மைத்ரேயன்

மூன்றே மாதங்களில் உலக மனிதர் வாழ்வு புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. பெரு நாகரீகம் கண்டவர்களாக இறுமாந்து திரிந்த மாந்தரை, எந்தப் படையுமின்றி, போராயுதங்களும், மின் சாதனங்களும், ஆரவாரமும் இன்றி, மனிதரைக் கொண்டே விரட்டி, அத்தனை கோடானு கோடி மக்களையும் அலட்சியமாகக் கூண்டுகளில் அடைத்து விட்டிருக்கிறது ஒரு நுண்கிருமி.
அதோடு சக மனிதரைக் கண்டே அச்சப்படும்படி எல்லா நாட்டு மக்களையும் அன்றாடப் பதட்ட நிலையில் நிறுத்தி விட்டது.
இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, உலகை ரத்த வெள்ளத்திலும், மிருக வதைகளிலும், பெரும் கொலைகளிலும், கொள்ளைகளிலும், அழிப்பிலும் ஆழ்த்தி, உலகை வென்று ஆளும் ஆணவத்தோடு போர்கள் நடத்தி அரட்டி வந்த உலக ஏகாதிபத்தியங்கள் எதுவும் மொத்த உலகையும் வென்றதில்லை, உலக மனிதர் மீது முழுக் கட்டுப்பாட்டையும் பெறவில்லை. தொடர்ந்து தம் எதிர்ப்புகளோடு போராடுவதிலேயே காலத்தைக் கழித்து, நிரந்தரமான, முடிவில்லாத நிழல் யுத்தத்தில் அவை சிக்கிக் கொண்டிருந்தன.
ஆனால் ஒரு நுண்கிருமி, ஓர் அடக்கு முறையை, கட்டுப்பாட்டை, மனிதர் தாமே தம் மீது மேற்கொள்ளும்படி செய்துவிட்டது. அது பெருங்கொலையைச் செய்யவில்லையா என்றால், ஒரு லட்சம் பேர்களைத்தான் உலகெங்கும் கொன்றிருக்கிறது. (ஏப்ரல் 11, 2020 தகவல்படி) 18 லட்சம் பேர்களைப் பீடித்திருக்கிறது. 4 லட்சம் பேர்கள் தேறி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தேறியவர்களில் சில நூறு பேர்கள் மறுபடியும் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அறிக்கைகள் சொல்கின்றன. ஆனால், கட்டடங்கள், சாலைகள், துறைமுகங்கள், ரயில் பாதைகள், விமானத் தளங்கள் என்று எந்தக் கட்டுமானத்தையும் அழிக்கவில்லை.
ஒப்பீட்டில் வேறு எல்லா ஏகாதிபத்திய முயற்சிகளும் இதைப் போல பல மடங்கு மனிதர்களைக் கொன்றிருக்கின்றன, ஏராளமான பொதுச் சொத்துகளை அழித்திருக்கின்றன. அவற்றால் கொணரப்பட்ட பயங்கரங்கள் ஒப்பீட்டில் பூதாகாரமானவை.
இந்தக் கிருமியும் ஏகாதிபத்தியப் போர்தான். இது எழுந்த பின், மனித குலம் இதுவரை நாம் சந்தித்திராத வகையான, அடுத்த கட்டப் போருக்கு நகர்ந்திருக்கிறது. இதை இயற்கையே மனிதர் மீது நிகழ்த்துகிறதா, இல்லை இயற்கையை மனிதரில் மிக வக்கிரமான புத்திகள் பயன்படுத்தி மானுடத்தின் மீது நடத்துகின்றனவா?
அதெல்லாம் நமக்குத் தெளிவாக இன்னும் சில பத்தாண்டுகள் பிடிக்கலாம்.
***
இந்தக் கிருமியின் கொலை நாடகத்தால், தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கேளிக்கைக்கான கருவி என்று மட்டும் கருதியவர்கள், இன்று கேளிக்கைகளைக் கூட அதன் வழி பெறுவதைத் தயக்கத்துடன் ஏற்கிறார்கள்.
உணவுக்குக் கொல்லப்பட வளர்க்கப்படும் சிறு மிருகங்களை முன்பாகக் கொழுக்க வைப்பதைப் போல, பெரும் ஊடக நிறுவனங்கள் இன்று வீட்டில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு தம் முன்னாள் வணிகப் பொருட்களைச் சல்லிசான விலையிலோ, இலவசமாகவோ கொடுக்க முன்வருகின்றன. நாளைக்கான வாணிபத்துக்கு மக்கள் இருக்க வேண்டுமே என்ற கவலை அவற்றுக்கு. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் முயற்சி.
ஏதோ பெரும் அலை ஒன்று தம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, பதறி அடித்து ஓடி எங்கோ உயரத்தில் பதுங்கித் தப்பாமல், அதன் நேர்ப் பாதையில் மெத்தனமாக அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு எந்த வயதினரின் மனதிலும் இப்போதெல்லாம் எழுந்த வண்ணம் இருக்கிறது என்று என் நினைப்பு. நேரே சந்தித்துப் பேசவோ, பழகவோ முடியாத நிலையில், தொலை பேசி, கணினிக் காட்சித் தொடர்பு ஆகியன வழியே பார்க்கும் நபர்களுடன் பேசுகையில் இந்த எண்ணம் வெவ்வேறு வழிகளில் ஊர்ஜிதமாகிறது.
இருந்தும் தொடர்பு கொள்பவர்கள் இன்னும் ஊக்கத்தையோ, வாழ்வின் மீதுள்ள நம்பிக்கையையோ இழக்கவில்லை. தத்தம் வீடுகளில் இருக்கிறார்கள். அவை பதுங்கு குழிகள் போல ஆகி இருந்தாலும், இன்னும் தாம் பதுங்குகிறோம் என்ற உணர்வை அவர்கள் பெறவில்லை, வீடுகள் இன்னும் அந்த குணத்தைக் காட்டத் தொடங்கவில்லை. ஏனெனில் ஆபத்து என்பது ஆரவாரமின்றி வருகிறது. காட்சிப் புலனுக்குத் தெரியாமல் பற்றுகிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாகவே பலிகளைப் பிடித்தாலும், மறுவினைகள் மூலம் மொத்தத் தெருக்கள், கட்டடங்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தித் தன் பாசறையாக்கி விடுகிறது. ஐந்தாம்படை என்பார்கள், உளவு / சதி / மறைமுகத் தாக்கலுக்கான படைகளை. இந்த நுண்கிருமியின் மொத்தச் செயல்பாடுமே ஐந்தாம்படைத் தாக்குதல்தான். கொரில்லாப் போர்தான். நம்மிடையே புழங்கியபடியே நம்மைப் பலியாக்கும் படை.
அறமற்ற ஏகாதிபத்திய ராணுவங்கள் மருத்துவமனைகள், அகதிகள், நலிந்தோர், முதியோர், சிறார் என்று எங்கும், யாரையும் சகட்டு மேனிக்குத் தாக்கிக் கொல்லும். இந்தக் கிருமி அதையே மொத்தப் போரையும் நடத்தப் பயன்படுத்தும் வழிமுறையாகக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு களத்தில் இன்னொரு கிருமி முந்தைய ஏகாதிபத்தியங்களின் முதுகில் சவாரி செய்தபடி, சில நூறாண்டுகளாக உலகைத் தாக்கிப், படிப்படியாகப் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்து, சுவாசிக்கும் காற்று, வனங்கள், கடல்கள், நீர்நிலைகள் என்றும், மனிதரின் உளநிலை, வீடு, பள்ளிகள், மதத் தலங்கள் என்று எங்கும் தன் விஷத்தைப் பரவ விடுவதில் பெருவெற்றி பெற்றது, அதுதான் முதலியம். (பல அரசு மையப் பொருளாதார முறைகளும் அடிப்படையில் முதலியம்தான்.) மனிதரின் புத்தியிலேயே பெரும் இடத்தைப் பிடித்துக் கொண்டு பேயாட்டம் ஆடும் முதலியம் என்ற கிருமிக்கு, இது வரை பெரும் சவால்கள் அதிகம் எழவில்லை.
முதல் பெரும் எதிரியாக வந்துள்ளது நுண்கிருமி கொரோனா. இதன் முதல் சுற்றுத் தாக்குதலில் பழைய பிசாசான முதலியம், நிலைகுலைந்து பதுங்குகிறது.
என்னதான் கிருமிக் கட்டுப்பாட்டை நெருங்கிவிட்டோம் என்று அவ்வப்போது செய்தி ஊடகங்கள் வழியே, நிபுணர்களோ, அரசியல் தலைவர்களோ, பல நாட்டு அன்றாட அறிக்கைகளோ சொன்னாலும், அதே தலைவர்கள், அறிக்கைகள் இந்த ஊரடங்கு முறை ஓரிரண்டு வாரங்கள் இல்லை, பல மாதங்கள் தொடரும் என்று சொல்லத் துவங்குகையில் நம் அனைவருக்கும் ஒரு வகைக் கிலி பிறக்காமல் இருக்காது.
முதலியம் நம்மை நுகர்வோராக ஆக்கி ரத்த சோகைப் பலிகளாக்கியது. இந்த நுண்கிருமி நம்மை முகர விடாமலும், நுகர்வைப் பார்த்து அச்சப்படுவோராகவும் ஆக்கி மூச்சுத் திணற வைத்து விட்டது.
எத்தனை சாமர்த்தியமான, நவீன மனித நாகரீகத்தின் அடிவேரில் அமிலம் ஊற்றும் போர்த் தந்திரம் இது! இதுவா தற்செயலாக எழுந்த கிருமி என்று நமக்கு ஐயம் பிறப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கும்?
***
நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் சஞ்சிகையில் தேர்ந்த எழுத்தாளர்கள் உலகெங்குமிருந்து தம் நாட்குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். இது வரை மூன்று அடுத்தடுத்த இதழ்களில் இந்தக் குறிப்புகள் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றுக்கான சுட்டிகள் இங்கே:
நியூயார்க்கர் பத்திரிகை, இந்த நுண்கிருமி சம்பந்தப்பட்ட விஷயங்களை வாசகர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறதாக அறிவித்திருக்கிறது. அவற்றை இங்கே காணலாம்: https://www.newyorker.com/tag/coronavirus
குறிப்பாக டாக்டர் சித்தார்த்த முகர்ஜி இந்த நுண்கிருமி எப்படி மனித உடலில் செயல்படுகிறது என்று எழுதிய கட்டுரையைப் படித்தல் உதவும்.
https://www.newyorker.com/magazine/2020/04/06/how-does-the-coronavirus-behave-inside-a-patient
இதே பத்திரிகையின் ஏப்ரல் 13, 2020 இதழில் பல நாடுகளிலிருந்து எழுதுபவர்கள் தம் வாழ்க்கையும், நாட்டு மக்களின் வாழ்வும் எப்படி மாறின என்று கட்டுரைகள் மூலம் கொடுக்கிறார்கள். அவை இங்கே கிட்டும்: https://www.newyorker.com/magazine/dispatches-from-a-pandemic
அமெரிக்க இடது சாரிப் பத்திரிகைகளில் குறுகிய காலத்தில் மதிப்புள்ள பத்திரிகையாக மாறி இருக்கிற என்ப்ளஸ் ஒன் மாகஸீன் (n+1 magazine) இந்த நுண்கிருமிக்குத் தனியாக இடம் கொடுத்துக் கட்டுரைகளைப் பிரசுரித்திருக்கிறது. அவற்றை இங்கே காணலாம்: https://nplusonemag.com/tag/coronavirus/
அட்லாண்டிக் மந்த்லி பத்திரிகை ஏப்ரல் 14 அன்று பல நிபுணர்களைக் கூட்டி ஒரு வலையுலக மாநாடு நடத்துகிறது. அதைப் பார்க்க/ கேட்க இங்கே செல்லவும்: http://covid19frontlines.theatlantic.com/
இப்படிப் படிப்பது உலகளவில் செய்திகளின் தாக்கத்தைக் காட்டும். இது தனி மனித வாழ்வில் எப்படி எல்லாம் தாக்கம் கொடுத்தது, நகர மாந்தர்கள், சிற்றூர் மக்கள் எல்லாம் வெவ்வேறு நாடுகளில் எப்படிப் பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டால் நமக்கு இந்த நூற்றாண்டின் இந்தப் பெரும் மாறுதல் எப்படி எங்கெல்லாம் நேர்ந்தது என்பதை அருகாமையில் பார்த்து அறிந்த உணர்வு கிட்டும்.
***
உலகமெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு, சொந்த அனுபவத்தைச் சொல்லாமல் எப்படி. அது கீழே:
என் வீட்டில் நான்கு பேர் 60க்கு மேற்பட்டவர்கள். 90லிருந்து 62 வரை. ஒரே ஒருவன் இளைஞன். திடீரென்று வீட்டின் அச்சாணியாக மாறி விட்டவன். ஒரு மாதம் முன்புகூட வசதிகளை நுகர்பவனாக, வீட்டில் குதூகலம், ஆர்ப்பாட்டம், உற்சாகம் ஆகியவற்றைப் பரப்பும் ஆத்மாவாக இருந்தவன், அதற்காக விரும்பப்பட்டவன். ஆனால் வீட்டின் ஆதார சுருதி என்று தெளிவாக அறியப்படாதவன்.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக மூத்தவர்கள், ஒரு நாள் இவனைப் பார்க்கவில்லை என்றால் வீடே வெறிச்சுனு இருக்கு என்று நாளொன்றில் பல முறை சொல்வார்கள். இன்னும் அறுபதுகளின் துவக்கத்தில் இருக்கும் நபர் தானும் அப்படியே உணர்ந்தாலும், அதை ஒரு புன்னகையால் மட்டும் அங்கீகரித்து விட்டு நகர்வார். நான் புத்தகங்களின் நடுவில் இருப்பதால், எல்லா மனிதர்களும் தேவைதான், ஆனால், இல்லாமலும் இருக்க முடியும் என்று நம்புபவன். இந்த நம்பிக்கை மனிதரின் அனேக நம்பிக்கைகளைப் போல ஒரு சீட்டுக் கட்டு மாளிகைதான். சற்றுப் பலமாக ஊதினாலேயே விழுந்து விடும். கொரோனா நுண்கிருமி வெறும் காற்றல்லவே, புயல் போலத்தான் என்பதால் என் புத்தக அடுக்கு அரண் என்னைக் காக்கவில்லை. வீட்டில் எல்லாரும் இருந்தாலும் தனியாக இருப்பது போலவே எந்நேரமும் தோன்றுகிறது.
இந்த இளைஞன்தான் மளிகைக் கடைகளுக்கும், மருந்துக் கடைகளுக்கும் போய் வருகிறான். முன்பு நான் சிறுவனாக இருக்கையில் முடிவெட்டிக் கொண்டு வந்தால் கொல்லைப் புறத்தில் அல்லது முற்றத்தில் நிறுத்தி உடுப்புகளைக் களைந்து ஒரு வாளி நீரில் முக்கி விட்டு, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டி இருக்கும். யாரோ ஒருவர் வந்து தலையில் நீர் ஊற்றி முழுதும் நனைந்துபோன பின்புதான் நாமே குளிக்க விடுவார்கள்.
அதைப் போல, இவன் மளிகைப் பொருட்களை வீட்டுக்குள் புழக்கத்தில் கொணராமல், அடித்தளத்து அறைக்கு எடுத்துப் போகிறான். குளிர்ப்பிரதேசம், மரவீடு, அடித்தளம் கற்சுவர்களால் சூழப்பட்டது. பொதுவாகக் கிடங்கு போலப் பயன்படும். அதற்கு வீட்டுக்குப் பக்கவாட்டில் ஒரு சிறு கதவு இருக்கிறது. குனிந்து உள்ளே வரணும். தெருவிலிருந்து வரும் நடையிலிருந்து நேரே இந்தத் தளத்துக்குள் போக முடியும்.
சலவை செய்ய உதவும் பெரிய தொட்டி அருகே கொணர்ந்த பொருட்களை வைத்து விட்டு, சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவி விட்டு, காகிதத் துவாலையால் துடைத்துக் கொண்டு, கைகளில் நைட்ரைட் உறைகளைப் போட்டுக் கொண்டு, ப்ளாஸ்டிக் பைகளில் உள்ளவற்றின் மீது நீர்க்க வைக்கப்பட்ட ப்ளீச் கரைசலை விசிறி வீசுகிறான் (ஸ்ப்ரே பாட்டில் வழியே). பிறகு காகிதப் பொட்டலங்களை ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பின் மீது வைக்கிறான். காய்கறிகளைத் தொட்டியில் குழாய் நீரில் நன்கு அலசுகிறான். பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள், பைகள் எல்லாம் லைஸால் திரவத்தில் நனைந்த காகிதத் துவாலையால் நன்கு துடைக்கப்படுகின்றன. பிறகு கை உறையை அங்கு ஒரு குப்பைத் தொட்டியில் போடுகிறான். ஒரு சில மணி நேரம் எல்லாம் அடித்தளத்திலேயே இருக்கும். பிறகு குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட வேண்டிய விஷயங்களை மட்டும் எடுத்து வந்து ஃப்ரிட்ஜில் வைக்கிறான். மீதம் எல்லாம் ஒரு நாளாவது கீழேயே இருக்கும். வீட்டில் எலித் தொல்லை, பூச்சித் தொல்லை இல்லை. அதனால் அப்படி இருக்கலாம். தவிர இங்கு இன்னும் குளிர் காலம் முழுதுமாகப் போகவில்லை. அதனால் எல்லாம் கெடாமல் கீழே இருக்கும்.
இப்படி, ஒரு வழியாக என் 70 ஆவது வயதில் – இன்னும் சில மாதங்களில் அதைத் தாண்டுவேன் – இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த என் சனாதனி தாத்தா பாட்டிகளின் வாழ்வைத் திரும்ப வாழ எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சக்கரம் என்று இதைச் சொல்கிறார்கள் போலிருக்கிறது. இது நீடித்தால் அமெரிக்காவை விட்டு விட்டுத் திரும்ப தஞ்சை மாவட்டச் சிற்றூருக்கே போக வேண்டி வருமோ என்று கூட யோசித்தேன். 🙂
அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெள்ளை இன மேட்டிமைப் பார்வை கொண்டவர்கள், புலம் பெயர்ந்து வந்து இங்கே வேலை செய்கிறவர்களின் நுழைவனுமதிகளையும், குடியுரிமைகளையும் ரத்து செய்து, வம்சாவளி நாட்டுக்கே திரும்ப அனுப்ப வேண்டும் என்று பேசத் துவங்கி இருக்கிறார்கள்.
இந்த நுண்கிருமி உலகெங்கும் எல்லாச் சமூகக் குழுக்களிடமும், தம் மனிதர்களைத் தவிர மற்றவர்களை நம்பவியலாது என்று யோசிக்க வைத்திருப்பதாகத் தெரிகிறது.
நாள் பூராவும் வீட்டிலேயே இருக்கும் மனைவி, தன் ஆய்வுக் குழுவினருடன் விடியோ / தொலைபேசி / ஆடியோ கலந்துரையாடல்கள் மூலம் நாளின் பெரும்பகுதியையும் கழிக்கிறார். மீதி நேரம் – சாப்பிடுவது, குளிப்பது போன்ற வேலைகளைத் தவிர மற்ற நேரமெல்லாம் வேலை பார்க்கிறார். நானுமே அனேக நேரம் படிப்பு, எழுத்து என்றும், ஒரு மணி நேரம் குளிரானாலும் நடப்பதையும் செய்கிறேன். தெருவில் நடக்கையில் மிகச் சிலரே தெருவில் காணப்படுகிறார்கள். வழக்கமாகப் பத்து பேர் காணும் தெருவில் இப்போது ஓரிருவர்தான். நான் வருவதை அரை மைல் முன்னமே காணும் நபர் இளைஞராக இருந்தால் அகன்ற வீதியைக் குறுக்கே கடந்து எதிர் நடைபாதைக்குப் போய் விடுகிறார்.
தேகப் பயிற்சிக்காக ஓடுவதைப் பழகுபவர்கள், பின்னே இருந்து ஓடி வந்து என்னைக் கடக்கும்போது நடைபாதையை விட்டு இறங்கித் தெருவில் ஓடி என்னைக் கடந்து போகிறார்கள். என்னை விட முதியோரோ, அல்லது சிறுவருடன் வரும் பெண்கள்/ ஆண்களோ எதிரில் வருவது தெரிந்தால் நானும் அதேபோல முன் கூட்டியே நடைபாதையை விட்டு விலகிக் கீழே இறங்கித் தெருவில் நடந்து அவர்களைக் கடக்கிறேன்.
மூன்று நாட்கள் முன்பு வரை தெருவில் நடப்பவர்களில் பெரும்பகுதியினர் முகக் கவசம் அணியவில்லை. நானும் அணியவில்லை. இரண்டு தினங்களாக மழை, குளிர் என்று நான் நடை போகவில்லை, ஆனால் தெருவில் தெரிகிற சிலர் முகக் கவசம் அணிந்து போவதைக் கவனித்தேன். சற்று முன் நாயொன்றைக் நடக்கவும், கடன் கழிக்கவும் அழைத்துப் போகிற பெண்ணொருத்தி முகத்தில் கண்களைத் தவிர வேறொன்றும் தெரியாதபடி முகக் கவசம் அணிந்து நடந்து போனார். ஆனால் எதிர் வீட்டின் வளர்ப்புப் பூனை, நாளின் பெரும்பகுதியை வீட்டுக்கு வெளியே உலாவிப் பறவைகள், அணில்களை வேட்டையாடுவதில் கழிக்கும் பூனை, இந்தத் தெருவில் உள்ள பலருக்கும் நன்கு அறிமுகமான பூனை மட்டும் ஒரு கவசமும் இன்றி வாலை நெளித்து ஆட்டியபடி உல்லாசமாக, நிதானமாகத் தெருவைக் கடந்து என் வீட்டு முன்வாயில் படிகளில் படுத்துச் சூரிய வெப்பத்தை அனுபவிக்கிறது. தெருவில் கார்கள் போவது பத்தில் ஒரு பங்காகி விட்டதால் அதற்கு அத்தனை நிதானம் கடந்து வருவதில். தெரு அருகே மேடையில் படுத்திருக்கும் அதைக் கொஞ்சுவோருக்கு அது கிருமியைச் சுமந்திருக்குமோ என்ற அச்சம் ஏன் வருவதில்லை? எனக்குப் புரியாத மர்மம் அது.
நண்பர்கள் விடியோவில் பேச வருகிறார்கள், அவர்கள் வேறு மாநிலங்களில் இருப்பவர்கள், அவர்களின் வீடுகள் கொஞ்சம் அல்லோல கல்லோலப்படுகின்றன என்று தெரிகிறது – அவர்கள் நடுவயதினர், வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர் இளம் பிராயத்தினர். பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டிருப்பதால் உடன் பிறப்புகள் எல்லாம் ஒரே நேரம் ஒரே வீட்டில் அடைந்திருப்பதில் நிறைய வாக்குவாதங்களும், சண்டைகளும், எல்லை பிரிப்புப் பிரச்சினைகளும் எழுகின்றன என்று தெரிவித்தார்கள். விளையாட்டுக் குழுக்களில் தினம் போய்ப் பயிற்சி செய்து உடல் வருந்துவதைப் பழகிய சிறுவர், இளைஞருக்கு இப்படித் திடல்கள், விளையாட்டு அரங்குகள் எல்லாம் மூடி இருப்பது கடும் காவல் சிறைத் தண்டனை போல இருக்கும். என் வீட்டு இளைஞனுக்கு அப்படித்தான் இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகளும் இல்லை, ஏனெனில் எல்லாப் போட்டிகளும் ரத்து. பழைய ஒலி / ஒளி பரப்புகளைப் பார்க்கிறான், நிலைமை சரியானபின் விளையாட்டுக் குழுக்களின் மறு உருவாக்கம் எப்படி இருக்கும் என்ற ஊகச் சர்ச்சைகளை வானொலி நிலையங்கள் நடத்துகின்றன, அவற்றைத் தொடர்ந்து கேட்கிறான். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் மிக அழுத்தப்பட்ட சுருள் வளையம் தெறித்து விடுபடுவது போல ஏதும் நடக்கும் என்று தோன்றும்படி இருக்கிறான்.
வேறு சிலர் குழந்தைகளுக்கு எப்படிப் பொழுது போக்கச் சொல்லித் தருவது என்று விடியோக்களை அனுப்பினார்கள். அவற்றில் சில சீனப் பெற்றோரின் திறமையான விளையாட்டுகளைக் கொண்டிருந்தன.
வீட்டில் இருந்த அடைசல்கள் எல்லாம் இப்போது கவனிக்கப்பட்டு படிப்படியாக ஒழிக்கப்படுகின்றன. ஏராளமான கேபிள்கள், மின் சாதனங்கள், பழைய கணினிகள், மோடெம் / ரௌடர்கள், காலாவதியான மென்பொருள் குறுந்தட்டுகள், பற்பல பழைய செல்ஃபோன்கள், அவற்றுக்கு மின்விசை ஊட்டத் தேவையான மின்கம்பிகள் என்று பல பைகளில் நிரப்பப்பட்டவை சில அறைகளில் அமர்ந்திருக்கின்றன. உள்ளூரில் இவற்றைச் சேகரிக்கவென நகர பரிபாலன அமைப்பு ஒரு கிடங்கை வைத்திருக்கிறது, அங்கு மின் கழிவுகளைக் கொண்டு கொடுக்கலாம். அதற்கான தினம் எப்போது வரும், அந்த வாரம் இந்தக் கோடையில் இருக்குமா என்பதெல்லாம் ஐயம்தான். கோடை கூட இந்த வருடம் வருமா என்று எனக்கு ஐயம் இருக்கிறது. ஏதோ அடுத்த நூற்றாண்டில்தான் அது இருப்பது போலத் தெரிகிறது. பழைய காலணிகள், துணிகள், சஞ்சிகைகள், என்றோ மூடப்பட்ட கணக்குகளைக் கொண்ட தொலைபேசிக் கட்டணக் கோரிக்கை கடிதங்கள் என்று வீசிப் போட நிறைய நிறைய இப்போது வெளிப்பட்டு குப்பைக்கான ட்ரம்களில் சேர்கின்றன. இதெல்லாம் போக, புத்தகம் படித்து, சில சினிமாக்களையும் ஈடுபாடு இல்லாமல் பார்த்த பின், ஒவ்வொரு நாளையும் கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டி இருக்கிறது. இரவில் உடல் களைத்துக் கெஞ்சினாலும், படுக்கைக்குப் போனால் உறக்கம் வர நேரம் பிடிக்கிறது.
இவற்றோடு வீட்டில் குழந்தைகளும், பதின்மரும் இருந்த காலத்தில் சேகரிக்கப்பட்டிருந்த மேஜை விளையாட்டுகள் – board games – ஒதெல்லோ, ட்ராஃப்ட்ஸ், மாலார்க்கி போன்ற பல விளையாட்டுகள் எல்லாம் தேடி எடுக்கப்பட்டுத் தூசி துடைத்து, வீட்டு முகப்பில் அடுக்கப்பட்டன. இங்கு எதையும் வாங்காதே என்று ஓர் இயக்கம் இருக்கிறது. (Buy Nothing) இது மாநிலத்தில் பல ஊர்களில் உண்டு. இந்த இயக்கத்து உறுப்பினர்கள் தம்மிடம் என்ன உபரியாக இருக்கிறது என்று தெரிவிப்பார்கள். ஊரில் பலர் தமக்கு என்னென்ன வேண்டும் என்று தெரிவிப்பார்கள். யார் முதலில் கேட்டார்களோ அல்லது யாருக்கு இது மிக அவசியம் என்று கொடுப்பவருக்குத் தோன்றுகிறதோ, அந்த நபர்களுக்கு அவை வழங்கப்படும். வாங்கிக் கொள்பவர்கள் வீடு தேடி வந்து வாங்கிச் செல்வர்.
அந்த இயக்கம் இப்போது கொஞ்சம் தேங்கி இருக்கிறது. வீடு வீடாகப் போய் வாங்கத் தயங்குகிறார்கள். இருப்பினும் கொடுப்பவர்கள் தம் வீட்டு வாசலில் தெரு அருகே உள்ள ஓரிடத்தில் ப்ளாஸ்டிக் பைகளில் பொருட்களை வைத்து, வாங்கிச் செல்பவரின் பெயரை அதில் ஒரு அட்டையில் எழுதி வைத்துக் கட்டி வைத்து விடுகிறார்கள். துணிச்சல் வந்து எடுத்துப் போக வருபவர் தெருவோடு வந்து எடுத்துப் போகிறார். அப்படி இந்த மேஜை விளையாட்டுகள் பலவற்றைச் சென்ற வாரம் கொடுத்து விட்டிருந்தோம்.
ஒரு பெண்மணி, புதிதாக வெஜிடேரியனாகவும், இந்திய உணவுகளை உண்பவராகவும் ஆகி இருக்கிறார். இவர் எங்கிருந்தோ ‘ஆம்சூர்’ என்கிற உலர்ந்த மாங்காய்ப் பொடியைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைச் சுவைக்கவும் செய்திருக்கிறார். அது பிடித்துப் போய் விட, எங்களிடம் கேட்டார். வீட்டில் இருந்ததில் கணிசமான பகுதியை ஒரு டப்பியில் அடைத்து வெளி வாயிற்படியில் வைத்தோம். வந்து எடுத்துப் போனார். சுமார் பத்து அடி தள்ளி இருந்து பேசி விட்டு, நன்றி தெரிவித்துப் போனார்.
தெருக்கோடி பீட்ஸாக் கடையில் ஈயடிக்கிறது. ஊர் மையத் தெருவில் அனேகமாக ஆட்களே இல்லை. பொது நூலகங்களை ஜூனில்தான் இனி திறப்பார்களாம். நான் கடன் வாங்கி வந்த புத்தகங்களை ஜூன் நடு வரை காலக் கெடு நீட்டித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டார்கள். இந்தச் சிற்றூரில் மையத் தெருவில் இருக்கும் ரெஸ்டாரெண்டுகள், பரியாரிக் கடைகள், பல் வைத்திய நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் எல்லாம் பரிதாப நிலையில் இருக்கும் என்று ஊகிக்கிறேன். நல்ல வியாபாரம் செய்யும் ஒரே இடம் – உங்களுக்கு இதை ஊகிப்பது கடினமாக இராது – ஆமாம், மதுபானக் கடைகள். அங்கும் சமூக விலக்கைக் கடைப்பிடிப்பதால் ஒரே நேரம் ஓரிருவரைத்தான் கடைக்குள் அனுமதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
சில மளிகைக் கடைகள் இன்னும் மக்களை உள்ளே விடுகிறார்கள். நான் போன ஓரிரு கடைகளில்- ஒரு அவசரத் தேவைக்குப் போனேன் – முன்பிருக்கும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்குதான் இருந்தது. இது ஒரு சூப்பர் மார்க்கெட் அளவு பெரியது. ஆனால் உள்ளே ஊழியர்கள் வாடிக்கையாளர்களைப் போல இரண்டு மடங்கு இருந்தனர். அனேகமாக எல்லாரும் கையுறை அணிந்திருந்தனர். பெரும்பாலர் முகக் கவசமும் பூண்டனர்.
இந்த ஊர்ப் பொதுவின் முடக்கத்தால் மிகவும் அடி வாங்கியவர்கள் அன்றாடக் கூலிக்கு வேலை செய்யும் மனிதர்கள். வளர்ந்த நாடு என்ற பிரமையில் இத்தனை நாட்களாக உலவிய அமெரிக்கருக்கு, பொருளாதார நிபுணர்கள் பல பத்தாண்டுகளாகச் சுட்டி வந்தது அதிகம் உறைக்கவில்லை. இங்கு பெரும் சமமின்மை பரவி விட்டிருக்கிறது, மக்கள் தொகையில் கணிசமானோர் மத்திய நிலை வாழ்விலிருந்து இறங்கித் தாழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், பொருளாதார அமைப்பில் பெரும்பான்மையினர் நிரந்தரமற்ற வேலைகளில் அமர்த்தப்பட்டு, அன்றாட வாழ்வை வாரா வாரம் கிட்டும் ஊதியத்தை வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள். அனேகருக்குக் கடனட்டைகளின் கடன் சுமை தலைமேல் பாறாங்கல்லாக இருக்கிறது. இது பேரழிவுக்கு இட்டுச் செல்லும், இந்தப் பொருளாதார முறையை மாற்றி அமைத்து மக்களுக்கு அன்றாட வாழ்வுக்கான ஆதாரத்தை வலுவாக்க வேண்டும் என்று எச்சரிக்கைகள் காதில் விழாத கூவலாகின.
இந்த நுண்கிருமி மீதான அச்சத்தால் முடக்கப்பட்ட அன்றாட வாழ்க்கையும், சமூக உறவாடல்களும் பேருந்து, விமானம், ரயில்கள் ஆகியனவற்றைக் காலியாக இயங்கச் செய்திருக்கின்றன. புல் வெட்டும் நிறுவனத்து ஊழியர்கள், கட்டடத் தொழிலாளர்கள், உந்து எந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மின் சாதனங்கள், வேதிப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள், துணி விற்கும் கடைகள், புத்தகக் கடைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார நடவடிக்கை முடக்கப்பட்டதால் ஏராளமான நிறுவனங்கள் தம் ஊழியர்களை வேலைகளிலிருந்து நீக்கி இருக்கின்றன. விளை நிலங்களிலிருந்து அறுவடை செய்து கடைகளுக்கு விநியோகிக்கும் நிறுவனங்கள் வாங்குவாரின்றி திக்கித்து நிற்கின்றன. காய்கறி, பூ விளைநிலங்களில் பறிக்க அவசியம் இல்லாமல் அப்படியே விடப்பட்டு அழுகுகின்றன.
மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் அரசிடமிருந்து கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது. அதே பத்திரிகை நிஜத்தில் இதை விடவும் ஏராளமானோர் வேலையில்லாமல் இருக்கலாம் என்றும் சொல்கிறது. அந்தச் செய்திக்கான சுட்டி இங்கே: https://www.nytimes.com/2020/04/03/upshot/coronavirus-jobless-rate-great-depression.html
நாளை என்ன நடக்கும் என்ற அச்சத்தோடு சாதாரண அமெரிக்கர்கள் நாள்களைக் கழிக்கின்றனர். இரண்டாம் உலகப் போர்க் காலத்துக்கு அப்புறம் இப்போதுதான் பொருள் தட்டுப்பாடு, பயணக் கட்டுப்பாடு, வேலையின்மை, வாழ்வில் அச்சம் ஆகியன அமெரிக்கரைப் பீடிக்கின்றன. பல தலைமுறையினருக்கு இந்த அச்சம் பழக்கமே இல்லாதது. அதனால் பயிற்சி இல்லாத மக்கள். வீட்டு வாடகையோ, வீடு வாங்கப் பெற்ற கடனுக்கு மாதத் தவணையோ கட்ட முடியாத அச்சத்தில் எங்கே தலைக்கு மேலே கூரை இல்லாது நடைபாதைக்கு வந்து விடுவோமோ என்று கலக்கத்தில் நாடெங்கும் கணிசமான நபர்கள் இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.
இரவிலும், பகலிலும் ஊர் அடங்கி மிக்க அமைதி நிலவுகிறது. அதனால் ஒரு புறம் இரவில் நல்ல உறக்கம் வர வேண்டும். அது ஒன்றுதான் இப்போதைக்கு கூடியிருக்கிற நன்மை என்ற கணக்கில் வரும். ஆனால் நம் பாடல் ஒன்று இருக்கிறதே: ’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’ என்றல்லவா பாடியது அது.
உலகெங்கும் பாடுபடுவோருக்கு நல்ல வாழ்வு கிட்டுவது என்பது அதீதக் கனவாகவே இன்னும் இருக்கிறது. அவர்களுக்கு மரபுச் சிந்தனை சொல்வது இது: ‘வருவதை எதிர் கொள்ளடா!’ எதிர் கொண்டுதான் இத்தனை நாள்கள் மனிதச் சமுதாயத்தைத் தக்க வைத்திருக்கிறார்கள். இனி அதற்கும் வேட்டு வைத்திருக்கிறதா இந்தக் கிருமி?
***
நீங்கள் எல்லாரும் எப்படி இந்தக் கடுமையைக் கடக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கே எங்கள் மாநிலம் அமெரிக்காவில் சற்றுத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ஆகி விட்டிருக்கிறது. திடீரென்று எப்படி இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை. இத்தனைக்கும் பெருநகரம் என்று ஒரே ஒரு நகரம்தான் – பாஸ்டன் / கேம்ப்ரிட்ஜ் இரட்டை நகர்கள் – இந்த மாநிலத்தில். அதுவும் சென்னை ஜனத்தொகையில் 6.3%தான் பாஸ்டனில் இருக்கிறது. மொத்த மாநிலத்திலேயே ஏழு மிலியன்கள் (எழுபது லட்சம்) கூட இல்லை. சென்னையில் மட்டுமே 11 மிலியன் (ஒரு கோடிக்கும் மேற்பட்ட) நபர்கள் வசிக்கிறார்கள். மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் இன்றோடு சுமார் 22,000 பேர் பாதிக்கப்பட்டவர்கள். 680 பேர் இறந்திருக்கிறார்கள். 2000த்துக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பீட்டில் தமிழ்நாட்டில் மாஸச்சூஸெட்ஸின் எண்ணிக்கையில் 5%தான் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் மக்கள் படும் அவதி குறைந்தது இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும் தமிழ் நாட்டில் என்று ஊகிக்கிறேன். ஏனெனில் இந்தியரும், தமிழரும் வாழ்வில் நிறைய அன்றாட சம்பாத்தியமும், அன்றாட நுகர்தலும் கொண்டவர்கள். சேமித்து வீட்டில் வைத்து அதை நுகர இடம், பொருள் வசதிகள் வேண்டும், அது இந்தியரிடம் அதிகம் இல்லை. ஊரையே பூட்டி வைத்தால் அடுத்த சில நாட்களுக்கு மேல் உணவுப் பண்டங்கள் இல்லாது போன வீட்டில் மனிதர் எப்படி இருப்பது?
கட்டுரையை நான் முதலில் எழுதும்போது ஏப்ரல் இன்னும் வந்திருக்கவில்லை. இன்று, ஏப்ரல் 11 ஆம் தேதியில், திரும்பிப் பார்க்கையில் இந்தியா ஒப்பீட்டில் பெரும் நாசத்தைத் தவிர்த்திருப்பதாக உலகச் செய்திகள் சொல்கின்றன. வழக்கத்துக்கு மாறாக யூரோப்பிய, அமெரிக்க நாடுகள்தாம் அதிக உயிர்ச்சேதத்தையும், பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களையும் கொண்டிருக்கின்றன.
அவ்வப்போது உலகளவில் எண்ணிக்கைகளைச் சேகரித்துத் தொகுக்கும் ஒரு தளம் இங்கே

இதன்படி இந்தியாவின் பாதிப்பு மிக மிகக் குறைவு. வலைப் பக்கத்தில் கீழே இறங்கிப் போய்ப் பார்த்தால் நாடுவாரியாகத் தொகைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
மற்ற நாடுகள் எப்படிப் போகின்றனவோ, இந்தியாவில் பாதிப்பு எகிறாமல் இப்படியே தாழ் நிலையில் இருந்து விட்டு, கடந்து போக வேண்டும் என்று நான் எண்ணாத நாள் இல்லை. ஆயிரம் ஆண்டுகளாகத் தாழ் நிலையில் இருந்து இப்போதுதான் சிறிது மீண்டிருக்கிற இந்தியர்களுக்கு மேன்மேலும் தாழ்நிலை வரத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
***
எத்தனையோ அறிவியலாளர்கள், அரசியல் கருத்தாளர்கள், போராட்டக்காரர்கள் பல பத்தாண்டுகளாக முயன்றுகூட, சிறிதும் தடுத்து நிறுத்த முடியாத முதலிய உற்பத்தி எந்திரத்தை ஒரு நுண்ணணுக் கிருமி ஒரு சில மாதங்களில் ஆட்டிப் படைத்து, பெரும் நிறுவனங்களைக் கூடக் கலக்கி, ஸ்தம்பிதத்துக்கே கொண்டு வந்து விட்டது. பெருவாரியான விமான நிறுவனங்கள் உற்பத்தி செய்வனவும், பயன்படுத்துவனவும், நின்று போய் விட்டன. பல காலாவதி ஆகக்கூடிய நிலைக்கே வந்திருக்கின்றன. எண்ணை எடுக்கும் நிறுவனங்களும், சுத்திகரித்து விற்கும் நிறுவனங்களும் மூடப்பட்டு விடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இதைத் தவிர திரளான மக்களின் உயிரைக் காக்கும் பயத்தில் மொத்த மேற்கும் நின்று போயிருக்கிறது. Bio-warfare என்பதை அலட்சியமாக எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர் உலக அரசியலாளர்கள். இனி அப்படிச் செய்யத் தயங்குவர்.
மூத்த தலைமுறைகள் உலகெங்கும் பற்பல விதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுவும் இந்த வருடத்துக்கு அப்புறம் ஒரு வழியாக முடிவுக்கு வரும் நிலை எழப் போகிறது. இதுவரை இறந்தவர்களில் பெருவாரி முதியோர்.
இன்னும் என்னென்ன நேரும் என்று நாம் இப்போதிலிருந்து கவனித்தால் வேறு விதமான பேரிடர்கள் எழாமல் நிறுத்த ஏதாவது முன் திட்டங்களை உருவாக்க முடியலாம். அதற்கான தொலை நோக்கு மனிதரிடம் இப்போதாவது தோன்றுமா?
***
This is what I wrote to my friends:சொல்வனத்தில் அண்மையில் வெளிவந்த மைத்ரேயனின் இந்த கருத்துரை ‘கொரோனாவின் வலிமையை இதைக்காட்டிலும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்லிட முடியுமா?’ என்று எண்ண வைக்கிறது. Little bit of insult into the American lifestyle is obvious. மைத்ரேயன் தமிழகத்திலிருந்து இங்கு வந்து மகனோடு பாஸ்டனில் வாழ்கிறார் என எண்ணுகிறேன்; தாய்மண் மீதான நியாயமான ஓர் ஏக்கமும் பாரதம் இனி சிறக்கும் என்ற உறுதியும் எழுத்தில் ஒலிக்கிறது.
இந்த இதழில் இயற்கையின் பேராற்றல் முன் மானுட இனத்தின் ஆணவங்கள் சிறுத்து போவது குறித்த கட்டுரையின் அவதானங்கள் மிக கூரியது.
தாங்கள் இக்கட்டுரையில் திறந்து பார்த்த கோணங்கள் புதியதும் யாவரும் கவனம் கொள்ள வேண்டியதுமாகும்
நேர்த்தியான கட்டுரைக்கு என் வாழ்த்துக்கள் ஆசிரியரே
திரு இரா.கவியரசு அவர்களின் கவிதைகளும் இனிது
உடன் படைக்கும்
முன்னோடிகளுக்கு என் வணக்கமும் சக படைப்பாளிகளுக்கு என் வாழ்த்துக்களும்
தீரா அன்புடன்
வ. அதியமான்