மகரந்தம்

கைகளும், கால்களும்

பானுமதி ந.

இடது பதம் தூக்கி ஆடுகிறார் தில்லையரசர். காளியனின் நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்கிறார் கண்ணன். களி நடம் புரியும் சக்தி காளியெனவும் காலெடுத்து ஆடுகிறாள்.

செந்தழல் பிறந்த தேவியின் கருங்குழல் பற்றிப் பாவி, வண்கழல் பொய் வீரர் சபையினில் ஏற்ற, ஆவி எரி தழல் வீழ் புழு போல் துடித்து, நாமம் கூவி, செறி கழல் நினைந்தாளின் மானம் காத்த கரம் பெண்களை என்றென்றும் ஆற்றுப்படுத்தும். இந்துக் கடவுள்கள், காக்கும் கரங்களோடு, ‘சரண்புகு’ என்று காட்டும் குறிப்போடு, ஆயுதங்களோடு, அமைதியைக் குறிக்கும் விரல் இணைவோடு, ஊழ்கத்தில் இருக்கையில் கோர்த்திருக்கும் கைகளோடு காட்சியளிக்கின்றன. தமிழ் நாட்டில் ஆவுடையார் கோயில் என்றொரு சிவஸ்தலம் உள்ளது. அங்கே அம்பிகையின் பாதங்கள் மட்டுமே அன்னையின் உருவாகிறது.

நீங்கள் அறியாத எதையும் நான் இதில் சொல்லப் போவதில்லை, மார்க் மோரிஸ் எழுதியுள்ள  விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர.

அவர்  ஒரு நடன இயக்குனர். ஓர் அறிவியலாளரைப் போலெல்லாம் அவர் கை, கால்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. கால் கொண்டு நடக்கும் உயிரினங்கள், கைத்திறன் மிகுந்தவைகள் ஆகியவற்றைப் பற்றிய பரிணாம வளர்ச்சியியல் அறிவைப் பற்றியும் பேசவில்லை. ஆனால், முக்கியமான தண்டிலிருந்து கிளம்பி உடலின் வெளிப் பகுதியாக விரிந்து சிறுத்து, குறுகும் இந்த நான்கு அங்கங்கள், அவை அளிக்கும் வியப்பு, கைரேகைகளும், நகங்களும், கை கால்களின் செயல் வல்லமையும் அவற்றின் முன்னிலைத் தன்மையும், சுழலும் அழகும், மர்மம் நிறைந்தவை மற்றும் வியப்பானவை என்று எழுதுகிறார்.

நாலில் தவழ்ந்து, நடந்து, ஓடிய உயிரினங்களில் நிமிர்ந்து நிற்பதைத் தேர்வு செய்த நம் இனம், கைகளை விடுதலை செய்து அதன் மூலம் எத்தனை செய்ய இயன்றது! கால்கள், உடல் தாங்கியாக, நம் பௌதீக இயக்கத்திற்குத் தோழனாக எப்படியெல்லாம் பங்காற்றுகின்றன.  ஒரு நதியைப் போல், ஒரு மரத்தைப் போல் எப்படி இவை பெரிய ஓர் எலும்பிலிருந்து, இரண்டிலிருந்து, பற்பல எலும்புகளிலிருந்து கிளைத்துப்  பிரிந்து வளர்ந்து நிற்கின்றன!

உங்கள் கால் கட்டைவிரலை மட்டும்கூட ஊன்றி நடனமாடலாம், கால்பந்தை எத்தலாம்; கை விரல்களால் மாவு பிசையலாம், கோலம் போடலாம், பூக்கட்டலாம், ஜெப மணிமாலையை உருட்டலாம், ப்ரெய்லி முறையில் படிக்கலாம்.

கால் விரல்கள் நம் சம நிலைக்கு உதவுகின்றன. கணுக்கால் சிக்கலான, எளிதில் உடைபடும் ஒன்று என்றால், கால் மூட்டி கூட அவ்வளவு நம்பிக்கைக் குலைவுதான்! ஏன் பயப்படவேண்டும்? மாற்றுக்கள் இருக்கின்றனவே!

வளைந்த பூப்பின்னல் வேலைப்பாட்டின் சித்திரம் போல் பாத நுனி ஒரு நடனத்தின் அசைவைக் காட்டும் எழில்; அழகான ஒத்திசைவோடு நடைபெறும்  அணிவகுப்பின் கால் எடுப்புகள்  எத்தனை இன்பம்! இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே, வேகமாக, மிக வேகமாக நடக்க, ஓட எல்லாவற்றிற்கும் கால்களே துணை. அறியாமல்கூட கால்களால் மிதித்து விடுகிறோம்! (அல்லது அப்படிச் சொல்லிவிடுகிறோம்.) அவை அழகோ, அழகற்றவையோ, செயல்படுவதில் ஆற்றல் மிக்கவை.

நேர்த்தி, அழகு, பலச் செயல் செய்யும் தன்மை, ஈர்ப்பும், வனப்பும் மிக்க தோள், முழங்கை, மணிக்கட்டு , கை விரல்கள் அனைத்துமே அபாரம். அதிலும் கை விரல்களின் செயற்திறனும், அமைப்பும் சொல்லித் தீர்வதில்லை. கைகள் அனாயாசமாகச் செய்யும் சைகைகளை முகங்கள் சற்றுச் சிரமத்துடன்தான் நெருங்கி வர முடியும். கலாச்சாரம் நாட்டிற்கு நாடு மாறுபடுகையில் கைகள் சொல்லும் செய்திகள் மாறுதலாகப் போய்விட வாய்ப்பும் உண்டு.  ‘இங்கே வா’, என்பதை ‘அங்கே போ’ எனப் புரிந்து கொள்ளும் அபாயங்களும் உண்டு.

கைகளின் அமைப்பு, சைகைகள்  உலகம் முழுதும் குறிகளாகவும், ஒரு கருத்தின் வடிவாகக் கொள்ளத் தக்கதாகவும், நடிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கின்றன. (ஓர் இந்தியக் கட்சியின் சின்னம் நினைவில் எழ வேண்டுமே?) எழுத, வரைய, சமைக்க, வாழ்த்த, ஆற்றுப்படுத்த, தட்டிக்கொடுக்க, தண்டிக்க, பகிர்ந்து கொள்ள, மையல் கொள்ளச் செய்யும் குறிகளைக் காட்ட, வண்டி ஓட்ட, இசை அமைக்க, அபிநயிக்க, நெரிசலைக் கட்டுப்படுத்த என்று அவை என்னதான் செய்யவில்லை?

நடனங்கள், நாட்டியங்கள், அவை பாரம்பரியமானவையோ , தற்காலத்தவையோ, மெருகும் நளினமும் கொண்டவையோ, அவற்றில் உணர்ச்சிகளையும், பொருளையும் உணர்த்துவதில் கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘நேற்று, இன்று, நாளை, ’ முக்கியக் கோட்பாடுகள், உண்மைகள், புனைவுகள், தந்திரங்கள், வயது, பாலினம் போன்றவற்றில் இலங்கும் மாறுபாடுகளைக் கைகள் நாட்டியத்திலும் நாடகத்திலும் இயல்பாக வெளிப்படுத்திவிடும். சமச் சீரான புஜங்களும் கைகளும் கட்டித்தழுவி அன்பைக் காட்டும் வண்ணம்தானே  அமைந்துள்ளன?

உலகம் உனது கைகளிலே; வேறென்ன வேண்டும் வாழ்வினிலே?

Ref:https://www. threepennyreview. com/samples/morris_sp20. html

மார்க் மோரிஸ் ஒரு நடன இயக்குனர். வெஸ்லி ஸ்டேஸுடன் அவர் எழுதிய நினைவுக் குறிப்பினை ஒட்டி இக்கட்டுரை தமிழில் எழுதப்பட்டது.

{கேஷவ் வெங்கட்ராகவன், புகழ் பெற்ற ஓவியர், அபயக் கரங்களால் கிரீடம் அமைத்து வரைந்துள்ள அற்புத ஓவியத்தை இங்கே பாருங்கள் – கைகளின் சிறப்பை எத்தனை அழகாக அமைத்துள்ளார்.

https://m. facebook. com/photo. php?fbid=10215684098830744&id=1090470507&set=a. 10214535231189771?sfnsn=wiwspmo&extid=IgGCu6B5AeTuXRD3}


உடலின் கதியே தாள வாத்தியமாம்

கோரா

உலகில் பயன்பாட்டுக்கு வந்த முதல் இசைக் கருவி மனிதக் குரலே. இசையின் பரிணமிப்பில் அடுத்த படியாக வந்தது கைகள், கால்கள், கற்கள், கட்டைகள் போன்ற மோதுகைக் (percussion) கருவிகள் மோதுவதால் உண்டாகும் இசை. மலைக் குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த ஆதி மனிதர்கள், உண்டது போக எஞ்சி இருந்த விலங்குத் தோலைப் பயன்படுத்திக் கண்டுபிடித்த முதல் இசைக் கருவி பறை என்ற பெயரில் இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது. பறை என்றால் பேசுதல் அல்லது தொடர்பு கொள்ளுதல். பறை ஓர் இயல்பான இசைக்கருவி எனப் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. (காலங்காலமாகத் தமிழகத்தில் பறையர் என்ற ஓர் இனமாக இருந்த பறை இசைப் பழகுநர்கள், 14-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சியின் போது தீண்டத்தகாதவர் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டது ஒரு அரசியல்.)

தற்போது சில நூறு ஆண்டுகளாக கிராமங்களின் சிறு தெய்வத் திருவிழாக்களிலும் , சவ ஊர்வலங்களிலும் மட்டுமே ஒலித்து வந்த பறை இசை, தற்போது புத்தாக்கம் பெற்றுப் பறை இசைக்குழுவாகப் பொது மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் தாள வாத்தியங்கள் என்று வகைப்படுத்தப்படும் தோல் வாத்தியங்கள் அனைத்துமே, விலங்குத் தோலைப் பயன்படுத்தி செய்யப்படுபவை. அவற்றிலும் பாகுபாடு உண்டு. மிருதங்கம் தெய்வீக இசைக் கருவியாகக் கருதப்பட்டு, மேட்டுக் குடியினரின் ஆதரவு பெற்றிருக்கிறது. அடுத்த படியில் உள்ள இடைப்பட்ட சாதியினர் தவில் பழகுநர்களாகவும், தலித்துக்கள் பறை பழகுநர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மற்றொரு வகைத் தாள வாத்தியம் (cymbal) உலோகத் தட்டுகளால் ஆனது. அதில் சாமக்கோலம் என்பது ஒற்றைத் தட்டை உலோகத் தடியால் அடித்து இசைப்பது. இரண்டு உலோகத் தட்டுகளை ஒன்றோடொன்று மோதி இசைப்பது ஜால்ரா எனப்படுகிறது. கோவில்களில் சங்கொலியுடன் சேமக்கோலம் இசைக்கப்படுகிறது. ஜால்ரா எல்லா இசைக் கச்சேரிகளிலும் துணை வாத்தியமாக நிலைத்து விட்டது.
செண்டை என்னும் தாள வாத்தியம் கேரளத்தின் பிரசித்தி பெற்ற இசைக் கச்சேரி. “பதினெட்டு வாத்தியங்களும் செண்டைக்கு தாழே” என்பது மலையாள சொலவடை. புகழ் பெற்ற கேரள நாடக வடிவங்களான கூடியாட்டம் மற்றும் கதகளிக்கும் கர்நாடகத்தின் நாட்டுப்புற நாடகமான யக்ஷ கானாவுக்கும் செண்டை வாத்தியம் இன்றியமையாதது . திருச்சூர் பூரம் திருவிழாவில் 50 அலங்கரித்த யானைகளின் ஊர்வலம் செண்டை வாத்தியம் முழங்க வருவது
கண்கொள்ளாக் காட்சி. கேரளத்தின் செண்டை மேளக் கச்சேரிகளில் மேளமும் தாளமும் சம அளவில் பங்கேற்பதால் இதற்குப் பெரிய ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டிலும் உருவாகியிருக்கிறது. சில பணக்கார வீட்டுத் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்புக்குச் செண்டை மேளம் வலியுறுத்தப்படுகிறது.

இந்திய இசை நிகழ்ச்சிகள் பொதுவாக எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கும் கதம்ப நிகழ்ச்சிகள். குரலிசை, மோதுகை வாத்தியங்கள் , துளை இசைக் கருவிகள் (wind instrumens), நரம்பு இசைக் கருவிகள் (stringed instruments), ஆகியவற்றுடன் சில வேளைகளில் நடனமும் சேர்ந்து கொள்ளும். ஒவ்வொரு வகை வாத்தியங்களிலும் தேர்ச்சி பெற்றோர் மேடையில் குழுவாக இருந்து வாசிப்பார்கள். துணை வாத்தியங்கள் இல்லாமல் மோதுகை இசைக் கருவிகள் மட்டும் ஒலிக்கும் இசை நிகழ்வுகள் மிகச் சில. முழுதும் மோதுகைக் கருவிகளை இசைக்கும் செண்டை மேளமும் குழு இசையே.

மேற்காணும் குறிப்புகள் தென்னிந்திய இசையில் மோதுகை இசைக்கருவிகளின் பங்கு பற்றியவை. நெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்துத் தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்). இயக்குனர் தன்னிரு கைகளையும் கால்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி ஒரு கலவை இசையை உருவாக்குவார். இசைக்குழுவில் (orchestra) பங்கேற்கும் போதும், தாள வாத்தியக்காரரே (percussionist) எல்லா மோதுகைக் குடும்ப வாத்தியங்களையும் இசைப்பார்.
இணைக்கப்பட்டுள்ள சுட்டி, அமெரிக்கன் டிரம் செட் உருவானதின் வரலாற்றையும் , வடிவமைப்பு நுட்பங்களையும் விளக்குகிறது.
https://www.threepennyreview.com/samples/iverson_sp20.html ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.