கண்ணீரின் குருதியின் சுவை

நூல்: உப்புவேலி | ஆசிரியர்: ராய் மாக்ஸம் | தமிழ் மொழியாக்கம்: சிறில் அலெக்ஸ்

அ. சுதந்திரத்திற்கு பின்னான இந்தியக் கல்வித் துறையின் தேக்கத்தைக் காட்டுகிறது.

ஆ. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் சுரண்டல் ஆட்சி அமைப்பு மற்றும் அதன் விளைவான பஞ்சங்கள்.

இ. காந்தியைப் புரிந்து கொள்வதற்கு

என்ற மூன்று வகையில் இந்த நூல் முக்கியமானது என்று எழுத்தாளர் ஜெயமோகன் இந்த நூல் பற்றி எழுதியிருக்கிறார்.

உப்புவேலி பயண நூல் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. உப்புவேலியைத் தேடிய ராயின் இந்தியப் பயணங்கள் மற்றும் இந்தியாவின் உப்பு வரலாறு, உலக அளவில் அன்றைய உப்பு அரசியல், சமூகத்தில் உப்பின் பெருமதி, உப்பு சார்ந்த தகவல்கள் போன்றவை இணையாக அடுத்தடுத்த அத்தியாயங்களாக வருகிறது. நூலானது வாசிப்பதற்கு விரிவான ஆர்வமூட்டும் தகவல்களும், நிகழ்வுகளும் கொண்டுள்ளது.

இந்த நூல் வரலாற்றுக்கே உரிய விரிவும், சுவையம்சமும் கொண்டது. நமக்கு தெரிந்த வரலாற்றை இதன் தகவல்களோடு இணைத்து விரித்துக்கொள்ளும் வாய்ப்புள்ள வாசிப்பைத் தரும். புனைவுகளுக்கு உரிய கனவுத் தன்மை வரலாற்றுக்கும் உண்டு என்பதால்,  பரந்த நிலப்பரப்பில் வரலாற்று மனிதர்களுடன் இந்தநூல் நிகழ்வதால் இதை வாசிப்பது ஒரு பெருங்கனவை போல இருக்கிறது.

ஆனால் இது புனைவல்ல உண்மை என்பது நம்மை துணுக்குறச் செய்து கொண்டே இருக்கும். அடிமையாக்கப்பட்டவர்களின் எந்த வரலாற்றையும் போலவே இந்த நூலை வாசிக்கும்போதும்,  என்ன இப்படி ஓர் அநீதியா? என்று மனம் பதறிக்கொண்டே இருக்கிறது. ஆட்சி செய்பவர்களுக்கு அறத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் பிரிட்டஷ் ஆட்சியின் அறமில்லாத போக்கால் உணர்த்திவிடுகிறது.

நூலின் ஆசிரியர் ராய்மாக்ஸம் லண்டனில் குயிண்டோ புத்தக நிலையத்தில் ஸ்லீமன் என்ற அதிகாரியின் புத்தகமான,  ‘இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும்’ என்பதை ஏதேச்சையாகக் கண்டெடுக்கிறார்.

ஸ்லீமனின் புத்தகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கடைசிப் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், அவர் இந்தியாவில் குறுக்கே செய்த பயணங்களின் தொகுப்பு. இதில் ‘இந்தியாவின் போக்குவரத்து வரிகள் மற்றும் அவற்றை வசூலிக்கும் முறைகள்’ என்ற அத்தியாயம் உள்ளது. அதில் சிந்துவிலிருந்து மதராஸ் மாகாணம் என்ற தென்னிந்தியப் பகுதியிலிருந்த மகாநதி வரை (இன்று ஒடிஸாவில் உள்ள பெரும் நதி)  இரண்டாயிரத்து முன்னூறு மைல்கள் நீண்டிருந்த மிகப் பெரிய முள்வேலி பற்றியும், அதில் பனிரெண்டாயிரம் பேர் காவல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள் என்ற குறிப்பு ராயின் ஆர்வத்தை தூண்டுகிறது. முள்வேலி சார்ந்த தேடலை இங்கிலாந்து நூலகத்தில் துவங்குகிறார்.

லண்டன் புத்தக நிலையத்தில் ராய் தேடி எடுத்த ‘இந்தியாவின் நிதி மற்றும் பொதுப்பணித் துறை’என்ற நூலில் கிராண்ட்டஃப் என்பவர் முள்வேலியைச் சீனப் பெருஞ்சுவருக்கு ஒப்பானது என்று குறிப்பிடுகிறார்.

மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவின் அலுவல் கோப்புகள் உள்ள கட்டடத்தை லண்டனில் கண்டடைந்து அதில் தேடலை தொடர்கிறார். வரை படங்களைக் கண்டடைகிறார். பிரிட்டிஷ் – இந்திய ஆண்டறிக்கைகளில் வேலி பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பசுமையான மற்றும் காய்ந்த புதர்வேலி, பதினான்கு அடி உயரமும் பன்னிரண்டு அடி அகலமும் கொண்டது. அது கருங்காலி, இந்திய இலந்தை, கிளாக்காய், சப்பாத்திக்கள்ளி போன்ற தாவரங்களால் ஆன உயிர்வேலி என்ற தகவல்களும் பின்னர் வேலி கைவிடப்பட்டு மறக்கப்பட்டது என்ற தகவல்களும் ஆண்டறிக்கைகளில் உள்ளது. வேலியின் சிறு பகுதியோ,  நினைவோ எஞ்சியிருக்கும் என்ற நம்பிக்கையில் ராய் தேடலை தொடர்கிறார்.

வரைபடத் தகவல்கள் அடிப்படையில் உத்திரப் பிரதேசத்தில் தன் தோழி தீதியின் ஊரான ஜலனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முள்வேலி இருந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அங்கு செல்ல முடிவெடுத்து இந்தியா வருகிறார். தீதியின் உறவுப் பையனான இருப்பதோரு வயது சந்தோஷ் அவருடன் வருகிறான். இறுதிவரை அவன் இந்தத் தேடலில் இருக்கிறான். ஜலனில் உள்ள ஷேக்பூரை சுற்றி அவரது தேடல் துவங்குகிறது.

யமுனை நதிக்கரையில் அவர் அலைந்து திரிகிறார். கோட்டைகள்,  கோயில்கள் கம்பி வேலிகள்,  கல் வேலிகள் என்று கடந்து செல்கிறார்கள். முதியவர்கள் நினைவிலாவது அந்த வேலி இருக்கிறதா? என்று ராய் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஜான்சிக்குச் சென்று எந்தத்தடயமும் இல்லாமல் திரும்புகிறார். இன்னும் பெரிய வரை படங்களும்,  தகவல்களும் தேவை என்ற தெளிவோடு இந்தியாவிலிருந்து கிளம்புகிறார்.

உப்பு வரி:

உப்பு வரி என்பது முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி பணியாளர்களின் பேராசை,  பின் அது கப்பெனியின் பேராசை,  பின் பங்குதாரர்களின் பேராசையாகி பிரிட்டிஷ் அரசின்,  மக்களவையின்,  மக்கள் பிரதிநிதிகளின் பேராசையாகிறது என்று ராய் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் உப்பு வரி மிதமாக இருந்திருக்கிறது. லவணதியாக்சா என்னும் சிறப்பு அலுவலர் உப்புக்கு பொறுப்பேற்கிறார். முகலாயர் காலத்திலும் மிதமான வரி இருந்திருக்கிறது.

வங்கத்தில் ராபர்ட் கிளைவ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு உற்பத்திப் பொருளின் மீதும் நிலத்தின் மீதும் அதிபட்ச வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. முப்பத்திரெண்டு வயது கிளைவ் இங்கிலாந்தில் பெரும் பணக்காரர் பட்டியலில் சேர்வதற்குக் காரணமாக இருப்பது இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பட்ட வரி விதிப்புகள்.

கிழக்கிந்தியக் கம்பெனியும் அதன் தனி நபர்களும் இந்தியாவின் செல்வத்தைக் கொண்டு சென்று இங்கிலாந்தில் செலவழித்ததால் அங்கு வேலை வாய்ப்புகள் உருவாகின. இந்தியா ஏழை நாடானது. அந்த வரிகளில் உப்பு வரியிலிருந்தே அதிகப் பணம் கிடைத்தது. எனவே உப்பு வரி அதிகமாக்கப்பட்டு உப்பு உற்பத்திக்கான, வியாபாரத்திற்கான கட்டுப்பாடுகளும் அதிகமாயின. ஆனால் உப்பு வரி இடத்திற்கு இடம் மாறுபட்டது. முக்கியமாக பஞ்சாப்பில் அதிகமாக இருந்தது.

1770 ல் முதல் வங்கப் பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துப் போட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்ட விலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்த நிலையிலும் உப்பு வரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.

உப்புவரி ஏழை மக்களையே மிகவும் பாதித்தது. பணமுடையவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். மேலும், வங்கத்தில் பாரம்பரியமாக உப்புக் காய்ச்சும் வேலையைச் செய்து வந்த மலாங்கி என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். பஞ்ச காலங்களில் ஏறக்குறைய அந்த இனமே அழிந்தொழிந்திருக்கிறது.

காந்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தது இது மாதிரியான மாற்றங்களைத்தான். யாரும் கூலிகளாக மாற்றப்படக்கூடாது என்பதே அவரின் பொருளாதாரக் கொள்கையில் முக்கியமானதாக இருந்தது. தொழில் தெரிந்த ஒருவரை,  அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் பொருட்டோ, பணத்தின் பொருட்டோ கூலிகளாக்கும் அமைப்பு வேண்டாம் என்று சுயதொழிலின் முக்கியத்துவத்தை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

உப்பிற்கான விலை வரி தேவை என அனைத்தும் அதிகமாக இருந்தது. கட்டுப்பாடுகளும் அதிகமாக ஆக, உப்பு திருடப்பட்டது. திருட்டுத்தனமாக தயாரிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்டது. கடத்தலால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதால் அது சுங்கப் புதர்வேலி உருவாகக் காரணமாக இருந்தது. இந்த வேலி எழுப்பப்படுவதற்கு முன்பே சுங்க அலுவலகங்கள் இருந்தன. இவை செளக்கி எனப்படும். [1]

உப்புக் கடத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. எனவே, ஆக்ராவின் சுங்க ஆணையர் ஜியார்ஜ் சாண்டர்ஸ் யமுனை நதியில் அமைந்த சுங்க எல்லையில் இரண்டாவதாக சுங்கச்சாவடி வரிசையை உருவாக்க முயன்றார். அதுவே பின்னர் சுங்கப் பெருவேலியாக உருவெடுத்தது. இந்த சுங்க எல்லை பிரிட்டிஷ் ஆட்சியின் கொடும் வரிகளின் சின்னமாக எழுந்து நின்றது.

1876-78 ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு பஞ்சம் ஏற்பட்டது. இந்திய வரலாற்றில் மோசமான பஞ்சமாக இருக்கலாம் என்று ராய் சொல்கிறார். தென்னிந்தியா,  மத்திய இந்தியா,  பஞ்சாப் பாதிக்கப்பட்டன. ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் மாண்டிருக்கிறார்கள். நிலவரி கட்ட முடியாமல் நிலங்கள் கைவிடப்பட்டன.  நிலம் தரிசானது. செயற்கைப் பஞ்சம். அப்பொழுதும் இந்தியா இறக்குமதி செய்யும் பருத்திப் பொருட்கள் மீதான வரியை விலக்கிக்கொள்ள இங்கிலாந்து வற்புறுத்தியது.

குடிமக்களுக்கு மலிவான உப்பு என்பது கனவாக இருந்தது. கம்பெனி கைமாறிய பொழுது சமமான உப்புவரி பிரிட்டிஷ் இந்தியா முழுதும் விதிக்கப்பட்டதால் கடத்தல் குறைந்தது. ஏப்ரல் 1, 1879 ல் சுங்க எல்லை கைவிடப்பட்டது.

சுங்க வேலியை உருவாக்குவதும் அதைக் கைவிடாமல் பாதுகாப்பதும் பெரிய சவால் நிறைந்த பணியாக இருந்திருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் , மண்வளம்,  தட்பவெட்பம் என்ற அனைத்திலிருந்தும் அதைப் பாதுகாக்க,  அழிந்தால் உருவாக்க தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அது பொருளாதார முக்கியத்தும் வாய்ந்த வேலியாக இருந்திருக்கிறது.

சுங்க வேலியின் முழு விவரங்களும் நூலில் உள்ளன.

ஏழைகளின் பெரும் சுமையாக இருந்த உப்புவரி அறத்திற்குப் புறம்பானது.  எனவே அந்த அடக்குமுறை,  எந்த ஆவணமும் இன்றி நடக்கவேயில்லை என இன்று மறந்து போயிருக்குமானால் அது பெரிய பிழை. அதன் ஏதோ ஒரு பகுதியையாவது கண்டுபிடிப்பேன் என்று ராய் உறுதி கொள்கிறார்.

பஞ்ச காலங்களில் உப்பு இல்லாமை உடல் நிலையை எவ்வாறு பாதிக்கும் என்று ஓர் அத்தியாயம் வருகிறது.[2] இந்த நூலில் முக்கியமான பகுதி என எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் உப்புவரி மறைமுகமாக ஏற்படுத்திய மாபெரும் மானுடத் துயரத்தின் மறைந்த பகுதி அது. இந்தப் பஞ்சங்கள் எத்தனை இந்திய உயிர்களைக் காவு வாங்கின என்பது இன்றைய நாம் அதிகம் அறியாத ஒன்று. [3]

பஞ்ச காலங்களில் மக்களின் நிலை, வரிகளால் மக்கள் எவ்வாறு பாதிப்படைந்தார்கள் என்பது நூலில் உள்ளது. இந்த நூல் இந்தியாவின் மிகப் பெரிய வரலாற்று ஆவணம். மேலும் இந்த உயிர்வேலி சீனச் சுவர் போன்ற பெரிய அமைப்பும்கூட.

உப்புவேலியின் காவலர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலியை ஒட்டியிருந்த கிராமங்களின் ஏழை எளியவர்களை,  பெண்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இங்கே வேலியின் நீளத்தை நினைவு கொண்டால் இது எவ்வளவு மக்களை பாதித்திருக்கும் என்று ஊகிக்க முடியும்.

சீன உப்புத் தயாரிப்பு, ஆப்ரிக்காவில் உப்பானது சஹாரா நடுவில் தயாரிக்கப்படுவது பற்றி,  குறைவான ஐரோப்பிய உப்புவரி பற்றி, இங்கிலாந்தின் மிகக் குறைந்த உப்பு வரி பற்றி விரிவாக நூலில் உள்ளது.  

இந்தியாவில் உப்பு வரி உச்சத்திலிருந்த போது,  இங்கிலாந்தில் முற்றிலுமாக உப்பு வரி விலக்கப்பட்டது என்கிறார். அவர் கணிப்பில் பிரான்ஸில் மட்டுமே இந்தியாவிற்கு இணையாக இருந்திருக்கிறது. ஆனால் இவ்வளவு உயிரிழப்புகள் இல்லை. ஆனால் ஏன் அவர்களைப்போல புரட்சி எழவில்லை? ஏனென்றால் அதற்கு உப்புப் பற்றாகுறையின் பிரத்தியேக குணாதிசியம் காரணம் என்று உயிரியல் ரீதியான காரணங்களை சொல்கிறார்.

‘ஏழையின் முக்கியமான சுவையூட்டி. என்னுடைய குறிக்கோள் உப்பு வரியை ஒழிப்பது. அதுவே முழு விடுதலைக்கான ஒரே வழி என்று’ காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் துவக்கி வைக்கிறார். விடுதலைக்கு முன்பு ஆட்சி மாற்றத்திற்கான இடைக்கால அரசு பதவியேற்கும் நாள் காந்தியின் மௌன விரத நாளாக இருக்கிறது. அவர் உப்பு வரியை நீக்கும்படி குறிப்பு எழுதி தருகிறார்.

இரண்டாவது பயணம்

இங்கிலாந்தில் மீண்டும் ராய் வரைபடங்கள்,  தகவல்களைச் சேகரிக்கிறார்.  ராயல் ஜியாக்ரஃபிக் சொசைட்டியில் முக்கியமான வரைபடத்தைக் கண்டெடுக்கிறார். மேப்ரீடிங் பற்றி வாசிக்கிறார். அதைக் கற்கிறார். ஜீ. பி. எஸ். எனப்படும் புவி-இடம் சுட்டும் கருவியைத் தேடிக் கண்டடைகிறார். மீண்டும் நவம்பரில் இந்தியா வருகிறார்.

ஆக்ரா, ஜக்கோடா, குவாலியர் பகுதிகளில் தேடல் தொடர்கிறது. குவாலியரின் ஒரு பாலத்தை சுங்க எல்லையாகக் கருவி காட்டுகிறது. ஆனால் அங்கு எவ்வளவு சுற்றித் தேடியும் சுங்க வேலிக்கான தடயம் இல்லாமலிருக்கிறது. வரைபடங்கள் காட்டிய சுங்க எல்லைக்குப் பக்கத்திலேயே அலைந்து திரிகிறார்கள்.

விவசாயம் செய்யப்படாத பகுதிகளில் தேடுதலைத் தொடரலாம் என்று முடிவடுக்கிறார். ஒடிஸாவில் அவரின் ஜி. பி. எஸ். கருவி வரைபடத்தில் உள்ள அளவுகளுடன் ஒத்துப் போவது மட்டுமே அன்றைய வெற்றி என்று ராய் எழுதுகிறார். இங்கிலாந்து திரும்புகிறார். தகவல்களைச் சேகரிக்கிறார்.

மூன்றாவது பயணம்

மீண்டும் நவம்பரில் சந்தோஷ் உடன்வர, தேடலைத் தொடர்கிறார்.

ராஜஸ்தானின் சம்பர் உப்பு நகரத்திற்கு வருகிறார். வரலாற்றில் ஆயிரமாயிரம் ஆட்களும், விலங்குகளும் பரபரப்பாக வேலை செய்த இடம் அவ்வளவு அமைதியாக இருப்பது அவருக்கு மனச் சோர்வை அளிக்கிறது. அங்கிருந்து உப்பு மூட்டை மூட்டையாக ஏற்றிச் சென்ற காலங்களில் இருந்து அந்த இடம் மிகவும் விலகியிருக்கிறது. உப்புக் கடத்தலில் ஆங்கிலேயருக்குச் சவாலாக இருந்த பகுதி அது. மீண்டும் ஜான்சிக்கே செல்கிறார்.

ஜான்சியிலிருந்து எரிச் கிளம்புகிறார். அங்கிருந்த பூசாரி ஒருவர் ‘பழைய எல்லை’ தெரியும் என்கிறார். பழைய எல்லை, பர்மத்லைன் என்பவை உப்புவேலியின் மாற்றுப் பெயர்கள். முதன் முறையாக சுங்கவேலியைத் தெரியும் என்பவரைக் கண்டுமகிழ்கிறார். ஆனால் அங்கு தடயங்கள் எதுவுமில்லை. ஆனால், அந்த இடங்கள் அவர் சேகரித்த விவரங்களுடன் ஒத்துப்போகின்றன.  

யமுனை மற்றும் சம்பல் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வேலியின் பகுதிகள் இருக்கலாம் என்று தன் கடைசிக் கட்டத் தேடலைத் துவங்குகிறார். உண்மையில் ஒரு நல்ல திரைப்படத்தின் உச்ச கட்டம் போன்ற அத்தியாயங்கள் இவை. ஏனெனில் ராயின் இந்தத் தேடலும் சாமானிய முயற்சி அல்லவே.

வரலாற்று ஆய்வாளர்களின் தொடர்ந்த விடாப்பிடியான முயற்சிகள் வியக்க வைப்பவை. ராய் வேலியைத் தேடும் பயணத்தில் ஒவ்வொரு முறையும் தளரும் மனதை சமாதானப்படுத்தி அடுத்தப் பயணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் துவங்குகிறார்.

நூலை முடித்த இந்த இரவின் அமைதியில்,  பஞ்ச காலங்களும் உப்பு வரியும் பசியும் ஆதிக்கமுமான நம் முன்னவர்களின் வாழ்வு மனதைத் தொந்தரவு செய்கிறது.

பிரிட்டிஷ் மற்றும் கம்பெனி ஆட்சியின் அறமில்லாத தன்மை பற்றியும் ஆதிக்க அரசியல் பற்றியும் சொல்லும் உப்புவேலி முக்கிய ஆவணமாகும். வாசிக்கப்பட வேண்டியது. கடந்த காலப் பாடங்களை மறப்பது மாபெரும் விரயம்.

அனைத்தும் சுரண்டப்பட்டு, வீழ்த்தப்பட்ட பின்னாலும் நம் நாடு விதையெனத் தன்னைக் காத்துக்கொண்டு விருட்சமென எழுந்திருக்கிறது என்ற எண்ணம் இரவு முழுதும் மனதினுள் ஓடிக்கொண்டிருந்தது.

சில விஷயங்களில் எதுவுமே செய்ய முடியாத நிலையில் அறுதியாக ‘அநியாயம் பண்ணி அதக் கண்காணாம மறச்சிற முடியுன்னு நெனச்சிறாத.  ஒரு நாக்குலயாவது அது மிஞ்சி நிக்கும்’ என்று மூத்தவர்கள் சொல்வார்கள். அந்த வாக்கு பலித்துக் கொண்டேதான் இருக்கிறது என்று தோன்றுகிறது.

பெரும்பாலும் பிரிட்டிஷ் இந்தியா பற்றி வாசிக்கும் பொழுதெல்லாம் இந்த மாதிரியான உணர்வெழுச்சிக்கு அனைவருமே ஆட்படுவது இயல்பு. அது தன் நாட்டிற்கானது என்பதைவிட அறமீறலை சகிக்காமல் மனம் எழுகிறது என்பதே உண்மை. அந்த அற உணர்வுதான் ராய் மாக்ஸமை உப்புவேலியைத் தேட, அதன் பின்புலங்களை எழுத வைத்திருக்கிறது. அவருக்கு என் வணக்கங்களும் பேரன்பும்.

_____________________

பதிப்பாசிரியர் குறிப்பு:

[1] சௌகிதார் என்று இன்று புழங்கும் சொல் வாயிலைக் காக்கும் தர்வான் என்று நமக்குப் புரிகிறது. ஆனால் இது அன்று தண்டல் வசூல் செய்வோரைக் குறிக்கும் என்பது புரியும். தவிர காவல் காப்பவர் என்றும் பொருள் இதற்கு இருந்திருக்கிறது, அந்தப் பொருளிலேயே இன்றும் தொடர்கிறது.

[2] உப்பு, உடலில் நீர்ச் சத்தைத் தக்க வைக்க உதவுவது. ரத்தம் சிறிது உப்பாக இருப்பதை நாம் அறிவோம். தவிர உப்புச் சத்து குறைந்தால் மூளைகூடச் சரியாக வேலை செய்யாமல் பேதலிப்பு ஏற்படும். சோடியம், அயடின் ஆகிய இரு வேதிப் பொருட்களையும் எளிய விதத்தில் மனித உடலில் சேர்க்க உப்பு உதவும். இந்தப் பொருளின் மீது கடும் வரி விதித்தல் மனிதாபிமானமற்றவர் செய்யும் கொடுஞ்செயல். அதுவும் உஷ்ணம் அதிகம் உள்ள நாட்டில் உப்பு அத்தியாவசியப் பண்டம்.

[3] அன்றுமே தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத நிலையில் மக்களுக்குப் பேரிழப்பு நடந்தது என்று தெரிந்திருக்கும். ஆனால், இழப்பின் ஆழமும், பரிமாணங்களும் முழுதும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தவிர பிரிட்டிஷ் ஆட்சி இந்தத் தகவல்களை பெரும் முயற்சி செய்து மூடி மறைத்தது என்பதையும் இன்றைய வரலாற்றாளர்கள் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். சராசரி இந்தியர்கள், சுதந்திரமடைந்த பிந்தைய ஆண்டுகளில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் பிரிட்டிஷ் ஆட்சி எத்தனை சுபிட்சமாக இருந்தது என்று நினைவு கூர்வதை நம்மில் சிலராவது கண்டிருப்போம். அத்தனை தூரம் சராசரி இந்தியருக்குச் சுய வரலாறே தெரியாதிருந்தது என்பது இந்தியாவின் தொடரும் அவலம். அன்று மேலை நாடுகள் இந்தியாவில் எத்தனை கொடுமைகளை இழைத்தனர் என்பதை உணராது, பிற மக்களின் பிணக் குவியல்கள் மீது கட்டப்பட்ட வளத்தில் வாழும் அவற்றோடு இந்தியாவின் வறிய நிலையை ஒப்பிட்டு இந்தியா கேவலமான நாடு என்று பேசும் இந்தியரை இன்றுமே நாம் காண முடியும். வரலாற்று அறிவு இல்லாத போது மனிதம் தொலைந்துதான் போகும். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.