2018 இல் ‘த ஃப்ரெண்ட்’ என்ற நாவல் அமெரிக்காவின் ‘நேஷனல் புக்’ பரிசைப் பெற்றது. இந்நாவலை எழுதியவர் ஸிக்ரிட் நூன்யெஸ்.
இந்த இதழில் பரிசு பெற்ற அந்த நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தைக் கொடுக்கிறோம். [பாஸ்கர் நடராஜன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.]
வழக்கமாக ஆசிரியர் பற்றி ஒரு குறிப்பைக் கொடுத்துப் பிரசுரித்திருப்போம். இந்த முறை நாவலைப் பற்றிய ஒரு கட்டுரையோடு பிரசுரிக்கிறோம்.

நூலகத்தில் பார்த்தபோது இந்தப் புத்தகம் பற்றி நான் ஏதும் அறிந்திருக்கவில்லை. அட்டையில் பரிசு வாங்கிய நூல் என்ற முத்திரை இருந்ததா, அந்த நாவலை எடுத்து வரத் தயங்கினேன்.
பரிசுகளுக்கான தேர்வுகளில் பண்பாட்டு நுண்ணரசியலே மேலோங்குகிறது என்ற கருத்து எனக்கு. தவிர, பரிசு வாங்கிய புத்தகங்கள் பலவற்றைப் படித்த பிறகு அவற்றின் மீதும், பரிசுகள் மீதும் மதிப்பு இல்லாது போனது. அவற்றைப் பற்றி நம்பகமான புறத்தகவல்கள் இருந்தாலொழிய படிப்பதில்லை. அது என் படிப்புத் திறனின் போதாமை என்று வைத்துக் கொள்வோம்.
பொதுவாக, புத்தகங்களைப் பொறுத்த வரை, பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப என் தேர்வுகளை மாற்றிக் கொள்வதில்லை. விரிவான விளக்கங்கள், விமர்சனங்கள் வழியே மாறுதல் நடக்கலாம்.
எந்த வாசகருக்கும் தம் வாசிப்புத் திறன், ருசி ஆகியவை குறித்துத் தன்னம்பிக்கை தேவை. அகங்காரமாய் இல்லாதவரை நல்லது. எவரிடமும் மாறுதல்கள் ஏற்படும், அவை கூட அவரவர் நாட்டங்களைப் பொறுத்தே அமையும். தனி நபர்கள் ஒரே நேரம் நம்பத்தக்க நிதானமும், கட்டமைப்பும் கொண்டவர்களாகவும் இருப்பர், அன்றன்றைக்கு மாறுபவர்களாகவும் இருப்பர். எது பரவலாகப் பார்க்கக் கிட்டுமென்றால், எல்லாரும் காலப் போக்கில் மாறுகிறார்கள் என்பதும், மாறாது ஒரே நிலையில் என்றென்றும் இருப்பவர்கள் அரிதினும் அரிது என்பதும்.
ஆக, தனி நபர்கள் மாறுபவர்களாக இருக்கையில் அவர்களுடைய வாசிப்பு ருசிகள் மாறுவதில் வியப்பு ஏற்படத் தேவை இல்லை. எனக்கு அது, இப்புத்தகத்தை நான் வாசிக்கும் கால இடவெளியிலேயே நடந்தது.
***
முதல் வாசிப்பில் முடித்த பின்னர் புத்தகத்தைத் தள்ளி வைக்கவே எண்ணம் எழுந்தது, ஏனெனில் இதில் மொத்தப் புத்தகமும் தன்னிலை விவரிப்பிலேயே உழல்வதான ஒரு பிம்பம் எனக்கு வந்திருந்தது. மையப் பாத்திரம் தன் குரலிலேயே கதையை நடத்துவதால் இந்த பிம்பம் கிட்டியதா என்றால், அது ஓரளவு காரணம். மற்ற காரணம், எல்லா சம்பவங்களும், உரையாடல்களும் சுழன்று அலைந்து கடைசியில் மையப் பாத்திரத்தின் மன உளைச்சலிலேயே வந்து முடிவதாக எனக்குத் தோன்றியது.
நாவலின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
திறமை மிக்கவரும், ஓரளவு இலக்கிய ஸ்தானம் பெற்றவருமான எழுத்தாளர் ஒருவர் (ஆண்) தற்கொலை செய்து கொண்டதால், அவருடன் பல பத்தாண்டுகளாக நட்பு கொண்டிருந்த ஒரு பெண், இவரும் எழுத்தாளர், தான் பெரும் தனிமையில் ஆழ்த்தப்பட்டதாகக் கருதி உளைச்சல் பட ஆரம்பிக்கிறார். இறந்தவர் இந்தப் பெண்ணுடன் நீடித்த நட்பு கொண்டவர், சேர்ந்து வாழ்க்கை நடத்தவில்லை. அந்த ஆண் மூன்று திருமணங்களை அடுத்தடுத்துச் செய்திருந்தாலும், வெளி உறவுகளாகவும் பல பெண்களோடு அவ்வப்போது தொடர்பு கொண்டவர், பெண் சுகத்தில் மூழ்கியவர், மூன்றாவதாக மணந்த பெண்தான் இப்போதைய மனைவி.
நண்பராக இருந்தவரின் சாவு தன்னை இத்தனை பாதிப்பது குறித்தும், தன் உளைச்சலின் ஆழம் பற்றியும், அதிலிருந்து மீளும் வழி பற்றியும் இன்னும் ஏதும் புரியாத நிலையில் இருக்கையிலேயே, இறந்தவரின் வாழ்விலிருந்து எஞ்சி, இடம் பெயர்ந்த ஒரு சில்லு இவரை வந்து அடைகிறது.
அது இவருக்கு மிதவையாகிறது.
பொதுவாக புனைவுகளில் இத்தகைய கட்டத்தில் மிதவையாக அமைவது இறந்தவரின் படைப்பில் முற்றுப் பெறாமல் நிற்கும் ஒரு படைப்பாகவோ, அல்லது அவருடைய நட்பு அத்தனை நம்பகமானது அன்று என்று உறுதி செய்யும் தகவல்கள் / சம்பவங்களாகவோ அமையும். இரண்டுமாகவும் இருக்கலாம் – கீஸலோவ்ஸ்கி எடுத்த ஒரு புகழ் பெற்ற ஃப்ரெஞ்சுப் படத்தின் (Blue) கரு அத்தகையது. வேறு விதத் திருப்பங்களில், நீண்ட சாலைப் பயணம், வெளிநாட்டில் அலைதல், வசிக்க இடம் பெயர்தல், குழந்தை வளர்ப்பு, நண்பர் ஒருவருடன் சோகம் பகிர்தல் அல்லது இணையாகுமளவு நட்புப் பூணுதல் என்று பற்பல விடைகளோடு மீட்சி நேரும். சில நேரம் தானும் இறப்பை நாடுவதும் ஒரு விடையாகக் கிட்டும். இந்த வகை கதை நடத்தல்களை விடுத்து, இங்கே எது மிதவையாக அமைகிறது என்பதில் இந்தப் புத்தகம் வழக்கமான தேய் வழக்குகளைத் தவிர்த்து வேறு பாதையில் செல்கிறது.
இங்கு மிதவையாவது ஒரு பிராணி – இறந்தவர் கொஞ்ச காலமாகப் பராமரித்து வந்த ஒரு நாய். கிரேட் டேன் என்று சொல்லப்படும் வகை நாய். நாய்களில் பெரும் உருக் கொண்ட நாய் வகை. இறந்தவருடைய மனைவி, எழுத்தாளரல்லர். ஒரு பெரிய நிர்வாகத் துறை நிறுவனத்தில் நல்ல பதவி வகிப்பவர். அந்த மனைவி பயணங்கள் மேற்கொள்வதால், நாய் ஒன்றைப் பராமரிக்க இயலாதவராகத் தன்னைக் கருதுகிறார்.
நாய்க்குப் போக்கிடம் தேடுகையில், இறந்தவர் நாயைப் பராமரிக்கத் தக்கவராகச் சுட்டியவர் – கதையைச் சொல்லும், நாவலின் நாயகி ஆன- இந்த எழுத்தாளரே என்று சொல்லி இவரிடம் அந்த நாயைச் சேர்க்கிறார்.
இந்தப் பெண் எழுத்தாளர், இறந்தவரோடு கொண்ட நட்புக்கு அந்த நாய் ஒரு குறியீடா என்று ஓர் ஐயம் எனக்கெழுந்தது என்றாலும் அதைக் கொண்டு ஏதும் அலசலில் நான் ஈடுபடவில்லை. அந்த ஐயம் எழ ஒரு காரணம், நாய் ஏற்கனவே நடுவயதைத் தாண்டிய நிலை. இறந்தவரும் அப்படியே. ஆனால் அவர் நடுவயது கடந்து, தான் முதுமையின் வாயிலில் இருப்பதைத் திடீரென உணர்ந்து மன அழுத்தத்தில் இருந்தவர். ஒப்பீட்டில் நாய் தனக்கு வரும் முதுமையைக் கண்ணியத்தோடு, அலட்டாமல் சந்திக்கிறது.
இறந்த நண்பர் தன் வாழ்வில் ஒரு தூணாக இருந்ததைப் பற்பல விதங்களில், சம்பவங்களில், ஜடப் பொருட்களிலும், நினைவுகள் மீண்டெழுவதன் மூலமும், வாசனைகளில்கூட உணரும் இந்தப் பெண், சமன நிலைக்கு வர வழி தெரியாமல், படிப்படியாக நிலை குலைகிறார். நாயும் தன் பராமரிப்பாளர் திடீரெனக் காணாமல் போனதற்கு மிகவும் துக்கப்பட்டு நிற்கிறது. அதோடு, இறப்புக்குப் பிறகு தற்காலிகமாக ஒரு நாய் பராமரிப்பு மையத்தில் கொண்டு விடப்பட்டதால், தன் வாழ்வு பாதுகாப்பற்றது என்ற உணர்வைப் பெற்றிருக்கிறது என்று மிருக வைத்தியர் சொல்கிறார். அது இந்தப் பெண்ணுடன் ஒட்டிக்கொள்ள மறுத்து, எட்டியே நிற்கிறது. பிறகு படிப்படியாக நெருங்கி வருகிறது. இவரையே சார்ந்து இருக்கவும் துவங்குகிறது.
தன் அபிமானத்தை முந்தைய தோழரிடமிருந்து இந்தப் பெண்ணுக்கு முழுதுமாக அந்த நாய் மாற்றியதா என்பதை யார் அறிய முடியும். அந்த நாய் இளம் நாயும் அன்று. பெரிய நாய்கள் பொதுவாக அதிக வருடங்கள் வாழ்வதில்லை. இதுவோ மிகப் பெரிய நாய் வகை – பெரும் டேன் வகை. சராசரியாக இவற்றின் ஆயுட்காலம் ஆறிலிருந்து எட்டு வருடங்களே. வந்து சேரும்போதே அதன் ஆயுட்காலம் இன்னும் சில வருடங்களே என்று அறிந்திருக்கும் மையப் பாத்திரம் ஏற்கனவே தான் அனுபவிக்கும் சோகத்தோடு வரப்போகும் சோகத்தின் பளுவையும் சேர்த்துச் சுமக்கிறார். நாயின் முதுமைக் காலத்தை மையப் பாத்திரம் எப்படி உணர்கிறார் என்பதைப் புத்தகம் நுண்மையாகப் பேசத் துவங்குகிறது.
தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர், சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.
இறங்கும் சுழல் பாதையில் நாயின் முதுமை, அதன் சாவுக்காகக் காத்திருந்து பல இடர்களைச் சந்திக்கும் பெண்ணின் மெதுவான உளநிலைச் சரிவு, அவர் நாயைத் தவிர மற்ற மனித உறவுகளை ஒதுக்கித் தன்னுள் ஒடுங்கத் துவங்குதல் என்று போன கதை நாயின் சாவைத் தவிர வேறெங்கு போய்விடப் போகிறது என்று ஏற்கெனவே கொஞ்சம் சலிப்பை நான் அடையத் துவங்கி இருந்தேன். இடையில் அவர், இறந்த எழுத்தாளரையும், அந்த நாயையும் கொண்டு ஒரு புனைவை எழுதத் துவங்குகிறார். அது அவ்வப்போது தடைப்பட்டு நின்றாலும் இந்தப் பெண்ணுக்கு ஒரு வகையில் எதார்த்தத்தை உணர்த்துகிறது. எதெல்லாம் தன் கற்பனையாக இருந்திருக்கலாம் என்று இவரை மறுபடி யோசிக்க வைக்கிறது.
நாயின் மூப்பு, நாயைப் பாதிப்பதை விட இவரை அதிகம் பாதிக்கிறது என்று தோன்றும் வகையில் விவரணைகளும், மன ஓட்டங்களும் கொடுக்கப்படுகின்றன. நண்பர்களும், சந்திப்பவர்களும்கூட நாயை மணந்து கொண்டு விட்டாரா என்று வேடிக்கை செய்யுமளவு அதைப் பராமரிக்கிறார்.
முழுக் கதையையும் சொல்வதாகத் திட்டமில்லை. மேலே கொடுத்திருக்கும் அளவு போதும். இந்த இதழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் அத்தியாயம், ஏன் தேர்வானது என்பதை மட்டும் விளக்குகிறேன்.
***
அத்தியாயம் பதினொன்றில் நாவல் ஒரு பெரும் தாவலில் தடம் மாறியது. [இதையே இந்த இதழ் மொழி பெயர்ப்பு கொடுக்கிறது.] தான் எழுதி வருவதை எப்படி முடிக்கலாம் என்று அந்தப் பெண் யோசிக்கிறார்.
இதன்படி, இறந்த எழுத்தாளர் உண்மையில் இறக்கவில்லை. தற்கொலை முயற்சி தோற்று மீட்கப்படுபவர், ஒரு மனச் சிகிச்சை மனையில் இருந்துவிட்டு, தேறி வந்திருக்கிறார். தான் மனச் சிகிச்சைக்கு அடைபட்டு இருந்தது வெளியில் தெரிய வேண்டாமென்று மறைத்திருப்பதாக இந்தப் பெண்ணிடம் சொல்கிறார். இந்தப் பெண்ணைச் சந்திக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். சந்திப்பில் இந்தப் பெண்ணுக்குப் பல அதிர்வுகள் கிட்டுகின்றன.
அந்த அதிர்வுகளைவிட, மீண்ட நண்பரும், ஓரளவு பிரபலமானவருமான ஆண் எழுத்தாளரும், இந்தப் பெண் எழுத்தாளரும் நடத்தும் உரையாடலில் வெளியாகும் சூழல் பற்றிய விமர்சனங்களே இந்த அத்தியாயத்தின் மையம்.
இந்த உரையாடல்கள் ஒரே நேரம் அமெரிக்க இலக்கிய உலகின் பல இழிநிலைகளைச் சித்திரிப்பதோடு, அவற்றினூடே எப்படியோ எழுத்தாளர்கள் மேல்நிலையை எட்டும் படைப்புகளையே முயல்கின்றனர் என்ற ஒரு சிறு கீற்றான வெளிச்சக் கிரணத்தையும் காட்டுகின்றன. படைப்பாளர்கள் என்னென்ன விதங்களில் படைப்புகளை அடைய முயல்கிறார்கள் என்பதையும் இந்த உரையாடல் காட்டுகிறது.
புனைவிலக்கியம் என்ற கனவு வெளியை அதன் பின்னே எந்த வகை எந்திரங்கள் இயங்கி, அந்தக் கனவை நமக்குக் கொடுக்கின்றன என்று காட்டும் அத்தியாயம் இது. மேடையில் மின்னும் மாயாஜாலங்களைச் செய்யும் வித்தைக்காரர், அந்த மாயங்கள் எப்படித் தந்திரங்களால் கொணரப்படுவன என்பதை நமக்கு விளக்க முற்பட்டால் எப்படி இருக்கும் – அது போல இந்த அத்தியாயம் இருப்பதாகத் தோன்றியது.
***
இந்த இடத்தில் கட்டுரையை முடிக்க நினைத்தேன். ஏதோ தோன்றி புத்தகத்தை மறுமுறை வாசிக்க உந்துதல் எழுந்தது.
நான் இப்புத்தகத்தை இலேசாகவும் எடுத்துக் கொண்டேன், அதன் மீது ஏதோ ஒரு மதிப்பும் கொண்டிருந்தேன் என்று இரு முரண்பட்ட நிலைகள் என்னிடம் இருப்பது எனக்குத் தெரிந்திருந்தது. இந்த முரண் தீர்க்கப்படக் கூடியதா, இல்லை ஏன் எழுந்தது என்றாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க இதை மறுபடி படிக்க ஆரம்பித்தேன். இது ஏப்ரல் இரண்டாம் வாரத்தின் நடு. ஏப்ரல் 12 அன்று இதழ் வெளியிடப்பட வேண்டும். பொதுவாக இப்படிக் கடைசி நேரத்தில் எதையும் இதழில் சேர்ப்பதைத் தவிர்க்க முயல்கிறோம். சில நேரம் அப்படித் தவிர்க்க முடிவதில்லை.
***
மறு வாசிப்பில் எனக்கு இப்புத்தகத்தின் மீது மரியாதை கூடியது. அதன் மீதிருந்த சில விமர்சனங்கள் நீங்கவில்லை. இருப்பினும் கணிசமான எழுத்துத் திறமை இதில் வெளிப்பட்டிருப்பதை உணர்ந்தேன். நிறைய இடம் விட்டுப் பதிக்கப்பட்ட வரிகள் கொண்ட 212 பக்கங்களில், இதில் கிட்டும் ‘சில்லறைத்’ தகவல்களே ஒரு நாவல் அளவு இருக்கின்றன.
உதாரணமாக, விட்கென்ஷ்டைன் பற்றி இந்த நாவலில் ஆங்காங்கே சில தகவல்கள் கிட்டும். மையப் பாத்திரம் அவரைப் பற்றி யோசிக்க ஒரு காரணம், அவருடைய உடன்பிறப்புகளில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும், மரணம் பற்றி அவர் பேசி இருப்பதும், தானுமே தற்கொலை செய்து கொள்வது பற்றி யோசித்திருப்பதும் என்று இருக்கலாம். இறுதிப் பகுதியில் விட்கென்ஷ்டைன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் தத்துவம் பற்றிய உரைகள் நிகழ்த்தியபோது அந்த அறையில் யாராவது பெண் நுழைந்தால் விட்கென்ஷ்டைன் பேசுவதை நிறுத்தி விடுவாராம். அந்தப் பெண் குறிப்பறிந்து எழுந்து அறையை விட்டுப் போகும்வரை பேச மாட்டாராம் என்று ஒரு தகவல் கொடுக்கப்படுகிறது.
அடுத்த பத்தியில், ‘நான் ஒவ்வொரு நாளாக மேன்மேலும் முட்டாளாகி வருகிறேன்,’ என்று விட்கென்ஷ்டைன் அடிக்கடி அடிக் குரலில் முணுமுணுத்தது கேட்கப்பட்டிருந்தது என்று ஒரு வாக்கியம்.
அதற்கடுத்த அரை வரியில் கதை சொல்லியின் முணுமுணுப்பு நமக்கென.
பெண்களைப் பொருத்தவரையாவது அப்படித்தான். (About women, at any rate.)
அதுவே குறுங்கத்திச் செருகல்தான், என்றாலும் ஒருக்கால் நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று அடுத்த பத்தி.
“புகழ் மிக்க ஆண் புத்திமீது பெரும் நம்பிக்கை வைக்கலாம் என்று தோன்றுகிறதா, இதை நினைவு கொள்ளுங்கள்: அது பூனைகளைப் பார்த்து, அவை கடவுள்கள் என்று அறிவித்தது. பெண்களைப் பார்த்து, இவர்கள் மனிதர்களா என்று கேட்டது. அப்படி ஒரு மிகக் கடினமான கேள்வியை விடுவித்தபின், மறுபடி கேட்டது, ‘ஆனால் அவர்களுக்கு ஆன்மா உண்டா?”
இப்படிக் கேட்ட ஆண் யார் என்று நாவலில் இல்லை. அதைக் கண்டுபிடிக்கத் தேடியாக வேண்டும். நிச்சயம் யாராவது ஓர் ஆண் மேதை இப்படி எதையாவது சொல்லி (உளறி?) வசமாகச் சிக்கிக் கொண்டிருப்பார் என்று நாம் ஊகிக்கலாம்.
இது போன்ற பல சிறு குறிப்புகள் இந்த நாவலில் உண்டு. அவை என்ன என்று இன்னோர் இதழில் பார்ப்போம். இந்த நாவல் பற்றி லாரா கிப்னிஸ் என்பவர் ஒரு கூர்மையான விமர்சனக் கட்டுரையும் எழுதி இருக்கிறார். அதையும் அடுத்த இதழில் சுருக்கிக் கொடுக்க முயல்கிறோம்.
மைத்ரேயன்
11 ஏப்ரல் 2019 ***
One Reply to “நண்பனா, வாதையா?”