
“என்ன வேப்பம்பூ வேப்பம்பூவா உதிர்த்திருக்கீரு,” என்று அவர் பல்லைக் காட்டிச் சிரித்தார். தூக்கம் கலைந்து எழுந்த போது அவரது இன்முகச் சிரிப்பு பொலிவுடன் தெரிந்தது அவனுக்கு. அவர் சிரிப்பிலேயே உப்பிய மனிதன் போல் இருந்தார். குட்டைக் கைகள். குட்டைக் கால்கள். இரு பக்கக் கைகளையும் முட்டும் தொந்தி.
அவன் அவர் எதை சொல்கிறார் என்று அவனை சுற்றிப் பார்த்தான். ஐம்பது அறுவது அடிபட்ட கொசுக்கள் அவனைச் சுற்றித் தரையில் கிடந்தன.
“என்ன ப்ளாட்பாரத்துக்கு புதுசோ?” என்றார் மேலும் இளித்தபடி. தன் குட்டக் கையைக் கொண்டு அருகில் இருந்த பானையில் தண்ணீரை துழாவி மொண்டு வாயில் இட்டு கொப்பளித்துப் பின் அருகில் இருந்த புங்கை மரத்துப் பாத்தியில் துப்பினார்.
கிரிவலச் சாலைக்கு ஓரமாக இருந்தது அந்த நடைமேடை. அங்கே இருந்த புங்கை மரத்தடியில் தகர தட்டிகளைக் கொண்டு ஒரு சின்னஞ்சிறிய கொட்டகை அமைத்திருந்தார். முடுக்கு இடம்தான். அதில் இரண்டு அலுமினிய பானைகள். சிமண்ட் கல்லைத் துணியால் சுற்றிக் கட்டியிருந்த தலையணை. நொய்ந்த பிளாஸ்டிக் பாயில் ஒரு படுக்கை விரிப்பு. படுக்கும்போது காலுக்கு வைத்துக்கொள்ள ஒரு மரக்கட்டை. பித்தளைச் சொம்பு.
“ராத்திரிலயே வந்து படுத்துருப்பீங்க போல இல்ல? என் கொறட்ட சத்தம் தாங்க முடிஞ்சுதா?” என்று கேட்டார். அவன் எழுந்திருந்தவனாக அவரைப் பார்த்தான். முந்தைய இரவு கிரிவலப் பாதையில் எங்கேயோ அவனை இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவனே இந்த இடம் வரை நடந்து வந்திருக்கிறான். கால் ஓய்ந்து போன போது அப்படியே இருளில் நடைமேடையில் ஏறிப் படுத்துக்கொண்டு இருந்திருக்கிறான்.
“தம்பி, கஞ்சி குடிக்கிறீங்களா?“ என்று கலயத்தை அவன் முன் நீட்டினார். பழங்கஞ்சி வாடை அவனுக்கு அசூயையாக இருந்தது முதலில். பின்னர் அவனுக்கு வேண்டும் போல இருந்திருக்கலாம். வாங்கி அருந்தினான். அன்று முழு நாளும் அவர் அருகிலேயே கிடந்தான். குபேர லிங்கம் இதற்கு அடுத்துதான் இருக்கிறது. அங்கு எந்நாளும் கணிசமான மக்கள் திரள் இருக்கும். மாதத்திற்கு ஒருமுறை பெளர்ணமி கிரிவலக் கூட்டம் வரும். அவரைக் கடக்கும் சிலர் அவ்வப்போது அவரை வணங்கி சென்றனர். காணிக்கையாக சிலர் சில்லறைகளை இட்டுச் சென்றனர். சிலர் வெற்றிலைப் பாக்கு, வாழைப் பழத்தைக் காணிக்கையாக விட்டு சென்றனர். விழித்திருக்கும் போது தன் அபய முத்திரையைக் காட்டி ஆசி வழங்குவார். அதை கண்ட அவனுக்கு ஏளனமாய்த் தோன்றியது. குட்டைக் கை அபயம். ஒரு மனிதனுக்கு ஆசி வழங்ககூட முழுக்கையும் இல்லாமல் போய்விடுகிறது. உறங்கியிருக்கும் போது அவர் காலைப் பற்றித் தொட்டுக் கும்பிட்டு, கடக்கும் சிலரும் இருந்தனர்.
காணிக்கையாக வந்த பழங்களை அவனுக்கு தந்தார். “இந்தா இத சாப்டுக்குங்க.” அவனும் வாங்கி சாப்பிட்டான்.
“எங்க போறதுனு தெரிலியோ?”
அவன் பேசவேயில்லை.
“ஹ..ஹ..ஹா. அப்படிப்பட்ட ஆளுக வர வேண்டிய எடம்தான் இது. இந்த ஊரோட கட்டம் அப்படி.” அந்த மனிதரைப் போல எத்தனையோ துறவிகள், பஞ்சப் பரார பரதேசிகள், அன்றாடங் காய்ச்சிகள் என்று அங்கே இப்படி கிரிவலப் பாதையை ஒட்டி காண முடிந்தது.
“எதுக்காக உங்க கூட்டை விட்டு ஓடி வந்தீரு? வியாபாரம் நொடிச்சுப் போச்சா? போலிஸு தேடுதா? பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? புத்தி பேதலிச்சுப் போச்சா?“ என்றார். பின்னர், தன் மணிப் பற்களைக் காட்டி ”இல்ல சும்மா இருந்து பாப்போம்னு வந்துருக்கீங்களா?” என்றார் கேலியாக.
அவன் அதற்கும் பதில் சொல்லவில்லை.
“பேசிடாதீரும் பேசிடவே பேசிடாதீரும். முத்து உதிர்ந்திரும். பொறுக்க கை கொறையுதுல்ல,” என்றார் மேலும் கிண்டலாக.
அவன் அவருடனே அந்நாளை கழித்தான். அன்று இரவு அவரது கொட்டகைக்கு அருகிலேயே படுத்துக்கொண்டான்.
“என்ன இன்னும் உறங்காம முழிச்சுட்டிருக்கீறு? கொசு கடிக்குதா? கடிக்கட்டும் கடிக்கட்டும். எதுக்கும் இந்த போர்வையை வச்சுகிடும். உதவும். ஆனா கொசுங்க இந்த போர்வைக்குலாம் மசியாது. தாண்டி வந்து உடம்பக் கடிக்குங்க. அப்புறம் விட்டா மனசயே கடிக்குங்க,” என்று கண்ணடித்துவிட்டுத் தன் படுக்கை விரிப்பில் கிடந்த ஒரு போர்வையைத் தந்தார்.
“என்ன பாருங்க, இதோ மத்ததுகளலாம் பாருங்க எவராச்சும் அசருறோமா?” அவன் அருகில் அப்படியே உறங்கி போனவர்களைப் பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.
அவர்களுக்கெல்லாம் உண்மையாகவே கொசு கடித்ததாகவே தெரியவில்லை. இல்லை அதற்குப் பழகிப் போய் இருந்திருக்கிறார்களா? ஆழமான உறக்கம் அவர்களிடம் இருந்தது.
“எங்கள இந்த கொசுங்க ஏதும் பண்ணாது. கொசுக்களுக்குன்னுட்டு ஒரு கணக்கு உண்டு. சரியான கணக்குப் பூச்சிக அதுக. புதுசானவனதான் கடிக்கும். இந்த எடத்துல நம்மள இருத்தி வைக்கிறத்துக்குண்டான சங்கதி தெரிஞ்சதுங்க அதுக. அதுகதான் சொல்லும். அதுக என்னிக்கு தன்னோட கடிய நிப்பாட்டுதுங்களோ அன்னிக்கு கடிபட்டவன் இந்த எடத்துக்கு உவப்பானவனா மாறிடுவான். அதுவரை பாத்து இருந்துக்கணும்,” என்று கோலிக் கண்கள் உருள அவனை எச்சரித்துச் சிரித்தார்.
ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டான். காதுகளில் ரீங்கரித்து மொய்த்த கொசுக்களை அடித்துக்கொண்டே படுத்திருந்தான். அவ்வப்போது அவரும் அவனை எழுந்து பார்த்தார். சில கணங்களில் அவன் ஆழ்ந்து உறங்கிப் போனான். ஆனால் அவனது கைகள் காற்றை வாரியபடியேதான் இருந்தன. “தூக்கத்த தோள் பட்டையோட நிறுத்தி வைக்கத் தெரிஞ்ச ஆளுதான்,” என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு, அந்த எண்ணத்தைச் சிரிப்பாய் உதட்டில் மலர்ந்து அவரும் உறங்கிப் போனார்.
“வரலாமா நம்ம கருவூலத்துக்கு? கூட்டிட்டுப் போறேன்”
அவன் திகைத்து “கருவூலமா?“ என்றான்.
“என்ன பாத்தா கருவூலம் காக்கும் பூதம் மாரி தெரிலயோ உங்களுக்கு?” என்றார்.
அவர் கொட்டகை இருந்த நடைமேடைக்கு எதிரேதான் மலை அடிவாரம். சாலையைத் தாண்டி கருவேலக் காடுகளுக்கிடையே ஒற்றையடிப் பாதையில் நடந்தனர். பின்னர் பொட்டல். அவன் அவரையே பின் தொடர்ந்தான். 500 மீட்டர் தூரத்தில் மலையின் ஏற்றம் தெரிந்தது. அவர் நின்றார். மலையின் சிகரங்களைக் காட்டி “இது தான் பஞ்சமுக தரிசனம்,” என்றார். அவர் காட்டிய திசையில் ஐந்து சிகரங்கள் இருந்தன. “இது ஈஷானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்’னு சிவனுக்குள்ள அஞ்சு மொகங்க. ”
மலைப் பாறைகளுக்கு இடையில் இயற்கையாகவே அமைந்திருந்தது அந்த குகை இடுக்கு. சுற்றி அடர்வனம். போகும் வழியிலேயே ஒரு நீர்ச் சுனை இருந்தது. ஆங்காங்கே முன்பு வந்தவர்கள் அடுப்பு எரித்துவிட்டுச் சென்ற சாம்பல் மிச்சங்கள் தென்பட்டன. இவருக்கென சின்னக் குகை. இருவரும் அதற்குள் நுழைந்தனர்.
“இங்க எப்பயும் வர்றது இல்ல. அப்பப்பத்தான். ராத்திரில தங்க முடியாது,” என்றார்.
அந்த குகைக்குள் அவருக்கென ஒரு பெட்டி இருந்தது. பெரிய தகரப் பெட்டி. அதனை அவர் திறந்தார். அதற்குள் செல்லரித்திருந்த புத்தகங்கள். தமிழ் ஆங்கிலம் எனப் பல புத்தகங்கள். அவரது காவி உடுப்புகள். ஓரமாக அரிசி பருப்பு சேமித்து வைத்திருக்க முழங்கால் வரை உயரம் உள்ள ஒரு சுட்டாங்கல் ஜாடி. சில பாத்திரப் பண்டங்கள். பாத்திரத்தை எடுத்து ஜாடி அரிசியைப் போட்டுக்கொண்டார். குகைக்கு வெளியே வந்து அவனிடம் “பொங்கி சாப்டுக்குவோம் இன்னிக்கு” என்று வெளியே இருந்த அடுப்பொன்றில் சுள்ளிகளையிட்டு உலை பற்ற வைத்தார். அருகிலிருந்த சுனையில் தண்ணீர் கொண்டு வர அவனிடம் சொன்னார்.
உலைக் கஞ்சி வடித்து சோறு பொங்கி சாப்பிட்டு இருவரும் பசியாறினர். வாயில் ஒட்டிக் கொண்டிருந்த அரிசி பருக்கைகளை துடைத்துக் கொள்ளாதவராக, “ஹ..ஹ..ஹா… வாயில போட்டு வயித்துக்குள்ள எறங்குற ஒரு ஒரு அன்னமும் பொன்னு” என்றார் தன் பானை வயிறு குலுங்கிச் சிரித்தபடி. “கேக்கணும் உங்க காதக் கொண்டுவந்து… இந்த பொன்மணிக் கொடம் குலுங்குற சத்தத்த.” தனியாக ஒரு கலயத்தில் வைத்திருந்த உலைக் கஞ்சியைப் பருகினார். “இப்போ கேக்காது. சத்தம் நின்னு போயிருக்கும். உலை கஞ்சி பதார்த்தம் ஷுகருக்கு நல்லதுல்ல,” என்றுவிட்டு மறுபடியும் ஒரு சிரிப்பு.
வெளியே படுப்பதற்கு ஏதுவான சரிந்த பாறையில் தன் துண்டை விரித்துப் படுத்தார். அவனுக்கு எந்த நேரத்திலும் சரிவில் உருண்டுவிடுபவர் போலத் தோன்றியது. “இத்தன ஹீட்லயும் பாறை நல்ல குளுத்தி. அண்ணாமலையானோட குளுத்தி. வந்து கொஞ்சம் படுத்துப் பாக்கலாம்,” என்று படுத்திருந்தவராய் அவனை நோக்கி செய்கை காண்பித்தார். அவன் அவர் அருகில் வந்து அமர்ந்தான். பின்பு புகைந்த அடுப்பைக் கண்டு எழுந்து கொண்டான். நீர் தெளித்து அதனை அணைத்துப் பின்பு பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கொண்டு வந்தான். அந்த குகைக்குள் இருந்த பெட்டியைத் திறந்து அதற்குள் பாத்திரங்களை வைப்பதற்காகச் சென்றான். பண்டங்களை உள்ளே வைத்துவிட்டு பெட்டியை மூடும்போது பெட்டியின் மூடிக்கு அடிப்புறத்தில் இருந்த ஒரு செப்புத் தகடு அவன் கணுக்காலில் விழப்போனது. நல்ல வேளை காலை விலக்கிக் கொண்டான். அவன் அதனை எடுத்துப் பார்த்தான். அதில் மூன்றுக்கு மூன்று கட்டங்களில்
27 20 25
22 24 26
23 28 21
என்று பொறிக்கப்பட்டு இருந்தது. அவன் அதனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவரிடம் “என்ன இது?” என்றான். அவருக்கு பேசவே பேசாதவன் இப்படி வந்து கேட்டது ஆச்சரியமாக இருந்தது.
“முத்து உதுர்ந்து போச்சா?” என்றார் கிண்டலாக.
அவன் ஆர்வமாக, “என்னன்னு சொல்லுங்க.”
“உன்ன மயக்கிப் பேச வச்ச மந்திர தகடு.. ஹ..ஹ..ஹா.”
“தயவு செஞ்சு என்னன்னு சொல்லுங்க.”
“இது பாத்தது இல்லயா? குபேர யந்திரம். இத வச்சு வழிபட்டா செல்வம் கொழிக்கும். வீட்ல மாக்கோலம்லாம் போட்டு ஒவ்வொரு கட்டத்திலயும் காசு வச்சோ பூ வச்சோ வழிபடுவாங்களே பாத்ததில்லையோ?”
அவன் அவரிடம், “இதுல இருக்கற நம்பர்களுக்கும் குபேரனுக்கும் என்ன சம்பந்தம்? இத வச்ச வழிபட்டா காசு வருமா? எப்டி? எங்கேந்து? வரவச்சு காமிக்க முடியுமா?”என்றான்.
“ஹ..ஹ.ஹா.”
“இல்ல இதுக்குல்லாம் என்ன அர்த்தம்? சும்மா. சும்மா நம்பர கலச்சுப் போட்டு காசு வரும்னா? முடியுமா என்ன?”
அவர் சொன்னார். “எல்லாம் கணக்குத்தான். இந்த ஒலகத்துல எல்லாத்துக்கும் கணக்குண்டு. பிரபஞ்சத்துல வெரவியிருக்குற கச்சிதம் எல்லாத்துக்கு ஒரு கணக்கு உண்டு. தெய்வம்னா யாரு? மனுஷனோட கச்சிதம் தானே?”
“புரியல.”
“எண்ணென்ப ஏனை எழுத்தென்பனு வள்ளுவர் சொல்றாருல. எதுக்கு எண்ணுன்னு சொல்றாரு, அப்புறம் எழுத்துனு சொல்லுறாரு?”
அவன் புரியாதவனாய் நின்றிருந்தான்.
“மனுஷனால அவன் மனச எப்படி வெளிப்படுத்த முடியும்?” என்றார்.
“மனச வெளிப்படுத்துறதுனா.. மனசுல நினைக்கறத வாயால சொல்லி இல்ல கையால எழுதி. பாஷை. மொழி.”
“நான் கேக்குறது மொழிக்கும் முன்னால?”
“மனசுல நெனைக்கிறது. அதாவது எண்ணங்கள்.”
“எண்ணங்கள்’னு அதுக்கு ஏன் அந்தப் பேரு? யோசிச்சுப் பார்த்தா அங்கயே விடை கெடச்சுப் போச்சு. மனுஷன் அங்கேயே எண்ண ஆரம்பிச்சுட்டான். எண்ணிக்கை ஆரம்பிச்சுருச்சு. கணிதம் ஆரம்பிச்சுருச்சுல்ல. ஒரு மனுசன் தன் மனச அளக்குறது அவன் எண்ணங்களால தானே.”
“ஆமாம்.” என்றான்.
“அது போல பிரபஞ்சம் முழுசா கணிதம் வெரவியிருக்கு. கணிதம்ங்கறத மனுஷன் ஒன்னும் புதுசா கண்டு புடிக்கல. ஏற்கனவே அது அங்க இருக்கு. அந்த இருப்ப இவன் புரிஞ்சுக்கப் பாக்குறான். ஒன்னு ஒன்னுத்தயும் தொட்டு வெளக்கிக் கொள்ளப் பாக்குறான். ப்ளாட்டோ சொல்றாரு தூய எண்ணம்னு ஒன்னு இருந்துதுன்னா அது கணிதத்துலனு. கடவுள் மனுசனோட பேசுற மொழி கணிதம்னு. கணக்கும் எண்களும்தான் கால வெளிக்கப்பால் மனுசன் தொட முடியாத தூரத்துல ஆதிலேந்து இருந்துட்டு வருதுனு.” மேலும் தொடர்ந்தார். “நம்மூர் நாமத்தான் சொல்றான். எந்த ஒரு கணித சமன்பாடும் கடவுளோட சிந்தனை. அப்படியில்லாததை அவனால ஏத்துக்க முடியாதுனு.”
“அப்படின்னா இந்த தகட்டுல பொறிச்சுருக்கும் நம்பர்களுக்கு எதாவது அர்த்தம் இருக்குமா?” என்றான்.
“ஆமா அந்த எண்களக் குறுக்காகவும் நெடுக்காவும் குறுக்கு நெடுக்காகவும் கூட்டினா என்ன வருது?”
அவன் கூட்டிப் பார்த்துவிட்டு, “ஒரே நம்பர் தான் வருது, 72” என்றான்.
“அதுதான் சுபிட்சத்துக்கான எண். குபேர எண். அங்கதான் குபேரன் எறங்கி வர முடியும். எல்லாத் திசையும் தெறந்து வந்து செல்வம் கொழிக்கும். இந்த வகைக் கட்டங்கள மேஜிக் ஸ்கொயர்கள்னு சொல்லுறதுண்டு. புதிரா இருக்கும். மர்மமா இருக்கும். அந்த எண்களின் அனுகூலத்த புரிஞ்சுக்கணும். அணுகிப் புரிஞ்சுகறதுலதான் அதுங்களோட அனுக்ரஹம் தெரியவரும்.”
எழுந்து நின்று கீழே விரித்த மேல்துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டார். எரிந்து அணைந்திருந்த அடுப்புக்கடியில் இருந்து ஒரு துண்டத்துக் கரியை எடுத்துக்கொண்டார். அவன் அவரை தொடர்ந்தான்.
“மேலை நாட்டுக்காரன்லாம் எண்கள் கடவுளோட மொழினுதான் சொல்லிருக்காங்க. கடவுள வரையறுக்கல. ஆனா நம்ம கணித சாஸ்திரத்தில எந்த ஒரு கடவுளையும் எண்களால கட்டுப்படுத்தமுடியும்னு தாண்டி யோசிச்சு அத வழிபடவும் செஞ்சுருக்காங்க. தாந்திரீக சாஸ்தரத்துல எந்திர உபாசனைகளால,” என்று ஒரு வெளிறிய பாறையைத் தேடிக் கண்டுபிடித்து அதில் கரித் துண்டால் குறுக்காகவும் நெடுக்காகவும் இரு கோடுகள் கிழித்தார்.
“தெய்வங்க மண்ணுக்கு எறங்கி வரணும். மனுசங்கள போலவே எட்டு திசைக்கும் அவங்க கட்டுப்பட்டாகணும். எட்டு திசைத் தெய்வங்களுக்கு கட்டுப்பட்டாகணும். கிழக்குல இந்திரன், தென்கிழக்குல அக்னி, தெற்குல யமன், தென்மேற்குல நிருதி, மேற்குல வருணன், வடமேற்குல வாயு, வடக்குல குபேரன், வடகிழக்குல ஈசானன்” என்று ஒவ்வொன்றாகப் புள்ளி வைத்து, “மொத்தம் ஒன்பது கட்டங்க. மூணுக்கு மூணா. மத்யமத்துல அதாவது எட்டு திக்கு தெய்வங்களுக்கு நடுவுல நம்ம நம்ம தெய்வத்த வைக்கணும். இந்த ஊருல அது எம்பெருமான். அருள்வல்லான். என் அண்ணாமலையான். இந்த ஊரும் மலையுமே அப்படி ஒரு கட்டம்தான்.“ என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார்.
பின்னர் எதோ தவறுதலாகச் சொல்லிவிட்டோம் என்று நினைத்தவர் போல எழுதிய பாறையை விட்டு அகன்று சென்று, தலையுயர்த்திப் பின் தெரிந்த மலை உச்சியைப் பார்த்துவிட்டுக் கும்பிட்ட கைகளுடனே, “எம்பெருமான் எட்டுத் திக்குக்கும் கட்டுப்பட்டு இங்க நிக்கிறான்னு சொன்னா நாக்கழுகிடும். மலை வடிவுல அவன்தான் தன்னைச் சுத்தி அந்த எட்டு தெய்வங்களையும் கட்டுப்படுத்தி நிக்க வச்சுருக்கான்,” என்று சொல்லிக்கொண்டு அவசர அவசரமாக அருகில் வந்தார்.
“பாஸ்கராச்சாரியார் பன்னண்டாம் நூற்றாண்டு கணித அறிஞர் சொல்லுறார் அவரோட லீலாவதில. “மகளே லீலாவதி, அந்த மூணுக்கு மூணு கட்டங்கள இப்படி அடுக்குன்னு. இந்த்ரோ வாயுர் யமா சைவ நிருத்யோ மத்யமாஸ் தத: ஈசானாஸ்ச குபேராஸ்ச அக்னீர் வருணேவாசா. இந்திரனுக்கு 1, வாயுக்கு 2, யமனுக்கு 3, நிருதிக்கு 4, மத்யமத்துக்கு 5, ஈசானத்துக்கு 6, குபேரனுக்கு 7, அக்னிக்கு 8, வருணனுக்கு 9. அவ அதுக்கேத்தா போல அடுக்கினா.” என்று சொல்லி அதற்கேற்றார் போல கரித்துண்டால் அக்கட்டங்களை நிரப்பினார்.
2 7 6
9 5 1
4 3 8
நிரப்பிய பின்னர் கரித்துண்டால் பாறையைக் குத்திக் காண்பித்து “இதும் முன்ன சொன்னது போல மேஜிக் ஸ்கொயர்தான். அதோட கூட்டு எண் 15. நம்மள ஆட்டிப் படைக்குதுங்களே ஒன்பது கிரகங்கள் அதுங்களுக்கே இந்த மாதிரி கட்டங்கள் உண்டு.
பாஸ்கராச்சாரியார் சொன்னது போல, ஒன்னுலேந்து ஆரம்பிச்சு
அடுத்த அடுத்த எண்களைக் கொண்டு கட்டத்தை நிரப்பினா சூரியனுக்கான கட்டம். ரெண்டுலேந்து ஆரம்பிச்சா சந்திரனுக்கான கட்டம். 3 – செவ்வாய், 4 – புதன், 5 – வியாழன், 6 – வெள்ளி, 7 – சனி, 8 – ராகு, 9 -கேது.” மூச்சு வாங்கியதில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது.
கையில் வைத்திருந்த கரித் துண்டத்தினைத் தூர எறிந்துவிட்டு வியர்வை வழிந்த உடம்பில் தன் மேல் துண்டைக் கொண்டு விசிறிக் கொண்டார். பின்னர் படுத்திருந்த இடத்திற்கே வந்து எடை இழந்தவர்போல் கைத்தாங்கலாக அமர்ந்து “20 லேந்து ஆரம்பிச்சு நிரப்பினா நீ கையில வச்சுருக்கியே இந்தக் குபேர கட்டம் அது கிடைக்கும். சிவ பெருமான், யக்ஷ ராஜா வடதிசைக் காவலன் ஆகிய குபேரனைச் செல்வத்தின் அதிபதியா நியமிச்சபோது இந்த கட்டத்தையும் சேத்து அருளினதா சொல்லுறாரு நாராயண பண்டிதர். அவரோட கணிதகெளமுதி ஏட்டுல பத்ரகணித அத்தியாயத்துல.” என்று முடித்தார். அவன் சற்று அமைதியானான். பின்னர் அவர் தன் முறுவலுக்கே மீண்டும் திரும்பினார். “இத்தன விஷயம் தெரிஞ்ச நீங்க யாரு? ஏன் இங்க இருக்கீங்க?” என்றான்.
அவர் அதுக்கும் “ஹ..ஹ..ஹா” வென்று சிரித்தார். சிறிது நேரத்தில் குறட்டை ஒலி கேட்டது. துயிலிலும் அவரது இன்சிரிப்பை அவனால் காணமுடிந்தது.
கிரிவலப் பாதையை அகலப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. சில பகுதிகளில் ஏற்கனவே இருந்த சாலையோர நடைமேடை பெயர்த்தெடுக்கப்பட்டு தோண்டப்பட்டு இருந்தன. நடைபாதை கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வந்தன. சாலையோரத்தில் ஒண்டிக் கிடந்தவர்களையும் நகராட்சி காலி செய்துகொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டது. ஏற்கெனவே இருந்த சாலை ஓரங்களில் பகுதி வாரியாக வெண்ணிறக் கோடுகளால் குறியிடப்பட்டு JCB இயந்திர வண்டிகள் அந்தந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
பின் மதிய வேளையில் இருவரும் அந்தக் குகையில் அமர்ந்திருந்தனர்.
“இப்பலாம் நைட்டு நல்லா ஒறக்கம் உண்டா? கொசுக்கடி நின்னுப் போச்சா?” என்றார்.
“ஆமா நல்ல தூக்கம் வருது. கொசுக்கடியே இல்ல.”
“ஹ..ஹா… அதான் சங்கதி.”
“சாயங்கால வரை பொழுது போகணும். தாயக்கட்டம் ஆடுவோமா?”
“சரி.”
இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப்பை போல் இருந்த ஒன்றை எடுத்து அதிலிருந்த நாமக்கட்டியால் பாறையில் தாயக்கட்டம் வரைந்தார். பின்னர் அந்தப் பையில் இருந்தே ஆறு வெண்ணிற சோழிகளையும் ஆறு கருநிற கூழாங்கற்களையும் பகடைகளையும் எடுத்தார்.
அவன் அவனாகவே முன்வந்து, “நீங்க பெரிய ஜோசியரோ? இப்ப அதத் தொடர்றது இல்லயா? பெட்டில இருக்கற புக்கலாம் பாத்தேன். அது சம்பந்தமாவே இருந்தது.” என்றான்.
அவர் பகடையை உருட்டினார். “கணிதம், வானியல் சாஸ்திரம்னு நெறையா படிச்சேன். தீவரமா பழகினேன். அதக்கொண்டு கொஞ்ச வருஷம் பொழைக்கவும் செஞ்சேன். ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துட்டுது. எண்ணி எண்ணி என்னத்த காணப்போறோம்னு. அதுக்கப்புறம் அத வச்சு பொழப்பு நடத்துறத நிறுத்திட்டேன். அப்பறம் ஒரு நாள் பெரிய புராணத்துல அலகில் சோதியன்னு ஒரு வரியப் பாத்தேன். அப்படின்னா எண்ணவே முடியாத சோதி வடிவானவன்னு அர்த்தம். அவன எண்ணி எண்ணி அளக்கலாமேனு தோனுச்சு. அதான் அவன் சோதி உருவுல நிக்கிற இந்த ஊர் வந்தேன்.” என்று சொல்லி இமைத்துவிட்டுத் தன் வெண்ணிற சோழியைக் கட்டங்களில் நகர்த்தினார்.
“அண்ணாமலைய எண்ணினாலே முக்தின்னாங்க பெரியவங்க,” என்று தாயக் கட்டைகளை எதிரே இருப்பவனிடம் தந்தார்.
அவன் தாயக் கட்டைகளைக் கையிலேயே வைத்துக்கொண்டு சிறிது நேரம் பார்த்தான்.
“ஆடுங்க.”
“என்ன யோசனை?”
“நம்ம மனசையும் இந்த மாதிரி பகடையாக்கி ஆட முடியுமா என்ன? மனசுல நெனைக்கற எண் பகடைல விழணும். இல்ல விழப் போற எண்ண முன்னாடியே மனசு கணிச்சிடணும்.”
“ஹ..ஹ..ஹா. சரியான ஆளாப் புடிச்சு அனுப்பி வைக்கிறான் எம்பெருமான்,” என்றார்.
பின்னர் அவன் பேச விழைவதை அவன் கண்களிலிருந்து உணர்ந்து கொண்டவராக, “ஆட்டத்தோட ஆட்டமா சொல்ல நெனைக்கிறதச் சொல்லலாமே,” என்றார்.
அவன் பகடைகளை உருட்டியபடி சொல்ல ஆரம்பித்தான். அவன் தரப்பு காய்களையும் அவரே எண்ணி நகர்த்தினார். அவன் சொன்னான்.
“எனக்கு அப்பா மட்டும்தான். அவர் கொஞ்சம் கண்டிப்பு. எனக்கு அப்போ படிப்பு சரியா வராது. அதுனால என் மேல அவருக்கு மனஸ்தாபம். என்ன அவர் சரியா புரிஞ்சுக்கல. எப்படியோ காலேஜ் வரை படிச்சுப் போயிட்டேன். காலேஜ்ல படிக்கும்போது மூனாவது வருஷம் வீட்டவிட்டு ஓடி கோவாவுக்குப் போனேன். எனக்கு நம்பர்கள்மீது சின்ன வயசுலேந்து பிடிப்பு உண்டு. ஒரு வாட்டி பாத்தாலே டெலிபோன் நம்பர்களை ஈசியா ஞாபகம் வச்சுப்பேன். கோவால இருக்கும் கேசினோ ஷிப்ல போய் பார்டெண்டரா வேல பாத்தேன். அங்க எல்லா நாட்டுக் காரங்களும் கூடுவாங்க. ரம்மி, போக்கர், ப்ளாக் ஜாக் அது இதுனு எல்லாவிதமான விளையாட்டும் இருக்கும். அதுல ஒரு விளையாட்டு உண்டு. நொவம் ரீகாலிஸ்’னு அதுக்கு பேரு. கண்ணாடிக் குடுவைக்குள் நான்கு இலக்க எண்கள் தனித் தனியாச் சுழலும். அது எப்படிச் சுழலும்னு சொல்லிட முடியாது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாறி சுத்தும். வெளையாடற எல்லாரும் 0000 ல இருந்து 9999 குள்ள இருக்கும் எதோ ஒரு எண்ணுக்கு மேல பந்தயம் கட்டணும். இந்த நம்பர்களுக்குள்ள ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத எண்களுக்கு பரிசு விழும். அதை என்னன்னு புரிஞ்சுக்க ஆசைப்பட ஆரம்பிச்சேன். முதல் நாள் இந்த எண்கள் 1123, 0061, 0007. அடுத்த நாள் இந்த எண்கள் 0011, 7805. இப்படி ஒவ்வொரு நாளும் ஜெயிக்கிற எண்களைக் குறிச்சு வச்சுப்பேன். அந்தத் தொடர்பில்லாத எண்களுக்கு என்ன தொடர்புன்னு புரிஞ்சுக்கப் பார்ப்பேன். சில நாள்கள்ல எந்த நம்பருக்குமே விழாம போலாம். அப்ப ஒன்னு யோசிக்கணும். விழற நம்பர்கள யாருமே வாங்கிருக்க மாட்டாங்க. அதுக்கும் வாய்ப்புண்டு. பொறுமையா காத்திருக்கணும். இது எல்லாம் குத்துமதிப்பான எண்கள் இல்ல. அப்படி இங்க எந்த ஒரு ஆட்டமும் இருந்துட முடியாது. இருந்துடவும் இருந்துடாது. அந்த மாதிரி திகைப்பக் கொடுக்குமே ஒழிய அப்படி இல்ல. ஒரு ஒரு இயந்திரமும் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். உள்ள எதோ ஒரு சீரான கடிகாரம் இயங்கிட்டு இருக்கும். அதிர்ஷ்ட கடிகாரம்.
ஒருவேளை 0000 – 9999 நம்பர்கள 10000 பேர் விளையாடினா முழு சீரீஸும் தெரியலாம். ஆனா அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. ஒரு நாளுக்கு 1000, 2000 பேர்தான் விளையாடுவாங்க. அதனால இந்த சீரீஸ் இவ்ளோதான்னு நம்ம சுருக்கிடக் கூடாதுனு தோணுச்சு. தொடர்ந்து அந்த எண்களப் பின் தொடர்ந்தேன். பார் க்ளோஸ் பண்ணிட்டு இரவு முழுக்க அந்த எண் வரிசைகள வொர்க் அவுட் பண்ணிப் பாப்பேன். ஒரு நாள் 0000 வுக்கு பரிசு விழுந்தது. ஆனா அதுக்கப்புறம் அன்னிக்கு வேற எதுக்குமே விழல. அப்ப புத்தில பொறி தட்டுச்சு. அடுத்த நாளோட முதல் எண்ணுக்காக காத்திருந்தேன். அந்த நம்பர நோட் பண்ணினேன். அது 1729. நான் கணிச்ச ஒரு கணக்குப்படி 0001, 9001, 7354 னு சில எண்களுக்கு நானே பந்தயம் கட்டினேன். மிச்சவங்க ஜெயிச்ச எண்களையும் 0550, 1234 கவனிச்சேன். புரிபட ஆரம்பிச்சுது. 1729 அத 9 ஆல வகுத்தா மிச்சம் கெடைக்கிறது 1. அதேபோல தான் 0001, 9001, 7354, 0550, 1234 எல்லாத்துக்கும். அடுத்த அடுத்த நாட்கள்’ல நான் அந்த ஆரம்ப எண்ண நோட் பண்ணுவேன். அத 9 ஆல வகுத்து மிச்ச கெடைக்கற எண்ணை வைத்து மிச்ச எண்களக் கண்டுபுடிப்பேன். அதை அப்பப்போ என் வாடிக்கையாளர் யார்டயாவது சும்மா இந்த நம்பர்க்கு பந்தயம் கட்டி பாருங்க’னு சொல்லி அவங்கள ஜெயிக்க வைப்பேன். அவர்கள் கொடுக்கும் கமிஷனையும் டிப்ஸையும் வாங்கிப்பேன்.
அப்படித்தான் சாந்தன் எனக்கு அறிமுகமானான். அவனுக்கு மது ஊத்திக் கொடுத்தபோது, அவனுக்குனு ஒரு நம்பரை நான் சொன்னேன். அதே எண்ணுக்கு பரிசும் வந்தது. தற்செயல்னு முதல்ல என்னை லட்சியம் பண்ணல அவன். பின்ன இன்னொரு நாள் இன்னொரு நம்பரைச் சொன்னேன். அதுக்கும் பரிசு விழுந்தது. சந்தேகப்பட்டான். பரிசோதிச்சுப் பார்த்தான். அப்றம் தன் சந்தேகத்த தளர்த்திகிட்டான். நீ எப்படி இந்த நம்பர்கள கணிச்சு சொல்லிடுற சொல்லுன்னு கேட்டான். அவன்கிட்ட சொல்லி இருக்கலாம்தான். ஆனா நான் சொல்லல. பாக்குறதுக்கு ஆள் சூத்திரதாரி மாதிரி தெரில. ஆனா தந்திரியா தெரிஞ்சான். அதனாலேயே அவன்கிட்ட சொல்லணும் தோணலயோ என்னவோ. அத அவனே தெரிஞ்சு வச்சுருந்தானோ என்னவோ. ஒரு மனுஷன் தன்னையே சரியா எடை போட்டு வச்சுருக்கணும். அவன் அப்படி. பின்ன அவனே சரி எனக்கு எதும் வேணாம். ஆனா நீ வேணும். இது வெறும் பொழுது போக்குக்கு ஆடுற ஆட்டம். இதுல கொஞ்சமாதான் சில்லற பாக்கலாம். என்னோட வா. என் கூட இரு. நெறைய பணம் பாக்கலாம். சந்தை பெரிசு. நம்ம டார்கெட்லாம் மிடில் கிளாஸும் ஏழைங்களும்தான். அப்படி என்ன வேலைனு கேட்டேன். லாட்டரினு சொன்னான்.
அது பெரிய சிலந்தி வலை. அவன மாதிரி ஆளுங்க, என்ன மாதிரி ஆளுங்கனு பல பேர் உண்டு. அவனுக்குப் பல லிங்க் உண்டு. அவன் என்கிட்ட சொன்னான். நீ பண்ண வேண்டியதுலாம் ஒன்னுதான். எந்தெந்த நம்பர்களுக்கு லாட்டரி விழும்’னு பாத்துச் சொல்றது. அதுக்கு என்ன வேணும்னு சொல்லு நான் அரேஞ்ச் பண்ணித் தரேன். அத வச்சு நம்ம அந்தந்த லாட்டரி ஏஜென்சிகளோட கமிஷன் பேசிக்கலாம். பேரம் பேசலாம். இதுதான் நம்ம பிஸினஸ். நீ பார் டெண்டர் வேலயே பாரு. சைடுல இதையும் பண்ணு. நானும் சரின்னுட்டேன். ஆரம்பத்தில் நான் அவங்கிட்ட முழுசா எதுக்கும் ஒத்துக்கல.. அவன்கிட்ட சொன்னேன். எனக்கு கொஞ்சம் டைம் குடு. இந்த லாட்டரி சிஸ்டம்லாம் எப்படி இயங்குதுனு பாக்கணும். அதுக்கு நீ ஹெல்ப் பண்ணணும். அவன் அதுக்கு தலையசச்சுச் சிரிச்சான். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாச காலமா நான் லாட்டரி பேட்டர்ன்கள புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அவன் மூலமா எந்தெந்த லாட்டரில எந்த எண்களுக்குலாம் ஏற்கனவே பரிசு விழுந்திருக்குங்கிற டீடெயில்லாம் எனக்கு தெரிஞ்சுது.
ஒரு நாள் அவனிடம் போன் பண்ணி, நான் உன்கிட்ட எதிர்பாக்கிறதெல்லாம் அந்தந்த லாட்டரியின் ஆரம்ப எண். அதாவது அந்த லாட்டரி நாடு பூரா பரவுவதற்கு முன் தயாரிக்கப்படும்போது முதல் லாட்டரியில் பொறிக்கப்படும் எண். அதனோட சீரியல் எண். அது தெரிஞ்சா போதும்னு சொன்னேன். அவனும் அனைத்து லாட்டரிக்களோட ஆரம்ப எண்களையும் கொடுத்தான். ஏற்கனவே சொன்னது மாதிரி இதுலாம் குத்துமதிப்பா இயங்குறது இல்ல. அப்படியொரு பிம்பத்த தரும்.
லாட்டரிகள் இயங்குறது எப்படினா அதுக்கு தேவை ஒரு உள்ளீடு நம்பர் அதாவது ஒரு இன்புட் நம்பர் அப்புறம் RNG அதாவது ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர். கொடுக்கற இன்புட்ட வச்சு RNG பல எண்கள உருவாக்கித் தரும். அந்த RNG க்கு அடிப்படையான இயங்குமுறை என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஆனா அந்த இன்புட்ங்கறது அந்தந்த லாட்டரியின் ஆரம்ப சீரியல் எண். அதுதான் அந்தக் குறிப்பிட்ட லாட்டரிக்கான பரிசு எண்கள நிர்ணயிக்கும். அது தெரிஞ்சுட்டா போதும்.
நான் சாந்தனிடம் இதைச் சொன்ன பிறகு அவன் எனக்கு முதல் முதலாக் கொடுத்த சீரியல் எண் ஒரு எட்டு இலக்க எண் 76342358. அவனுக்கு 23345678, 32345678, 33245678 ‘னு மொத்தம் 20160 எண்களை அவனிடம் கணிச்சு கொடுத்தேன். இது எப்படின்னு பாத்தா இன்புட் நம்பர்ல இருக்கற ஒவ்வொரு இலக்கத்தயும் வெவ்வேறு எடத்துல மாத்திப் போட்டு கிடைக்கற எண்கள். இது ஒரு வகையான RNG. 76342358 ல மொத்தம் 8 இலக்கம், அதுல ‘3’ ரெண்டு தடவை வந்துருக்கு. அப்போ 8 * 7 * 6 * 5 * 4 * 3 * 2 * 1 / 1 * 2. மொத்தம் 20160 எண்கள். இந்த 20160 எண்களும் விற்கப்பட்டு இருக்குமாங்குறது எங்க கவலை இல்ல. இப்படிப் பலவித RNGக்கள் இருக்கு.
சாந்தன் நான் சொன்ன விஷயங்கள அப்படியே மொத்தமாக கொண்டுபோய் சந்தையில் வைக்க மாட்டான். இந்த லாட்டரியில் இத்தனை எண் வித்திருக்கு. இத்தன பேருக்குப் பரிசு விழலாம்’னு லாபியிங் பண்ணுவான். இன்று 200 பேர்லேந்து 250க்கு லாட்டரி விழும்னு சொல்வான். அப்படியே விழுந்திருக்கும். அப்பறம் கடைசி மூனு இலக்கம் இப்படி இருக்கும் எண்ணுக்கு பரிசு விழும்னு சொல்வான். நான் கொடுத்த துல்லிய கணக்கை வச்சு சந்தையில் செல்லுபடியாகும் துல்லியத்துக்கு பக்கத்துல நிக்க கூடிய தோராயமான கணக்கை அவன் போடுவான். என்னிடம் மொத்த சரக்கையும் போய் கொட்டிடக்கூடாதுனு சொல்வான்.
லாட்டரி ஏஜென்சிங்களோட பேரம் பேசுறது மட்டும் இல்லாம வளர்நிலை தொழில் முனைவோர்ங்க பெரிய முதலீடுக்கு பத்திரம் காட்ட முடியாதவங்க யார் யாருன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு கையில் அதிர்ஷ்டம் எண்ணோட அவங்க வீட்டு கதவ இவன் தட்டுவான். சில எண்களை இவனே வச்சுக்கிட்டு அடிக்கிற பணத்தை வட்டிக்கு சுத்தல்ல விடுவான். உங்கள மாதிரி சில ஜோசியக்காரங்க கிட்டயும் நம்பர் தரகு பண்ணுவான்.
அவன் ஒரு தடவை எங்கிட்ட சொன்னான். அதிர்ஷ்டம்ன்னா நீ என்னன்னு நெனைக்கிற? அது ஒரு குருட்டு பிச்சக்காரி. ‘த்ருஷ்ட’னா ‘பார்வை’. ‘அ’ னா ‘இல்ல’. நாம பண்றதுலாம் அந்த கெழவிய சீவி சிங்கரிச்சு அதோட குருடு வெளில தெரியாம இருக்குறதுக்கு ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டிவிட்டுட்டு கை பிடிச்சு அழைச்சிட்டு போற வேலைதான்.
இப்படி எங்ககிட்ட பணம் சேர்ந்தது. எல்லா வகை வெளிநாட்டு மதுபானத்தையும் நான் ருசி பாத்துட்டேன். கோவால இருக்குற எல்லாவித பொண்ணுங்களையும் பதம் பாத்துட்டேன். நம்பர்களுக்கு என்ன ரொம்பவே தெரிஞ்சுருக்கனும்னு திரிஞ்சிட்டுருந்தேன். எந்த திசை திரும்பினாலும் நம்பர்ங்க என்கூட பொழங்கறத உணர்ந்தேன். எல்லா நம்பர்களையும் ஃப்ரண்ட் ஆக்கி வச்சுக்க முடியுமான்னு யோசிச்சு பெருமபட்டுக்குவேன்.
அன்னிக்கு ஒரு நைட் நான் வழக்கமா எண்களோட உக்காந்தபோது ஒன்னு கவனிச்சேன். அது என்னத் தூங்க விடல. எனக்குக் கெடைச்ச சீரியல் எண் 92351. நான் சாந்தனுக்கு கொடுக்க வச்சுருந்த எண்கள் 32519, 23591, 15932. வழக்கத்துக்கு மாறா அவை எல்லாத்தையும் ஒன்பதால வகுத்து மிச்ச வரும் நம்பர பாத்தேன். எல்லாத்துக்கும் 2 வந்துச்சு. வேற ஒரு நம்பர்னால வகுத்துப் பாக்கலாம் ஆனா எல்லாத்துக்கும் ஒன்னா வராது. 9 க்கு மட்டும்தான் ஒன்னா வரும். மொதல்ல அது எனக்கு பெரிய ஆச்சரியமா தெரியல. அப்புறம் யோசிச்சு பாத்ததுல தெரிஞ்சுது. ஒரு எண் அதோட அதே இலக்கங்கள கொண்டு இன்னொரு எண்ணா மாறும்போது எதோ ஒரு எழை அதுங்கள ஒன்னாவே வைக்குது. அந்த எழைதான் ஒன்பது. ஏன் அப்படி வைக்குது?
மேலும் அந்த எண்கள ஒவ்வொரு இலக்கங்களா ஒத்த இலக்கமா ஆகற வரை கூட்டிப்பாத்தேன்.
(9 + 2 + 3 + 5 + 1) = 20 => (2 + 0) => 2
(1+ 5 + 9 + 3 + 2) = 20 => (2 + 0 ) => 2. அதுவுமே 2 தான்.”
“ஒவ்வொருத்தனோட பிறந்த தேதிய வச்சு அதிர்ஷ்ட எண் கண்டுபுடிக்கிற வழி இதுனு கணித சாஸ்திரத்துல சொல்லுறதுண்டு. சிலர் அதுபடி பெயர் வைக்கிறதுண்டு,” என்று அவர் அவனை இடைமறித்தார். கீழே இருந்த பகடைகளை அவனாகவே எடுத்து இரு கைகளுக்கு நடுவில் வைத்து தேய்த்து உருட்டினான்.
மேலும் தொடர்ந்தான். “அப்போ ஒரு நம்பர ஒன்பதால வகுத்து வர மிச்ச எண்ணும் அந்த நம்பர ஒவ்வொரு இலக்கமா கூட்டி அடையும் ஒத்த இலக்கமும் ஒன்னு. அப்படின்னா எந்த நம்பரும் ஒன்பதுக்குள்ள அடங்கி போய்டும் அப்டியா? அது எத்தனை இலக்கங்களைக் கொண்டாலும்? ஏன் அப்படி? ஒன்பது எதைச் சொல்லுது? இந்த கேள்வியும் குழப்பமும் என்ன அந்த நம்பர்கள்டேந்து வெலக வச்சுது. ஒவ்வொரு நாளும் எப்படி எப்படி இதுனு கொழம்பி போனேன்.
சாந்தனிடம் சொல்லி வெலகலாம்னு இருந்தது. சொல்லியும் பாத்தேன். அவன் என்ன விடமாட்டேன்னுட்டான். என்ன ஆள வச்சு அடிச்சான். வேற யார் கூடயாவது சேரப் போறியோனு கேட்டான். முன்ன போல அந்த தொழில்ல தொடர்ந்து ஈடுபட முடியல. டேபிள்ல உக்காந்து பேப்பர்ல கைவச்சா ஈ மாதிரி எல்லா எண்கள் என்கிட்டேந்து வெலகி பறந்து போகுது. இது நாள் வரை கணிச்ச கணிப்புல்லாமும் கைகூடல. அத்தனையும் பிழை. தவறு. ஏன் ரூபா நோட்டக்கூட எண்ணிப் பாக்க முடியாம போயிருக்கு. சில சமயம் கை விரல்கள விட்டுக்கூட எண்ணினா பிசகுது. சாந்தனுக்கு மார்க்கெட்ல இதனால வீழ்ச்சி. தொடர் நஷ்டம். வீட்ட வித்துட்டேன்னான். என்கிட்ட இருந்த எல்லாத்தயும் அவன்கிட்ட கொடுத்துட்டு திசை தெரியாம கோவாவ விட்டு ஓடிவந்துட்டேன். பெங்களூர் வழியா வந்த லாரில ஏறி இங்க வந்துருக்கேன்.” என்று சொல்லி முடித்து அவனே அவன் காய்களை எண்ணி நகர்த்திவிட்டு பகடையை அவர் கையில் தந்தான்.
”ஹ..ஹ..ஹா. திசை தெரியாம ஓடி ஓடி உனக்கானத தேடுற. எல்லாம் கலைஞ்சு போய் இங்க வந்து சேந்துருக்க. நல்லது. நீ புரிஞ்சுக்கணும். ஒவ்வொரு எண்ணுக்கும் திசையிருக்கு. ஒவ்வொரு எண்களும் தன்னைச் சுத்தி மத்த எண்களால சூழப்பட்டுருக்கு. அந்தந்த திசையில அந்தந்த எண்கள் ஒன்னுக்கொண்டு அனுகூலமா இருக்குதுங்க. தன் திசை அறிஞ்சு இருக்குதுங்க. அதத்தான் அன்னிக்கி உன் கையில கெடைச்ச மாய சதுரம் சொல்லுறது. உன் ஒன்பது சொல்றதும் அதத்தான். அந்த சதுரத்துல கெடச்ச சுபிட்சத்துக்கான எண் 72. 9 * 8 = 72. 7 + 2 மறுபடியும் 9.
மத்தியமத்தையும் எட்டு திக்குகளையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கட்டம். எல்லா எண்களும் அந்த ஒன்பதுக்குள்ள அடக்கம் தான. அப்ப திசைக்கு அடங்கி இருக்கணும்ல. எட்டு கட்டம் கட்டி என் அண்ணாமலையானப் போல நிக்க சொல்லுதுங்க அதுங்க. அதுக்கு தான் அதுங்க உன்ன அலைக்கழிச்சு இத்தன தூரம் விரட்டிக் கூட்டி வந்துருக்குங்க. அவனவன் அவனவனுக்கான அனுகூலமான கட்டத்துல நிக்கணுங்குதுங்க. இப்ப யோசிச்சு பாத்தா, நீ இங்க வரை வந்ததே ஒரு கணக்கா தெரியுது,” என்று அவர் பகடையை உருட்டினார்.
“இளிச்ச மொக சாமி, உன்ன போலீஸ் கூப்டனுப்பிருக்கு,” என்று அவர் குகையை நோக்கி கூவிக்கொண்டு வந்தான் அவர் கொட்டகைக்கு அருகிலுள்ள இளநீர்க் கடையில் வேலை பார்க்கும் சிறுவன். “என்னவாம்?” என்று போட்டது போட்டபடி பதற்றத்துடன் எழுந்துகொண்டு குட்டைக் கால்களுடன் சாலையை நோக்கி ஓடினார். அவனும் எழுந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தான். அவர் இருந்த கொட்டகையின் தகர தட்டிகள் கீழே தள்ளப்பட்டு இருந்தன. அந்த புங்க மரமும் வேரோடு பிடுங்கப்பட்டு சாய்ந்திருந்தது. அருகில் JCB இயந்திரம் நின்றிருந்தது. அங்கு நின்றிருந்த அதிகாரி, “யோவ் நீ தான் இளிச்ச மூஞ்சி சாமியாரோ? உங்களுக்குலாம் நோட்டீஸ் குடுத்து எத்தன நாள் ஆச்சு? இன்னும் இந்த எடத்தக் காலி பண்ணாம வச்சுருக்கீங்க? ஒரு தடவ சொன்னா கேட்டுக்க முடியாதா?” என்று ஆத்திரத்தில் அருகில் கிடந்த காலிப் பானைகளை உதைத்தார். “இன்னும் கொஞ்ச நேரத்துல் காலி பண்ணல…” என்று சினந்தார்.
அவர் “சார், சார். தப்பு நடந்துருச்சுங்க. மன்னிக்கணும்,” என்று உருண்ட பானைகளையும் அவரது பெட்டி படுக்கைகளையும் அவசர அவசரமாகத் திரட்டி எடுத்துக்கொண்டார். அவன் அவருக்கு உதவினான். சாமான்களோடு குபேர லிங்கத்தின் மண்டபத்துக்குள் போய் அமர்ந்தார்கள். “அரசாங்கத்தோட கட்டத்துக்குள்ள நம்ம இல்லல்ல அதான்,” என்றார் அதே சிரிப்போடு. அவன் சிரித்து “இதுக்கும் சிரிப்பு தானோ?” என்றான். “பின்ன, சிரிக்க சிரிக்க பொன் வந்து கொட்டும்ல,” என்றார்.
இரண்டு நாள்கள் அதே மண்டபத்தில் ஒரு மூலையில் அவரோடு தங்கியிருந்தான் . பெளர்ணமி கிரிவல நாள் வந்தது. நல்ல ஜனக் கூட்டம். மறுநாள் அருகிலிருந்தவர்களிடமிருந்து அவன் சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிட்ட விஷயத்தைக் கேட்டறிந்தார். பேருந்தில் அவன் அமர்ந்திருந்தான். அருகில் அமர்ந்தவரிடம் செல்போன் வாங்கி “அப்பா, நான்.. நான் நவராஜன் பேசறேன்” என்றான்.
சுவாரசியம்
மிக்க நன்றி.
எண்களை வைத்துப் பின்னி உலக அளவில் விரியும் கதை .நவரசம், நவமணி,நவக்ரகம் என்று ஒன்பதின் மகிமையை நாம் அறிவோம். ஒன்பதை எந்த எண்ணினால் பெருக்கினாலும் வரும் விடையின் கூட்டுத் தொகை ஒன்பதாகவே இருக்கும் உ-ம் 9*127=1143 ;1+1+4+3=9.