வாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்

வாழ்க்கை என்பது பெரும்பாலும் கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் இருப்பதாகவே நம்மில் பலரும் நினைக்கிறோம். இக்கணம் நழுவி நழுவிச் சென்றாலும், வருத்தத்தில், மகிழ்ச்சியில், விரக்தியில் எதிர்பார்ப்புகளில் வாழ்ந்து இன்றை நேற்றாகவோ நாளையாகவோ மாற்றி விடுகிறோம்.

வாழ்வு என்பது என்ன? ‘இறக்கத்துடிக்கும் வாலா? உயிரோடு மீண்ட உடலா?’ (பிரமிள் கவிதை-பல்லி)

1896-ஆம் ஆண்டு, ‘வாழ்வு என்பது வாழத் தகுதியானதா?’ என்ற தலைப்பில் தத்துவ வாதியும், மனவியல் நிபுணருமான வில்லியம் ஜேம்ஸ் உரை நிகழ்த்தினார். அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் அதே தலைப்பில் சுயமுன்னேற்ற நூலொன்று வெளியான போது கேலி செய்யும் விதமாக  ‘அது செரிமான சக்தியைப் பொறுத்தது,’ என்றன ஏடுகள்.

வயிற்றில் வெட்டுக்கிளிகள் பறக்க விழித்து எழும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் வாழ்வின் நிலையாமையை அறிந்தும், தன் இருபது வயதில் தற்கொலை எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் வாழ்ந்த ஜேம்ஸை, தானும் மற்ற உலகோரும் பாதுகாப்பும், உத்திரவாதமுமற்ற இந்த வாழ்வை எப்படித்தான் வாழ்கிறோம் என்ற கேள்வி எளிதில் விட்டுவிடவில்லை. இது இருண்ட நோக்கு என்று சொல்லப்படலாம், என்றாலும் இந்தப் பார்வையில் ஊறிய ஜேம்ஸுக்கு, தெளிவானதும், எளிமையானதும் என்று கருதப்படும் ஆரோக்கியமான கண்ணோட்டம் என்பது ஒப்பீட்டில் சொல்லித் தீராத வகைகளில் மேலோட்டமானதாகவும், குருட்டுத்தனமாகவும் தெரிந்தது.

ஆனால் முடிவில்,  எதை அவர் இளம் வயதில் ஏளனமாகப் பார்த்தாரோ, அந்தப் பார்வைக்கே வந்தடைந்தார், அதாவது,  “நமது வழக்கமான நம்பிக்கை கொள்ளல், அறிவார்ந்த, ஒழுக்கமான தேறுதல்கள்” ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, வாழ்க்கை வாழத்தக்கது, அடிநீரோட்டத்தின் அச்சுறுத்தலாலேயே அது மேலும் தீவிரத்தோடு வாழ வேண்டியது என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தானுமே வாழ்வில் அவநம்பிக்கையாலும், பல தனி வாழ்வுத் தோல்விகளாலும் துவண்டிருந்தவரான ஜான் கேக், மாஸச்சூஸ்ஸெட்ஸில் ஒரு பல்கலையில் தத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 2014 ஆம் ஆண்டு ஃபிப்ரவரியின் கடும் குளிர் நாளொன்றில், ஹார்வர்ட் பல்கலையில் ஒரு மாணவன் உயர்ந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்த செய்தியை, அந்த வழியே சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஜான் கேக் கேள்விப்பட்டபோது அவருக்குத் தோன்றிய யோசனை: இப்போது நாம் கேட்க வேண்டியது, ‘என்ன ஆயிற்று?’ என்ற கேள்வி இல்லை, மாறாக, ‘இது ஏன் நடந்தது?’ என்பதே.

தன் போன்று நோய்ப்பட்ட ஆன்மாக்களுக்காக, வில்லியம் ஜேம்ஸின் சிந்தனைகளை  ‘நோயுற்ற ஆன்மாக்களும், ஆரோக்கியமான மனங்களும்’[i] என்ற தலைப்பில் நூலாக எழுதிய ஜான் கேக், வில்லியம் ஜேம்ஸும் தம்மைப் போன்றவர் என்று பலரும் காணச் செய்ய முயல்கிறார். அவர் அதே நேரம், ஜேம்ஸிடம் இருந்து வாழ்வின் மதிப்பு என்ன என்றும் அறிய முடியும் எனக் காட்ட முயல்வதாக இப்புத்தகத்தில் தெரிகிறது.

தத்துவம் பற்றிய புத்தகங்களில் வழக்கமாக இல்லாதபடி, ஜேம்ஸின் வாழ்க்கையையும் தனது அனுபவங்களையும் இணைத்து ஜான் கேக் எழுதிய புத்தகம் இது. இதே போல, கலப்பு வகையிலானதும், பரவலாக வாசிக்கப்பட்டவையுமான இரு நூல்களை கேக் முன்னரும் எழுதியுள்ளார். அவை, அமெரிக்கன் ஃபிலாசபி : லவ் ஸ்டோரி, மற்றும், ஹைக்கிங் வித் நீட்ஷா :ஆன் பீயிங் ஹூ யூ ஆர்.[ii]

நீட்ஷாவைப் போலவே விலியம் ஜேம்ஸும் நாயகனாகக் கருதப்பட வேண்டியவர்தான்.  கவலைகள் நிறைந்திருந்தாலும், மதோன்மத்தமான வாழ்க்கை அமைந்திருந்தது இருவருக்குமே; உணர்ச்சிகளின் பெருக்கோடு தத்துவத்தை இருவரும் அணுகினார்கள். இருவருமே,  தன் துறையில் சிறந்து விளங்கும் ஒரு வேதியியலாளரைப் போலவோ, பூஞ்சைக் காளான்கள் பற்றிய ஆய்வாளரையோ போலவோ அல்லாமல் ஒரு தத்துவவாதியால் தனதென்று வெளிப்படாத ஒன்றைக் கொண்டிருக்க முடியாது என்ற  நீட்ஷாவின் புகழ் மிக்க கூற்றுக்கு உதாரண புருஷர்களாக இருந்தவர்கள் இருவரும்.   

நீட்ஷாவைப் போலவே தொடர்ந்து நோய்களில் சிக்கிய வாழ்வு நடத்தியவர் ஜேம்ஸ்.  “நோய், வாழ்வில் வாழும் தாகத்தைக் கூட்டும் ஒன்று;   வாழ்வாழ் என்று மீள மீள விழையச் செய்கிறது அது,”என்ற நீட்ஷாவின்  கூற்றினை விளக்கும் வகை வாழ்வையே ஜேம்ஸ் வாழ்ந்திருந்தார்.  தன்னுடைய மனச்சோர்வாலோ, அல்லது அதற்கு எதிர்வினையாற்றும் எண்ணத்தாலோ, எப்போதும் எதார்த்தத்தில் ஊக்கம், அதிர்ச்சி மேலும் கிளர்ச்சியையே தேடிக் கண்டுபிடிக்க முயன்றவர் ஜேம்ஸ்.  தன் பதின்பருவ மகனிடத்தில் ஜேம்ஸ், ‘ஆழ்ந்து வாழ்,’ என்றார்.  நீட்ஷாவோ நம்மிடம், ‘பயங்கரமாக வாழ்,’ என்றார்.

1896 ஆம் ஆண்டு, ஹார்வர்டின் இளம் கிருஸ்தவ ஆண்கள் குழுமத்தில் (YMCA) ஆற்றிய ஓர் உரையில்,  “வாழ்க்கைக்குப் பயப்படாதீர்,” என்ற ஜேம்ஸ்,“உங்கள் வாழ்க்கை வாழ வேண்டிய ஒன்று என நம்புங்கள்,  உங்கள் நம்பிக்கை அதை உண்மையென ஆக்கும்,”என்று ஊக்கம் கொடுத்தார்.

“பெரும் பாதாளத்தின் மேல்விளிம்பில் தள்ளாடுவோரே நம்மில் பலர்,’ என்று சொல்லும் ஜான் கேக்  தன் அப்போதைய நிலையையும் சொல்கிறார்: “2010 இல், முப்பது வயது எனக்கு. மணமுறிவு, குடிகாரத்தந்தையின் சாவு, ஜேம்ஸைப் பற்றி என்னுடைய முனைவர் பட்டப் படிப்புக்குப் பின்னான ஆய்வு என்று என் வாழ்வு நிலை.”  இதனால்தான் இந்தத் தத்துவம் தேவையான ஒன்றாகப் பட்டது என்று சொல்கிறார் ஜான் கேக்.

ஜான் கேக்  என்னதான் ஜேம்ஸைப் பற்றி தன் சொந்த அனுபவங்களுடன் பின்னிப் பிணைத்து எழுதியிருந்தாலும், ஜேம்ஸைப் போன்ற ஆன்மிகமும், நடைமுறையும் கலந்த சிந்தனாவாதியை இவரால் சரிவர விவரித்துச் சொல்ல முடியவில்ல. ஜேம்ஸைப் போன்ற தீவிரமான, உணர்ச்சி பொங்கும் ஒருவரின் வாழ்வோடு கேகின் வாழ்வைப் பின்னி எழுதுவது, கேகின் வாழ்வு எத்தனை வெளிறியது, மட்டுப்பட்டது என்றுதான் சுட்டுகிறது. ஜேம்ஸைப் போன்ற அபாரமான எழுத்து நடை கொண்ட ஒருவரின் சொற்களை மேற்கோள் காட்டுவது, புத்தகத்தின் ஆசிரியருக்கும், அதன் மையப் பாத்திரத்துக்கும் இடையே உள்ள இட்டு நிரப்பமுடியாத இடைவெளியைத்தான் காட்டுகிறது.

மேலும் ஜான் கேக், ஜேம்ஸை தேவையான அளவு மேற்கோள்களால் சுட்டவில்லை. ஜேம்ஸின் தீவிரமான அனுபவ வாதம், அலசல் அறிவுக்கு எதிர் வாதம், இடைவிடாமல் தொடர்ந்த கிளர்ச்சியைச் சுட்டுகிற எழுத்து இவைகளுக்கான உரிய இடம் ஜான் கேகின் நூலில் இல்லை. மெய்ஞானத் தேடலும், கறாரான அனுபவம் சார் வாழ்வியலும் கொண்ட ஜேம்ஸின் அபூர்வக் கலவை இப்புத்தகத்தில் சித்திரிக்கப்படவில்லை.

‘ரீஷெர்ஷே’ ( ‘recherche’) என்ற வகை அபூர்வமான கிருத்தவ சமயப் பிரிவான,  ‘ஸ்வீடன்போர்க்கியனிசத்தை’ (Swedenborgianism) பின்பற்றி வாழ்ந்த விசித்திர மனிதரான ஹென்றியின் மகனாக வில்லியம் ஜேம்ஸ் 1842-ஆம் வருடம் ந்யூயார்க் நகரில் பிறந்தார். யூரோப் முழுதும் பல இடங்களில் அவரும் அவரது நான்கு உடன்பிறப்புகளும் படித்தனர். பிரபலப் புனைவிலக்கிய எழுத்தாளரான ஹென்றி ஜேம்ஸ் இவரது சகோதரர்.

மிகச் சுதந்திரமான வளர்ப்பு முறையில் வளர்ந்தவர். சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டு முழு மூச்சாக வண்ணம் தீட்டுவதைக் கற்ற ஜேம்ஸ், பின்னர் வேதியியலிலும், தாவரவியலிலும் நாட்டம் கொண்டார். மருத்துவத் துறையில் ஆர்வம் வரவே அதைக் கற்பதற்கு முன் அப்போது முன்னணியிலிருந்த விலங்கியலாளரும் நிலவியலாளருமான லூயி ஆகஸீ (Louis Agassiz) நடத்திய, ‘அமேசான் காடுகளில் அறிவியல் பயணத்தில்’ சேர்ந்து கொண்டார். ஆனால், கடற்பயணம் ஒத்துக்கொள்ளவில்லை;  அம்மையும் போட்டுவிட்டது;  அதைச் சாக்கிட்டு வீடு திரும்பிவிட்டார். 

இளமையிலிருந்தே ஜேம்ஸிற்கு உடல் உபாதைகள் அதிகம்- கண்களில் பிரச்சனை, தலைவலி, செரிமானக் கோளாறுகள், பின்முதுகு வலிகள்;  அவரால் நிமிர்ந்து உட்காரவோ நேராக நடக்கவோ முடியவில்லை. அவரின் உடல் நலக்கேட்டிற்கு மன நலமின்மையே காரணம் என அவர் அன்னை சொல்லிக் கொண்டேயிருந்தார். மனச்சோர்வு மிகுந்திருந்தது அவருக்கு. வாழ்க்கையில் மனிதருக்கு முழுச் சுதந்திரமில்லை, அனைத்தும் காரணங்களாலும், விளைவுகளாலும் அறிய முடியா வண்ணம் பின்னப்பட்டிருக்கிறது என்ற விதி நோக்கிய பார்வை தான் அவரைப் பலமற்றவராக உணரச்செய்தது.  சமீபத்தில் பிரசுரமான டார்வினின் புத்தகம் எந்த உலகப் பார்வையிலிருந்தும் சுதந்திர விருப்பு என்ற கருத்தை ஒழித்துக் கட்டியதாகக் கருதினார்.  நாம் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதே மாயை என நம்பினார். வாழ்வின் உண்மை என்பது தவிர்க்கமுடியாத காரண காரியப் பிணைகளால் ஆனது, ஆனாலும் கணிக்க இயலாத ஒன்று, இடையூறுகளின் நடுவே பலவீனமாகவே உயிர்த்தல் என்பது ஊசலாடுகிறது என்ற கருத்து இருந்தது அவருக்கு.

ஆனால், 1870, ஏப்ரல் 30-ல் தன்னுடைய குறிப்பேட்டில் அவர் இவ்வாறு எழுதினார்: “நேற்று என் வாழ்வில் மிகப் பெரும் சிக்கல். நான் ஹோனுவியேவின்[iii] இரண்டாம் கட்டுரையின் முதல் பாகத்தை முடித்தேன். சுதந்திரமான தன்விருப்பு என்பதை அவர் வரையறுத்ததை – “ஒரு எண்ணத்தை நீடித்து வைத்துக் கொள்வது என்பது நான் விரும்பிச் செய்வதால், அல்லால் நான் வேறு எண்ணங்களை மேற்கொண்டிருக்கலாமே” – வைத்து அது மாயை என்று வரையறுக்கத் தேவை இல்லை. எப்படி ஆனாலும், நான் இப்போதைக்கு ஏற்பது இது – அடுத்த வருடம் வரையாவது இப்படி- அது மாயை இல்லை. என் முதல் சுதந்திர விருப்பு என்பது சுதந்திர விருப்பை நம்புவதாக இருக்கும்.”

விரக்தியிலிருந்தும், தற்கொலை எண்ணங்களிலிருந்தும் அவரை, அவரே ஒத்துக்கொண்டதன்படி,  ஹோனுவியேவின் ( Renouvier) எழுத்துக்கள் விடுவித்திருக்காது. “துல்லியமான சிந்தனை நம் கருத்தைத் தீர்மானிப்பதில்லை. உண்மைகள் நம்மை விதிக்கப்பட்டதே வாழ்வு என ஏற்பவர்களாகவோ, அல்லது அதை ஏற்காதவர்களாகவோ ஆக்க முடியாதவை.”

ஏற்கனவே சார்ல்ஸ் பெர்ஸால்[iv] உருவாக்கப்பட்டிருந்த (அமெரிக்க) நடைமுறைவாதத்தை வளர்த்தெடுத்து, பெர்ஸைப் போலன்றி, தெளிவாகவும் சொன்னதற்காகப் புகழ் பெற்றவர் ஜேம்ஸ்.  இதன்படி,  உண்மைகள்,  நாம் பார்க்கவும், கண்டு பிடிக்கவும் என எங்கோ அசைவின்றிக் கிடப்பன அல்ல. அனேக நேரமும், வாழ்வில் நாம் போடும் நடையில் நாம் படைத்து, அடைபவையே உண்மைகள். ஒரு பெரும் பாதாளத்தை நாம் தாண்டமுடியும் என்பதை நாம் உண்மையில் அதைத் தாண்டுவதன் மூலமே நிறுவ முடியும்- அல்லது தோற்று, அதிலே விழவும் கூடும். நடைமுறைப்படுத்தல் மூலம் தத்துவம், அல்லது கொள்கைகள் உறுதிப்படுகின்றன அல்லது தோற்று இற்று வீழ்கின்றன.

நம் புத்திகள், ’தன்னளவில் பூரணமான ஓர் உலகையே’ எதிர் கொள்கின்றன, அதன் வரையறுக்கப்பட்ட கூறுகளை மாற்ற முடியாத போதும், அதன் உள்ளடக்கத்தை அறிவது ஒன்றே சாத்தியம் என்ற ‘அறிவு ஜீவித்தனமான’ நம்பிக்கையை அவர் மறுத்தார். நம் மனதிற்கும் உண்மைக்கும்  இடையே இருப்பது தொடர்பு என்று சொல்வதை விட அவைகளுக்கிடையே செழுமையான வணிகம் நடை பெறுகிறது என்று சொல்வது உண்மைக்கு அருகிலிருப்பது போல என்றார். புது சிந்தனைகளை பழைய எண்ணங்களுடன் இணைத்து அதைப் பொருள் பொதிந்ததாக மாற்றுகிறோம். நம்பிக்கைகளைக் கருது கோள் எனச் சொல்லலாம்-அவை ஒரு மனிதரின் சிந்தையை ஒட்டி உயிர்ப்பாகவும், சவத்துப்போயும் அமையுமே தவிர கருதுகோளின் உள்ளார்ந்த அம்சம் என ஆவதில்லை. செயல்படும் விருப்பம் வேண்டும். நம் செயல்களின் வழியே உலகை மாற்றலாம்; அப்போது இந்த நம்பிக்கை ஒரு கருது கோள் என உருப்பெறும். நம் வாழ்வை ‘வாழ்க்கைக் கருது கோள்’ எனக் கொள்வதின் மூலம் மதிப்பு கூட்டலாம்.

மேலாண்மைத் திறத்தை ஒத்ததும், நடைமுறை வாதக்கூறுகள் கொண்டதுமான ஜேம்ஸின் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகளை ஜான் கேக்  சரிவர பரிசீலிக்கவில்லை. தனக்கு முழுச் சுதந்திரம் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது என்று தீர்மானித்துச் செயல் பட்ட ஜேம்ஸ் அதைக்  கொள்கை எனக் கடைப்பிடித்தார். ஒரு கருமியைப் போல, சிறுகச் சிறுகத் திண்மையாக உதவும் பழக்கங்களைக் கொண்டு விவரிக்க இயலாத ‘காரண விளைவுப் பின்னலை’ ஏமாற்றும் முயற்சி எடுத்தவர் அவர்.  இந்த நடைமுறையின் வழியே அவர் ஒரு மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தார், அதே கல்லூரியில் மற்றவருடன் இணைந்து உபகரணங்களுடன் கூடிய பரிசோதனை மையத்தினை அமைத்தார். உடற்கூறியலில் பரிசோதனை என்னும் துறையை அமைத்தார். மனவியலும், உடற்கூறியலும் அங்கே கற்பித்தார்.  12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து மனவியல் நூல்கள் எழுதினார். அபாரமான ‘த வரையிட்டீஸ் ஆஃப்  ரிலிஜஸ் எக்ஸ்பீரியென்ஸஸ்’ (The Varieties of Religious Experiences) அவரது படைப்பே. பல உரைகளும், கட்டுரைகளும் எழுதியவர்.  ஐந்து குழந்தைகளுக்குத் தந்தை. குறிப்பேடுகளும் கடிதங்களும் அவர் மனைவி ஒரு புனிதவதி, துன்பங்களைக் குறை சொல்லாமல் ஏற்றவர் என்றே காட்டுகின்றன.

அன்பைக் குறித்து ஜேம்ஸின் கருத்துகளை கேக் ஆமோதித்து எழுதுவதாகத் தெரிகிறது. ஜேம்ஸ் 19ஆம் நூற்றாண்டு மனிதர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சோதித்து நிரூபிக்க முடியாத ஒரு கருத்தை முன் வைக்கிறார். கிட்டத்தட்ட மத நம்பிக்கை போல, அவருடைய ஸ்வீடன்போர்கியக் கிருஸ்தவ நம்பிக்கை போல உள்ள கருத்து இது.

ஒரு சான்றும் இல்லாத போதும் துணைவரின் அன்பில் நம்பிக்கை வைத்து நாம் அன்பைக் காட்டிக் கொண்டிருந்தால், நம்மீது மற்றவரின் அன்பு கூடுவதோடு, சில நேரம் அன்பை அது உருவாக்கவும் கூடும் என்பது ஜேம்ஸின் கருத்து. மறுப்புகளை எதிர்பார்த்த ஜேம்ஸ் ஒரு வாதத்தால் அதை முன்கூட்டியே தடுக்கிறார். அன்புக்கு நிரூபணத்தை எதிர்பார்த்தால் அது அன்பு எழும் வாய்ப்பையே தடுக்கும் என்பது அவருடைய வாதம்.

கேக் இதை முழுமையாக ஆதரித்து எழுதவில்லை, மாறாக இப்படிப்பட்ட நடைமுறைவாதம் செருக்கு நிறைந்த வாதம் என்று கருதுகிறார். தன் வாழ்விலிருந்து ஒரு கதையைச் சொல்லும் கேக் இப்படி ஐயத்தைக் கொணர்வதில் நியாயம் உண்டு, ஆனால் ஒரே ஒரு சான்று நிரூபணம் ஆகுமா?

கேக் தன் முதல் மனைவியைத் திருமணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாளன்று திருமணம் சரியான முடிவா என்ற ஐயத்தால் அவர் மனஉபாதையில் இருந்த போது, அவருடைய அம்மா இப்படி ஐயப்படாமல் காரியத்தை முடிக்க உந்துகிறார், திருமண வாழ்வை அவரால் மகிழ்ச்சியானதாக ஆக்க முடியும் என்று அம்மாவின் வாதம்.

அது நடக்கவில்லை, பின்னாளில் திருமணம் முறிகிறது. கேக் ஜேம்ஸ் முன்வைக்கும் நடைமுறையான ’தன் விருப்பு செயல்முறையில் வெல்ல உதவும்’ என்பதை நம்ப விரும்புகிறார், ஆனால் அவரால் முடியவில்லை என்று தெரிகிறது. ஜேம்ஸ் தன் விருப்பு என்பது எப்போதும் வெல்லும் என்று சொல்லவில்லை, மாறாக முயல்வது ஒன்றுதான் நமக்குள்ள சுதந்திரம். அதில் வென்றால் சுயவிருப்பு என்பதை நாம் சுதந்திர முடிவு என்று நம்பலாம், அது தோற்றாலும் சுயவிருப்பு என்பதை நாம் கொண்டிருக்கிறோம் என்றுதான் ஆகும், தோல்வி நம் முயற்சியின் போதாமையைக் காட்டும் என்பது ஜேம்ஸின் கருத்து. இதை கேக் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.  

ஜான் கேக்  இந்த புத்தகத்தில் தன் தந்தை இறந்த போது, தன் மகளை மடி மீதிருத்தி அவளின் தலைமுடியில் கண்ணீர் சிந்தியதைச் சொல்கையில் தனக்குள் இதைப் பற்றிய சுய விசாரம் ஒன்று நிகழ்ந்ததாகவே விவரிக்க வில்லை. அதனாலேயே ஜேம்ஸ் இதை எப்படியெல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. உணர்ச்சிகள் மனதின் நிலையென்றும் அவை உள்ளார்ந்த அலைகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் ஜேம்ஸ் ஏற்கவில்லை.  உணர்ச்சிகள் உடலில் வெளிப்படுபவை என்றார் அவர். உணர்வு இல்லாத உணர்ச்சிகள் அறிவின் ‘உணர்வெழும்பா’ செயலை ஒத்தது என்றார்.

அழுகைக்கு வருத்தமாக இருப்பது காரணமில்லை, அழ வேண்டும் என்னும் உணர்வே காரணம். உடல்  மூலமான வெளிப்பாட்டில் உணர்ச்சிகள் எழுப்பப்பட்டு, அறியப்படுகின்றன. இப்படி மரபாக நிலவி வரும் பல நம்பிக்கைகளை ஜேம்ஸ் மறுதலித்து மாற்று வழியில் சிந்திக்க வழி வகுக்கிறார். இதைக் குறிப்பிட ஜான் கேக்  மறந்தாலும் ‘வருத்தத்தினால் நாம்அழுவதில்லை ஆனால், அழுவதால் வருந்துகிறோம்,’ என்று சொல்வதன் மூலம், நம் உணர்வுகள் வெளிப்படாமல் இருக்க நாம் அணியும் கவசம் தெரிகிறது. ’ஓ போடு, விசில் அடி’ போன்று வலிந்து சந்தோஷ மனநிலையை மேற்கொண்டு அதன் மூலம், வாழ்வை எதிர்கொண்டவர் ஜேம்ஸ்.

‘வாழ்க்கை வாழத் தகுதியானதா?’ என்ற கேள்விக்கு ஜேம்ஸிடமிருந்து சிறுபிள்ளைத்தனமான, குழப்பங்கள் நிறைந்த பதில் தான் கிடைக்கிறது என்றாலும் சொல்லப் பட்ட விதத்தால் எழுத்தாளச் சகோதரரைப் படிப்பதைப் போன்ற இன்பம் ஜேம்ஸின் நடையில் உள்ளது.  

‘ஸிக் ஸோல்ஸ், ஹேப்பி மைன்ட்ஸ்’ புத்தகம் அதைச் சரிவரச் சுட்டவில்லை. நீட்ஷா சொன்னார்: ஒவ்வொரு தத்துவமும் அதைச் சொல்பவரின் ஒப்புதல் வாக்குமூலம், ஒரு வகையின் சுயவிருப்பமில்லாததும், நனவிலி சுயசரிதையாகவும் இருக்கும். 

நாம் இதைச் சற்று மாற்றி கேகின் புத்தகத்துக்குப் பொருத்தலாம். ஒருக்கால் தத்துவத்தில் சுயம் தற்செயலாக மட்டுமே இழைய வேண்டும், அதன் முக்கியக் கவனம் தன்விருப்பமற்றதாகவும், நனவிலி இயக்கமாகவும் இருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது.

இந்த நூலை நம் புலத்தில் வைத்து யோசித்தால், எளிமைப்படுத்தினால் தோன்றக் கூடியவை பின்வருபவை:

இந்த நூலை நம் புலத்தில் வைத்து யோசித்தால், எளிமைப்படுத்தினால் தோன்றக் கூடியவை பின்வருபவை:
‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’-இது நேர்மறை எண்ணம்.

‘சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்கிறது’-பக்கங்கள் தீர்வதில்லை, எழுத்துக்களும் ஓய்வதில்லை; இது இயற்கையின் செயல்பாட்டில் தன்னை ஒப்புக் கொடுப்பதுதான். இது கவிதை ஆக நமக்கு ஒரு காலத்தில் பேனாவாக, எழுதுகோலாக, மசியில் நனைந்த இறகு உதவியது என்ற அறிவு தேவைப்படும், அது நடைமுறை என்பது எப்படித் தொடர்ந்த பழக்கங்களால் களிம்பாக மட்டும் நம்மிடம் படிவதில்லை, அதற்கு மேல் அது ஒரு உயிரணுத் தொகுப்பாக மாறி நம் அறிவுக்கும், ஞானத்துக்கும் செழுமை கொணர்கிறது என்பதைப் புரிய வைக்கும்.

‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என ஒலிக்கிறது சிலம்பு.
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நிம்மதி இருக்கும்’-எதிர் கொள்அமைதி கொள் என்கிறது இது.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும்’-மிகத் தீர்மானமாகச் சொல்கிறது திருக்குறள்.

‘வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தாலென்னே,
வான் பிறைக்குத் தேன்கோடு பார் மீதிங்கே
விடமுண்டுஞ் சாகாமலிருக்கக் கற்றால்
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்’-

வேறு யார்? பாரதி!

இக்கட்டுரை கீழ்க்கண்ட கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

Ref:https://standpointmag. co. uk/issues/march-2020/life-and-the-living/

வெளியிட்ட பத்திரிகை: ஸ்டாண்ட்பாயிண்ட் மாகஸீன்

மூலக்கட்டுரையை எழுதியவர்: ஜேன் ஓ’க்ரேடி.

பிரசுரமான இதழின் தேதி: மார்ச், 2020.

தமிழில் தழுவி எழுதியவர்: பானுமதி ந.

விமர்சிக்கப்பட்ட புத்தகத்தை எழுதிய ஜான் கேகுடன் பேட்டிகள் கீழ்க்கண்ட சுட்டிகளில் கிட்டும்:

https://www.wbur.org/radioboston/2018/10/11/hiking-with-nietzsche-kaag


[i] கட்டுரையில் விமர்சிக்கப்படும் புத்தகம்: Sick Souls, Healthy Minds: How William James can save your Life by John Kaag, Princeton 224pp

[ii]  ‘American Philosophy:A Love Story’ and  ‘Hiking with Nietzsche: On being who you are’ ஆகியன அந்த இரு புத்தகங்கள்.

[iii] Renouvier என்பது மூலப்பெயர்.  ஃப்ரெஞ்சு தத்துவாளர். இவர் ஸ்வீடன்போர்க் கிருஸ்தவத்தைப் புனருத்தாரணம் செய்தது போல தத்துவத்தை தான் புனருத்தாரணம் செய்ய முனைவதாகச் சொன்னவர். சமூகவியலின் ஸ்தாபகர்களில் ஒருவரான எமீல் ட்யுர்க்கெம் மீது இவருடைய சிந்தனைகளுக்குத் தாக்கமிருந்தது என்று விக்கி சொல்கிறது.

[iv] சார்ல்ஸ் பெர்ஸ் என்று உச்சரிப்பு. இங்கிலிஷில் Charles Peirce என்று எழுதப்படும் பெயர். இவர் ஒரு பல துறை விற்பன்னர். மேதை. பெர்ஸின் நடைமுறைவாதம் மற்றும் குறியீட்டியல் பற்றி நிறைய எழுதியவர் இலங்கைத் தமிழரான வாலண்டைன் டேனியல் என்பவர். இவர் ஒரு மானுடவியலாளர், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில்தென் ஆசிய ஆய்வுத் துறைத் தலைவராக இருந்திருக்கிறார்.  பெர்ஸ் என்னவொரு மேதை என்பதைக் காண இங்கே செல்லலாம்: https://plato.stanford.edu/entries/peirce/ 

கணிதம், தர்க்கம், குறியீட்டியல், தத்துவம் என்று எதிலெல்லாமோ சிறப்பான அளிப்புகள் தந்த ஒரு polymath பெர்ஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.