அறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்

சொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” (Roberto Bolaño) சிறப்பிதழாக வரவிருக்கிறது.

பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான ஸ்பானிஷ் இலக்கியவாதி என்று ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அது கண்டிப்பாக ரொபெர்டோ பொலான்யோவாகவே இருக்க முடியும். சிலே நாட்டவரான பொலான்யோ சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல இலக்கிய வடிவங்களில் தன் முத்திரையை ஆழமாகப் பதித்தவர். 1999 ஆண்டு ரோமுலோ கால்யேகோஸ் பரிசுக்கான தனது ஏற்புரையில் “இலக்கியம் அடிப்படையில் ஓர் அபாயகரமான பணி” என்று பிரகடனம் செய்த பொலான்யோ, காப்ரியெல் கார்சியா மார்கெஸ், ஒக்டாவியோ பாஸ் போன்ற பிரசித்தி பெற்ற ஆளுமைகளையும் மாய யதார்த்தம் போன்ற இயக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்யத் தயங்காதவர். “மேஜைக்கு அடியிலேயே போர்ஹெஸ்சைப் படித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதையும் என்னால் கழித்துவிட முடியும்,” என்று கூறியவர்தான், நாடு விட்டு நாடு தாவி, பாத்திரம் கழுவுபவர், போதைப்பொருள் அடிமை, சமூகப் போராளி என்று தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தவரும்கூட. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மரணத்தின் நிழலில், குறுகிய காலத்தில், தனது பெரும்பான்மையான படைப்புகளை எழுதி முடிப்பதற்கான கட்டாயம் அவருக்கிருந்தது. அவரது பெரும்படைப்பான ‘2666’ நாவல்கூட அவர் காலமான பிறகே (2003) பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘By Night in Chile’, ‘Savage Detectives’, ‘Amulet’ மற்றும் ‘2666’ இவரது முக்கியமான நாவல்கள். ‘Last Evenings on Earth’, ‘The Return’ சிறுகதைத் தொகுப்புகள், ‘Between Parentheses’ கட்டுரைத் தொகுப்பு மற்றும் ‘The Unknown University’ என்ற முழுக் கவிதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.