ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2

இயற்கை, வானிலை, போன்றவற்றில் கே.சி அதிகம் கவனம் செலுத்தக் கூடியவனலன் என்றாலும் மெச்சத்தக்கதை அவனும் மெச்ச வேண்டியிருந்தது. ஏனெனில் காலடியில் நிழலாக விரையும், மிதந்து செல்லும், பெரும் மேகக் கூட்டங்களும், அவனை எதிர்பாராத விதங்களில் சுழலடித்த காற்றும் அந்நாளை மிக அழகான ஒன்றாக உருமாற்றிக் கொண்டிருந்தன. பிரத்தியேக மனநிலையில் மட்டுமே பாட்டெழுதும் அவன், தனக்குள்ளேயே பாட்டு வரிகள் எழுதத் தொடங்கினான். 

அது ஒரு ஹைக்கூவைப் போலிருந்தாலும் அவனொரு முறைமையான கவிஞனாக இருந்திருந்தால் செய்திருக்கக்கூடிய அசை கூட்டுதலை அவன் செய்ய முற்படவில்லை.

Real is the crowd in the bleachers
என்று தொடங்கியது அவன் ஹைக்கூ. ஒன்றிரெண்டு தவறான அடிகளை எடுத்துவிட்டு அது மேலும் தொடர்ந்தது

No less real the clouds
Sailing by my combat boots.

கறாராக இருக்க வேண்டுமென்றால், முதல் வரி மெய்யானதல்ல. ப்ளீச்சர்களில் இச்சமயத்தில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை. ஜெத்ரோவும், சுற்றடுக்கு அரங்கத்தின் மேல்வரிசை கல்திண்டுகளில் நீல வானத்திற்கும் அகலமாக விரியும் மேகங்களுக்கும் எதிராக நிழற்படங்களைப் போல் காட்சிதரும் அரை நிர்வாண உடல்களுடன் தாய்-சீ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இரக்கோயர்கள் மட்டுமே இருந்தார்கள். 

ஃபிரெட்டி கே.சியை தாய்-சீயில் ஆர்வப்படுத்த முயன்றான். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அது பலிக்கவில்லை. ஃபிரெட்டி இப்போது எங்கு இருக்கிறான் என்று இவன் சிந்திக்கத் தொடங்கினான். கடைசியாக கிடைத்த தகவலின்படி பிலோக்ஸியில், அடித்துத் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தில் இருப்பது போலிருந்தது. ஒரு வழியாக பால்மாற்றம் செய்து கொண்ட பின்னர் சொல்லி வைத்தாற்போல் தப்பான ஆசாமியொருவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். விதியின் விளையாட்டைப் பற்றி என்ன சொல்ல. எது எப்படியோ, அவனோ அல்லது அவளோ அனேகமாக இன்னமும் உயிருடன் இருக்கக்கூடும். அது கார்டனைக் காட்டிலும் எவ்வளவோ மேல், அவன் ஏர்லி டெத்தில் தாளத்தை முன்னெடுத்துச் செல்லும் ரிதம் கிட்டாரை வாசித்தவன். அளவிற்கு அதிகமாகவே ரஷ்யன் ரூலெட் விளையாடியவன். லின்னட் கவுண்டி திருவிழாவில் 4-H கட்டிடத்தின் மேடையிலேயே ஒரு முறை விளையாடினான், அந்த விசிறிகளுக்கு கண்டிப்பாக கொடுத்த பணத்திற்கு மேலாகவே வசூலாகியிருக்கும். இப்போது அக்கூச்சல்களும் குதூகலமும் கடந்த வருடத்து பனியைப் போல் வெறும் மிகையான கடந்த காலத்துக்கான ஏக்கம் மட்டுமே. 

கூட்டுக் களவாணிகளாக இருந்த இடத்திலிருந்து இத்தனை தூரத்தில் ஜெத்ரோவை அகஸ்மாத்தாகச் சந்தித்தது முதலில் ஆச்சரியமளிக்கும் உடன்நிகழ்வாகவே இருந்தது. ஆனால் நிஜ வாழ்வில் உடன்நிகழ்வுகள் கிடையாது, வலையமாக்கம் மட்டுமே. கே.சி தொங்கு சேணத்தில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும்போது, எப்படி ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் நிகழ்த்தப்படும் வருடாந்திர ஆற்றுகைக் கலைத் திருவிழாவின் முதல் விழாவில், முக்கியமான ஆற்றுகைகளில் பங்கேற்பதற்காக கே.சி தொடர்பு கொள்ளப்பட்டதெல்லாம் தன் முனைப்பாலேயே நிகழ்ந்தது என்பதை ஜெத்ரோ விளக்கினான். முதலில் நம்பிக்கையில்லாதது போலிருந்த பிரொஃபெஸர் ஹாட்ச், ஜெத்ரோ கே.சி லிபர்டியுடனும் ஜஸ்டிசுடனும் செய்யும் ஆற்றுகையை விளக்கியவுடன்தான், அதை விழாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு ஒப்புக் கொண்டார். பணம் கொடுத்து இந்த ஆற்றுகையை எவருமே இதுவரையில் பார்த்ததில்லை என்பதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம்: வெற்றுத் தாளில் அதைப் படிக்க மட்டுமே செய்தால்கூட, அது ஒரு மிகச்சிறப்பான கருத்துருவாக்கம், என்பது வெளிப்படையாகவே புலப்படும் என்பதை நிலைநாட்டுவதற்காக, யூடோபியா இன்கார்ப்பரேட்டிற்கு மூட்டைகட்டி அனுப்பப்படுவதற்கு முன் அவன் உதவியுடன் கலைகளுக்கான தேசிய அறக்கட்டளைக்கு கே.சி சமர்ப்பித்த விண்ணப்பப் பிரதியைக்கூட தேடியெடுத்து காண்பித்தான். அதன்பின் பிரொஃபெஸர் ஹாட்ச் மரியாதை கலந்த பாராட்டுணர்வை வெளிப்படுத்தினாலும் அவரது நண்பர் ஆலிஸனே, தலைகால் புரியாமல் மிதமிஞ்சிய ஆர்வத்தை வெளிப்படுத்தினார் என்று ஜெத்ரோ கூறினான். “டார்லீன் (அதுவே பிரொஃபெசரின் இயற்பெயர்) இந்த பையனை நாம் இங்கு கொண்டு வந்தே ஆக வேண்டும். அவனிடம் ஏதோவொரு மூலப்படிவத்தன்மை இருக்கும் போலிருக்கிறது,” என்று கூறிய ஆலிசனே உண்மையில் அங்கு அனைத்து முடிவுகளையும் எடுத்தார் என்றும், என்னதான் பிரொஃபெஸர் ஹாட்ச் தாட்பூட் என்று தனது அதிகாரத்தை வெளியே காட்டிக் கொண்டாலும், பல சமயங்களில், வின்னிபாகோவிற்குள்ளேயே இருக்க முற்படும் ஆலிசனின் ஆணைகளையே பின்பற்றினார் என்று ஜெத்ரோ கருதினான். 

ஆக கே.சி, விதி மற்றும் ஆலிசனின் ஆணைப்படி பிரபல்யத்தின் மின்னலால் தாக்கப்படுவதற்காக நியூ யார்க் மாநிலத்தின், சல்லிவன் கவுண்டியின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தலைகீழாக தொங்கியபடி காத்திருந்தான். கேரென் ஃபின்லி அல்லது டேவிட் வாய்நாரவிச்சைப் போலொரு வரம்புகளை மீறும், பழம் வகைமைகளை தகர்க்கும், கூரையே கீழே விழுமளவிற்கு பலத்த கைத்தட்டல்களைப் பெறும் நட்சத்திரக் கலைஞனாவதற்கு விதிக்கப்பட்டிருந்தான் என்பதை கே.சி எப்போதுமே அறிந்திருந்தான். 

நாலு வயதிலிருந்தே, லாண்டிரோமாட்டில் பூனைக்குட்டிகளுக்கு நிகழ்ந்த விபத்தில் (அதை அப்படி அழைக்க முடியுமென்றால்) தொடங்கி அவன் வாழ்வு அதன் முழுமையில் இத்தருணத்தையே சுட்டிக் கொண்டிருந்திருக்கிறது. ஃபிரான்ஸில் முன்னொரு காலத்தில் ரிம்போ, இப்போது கே.சி. தொலை நோக்கில், மானுட உளத்தின் மீது யார் அதிகம் தாக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதை யாரால் நிச்சயமாக கூற முடியும்? மகோன்னதத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிறான் கே.சி: தனது பற்குழி நிரப்பிகளில்கூட அவனால் இதை உணர முடிந்தது. 

திடீரென்றடித்த வன்காற்று கே.சியை சுழற்றியதால் (தொங்கு சேணத்திற்கு சுழல் பூட்டாணி இருந்ததால்) அவன் மீண்டும் ஸ்லாட்டர் ராக்கை நோக்கி திருப்பப்பட்டான். அங்கே, ஒரு வழியாக, அரங்கத்திற்கு இட்டுச் செல்லும் கானகப் பாதையில், பஸ்ஸை விட்டு இறங்கியிருந்த விமரிசகர்களை பிரொஃபெஸர் ஹாட்ச் ஒன்றுதிரட்டி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவரது வினோதமான உச்சந்தலையில் பெரிய சாம்பல் நிறத்து டோனட்டொன்று கவிழ்ந்திருப்பது போல் காட்சியளித்த சிகைப்பாங்கு, அவரை இந்த தூரத்திலும் அடையாளப்படுத்தியது. 

விமரிசகர்கள் மீள்-நிகழ்த்துனர்களை வியப்பதற்காக நின்று விட்டிருந்தார்கள். மீள்நிகழ்த்துனர்கள் தங்கள் ஈட்டிகளையும் டாமாஹாக்குகளையும் சுழற்றியபடி காயமுற்றிருந்த குடிப்படைகளை மீண்டும் கொன்று கொண்டிருந்தார்கள். கிருஸ்துமஸ் காலத்து பல்துறை அங்காடி சன்னல்களில் கடிகாரத்தின் துல்லியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் எல்ஃபுகளை நினைவுறுத்தும் வகையில் ஆலிஸன் அக்காட்சியை வடிவமைத்திருந்ததால் அதற்கொரு பாலே நிகழ்வின் அடக்கமான பவித்திரம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னாலிருந்தும் பக்கத்திலிருந்தும் பார்க் வளாகத்தில் நுழைகையில் ஃபிரொஃபெஸர் ஹாட்ச்சை வரவேற்ற காவலாளரைப் போல் உருமறைவுச் சீருடை அணிந்திருந்த காவலாளர்கள் விமரிசகர் கூட்டத்தை சூழ்ந்திருந்தார்கள்.

காற்றின் திசைமாற்றத்தால் கே.சி சுழற்றப்பட்டதால் அவனால் ஸ்லாட்டர் ராக்கையும், வந்துகொண்டிருக்கும் விமரிசகர்களையும் மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனது வலது தோள்பட்டை கொடிக்கம்பத்தின் மீது மோதினாலும் அவனால் தனது கபாலத்தை பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. சொல்லி வைத்தது போல் அதே கணத்தில் அவனது செவிபேசிகள் நிலைமின்னி உயிர்த்தன, “கே.சி, ஆலிஸன் பேசறேன், நான் பேசுது கேக்குதா?”

“ஹலோ ஆலிஸன், ஒரு வழியா கூப்பிட்டீங்க, இங்க ஒரு சிக்கல்.”

“கே.சி? கே.சி, கேக்குதா? அடப்பாவமே, பைனாக்குலர்ல நீ உதட்டசைக்கறத பாக்க முடியுது. ஆனால் சத்தம் வரமாட்டேங்குது.”

“அய்யோ, என்ன இக்கட்டுல மாட்டி விட்டுடாதீங்க. உங்களுக்கும் கேக்குதுங்கறது எனக்குத் தெரியும்,”

“எப்பவுமே ஏதாவது ஒரு குளறுபடி இருந்துகிட்டேதான் இருக்குது இல்ல?” 

 தகர்க்க முடியாத இனிமை தோய்ந்த குரலில் ஆலிசன் மேலும் தொடர்ந்தார். “பரவால்ல, அடிச்சு புடிச்சு செஞ்சிருவோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போவுது. என்னளவு பதற்றம்தான் உனக்கும். கலைக்காக என்னலாம் செய்யறோம் பாரு!”

நாகப்பாம்பின் குறுவடிவமாக காட்சியளித்த மைக் அவன் வாயின் வலப் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அது வேலை செய்யாமலிருக்கலாம் என்ற சாத்தியத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒருக்கால் ஆலிசன் தன்னிடம் பொய் சொல்லிருக்கலாம் என்று சந்தேகித்து, தொலைகாட்சி ஆங்கராவதற்காக எடுத்துக் கொண்ட வகுப்புகளில் பயன்படுத்த வேண்டியிருந்த மிகைப்படுத்தப்பட்ட தெளிவுடன் மைக்கில் பேசத் தொடங்கினான்; ஏதோ முறுமுறுப்பான அந்த உச்சரிப்பின் மாயத்தால் தொழில்நுட்பச் சிக்கல்கள் போக்கப்படும் என்ற நம்பிக்கையால். “ஆலிசன் இங்கவொரு சிக்கல். என் அருமை நண்பன் ஜெத்ரோ நகைச்சுவைங்கற பேர்ல் என் கால வார முடிவு செய்திருக்கிறான் போலிருக்கு. அவன் எனக்கு மாட்டிவிட்ட கைவிலங்குகள் நான் அவன்கிட்ட கொடுத்த கைவிலங்குகள் இல்ல. இதுல விற்சுருள் இருப்பதாகத் தெரியவில்லை. என்னால அதுலேந்து விடுவித்துக்கொள்ள முடியல்ல. நான் சொல்லுது உனக்கு கேக்குதா?”

“நீ ஏதோ பேசறாப்ல இருக்கு, இல்லயா? ஆனால் என்ன சொல்றங்கறது சுத்தமா கேக்கல. கலைஞனின் நிர்ந்தர சாபக்கேடு!”

“செத்தேன்!” என்று உணர்ச்சிவசப்பட்டான் கே.சி.

“டார்லீன் பார்க்க முடியாட்டாலும் அவர் பேசறது நல்லா கேக்குது- வரலாற்றை ஸ்லாட்டர் ராக்கிற்கு இட்டு வந்த நிகழ்வுகள நம் விருந்தினர்களுக்கு இரொக்காய் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து அவர் விவரித்துக் கொண்டிருக்கார். ஆனால் அதற்கு நேர்மாறா உன்ன என்னால பார்க்க மட்டும்தான் முடியுது. உன் மைக்க சரி பண்ணனும்னுதான் நானும் ஆசப்படேறன். ஆனா உன்ன கீழ இறக்கி, அத சரி செஞ்சு உன்ன திரும்பியும் மேல ஏத்தறதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல. மேலும் உன் நிகழ்ச்சியில் உன் முதல் பிரவேசித்தலே மிக அதிர்வூட்டுவதாக இருக்கும். நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் இல்ல? நான் எப்பவுமே இப்படிதான், கர்டன் மேல போறதுக்கு முன்னாடி கதிகலங்கிடுவேன். நீ எப்படி? நான் அத “அக்கணம்”னுதான் அழைப்பேன். மேடை பயம்னு சொல்ல முடியாது. பிரத்தியேகமான, மிகவுமே முக்கியமான ஏதோ ஒன்னு நடக்கப்போறா மாதிரி ஒரு உணர்வு. எப்படின்னா — ஒரு நிமிஷம், டார்லீன் ஏதோ சொல்லற மாதிரி இருக்கு.”

ஹெட்ஃபோன்கள் சிறிது நேரத்திற்கு ஒலியற்று அமைதியாக இருந்தன. அவற்றைப் போல் தன் சிந்தனைகளையும் ஒடுக்க கே.சி முற்பட்டான். ஏதோ சரியில்லை என்பதை அவன் அனிச்சையாகவே உணர்ந்திருந்தான். ஆலிசன் சற்று கிறுக்குத்தனமாக இருப்பது ஒரு பிரச்சனையல்ல. உலகம் கிறுக்கர்களால் நிரம்பியிருக்கிறது என்பது திண்ணம். ஆனால், விழா தான் எதிர்பார்த்த எளிய மோசடியை விட சற்று சிக்கலானதாக இருக்குமோ என்று தற்போது தோன்றியது. என்ஈஏ நிதியில் கொழுத்த விரலால் பூஷ்வாக்களுக்கு, அதாவது பணம் கொடுத்து டிக்கட் வாங்கியவர்களுக்கு, பெப்பே காட்டுவதற்கான சந்தர்ப்பம் என்பதற்கும் மேல் விழா நடத்துனர்களுக்கு வேறொரு திட்டமுமிருக்கலாம் என்று தோன்றியது. 

இல்லையென்றால், ஜெத்ரோ மேல்வரிசை கல் திண்டுகளில் உட்கார்ந்து கொண்டு கே.சி இருக்கும் திசையில் நிஜமானதுதானோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும் ஒரு துப்பாக்கியிலிருந்து ஏன் கற்பனை தோட்டாக்களை சுட்டுக் கொண்டிருக்கிறான்? குறியெடுப்பது போல் பாவனை 

செய்துவிட்டு, இந்தத் தொலைவில் கேட்க இயலாத ஒரு துமீல்!-ஐ உச்சரித்துவிட்டு துப்பாக்கிக் குழலை சட்டென்று மேலே உயர்த்தினான். கே;சி அவர்களது நட்பை பரிசீலிக்கத் தொடங்கினான். ஜெத்ரோ சக கலைஞன். ஆதர்சமான உலகில் திருடர்களுக்கிடையே நாணயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஜெத்ரோவிற்கு கே.சிக்கு மீது கோபம் இருக்கலாம். நீதிமன்றம் அவனை உள்ளே தள்ளுவதற்கு பதிலாக யூடோபியா இன்கார்பரேடட்டில் நச்சு நீக்கிக் கொள்ளும்படி ஆணையிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு முன் கே.சி தன் நெடுநாள் நண்பனை பார்க்க நேர்ந்த இரவொன்றில் அவன் பித்து பிடித்தது போல் படைகலன்களை ஏந்துவதற்கான தனது உரிமையை நிலை நாட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவன் துமீல்களுடன் நிஜத் தோட்டாக்களும் விரைந்தன. அவை கே.சி உட்பட பல நிஜ மனிதர்களை நோக்கி குறி வைக்கப்பட்டிருந்தன. சிலசமயங்களில் போலீசை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும்கூட, மற்ற விஷயங்களில் தர்க்கரீதியாக சிந்திக்கக் கூடிய மாஜி குற்றவாளிகளுக்கு போலீஸை அழைத்தவர்கள் மீது ஒரு கோபம் இருக்கத்தான் செய்கிறது. 

சிறிது காலத்திற்கு முன் அவனது தொடர்ந்து கொண்டிருந்த சிகிச்சையின் பேரில் தோட்டா துளைகளுக்காக மன்னிப்புக் கேட்டு அதற்காக பரிகாரம் செய்ய விரும்புதாக கே.சிக்கு மின்னஞ்சல் செய்திருந்தான். ஆனால் அவ்வளவு நேர்மையாக மெய்யுணர்வுடன் தொனித்த அக்கடிதம் அவ்விஷயம் குறித்த ஜெத்ரோவின் அறுதியான உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை என்றால்? பழிவாங்வதற்கான சந்தர்ப்பத்திற்காக அவன் காத்துக் கொண்டிருந்தால்? புதிதாக கிட்டியிருக்கும் அவனது நண்பர்கள் அவர்களுக்கே உரித்தான கிறுக்குத்தனமான காரணங்களுக்காக அவனது வஞ்சினத்திற்கு துணை போக சம்மதித்திருந்தால்?

ஆலிசனின் குரலை மீண்டும் கேட்க முடிந்தது. “திரும்பவும் நான்தான்,” என்று குதூகலமாக ஆரம்பித்து, “கவலைப்படாத. எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. பிரச்சினையில்ல. என்ன நம்ம விருந்தினர்ல ஒருத்தர் பஸ்சுக்கு திருப்பிப் போகணும்னு அடம் பிடித்தார். நாம அனுமதித்திருந்தாலும் அவரால் இப்போ திரும்பிப் போயிருக்க முடியாது. ஆனா டார்லீன் எல்லாத்தயும் அவங்க கட்டுப்பாட்டில வெச்சிருக்காங்க. வாய்ஸ் விமரிசகர், அவரயெல்லாம் நிகழ்ச்சிய பார்க்காம திரும்பிப் போக விட்டுருவோமா என்ன? ஆண்டவா! அதுவும் டைம்ஸ்-லேந்து யாருமே வரல்ல என்ற பட்சத்தில. அதுகூடவா தெரியாம இருக்கும். அதுவும் அவ்வளவு வாக்குறுதிகள கொடுத்ததுக்கப்புறம். என்னத்த சொல்ல. விமரிசகர்கள்!”

“இந்த நிகழ்ச்சிலேயே நாம எதுக்காக அதிகம் செலவழிச்சிருக்கோம் தெரியுமா? சாப்பாட்டுக்கு! விளையாட்டுக்கு சொல்லல்ல! ஒவ்வொரு பஸ்லயும் ரெண்டு பெட்டி ஷாம்பேன் இத்யாதி கொண்டு வர வேண்டியிருந்தது. ஆனா இவ்வளவு பணம் செலவழிச்சு, பஸ்லாம் அரேஞ்ச் பண்ணி கைகால எல்லாம் பிடிக்கலன்னா நம்மளப் போல பயந்தாங்கொள்ளிகளத் தவிர இங்க யாருமே வந்திருக்க மாட்டாங்க. நியூ யார்க் விமரிசகருக்கு ப்ரூக்லினே ஊர் பேர் தெரியாத இடம். என் ராசி, வாழ்க்கை முழுதும் இப்படித்தான் போய்கிட்டிருக்கு. ஆனா இனிமேல் அப்படி இருக்காது. யாராவது ஒருத்தர் ஒரு கோட்ட கிழிக்கணும்ல. இது வரைக்கும் சரி, ஆனா இதுக்கு மேல் முடியாது அப்படீன்னு. உண்மையாவே வாழ்க்கை அப்படி ஒன்னும் நீண்டது இல்லையே.”

ஆலிசன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால், அவர் மூச்சுவாங்கிக் கொண்டிருப்பதை கே.சியால் செவிபேசிகளில் கேட்க முடிந்தது. இஞ்சினிற்குள் அதிகம் பெட்ரோல் நிரம்பிவிட்டதால் ஸ்டார்ட் செய்ய முடியாத காரைப்போல் அவர் ஒலிக்கத் தொடங்கினார். 

ஆலிசன் மேலும் மேலும் ஆக்ஸலரேட்டரை அழுத்திக் கொண்டிருக்கையில் விமரிசகர்கள் அரங்கினுள் வரத் தொடங்கினார்கள். அவர்களுள் ஒருவர், காவலாளர்களால் – அவர்கள் இப்போது இடங்காட்டிகளாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்- அவரை நிருபர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசைகளின் மத்தியில் அமரக் கட்டாயப்படுத்தியதால் குய்யோ முய்யோவென்று கத்தி ஆர்ப்பரித்து, அரங்கில் வேறெவருமே இல்லாததால் தான் ஏன் மேல்வரிசைகளில் உட்காரக் கூடாது என்று வாதாடினார். ஜெத்ரோவைத் தவிர்த்தால் அவர் கேட்பதில் நியாயமிருந்தது. அவனோ தன் கற்பனைக் குறிசுடுதல் பயிற்சிகளை முடித்துவிட்டு பத்மாசனம் செய்யும் தோரணையில் கண்களை மூடியபடி ஹரே காலி, காலி ஹரே என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.

ஆம்ப்ளிஃபையர்களின் க்ரீச்சிடலும் ஜிம்மி ஹென்ரிக்ஸின் “ஸ்டார் ஸ்பாங்கில்ட் பானரும்” விவாதக் குரல்களை மூழ்கடித்தன. திடீரென்று எங்கிருந்தோ அச்சுற்று வட்டாரத்தின் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் ஒன்று வெளிப்பட்டது. பில்கிரிம் தாய் தந்தையர்களாக உடையணிந்து, கிளிஞ்சல் தொப்பிகள் மற்றும் கவிகைகளுடன், ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீதத்துடன் அவர்கள் உடன்பாட முயற்சித்தார்கள்.

ஹென்ரிக்ஸின் இசை தேய்கையில், ஒலிபெருக்கப்பட்ட ஆலிசனின் உச்சஸ்தாயி குரல், “ஃபோர்ட் டஸ்டன், நியூயார்க்கிலிருக்கும் பெஞ்சமின் டஸ்டன் ஆரம்பப் பள்ளியிலிருந்து வரும் பதின்மூன்று காலனிகளை வரவேற்க மாட்டீர்களா!” என்று அறிவித்தது. அவர்கள் முன் நிமிர்ந்து நின்ற பதின்மூன்று குழந்தைகளை விமரிசகர்கள் கடமையுணர்வுடன் கைதட்டி வரவேற்றார்கள். பார்வையாளர்களை அமைதிப்படுத்தி தக்க வழியில் நடந்து கொள்ள ஊக்குவிப்பதற்கு குழந்தைகளை மேடையேற்றுவதை விடச் சிறந்த உபாயமில்லை. குதிரைகளும் நாய்களும் இதற்கு விதிவிலக்கு. மேலே உட்கார விரும்பிய விமரிசகர் பெண்மணி இப்போது அவர் உட்கார வேண்டிய வரிசையிலேயே தொம்மென்று தன்னை இருத்திக் கொண்டு ஏளனப் புன்னகையுடன் பதின்மூன்று குடியேற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தார். குடியேற்றங்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக மேடையை விட்டு வெளியேறி மேல் வரிசைகளுக்குச் சென்று விமரிசகர்களை தளர்வான ஒரு முட்டைவடிவில் சூழ்ந்து கொண்டார்கள். ராபர்ட் ஃபிராஸ்டின் “Mending Wall” கவிதையை உணர்ச்சிகரமாக ஆலிசன் வாசிக்கத் தொடங்கினார். “Something there is that doesn’t love a wall” இத்யாதி. கவிதை மொழியப்படுகையில் காவலாளர்கள் வியக்கத்தகும் துரிதத்துடன் குழந்தைகளுக்கும் விமரிசகர்களுக்கும் இடையே சுருள் கம்பி முள் வேலியாலான ஒரு நிஜச் சுவற்றை எழுப்பினார்கள். சுவர் கட்டுதல் தங்களைக் கடக்கையில் ஒவ்வொரு குழந்தையும், சிறுவனோ சிறுமியோ, “Old Glory” என்றழைக்கப்பட்ட அமெரிக்க கொடியின் சிற்றுருவமொன்றை உயர்த்தி, தான் எந்த காலனியின் பிரதிநிதி என்பதையும் அறிவித்தது. குட்டி டெலவேர் மட்டுமே தன் வரியை சற்று சொதப்பி விட்டது. 

” அதோ, அவர்களைப் பார்த்தாயா டார்லீன், உன்னிடம் நான் அப்போதே சொன்னது போல், நமக்கு கட்டுப்பட்ட பார்வையாளர் கூட்டத்தை,” ஒலிபெருக்காத குரலில் செவிபேசி வழியே ஆலிசன் கூறினாள். 

“ஆமாம், நீ சொன்னது சரிதான். அப்படியே உட்கார்ந்து விட்டார்கள். வியப்பாக இருக்கிறது,” ஃபிரொஃபெஸர் ஹாட்ச் பதிலளித்தார். 

“இப்படி நடந்து கொள்ளத்தானே அவர்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்? கண்ணுற்றது தன்னைக் குழப்பி, அதிர்ச்சியளித்து நிலைகுலைத்ததென்று எந்தவொரு விமரிசகருமே ஏற்றுக் கொள்ள மாட்டார். மேலும் அந்த செல்லக் குழந்தைகளின் வளையம் அவர்களை சுற்றியிருக்க, போதாதற்கு ராபர்ட் ஃபிராஸ்ட் வேறு…”

“அதை நீ அருமையாக ஒப்பித்தாய் மை டியர்.”

“நன்றி. அந்தக் கவிதை எப்போதுமே எனக்கு விருப்பமானதாக இருந்திருக்கிறது. என்ன, இந்தக் குழந்தைகள் இறுதி வரையிலும் இங்கிருக்கக் கூடாதா என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.”

“முடியாது. இதையெல்லாம் நாம் ஏற்கனவே பேசிவிட்டோம். சில கேளிக்கைகள் உண்மையிலேயே சிறுவர்களுக்கு பொருத்தமானதல்ல. எது எப்படியோ, அந்த பதின்மூன்று செல்லக் குடியேற்றங்களும் இப்போது தங்கள் ஸ்கூல் பஸ்சில் மீண்டும் பயணித்துக் கொண்டிருப்பார்கள். பஸ் இப்போது ரூட் 97-னின் ஏதோவொரு நீட்டத்தில் விரைந்து கொண்டிருக்கும். “cara mia” என் செல்லமே, சொன்னால் நம்பு, அவர்கள் இவ்விரவை எப்போதும் மறக்க மாட்டார்கள். எக்காலத்திற்கும் அவர்களுடன் அது வாழ்ந்து கொண்டிருக்கும்.”

“எக்காலத்திற்கும் என்பது எவ்வளவு அருமையான வார்த்தை. எக்காலத்திற்கும் அதற்கும் கூடுதலாக ஒரு நாளிற்கும்,” ஆலிசன் கிசுகிசுத்தாள். 

அதற்குப் பின் ஒரு சத்தம், அதை ரேடியோ வழியே கே.சி கேட்டிருந்தானென்றால் முத்தத்தின் சத்தம் என்றே வரையறுத்திருப்பான். அவன் கேட்டுக் கொண்டிருப்பது அவர்களுக்கு தெரியுமா? தெரிந்தால்தான் என்ன?

“கே.சி, நீ இன்னும் இருக்க இல்ல?” அவன் எண்ணத்தை படித்து விட்டது போல் ஆலிசன் கேட்டாள். “ஓ! எனக்குத் தெரியும் உனக்கு வேற வழியில்லன்னு. ஆனா நான் உன்ன கேலி பண்றேன்னு நெனச்சுக்காதே. உடல்சார்ந்த விசயத்தில் உன் தைரியத்தின் மீது எனக்கு உண்மையிலேயே நிறைய மதிப்புண்டு. எனக்கோ அது சுத்தமா கிடையாது. உன் நண்பன் ஜெத்ரோ கூறினான், தேவதைக் கதையில் வர பையனப் போல பயத்தையோ கூச்சத்தையோ உன்னால உணரக்கூட முடியாதுன்னு. நான் அதுக்கு நெரெதிர். சில சமயத்துல, பார்க்கப்படுவதை, டார்லீனால் பார்க்கப்படுவதைக்கூட என்னால் சகிச்சிக்க முடியாது. இரண்டு இடது பாதங்கள், பத்து கட்டை விரல்களை வைத்துக் கொண்டு நாட்டியக்காரியாக ஆனது எனக்கு எப்படிப்பட்ட திருப்புமுனையாக இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாரு, ஒவ்வொரு ஆற்றுகையின் போதும் தற்கொலைதான் செய்து கொள்ளப் போறேன்னு தோணும். சொல்லப்போனா, இதோ இப்ப கூட நாம இங்க அதத்தானே செஞ்சுகிட்டிருக்கோம்!”

“உடல் ரீதியா உனக்கு சிக்கல் ஏதாவது இருந்திருக்கா கே.சி? உதாரணமா நீ ஹெச்ஐவி பாஸிடிவா?”

கே.சி இல்லை என்று தலையாட்டினான்.

Custer’s Last Stand from the Battle of Little Bighorn; lithograph, 1876. (Photo by GraphicaArtis/Getty Images)

“இல்லயா?” பார்க்கிங் லாட்டிலிருந்து அரங்கிற்கு வரும் பாதைக்கு குறுக்கே ஒரு அணையைப் போல் நின்று கொண்டிருந்த வின்னிபாகோவின் உள்ளேயிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். “ஜெத்ரோகூட நீ பாஸிடிவாக இருக்க மாட்டாய் என்றுதான் நினைத்தான். உடலுறவு வைத்துக் கொள்வதற்கு பதிலா நீ லோபோடாமி கூட செஞ்சிப்பன்னு அவன் சொன்னான். ஏன் கேக்கறேன்னா எய்ட்ஸால பாதிக்கப்பட்டிருக்கறவங்களோட வேல செய்றது என்ன பயமுறுத்தி மன உளைச்சலக் கொடுக்கும். என் நிலமைய கனவுலகூட எதிர்கொள்ளாதவங்க கிட்ட என் அனுபவங்கள விவரிக்கறது அவ்வளவு கஷ்டம்கறதனால… கிரோஹ்ன்ஸ் நோயப் பத்தி கேள்விப்பட்ருக்கியா? கி-ரோ-ன் இல்ல கி-ரோஹ்-ன். எனக்கு வாய்த்திருக்கும் நோய் அதுதான். மருத்துவரீதியா இன்னமும் சரியா புரிந்து கொள்ளப்படாத ஒரு நோய். குடல் சுவர்கள தடிமனாக்கி துளைப் புண்களையும் சீழ்க் கட்டிகளையும் ஏற்படுத்தி பெரிடொனிடிஸ்னு சொல்லுவாங்களே, அந்த உறையழர்ச்சி வரை கூட்டிட்டு போய் உயிருக்கே ஆபத்தாக்கூட மாறிடும்.. குணப்படுத்த தீர்மானமான வழிலாம் கிடையாது. அறுவை மருத்துவர் குடல்லேந்து ஒரு பகுதிய வெட்டி எடுக்கலாம். ஆனா அது திரும்பவும் வேற ஒரு இடத்துல முளைக்கும். அப்போ… ஒருத்தரால என்ன செய்ய முடியும்னு சொல்லு? அதத்தான் என்னையே நான் கேட்டுக்கறேன். அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கறதா? இது எப்படி இருக்குன்னா ‘எப்படியும் நீ கற்பழிக்கப்படப் போறதால கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு அத அனுபவிக்கலாமே’ன்னு ஒரு பொம்பள கிட்ட சொல்றது போல. இது சிக்கலுக்கான் தர்க்க ரீதியான தீர்வு இல்லங்கறதே என் கருத்து. சொல்லப் போனா தர்க்கமே ஒரு தீர்வு இல்லன்னுதான் நான் நெனக்கறேன். மேலை மருத்துவம் நோயின் அறிகுறிகளை குணப்படுத்த பாக்குது. அதனால ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் மூலப் பிரச்சனை குணமடையாம அப்படியே இருக்குது. அப்புடீன்னா, எதுதான் தீர்வு, கலையா? யோசி, கே.சி, கலையா?”

அச்சமயத்தில் சுற்றடுக்கரங்கத்தினுள், நிதர்சனமாகவே கலை நிகழ்ந்து கொண்டிருந்தது. பழங்காலத்து பார்ன்-டான்ஸ் ஆடல் வகையில், ஆண்கள் சிறு டோப்பாக்களையும், பெண்கள் பெரிய ஆடைகளையும் உடுத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். விழாவின் நிதிநிலை செழிப்பாக இல்லாததால், பெயரளவில் மட்டுமே டோப்பா , பால் கவுனென அழைக்கத் தகுந்தவையாக அவை இருந்தன. கற்பனைத்திறன் நிதி நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. “ஆடல்காரர்கள்” – இரு ஆண்களும், இரு பெண்களும்- சக்கர நாற்காலிகளில் வாரிடப்பட்டு ‘ டோ-சி-டோ’ அலெமாண்ட் பாணிகளில் அதிவேகமாக எட்டு இரொக்காயர்களால் சுழற்றப்படுகையில் மிகச் சத்தமாக ஒலிக்கப்பட்ட ஹார்ப்சிகார்ட் இசையின் பின்னணியில் ஃபிரொஃபெஸர் ஹாட்ச் நிகழ்வின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். 

“ஐரோப்பியர்கள் இக்கரைகளுக்கு வருமுன்னே,” ஒலிபெருக்கப்பட்ட ஹார்ப்சிகார்டின் ஒருங்கிசைக்கப்பட்ட ஸ்வரங்களையும் மீறி அவர் குரல் அதிர்ந்தது, “சுவர்கள் இல்லை. ரசாயன உரத்தில் செழிக்கும் செம்பழுப்பு தானிய வயல்கள் இல்லை. பழங்குடி அமெரிக்கர்களின் ஆடல்கள், பெண்களின் உடல்களை அடக்கி அவற்றை உருக்குலைப்பதற்காக கட்டமைக்கப்பட்ட வடிவியல் வகைமைகளாக அல்லாது ஆடுபவரையும் அவரது அணங்கையும் இணைக்கும் உச்சாடனச் சடங்குகளாக இருந்தன. அவர்களது நீனியாஸ்களிலும், பிண்டாஸ்களிலும், மேஃபிளவர்களிலும் இங்கு வந்த ஐரோப்பியர்கள் இக்கண்டம் முழுவதையுமே ஒரு பெண்ணாக பாவித்தார்கள். அவளை முதலில் ஒப்பந்தங்கள், பட்டாக்கள், உடைமை உரிமைகளைக் கொண்டு பிணைத்து அதன்பின்… கற்பழித்தார்கள்!”

இத்தூண்டுதற் குறிப்பின் உந்துதலால், பழம்பாணியில் செய்யப்பட்ட குழல் துப்பாக்கிகள் நான்கு சக்கர-நாற்காலிகளில் பொருத்தப்பட்டன. முக்காலிகளை அவற்றின் இருக்கை மற்றும் கைப்பிடிகளுடன் இணைத்து, ஒவ்வொரு துப்பாக்கியும் குத்துமதிப்பாக அவை பொருத்தப்பட்டிருக்கும் நாற்காலிகள் விரைந்து கொண்டிருக்கும் திசையை குறிவைத்திருக்கும்படி செய்யப்பட்டன. ஸ்கொயர்-டான்ஸ் பாணியிலிருந்து, குழல் மற்றும் பறைகளாலான ஃபைஃப்- டிரம் பாணியில் இசையமைக்கப்பட்ட “யாங்கி டூடில்” பாட்டிற்கு பின்னணி இசை மாற, ஃபிரொஃபெஸர் ஹாட்ச் அப்பாடலின் வரிகளை தூக்குமேடைக்கு இட்டுச் செல்லும் அணிவகுப்பிற்காக ஒலிக்கப்படும் இசையின் தாளத்தில் தொண்டை கிழியும் குரலில், கட்டுடைப்பது போல் “keep it up” “went to town” போன்ற வரிகளை மீண்டும் மீண்டும் உச்சரித்தபடியே, ஒப்பித்தார். இந்த பக்கவாத்திய இசையோடு அந்த நான்கு சக்கர-நாற்காலிகளும் சுற்றடுக்கு வரிசையரங்கின் முதல் வரிசைக்கு ஏககாலத்தில் வந்து சேர்ந்தன, தங்கள் மீது பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கிகளை முட்கம்பிகளால் சூழ்ப்பட்டிருந்த விமரிசகர்கள் மீது குறிவைக்கும் பொருட்டு தங்களையே பின்புறமாக சாய்த்துக் கொண்டன. 

லூயிவில்லில் ஒரு முறை, முரண்மூளை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாபெரும் ஃபிரெஞ்சு நாடகாசிரியர் ஆண்டான் ஆர்டோவின் துயர் நாடகமான Censis- யை கே.சி பார்த்திருக்கிறான். நாடக ஆரம்பத்தில் படைவீரர் உடையணிந்த நடிகர்கள் இருவர் மேடையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பக்கெட்டொன்றில் தங்கள் சிறுநீர்ப்பைகளை காலி செய்து கொள்வார்கள். நாடகத்தின் எஞ்சியிருக்கும் நான்கு மணி நேரம் முழுவதும் அந்த பக்கெட் அங்கேயே இருக்கும். ஆனால் முதல் அங்கத்தில் தோன்றும் துப்பாக்கி நாடகத்தை முடித்துவைக்கும் திரை கீழிறங்குவதற்கு முன் கண்டிப்பாக சுடப்படும் என்பது அனைவருக்குமே தெரிந்திருப்பது போல் நாடகம் முடிவதற்குள் அப்பக்கெட்டில் இருந்ததற்கு என்ன ஆகப் போகிறது என்பதை பார்வையாளர்கள் அனைவருமே உணர்ந்திருந்தார்கள். 

லூயிவில்லில் இருந்த பக்கெட்டிற்கும் இங்கிருந்த துப்பாக்கிகளுக்குமிடையே என்ன வித்தியாசமென்றால், இங்கு நான்கு மணி நேர காத்திருப்பு கிடையாது. ஏன், நான்கு நிமிடங்கள் கூட கிடையாது. யாங்கி டூடில் பாடல் நிறைவிற்கு வந்தது – ஃபிரொஃபெசர் ஹாட்ச் “And with the girls be handy!” “And with the girls be handy!” என்று கத்திக் கொண்டிருந்தார் – துப்பாக்கி குதிரையை எவருமே அழுத்தாது (அவை ரிமோட் மூலமாக இயக்கப்பட்டிருந்ததால்) அத்துப்பாக்கிகள் தங்கள் தோட்டாக்களை விடுவித்தன. விமரிசகர்கள் பீதியடைந்தார்கள். துப்பாக்கிகள் அவர்கள் மீது வண்ணச் சுண்ணக்கட்டியாலாலான குளுவைகளையே சுட்டுத் தெளித்திருந்தன. விமரிசகர்களைத் தாக்கியதின் விளைவாக அவை வெடித்து உயிர்ப்புடன் அசையும் அலங்காரப் பதாகைகளாக உருமாறின. இந்தியாவின் இந்தியர்கள் இப்படித்தான் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்று ஃபிரொஃபொஸர் ஹாட்ச் விளக்கமளித்தார். ஆனால், கே.சி மட்டுமே அவர் உரையை கவனித்துக் கோண்டிருப்பது போல் இருந்தது. சுண்ணக்கட்டிகளால் கேசம் சிகப்பாகிவிட்டிருந்த பெண்மணியொருவர் விமரிசகர் அடைப்பிடத்திலிருந்து, சுருண்டெழுந்திருந்த முட்கம்பி வளையத்திற்கடியே தவழ்ந்து தப்பிக்க முயன்றார். அவரது மோட்டார் சைக்கிள் ஜாக்கெட்டைப் பற்ற முடியாவினினும் அம்முட் கம்பிகள் அவர் ஜீன்சையும் தலை முடியையும் சிக்கிப் பற்றியது. அதையும் மீறி முகத்தை தரையொடு தரையாய் தேய்த்தபடியே தவழ்ந்து முன்னேறி அவரால் ஒரு வழியாக கம்பிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடிந்தது. அதன்பின் அவர் வின்னிபாகோ இருந்த திசையை நோக்கி, வெளிவழியின் திசையை உத்தேசித்து ஓடினார். எவருமே அவரை துரத்த முயலவில்லை. இரக்கோயர்கள் அதுவரையில் தள்ளிக் கொண்டுவந்த சக்கர நாற்காலிகளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். மேல்சுற்று வரிசையில் நின்று கொண்டிருந்த காவலாளர்களும் அங்கேயே இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தைப் போல் விமரிசகர்களும் தங்கள் இருக்கைகளை விட்டு அகலவில்லை. ஆனால், அவர்களுக்கோ வேறு வழியேதும் இல்லை. தப்பிச் சென்ற விமரிசகர் வின்னிபாகோவைக் கடந்து பார்வையிலிருந்து மறைவதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கே.சியால் மட்டுமே தனது அனுகூலமான இடத்திலிருந்து பின்னால் நிகழ்ந்ததை பார்க்க முடிந்தது. டஸ்டர் அவ்விமரிசகரைத் தாவிப்பிடித்துக் கிழே தள்ள, ஜெத்ரோ துமிக்கிக் கத்தியால் அவளைக் குத்தினான். அதன்பின் பழங்குடி அமெரிக்கர் பாணியில் அவளைச் சிரச்சேதம் செய்தான். 

“அன்புடன் அனைவரும் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிச் சென்று அமர்வீர்களானால் நிகழ்ச்சியைத் தொடர ஏதாக இருக்கும்,” என்று ஃப்ரொஃபெஸர் ஹாட்ச் பள்ளி ஆசிரியையின் தொனியில் கேட்டுக் கொண்டார். 

ஆனால் உண்மையில் விமரிசகர் எவருமே தங்கள் இருக்கைகளை விட்டு நகர்ந்திருக்கவில்லை. (ஒருவரைத் தவிர, அவரது உடலும் தற்போது டஸ்டரால் வாகன நிறுத்தத் திடலுக்கு அப்புறப்படுத்தப்பட்டது). ஆனால் அவர்கள் அனைவருமே போராடி வலியால் துடித்த தங்கள் சக ஊழியரின் கதறல்களைக் உள்வாங்கிக் கொண்டதால் ஒன்றும் செய்யாதிருந்தார்கள். வீட்டிலேயே படம் பிடிக்கப்பட்ட பயங்கரமான திகில் படமொன்றில் மேலதிக பாத்திரங்களாக தாங்கள் மாறிவிட்டதை அவர்கள் உணர்ந்திருந்தார்களா என்று கே.சி யோசித்தான். (எவரோ ஒருவர் இவை அனைத்தையும் வீடியோ டேப்பில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அவன் அனுமானித்தான்.) அப்படிப் பார்த்தால் அவனேகூட நிலைமையை எப்போது சரியாக புரிந்து கொண்டான்? உண்மையில் ஜெத்ரோ அந்த பெண்மணியை வின்னிபாகோவிற்குப் பின்பக்கத்தில் சிரச்சேதம் செய்ததை காணும் வரை அவனுக்குமே என்ன நடக்கிறது என்பது பிடிபடவில்லை. மேலும் சிரச்சேதம் செய்யப்பட்டிருந்த மற்றொரு உடல் படுகொலைப் பாறைக்கருகே கிடக்கிறது. அது மீள் நிகழ்த்தலில் பங்கேற்கும் அலங்கார உடலாக அல்லாது நிஜச் சடலமென்று தற்போது தைரியமாகவே அனுமானிக்கலாம். யாருடைய சடலம்? யுடோபியா இன்கார்பொரேட்டடுடன் சம்பந்தப்பட்டவராக — ஆலோசகர்கள் என்று பெயரில் வளைய வருகிறார்களே, அவர்களுள் ஒருவராக இருக்கக்கூடும். சமூகத்தில் முறைப்படுத்தப்பட்ட வன்முறையான அழிவை விளைவிக்க போதுமான அளவிற்கு தீய விழைவுகள் அனைத்து ரீஹாப் மனைகளிலும் மிதந்து கொண்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்கும் ரீஹாப்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசமில்லை, என்ன ரீஹாப்களில் பிக் பிரதர் எனப்படும் உங்களை ஆட்டிப் படைக்கும் பெரிய அண்ணாச்சிகளை நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்று உங்களையே சொல்ல வைப்பதற்காக அவர்கள் உண்மையிலேயே மெனக்கிடுகிறார்கள்.

“இன்னும் சற்று நேரத்தில் கொடி உயர்த்துவோம்,” அலிசன் கே.சியிடம் செவிபேசிகள் வழியே ரகசியம் போல கூறினார். “அதுக்கு முன்னாடி விழால நீ பங்கேத்துகிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுன்னு உங்கிட்ட சொல்ல தோணிச்சு கே.சி. கொஞ்ச நேரத்திலேயே நீ எனக்கு நெருங்கியவனாயிட்ட. என்னப் போல அடிப்படை விஸ்வாசம்கற ஒரு பிறவிக்குணம் உன்கிட்டயும் இருக்குது. யாரோ எதுவோ என் நலன பாதுகாக்குதுன்னு நான் எப்பவுமே உணர்ந்திருக்கேன். சிலர் அதை நமக்கு மேல் இருக்கற சக்திங்கறாங்க. வேற சிலர் அதை தேவதூதர்கள்னு நம்பறாங்க. இரண்டுமே எனக்கு டார்லீன்தான், குறிப்பா உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம். அதுக்கு முன்னாடி அவதான் ஆளையே நசுக்கற மன அழுத்தங்களால பாதிக்கப்பட்டிருக்கா. அரக்க பறக்க அவளதான் எமெர்ஜென்சி வார்டுக்கு கூட்டிட்டு போயி வயத்த பம்பு வெச்சு காலி பண்ண வேண்டியிருந்தது. என் பங்கு மனவலிமை அளிக்கற தூணாக இருக்கறது. ‘வெற்றி கைக்கெட்டற தூரத்துல இருக்கறச்சே முயற்சிகளக் கைவிட்டுறாத. கோவத்த உனக்குள்ளேயே திருப்பிக்கோ, அத பயன்படுத்திக்கோ! செல்லமே, அளவான நேரமே நமக்களிக்கப்பட்டிருக்கு. அதுக்குள்ள எவ்வளவு சொல்லிப் புரிய வெக்க வேண்டியிருக்கு, எவ்வளவு கொண்டாட வேண்டியிருக்கு’ன்னு அவகிட்ட சொல்லுவேன். ஆனா ஜெத்ரோவும் டஸ்டரும் இப்போ சிக்னல் பண்றாங்க. நேரம் வந்திருச்சு போல.”

“த ஸ்டார் ஸ்பாங்கில்ட் பானர்” இப்போது ஒலிக்கத் தொடங்கியது. ஆனால் மிகக் குறைவான ஒலியளவில், ஏதோ பதின்ம பருவத்தில் நள்ளிரவில் படுக்கையறையில் தடைசெய்யப்பட்ட இசையை திருட்டுத்தனமாக கேட்டுகொண்டிருப்பது போல். படுக்கை உறை அளவிற்கு பெரிதாக இருந்த கொடியுடன் ஜெத்ரோவும் டஸ்டரும் வின்னிபாகோவிற்கு பின்னேயிருந்து வெளிப்பட்டார்கள். ஜெத்ரோவும் கே.சியும் முன்னரே திட்டமிட்டிருந்தபடி கே.சியின் போனிடெய்ல் பின்னலில் முடிச்சிடப்பட்ட கப்பியின் வழியே கொடிக்கம்பத்தின் மீது கொடி உயரும்போது காற்றில் அங்குமிங்கும் பறக்காதிருக்க அதன் இரு விளிம்புகளும் மூங்கில் பட்டைகளால் திடப்படுத்தப்பட்டிருந்தன. கம்பத்தின் அடிவாரத்தில் வின்னிபாகோவிலிருந்து உறிஞ்சப்பட்ட பெட்ரோலை கொடியின் மீது அவர்கள் தெளித்தார்கள். அதன்பின் கொடி முழுவதும் மேலே உயர்ந்து வெளிப்படுகையில் ஜெத்ரோ தன் BIC – சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்தான். டஸ்டர் கப்பையின் சேணத்தை இழுக்கத் தொடங்கினான். தன் இக்கட்டான நிலையை கே.சி அறிந்திருந்தாலும் அவனிடமிருந்த குறைபட்ட வளங்களை திறம்பட பயன்படுவதற்கான வழியை சிந்திக்க அவனுக்கு அவகாசமிருந்தது. பின்னே கைகள் விலங்குகளால் திடமாக பிணைக்கப் பட்டிருந்ததால் (அத்திடத்தை பரிசோதித்தே அவன் மணிக்கட்டுகள் தேய்ந்து விட்டிருந்தன) கத்தியை பெல்டின் வார்ப்பூட்டிற்குள் நுழைத்து துரிதமான குறுக்குவழியை அவனால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் கப்பையின் சேணத்தையோ அதை கீழே விழாதபடி பிணைத்திருக்கும் மயிர்ச்சுருளையோ அறுத்துவிட அவனுக்கு வழியேதுமில்லை. ஒரு வழி மட்டுமே எஞ்சி இருந்தது: உடற்பயிற்சியில் செய்யும் சிட்டப்புகள்.

சலவைப்பலகையைப் போல் தட்டையான அடிவயிற்றை எப்போதுமே விழைந்த கே.சி செங்குத்தான சரிவில் குறைந்தபட்சம் ஐம்பது சிட்டப்புகளாவது செய்யாது உடற்பயிற்சியை நிறைவு செய்துகொள்ள மட்டான். அச்சு அசல் தலைகீழ் சிட்டப் இல்லை என்றாலும் அடிப்படை அசைவுகள் ஒன்றுதான். இறுதியாக முனைப்புடன் ஒரேயொரு முறை முயற்சித்துப் பார்க்க நேரமிருந்தது. தலையை ஒருபுறம் திருப்பிக்கொண்டு வயிற்றுத் தசைகளை இறுக்கியபடியே ஒரு பிரெட்சலை போல் உடம்பை வளைத்து முறுக்கிக் கொண்டான். 

கடவுளும் உதவினார்: கப்பையின் ரெட்டை வடம் அவன் காதுமடலுக்கு குறுக்காக முன்னே தொங்கிக் கொண்டிருந்தது. முடிந்தமட்டில் தலையை எம்பி இரு வடங்களையும் பற்களால் பற்றிக் கொண்டு சிட்டப் ஆசனத்திலிருந்து தன் உடலை டரோட் முற்கால சீட்டால் உந்தப்பட்ட தனது முந்தைய தலைகீழ் நிலைக்கு மெதுவாக தளர்த்திக் கொண்டான். நேரடியாக அவனுக்கு கீழே டஸ்டர் கப்பையின் வடத்தை இழுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு இழுப்பும் முந்தையதை விட இன்னமும் விசையுள்ளதாகவும் கே.சியின் கடைவாய்ப் பற்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அபாயமானதாகவும் இருந்தது. எரிந்து கொண்டிருந்த கொடி தற்போது தன் முதல் சட்டத் திருத்த மகோன்னதத்தை எட்டியிருந்தது. பெட்ரோலின் நெடியையும் சூட்டையும் கே.சியால் உணர முடிந்தது. 

வெளிப்படையாகவே, முட்டுக்கட்டைகளைப் பொருத்தமட்டில் டஸ்டரின் சகிப்புத்தன்மை மிகவுமே குறைவாக இருந்தததால் அவன் வடத்தை இறுதியாக ஒரு முறை பலமாக இழுத்தான். இது கே.சியின் கடைவாய்ப் பல்லொன்றை உடைத்தது மட்டுமல்லாது எரிந்து கொண்டிருந்த கொடியை ஒரு பிரகாசமான, படர்ந்து விரியும், கண்ணைப் பறிக்கும், காட்சியாக டஸ்டரின் மீது கீழே விழ வைத்தது. திட்டமிட்டிருந்தால் கூட அப்படியொரு திருப்திகரமான, உணர்ச்சிகரமான தருணத்தை உருவாக்கியிருக்க முடியாது. ஆனால் இம்மாதிரியான ஒப்புமைகளை விமரிசகர்கள் தற்போது செய்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று கே.சி நினைத்துக் கொண்டான். ஏனெனில், படைப்பிரிவையே தயார் செய்து விடக்கூடிய எண்ணிக்கைகளில் அவர்களை சுற்றிக் குழுமியிருந்த காவலாளர்கள் ஏதோ எரித் திரவமொன்றை அவர்கள் மீது பீச்சிக் கொண்டிருந்தார்கள். 

“கே.சி அது செம மாஸா இருந்தது. பேசறதுக்கு நிறைய நேரம் இல்ல, ஆனா ஒருகால் இதுலேந்து நீ தப்பிச்சு வந்தனா, டார்லீனும் நானும் எல்லாத்தயும் விளக்கற மாதிரி டேப்கள் செஞ்சு வெச்சுருக்கோம். கலைஞர்களாக வருஷக்கணக்குல நாங்க எதிர்கொண்ட நிராகரிப்புகள். விமரிசகர்களின் இகழ்ச்சிப் பார்வைகள். எங்க நிகழ்ச்சிகளுக்கு ஒரு முறைகூட வந்திராத சக ஊழியர் குழுக்களின் மதிப்பீடுகள். அடிப்படையா பார்த்தா இது ரொம்ப சுளுவான மேட்டர்தான். இதுக்கு முன்னாடி ஏன் ஒருத்தருக்குக்கூட இதச் செய்யத் தோணலங்கறத என்னால் புரிஞ்சிக்க முடியல. பெரிய லெவலுக்கு ரிஸ்க் எடுக்கத் தயங்காம உண்மையான தியாகங்களச் செய்யறதுக்குத் தயாரா இருக்கற கலைஞன் அவனுக்கு உரித்தான நிரந்தர இடத்த அடையறத நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளால தடுக்க முடியாது. ஜெத்ரோ இத முதல்லேந்தே புரிஞ்சுகிட்டான்; டார்லீனும் அவளுக்கே உரிய வழில. சரி திரும்பவும் சிக்னல்கள் வர ஆரம்பிக்குது. எல்லாத்தயும் இழுத்து மூடற நேரம் வந்திடுச்சு.”

சுற்றடைக்கப்பட்டிருந்த விமரிசகர்களின் பெஞ்சுக்களுக்கு அடியே புதைத்து வைக்கப்பட்டிருந்த வேட்டுகள் முதலில் வெடித்தன. விமரிசகர்கள், காவலர்கள், சக்கர நாற்காலி சதுர-ஆட்டக் குழு, மீமிகையாக இருந்த மோஹாக்குகள் என அனைவருமே, நடிகர்கள், பார்வையாளர்கள், பிரதி, பின்னணியிடையே நிலவிய வேறுபாடுகள் அனைத்தையும் கரைத்தழித்த கெரசீன் இழையோடிய தீக்கோளமொன்றில் இணைந்தார்கள். 

டை ஹார்ட் படத்தின் அடுத்த தொடரில் இடம் பெறுவதற்கு தகுதியான வகையில் வின்னிபாகோ அடுத்து வெடித்துச் சிதறியது. 

நிகழ்ந்தவற்றை விவரிப்பதற்கு கே.சி மட்டுமே எஞ்சியிருந்தானா? அப்படியானால் அதைச் சிறுபக்கச் செய்தித்தாள்கள், டிவி நிகழ்ச்சி பங்கேற்புகள், புத்தக ராயல்டிகள் ஏன், தொலைக்காட்சியில் திரையிடப்படும் ஆவண-டிராமா என்று விரியக்கூடிய பிற்கால வருமான சந்தர்ப்பங்களாக அசை போட்டுக் கொண்டிருக்கிறானா? அந்த டிராமாவில் அவன் பாத்திரத்தை அவனே கூட நடிக்கலாமே! இல்லை, உண்மையில் சாத்தியமானவற்றையே அவன் தற்போது யோசிக்க வேண்டும். பிரதான பாத்திரத்தில் நடிப்பதற்கு அவனுக்கு உயரம் போதாது. திரைக்கதை உரிமைகளில் ஒரு பங்கு கிடைப்பதே அவனது மிக அனுகூலமான சாத்தியம். எது எப்படியோ குஞ்சு பொறிக்காத முட்டைகள் அனைத்தையும் ஒரு கூடையிலிட்டால், குறைந்தபட்சம் அது ஒரு மில்லியன் டாலர்களுக்காவது விலை போகும். அத்துயர் நாடகத்தில் பலியானவர்கள் வெடிப்புகளால் கைகால்களை இழந்து இன்னமும் எரிந்து கொண்டிருக்கையில் இப்படி வருங்கால ஆற்றுகைப் பணியை யோசித்துக் கொண்டிருப்பது சற்று நாராசமாகவே இருக்கலாம். ஆனால், எப்போதுமே தன்னைத் தவிர வேறெவருக்காகவும் கே.சி உணர்ச்சிவசப் பட்டதில்லை. இந்த விசயத்தைப் பொருத்தமட்டிலும், அதன் அதிகாரபூர்வ நிபுணர்களின் பார்வையில், ஆண்டி வார்ஹொலில் தொடங்கி வில்லியம் பரோஸ் வரையிலும், கடந்த காலத்தில் தொடங்கி இன்றுவரையிலும் வந்துள்ள முக்கியமான கலைஞர்களுக்கும் கே.சிக்கும் அதிக வித்தியாசமில்லை. 

ஆனால் கே.சி உயிரோடு இருந்து கொண்டிருக்கையில் அவன் முட்டைக் கூடைக்கு இன்னமும் ஆபத்துதான். கொடிக்கம்பத்தின் உச்சம் வரையிலும் கே.சியை உயர்த்திய விஞ்சு உயர்த்தியை இயக்கிய மின்னோடி தற்பொது சுழல ஆரம்பித்ததால் அச்சுறுத்தும் வேகத்துடன் கே.சி தரையை நோக்கி கீழிறக்கப்பட்டான். ஆனால் அவனுக்கு உட்காய அதிர்வை விளைவிக்கும் எண்ணம் ஜெத்ரோவிற்கு இல்லாததால் பிரேக்கை இயக்கி கொடிக்கற்களுக்கு மூன்றடிக்கு மேலேயே கே.சியின் கீழ்ப்பாய்ச்சலைத் தடை செய்து நிறுத்தினான். இதனால் உருமணிகளாலான ஜெத்ரொவின் கோவணத்தை கே.சி நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டது. வரலாற்றிலேயே மிக விலாவரியான கற்பழிப்புக்கு தான் உட்படுத்தப்படப் போகிறோமா என்று யோசிக்கத் தொடங்கினான். ஆனால் அதுவும் ஜெத்ரொவின் திட்டமாக இருக்கவில்லை. அவன் மின்னோடியை மீண்டும் இயக்கி கே.சியை சுமார் மூன்றடி உயர்த்தி அவர்கள் இருவரது கண்களும், ஒன்றையொன்று எதிர்நோக்கி இருக்கும்படி செய்தான். 

ஒருவர் கிறுக்குத்தனமாகவோ, போதையுற்றிருப்பதனால் குழம்பிய நிலையிலோ நடந்து கொண்டால் அவர் மீக தர்க்கரீதியாக நடந்துகொள்வது போல் பாவிப்பதே அவரை எதிர்கொள்வதற்கான சரியான வழி என்று கே.சி டிவியில் பார்த்திருந்த அனைத்து போலீஸ் தொடர்களுமே போதித்தன. அதனால் அந்த வழியையே கே.சியும் கையாண்டான். “என்ன செய்யப் போறதா உத்தேசம் ஜெத்ரோ? இங்க நிஜமா நடந்த சண்டைல உயிர் பிழைத்தவங்க செஞ்ச மாதிரி இப்படியே காட்டுக்குள்ள ஒடி தப்பிச்சுருவ போலிருக்கு?”

“உண்மையாவே உத்தேசம்லாம் கிடையாது.”

“அட பரவால்ல சொல்லு. இதெல்லாமே முன்னேற்பாடில்லாம க்ஷணப்பித்ததுல செஞ்சேன்னு என்ன நம்பச் சொல்றயா?”

“வருங்காலத் திட்டம்லாம் கிடையாதுன்னு சொல்ல வந்தேன். ஆலிசன் ஃபிரொஃபெஸரொட வின்னிபாகோவுலதான் நானும் இருந்திருக்கனும். திட்டத்துல மீந்தார்களே கிடையாது. தென் அமெரிக்கால ஜிம் ஜோன்ஸ் மாதிரி.”

“யார் கண்டது. ஒரு வேள விதி நம்ம ரெண்டு பேர் மட்டும் பிழைக்கனும்னு முடிவு செஞ்சிருச்சோ என்னவோ. அப்படியே இருந்தாலும் நமக்கு இதொன்னும் முதல் தடவை இல்லயே.”

“விதி. தூ!” ஜெத்ரோ கூறினான். 

தலைகீழாய் பேசுவதால் ஏதோவொரு விதமான நிலைகுலைதல் ஏற்படுகிறது. எதிரிருப்பவரின் கண்கள் அவர் வாயிருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன. தவறான திசையில் அவை சிமிட்டுகையில் பேசிக் கொண்டிருக்கும் முகத்தின் அசைவுகளோ – உதடுகள் பற்களை வெளிக்காட்டிக் கொண்டும் மறைத்துக் கொண்டும், நாக்கு தோன்றி மறைவது, தாடை உயர்ந்து தாழ்வது- அதற்கு ஓவியர் கீகரின் வேற்றுலகவாசிகளைப் போல் மீச்சதைத் தோற்றத்தை அளிக்கின்றன. மோஹாக் கேசம், போர்ச்சாயம், இயல்பாகவே கீகர் அம்சங்களை பெற்றிருந்த ஜெத்ரோவின் உடற்கூறுகளையும் சேர்த்துக் கொண்டால் முதல் தரமான அன்னியப்படுத்தலை அல்லது நாடக அரங்களில் கூறுவார்களே, entfremdung effekt என்ற தொலைவுபடுத்தும் விளைவை ஏற்படுத்த முடியும்.

“விதியை சோதிச்சுப் பாக்காத ஜெத்ரோ. அக்கம்பக்கத்துல் யாரும் இல்லன்னா கூட, வெடித்தல்களுக்கான அரசாங்க எதிர்வினை கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். நானாக இருந்தா இங்கயே மேடைக்குப் பின்னாடி உலாத்திக் கொண்டிருக்க மாட்டேன்.” 

“அப்போ என்ன காட்டுல போய் ஒளிஞ்சுக்கோன்னு சொல்ற. பெர்ரிக்களையும் நாய்க்குடைகளையும் சாப்டுகிட்டிருக்கனுமா?”

“நீ வின்னிபாகோவுலேயே செத்துட்டதா அவங்க நம்பினா உன்ன வேட்டையாட மாட்டாங்க”

“அவங்க ஏன் அப்படி நினைக்கனும்”

“ஏன்னா அது வெடிக்கறதுக்கு முன்னடி நீ அங்க போறத பாத்தேன்னு நான் சொல்லப் போறதால”

“நீ ஏன் அப்படி சொல்லுவ?” தலைகீழா இருந்ததனாலோ போர்ச்சாயத்தாலோ என்னவோ ஜெத்ரோவின் முகத்தில் பார்த்தது ஏளனமா அல்லது நிச்சயமின்மையின் சுளிப்பா என்பதை இனம் காண்பது கடினமாக இருந்தது.

“ஏன்னா அது கதையின் சுவாரஸ்யத்த அதிகரிக்குது. அத டிவில படமா எடுக்கும் போது. இந்த மாதிரி கதைல கெட்ட ஆளுங்க எல்லாம் கடைசில செத்துறனும்.”

“அப்போ நானும் கெட்ட ஆளுங்கள்ல ஒருத்தன், இல்லயா?”

ஜெத்ரோவின் தலைகீழ் முகத்தில் தெரிந்தது கண்டிப்பாக ஏளனம்தான். சுரங்கப் பாதையின் முடிவில் கே.சியால் ஒளியைக் காண முடிந்தது. 

“நீ எப்போதுமே கெட்ட ஆட்களல ஒருத்தனாத்தான் இருந்திருக்க. மிக மோசமானவங்கள்ல ஒருவன்,” கே.சி திட்டவட்டமாகக் கூறினான்.

ஜெத்ரோ ஆமோதிப்பது போல் தலையாட்டியபடியே, “விமரிசகர்கள் வந்த ஒரு பஸ்சுல போயிடறேன்,” என்று கூறினான்.

“இல்ல,” என்று கே.சி மறுத்தான். “அப்படி செஞ்சன்னா, அவங்களுக்கு ஒருத்தரையாவது தேடனும்னு ஊர்ஜிதமாயிடும். இப்ப நீ என்ன செய்யனும்னா, மூஞ்சில இருக்கற அந்த எழவ சுத்தமா தொடச்சிட்டு, சாதாரண உடைகளுக்கு மாறிடனும். இப்போ போட்டுகிட்டு இருக்கறத வின்னிபாகோவுக்குள்ள அது எரிஞ்சுகிட்டு இருக்கும் போதே தூக்கி கடாசிடு. அதுக்கப்பறம் கண்காணாமப் போயிடு.”

“உன்ன இங்க சாட்சியா விட்டுட்டு…”

 “கரெக்ட்டு! ஆனா கயத்த இழுத்து என்ன திரும்பவும் மேல அனுப்பிடு. அப்பதான் போலீஸ் வரச்சே நான் தலகீழா தொங்கிகிட்டு இருப்பேன். வந்துருவாங்க, ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.” 

“அதுக்கு பதிலா உன் தலைய நான் கால்பந்தா ஆக்கிக்கலாம்”

“ஆக்கிக்கலாம், ஆனா அப்படி நீ செஞ்சேன்னா முடிவு என்னவா இருக்கும்னு தெரியுமா? இதெல்லாத்தயும் படமா எடுக்கறச்சே ஸூசன் சரண்டனும், ஜீனா டேவிசும்தான் நட்சத்திரங்களா திகழுவாங்க. ஆனா என் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கும் படத்தோட நட்சத்திரம் டெத்ரோ ஜெத்ரோவாத்தான் இருப்பான்- அசல் படுகொலைகாரனொருவனுக்கு முதல் முறையா என்.ஈ.ஏ. – நிதியுதவி அளிச்சிருக்கும். இந்த காரணங்க போதாதா?”

ஜெத்ரோ தலையாட்டினான். முட்டைக் கூடை காப்பாற்றப்பட்டது. 

பின்னர் கொடிக்கம்பத்தின் உச்சியிலிருந்து தொங்கியடி, நிசிக்காற்றின் நறுமணங்களை அனுபவித்தபடியே, கேசி கற்பனையில் திரைப்படத்தை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.


Source / Further Reading

Thomas M. Disch, The First Annual Performance Art Festival at the Slaughter Rock Battlefield, The Hudson Review, Vol. 50, No. 1 (Spring, 1997)

Series Navigation<< ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.