரும், நானும் சேர்ந்து உருவாக்கியது இந்தக் கொள்கை.

“அதன் பெயர்…”

“Mind Over Reality Transition (MORT) theory”

“நீளமான பெயர்.”

“சுருக்கமாகச் சொன்னால்… மற்ற உயிரினங்களைப் போல நம் நெருங்கிய உறவான நியான்டர்தால் மற்றும் டெனிஸோவன் மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்ந்தார்கள். மிருகங்களும் குழுவின் மற்ற அங்கத்தினர்களும் இறப்பதைத் தினம் பார்த்தாலும் என்றாவது ஒரு நாள் தங்களுக்கு அந்த முடிவு வருமோ என்கிற பயம் அவர்களுக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அதனால் அவர்கள் மன வளர்ச்சி ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டது என்பது என் எண்ணம். நம் நேர் முன்னோர்களுக்குக் கால உணர்வு இருந்ததால் சாவை சந்திக்க அச்சம். முதலையின் வாயில் அகப்பட்டு, இல்லை காட்டு மிருகங்களுக்கு இரையாகி யாராவது உடல் சிதைந்து போனால் எதிர் காலத்தில் நமக்கும் அந்த கதிதானே என்கிற வருத்தம். அதில் செயலிழந்து போகாமல் தப்பிக்கப் பரிணாமம் கொடுத்த பரிசு, இறப்பு நிஜம் இல்லை என கற்பனை செய்யும் மனம். கற்பனையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வார்த்தைகளால் ஆன மொழி. இப்படி படிப்படியாக மற்ற இருகால் உயிரினங்களில் இருந்து பிரிந்து நவீன மனிதன் உருவானான் என்பது கொள்கையின் முக்கியமான கருத்து.”

நசி யோசித்தாள், நம்பக்கூடியதாக இருந்தது. அவளைத் தன் பக்கம் இழுக்க, “புராதனக் கதைகளில் பார்த்தால், இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவதும், சாகா வரம் பெற ஆம்ப்ரோஷியா (அமிர்தம்) அருந்துவதும் அடிக்கடி நிகழும் சாதாரண சம்பவங்கள். அமரத்துவம் மனிதனின் டிஎன்ஏயில் ஊறிய ஆசை.”

“நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. படைப்புக் கடவுளைப் போல இறப்பைத் தொடர்ந்து வரும் இன்னொரு வாழ்க்கையும் எல்லா மதங்களுக்கும் பொது. ஏப்ரஹாமை முன்வைத்த மதங்களில் மனிதனுக்கு உலக வாழ்வு முடிந்ததும் கடவுளின் வீட்டில் நிரந்தரமாக ஓர் இடம்.”

“ஹிந்து மதத்திலும் அடுத்தடுத்த பிறவிகள், கடைசியில் இறைவனுடன் ஐக்கியம் ஆவது முக்தி. பௌதிக உடல் எரிந்தாலும் அதை இயக்கிய ஆன்மா அழியாது என்ற நம்பிக்கை.”

“உங்கள் புரட்சிகரமான கொள்கை மனிதனின் பரிணாமத்தைப் புதிய கோணத்தில் வைக்கிறது” என்று பாராட்டும் தோரணையில் சொன்னாள்.

“தாங்க்ஸ்! உனக்கே தெரியும், பரிசோதனைகள் மூலம் இதை நிரூபிக்க முடியாது. ஆனால், நம் நிலைமையை விளக்க இது பயன்படும்.”

“எப்படி?”


“நிகழ் காலம் பிடிக்காவிட்டால் எதிர் காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”

“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”

“எதார்த்தத்தை மறுத்து நமக்குப் பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும், மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”

“கரியையும் ஹைட்ரோ கார்பனையும் எரிக்கும் நம் சௌகரிய வாழ்க்கை முறையால் ஆபத்து இல்லை என எல்லாருக்குமே நம்பிக்கை. சமீபத்தைய மனித செயல்கள் பருவ காலங்களின் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன என்பதும் பலருக்கு வீண்புரளி.”

உரையாடல் அவர் விரும்பிய வழியில் சென்று விட்டது. அதை முடிக்கவேண்டியது தான் பாக்கி.

“நசி! உனக்கு இறப்பை நினைத்து அச்சம் இல்லை, நிஜத்தை மறுக்கும் மனப் பான்மையும் இல்லை. அதனால்தான் தற்போதைய தீவிர நெருக்கடி தெளிவாகத் தெரிகிறது.”

“உங்கள் மார்ட் கொள்கையின்படி பார்த்தால்…” மருத்துவருக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும், “நான் மனித குலத்தின் சராசரியில் சேர்த்தி இல்லை” என்றாள்.

“அப்படி இருப்பதிலும் ஒரு லாபம்.”

அவரை உற்றுப் பார்த்தாள்.

“இயற்கையில் ஒரு சமயம் இரை தேடவும் துணை பிடிக்கவும் உதவி செய்த அமைப்பு இன்னொரு சமயம் ஆபத்து விளைவிக்கும். டைனஸார்களுக்குச் சாதகமாக இருந்த பூதாகரமான உடல் சுற்றுச்சூழல் மாறியதும் அதைக் குழி தோண்டி புதைத்து இருக்கும். முன்னொரு காலத்தில் எதார்தத்தை மறுத்து கற்பனையை வளர்த்தது நம் குலம் உலகம் முழுவதும் பரவ உதவியது. இன்றைய பூமியில் அதே குணம் நம்மை அழிவிற்கு இட்டுப்போகிறது. இப்போது… நீயும் க்ரெட்டாவும் தான் நார்மல். நாங்கள் புதிய சூழ்நிலைக்குப் பொருந்தாதவர்கள். நீங்கள் காட்டும் வழியில் நாங்கள் நடப்பது ஒன்றுதான் மனித குலத்தைக் காப்பாற்றும்.”
நசியின் முகத்தில் நம்பிக்கை ஒளி.


[Mind Over Reality Transition (MORT) theory, அதை உருவாக்கிய பேராசிரியர் அஜித் வர்க்கி மற்றும் க்ரெட்டா துன்பெர்க் நிஜம். மீதி கற்பனை.]

Series Navigation<< என்ன பொருத்தம்!அன்புள்ள அன்னைக்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.