உன் கைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்

உன் கைகளை எனக்கு மிகவும் பிடிக்குமென்கிறாய்
நம் கைகள் சேர்ந்திருக்கும் போது
கவனித்திருக்கிறாயா
மலையொன்று எதிரே எழுந்து
உடைந்து சிதறுவதை
ரயில் பெட்டியில் இருக்கைகள்
குழைந்து வழிவதை
அப்போது சேர்ந்திருப்பவை
விரல்கள் மட்டுமே
நாமும் கூட இல்லை
ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்
பேசுவதற்காக எழும் விரலை
அணைத்து அடக்குகிறது
திடீரென முளைக்கும்
இன்னொரு விரல்
கதகதப்புக்கு பதிலாக
நடுக்கம் வருகிறது
அதன்
உள்ளே குடைந்து பார்த்தால்
உட்கார்ந்திருக்கிறது மௌனம்
அழ ஆரம்பிக்கின்றன
தள்ளாடும் விரல்கள்
சுற்றிலும் இப்போது
எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள்
உள்ளிருந்து அழைக்கும் குரல்
நேரமாகி விட்டது எனும் போது
மலையொன்று
முன்னே வந்து சிரிக்கிறது
விரல்கள்
தனித்தனியாக ஏறி
குதிக்கலாம் என்று பிரிகின்ற போது
நாம் எழுந்து கொள்கிறோம்
தூக்கத்தின் வரைபடம்
~~~~~~~

பெரிய மகளின் தூளி
வடக்கு தெற்காக
சிறிய மகளின் தூளியோ
கிழக்கு மேற்காக
இரண்டையும் ஒரே நேரத்தில் ஆட்டுபவன்
X- அச்சிலும் Y -அச்சிலும்
வரைந்து கொண்டே இருக்கிறான் தூக்கத்தை
தூங்காத காலத்தின்
குட்டிக் குட்டிக் கட்டங்கள்
தரையெங்கும் விரிகின்றன
ஒவ்வொரு கட்டமாக பாடல் நிரம்பும் போது
எழுந்து பறக்கின்றன தூக்கத்தின் துகள்கள்
கண்களைச் சேரும் நேரம்
பொருந்தாமல் தப்பியோடுகிறது
பெரிய மகளின் தூக்கம்
பிடிக்க நகருகையில்
சொருகுகின்றன சிறிய மகளின் கண்கள்
X- அச்சின் தூளி நிற்குமிடத்தில்
நிரம்பி வழிகிற தூக்கத்தை
பெரிய மகளை நோக்கி நகர்த்த முடியவில்லை
அங்கே கலைக்கக் கூடாததாக மாறுகிறது
சிறு புள்ளியில்
நிலைகொண்டுள்ள அமைதி
Y- அச்சின் தூளிக்குப்
பாடலை ஊற்றுகிறான்
கீழே உள்ள கட்டங்களில் நகர்கிற தூக்கம்
பெரிய மகளின் முதுகைத் தட்டுகிறது
திடீரென மறையத் தொடங்கும் வரைபடம்
அந்தரத்தில் தொங்கும் தூளிகளிடம்
தூக்கம்
இப்போது
எந்தக் கட்டத்திலிருந்து
எந்தக் கட்டத்துக்கு செல்கிறது என்று
கேட்டுக்கொண்டே வெளியேறும் போது
கால்களை உதைக்கிறார்கள் இருவரும்
“தூளியை ஆட்டாமல்
தூங்கி வழிய வேண்டியது “
பின்தலையில் கொட்டும் வளையல் கையினால்
அடிவாங்கியபடியே
கனவிலிருந்து
ஓடுகிறார் கணக்கு வாத்தியார்
–இரா.கவியரசு