சின்ன உயிர் நோகாதா

வாரணாசி நாகலட்சுமி

தெலுங்கு மூலக் கதையின் தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

நியூஜெர்சியில் இருந்து டாக்டர் மயூர் இமெயிலில் அனுப்பியிருந்த புகைப்படத்தை வியப்போடும் ஆர்வத்தோடும் மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுக் கம்ப்யூட்டரை ஷட் டௌன் செய்தாள் டாக்டர் பிரதீபா.

நேரம் இரவு ஒன்பதாகி இருந்தது. இனி கிளினிக்கை மூடி விடலாம் என்று நினைத்து மேஜை மீதிருந்த கண்ணாடியையும் செல்போனையும் எடுத்து கைப்பையில் வைத்தாள்.

சோர்வோடு எழுந்த போது கதவருகில் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. வெளிர் நீல நிறக் கைத்தறி சுடிதார் குர்தா அணிந்த இளம்பெண் சங்கோஜத்தோடு எட்டிப் பார்த்து, “நமஸ்தே டாக்டர்!” என்றாள். நல்ல உடற்கட்டு. இருபத்தைந்து வயது இருக்கும் அந்தப் பெண்ணிடம் உள்ளே வந்து உட்கார் என்பதாகக் கையால் சைகை செய்தாள் பிரதீபா.

ஒரே கணத்தில் அவள் முகத்திலிருந்த சோர்வு நீங்கிக் கூர்மையான பரிசீலனைப் பார்வை படர்ந்தது. இருபது வருடங்களாக அவ்வாறு பழக்கமாகிப் போனது. பேஷண்ட் வந்தவுடனே தன் கடமையை செய்யத் தயாராகி விடுவாள் பிரதீபா.

பதற்றத்தோடு துப்பட்டாவை சரி செய்து கொண்டு நாற்காலியில் அமரப் போன அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தாள் பிரதீபா. துணைக்கு யாரும் வந்தாற் போல் தெரியவில்லை. விசாலமான கண்களில் சோகம் தெரிந்தது. கூர்மையான மூக்கு. அழகாக வளைந்த உதடுகள். முகம் முழுவதும் மெல்லிய திரை போல் படர்ந்திருந்த கவலை. எப்படி ஆரம்பிப்பது என்று புரியாதது போல் நாற்காலியில் நெளிந்தபடி பிரதீபாவை நிமிர்ந்து பார்த்தாள் .
“சொல்லும்மா! உன் பெயர்?” என்று கேட்டாள் பிரதீபா.

சொல்லலாமா வேண்டாமா என்பது போல் அலைபாயும் கண்களோடு அவளைப் பார்த்துவிட்டுஹ் தன் கை விரல்களின் மேல் பார்வையைப் பதித்தாள் அப்பெண். தீர்க்கமாகப் பெருமூச்சு விட்டு அவள் ஏதோ கூறத் தொடங்கும் சமயத்தில் பிரதீபாவின் கைப்பையில் இருந்த செல்போன் ஒரு முறை அடித்து நின்று போனது.

“கிளம்பலாமா?” என்று அதே வளாகத்தில் கிளினிக் வைத்திருக்கும் அவள் கணவன் சூர்யாவிடம் இருந்து வந்த சங்கேதம் அது. போனை எடுத்து “பத்து நிமிடம்!” என்று மெசேஜ் அனுப்பினாள். எப்போதும் அவள்தான் தாமதமாகக் கிளம்புகிறாள். பேஷண்டை விரட்டி அடிப்பது போல் நடத்துவது அவளுக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் அவளுக்கும் சூர்யாவுக்கும் விவாதங்கள் எழுவதுண்டு. அவனுடைய கிளினிக்கில் நுழைந்தவர் சிறியவரானாலும் முதியவரானாலும் அவன் முகத்தில் நட்பான புன்னகை தென்படாது. மூக்குக் கண்ணாடியின் பின்னால் உள்ள கண்கள், “இங்கே எதற்காக வந்தீர்களோ சீக்கிரம் கூறுங்கள்!” என்பதுபோல் அவர்களைக் கறாராகப் பார்க்கும். சொன்னதையே திரும்பச் சொன்னாலோ தேவையற்ற விவரங்களை கூறத் தொடங்கினாலோ தையற்காரர் அதிகப்படியான துணியை கத்தரித்து எறிவது போல் அவர்களின் பேச்சை வெட்டி விடுவான்.

நினைவுகளிலிருந்து மீண்டு மெலிதாக சிரித்தபடி, “சொல்லுமா!” என்றாள் பிரதீபா மீண்டும்.

அதுவரை சுவரின் மீதிருந்த போஸ்டர்களைப் பார்த்தபடி குழப்பத்தில் அமர்ந்திருந்த அப்பெண் பிரதீபாவின் கைகளில் இருந்த பிரிஸ்க்ரிப்ஷன் பேடின் பக்கம் பார்வையைத் திருப்பி, “டாக்டர்! எனக்கு இப்போது மூன்றாம் மாதம்!” என்றாள் திடீரென்று.

“கங்கிராட்ஸ்! உன் பேர் சொல்லும்மா!” என்று சிரித்தாள் பிரதீபா.

அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், “இந்தச் சமயத்தில் அபார்ஷன் செய்துக்கலாமா?” என்று நேரடியாகக் கேட்டாள்.

அவளை ஆராய்வது போல் மீண்டும் தீர்க்கமாகப் பார்த்த பிரதீபா, “அது அவ்வளவு நல்லதல்ல. எதனால் கேட்கிறாய்?” மென்மையாகக் கேட்டாள்.

அவள் பதில் அளிக்காமல் தலைகுனிந்து கை விரல் நகத்தின் மீது பார்வையைப் பதித்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

“கல்யாணம் ஆகலையா?” அப்பெண்ணின் கை மீது கைவைத்து கனிவோடு கேட்டாள் பிரதீபா.

சட்டென்று தலையை நிமிர்த்தி விரக்தியாக சிரித்தாள் அப்பெண். “ஆயிடுச்சு டாக்டர்! கல்யாணம் ஆயிடுச்சு!” என்றாள். இறுதி வார்த்தையை அழுத்தி கூறினாற்போல் தோன்றியது பிரதிபாவுக்கு.

“பின்?” நட்போடு கேட்டாள் பிரதீபா.

மீண்டும் மவுனமாக உதட்டை கடித்தாள் அப்பெண்.

“அதற்குள் வேண்டாம் என்றா?”

தலையை குறுக்காக அசைத்தாள் அப்பெண். காரணம் அதுவல்ல என்பது போல்>

“முதல் பிரக்னன்சியா?”

“ஆமாம்!” என்பது போல் தலையசைத்தாள்.

“உன் கணவனுக்கு விருப்பம் இல்லையா?” துணைக்கு அவள் கணவன் வராததை ஒட்டி இப்படிக் கேட்டாள் பிரதீபா.

“அவனுக்கு விருப்பம்தான்.”

“பின்னே என்னம்மா?” குரலில் எரிச்சலை காண்பிக்காமல் கவனமாக கேட்டாள் பிரதீபா.

“சொல்லித்தான் ஆகணுமா டாக்டர்? நீங்க அபார்ஷன் பண்ணுவீங்கன்னா சொல்றேன். நீங்க செய்ய முடியாது என்றால் என் பர்சனல் விவரங்களை எல்லாம் உங்களிடம் எதற்காக சொல்லணும்?” கோபத்தால் சிவந்தது அவள் முகம். ஏதோ வருத்தத்தில் தோய்ந்த கண்கள். தயக்கம் இருந்த இடத்தில் பிடிவாதம் இடம் பிடித்தாற் போன்ற தோற்றம்.

ஒரு கணம் பேச்சற்று வியந்து அமர்ந்திருந்த பிரதிபா, உடனே சமாளித்துக் கொண்டாள்.

“சில பிரத்தியேகமான சூழ்நிலையில் அல்லாமல் அபார்ஷன் செய்யக்கூடாது. அதிலும் முதல் கர்ப்பத்தை கலைப்பது கொஞ்சமும் நல்லதல்ல.” காரணம் சொல்லத்தான் வேண்டும் என்பதுபோல் குறிப்பாகக் கூறினாள் பிரதீபா.

எப்படி சொல்வேன் என்பதுபோல் அவள் பிரதீபாவை அலைபாயும் கண்களால் பார்த்தாள். பிரதீபாவிடம் தாய்மை உணர்வு பொங்கியது. இன்னும் பத்தாண்டுகளில் தன் மகளும் இதே வயதை அடைந்து விடுவாள் என்று எண்ணிக் கொண்டாள்.

கண நேர மௌனத்திற்குப் பின், “அவனுடைய குழந்தை இல்லையா?” என்று கேட்கப் போன பிரதீபா, “சீ! சீ!” என்று தன்னைத்தானே அடக்கி கொண்டாள்.

“பாரும்மா! உன் விவரங்களெல்லாம் கான்பிடன்ஷியலாக இருக்கும். டாக்டருக்குக் கட்டாயம் தெரிய வேண்டிய விஷயங்களை மட்டுமே நான் கேட்கிறேன். அதைச் சொல்ல வேண்டாம் என்று தோன்றினால் இந்த கன்சல்டேஷன் அனாவசியம்,” நிதானமாகவும் தீர்மானமாகவும் தெரிவித்தாள் பிரதீபா.

இறுக்க மூடிய உதடுகள். தாழ்ந்த கண்கள். சற்று நேரக் குழப்பம். பின்னர் ஏதோ முடிவிற்கு வந்ததுபோல் தலை நிமிர்ந்தாள்.

“சரி! சொல்கிறேன் டாக்டர்! அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான்! அவனுடைய தேவைக்காக நான்! வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான். முதலில், கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றுதானே என்ற எண்ணத்தோடும் என் கணவன்தானே என்ற அன்போடும் எல்லா வேலையும் நானே செய்து வந்தேன். ஆபீசில் இருந்து வரும்போதே சமையல் சாமான்கள் காய்கறி எல்லாம் வாங்கி வந்து விடுவேன். நானே வாங்குவதால் என் சம்பளப் பணத்திலிருந்து எல்லா செலவும் செய்வேன். வர வர அவனுடைய சுபாவம் புரிய ஆரம்பித்தது. தினசரி வேலைகள் எல்லாம் அவன் பார்வையில் முக்கியத்தும் இல்லாதவையே. ஆனால் காபி, டிபன், லஞ்ச், டின்னர் எல்லாம் வக்கணையாக வேண்டும் அவனுக்கு. ஆனால் அவை டேபுள் மீது எப்படி வருகிறது என்ற கவலை அவனுக்கு கிடையாது. அவனுடைய வசதிக்காகக் கல்யாணம் செய்து கொண்டான். அவனுடைய சம்பளம் வங்கியில் வளருகிறது. வீட்டுக்குத் தேவையான செலவெல்லாம் என்னுடையது. வீட்டு வேலையும் என்னுடையதுதான். இப்போது ஒரு கண நேர இன்பத்தின் பலனாகப் பிறக்கப்போகும் குழந்தையைச் சுமப்பது, பெறுவது, வளர்ப்பது எல்லாம் நானே! ஒரே… விரக்தியா இருக்கு மனசு பூரா! வெளியில் சொல்லத் தெரியாத கஷ்டம்…! சொல்ல முடியாத ஆங்க்சைடி!” சுருக்கமாக எப்படி விளக்கிக் கூறுவது என்று புரியாமல் தடுமாறினாள். தலைகுனிந்து கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளை துடைத்துக் கொண்டாள்.

பிரதீபாவுக்குப் பாவமாக இருந்தது. அவள் கையைத் தன் கையால் அழுத்தி, “கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்பது போல் தலையை அசைத்தாள்.

“எனக்கு இப்போ இருபத்தாறு வயது. இரண்டு பேரும் நன்றாகவே சம்பாதிக்கிறோம்.

பார்ப்பவர்கள் எல்லாம் ‘மேட் ஃபர் ஈச்சதர்’ என்பார்கள். முப்பது வயதுக்குள் இரண்டு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று நினைத்தேன். லேட்டானால் டெலிவரி நார்மலாக இருக்காதாமே?” கேள்வியோடு பார்த்தாள்.

“ஆமாம்!” என்பது போல் தலையசைத்தாள் பிரதீபா.

“முதல் இரண்டு வருடங்கள் அதற்குள் வேண்டாம் என்று இருந்தோம். வேண்டும் என்று தீர்மானத்தின்பின் ஒரே பரபரப்பு. குழந்தைகள் பிறக்காத சிலரைப் பார்க்கும்போது அவர்களைப் போல் எனக்கும் குழந்தை பிறக்காதோ என்று ஒரே பயமாக இருக்கும். மாசம் முழுவதும் ஒரே எதிர்பார்ப்பு. பீரியட்ஸ் வந்து விட்டால் ஒரே ஏமாற்றம்! அப்படிப்பட்டது போன மாதம் பீரியட்ஸ் மிஸ் ஆனவுடனே சொல்ல முடியாத த்ரில். ஆனந்தம்! பவன் கூட ரொம்ப சந்தோஷப்பட்டான். ஒரு வாரம் மகிழ்ச்சியாகக் கடந்தது. அவ்வளவுதான். மீண்டும் பழைய கதைதான்! அவனிடம் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். நான் ஆசைப்பட்டதைக் கேட்டு வாங்கித் தருவான் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. அட்லீஸ்ட் டாக்டரிடம் செக்கப்புக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை. இரண்டு முறை நானே அது குறித்துக் கேட்டேன்.

“இதுல என்ன இருக்கு சுஜா? மெயின் ரோட்டிலேயே கைனகாலஜிஸ்ட் கிளினிக் இருக்கு. மாலை வரும் போது காட்டிவிட்டு வா!” என்று சாதாரணமாகக் கூறி விட்டான். எனக்கு அழுகையே வந்துவிட்டது. எங்கள் சம்சாரத்தில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் அவனிடம் மாற்றும் வரவில்லை”.

அதிரும் மூக்கு! சிவந்த முகம்! சற்று நிறுத்தி கைப்பையில் இருந்து கர்சீப் எடுத்து கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள்.
“கடைசியில் என் தோழியோடு சென்று எங்கள் காலனி டாக்டரிடம் காண்பித்தேன். ஆறு வாரமாகிறது என்றார். எல்லாம் நார்மலாக இருப்பதாகச் சொன்னார். மறுபடியும் ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார். டாக்டரிடம் போய் காட்டி வந்தாயா என்று என்னை அவன் கேட்கவே இல்லை. போய் வந்ததாக நானே கூறியபோது, “எல்லாம் நார்மல்தானே? வெரிகுட்!” என்றான். அவ்வளவுதான். என் உடலின் மாற்றங்களோடும் தொந்தரவுகளோடும் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் நடந்து கொள்வான்.

மசக்கையால் வாந்தி அதிகமாகிய இரவு வேளையில்கூட ஆதரவாகவோ அன்பாகவோ நடந்து கொள்ள மாட்டான். ஏதாவது வேண்டுமா என்று கேட்க மாட்டான். “டாக்டரிடம் ஏதாவது மாத்திரை கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்!” என்பான் எரிச்சலுடன். “ரெஸ்ட் எடுத்துக்கோ!” என்று சொல்லி காலையில் சென்றவன் இரவு தாமதமாக வருவதும், வேலை அதிகம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதும் வழக்கமாகிவிட்டது. எனக்குத் தெரியும். என் சோர்வான முகத்தை பார்ப்பதற்கும் இது போன்ற சமயங்களில் துணையிருப்பதற்கும் அவனுக்கு போரடிக்கும். என் அழுகையைப் பார்த்தால் அவனுக்கு எரிச்சல் வரும். இத்தனை நாள் விதவிதமாக சமையலும் டிபனும் செய்து வாய்க்கு ருசியாகப் போட்டபோது நன்றாக அனுபவித்துச் சாப்பிட்டவன், எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் மனைவி மசக்கையில் படுத்திருக்கும்போது கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருகிறான். அதைப் பார்த்து எனக்கு அழுகையாக வரும். உடல் பலவீனமாக இருக்கும்போது, அவன் அருகில் அமர்ந்து அன்பாக விசாரிக்க வேண்டும் என்றும், மனதுக்கு ஆறுதலாக சற்று நேரம் என்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் என் மனம் ஆசைப்படுவது தவறா? அதிலும் இது போன்ற சந்தர்ப்பங்களில்! அன்று ஒரு நாள் நேராகவே கேட்டுவிட்டேன்.

“எனக்கு சமைக்கத் தெரியாது! பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் கிடைக்கும் இந்த நாளில் ஆபீஸில் வேலை செய்து சோர்ந்து போய் வந்தபின், வீட்டிலும் வேலை செய்ய என்னால் ஆகாது” என்றான்.

எனக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. “சரி! எனக்கு மட்டும் இந்த மசக்கையும் வாந்தியும் அவஸ்தையும் எதுக்கு? யாராவது அனாதை குழந்தையை எடுத்து வளர்த்துக்கலாம்” என்றேன். என்னைப் புழுவைப்போல் பார்த்துவிட்டு, “உனக்கு என்ன பைத்தியமா? அதுவும் இதுவும் ஒன்றா? உனக்கு வேண்டாம் என்றாலும் எனக்கு என் மகன் வேண்டும். மை ஃப்ளெஷ் அண்ட் ப்ளெட்” என்று கூறிக் கொண்டே கையில் இருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டான்.”

தலை குனிந்து கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“பின், இத்தனை நாள் ஏன் தாமதம் செய்தாய்?”

“அப்போதுகூட அபார்ஷன் பற்றி நினைக்கவில்லை டாக்டர்! ஏதோ வருத்தம்… சொல்ல முடியாத கவலை ஏற்பட்டதே தவிர அந்த யோசனையே வரவில்லை. என் தோழியிடம் சொன்னபோது ரொம்ப மன உளைச்சலாக இருந்தது. அவளுடைய அக்காவுக்குக்கூட இதே போல்தான் நடந்ததாம். நன்கு படித்திருந்தாலும் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்ததில் அவள் கணவனின் உதவி எந்த விதத்திலும் இல்லையாம். அதனால் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கும்படி ஆயிற்றாம். குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லாம் அவளுடையதே! எல்லாவற்றுக்கும் அவன் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை. அவன் பர்மிஷன் இல்லாமல் எந்த வேலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகி விட்டாளாம். அதைக் கேட்டபின் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை”.

“அவனிடம் உன் எண்ணங்களை மெதுவாக எடுத்துக்கூறி இருக்கலாமே!”

“ஹூ….ம்!” விரக்தியாகச் சிரித்தாள் சுஜா. “சொன்னேன் டாக்டர்! லீவு போட்டுட்டு எங்க அம்மா வீட்டுக்கு போகச் சொன்னான். ஸ்டாப் பீயிங் ஸில்லி!” என்று கோபமாகப் பேசினான். அதனால்தான் ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முன்பே குழந்தைகளை பெற்றுவிட்டு விவாகரத்து வரை சென்று குழந்தைகளைப் பிரியவும் முடியாமல், சேர்ந்து வாழவும் விரும்பாமல் அவஸ்தைப்படுபவர்களைப் பார்த்து இவர்கள் எத்தகைய முட்டாள்கள் என்று முன்பெல்லாம் நினைப்பேன். இப்போது என் நிலைமையும் அதே போல்தான் உள்ளது….. சாரி டாக்டர்!” அவள் கண்கள் நிறைந்தன.

பிரதீபா பரிவோடு பார்த்தாள். அதற்குள் செல்போன் மீண்டும் ஒலித்து நின்றது. பிரதீபா போனை எடுத்து சூர்யாவின் நம்பரை அழைத்தாள்.

“இன்னும் எத்தனை நேரம், பிரதீபா?” நிசப்தமாக இருந்த கிளினிக்கில் அவன் குரல் சன்னமாகக் கேட்டது.

“ஐந்து நிமிடம், சூர்யா!”

“இன்னுமா?”

“சாரி! எதிர்பாராமல் ஒரு ப்ரெண்ட்!” வேண்டிக் கொள்வது போல் இருந்தது அவள் குரல்.

“சரி… சரி! பத்து நிமிடத்தில் என் கிளினிக்கைப் பூட்டி விட்டு காரில் வெயிட் பண்றேன்.”

அரைகுறையாகக் கேட்ட சொற்களைக் கொண்டு விஷயத்தை புரிந்து கொண்ட சுஜா தன்னால்தான் அவர்களுக்குத் தாமதம் ஆகிறது என்பதை உணர்ந்து, “சாரி டாக்டர்!” என்று கூறி கண்களை துடைத்துக் கொண்டாள்.

“பரவாயில்லை! இப்போது சொல்லு! என்ன செய்யலாம்? உன் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்குள் குழந்தைக்கு கையும் காலும் வளர்ந்து கொண்டிருக்கும். முதல் கர்ப்பத்தின் போது இது போன்ற சுய பச்சாதாபம், சோர்வு, சாப்பிடப் பிடிக்காமல் போவது, பலவீனமாக உணர்வது, எமோஷனல் அப்ஸ் அண்ட் டவுன்ஸ் போன்றவை சிலரிடம் ஏற்படுவது இயற்கைதான். அதற்காக குழந்தையைக் கலைக்க நினைப்பது சரியில்லை. முதல் கர்ப்பத்தை கலைத்து விட்டால் மீண்டும் கர்ப்பமாவது சந்தேகம்தான்!”

“பரவாயில்லை டாக்டர்! எனக்கு குழந்தையே வேண்டாம்.”

பிரதீபாவுக்கு சிரிப்பு வந்தது.

“பிரசவ வைராக்கியம் என்று கூறுவார்களே கேள்விப்பட்டிருக்கிறாயா? இது அதுபோல் மசக்கை வைராக்கியம்! குழந்தையே வேண்டாம் என்று சொல்கிறாயே! பின் பீரியட்ஸ் வந்தபோது ஏன் ஏமாற்றம் அடைந்தாய்?”

சுஜாதாவின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தாள் பிரதீபா. “அம்மா சுஜா! நீ கொஞ்சம் தைரியமாக புத்திசாலித்தனமாக திடமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போது சூழ்நிலை உன் கன்ட்ரோலில் கீழ்வரும். நீ அழகாகக் கையாள முடியும்” என்றாள் பிரதீபா.

“இல்லை…!” என்பது போல் தலையாட்டினாள் சுஜா. “இல்லை டாக்டர்! இப்போதே ரொம்ப தாமதமாகிவிட்டது. நீங்கள் கூறும் பாசிட்டிவ் மாற்றங்கள் என் குடும்பத்தில் ஏற்பட வாய்ப்பே இல்லை. காலையிலேயே அவனிடம் சொல்லி இருந்தேன் மாலை டாக்டரிடம் போக வேண்டும் என்று. இரவு இத்தனை நேரம் ஆகிறது. மனைவி இன்னும் வீடு திரும்பவில்லை! உடம்பு சரியில்லையா? என்ற கவலையே அவனுக்கு இல்லை பாருங்கள் டாக்டர்! மொபைலில் அழைப்பான் என்று இப்போது வரை காத்துக் கொண்டிருக்கிறேன். வரவில்லை பார்த்தீர்களா? ஹி ஈஸ் டூ செல்ஃபிஷ். மற்றவர்களைப் பற்றிய கவலையே கிடையாது அவனுக்கு.”

மெதுவாகத் தலையசைத்தாள் பிரதீபா.

“இந்த மாதிரி நடப்பதற்கு மூலகாரணம் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்தாயா சுஜா? இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் இவ்வாறு மாறுவதற்கான காரணம் எனக்கு தெரியும். போட்டி உலகத்தில் தன் பிள்ளை எத்தனை முன்னால் ஓடி ஜெயிக்க முடியும் என்பதன்மீதே தாய் தந்தையரின் பார்வை இருக்கிறது. பிள்ளைகளுக்கு, அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர் பெற்றோர். வெறும் மார்க்குக்காகவும் ரேங்குக்காகவும் பிள்ளைகளை உருவாக்குகிறார்கள். எத்தனை அதிகம் சம்பளம் கிடைக்கும் என்று பார்த்து வேலையில் சேரச் சொல்லி விரட்டுகிறார்கள். மனித உறவுகளுக்கு அங்கே இடமே இருப்பதில்லை. உறவோ நட்போ வீட்டிற்கு வந்தால்கூட பிள்ளைகள் டிஸ்டர்ப் ஆவார்கள் என்றும் அவர்கள் நேரம் வீணாகிவிடும் என்றும் பயந்து பயந்து வாழ்பவர்கள் வளர்க்கும் பிள்ளைகளிடம் அவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?
வீட்டுப் பொருளாதாரச் சூழ்நிலை எப்படியிருந்தாலும் வீட்டுக் கஷ்டம் பிள்ளைகளுக்குத் தெரியாதபடி அவர்களை ஒரு ஐசொலேட்டட் ஸெல்லில் வைத்துப் பூட்டினாற்போல படிக்க வைக்கிறார்கள். தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால் மகன் ஒரு காபியோ டீயோ தயாரித்துக் கொடுப்பதோ பிரெட் சுட்டுக் கொடுப்பதோ இந்தக் காலத்தில் யார் வீட்டிலாவது நடக்கிறதா? திருமணமானபின் மனைவிக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?

நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தப் போட்டி உலகில், ‘உனக்கு எது அட்வாண்டேஜாக உள்ளதோ அதையே பின்பற்று!’ என்று காதில் ஓதி வளர்ப்பதாலும் அதுதான் பிழைக்கும் வழி, பீயிங் ஸ்மார்ட்! என்று சமாளிப்பதாலும் பிள்ளைகளும் அதற்கேற்ப உருவாகுகிறார்கள். இருபத்தைந்து வயதிற்குப் பிறகு அந்த குணத்தைஸ் சுயநலம் என்று முத்திரை குத்தினால் எப்படி?

சயின்ஸ், மேத்ஸ், கம்ப்யூட்டர்… இவைதானே தவிர இலக்கியத்தை விரும்பிப் படிக்கும் பிள்ளைகளோ இளைஞர்களோ தற்போது எங்கே தென்படுகிறார்கள்? எப்போது பார்த்தலும் சுயநலமே தவிர அடுத்தவர் கண்ணோட்டதில் பார்ப்பதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?” ஆவேசமாக சொல்லிக் கொண்டு வந்த பிரதீபா திடீரென்று நினைவு வந்தாற்போல் மணியைப் பார்த்தாள்.
“நாம் மீண்டும் சந்திக்கலாம் அம்மா! நான் கிளம்ப வேண்டும். உன் இமெயில் அட்ரஸ் கொடு. நான் உனக்கு அற்புதமான போட்டோ ஒன்று அனுப்புகிறேன். அதை பார்த்த பின்பு நாளைக்கோ அதற்கு மறுநாளோ ஒருமுறை கிளினிக்கிற்கு வா. இருட்டுவதற்கு முன்பாகவே. சரியா?” என்று எழுந்து நின்றாள் பிரதீபா.

சுஜாவும் எழுந்தாள். பிரதீபா நீட்டிய சின்ன காகிதத்தில் தன் இமெயில் அட்ரஸ் எழுதிக் கொடுத்தாள். கைப்பையைத் திறந்து பர்சை வெளியில் எடுத்தாள்.

“இருக்கட்டும். அடுத்த முறை வரும்போது பீஸ் வாங்கிக் கொள்கிறேன்” என்றாள் பிரதீபா.

சூர்யாவின் பொறுமையின்மை நினைவிற்கு வரவே அவசர அவசரமாக வெளியே கிளம்பினாள். அதற்குள் இரண்டு முறை அவள் போன் அடித்து ஓய்ந்தது.


நாள் முழுவதும் வேலையில் மும்முரமாக இருந்தாலும் டாக்டர் பிரதீபா கூறியவை மனதில் ஓடிக்கொண்டே இருந்தன சுஜாவுக்கு. அவளோடு அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தது, தாமதம் செய்து அவளுக்கும் அவள் கணவனுக்கும் தொந்தரவு கொடுத்தது எல்லாம் நினைவு வந்து கொஞ்சம் வெட்கமாக இருந்தது. தன் பிரச்சனையைப் பற்றி மனம் விட்டு பேசியதில் இதய பாரம் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது. பழக்கம் இல்லாத ஒரு பிஸியான டாக்டரோடு மனோதத்துவ பரிசோதனைக்குச் சென்றது போல் தன் கஷ்டத்தை எல்லாம் எவ்வாறு அவளால் வெளிப்படுத்த முடிந்தது? யோசித்தபடியே கம்ப்யூட்டரில் செய்து வந்த வேலையை நிறுத்தி விட்டு தன் பர்சனல் மெயிலைப் பார்க்கலாம் என்று மெயில் பாக்சைத் திறந்தாள் சுஜா.

ஐந்தாறு புதிய மெயில்களுக்கு இடையில் நீலநிற எழுத்துக்களோடு, “அமேசிங் பிக்சர் ஆஃப் த இயர்!” என்ற தலைப்போடு ஒரு மெயில் கண்ணில்பட்டது. டாக்டர் பிரதீபாவிடமிருந்துதான். அவசர அவசரமாக அதனை கிளிக் செய்தாள்.

“அன்புள்ள சுஜா! உன் முழுப் பெயரை நீ கூறவில்லை. சுஜா என்பதால் சுஜாதா என்று நினைக்கிறேன். சுஜாதா என்றால் நல்ல பிறப்பெடுத்தவள் என்று பொருள். இன்னும் ஒரு நல்ல பிறப்புப் பற்றிய போட்டோவுடன் அதன் பின்னணியிலுள்ள கதையையும் (உண்மை நிகழ்வு) இணைத்துள்ளேன். படித்துவிட்டு உன் அபிப்ராயத்தைக் கூறு.

வாழ்த்துக்களோடு, பிரதீபா ஆன்ட்டி.”

ஆன்ட்டி என்று படித்த உடனே சுஜாதாவின் உதடுகள் விரிந்து புன்னகையை வெளியிட்டன. நேற்று பேசிக் கொண்டிருந்தபோது தன்னை அறியாமல் டாக்டரை ஒருமுறை ஆன்ட்டி என்று அழைத்தது நினைவுக்கு வந்தது. அதையே அவள் குறிப்பிட்டிருந்தது மனதைத் தொட்டது. இப்படிப்பட்ட டாக்டர்கள்கூட இருப்பார்களா? என்று யோசித்தபடியே அட்டாச்மெண்ட் மீது கிளிக் செய்தாள்.

ஏதோ சர்ஜரி தொடர்பான புகைப்படம் கம்ப்யூட்டர் திரை மீது தென்பட்டது. சர்ஜனின் இரண்டு கை விரல்களும் தெரிந்தன. அதன் நடுவில் ஒரு சின்னஞ்சிறிய குட்டி கைவிரல்.. மிக மிகச் சிறிய குட்டிப் பாப்பாவுடையது. ஆச்சர்யமாக இருந்தது. அந்தப் படத்தை கூர்ந்து பார்த்து அதன் கீழ் இருந்த வாசகத்தைப் படித்தாள்.

“இந்த வருடத்தின் நம்ப முடியாத புகைப்படம்!”

“இது ‘சாம்யூல் அலெக்சாண்டர் ஆர்மாஸ்’ என்ற இருபத்தோரு வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் புகைப்படம். தாயின் கர்ப்பத்தில் இருந்த அந்த சிசுவிற்கு ஜோசப் ப்ரூனர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் ஆபரேஷன் செய்யும்போது எடுத்த புகைப்படம் இது.
இந்தக் குழந்தைக்கு ‘ஸ்பைனாபைபிடா’ என்ற நோய் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே எடுத்தால் குழந்தை பிழைக்காது. அந்த தாய் ‘ஜூலி ஆர்மாஸ்’ அட்லாண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவப் பிரிவில் நர்சாக பணிபுரிகிறாள். டாக்டர் ப்ரூனரின் அறுவை சிகிச்சைத் திறன்மீது அவளுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ‘நாஷ்வில்’ என்ற இடத்திலிருந்த ‘வாண்டர் பில்ட் யுனிவர்சிட்டி மெடிக்கல்’ சென்டரில் அவர் பிராக்டீஸ் செய்து வந்தார். இந்த மருத்துவர் ஸி – செக்ஷன் மூலம் தாயின் கர்ப்பத்தைத் திறந்து சிறிய இன்சிஷன் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் வல்லவர்.

இந்த முறை ஐந்து மாத கர்ப்பமான சிசு சாம்யூலுக்கு சர்ஜரி செய்து முடித்தவுடன் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சர்ஜரி முடிந்த உடன் இன்னும் பிறக்காத சாம்யூல் தாயின் கர்ப்பத்தில் செய்த சிறிய துவாரத்திலிருந்து தன் கையை வெளியே நீட்டி டாக்டர் ப்ரூனரின் விரலை இறுக்கிப் பிடித்தான். அந்தக் கணத்தைத் தன் வாழ்நாளிலேயே மிக அதிக மன எழுச்சியை அளித்த கணமாக வர்ணித்த டாக்டர் ப்ரூனர். அந்தக் கணத்தில் தான் செய்வதறியாது நின்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த போட்டோவில் அந்த அற்புதம் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது பாருங்கள்! இந்தப் புகைப்படத்தை பிரசுரம் செய்த செய்தித்தாள் எடிட்டர் அதனை “ஹான்ட் ஆஃப் ஹோப்” “நம்பிக்கையின் கை!” என்று வர்ணித்தார்.

அந்த போட்டோவின் கீழ் இவ்வாறு எழுதினார்.

“இருபத்தோரு வார கர்ப்பத்தில் இருந்த சிசு ‘சாம்யூல் அலெக்சாண்டர் ஆர்மாஸ்’ தாயின் கர்ப்பத்திலிருந்து தன் கையை வெளியே நீட்டி, “வாழ்க்கையை வரமாக அளித்ததற்காக உங்களுக்கு நன்றி!” என்று கூறுவதுபோல் டாக்டர் ப்ரூனரின் விரலைப் பிடித்தான்.”

சில மாதங்கள் கழிந்து சாம்யூல் பூரண ஆரோக்கியத்தோடு பிறந்தான். அந்த சர்ஜரி நூறு சதவிகிதம் வெற்றி அடைந்தது. இப்போது மீண்டும் அந்தப் படத்தை பாருங்கள்! இது ஒரு விந்தை! இது ஓர் அற்புதம்! இதனை அனைவருக்கும் பகிருங்கள். உலகம் முழுவதும் இதனை பார்க்கவேண்டும்!”

மனமொத்து ஒரே மூச்சில் படித்து முடித்த சுஜாதா அந்தப் படத்தையே விழி மூடாமல் பார்த்தாள். இந்த முறை ஜூலி ஆர்மாஸ் கர்பப்பை, அதன் மீது டாக்டர் செய்த துளை, டாக்டரின் கை விரல்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. அந்த துவாரத்தில் இருந்து வெளியே வந்த சாம்யூலின் குட்டிக் கைகள், டாக்டரின் கையை நன்றி கூறுவது போல் பிடித்துக் கொண்ட விதம்…. எல்லாம் அவள் இதயத்தைச் சுண்டி இழுப்பது போல் இருந்தது.

அவளையறியாமல் அவள் கை அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தது. மறுகணம் அவள் கண்கள் கலங்கின. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னும் அந்தப் புகைப்படம் அவளைத் தொடர்ந்து வந்தது.

இரவு தூக்கத்தில் ஒரு கனவு. ஒரு குழந்தை தன் குட்டிக் கைகளால் அவள் முகத்தை பிடித்துக் கொண்டு கண்களில் நட்சத்திர ஒளியைப் பரப்பி பொக்கை வாயால் சிரிக்கிறாள்! அதற்குள் மலர் போன்ற மிருதுவான அந்தக் கைகள் தாயின் கண்ணீரைத் துடைத்தன.

விழிப்பு வந்ததும் சுஜாதாவின் மனம் தெளிவானது. மனது நிறைய மகிழ்ச்சியோடு ஏதோ பெரிய பாரம் நீங்கினாற் போலிருந்தது. அதோடு ஒரு இனம்புரியாத துணை கிடைத்தாற் போல் தோன்றியது.

ஆபீசுக்குச் சென்ற உடனே கம்ப்யூட்டரைத் திறந்து டாக்டர் அனுப்பிய மெயிலை மீண்டும் படித்தாள். ரிப்ளை என்ற இடத்தில் கிளிக் செய்தாள்.

“நன்றி டாக்டர்! தேங்க் யூ சோ மச்! நேற்று உங்கள் மெயிலைப் படித்ததிலிருந்து என் குழந்தை என்னோடு பேசுவது போல் தோன்றுகிறது. ஒரு திருத்திக் கொள்ள முடியாத தவறை செய்து விடாதபடி என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்! என் கணவனுடைய நடத்தையின் மூல காரணத்தை எனக்குப் புரியும்படி எடுத்து கூறினீர்கள். இப்போது, அவனிடம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு என்னுடையது. வேறு வழி இல்லை. அதை நான் செய்துதான் ஆகவேண்டும். ஆனாலும் அவனுக்கும் எனக்கும் இடையே இருக்கும் அபிப்பிராய பேதத்திற்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? இதை என் உடம்பில் ஒரு பாகமாக நினைத்து என் இஷ்டத்திற்கு அதனை நீக்கி விடலாம் என்று நினைத்திருந்தேன். வேண்டாதவற்றை வீட்டிலிருந்து வெளியே எறிவது போல. தன்னைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை என் உடலை விட்டு நீக்கி விடலாம் என்று நினைத்தேன் கணநேர ஆவேசத்தில்! என் பிரச்சினைக்கு அதுதான் வழி என்று நம்பினேன். ஆனால் அந்த முடிவு இன்னும் பேச்சு வராத ஒரு சின்ன உயிரோடு இன்வால்வ் ஆகி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

பாவம்! எத்தனை நொந்து போனதோ அந்தச் சின்ன உயிர்! வருங்காலத்தில் எப்போதாவது என் மடியில் படுத்துக் கொண்டிருந்தபோதோ, என்னோடு கொஞ்சி விளையாடும் போதோ, நான் அருகில் இல்லாதபோதோ எப்போதாவது என் இந்த முடிவு பற்றி என் குழந்தைக்குத் தெரியவந்தால் எத்தனை துடித்துப் போவாளோ? இந்த யோசனை எனக்கு இப்போதுதான் வருகிறது.

இப்படி நினைக்கும் போது இந்தக் குழந்தை எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொறுப்பாக அன்றி எனக்கு ஓர் எமோஷனல் சப்போர்ட்டாக தோன்றுகிறது! பிரதீபா ஆன்ட்டி! நீங்கள்தான் என்னுடைய டாக்டர் ப்ரூனர்!

நன்றியோடு,
சுஜா.


தெலுங்கில் – வாரணாசி நாகலட்சுமி
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

One Reply to “சின்ன உயிர் நோகாதா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.