உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்

கிருஷ்ணன் சங்கரன்

‘கார்பொரேட் செக்யூரிட்டி’ யில்  IDD (Inadvertant Data Disclosure) என்றொரு கருதுகோள் உண்டு. அதாவது ஊழியர் தன்னை அறியாது பெறுபவருக்கு அவருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை தவறுதலாக மின்னஞ்சல் செய்துவிட்டால், கடைபிடிக்க வேண்டியவை என்று தனியாக ஒரு பட்டியல் உண்டு. முதலில் மேலாளருக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஊழியரின் கையறு நிலையை விளக்க வேறு பொருத்தமான சந்தர்ப்பம் தேவையில்லை. சாமிநாதையர் கிட்டத்தட்ட இதே போன்ற ஓர் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். சிந்தாமணியைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு இருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த வக்கீல், இலங்கையைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு சாமிநாதையரிடம் இருக்கும் சிந்தாமணியின் விசேஷமான உரையின் மீது ஒரு கண்.  இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒரு நாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பும்போது சிந்தாமணியைத் தான் பதிப்பிக்க விரும்புவதைக்  கூறி, பதிப்பிக்கும் வேலை எத்தனை இடர்பாடுகள் நிறைந்தது, அதைப் பதிப்பிப்பதற்கான ஐயரின் அனுபவக் குறைவு, தன்னுடைய அனுபவம், சாமிநாதையர் ஏன் கம்பராமாயணத்தை பதிப்பிக்கக் கூடாது, பதிப்பித்தால் அதற்குத் தான் செய்யப்போகும் உதவிகள், சிந்தாமணிப் பதிப்பில் தான் பதிப்பித்தால் ஐயரின் பெயரைத் தகுந்த முறையில் சிறப்பித்து எழுதுதல் என்று பலவாறாக வாதிடுகிறார். சாமிநாதையரும் பலவாறாக மன்றாடி, வாதிட்டு, மறுத்துப் பார்க்கிறார். கடைசியாக “என் தந்தை வெளியே சென்றிருக்கிறார். வந்தவுடன் கேட்டுக்கொண்டு நாளைக்காலை பதிப்பு விஷயமாக என் கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்கிறார். “எனக்குச் சாதகமாகவே பரிசீலிப்பீர்கள் என்று கருதுகிறேன். எதற்கும் அந்தப் பிரதியைக் கொடுங்கள், பார்த்து வைக்கிறேன்” என்கிறார் பிள்ளை. சாமிநாதையருக்கோ பிரதியைக் கொடுக்கப் பிரியமில்லை, ஆனால் மறுக்கவும் முடியவில்லை.   பொற்கொல்லர் நகை செய்வது போல, பல்வேறு ஜைன அறிஞர்களையும் சந்தித்து, உரையாடி, அரும்பாடுபட்டு, தான் வருடக்கணக்காக உழைத்துச் செய்த சிந்தாமணியின் கையெழுத்துப் பிரதியை சி.வை. தாமோதரம்பிள்ளையிடம் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு தூக்கிக் கொடுத்து விடுகிறார் சாமிநாதையர்.வெளியே சென்றிருந்த தந்தை வந்தவுடன் இவருடைய முக வாட்டத்தைக் கண்டு என்னவென்று விசாரிக்கும்போது நடந்ததைச் சொல்கிறார். “அடடா, அவசரப்பட்டுக் கொடுத்திருக்க வேண்டாமே. நீ உயிரைக் கொடுத்து உழைத்திருக்க, எதற்காக இன்னொருவர் பதிப்பிக்க வேண்டும். நாளைக் காலை போய்  வாங்கி வந்துவிடு” என்கிறார். தூக்கம் வராமல் வெறுமனே படுத்துக்கொண்டிருந்தவர் காலையில் தம்பியுடன் தாமோதரம் பிள்ளையின் வீட்டை அடைந்து திண்ணையில் காத்திருக்கிறார். உள்ளிருந்து வந்த தாமோதரம் பிள்ளை, வந்ததும் வராததுமாக இவர் கையில் சிந்தாமணி பிரதியைக் கொடுத்து, வரிசையாகச் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பிக்கிறார். சாமிநாதையரும் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தபின் கூறுகிறார், “இதுவரை நீங்கள் கேட்டதெல்லாம் சாதாரண சந்தேகங்கள். நூலின் கடினமான பகுதிகளெல்லாம் இனிமேல்தான் இருக்கின்றன. அவைகளைப் புரிந்து கொள்ளும் வசதி உங்களுக்கில்லை. இப்பிரதியில் உள்ள கோடுகளும், புள்ளிகளும் எனக்கு உணர்த்தும் குறிப்புகளே வேறு. நீங்கள் எங்ஙனம் அவற்றை உணர்ந்து கொள்ள முடியும்? எனவே, இந்நூலை நானே பதிப்பிப்பேன்; ஒருவேளை நீங்கள் பதிப்பித்தாலும்கூட என் முயற்சியில் மாற்றமில்லை.” சொல்லிவிட்டாரே ஒழிய, பதிப்பு வேலையை மேற்கொள்வதற்குத்தான் எத்தனை தடைகள்? “உங்கள் ஆசிரியரே முடியாமல் விட்ட வேலையாயிற்றே, நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள், பாவம்?”  “ஆறுமுக நாவலர், போப் துரை, ட்ரூ பாதிரியார் என்று பலரும் பாதியில் விட்ட வேலையாயிற்றே, உங்களுக்கு ஏன் வீண்சிரமம்?” என்று பலவாறாகக் கரிசனப்பட்டார்கள். இவரோ “இத்தனை பேர் முயற்சித்ததினாலேயே அந்தப் படைப்பின் உன்னதம் தெரியவரவில்லையா? அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது நம்முடைய கடமையில்லையா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் முயற்சிக்கிறேன். பின்னால் வருபவர்கள் செம்மைப் படுத்திக்கொள்வார்கள்” என்று பதிலுரைத்தார்.  “அதுதான் தாமோதரம்பிள்ளை பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறாரே, நீங்கள் வேறு ஏன் சிரமப்படுகிறீர்கள்?” என்று பின்னாளில் கேட்ட சேலம் இராமசாமி முதலியார் மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணியதேசிகருக்கும் இதே பதிலையே கூறினார்.     

சிந்தாமணிக்குள் சாமிநாதையர் வந்ததே சுவையான கதை. சாமிநாதையரிடம், கும்பகோணத்திற்கு முன்சீப்பாக வந்த சேலம் இராமசாமி முதலியாரை மரியாதை நிமித்தம் சந்திக்கச் சொல்கிறார் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர். கும்பகோணம் கல்லூரி தமிழ்ப் பண்டிதர், மடத்தைச் சேர்ந்த வித்துவான் என்று அறிமுகம் செய்துகொள்கிறார் ஐயர். முதலியாரிடம் எந்தச் சலனமும் தெரியவில்லை. “நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று கேட்க “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை” என்று பதிலிறுக்கிறார் ஐயர். அப்போதும் முதலியார் அமைதியாக இருந்ததைக் கண்ட ஐயர், “சரிதான், தமிழ் வாசனையே இல்லை போலிருக்கிறது,” என்று முடிவு செய்கிறார். “என்னென்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்க ஐயருக்குக் கொஞ்சம் தெம்பு வருகிறது. “இப்போது பாருங்கள்,” என்பது போலக் “குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி , கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை …” என்று மூச்சுத் திணறப் படித்த நூல்களை வரிசையாக அடுக்கிடுகிறார். அந்தாதி, கலம்பகம், கோவை, பிள்ளைத் தமிழ், உலா போன்றவற்றில் தலைக்கு இருபது நூல்களைச் சொல்லியும் அசையாமல் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதலியார். அதற்கு மேலும், “இதையெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியார் கேட்க, “சரிதான், ஆங்கில மோகம் உள்ள மனிதர் போல. நல்ல ஆளிடம் வந்து மாட்டினோம்” என்று நினைத்துக்கொள்கிறார் ஐயர். அப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது, அடடா, புராணங்களை மறந்துவிட்டோமே? என்று, “திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரியபுராணம், குற்றாலப் புராணம் …,” ம்ஹூம்… கற்சிலையில் எந்த அசைவுமில்லை. ஐயர் நம்பிக்கை இழக்கவில்லை. “நைடதம், பிரபுங்கலீலை, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் உரை….” அடடா, முக்கியமானதை விட்டுவிட்டோமே,?’ “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடம் சில காண்டங்களைப் பாடமும் கேட்டிருக்கிறேன்” என்று முடித்து முதலியாரை நம்பிக்கையோடு பார்த்திருக்கிறார் ஐயர். முதலியாரிடம் ஓர் அசைவு தெரிகிறது. “இந்தப் பிற்காலத்து நூல்கள் எல்லாம் படித்தது சரிதான். பழையநூல்களில் ஏதாவது படித்ததுண்டா?” என்று முதலியார் கேட்க, “சரிதான். கம்பராமாயணத்திலுமா  இவ்வளவு அசட்டை, கந்தபுராணம், பெரியபுராணம் எல்லாம் பழைய நூல்கள்தானே?” என்று நினைத்துக்கொண்டு “நான் சொன்னவற்றுள் எத்தனையோ பழைய நூல்கள் இருக்கின்றனவே?” என்கிறார் ஐயர். “இதற்கெல்லாம் மூல நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று முதலியார் கேட்டபின்புதான், “சரி,மனிதரிடம் ஏதோ சரக்கிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு “தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே?” என்கிறார் ஐயர். “சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” என்று கேள்விகளால் தாக்குகிறார் முதலியார். படித்ததென்ன, பார்த்ததுகூட இல்லை. அவருடைய ஆசிரியரும்கூடப்  பார்த்ததில்லை. அன்றைய தமிழ் நூல்பரப்பிலேயே இந்த நூல்கள் கிடையாது. முதலியாரிடம் இருந்த சிந்தாமணிப் பிரதியும் ஏட்டிலிருந்து காகிதத்தில் பிரதி எடுத்த பழைய பிரதி. “நான் புஸ்தகம் தருகிறேன். மிகச் சிறந்த புஸ்தகம். கம்பராமாயணத்தின் காவிய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது, எனக்கும் இன்பமுண்டாகும். படித்துப் பாடம் சொல்வீர்களா?” என்று முதலியார் கேட்க, “அதில் சிறிதும் சந்தேகமில்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று ஐயர் கூற, “சரி சிந்தாமணியை எடுத்து வைக்கிறேன். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று விடை கொடுக்கிறார் முதலியார்.  சிந்தாமணிப்பாடம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

பிரதியின் போதாமைகள் படிக்கப் படிக்கத் தெரியவர அடுத்தடுத்த பிரதிகளைத் தேடி ஓடுகிறார் ஐயர். திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் போன்ற மடங்களிலிருந்து சோழ, பாண்டிய நாடுகளின் குக்கிராமங்களில் உள்ள கவிராயர் வீடுகள் வரை ஏட்டுச் சுவடிகளைத் தேடி அலைகிறார். ஏடுகள் என்றால் ராமபாணம் அரித்த (புத்தகப் புழு, ராமரின் அம்பைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ராமபாணம்), தொட்டால் பொடிப்பொடியாய் உதிரும் நூறு வருடத்துப் பழைய ஓலைச் சுவடிகள். அதைப் போற்றிப் பாதுகாத்த கவிராயர்கள் மண் மறைந்துவிட்டார்கள். அடுத்த தலைமுறையினர் அதன் அருமை தெரியாமல், “ஆகமத்தில் சொன்னபடி ஆகுதி செய்துவிட்டோம்” என்று தீயிலிட்டு எரித்தவர்கள் பாதி, ஆற்றிலே விட்டவர்கள் மீதி. “அடடா, அப்போது ஆகுதி செய்யவேண்டியது அந்த ஆகமத்தையல்லவா?” என்று மனம் நோகிறார் ஐயர். அவைகளாவது முழுதாய்க் கிடைக்கிறதா? சோழ நாட்டில் ஒரு ஏடு கிடைத்தால், அதன் தொடர்ச்சி திருநெல்வேலிக்கருகே ஒரு கிராமத்தில் கிடைக்கிறது. பல ஏடுகள் தற்போது வழங்கிவரும் தமிழ் எழுத்துக்களுக்கு முந்தைய வட்டெழுத்துக்கள் கொண்டவை. மற்றவையிலும் பிழை மலிந்தவையே அதிகம். இது கொம்பு, இது சுழி என்று பிரித்தறிய முடியாது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகவும், சாபம் சரபமாகவும் தோன்றும். தரனென்பது தானென்றும், தானென்பது தரனென்றும். நாகம் நரகமாகத் தோன்றுகிறது.மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியே கிடையாது. எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை ஒரு பக்கமென்றால் தகவல் பிழை இன்னொரு பக்கம். ஓரிடத்தில் “புனலாட்டிலே உயிர் போகிற ஞமலிக்கு தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்த படியும்” என்று வருகிறது. ஜைன நூலில் பஞ்சாட்சரமா? என்று ஆராய்ந்தால் வேறோர் உரையில் ‘பஞ்சநமஸ்கார மந்திரம்’  என்று இருக்கிறது. ஜைன நண்பர்களை விசாரித்தபோது இரண்டாவதே சரியென்று தெரிகிறது. உரை எழுதிய சைவர் பஞ்சாட்சரம் என்று மாற்றிக்கொண்டு விட்டார். இதுபோக வல்லின, மெல்லின, இடையின பேதம் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள், உரை எது, மூலம் எது, மேற்கோள் எது என்று தெரியாமல் முட்டி நின்ற இடங்கள் என்று எத்தனையோ. அதிலும் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டும்போது இன்ன நூல் என்று கூறாமல்  “என்றார் பிறரும்” என்று முடித்து விடுகிறார். அந்தப் பிறர் யார் என்று கண்டுபிடிக்க ஐயர் ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’ ஆக மாற வேண்டியிருக்கிறது. இது போன்ற தடுக்கிடல்கள் தன்னை மேலும் மேலும் உத்வேகப்படுத்தவே செய்தன என்கிறார் சாமிநாதையர். சீவகசிந்தாமணி சமண நூல். எனவே, சமண அறிஞர்களோடு தொடர்ந்த உரையாடலில் ஈடுபடுகிறார். ஐயருடைய அறிவுப்புலம் விரிந்துபோய் விடுகிறது.  பாடபேதக் கடலில் திளைத்து, மூழ்கி சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று முத்துக்களைக் கோர்த்துத் தமிழன்னையின் ஆரத்திற்கு அழகு  சேர்க்கிறார் சாமிநாதையர். மணியைத் தேடிச் சென்ற ஐயருக்கு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற மாணிக்கங்களும் அகப்படுகின்றன. 

வார நாள்களில் கும்பகோணத்தில் கல்லூரி வேலை, விடுமுறை நாள்களில் சென்னையில் பதிப்பக வேலை, இதற்கு நடுவே புரவலர்களிடமிருந்து நூல் பதிப்பிக்கப் பணம் திரட்டும் வேலை என்று ஓய்வில்லாது உழைத்துக் கொண்டிருக்கிறார் சாமிநாதையர். இதற்கு நடுவே, இன்றைக்கு முகநூலில் பெரும் உற்சாகத்தோடு இயங்கிவரும் வீணர்களின் மூதாதையர்கள் அன்று ‘குடந்தை மித்ரன்’ என்ற பத்திரிகையில் இவரைப்பற்றி “ஓஹோ..பணம் சம்பாதிக்க இதுவும் வழி போலும்?” என்று அவதூறு பரப்பினார்கள். அதைப் பார்த்ததும் பதிப்பிற்காக நிதி சேகரிப்பதையும் நிறுத்திவிடுகிறார் சாமிநாதையர். அவ்வாறு எழுதியவர்களுக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதி எடுத்துக்கொண்டு தன்னுடைய வழிகாட்டியும், நண்பருமான சாது சேஷையரைக் காணச் செல்கிறார். கடிதத்தைப் படித்துப் பார்த்த சாது சேஷையர் கடிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விடுகிறார். திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஐயரைப் பார்த்து அவர் கூறுகிறார், ”நான் கிழித்துப் போட்டதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். சிலர் உங்களை தூஷித்துக்கொண்டு திரிவதும், கண்டனங்கள் செய்வதும் எங்களுக்குத் தெரிந்ததே. அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ, மாணாக்கர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உங்கள் மீது ஏதாவது மனவேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? சிறிதும் கிடையாது. இதைக் குறித்து மேலே பேச வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்கள் எதிரிகளின்  பெயர் பிரகாசப்படும். பதில் மறுப்பு எழுதுவார்கள். நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுதுவீர்கள். நல்ல காரியத்திற்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படி வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் பொன்னான நேரத்தை இப்படிக் காரியங்களில் வீணடிக்க வேண்டாம். இது போன்ற தூஷணைகளுக்கு பதில் எழுதுவதில்லை என்று வாக்குறுதி அளியுங்கள்,” என்று.     

வாசலுக்கும் சமையலுள்ளுக்கும் ஓடி பாட்டனாரின் கத்தரிக்காய் கூட்டு, சமையலறை உத்தரவுகளைத் தாய்க்கு அறிவிக்கும் ‘கத்தரிக்காய் தொகையல்’ சாமா, தன் மூதாதையின் நினைவாக குளக்கரையில் இருக்கும் ‘சோனன் பாட்டா கல்’ லை (ஒல்லியான கொள்ளுத்தாத்தா துவைத்த கல்) நடுகல்லைப் போல வணங்கும் சாமிநாதையர், பல நாள்கள் வெளியூரில் கதாகாலட்சேபம் செய்துவிட்டு திரும்ப வரும் மகனைத் தெருமுக்கிலே கண்டவுடன் “உன் அப்பா வந்து விட்டான்,” என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் சாமிநாதையரின் பாட்டனார், ஒரு கைப்பிடி அரிசிக்கும் ஒரு வாழைக்காய்க்கும் பாடம் சொன்ன திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள், எண்ணெய் தீர்ந்து போனது தெரியாமல் ஆசிரியர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்திருக்க, யாருக்கும் தெரியாமல் கடைக்கு ஓடி எண்ணெய்  வாங்கி வைக்கும் சாமிநாதையர்,  தன் மாணாக்கனை கௌரவப்படுத்துமுகமாக சாமிநாதையரிடம் பணம் கொடுத்து நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் ஆடும் தாசிக்குக் கொடுக்கச் செய்யும் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆசிரியர் தன் பெயரை சிவகுருநாத பிள்ளை என்று பெயரை மாற்றியவுடன் ‘நான் சைவனாகிவிட்டேன்’ என்று ஆனந்தக் கூத்தாடும் கிறித்துவ நண்பர் சவேரிநாதபிள்ளை, ஆசை நாயகியுடன் இருக்கும் பண்ணையாரை மகிழ்விக்க திண்ணையிலிருந்து கான மழை பொழியும் ‘குஞ்சு’ பாரதி, திருவாவடுதுறை மடத்திற்கு வருகை தரும் வித்துவான்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், அங்கு நடைபெற்ற சங்கீத வினிகைகள் என்று நம்மைக் கால இயந்திரத்தில் ஏற்றி ஒரு நூற்றைம்பது வருடங்கள் பின்னால் கொண்டுபோய்விடுகிறது மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’. எழுத்தாளர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி போன்ற பலரின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகே சாமிநாதையர் இந்நூலை எழுதுகிறார். எழுத எழுத ஆனந்தவிகடனில் தொடராக வருகிறது. ஆனால், ஐயர் கும்பகோணத்திலிருந்து சென்னை குடியேறுவதற்கு முன்பே முடிவுக்கு வந்துவிடுகிறது, சாமிநாதையரின் மரணத்தின் காரணமாக. தன் வரலாற்று நூல்கள் பதிவாகும்போது ஊடு பாவாக வேறு சில வரலாறுகளும் பதிவாவது இயல்பாக நடப்பது. சாமிநாதையர் தான் பார்த்துப் பழகிய பல பெரிய மனிதர்களின் வரலாறுகளையும் எழுதியுள்ளார்.  கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதி, மகா வைத்தியநாதய்யர் போன்றோரின் வரலாறுகளையும் (‘சங்கீத மும்மணிகள்’ என்ற நூலாக இப்போது கிடைக்கிறது), தன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரும் தமிழ்ப் பண்டிதரும் தன்னுடைய வழிகாட்டியுமாக விளங்கிய தியாகராச செட்டியார் ஆகியோரின் வரலாற்றை தனித்தனி  நூல்களாகவும் எழுதியுள்ளார். இந்த எல்லா நூல்களினூடும் திருவாவாடுதுறை மடத்தின் வரலாறு மற்றும் அதன் தமிழ்ப்பணி  சிறப்பாகப் பதியப் பெற்றிருக்கிறது. அதன் மடாதிபதிகள் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர்,  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் போன்றோர் சாமிநாதையரின் தமிழ்ப் பணிக்கு பக்க பலமாக இருந்து பல வகையிலும் உதவி செய்தது ‘என் சரித்திர’த்தில் பதிவாகியிருக்கிறது.  

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு அருகே உள்ள குடுமியான் மலைக்குச் சென்ற சாமிநாதையர் “இந்த ஊரில் தாசிகள் இருக்கிறார்களா?” என்று விசாரிக்கிறார். இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வரச் சொல்கிறார். கூட இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு, தயக்கத்தோடு இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வருகிறார்கள். ஐயர் அந்தப் பெண்ணிடம் ” நீ தட்டெடுத்திருக்கிறாயா?” என்று கேட்கிறார். தட்டெடுத்தல் என்பது சுவாமி ஊர்வலத்தின்போது சுவாமிக்கான அலங்காரப் பொருட்களைச் சுமந்துசெல்லுதல், அதைப் பாரம்பரியமாக தாசிகள் மட்டுமே செய்வது வழக்கம். “அப்போது பாடுகிற பாடல்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்கிறார். அந்தப் பெண் சிறு வயதில் பாடிய பாடல்களை ஞாபகத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பாடுகிறாள். ஐயர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். சிவாலயங்களில் இருக்கும் ருத்ரகணிகையர் தட்டெடுக்கும்போது பாடும் பாடல்களில் தல சம்பந்தமான செய்திகள் இருக்கும் என்பது அந்தத் தமிழ்த் தேனிக்குத் தெரிந்திருந்தது.   

ஐயரின் தமிழ்ப்பணிக்கு உதவுமுகமாக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சாமிநாதையருக்கு ஒரு கிராமத்தையே மானியமாக அளிக்க விழைந்தபோது சமஸ்தானத்தின் மோசமான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அதை மறுத்துவிட்டார் சாமிநாதையர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ‘என் சரித்திர’த்தின் தொடர்ச்சியாகத் தாம் எழுதிய ‘என் ஆசிரியப்பிரான்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ.  அதேபோல் நூல்களைப் பதிப்பிக்க இவர் படுகிற பாட்டைப் பார்த்த திருவாவடுதுறை மடத்தலைவர் இவருக்காக அச்சுக்கூடம் அமைக்க ஐயாயிரம் ரூபாய் அளிக்கிறார். தான் ஏற்றுக்கொண்டால் அச்சகத்தின் வரவு செலவைக் கவனிக்கவே பொழுது சரியாகயிருக்கும் என்றும், அது தன் ஏடு சேகரிப்பு மற்றும் தமிழ் ஆய்வுப் பணிக்கு பெரும் இடையூறாகவே இருக்கும் என்று அதனை அன்போடு மறுத்து விடுகிறார்  சாமிநாதையர். 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மூத்த மாணவரும், சாமிநாதையரின் முன்னோடியும் வழிகாட்டியுமான தியாகராச செட்டியாரை சிந்தாமணி பதிப்பித்ததற்குப்பின் காணச் செல்கிறார் சாமிநாதையர். இவர்தான் தான் பார்த்துவந்த கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் வேலையைச்  சாமிநாதையருக்குத் தன் ஓய்வுக்குப்பின் ஏற்பாடு செய்து வைத்தவர். எப்போதும் இவரை மரியாதையோடு அழைக்கும் செட்டியார் உணர்ச்சி மேலீட்டால் “எவ்வளவு பெரிய காரியம் செய்துவிட்டாய்?” என்று ஒருமையில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுகிறார். அதேசமயம் இவரிடம் ‘என்ன, முன்னுரையில் ஒரு வார்த்தை என்னைப் பற்றி சொல்லியிருக்கலாம்’ என்று பேச்சுவாக்கில் கூறிவிடுகிறார். பெரும் மனவருத்தமடைந்த ஐயர் தன் தவறுக்கு மூன்று விதமாகக் கழுவாய் தேடிக்கொள்கிறார். தான் பதிப்பித்த ஐங்குறுநூறு நூலைத் தியாகராச செட்டியாருக்குச் சமர்ப்பணம் செய்கிறார். பின் செட்டியாரின் நினைவாகக் கும்பகோணம் கல்லூரியில் ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு உபகாரச் சம்பளமாக ரூ 48 வழங்க ஏற்பாடு செய்கிறார். மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான்.  சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது.  வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத் திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள். திருக்குறளை சேக்கிழார் எழுதினாலென்ன? கம்பர் எழுதினால் நமக்கென்ன? என்று மொண்ணைச் சமூகத்தின் முழுமுதற் பிரதிநிதியாக நின்று வேடிக்கை பார்த்தது நம் அரசு. 

***

One Reply to “உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்”

  1. ஒற்றைத் தன்மையில் எதையும் பார்க்க வேண்டாம்… சி.வை.தா வின் பதிப்பு வரலாறு மூலம் இதை அணுகும்போது ஐயர் தான் தொகுத்த சிந்தாமணியை பதிப்பிக்க இயலாத நிலையிலிருக்கும் போது ஒரு அச்சகத்தில் காகிதங்களை கடனாக ஏற்பாடு செய்து தந்தது சி.வை.தா என தெரிகிறது. மேலும் உ.வே.சா. ‘என் சரித்திரம்’ எழுதும் காலத்தில் அவர் நிலையாக இல்லை என்பதும் சில அறிஞர்களின் கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.