
தன் உள்ளம் படபடத்துத் துடித்துக் கொண்டிருக்க கேசவனின் விரல்கள், பிளாஸ்டிக் சேர் விளிம்பின் கூர்மையை வருடிக் கொண்டிருந்தன. தன் உள்ளத்தின் புற வெளிப்பாடாக அவரைச் சுற்றிலும் பல வண்ண உடையணிந்த மனிதர்கள் அலைந்து சுழித்துக் கொண்டிருந்தார்கள். பட்டுச் சேலைகளின் சரசரப்பும் பன்னீர் தெளிக்கும் இயந்திரத்தின் நறுமணமும் பல ஸ்தாயிகளில் ஒலிக்கும் ஓசையின் கலவையும் அப்பகுதியின் உயிர்த் துடிப்பை அதிகரித்திருந்தன. ஒரு கணம் நிதானித்து அவர்களைக் கவனித்தார். சுற்றியுள்ள ஜனத் திரளின் முகங்களின் வழியே பார்வை நகர்ந்து செல்ல அவர் மனம் மெல்ல அமைதியடைந்தது. வெவ்வேறு பாவங்கள் கொண்ட முகங்கள். அவசரம், சலிப்பு, பூரிப்பு, கேலி, கூச்சல் என பலவாக வெளிப்பட்ட முகங்களின் பின்னுள்ள ஒற்றை உணர்வான இன்பத்தை அவர் கண்டுகொண்டார். ஒரு மங்கல நிகழ்வு கொடுக்கும் இன்பம் அது. அதுவும் இது மாதிரியான திருமண விழா என்பது தினசரி வழக்கங்களிலிருந்து பிரிந்து சில மணி நேரங்கள் வாழும் தனி உலகம்.
இதோ வெற்றிலைக் கட்டை எடுக்க மணமகன் அறைக்கு விரைந்து முன்னே கடக்கும் பத்மினி அக்காவில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கவலைகள் மண்டப வாசலைத் தாண்டியதும் காத்திருக்கின்றன. நாளையிலிருந்து அக்கா மீண்டும் ஜின்னிங் ஃபேக்டரிக்கு செல்ல வேண்டும். காரியாபட்டிக்குக் காலை ஆறு மணி வாக்கில் வந்து அழைத்துச் செல்லும் கம்பெனி வண்டி மாலை ஆறரைக்குத் திரும்பி வரும்போது தலையில் பஞ்சுப் பிசிறுகள் அலைய சேலையின் மேல் அணிந்த சட்டையுடன் இறங்கி வருவாள். திரும்பும் ஒவ்வொரு நாளும் அடுத்த மாதம் கட்ட வேண்டிய சீட்டுப் பணத்தையும், அதற்கான மிச்சமிருக்கும் நாள்களையும் மனம் கணக்கிட்ட படியே செல்லும். ஒருவேளை இத்தகைய நிகழ்வுகள் என்பது அக்கவலைகளை புகையென மங்கச் செய்து ஒரு தற்காலிக உலகில் சிலநேரம் தங்கச்செய்ய எண்ணி உருவாக்கப்பட்டதுதான் போலும்.
காலங்காலமாக நிகழ்ந்து வரும் இச்சடங்கின் தொடர்ச்சி ஒரு கணம் கேசவனைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அவருடைய திருமணம் ஏற்பாடானபோது “ எலே, நம்ம பாட்டென் தாத்தா காலத்துல இருந்து சென்றாயன் கோயில்ல தாண்டா நம்ப வீட்டுக் கலியாணம் நடக்குது. உங் கலியாணமும் அங்கதான் பாத்துக்க,” திண்ணையில் அமர்ந்து கொண்டு பீடி இழுத்துக் கொண்டே அவர் அப்பா சொன்னார். இள வயதுக் கேசவன் அருகே, அவன் தட்டில் உணவை அள்ளி வைத்துக் கொண்டே அம்மா சின்னாத்தாள் “அங்க தோதுப்படுமா. அவன் ஆபீஸ் ஆளுகவெல்லாம் உக்காந்து எந்திரிக்க எடங்காணாதே. சீலித்தூர் மண்டவத்துல வெச்சுரலாமே” எனச் சன்னமான குரலில் கூறினாள். ஆனால், அப்பா ஓங்கி “நம்ம மக்க கலியாணம் கொலச்சாமி முன்னாடிதேன். பேச்ச விட்ரு” எனச் சொல்லிவிட்டு வெற்றுடம்பின் மேல் கொடியில் தொங்கிய துண்டை இழுத்துத் தோளில் போட்டுக் கொண்டு ரெங்கண்ணாவின் காட்டை நோக்கிச் சென்றுவிட்டார்.
திருமண நாளன்று கூட்டுறவு சொசைட்டியில் கேசவனுடன் பணிபுரிபவர்களை எப்படி எதிர்கொள்வதென்று சின்னாத்தாளுக்குத் தெரியவில்லை. அவள் தினக்கூலி செய்யும் காட்டின் முதலாளி ரெங்கண்ணாவின் சொந்தக்காரர்கள் இருவரைத் தயங்கியபடியே சாப்பாட்டிற்கு அழைப்பதை கேசவன் ஒருவித அசௌகரியத்துடனே பார்த்தான். அவர்கள் கண்களில் ஒருகணமேனும் இகழ்ச்சி வந்து மறைகிறதாவென கூர்ந்து கவனித்தான். அவர்கள் இயல்பாகச் சாப்பிடச் செல்வதைக் கண்டு மெல்ல ஆசுவாசமடைந்தான். வேலைக்குச் சேர்ந்த முதல் சில நாள்களில் அவனுடைய அனைத்துச் செயல்களிலும் ஒரு துருத்தலென இவ்வெண்ணம் இணைந்திருந்தது. முதல் நாள் வேலைக்கு வீட்டிருந்து கிளம்புகையில் பாறாங்கல்லின் பாரமொன்றை அடிவயிற்றில் உணர்ந்தான். சிறுவயதில் முதன்முதலில் முதலாளி ரெங்கண்ணாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது உருவான பாரம் அது. தொட்டியபட்டியிலிருந்து கெங்கு அத்தை வந்திருப்பதை அப்பாவிடம் தெரிவிக்கச் சென்றவன், முதலாளி வீட்டின் வலப் பக்கமிருந்த சிறிய மரக் கதவைத் திறந்து தொழுவத்தில் நுழைந்தான். அவன் அப்பா அங்கு கமலைக்கு அடிப்பாகமென அமைந்த கிழிந்த மாட்டுத்தோல் பையைத் தைத்துக் கொண்டிருந்தார். அவரின் முதுகுப்புறம் அவ்வீட்டின் களமுற்றம் திறந்திருந்தது. அதில் அவன் கவனத்தை ஈர்த்து எங்கும் பொருட்கள் நிறைந்திருந்தன. ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் இருக்குமென்பதே அவனை மலைக்க வைத்தது. அங்கிருந்த வேளை முழுவதும் அவ்வெடையை அவன் உணர்ந்து கொண்டேயிருந்தான். அதே உணர்வுடன் முதல் நாள் அலுவலகத்தினுள் அடியெடுத்து வைக்கும்போது அவனுள்ளம் தயங்கி நழுவியது. அத்தயக்கத்தை வெல்ல அவன் கையிலிருந்த வேலை நியமன ஆணையை ஒருமுறை அழுத்திப் பிடித்து தன்னை மீட்டுக்கொண்டான். ஒரு மாபெரும் அமைப்பின் ஒப்புதல் அது. யாரும் நிராகரிக்க முடியாத ஒப்புதல்.
பணி ஆணையை வாங்கிப் படித்த மேலாளர் ரகுநந்தன் அதிலிருந்த அவன் முகவரியைப் பார்த்து “சின்னக்கரைப்பட்டியா. முரளி சார், அந்த நெலம் மொத்தமும் எங்க தாத்தாமாருக இவெங்களுக்குக் குடுத்ததாக்கும்.” அருகிலிருந்த பருத்த உடல் கொண்டவரிடம் சொல்ல அவர் தொடர் விக்கல் வந்தவர்போல திக்கித் திக்கி சிரித்தார். கேசவன் ஆரம்ப நாட்களில் இத்தகைய தருணங்களுக்குப் புறக்கணிப்பையே தன் வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை தன் அலுவலகத்தில் சாக்கடை அடைத்துக்கொண்டதும், அவனை அழைத்து “உங்க சொந்தக்காரப்பயக யாராவது பக்கதுல இருக்கானுகளா?” என சாதாரணமாகக் கேட்டார். அக்குரலிருந்த இயல்புத் தொனியால் பதிலளிக்கத் திரும்பியவன் அவரின் உதட்டுச் சுழிப்பைக் கண்டு அதிர்ச்சியானான். அக்கேள்வியின் பின்னாலுள்ள விஷம் அவனை நடுக்குறச் செய்தது. அதைக் கவனித்தவர் மேலும் முன்சென்று “அதொன்னும் அவ்வளவு கஷ்டமில்ல. இங்கயேகூட அடெப்பெடுக்குற குச்சியிருக்கு” எனக் கூறினார். மெல்ல தன்னை அடக்கி அக்கேள்வியைத் தவிர்த்தான். அதேபோல் தனக்குக் கீழ்நிலையுள்ள ஒப்பந்தத் தொழிலாளிகூட கவனமாகத் தன்னை மட்டும் சார் என அழைக்காமல் இருப்பதையும் அவன் பொருட்படுத்தாமல் கடந்து சென்றான்.
நாள்கள் நகருந்தோறும் மெல்ல அந்த அமைப்பின் இயல்பைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தான். அந்த அலுவலகம் என்பது பல்வேறு செடி கொடிகள் சேர்ந்து வாழும் வனம் போல. அங்கு ஒவ்வொருவரின் இடமென்பது அடுத்தவரை அழுத்திச் சுருக்கும் வலிமையால் அமைவது. ஒரு மரத்தின் வேர்ப் பரவலை அதைச் சூழ்ந்து வளரும் தழைகளும் செடிகளுமே அரணிட்டு நிறுத்தி வைக்கிறது. அவைகள் கொஞ்சம் நெகிழ்ந்தாலும் மரம் தன் வேர்களை விசாலமாக்கிக் கொள்ளும். அப்படியான ஒரு தொடர் ஊடாட்டம் வழியாகவே அந்த அமைப்பு தன்னை நிகழ்த்திக் கொள்கிறதென அறிந்தான். அந்தத் தெளிவு கிடைத்தவுடனே தனக்கான இடத்தை உணர்ந்துகொண்டு விட்டான். திறமையே தன் முதன்மைப் படைக்கருவி என. அதன் மூலமாகவே பல தடைகளைத் தாண்டினான். வருடந்தோறும் நிகழும் ஆடிட்டிங்கின் போது அவனால் தன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. முரளி தயக்கமாக வந்து தன் பரிமாற்ற பதிவேட்டைக் காட்டி கணக்கு சமனாகவில்லையென உதவி கோருவார். அரை மணிநேரத்தில் அதைச் சரிசெய்து பதிவேட்டைத் திருப்பித் தரும்போது அவனுள் வெற்றியின் நிறைவு பொங்கும். அந்நிறைவே தன் உடலசைவவில் ஏற்படுத்திய மாற்றத்தை உணர்ந்தான். மேலும் அந்த உடல் மொழியே சுற்றியிருந்தவர்களின் நடுவில் அவனுக்கான இடத்தைப் பெற்றுத்தந்தது..
அத்தகைய தருணங்களில் அவன் ஆசிரியர் அருள்தாஸ் கூறியது நினைவுக்கு வரும். “கணக்குங்கிறது வெறும் நம்பர்களைப் படிக்கிறது இல்ல. கணக்குத் தெரிஞ்சவன் வாழ்க்கைய சரியா வரையறுக்குறான். ஏன்னா இங்க நம்மள சுத்தியிருக்குற எல்லாத்தயும் எண்களோட மொகமா மாத்திரலாம். பட்டினி என்பது மாசம் ஐநூறு ரூபாய் இல்லாததுதான். அடிமைத்தனத்திலிருந்து மாசம் ரெண்டாயிரம் சம்பாரிக்கத் தெரியிறது மூலமா வெளியில வந்துறலாம்.” நேர்முகமாக் குனிந்து அவன் கண்களை நோக்கி கூறினார். 35ஆண்டுகளுக்கு முன்னால் அவனது பதினைந்தாவது வயதில் கூறிய அவ்வார்த்தைகளை பல இக்கட்டுகளில் ஒரு மந்திர உச்சாடனமெனத் தன்னுள் ஓடவிட்டிருக்கிறான். தன் பள்ளி நாள்களிலிருந்து இன்று வரைக்கும் அவனின் ஆதர்சமாக இருப்பவர். வகுப்பில் கம்ப ராமாயணப் பாடல்களை உணர்ச்சியுடன் விளக்குவார். தான் சோர்ந்திருக்கும் தருணங்களில் அவரின் ஒளி நிறைந்த கண்களும் கரு நிற உதடுகளைக் கிழித்துக்கொண்டு வரும் வெண் சிரிப்பையும் நினைத்துக் கொள்வான். பல தருணங்கள் அதே வார்த்தைகளையும், பார்வையையும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குக் கடத்தியிருக்கிறான். அவர்களில் சிலர் இப்போது மேலெழுந்து வந்திருக்கின்றனர். அவர்களை எண்ணியவுடன் மீண்டும் கேசவனிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது. கடந்த கால எண்ணங்களை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டுப் பதற்றத்தைக் குறைக்க மீண்டும் அவரின் விரல்கள் அந்த பிளாஸ்டிக் சேர் முனையை வருட ஆரம்பித்தன.
சட்டென மண்டப முகப்பு பரபரப்புக் கொள்ள ஆரம்பித்தது. மணமகளின் அப்பா முத்துச்சாமி, தன் தொந்தி அதிர விரைவு நடையில் படிக்கட்டுக்கு வந்தார். போர்டிகோவில் சிவப்பு நிற வாகனம் நிற்க, அதிலிருந்து கார்மேகம் இறங்கி வரக் கண்டதும் கேசவன் மெதுவாகத் தன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டார். பள்ளத்தை நோக்கிய நீரின் வழிவெனச் சுற்றியிருந்தவர்கள் காரிலிருந்து இறங்கியவரை நோக்கி இழுக்கப்பட்டனர். பொதுவாக அனைவருக்கும் வணக்கம் வைத்து முத்துச்சாமியுடன் மண்டபத்திற்குள் சென்றார். அக்கூட்டத்திலிருந்து பிரிந்து சில உதிரிகள் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றனர். அதைக் கண்ட கேசவன் மெல்ல புன்னகைத்துக் கொண்டார். சுற்றியுள்ளவர்களுக்குக் கார்மேகம் மனிதன் மட்டுமல்லர். வாழ்க்கைப் பாதையின் பல படிகளை ஒரு சில தாவல்களில் கடந்து செல்ல வாய்ப்பளிக்கக்கூடிய சாத்தியத்தின் ஓர் உயிர் வடிவம். அச்சாத்தியங்களின் ஒன்றையாவது தனக்கு நிகழ்த்திக் கொள்ள நினைக்கும் மக்கள் அவர்கள். விரைந்து செல்லும் சாமிப் பல்லக்கின் அடிக் கம்பத்தையாவது தொட்டுப் புண்ணியத்தை வீட்டுக்குக் கொண்டு செல்ல நினைக்கும் வெறி பக்தர்கள். தான் மட்டும் என்ன? அப்படியான ஒரு காரியத்திற்குத்தான் தானும் காத்திருப்பதை எண்ணிக்கொண்டார்.
தன் முன் விழுந்த நீள் நிழலைக் கண்டு பின் திரும்பும்போதே அவர் மனம் மலரத் தொடங்கியது. அந்த நிழலின் தன்மையிலேயே யாரென இனம் கண்டுகொண்டார். கண்ணாடிச் சட்டகத்தின் பின்னிருந்து அருள்தாஸின் கண்கள் தன் வழக்கமான புன்னகையைத் தந்தது. உடனே எழுந்து அருகிருந்து இன்னொரு சேரை அவரருகே நகர்த்தினார். “போன வாரம், வீட்டுக்கு வந்துருந்தேன். பட்டி வர போயிருக்கிறதா விஜயா சொன்னா,” என்றபடி அருள்தாஸ் அமர்ந்தார்.
“ஆமா சார். அங்கிருக்குற சொசைட்டிக்கும் சேத்து அப்ரைசரா போட்ருக்காங்க. வாரம் ரெண்டு நா அங்கயும் போகணும். அதுவுமில்லாம அங்க மீனாட்சியும் கூப்டுச்சு. அவ மவன் தங்கராசு வேல விசயமா.”
“ரொம்ப பெருமையா இருக்குடா. உங்க ஆளுகள்ளயிருந்து நீ ஒருத்தனாவது மேல வந்துடணும்னு நெனச்சேன். ஒங் கூட்டாளிகளெல்லாம் சுத்திட்டு திரிஞ்சப்ப ஒங் கவனம் பொஸ்தத்துல இருந்துச்சு. இப்பத்தான் தெரியுது இது உன்னுல இருந்து ஆரம்பிச்சுருக்கு.” எனக் கேசவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். முதுமையின் நடுக்கத்தை அவர் கைகளில் உணர முடிந்தது. “அப்படியெல்லாம் பெருசா ஒண்ணுஞ் செய்யல சார். கவெர்மெண்ட் வேலைல இருக்குறதுனால அங்கிருக்குற வாய்ப்பு வசதி தெரியுது. தளச்சு வர்ற நாலு பேத்துக்குக் கூட இருந்து பாத காட்டிவுடுறேன். அம்புட்டுத்தான்.” தணிந்த குரலில் மெதுவாகக் கூறினார்.
மண்டப கேட்டின் இடது ஓர மூலை வேப்ப மர அடியில் மெல்லிய கலைசலோசை கேட்டு இருவரும் அங்கு நோக்கினர். ஒரு நடுத்தர வயதுடையவன் கீழே விழுந்து எழ முயல சரிந்த வேட்டியின் கால் தடுக்கி மீண்டும் கீழே சரிந்தான். அவனுடைய அதிபோதை அவன் மேலெழுதலை மீண்டும் சிரமமாக்கியது. அவனை நோக்கி திமிறி வந்த தூய வெண்ணிற வேட்டி கட்டிய அந்த இளைஞனை சுற்றியிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். அவ்விளைஞன் கனத்த குரலில் “வங்கொலையா அடிபட்டு சாகாத. ஓடிப் போயிடு,” எனக் கூறிவிட்டு திரும்பி மர நிழலுக்குச் சென்றான். “லேய். ரெண்டு வருஷ முன்னாடி வந்த பய. எங்கிட்ட ஏறி வர்ற. இருடா. ஒருநா வசமா சிக்க மாட்டியா என்ன. அப்ப இருக்குலே ஒனக்கு.” தள்ளாடியபடியே எழுந்து நின்று அறை கூவினான். மெல்லிய சிரிப்பு கலந்த குரலில் இளைஞன் “வொக்கா புண்ட. எப்ப வேண்ணா வாடா. பாத்துறலாம்,” என்றான்.
புழுதி படிந்த அக்கும்பலில் இருந்த அவ்விளைஞனை நோக்கிக் கொண்டிருந்த கேசவன் பின் கழுத்தில் அவர் ஆசிரியரின் பார்வையை உணர்ந்து திரும்பினார். தயங்கிய குரலில் அருள்தாஸ் “கார்மேகங்கூட இருக்குறதா கேள்விப்பட்டேன். இப்பத்தான் பாக்குறேன். நான் வேண்ணா பேசிப்பாக்கட்டா?” என்றார். அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் கேசவனின் நோக்கு மண்டபத்து வாசலிலேயே நிலைத்திருந்தது. பேசிப் பார்க்க இனியொன்றுமில்லை. மகேஷின் பிறப்பிலேயே அது முடிவாகிவிட்டது போல அனைத்தும் நடந்தது. சிறு வயதில் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்த போதும் படிப்பென்பது அவனுள் நுழையவே இல்லை. பல நாள்கள் அதை எண்ணி மருகியிருக்கிறார். தன் கொடி வழியில் தான் மட்டும்தான் விதிவிலக்கா? அவ்வெண்ணமே தன் சமூகத்தில் மற்ற மாணவர்களை மேலேற்ற அவருக்கு ஒரு வலுவான காரணமாக இருந்தது. ஒவ்வொரு பரம்பரையிலும் தப்பி வரும் அம்முத்துக்களை வீணாக்கிவிடக் கூடாது என்ற வைராக்கியம் அவரில் எழுந்தது. அவர்களை எண்ணித் தன்னைச் சமாதானம் செய்து கொள்வார்.
அதையும் மீறி சில சமயம் அவர் எல்லை மீறி விடுவார். எட்டாம் வகுப்பு கணக்குத் தேர்வுக்கு மகேஷை இரவெல்லாம் அருகே அமர்த்திச் சொல்லிக் கொடுத்துக் காலையில் பள்ளி வாசல் வரை கொண்டுவிட்டு வந்தார். வீடு வந்து குளித்துக் கிளம்பும்போது அர்ச்சுனாபுரத்திலிருந்து துட்டித் தகவல் வந்தது. உடை மாற்றித் துக்கம் விசாரிக்கப் போகும் வழியில் சிறிக்குளம் கம்மாக்கரையின் புளிய மரத்து நிழலில் அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோலி விளையாடுவதைக் கண்டு அவர் ஆத்திரம் உச்சிக்கேறியது. அவனை நோக்கி வேகமாக வந்தவர் அதே வேகத்தில் மரத்திலிருந்து கிளையை உடைத்து விளார ஆரம்பித்தார். வலி பொறுக்காமல் ஒரு கட்டத்தில் அவன் குச்சியைப் பிடித்து ஒரே மூச்சாக இழுக்க அவ்விசையில் இடறி தரையில் விழுந்தார். கைக்கு வந்த குச்சியை ஆத்திரத்துடன் இரண்டாக உடைத்து வீசிவிட்டு மூச்சிரைக்க என்ன செய்வதென்று தெரியாமல் தரையைப் பார்த்து நின்றிருந்தான். விழுந்ததில் வலது முழங்கை சிராய்த்துவிட அதிலொட்டியிருந்த மண்ணைத் துடைத்துக் கொண்டு “சொல்லிக் கொடுத்தது மண்டையில ஏறலையினாலும் ஒக்காந்து ஏதாவது எழுத செஞ்சுருக்கலாமில்ல. பரிட்சை அறக்குள்ளயே போகாம இப்படி ஊர் திரியிறயேடா. ஒக்காந்து சாப்புட நம்மட்ட ஒண்ணுமில்ல. எஞ்சத்துக்கு ஒன்ன படிக்க வக்கத்தான் முடியும். படிச்சாத்தான் ஒனக்கு சோறு. இல்ல ஒந்தாத்தனாட்டம் தினக் கூலிக்குப் போய் அங்க விட்டை மூத்திரம் அள்ளப் போறியா?” மன்றாடும் குரலில் பேச ஆரம்பித்தவர் ஆற்றாமையின் விளைவான கோபத்தில் பொறிந்து தள்ளினார். நிதானமான குரலில் மகேஷ், “படிச்சாத்தான் காசு பாக்க முடியுமா? நான் மேல வரும்போது ஒன்ன மாரி இருக்கமாட்டேன். எந்தெருவுக்கே சேத்து பணஞ் சம்பாரிச்சிருப்பேன்” எனக் கூறினான். அவனுடைய குரலிருந்த உறுதி அவரை அலையென வந்து அறைந்தது.
அதன் பிறகு அவர்களிடையே பேச்சு குறைந்து விட்டது. அன்றிலிருந்து மகேஷ் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டான். தளை விடுபட்ட பறவையென உணர்வதை அவன் உடல்மொழி காட்டியது. நடையில் துடுக்கும் உற்சாகமும் ஏறி வந்தன. நாளும் அவன் மாறி வருவதாகக் கேசவனுக்குத் தோன்றியது. தொடர்ந்து எதோவொன்றில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தான். அவன் மனம் வெளி நோக்கியே இருந்தது. அவனை சுற்றியிருப்பவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஊருக்குள் எங்கும் தெரியலானான். சங்கத்தின் தைப் பொங்கல் விழாவைப் பொறுப்பெடுத்து நடத்தினான். அதற்காக வீடு தோறும் சென்று வசூலில் ஈடுபட்டான். இரண்டு வருடம் முன்பு அங்கிருந்த முதன்மைக் கட்சியின் கிராமப் பொறுப்பாளருடன் நெருக்கமானான். இவ்வருடங்களில் அவருடன் தமிழகம் முழுவதும் அலைந்திருந்தான். சென்ற வருடம் ஊர்க் குலதெய்வத் திருவிழாவிற்குச் சக வயது இளைஞர்களுடன் சென்று மாவட்ட செயலாளரான கருப்பையாவை கொடிக் கம்பமேற்ற அழைத்து வந்தான். கார்மேகம் சொன்னதின் பேரில் அன்று முழுக்க அவருடனே இருந்து தேவைகளைக் கவனித்துக் கொண்டான்.
கேசவன் தனது கவனத்தை வேலையிலும், படிக்கும் தன் சமூக மாணவர்கள் பக்கமும் திருப்பிக் கொண்டார். அபூர்வமாக இரவு உறங்கும் முன்பு தனது மகனின் வருங்காலத்தைப் பற்றிய நினைப்பு ஓடும். தன் சமூகத்தில் அவன் உண்டாக்க நினைக்கும் மாற்றத்திற்கு எதிர்விசையாகக் காலம் தன் மகனை நிறுத்தியிருக்கிறதோ என விந்தையாக எண்ணிக் கொள்வார். எந்த அமைப்பின் சமனைக் குலைக்கும்போதும் அது தன் சமனை மீட்க தன் எதிர் வலிமையைக் கொடுக்கும். கரும்பாறையில் அறையும் கடப்பாரயிலெழும் எதிர்விசை போல. எந்த மாற்றமும் அதற்குரிய பலியைக் கோரும் போலும். தான் தன் மகனை பலியாக்கி அதை நிறைவேற்றப் போவதாக எண்ணிக் கொண்டு அமைதியடைவார்.
மண்டப உள்ளறையிலிருந்து கருத்த தடித்த உருவம் கேசவனை நோக்கி விரைந்து வந்து ” வந்தவுடனே அண்ணங்கிட்ட தாக்கல் சொல்லிட்டேன். உள்ள கூப்டாரு,” என்றான். தன் மூச்சை ஆழ இழுத்து விட்டுக்கொண்டு சின்னத் தலையசைவில் அருள்தாஸிடம் விடை பெற்றுக் கொண்டு உள்சென்றார். வலது புறத்தில் இருந்த படிக்கட்டுகள் மாடி அறைக்குக் கூட்டிச் சென்றன. உள்ளே குளிரூட்டப்பட்ட அறையில் அகலமான நாற்காலியை நிறைத்து கார்மேகம் அமர்ந்திருந்தார். பின்புறம் இரு உருவங்கள் சுவற்றில் சாய்ந்து கொண்டு செல்களை நோண்டிக் கொண்டிருந்தன. “வாண்ணே. இப்பத்தான் முத்துச்சாமிட்ட விசாரிச்சிட்டிருந்தேன். தாயாதி ஆளுகளையெல்லாம் கூப்டீங்களான்னு. சிதம்பரந்தாஞ் சொன்னான் நீ கீழ காத்துட்டிருக்கதா. சொல்லுண்ணே.” கேசவன் அடங்கிய சீரான குரலில், “எல்லா உங்களுக்கு தெரிஞ்ச வெசயந்தேன். நம்மாளுக மூணு பேரு ஃபீல்டு சர்வேயர் வேலைக்குப் பாத்திட்டிருக்காங்க. பரீச்சையும் தாண்டியாச்சு. இண்டெர்வியூ எட்டாந்தேதியிருக்கு. அதான் உங்களப் பாத்து சொல்லிட்டுப் போலாம்ணு வந்தென்.” எனக் கூறினார்.
இடையில் வந்த செல்ஃபோன் அழைப்பை துண்டித்துவிட்டு சட்டைப் பையில் வைத்துக்கொண்டே “நடமுறை உனக்குத் தெரிஞ்சிருக்கும். நம்ம வலசல்ல இருக்குற அத்தன கோட்டா சீட்டும் சின்னச்சாமி ஐயாதான் கண்ட்ரோலு.” என்றார். பின்னின்றிருந்த இரு நபர்களையும் கேசவன் ஒருக்கணம் கண்ணோட்டிவிட்டு, “சிதம்பரம் வெவரஞ் சொன்னான். சீட்டுக்கு ஒண்ணம்பதுன்னு நாலரையாகும்னான். பசங்களோட அப்பாக்களுகிட்ட சொல்லி ரெடி பண்ணச் சொல்லிருக்கு” தயங்கிய குரலில் கூறினார். எந்த மாற்றமுமின்றி கார்மேகம் அவரையே நோக்கிக் கொண்டிருந்தார். எதோ நினைத்தவராய் மெல்லிய குலுங்கலில் சிரித்தார். அப்போது எழுந்த சாராய வாடை கேசவனின் நாசியைத் தொட்டது. “அப்ப காசு குடுக்கவும் ரெடி. சரி. ஏன் சுத்தி வளைச்சுக்கிட்டு. இதப் பாருண்ணே. இதுவரைய ஒரு வழக்கமிருந்துச்சு. கோட்டா சீட்ட இதுவர நம்மாளுக கேட்டு வந்ததில்ல. முக்காவாசி ஆர்.சி. காலனி ஆளுகதான் வருவாக. நாமளும் ஆளு தராதரம் பாக்காம கொடுக்குறோம். ஒரு லெவெலுக்கு மேல போயிட்டா காசுக்கு மட்டுந்தா விசுவாசமா இருக்குறது. சாதி சனங்க எல்லாம் அடுத்ததுதான். ஆனா செல்வாக்கு முன்னாடி காசும் ரெண்டாம் பட்சந்தான். பல வேல செஞ்சு இங்க வந்துருக்கேன். இப்ப நீ ஊடால வர்ற. இந்த சீட்ட வாங்கிக் கொடுத்தேனா நம்மாளுக முன்னாடி நான் ரெண்டாமாளா ஆயிடுற மாதிரி. நாஞ் சொல்றது சரிதான?” என்றார்.
அவர் சொல்லும் தர்க்கத்தைக் கேசவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. குழப்பமாக “அப்படி இல்லீங்க. நம்மால முடிஞ்சத செய்றோம். உங்களத் தாண்டி போகுற நெனப்பெல்லாமில்லை. இருந்தா உங்க கிட்ட வருவேனா? பசங்க குடும்பத்தாளுக பல கனவோட இருக்காக. ரொம்ப கஷ்டப்படுறாங்க இதுக்காக. காசு வேணா கொஞ்சம் ஜாஸ்தியா” சொல்லும் போதே வார்த்தை தவறான திசையை நோக்கி செல்வதைக் கண்டுகொண்டார். விருட்டென எழுந்தவர், ” சொல்றது புரியலையா. எல்லாத்துக்கும் இங்க ஒரு மொற இருக்கு. தானாப் படுச்சு ஒண்ணு ரெண்டு ஆளுக மேல வந்துட்டிருந்த இடத்துல நீயாப் போயி அவங்களுக்கு கத்துக் கொடுக்குற. நாளைக்கிது அஞ்சா பத்தா ஜாஸ்தியாகும். அப்பறம் அவசர வேலன்னு கூப்டா ஒராளு வரமாட்டான். இவங்கள நம்பித்தான் இவ்வளவு தூரம் வந்துருக்கேன். பாதில வந்து நீ இத வேற பக்கம் திருப்பி விடுற,” எனக் கூறி முடிக்க மெல்ல மூச்சு வாங்கியது.
என்ன செய்வதென்று தெரியாமல் அரண்டவராக மண்டபத்திலிருந்து வெளிவந்தார். அவருள் நிகழ்ந்த கொந்தளிப்பை நோக்கி அவரது புலன்கள் திரும்பியிருந்தன.வெளி நிகழ்பவை எதுவும் அவருள் செல்லவில்லை. இரவு வரையில் பஸ்டாண்ட் அருகிலிருந்த பூங்காவில் வெறுமனே உட்கார்ந்திருந்தார். மனதில் மீண்டும் மீண்டும் அக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான பல்வேறு பதில்களை மனம் கூற அதன் மூலமாக அக்கொந்தளிப்பிலிருந்து வெளிவந்தார். வெள்ளம் வடிந்த ஆறென அந்த நினைவு மட்டும் ஒரு பாறாங்கல் எடையாக அவனுள் இருந்தது. இரவு பஸ் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார். வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை. கால்விட்ட வழியில் அது கொண்டு செல்லும் பாதையில் நடக்கலானார். ஆர்.சி.காலனியின் சர்ச் கை நடுவிரலென உயர்ந்து நின்றது. ஓர் உச்சிச் சிலுவையை அருகிருந்த வெண் விளக்கு பிரகாசப்படுத்தியது. அதைக் கண்டு சிறு மலர்வுடன் வடக்கு நோக்கி நடந்தார். சாணி வழித்து பாறையாகிய முற்றத்துத் திண்ணையில் அமர்ந்து கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த விளக்கொளியில் தடிமனான புத்தகத்தை அருள்தாஸ் வாசித்துக் கொண்டிருந்தார்.
முன்னால் ஆளரவ அசைவின் ஓசையெழ புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து கேசவனை நோக்கினார். நடந்து வரும் அசைவிலேயே அவன் கொந்தளிப்பை அறிந்து கொண்டு புத்தகத்தை மூடி வைத்தார். வந்தவர் எதிர்த் திண்ணையில் அமர்ந்து தலையைத் தொங்க விட்டிருந்தார். நடந்து வந்த பாதத் தொலைவில் அவர் கால் கடைவிரல் துடித்துக் கொண்டிருந்தது. அவரே பேசட்டுமென கிழவர் காத்திருந்தார். நடந்ததை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஒருவாறாகக் கூறினார். “இங்க இருக்குற வாழ்க்கை ஒரு பிரம்மாண்டமான முரட்டுக் கட்டிடமா இருக்கு. மேல் பகுதி காத்தும் வெயிலும் வாங்கி அனுபவிக்க கீழ்ப்பகுதி இருட்டலயும் சேத்துலையும் ஊறிட்டிருக்கு. கீழிருந்து ஒரு செங்கல உருவி வெளியெடுக்க நெனச்சாலும் மொத்த கட்டிடமும் அதை அழுத்துது,” என்றான்.
“ஒரு வேளை மொத்த கட்டிடத்தையும் சரிச்சாத்தான் முடியுமோ என்னமோ?” அக்குரலிருந்த உணர்ச்சியின்மையில் திடுக்கிட்டு கேசவன் அவர் முகத்தைப் பார்த்தார். “கார்மேகம் பக்கமிருந்து யோசிச்சுப் பாரு. இப்படியான ஒரு கட்டடத்த எழுப்பித்தான மேல வந்துருக்கான். இதோ நீ வர்றதக்கு முன்னாடி வாலி வதைப் படலம் படிச்சிட்டிருந்தேன். இன்னைக்கு வர முடியாத கேள்வி அதுலயிருக்கு. நாம செய்ற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு மாத்து வெல குடுக்க வேண்டிருக்கு. பெரிய காரியங்கள் பெரிய வெல கேட்குது. அவ்வளவு தூரம் நீ வர முடியுமாங்குது. நீ தயாராங்குது. சில சமயம் நம்ம ஆதார குணத்தையே தராசுல வெக்க வேண்டியிருக்கு. வாலியோட சண்டைக்கு போறப்போ சுக்ரீவன் கழுத்துல மாலையோட ராமன் அனுப்புறான். ஒம்பக்கம் அந்த மாலை இருக்கான்னு மட்டும் பாத்துக்கோ. ஆனா அது லேசுப்பட்ட காரியமில்ல. தன்னைவிட தன் காரியம் பெருசுங்குறவனால தான் அத செய்ய முடியும்.” துடிக்கும் கால் விரல்களை நோக்கியபடியே கேசவன் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென உலுக்கப்பட்டவனாய் உணர்ந்து தீர்மானத்துடன் எழுந்து தன் வீட்டை நோக்கிச் சென்றார்.
கேசவன் வீட்டினுள் நுழைகையில் மகேஷ் கையிலிருந்த பையை மேசை மேல் வைத்து அதனடியில் நீளமாக மடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதத்தைச் சொருகிவிட்டு சட்டைப் பட்டனைக் கழற்றிக் கொண்டே உள்ளறைப் பக்கமாகச் சென்றான். கேசவனின் கண்கள் அந்தப் பையிலேயே பதிந்திருந்தது. சென்ற ஒரு வருடமாக நடந்து வருவது. பையைக் கூட மாற்றவில்லை. பல்வேறு வழிகளில் வரும் வசூல்களை ஒன்றாக்கி மூன்று மாதத்திற்கொருமுறை விருதுநகரிலிருக்கும் மாவட்டச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். கார்மேகத்துடன் சேர்ந்த ஒரு வருடத்திலேயே அப்பொறுப்பு அவனுக்கு வந்துவிட்டது. எண்ணியபோது அப்படித்தான் நடக்குமென அவருக்குத் தோன்றியது. அவனளவு சூட்டிப்பு அந்த வயதில் வேறு யாருக்குமில்லை. கார்மேகம் எண்ணுவது பாதி கூறும்போதே புரிந்துகொண்டு விடுவான், வேறு யாரையும் அவனளவு நம்புவதில்லை.
லுங்கி மாற்றி பனியனுடன் வெளிவந்தவன் அவன் அப்பா நிற்கும் தோரணையைப் பார்த்ததும் ஒரு கணம் விதிர்த்துப் போனான். மண்டபத்தில் நடந்ததைக் கேள்விப்பட்டதில் தளர்ந்து சோர்ந்த அப்பாவைத்தான் அவனுடைய மனம் கணித்து வைத்திருந்தது. வலது கை நிறைய குருட்டி ரப்பர் பேண்ட் இடப்பட்ட பிங்க் நிற நோட்டுக்களைப் பிடித்திருக்க, கொஞ்சம் உயரே அவருடைய முழங்கை மூட்டருகேயிருந்த கரிய வடு அவனை வெறித்து நோக்கியது. அதைத் தாங்க முடியாமல் பார்வையை அவருடைய முகத்தை நோக்கித் திருப்பினான். சிவந்து நீர்ப்படலம் கொண்ட கண்கள் விளக்கொளிபட்டு மின்னின. அப்பார்வையிலிருந்த கூர்மை அவனை கூசச் செய்தது. கேசவன் அருகிலிருந்த பையைச் சுட்டி “இதுலருந்து எடுத்தது. நாலற ரூவா இருக்கு. அந்த மூணாளுகளுக்கானது.” கனத்த குரலில் அதிகாரத்துடன் கூறினார். சற்றுக் குளம்பி அவர் மனம் செல்லும் பாதையை ஊகித்து அதிர்ந்தான். அவனுடைய முகத்தில் அதைக் கண்டுகொண்டு “கார்மேகத்துக்கு துரோகம் செய்ய யோசிக்குறையா?” என்றார். ஒரு நீள் மூச்செறிந்து சுதாரித்து அவனுடைய வழக்கமான கேலி கலந்த குரலில் “துரோகமா? இருக்குறது வாய்ப்பு மட்டுந்தான். அதப் பயன்படுத்திக்கிறோமா இல்லையாங்கிறது மட்டுந்தான் கேள்வி,” என்றான். கேசவன் தன் உணர்ச்சி வடிய மெல்லிய குரலில் “ம்” என்றார். அந்த மேஜையின் எதிர் மூலையில் அடுத்த மாதம் நிகழவிருக்கும் ஊர்த் திருவிழாவின் நோட்டீஸ் காற்றில் துடித்துக் கொண்டிருக்க, அதில் கார்மேகத்தின் பெயர் தடித்த பெரிய எழுத்துருக்களில் தெரிந்தது. மெல்ல உள்ளறை நோக்கி நகர்ந்தவர் கண்ணில் அதுபட “அடுத்த வருஷம் அதுல உன் பேர் இருக்கணும். உன் பேர் மட்டும்” எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார். அப்பையிலிருந்து மிகச் சரியாக ஒரே முறையில் ரூபாய் கட்டுகளைத் தன் விரல்கள் கணித்து அள்ளிக் கொண்டதை எண்ணி அப்போது தன்னுள் புன்னகைத்துக் கொண்டார்.