வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5

This entry is part 5 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

மின்கழிவுப் பிரச்சனை பற்றி விவரமாக அலசி விட்டோம். இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தால், உலகம் முழுவதும், சில லேசான முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் பற்றிச் சற்று அலசுவோம். பிறகு, என்னவெல்லாம் செய்தால், இந்தப் பிரச்சனை ஓரளவுக்குக் கட்டுக்குள் வரும் என்றும் ஆராய்வோம்..

கடந்த 100 ஆண்டுகளாக நாம் ஏதோ ஒரு வகையில் பெட்ரோலில் இயங்கும் ஊர்திகளுக்கு அடிமையாகி விட்டோம். இந்தப் பழக்கத்திலிருந்து வெளிவருவது மிகவும் கடினம் என்பது உலகில் உள்ள அனைத்து நாட்டினருக்கும் தெரியும். அதே போல, இந்த மின் கழிவுப் பிரச்சனை, கடந்த 40 ஆண்டுகளாக நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கெட்ட பழக்கம். இதிலிருந்து மீள்வதும் சாதாரண விஷயம் அல்ல.

இன்றைய நிறுவனங்கள் எல்லாவற்றிலும், விற்பனை என்பது வளர்ந்து கொண்டே போக வேண்டிய ஒரு கட்டாயம் ஆகிவிட்டது. இன்றைய விற்பனையாளர், நாளைய விற்பனை மேலாளராக ஆகவேண்டும். இன்றைய விற்பனை மேலாளர் ஓரிரு ஆண்டுகளில் விற்பனைத் தலைவராக வேண்டும். இவர்களை நியமிக்கும் நிறுவனங்கள், வருடா வருடம் பலநூறு கோடி டாலர்களை அதிகமாக ஈட்ட வேண்டும். இந்தச் சுழற்சியிலிருந்து (நோயிலிருந்து) வெளிவருவது என்பது சாதாரண விஷயமல்ல. தனியார் நிறுவனங்களால், தானே இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ள முடியாது. இந்தச் சிகிச்சைக்கு முக்கியமான ஒரு தூண்டுகோலாக, அரசாங்கங்கள் இயங்குவதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை.

உதாரணத்திற்கு, கணினிகள் ஏராளமாக வளர்ந்த காலத்தில், இத்துறையின் நிபுணர்கள் தங்களது துறையை, கார்களைத் தயாரிக்கும் தொழிலுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அதாவது, கார்கள், கணினிகளைப் போல அதிவேகமாக முன்னேறினால், ஒரு லிட்டர் பெட்ரோலில் நாம் இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம், என்று கார் தொழிலைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள் பலருண்டு. 1980 -களில் உருவாக்கிய கணினி ஒன்றுகூட இன்று வேலை செய்யவில்லை! ஆனால் அதே காலத்தில் உருவாகிய சில கார்கள் ன்றும் வேலை செய்கின்றன. இன்றும் அவற்றுக்குத் தேவையான பாகங்கள் கிடைக்கின்றன.

கார்களைத் தயாரிக்கும் தொழில்கள், மின்னணுவியல் தொழிலைப் போலல்லாமல் மறுபயன்பாடு என்பதை ஓர் அளவிற்குச் செய்து வந்துள்ளன. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் என்னவோ ஒரு தனிநபரின் வாழ்க்கையில் நடக்கும் பெரிய முதலீடுகள், வீடு மற்றும் கார் அடங்கும். அது அன்றும் மாறவில்லை, இன்றும் மாறவில்லை. இதுவே இந்த மறு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம். நல்ல வேளையாக வருடம் ஒரு கார் வாங்குவது என்பது, திறன்பேசி போல நிகழவில்லை.  மின்னணுவியல் சாதனங்கள் விலை குறைந்து கொண்டே போவதால், இதை மறுபயன்பாடு செய்ய நாம் பெரிதாக முயற்சி செய்வதில்லை. முக்கியமாக, வேகத்தின் மீது இருக்கும் மோகம் நமக்குக் குறைய வேண்டும். அதற்காக தயாரிப்பாளர்களை பலவிதத்திலும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

இந்தத் தருணத்தில், இன்னொரு முக்கியமான விஷயமும் இங்கு சொல்லியாக வேண்டும். பாஸல் கன்வென்ஷன் (Basel convention) என்ற ஓர் ஒப்பந்தத்தில் பல நாடுகள் மின்கழிவைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இது புவி சூடேற்றம் சார்ந்த ஒப்பந்தங்களைப் போன்றது. இதில் இன்னும் அமெரிக்கா (உலகின் மிகப் பெரிய மின் கழிவு உற்பத்தி நாடு) கையெழுத்திடவில்லை. அத்துடன் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், பலவகையான மின் கழிவுக் கொள்கைகள் வைத்திருப்பதால், குழப்பமே எஞ்சியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு சட்ட ஓட்டையைப் பயன்படுத்தி, மின் கழிவை, எப்படியாவது ஆசிய நாடுகளுக்குக் கடத்தி விடுகிறார்கள். இந்த விஷயத்தில் முரணான வியாபார முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணத்திற்கு, வட அமெரிக்காவுக்கு மிகவும் நெருங்கியுள்ள ஒரு வளரும் நாடு ஹைடி (Haiti) என்ற நாடு. ஆனால் இந்த நாட்டிற்கு எந்த மின் கழிவும், அமெரிக்காவிலிருந்து செல்வதில்லை. ஏன் ஆசியாவிற்குப், பல்லாயிரம் மைல்கள் தாண்டிச் செல்ல வேண்டும்? இவர்களின் வாதம், வளரும் நாடுகளில், மின் கழிவு மற்றும் மறுபயன்பாடு மூலம் வேலை வாய்ப்பை அதிகரிப்பது என்றால், ஏன் ஹைடி நாட்டை விட்டு, ஆசியாவிற்கு அனுப்புகிறார்கள் என்பது கேள்வி.

சரி, அடுத்தபடியாக தீர்வுகளுக்கு வருவோம்

 1. சில நாடுகளில் (கனடா உட்பட), மின்னணுவியல் சாதனங்களை வாங்கும் பொழுதே அவற்றை மறுபயன்பாடு செய்வதற்காக ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம், உள்ளூர் அரசாங்கத்திற்குச் செல்கிறது. ஏனென்றால், உள்ளூர் அரசாங்கம் மறு பயன்பாட்டிற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது
 2. பழைய மின்னணுவியல் சாதனங்களை மறுபயன்பாடு மையத்துக்கு (recycling center) எடுத்துச் சென்றால், தனியாகக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இந்தப் பழைய சாதனங்கள், பெரும்பாலும் பூமிக்கடியில் புதைக்கப்படுகின்றன (landfills). இது ஒரு தற்காலிகத் தீர்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்முடைய மின்னணுவியல் மயக்கம் வளர்ந்துகொண்டே போகிறது. எத்தனைதான் புதைக்க முடியும்?

 சில வித்தியாசமான அரசாங்க கொள்கைகள் இந்த நிலைமையை ஓரளவுக்கு மாற்ற முடியும் என்பது என் நம்பிக்கை.

 1. பழுதுபார்க்கும் மையங்களுக்குச் சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது
 2. எந்த ஒரு பொருளை, தயாரிப்பாளர் அறிமுகப்படுத்தினாலும், அதற்கான பாகங்கள் மற்றும் மின்சுற்று சார்ந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்
 3.  மின்னணுவியல் சாதனங்களின் பாகங்கள் பழுதுபார்க்கும் மையங்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும். கார் தயாரிப்புத் தொழில் போல  உதிரி பாகம் தயாரிக்கும் தொழில்கள் (aftermarket parts) வளர வேண்டும்

இவற்றை எல்லாவற்றையும் விட மிகவும் கடினமான ஒரு வடிவமைப்புப் பழக்கத்தை (design practices) மாற்ற வேண்டும். அதாவது, முதலில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளை மாற்ற வேண்டும்

 1. ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான், புதிய மாடல்கள் அறிமுகப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்
 2. இதற்கிடையில் மென்பொருள் தில்லாலங்கடி வேலைகள் செய்ய அனுமதிக்கக்கூடாது. மிகவும் கடினமான தண்டனைகள் இதற்காக நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்
 3. அரசாங்கம், புதிய கார்கள் அறிமுகமாகும்போது அவை பாதுகாப்பு மற்றும் எத்தனை பெட்ரோல் பயன்பாடு (safety rating, fuel efficiency) போன்ற விஷயங்களில் என்ன நிலையில் உள்ளன என்ற தகவல்களை நிறுவனங்கள் வெளியிட வைக்கிறது அதைப் போலவே, மின்னணுவியல் சாதனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
 4. புதிய மின்னணுவியல் சாதன அறிமுகத்தில், பழுது பார்க்கக் கூடிய எளிமையை அரசாங்கம் இவற்றுடன் வெளியிட (repairability index) தயாரிப்பாளர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்
 5. மின்னணுவியல் தயாரிப்பாளர்கள், சாதனங்களில் புதிய அம்சங்களை, அரசாங்க அனுமதி பெற்ற பின்தான், புதிய மாடல்களில் மட்டும் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால், புதிய அம்சங்கள், கடந்த 10 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய அத்தனை சாதனங்களிலும் அம்சங்கள் வேலை செய்ய வேண்டும்
 6. புதிய மாடல்களில் மட்டும் வேலை செய்யும் அம்சங்களை ஒரு தயாரிப்பாளர் அறிமுகப்படுத்த விரும்பினால், அதற்கு ஒரு அதிகபட்ச கட்டணம் விதிக்கப்படவேண்டும்

இவ்வகைக் கொள்கைகள் நிச்சயமாக பிரபலமான இருக்காது. ஆனால், இப்படிச் செய்தால், தயாரிப்பாளர்கள், பொறுப்பாக, அடுத்தகட்ட வன்பொருள் முன்னேற்றம், தங்களது கட்டமைப்புக் குறைகளைத், தானாகவே சரி செய்து விடும் என்று அரைகுறையான பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்த முடியாது. இங்கு சொல்லியுள்ள சில கருத்துக்கள் எந்தவொரு அரசாங்கமும் ஏற்றுச் செய்ய தயங்கும். ஆனால் இப்படி செய்யாவிட்டால் மின் கழிவு நம்மை ஒரு பொறுப்பில்லாத சமூகம் ஆக்கிவிடும்.

வேகத்தின் மீது மோகம் கொண்ட இந்த ஆட்டம், நெடுநாள் நீடிக்காது. இப்படியே தொடர்ந்தால், இந்த பூமியே ஒரு மின் கழிவு சுடுகாடாகிவிடும். (Speed kills!).எத்தனை நாள்தான் பின்நோக்கிப் பார்க்கும் கண்ணாடி (rear view mirror) இல்லாமல் நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணம் செய்வது? இங்குள்ள சில சிபாரிசுகள், மிகவும் தடாலடியானதாகத் தோன்றலாம். ஆனால், நிலைமை இவ்வளவு மோசமாக விட்டதால், வேறு வழி இல்லை என்பதே என் எண்ணம். மின்னணுவியல் தயாரிப்பாளர்கள் இவ்வகை கொள்கைகளை முறிக்க பலவாறு முயற்சிப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு அரசாங்கம் இயங்கினால்தான் இந்தப் பிரச்சினையிலிருந்து நமக்கு விடிவு பிறக்கும்.

பி.கு. இக்கட்டுரையை எழுத தொடங்குகையில் நான் ”தோள் கண்டார் தோளே கண்டார்” என்று ஒரே தோள் வலியுடன் இருந்தேன். சொல்வனம் பதிப்பாசிரியர் திரு ரவிசங்கர் அருமையான ஒரு ஐடியாவை முன்வைத்தார். ஏன் எழுத வேண்டும், பேசி விடுங்களேன், என்றார். அதாவது, தமிழ் பேச்சிலிருந்து எழுத்தாக மாற்றும் ஒரு இணையதளத்தின் மூலமே, இக்கட்டுரைத் தொடர் உங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது

மின் கழிவு சார்ந்த சுட்டிகள்

Series Navigation<< வேகமாய் நின்றாய் காளி- 4

2 Replies to “வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5”

 1. இன்றைய கால கட்டத்தில் இந்த தொடர் மிக, மிக முக்கியமானது.
  //அதாவது, தமிழ் பேச்சிலிருந்து எழுத்தாக மாற்றும் ஒரு இணையதளத்தின் மூலமே, இக்கட்டுரைத் தொடர் உங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது//
  இந்த தளத்தைப் பற்றிய விவரங்களை வெளியிட்டால் உபயோகமாக இருக்கும்.
  நன்றி!

 2. நன்றி சிவா. இந்த இணையதளத்திற்கு பெயர் இங்கே:

  https://speechnotes.co/

  பெரும்பாலும் சரியாக தமிழில் வேலை செய்கிறது. சந்திப்பிழைகளை தனியாகத் திருத்த வேண்டும். இந்த முறையில் உள்ள சிக்கல், உங்களது சிந்தனை தெளிவாக இருக்க வேண்டும். ஒரு வாக்கியத்தை ஆரம்பித்து விட்டு, எப்படி முடிப்பது என்று அல்லாடுவது நமக்கெல்லாம் சகஜம். இது குரோம் உலாவியில் மட்டும் வேலை செய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.