பிளாஸ்டிக் மறுசுழற்சி எனும் முதலியக் கபட நாடகம்
“ஆதாயமில்லாமல் செட்டியார் ஆத்தோட போவாரா?” – என்று நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு எதிரில் இருப்பவர்களை அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கண் சிமிட்டுவது தமிழர்களின் பழக்கம். இது பொருந்துகிற சூழல் எனக்கு உடனே நினைவுக்கு வரவில்லை. ஆனால் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். வணிகம் செய்வது சுய லாப நோக்கில் மட்டுமே, பிறர் நலம் பேணும் கொள்கை எதுவும் கிடையாது என்று அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். இது பெரு நிறுவனங்களுக்குப் பொருந்துமா, அவர்களுக்கு சமுதாயப் பொறுப்பு (corporate social responsibility-CSR ) வலியுறுத்தப்படுகின்றதே என்கிறீர்களா? பிளாஸ்டிக் மறு சுழற்சி என்னும் விவகாரத்தில் உலகின் மிகப் பெரிய எண்ணை நிறுவனங்கள் லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு கபட நாடகம் நடத்தி வருவது உங்களுக்கு தெரியவந்தால் அசந்து போவீர்கள்.

முதலில் பிளாஸ்டிக்கின் வரலாற்றுச் சுருக்கம்:
1899-ல் பாலிதீன் கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால்< பயன்பாட்டுக்கு வரவில்லை. அடுத்து 1907-ல் பேக்லைட் (bakelite) கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதுவே ஆதி பிளாஸ்டிக். (1960-களில் பெங்களூர் ITI கம்பெனி தயாரித்து இந்திய தபால்-தந்தி துறை சந்தாதார்களுக்கு வழங்கிய அடித்து உடைக்க முடியாத கருப்பு தொலைபேசியும் அக்கால மின் சுவிட்ச்சும் பேக்லைட்டால் செய்யப்பட்டவை.) பேக்லைட்டின் மூலப்பொருள் நிலக்கரி – தாரிலிருந்து பிரிக்கப்பட்ட ஃபினால் (phenol ) என்னும் ஒரு அமிலம். இதே அடிப்படையில் பலர் முயன்றதன் பயனாக 1929-ல் பாலிஸ்டைரீன் (polystyrene), 1930-ல் பாலிஸ்டர் (polyester ), 1933-ல் பி.வி .சி. மற்றும் பாலிதீன், 1935-ல் நைலான் எனப் பல கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. HDPE, PVC, LDPE, PP, PS என்ற பெயர்களில் நமக்கு அறிமுகமாகியுள்ள பிளாஸ்டிக் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவற்றின் உபயோகமும் வெவ்வேறு மாதிரி.
இரண்டாம் உலகப் போரின் போது, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கவே, அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளைச் சார்ந்த பெட்ரோ கெமிக்கல் கம்பெனிகள், பெரிய அளவில் கச்சா எண்ணெயில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் இயந்திரங்களை நிறுவி லாபமடைந்தனர். 1945-ல் போர் முடிவுக்கு வந்ததால் பிளாஸ்டிக் விற்பனையில் ஏற்பட்ட தேக்கத்தைத் தவிர்க்க நுகர் பொருள் தயாரிப்பில் நுழைந்தார்கள்.1948-ல் டப்பர் வேர் வகைவகையான வண்ணமய பொருட்களை அறிமுகப்படுத்தி நுகர்வோரைக் கவர்ந்தது. எல்லாம் பிளாஸ்டிக் மயமானது. இன்றைய உலகில் வேறெந்த பொருட்களிலும் இல்லாத குணநலன்களைக் கொண்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முடியுமே தவிர தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெளிவாகி இருக்கிறது.
இனி இக்குறிப்பின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கபட நாடகம் பற்றிப் பேசுவோம்.
கடந்த 40 ஆண்டுகளில் மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு 10% க்கும் குறைவானது .
1970 -களில் துறை வல்லுநர்கள், மேனிலை மேலாண்மைக்குக் கொடுத்த அறிக்கையில் “பிளாஸ்டிக் மறு சுழற்சி சாத்தியமற்றது, கடினமானது மற்றும் பொருளாதார ரீதியில் உகந்ததன்று” எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1980-1990 களில் சமூக ஊடக செயல் முனைப்பு காரணமாக மக்களுக்கும் ஆளுவோருக்கும் பிளாஸ்டிக் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
1980-களின் இறுதியிலிருந்து மறுசுழற்சியை ஆதரிக்கும் விதமாக, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் விளம்பரங்களுக்கும், மக்கள் தொடர்புக்கும், மறுசுழற்சித் திட்ட அறிவிப்புக்கும் கோடிக்கணக்கான டாலர் செலவழித்தார்கள். மறுசுழற்சி சாத்தியமானதே என்று அறிந்தால் பொதுமக்கள் சமாதானமாகி விடுவார்கள். அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டுத் தடையை தள்ளிப் போடும் என்ற எதிர்பார்ப்பில்தான் இது மேற்கொள்ளப்பட்டது.
ஏனெனில், இன்றைய எண்ணெய் விலைச் சரிவால் கிடைக்கும் லாபம் அவர்களுக்கு வேண்டும் . எண்ணெய் விலை தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும்போது, பிளாஸ்டிக் தொழிலைக் கைவிட்டு விட்டு வேறு லாபமான தொழிலில் இறங்குவார்கள். எதிர்காலத்தில் பிளாஸ்டிக்கின் மட்காமை, மறுசுழற்சி இயலாமை, பயோ பிளாஸ்டிக் இல்லாமை போன்றவற்றால் திண்டாடப் போவது பொதுமக்களே.
***
[குறிப்பு: குரங்குதான் என்றாலும் மனிதம் தொடர்ந்து மாற்று வழிகளை யோசித்த வண்ணமே இருக்கிறது. மாற்றுகள் எல்லாம் எப்போதுமே நன்மை பயப்பதில்லைதான். சில நேரம் அவை நெகிழியைப் போலக் கொஞ்ச காலத்துக்குப் பெரும் நன்மையாகத் தெரிந்து, படிப்படியாக பெரும் அவதியாக மாறவும் செய்கின்றன. மொத்த உயிர்வெளியையே அழிக்கும் ஆபத்தாகக் கூட மாறுகின்றன. ஏராளமான வேதிப் பொருட்கள், சாதனங்கள், ஊர்திகள் என்று 20 ஆம் நூற்றாண்டில் மனிதம் பெரும் தாவல்களைச் செய்ய உதவியவை 21 ஆம் நூற்றாண்டில் பெரும் ஆபத்துகளாகத் தெரியத் துவங்கியதற்குக் காரணம், குரங்குக்கு நெடுநாள் சிந்தனை அத்தனை எளிதாகக் கைவருவதில்லை என்பது ஒரு காரணம். நெகிழி (ப்ளாஸ்டிக்) மறுசுழற்சி என்பதை உலக முதலியம் எப்படி ஒரு பாசாங்காக, தன் அடாவடிகளுக்குத் திரையாகப் பயன்படுத்தியது என்று ஒரு குறிப்பை மேலே பார்த்தோம். அடுத்து வருவது மிகச் சமீபத்து நிகழ்வு, வேறேதோ இடத்தில் இன்னொரு மனிதக் குரங்குக் குழு நெகிழிகளை அழித்து மறு சுழற்சி செய்ய ஏதுவாக ஒரு தொழில் நுட்ப உத்தியைக் கண்டு பிடித்திருக்கிறது என்ற செய்தி கிட்டுகிறது. இது சாதகமான செய்தி, மகரந்தம் பகுதியில் இட வேண்டியது. ஆனால் இந்த உத்தியையும் சில நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன, அவற்றின் சொத்து இது என்பதாகச் செய்தி சொல்கிறது. எனவே இது குளக்கரைப் பகுதியிலும், மகரந்தம் பகுதியிலும் இடம் பெறக் கூடிய செய்தி. இருப்பினும் கருத்துத் தொடர்ச்சி கருதி, மேலே உள்ள குறிப்புக்கு மாற்றாக இருக்கட்டும் என்று இங்கே பிரசுரிக்கிறோம்.]
***
நெகிழிகள் (plastics) மலிவான, இலகுரக, நீடித்து உழைக்கும் வஸ்துக்கள். எளிதில் இதைக்கொண்டு பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு உகந்த விதவிதமான
சாதனங்களை பலப்பல வடிவமைப்புகளில் வார்த்தெடுக்கலாம். இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் நெகிழித் தயாரிப்பு பல மடங்கு உயர்ந்தது. பயன்படுத்தி வீசும் (use and throw ) கலாச்சாரத்தின் உச்சத்தில் அவற்றின் அதீதப் பயன்பாடே சூழல் பிரச்னைக்குக் காரணமானது.
கீழ்க்கண்ட இரு யதார்த்தங்கள் ஏன் இன்றைய நெகிழிப் பயன்பாடு தக்கவைத்துக்கொள்ள இயலாதது என்பதைத் தெளிவாக்குகின்றன.
1. உலகின் புதுப்பிக்கவியலா ஆற்றல் மூலங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் கிட்டத்தட்ட 4%, கச்சா எண்ணெய் வடிவில் நெகிழியின் மூலப்பொருளாக செலவாகிறது. மேலும் அதே மூலத்தின் 3-4%, நெகிழி உற்பத்திக்கான ஆற்றல் பெற செலவாகிறது.
2. ஒவ்வொரு ஆண்டின் நெகிழி உற்பத்தியின் பெரும் பகுதி, பயன்படுத்தி எறியப்படும் பேக்கேஜிங் பொருட்கள் அல்லது தயாரித்து ஒரு ஆண்டிற்குள் காலாவதியாகிக் கைவிடப்படும் பொருட்கள்.
ஏன் நெகிழி மறு சுழற்சிசெய்யப்பட வேண்டும் ?
தற்போது உலகளவில் 10-15% நெகிழி(பிளாஸ்டிக்)கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப் படுகின்றன. மீதியுள்ள 85-90%, நியமிக்கப்பட்ட ஒரு நிலப் பரப்பிலோ அல்லது அகற்றப்பட வேண்டிய குப்பையாக சூழல் நெடுகிலுமோ கிடந்து பல்லாண்டு வாழ்கிறது. அதிக அளவில் மறுசுழற்சி செய்யப்பட்டால் சூழல் தூய்மையாகும். பசுமையாகும். குப்பை நிரப்புப் பரப்புகள் காலியாகும். அவை மறு பயன்பாட்டுக்குக் கிடைக்கும். மிகக் குறைவான மாசில்லா நெகிழியே தயாரிக்கவேண்டியிருக்கும். புதுப்பிக்கவியலா ஆற்றலில் சேமிப்பு இருக்கும்.
எனினும் மறுசுழற்சி அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் தொழில் வல்லுநர்கள். கடினமானது, மூலதனம் நிறைய தேவைப்படும். மேலதிக உற்பத்தி செய்வது சாத்தியப்படாது என்கிறார்கள். அறிவியல் சார் தடைகள் கீழே சுருக்கமாக :
1. மறு சுழற்சி செய்யப்பட்ட நெகிழி தரம் குறைந்ததாக இருப்பதால் அதன் மதிப்பும் குறைந்து விடும். உதாரணமாக குடிநீர் பாட்டிலை மறுசுழற்சி செய்து, புது குடிநீர் பாட்டிலை உருவாக்க முடியாது. அதைக்கொண்டு மறுசுழற்சிக்குத் தகுதியற்ற தரைவிரிப்பு அல்லது போர்வை மட்டுமே தயாரிக்க முடியும் . நெகிழி ஒரேஒரு சுழற்சிக்கு மட்டுமே பயன்படும்.
2. மறுசுழற்சி நெகிழிக் குருணைகளுடன் (pellets), கணிசமான அளவில் மாசில்லாத புது நெகிழிக் குருணைகளை கலந்தால் மட்டுமே புதிய(மறு சுழற்சிக்குப் பயன்படாத) பொருளைத் தயாரிக்க முடியும். அதாவது மறுசுழற்சி நெகிழியோடு தேவையான மாசில்லா முதல் தர நெகிழி தயாரிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. மட்கக் கூடியவை என்ற விவரசீட்டு ஒட்டிய ஒரு-பயன்பாட்டுத் தட்டுகளும் பிற சாதனங்களும் நீடிக்கும்(sustainable) மாற்றாகாது. அவை மட்கக் கூடும் என்று சொல்லி விற்பது வெறும் வியாபாரயுக்தி. உண்மையில் பயோ-நெகிழிப் பொருட்கள் அதி வெப்ப தொழில் முறை மட்கும் வளாகத்தில் தான் மட்கி உரமாகும். வீட்டுப் பின்புறக் காம்போஸ்ட் குழிகளில் மட்கி உரமாகாது. பயன்படுத்தி வீசியெறிந்துவிடும் சௌகர்யத்திற்காக பணமும் கொடுத்து சூழல் சீர்குலைவை வரவேற்றுக் கொள்பவர் நாம் . .
அமெரிக்க நெகிழிக் கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்த சீனா , தற்போது அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது . சீனத்தைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்தன. இறக்குமதி அனுமதிகள் புதுப்பிக்கப்படாததால் அமெரிக்க நெகிழிக் கழிவுகள் இந்தியா வரவும் வாய்ப்பில்லை . இதனால் மறுசுழற்சி வேலைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறின. அங்கே பல மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சிக்குத் தேவையான ஆதார கட்டமைப்புகள் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேற்கூ றியவற்றின் சாராம்சம் : அதிக மறுசுழற்சி சாத்தியப்படாது . நெகிழிப் பயன்பாட்டை ஓரளவுக்கே குறைக்க முடியும் . பயோ -நெகிழியும் எளிதில் மட்காது . நெகிழிக்கு மாற்று வரும்வரை அல்லது நெகிழியை மட்கச் செய்யும் முறை கண்டுபிடிக்கப்படும் வரை நமக்கு அவதி தான்.
இவ்வளவும் படித்த பின், கீழ்க்காணும் சுட்டி தரும் தகவல்கள் உங்களுக்குக் கட்டாயம் மன நிறைவை அளிக்கும். அதன்படி:
இப்போது அறிவியலாளர்கள் ஒரு தழை உரக்குழியில் உருவாகி இருந்த பாக்டீரியா நொதியை ஆய்ந்து, அதில் சில பிறழ்வுகளை (mutations ) ஏற்படுத்தி, குளிர் பானங்கள் நிறைக்கும் PET பாட்டில்களை அவற்றின் ஆதார வேதியல் கட்டுமானத் தொகுதி வெளிப்படும் அளவுக்குச் சிதைக்கவல்ல நொதிகளாக மாற்றியிருக்கிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட நொதிகள் 10 மணி நேரத்தில் ஒரு டன் PET பிளாஸ்டிக் கழிவை 90% தரக்குறைவு செய்கின்றன.
இந்த சாதனையின் பின் நிற்கும் கம்பெனியான Carbios, இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெருந்தொழில் அளவில் PET நெகிழி மறுசுழற்சி செய்யும் முனைப்பில் இருக்கிறார்கள்.
[இரு குறிப்புகளையும் எழுதியவர்: கோரா ]