முறைப்படியான ஒரு பதில்

தமிழாக்கம்: மைத்ரேயன்

அன்புள்ள பேராசிரியர் பான்:

மூன்று வருடங்களுக்கு முன்பு ஷாங்காய் மாநாட்டில், தியோடர் ட்ரெய்ஸரின் நாவல்களைப் பற்றி நீங்கள் அளித்த ஆய்வுக் கட்டுரை மீது நான் கொண்டுள்ள ஆழ்ந்த மதிப்பை உங்களுக்குத் தெரிவிக்க,  தயவு செய்து என்னை அனுமதியுங்கள். என் பெயர் ஷா நிங்ஷென், மூஜி ஆசிரியர் கல்லூரியில் வெளிநாட்டு மொழிகள் துறைக்கு இரண்டு வருடங்களாக நான் தலைமை வகித்திருக்கிறேன். நீங்கள் என்னை நினைவு வைத்திருக்கக் கூடும்: முப்பதுகளின் நடுவில் உள்ள ஒருவன், மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கிறவன், ஒல்லி, சுமாரான உயரம், கைகளில் முடி படர்ந்த, தலையில் அடர்ந்த முடி கொண்டவன். ஸ்ப்லெண்டர் ஹோடலில் நீங்கள் உரையாற்றிய பிறகு, அதன் வரவேற்பறையில் நாம் இருவரும் சில நிமிடங்கள் பேசினோம், என்னிடம் உங்கள் விவர அட்டையைக் கொடுத்தீர்கள்.  பிற்பாடு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன், உங்களுக்குத் தனியே ஓர் உறையில் ஸால் பெல்லோவின், ‘அட்வென்சர்ஸ் ஆஃப் ஆகி மார்ச்’ நாவல் பற்றிய ஒரு கட்டுரையை அனுப்பினேன். அவை உங்களிடம் சேர்ந்தன என்று நான் ஊகிக்கிறேன்.

என் இலாகாவில் உள்ள பேராசிரியர் ஃபங் பைச்சென் பற்றி நீங்கள் அனுப்பியுள்ள கடிதத்திற்குப் பதில் அளிக்கையில், அவருடைய குணங்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருக்க விரும்புகிறேன், ஏனெனில் அவர் முன்பு என் ஆசிரியராக இருந்தவர், அவரைப் பற்றிச் சொல்வதில் நான் சார்பற்றவனாக இருப்பது கடினம்.  நீங்கள் அவரைப் பற்றிப் பல கதைகளையும், விவரணைகளையும் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் – அவர் ஒரு கிறுக்கர், அதிகார வெறி பிடித்தவர், கட்டுப்பாடில்லாத பெண் பித்தர், தற்புகழ்ச்சியாளர், போலி, சந்தர்ப்பவாதி, இத்தியாதி – அவை எவையும் மிக வித்தியாசமான இந்த மனிதரைச் சரியாக விவரிக்கவியலாதவை. பின்வரும் பக்கங்களில் சில உண்மை விவரங்களை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன், அவற்றிலிருந்து நீங்கள் உங்களுக்குத் தேவையான முடிவை எட்டலாம்.

1977 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் மூஜி ஆசிரியர் கல்லூரிக்கு புதுமுக மாணவனாக நான் சேர்ந்தேன், நான் வந்த அதே நாள் திருவாளர் ஃபங்கைச் சந்தித்தேன். அந்த நேரம் அவர் ஒரு விரிவுரையாளராக இருந்தார், புதுமுக மாணவர்களுக்குப் போதிக்கும் பொறுப்பில் இருந்தார். நான் இங்கிலிஷில் பட்டம் பெறும்படி ஆக்கப்பட்டேன் என்பதில் நான் ஏமாற்றம் அடைந்திருந்தேன், எனக்கு எந்த அன்னிய மொழியிலும் ஈடுபாடு இல்லை. தத்துவத்தையும், சீன இலக்கியத்தையும் படிக்கவே நான் விண்ணப்பித்திருந்தேன், செவ்வியல் இலக்கியத்தில் நிபுணனாக விரும்பியிருந்தேன். இன்றுவரை விதியின் கை எப்படி என்னை இங்கிலிஷ் படிப்பிற்கு அனுப்பியது என்பது எனக்குப் பிடிபடவில்லை. விண்ணப்பதாரர்களில் மிகச் சிலரே தைரியமாக இங்கிலிஷ் பரீட்சையை எடுத்துக் கொண்டார்கள், நான் அவர்களில் ஒருவன் என்பதன் காரணமாக – எழுத்து வடிவப் பரீட்சையைச் சொல்கிறேன் – ஒருவேளை, மாநிலக் கல்லூரி நுழைவுத் தேர்வுக் குழுவில் இருந்த சிலர் என்னை இந்த மொழியில் சிறப்புப் பயிற்சி பெறும்படி அனுப்ப முடிவு செய்திருக்கலாம்.  உளப்பூர்வமாக நான்  இந்த முடிவை வெறுத்தேன், ஆனால், என் கோபத்தை வெளிப்படுத்த எனக்கு ஒரு வழியும் இல்லை. கல்லூரி வளாகத்தில் முதல் நாள் மாலை, எல்லாப் புதுமுக மாணவர்களும் மொழியைக் கேட்டுப் புரிந்து கொள்வதில் சோதிக்கப்பட்டனர். திரு. ஃபங் அந்தச் சோதனையை நடத்தினார்.

அவர் தன் ரீங்கரிக்கும் குரலில் படித்தார்: ‘இன் த ஓல்ட் டேஸ், மை க்ராண்ட் ஃபாதர் வாஸ் அ ஃபார்ம்ஹாண்ட் ஹயர்ட் பை அ க்ரூ(அ)ல் லாண்ட்லார்ட். டே அண்ட் நைட் ஹி ஒர்க்ட் லைக் அ பீஸ்ட் ஆஃப் பர்டன், பட் ஸ்டில் ஹிஸ் ஃபாமிலி டிட் நாட் ஹாவ் இனஃப் ஃபூட் அண்ட் க்ளோத்ஸ்….’

இந்த  எடுப்பான மனிதரைவிட மேலாக இங்கிலிஷைப் படித்தவர் யாரையும் நான் முன்னால் சந்தித்ததில்லை என்பதால், அவருடைய தெளிவான உச்சரிப்பைப் பார்த்து நான் வியந்தேன். என்னால் ஒரு வாக்கியத்தைக் கூட முழுதாக எழுத முடியவில்லை என்பதால் பரீட்சைக்கு விடைத்தாளை வெற்றாகவே விட்டு வைத்திருந்தேன், அதனால் நான் மிக வருத்தத்தில் இருந்தேன். இந்தப் பரீட்சையின் முடிவுதான் எங்களை எந்தப் பிரிவில் போடுவது என்பதைத் தீர்மானித்தது, அதனால் மாணவர் நான்கு பிரிவுகளில் பொருத்தப்பட்டனர் என்பது அதை விட ஏமாற்றமாக இருந்தது. பண்பாட்டுப் புரட்சிக்குப் பிறகு நுழைவுத் தேர்வை எழுதிய முதல் மாணவர் குழு எங்கள் புதுமுக மாணவர்கள்தான். முந்தைய பத்து வருடங்களில், கல்லூரிகள் முழுதாகவோ அல்லது பகுதி நேரமோ மூடப்பட்டிருந்தன, இளம் திறமையாளர்கள் பலர் சேர்ந்து விட்டார்கள், அதனால் இப்போது மாணவர்களின் கூட்டத்தில் ஏதேதோ வகையான ஜீவராசிகளெல்லாம் இருந்தன. எங்களுடைய இங்கிலிஷ் செயல் திட்டத்தில், மூன்று அல்லது நான்கு புதுமுக மாணவர்கள், ஜேன் அ(ய்)ர், த காட்ஃப்ளை, மேலும் எ டேல் ஆஃப் டூ ஸிடிஸ் புத்தகங்களை மூலத்திலேயே படிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள், அவர்கள் இறுதி வருட மாணவர்களை விடவும் கூடுதலாக ஒரு பரீட்சையில் மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருந்தனர். அதற்கு மாறாக, பல புதுமுக மாணவர்கள், என்னைப் போல, சில இங்கிலிஷ் சொற்களைத்தான் அறிந்திருந்தனர், மற்ற துறைப் பரீட்சைகளில் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தோம் என்பதை வைத்து இந்த மொழியைக் கற்க அனுப்பப்பட்டிருந்தனர். உள் மங்கோலியா பகுதியிலிருந்து வந்த சில மாணவ மாணவிகள், கணிதம் மற்றும் இயற்பியலில் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர், ஆனால் ஒரு இங்கிலிஷ் சொல்கூட அறியாதவர்கள்; இருந்தாலும் அவர்கள் இங்கே அனுப்பப் பட்டிருந்தனர், அவர்களின் நாட்டுப்புறப் பகுதிக்கு இங்கிலிஷ் ஆசிரியர்கள் வேண்டும் என்பதற்காக இங்கே அனுப்பப்பட்டிருந்தனர்.

இதனாலெல்லாம் நான் இருப்பதிலேயே கீழ்நிலைப் பிரிவில் போடப்பட்டிருந்தேன். எனக்கு அத்தனை வெறுப்பாக இருந்ததால் நான் வகுப்புகளுக்குப் போகாமல் ஒதுங்கி வந்தேன். ஃபங்கின் வகுப்பு காலை 7.30 இலிருந்து 9.30 வரை இருந்தது, அதனால் நான் அனேகமாகப் போகவே இல்லை. அவர் நல்ல ஆசிரியர், பொறுப்பாகவும், கனிவாகவும் நடந்து கொண்டார், எனக்கு அவரிடம் எந்தக் குறையும் இல்லை. உண்மையைச் சொன்னால் அவர் வகுப்பை நடத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது- அவர் ஒவ்வொருவரையும் உரக்கப் பேச வைக்க முயன்றார், நாங்கள் எத்தனை கூச்சமுள்ளவர்களாகவும், அல்லது புரிந்து கொள்வதில் மிக மெதுவானவர்களாகவும் இருந்தாலும் அவர் பொருட்படுத்தவில்லை. அவருக்கு ‘ஆப்புல்’ என்ற சொல் மிகவும் பிடித்திருந்தது, ஏனெனில் அதன் உயிரெழுத்துகள் எங்கள் வாய்களைத் திறக்க வைத்தன.  தன் வட்டமான தாடையைக் கீழிறக்கி விடுவார், தன் வரிசையான பற்களைத் தெரியும்படி காட்டுவார், ‘உங்கள் வாய்களை பெரிய ஆப்புல் ஒன்றுக்காகத் திறங்கள்,’ என்று சொல்வார்.  எங்களுக்கு இங்கிலிஷில் பேசுவதில் தன்னம்பிக்கையை வளர்க்க அவர் கடைபிடித்த வழி அது. பின்னாளில் எனக்குத் தெரிய வந்தது, அவர் ஒரு வலதுசாரி என்று முத்திரையிடப்பட்டு, கிராமப்புறங்களுக்கு மூன்று வருடங்கள் அனுப்பப்பட்டிருந்தார், அப்போது அவர் தன் ஐம்பதுகளின் கடைசியில் இருந்தார்.  அதற்குள் எனக்கு இன்னொன்றும் தெரிய வந்தது, நான் நினைத்த அளவு அவருடைய இங்கிலிஷ் உச்சரிப்பு உயர்தரமானதில்லை என்பது அது. அவர் பற்களிடையே அசைந்து ஒலிக்க வேண்டிய ‘டிஎச்’ என்பதை உச்சரிக்கிற போது, அந்த ஒலி சீன மொழியில் இல்லை என்பதால், அவருடைய நாக்கு நுனி பலநேரம்  அவருடைய பற்களின் முனைகளைத் தொடவில்லை. ‘திக்’ என்பதற்கு ‘டிக்’ என்றும், ‘த்ரீ’ என்பதற்குப் பதில் ‘ட்ரீ’ என்றும் அவ்வப்போது சொல்வார். அதோடு, இங்கிலிஷைக் கடுமையான ஒலிப்போடு பேசினார், அதற்கு அவர் முதலில் ரஷ்ய மொழியைக் கற்றது காரணமாக இருக்கலாம். அறுபதுகளின் துவக்கத்தில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே உறவு நலிவடைந்து வந்தபோது, பல்லாயிரக்கணக்கான கல்லூரி ஆசிரியர்கள் கட்சியின் அழைப்பை ஏற்றுச் செய்தது போலவே, திரு. ஃபாங்கும் ரஷ்ய மொழியைக் கைவிட்டு விட்டு, இங்கிலிஷுக்கு மாறி இருந்தார். (வரலாறு எந்தத் திக்கில் நகரப் போகிறது என்பது குறித்து, நமது தலைவர்களுள் அத்தனை தொலைநோக்கோடு இருந்தவர்கள் யார் என்று நான் எப்போதும் யோசிக்கிறேன். இருபது வருடங்களுக்குள், நம் நாட்டில் மிகச் சக்தி வாய்ந்த பயன்பாட்டு மொழியாக, ரஷ்ய மொழிக்குப் பதில் இங்கிலிஷ் ஆகிவிடும் என்பதை அந்த நபரோ அல்லது அந்த நபர்களோ எப்படி முன்கூட்டியே அறிய முடிந்தது?)

ஒரு மாலை வேளையில் என் தலையில் காதொலிப்பான் கருவியை அணிந்து ஓர் ஆபெரா இசையைக் கேட்டபடி நான் படுக்கையில் படுத்திருந்தேன். யாரோ என் அறைக் கதவைத் தட்டினார்கள், நான் பதில் சொல்வதற்குத் தயாராக இல்லை. ஆனால், எனக்கு ஆச்சரியம் தரும் வகையில், கதவு திறந்தது, திரு. ஃபங்கின் முகம் புலப்பட்டது. அவருக்கு சிறிது மூச்சு வாங்கியது, தன் ஆட்டுத்தோல் குல்லாயைக் கைக்கு அடியில் வைத்திருந்தார்; இடது கையில் இளநீல நிறத்தில் ஒரு ஒலிநாடா எந்திரத்தை வைத்திருந்தார், அது குறைந்தது முப்பது பௌண்டு எடை இருந்திருக்கும் (அந்த நாட்களில் காஸெட் ப்ளேயர் எந்திரம் என்பது யூனிகார்ன் குதிரை போலக் கிட்டவியலாதது.) அவருடைய முன் நெற்றியிலிருந்து இலேசாக ஆவி பறந்தது, அதில் ஒரு பனித் துகள் இன்னும் உருகிக் கொண்டிருந்தது, அதனருகில் ஒரு பெரிய மச்சம் இருந்தது. அவருடைய கழுத்து சாம்பல் நிறத்து கழுத்து அணி ஒன்றில் போர்த்தி மூடப்பட்டிருந்தது, அதனால் அவரை  மேலும் குள்ளமானவராகக் காட்டியது. நான் படுக்கையிலிருந்து எழுந்தேன்.

ஓர் உடைசல் நாற்காலியில் அவர் அமர்ந்தார், என்னிடம் சொன்னார், ”இளம் ஷா, நீ ஏன் இன்னக்கிக் காலைல வகுப்புக்கு வரல்லை?”

“எனக்கு உடம்பு சரியில்லை.”

“என்ன பிரச்சனை?”

“வயத்து வலி.”

“உன்னால நடக்க முடியாதா?”

“ரொம்பக் கொஞ்சம்தான்.”

“சரிப்பா, உன்னால பேச முடியுது, கேட்கவும் முடியுது, அதனாலே நான் இங்கேயே உனக்குப் பாடம் நடத்தப் போறேன்.”

இதற்கு ஏதும் சொல்ல முடியாதபடி நான் அதிர்ச்சியில் இருந்தேன். அவர் நாற்காலியை அருகே நகர்த்தினார், ஒரு பாடப் புத்தகத்தின் தட்டச்சிய பிரதியைத் தன் மேலங்கிப் பையிலிருந்து எடுத்தார், சொன்னார், ”நாம நாலாவது பாடத்திலேருந்து ஆரம்பிக்கலாம்.”

விருப்பமே இல்லாமல் என் படுக்கைத் தலைமாட்டின் மேலே இருந்த ஒற்றைப் பலகை புத்தக அலமாரியிலிருந்து பாடப் புத்தகத்தை எடுத்தேன்.

“முப்பத்தி ஒண்ணாம் பக்கத்துக்குப் போ,” என்றார்.

நான் அந்தப் பாடத்தைக் கண்டேன். அவர் மேலே பேசினார், “நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு: திஸ் ஈஸ் எ பீ.” அவருடைய நாக்கின் நுனி அவருடைய தடித்த மேல் உதட்டை ஈரப்படுத்தியது.

நான் அந்தப் பூச்சியின் படத்தின் கீழ் இருந்த வாக்கியத்தை வாய்விட்டுப் படித்தேன், அந்தப் படம் குதிரைகளை மொய்க்கும் குருட்டீ போல இருந்தது.

 “தட் ஈஸ் எ காபேஜ்,” அவர் ஒலி எழுப்பினார்.

அந்தத் தாவரத்தின் கீழ் இருந்த வரியை நான் படித்துக் காட்டினேன். இருவருமாக எளிய சொற்றொடர்களின் பாணிகளில் இருந்த பல மாதிரிகளைப் பழகினோம் – அறிவிப்புகளைக் கேள்விகளாக மாற்றுவதிலும், அதையே எதிர்ப்புறமாகவும் பேசிப் பழகினோம். அத்தனை நேரமும் நான் நிலை குலைந்திருந்தேன், என்னை வகுப்பில் முன்னிலைப்படுத்த அவர் ஏன் இத்தனை முனைந்திருக்கிறார் என்பதையே தொடர்ந்து யோசிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை.

படிக்கும் பயிற்சி முடிந்ததும், அவர் அந்த ரிகார்டர் எந்திரத்திற்கு மின்னிணைப்பு கொடுத்தார், பின் ஒரு பிரிட்டிஷ் ஆள் எப்படி அந்த வாக்கியங்களை உச்சரிப்பார் என்று நான் கேட்கும்படி செய்வதற்காக, அதை இயக்கினார். எந்திரம் நிஜமான இங்கிலிஷ் குரலை ஒலிப்பதற்கு நாங்கள் காத்திருந்தபோது, அவர் பெருமூச்சு விட்டபடி என்னிடம் சொன்னார், “உன்னோட எல்லா சக மாணவர்களும் வகுப்பு முடிந்த பின் இரண்டு மணி நேரம் பாடங்களை இந்த ஒலிப்பதிவோடு சேர்ந்து பேசிப் பழகுகிறார்கள், நீ எதையும் செய்வதில்லை. இந்த மாதிரியே தொடர்ந்து செய்தால் சீக்கிரமே நீ கல்லூரியிலிருந்து வெளியேறும்படி ஆகும். உன்னுடைய திறமைகளை எல்லாம் நீ வீணடிக்கிறாய்.”

“எனக்கு இங்கிலிஷில் எந்தத் திறமையும் இல்லை,” நான் சொன்னேன்.

அவர் தனது நீண்ட புருவங்களை உயர்த்தினார், அமைதியாக என்னிடம் சொன்னார், “அன்னிய மொழியைக் கற்க உனக்கு எந்தத் திறமையும் தேவையில்லை. உனக்கு என்ன வேண்டுமென்றால், உழைப்பும், தாங்கும் சக்தியும்தான். அப்படியானால் எவ்வளவு நேரமும் முயற்சியும் எடுத்து நீ அதைக் கற்கிறாயோ அந்த அளவுக்கு உன் இங்கிலிஷூம் மேலாக இருக்கும். இதில் ஒரு குறுக்கு வழியும் இல்லை.”

அந்த பிரிட்டிஷ் நபரின் குரல் ஒருவழியாக வெளியே ஒலிக்கத் தொடங்கியபோது, நான் அதைப் பின் தொடர வேண்டியிருந்தது, ஒவ்வொரு வாக்கியமும் முடிந்ததும் தொடர்ந்த நீண்ட மௌனத்தின் போது அதை நான் திருப்பிச் சொல்ல வேண்டி இருந்தது. இதற்கிடையில் திரு. ஃபங் இடைவிடாது புகைத்துக் கொண்டிருந்தார், அது அறையில் புகை மண்டச் செய்தது. நான் பாடங்களை ஒலிப்பதிவோடு பல முறை படித்துக் காட்டினேன். அவர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருந்தார், என் அறையில் உடன் வசித்தவன் உறங்குவதற்காகத் திரும்பும் வரை இருந்தார். அவர் போன பிறகு எனக்கு எவ்வளவு விடுதலை உணர்வு கிட்டியது! நாங்கள் அறை வாயில் கதவுக்கு மேல் புறப் பலகணியை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தோம்.

மறுநாள் மாலையும் அவர் வருவார் என்று நான் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது தடவை அவர் வந்தது என்னை உறுத்தியது, ஏனெனில் என் உடல் நலத்தில் ஏதும் குறைவில்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. நான் வகுப்புகளுக்கு வராமல் தவிர்த்தது அவரை ஏன் அத்தனை பாதித்தது? கோபம் ஏதும் காட்டாதபோதும், குறைந்தது அவருக்கு மனதளவில் எரிச்சலாவது இருந்திருக்க வேண்டும். மேலும் வகுப்புகளுக்குப் போகாமல் இருந்தால் என்னை வெளியேற்றி விடுவாரா? அயல் நாட்டு மொழி இலாகாவில் நான் சிக்கிக் கொண்டதில் அவர் பிழை ஏதும் இல்லை. அவர் என்னைப் பெரிய தொல்லையைக் கொணரக் கூடியவன் என்று நினைத்திருக்க வேண்டும். இப்படித் துன்பமான பல யோசனைகளால், என்னால் படிக்கும் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

எனக்கு வியப்பு தரும் விதமாக, இந்த முறை நாங்கள் ஒரு மணி முன்னதாகவே முடிவுக்கு வந்து இருந்தோம். ஆனால், போகுமுன், கதவுப் பிடியில் கை வைத்தபடி, அவர் சொன்னார், “உனக்கு இங்கிலிஷ் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் இதைப் பற்றி யோசி: நம் கல்லூரியில் போதிக்கும் எந்தத் துறை உனக்கு மேலான தொழில் வாழ்க்கையை அளிக்கும்? சென்ற வருடம் நம் மாணவர்கள் இரண்டு பேர் பரீட்சைகளில் தேறி, ஆஃப்ரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் போனார்கள். அவர்கள் யூரோப்புக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் இடையே நிறைய தடவை பயணம் போகிறார்கள், தினமும் மாட்டு மாமிசமும், பாலாடைக் கட்டியும் சாப்பிடுகிறார்கள். நம் இலாகாவிலிருந்து பட்டம் பெற்ற இன்னொரு மாணவர், சீனா டைம்ஸில் இங்கிலிஷ் பதிப்பாசிரியராகப் பணி புரிகிறார். ஒவ்வொரு வருடமும் நாம் சில மாணவர்களை மாநிலத்து நிர்வாகத் துறைக்கு அனுப்புகிறோம், அங்கே அவர்கள் பன்னாட்டு வாணிபம், பண்பாட்டுப் பரிமாற்றம் மேலும் அன்னிய உறவுத் துறைகளை நிர்வகிக்கிறார்கள் – எல்லாரும் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். நீ இன்னும் இளைஞன். பலவகையான வாய்ப்புகள் உன் வாழ்க்கையில் கிட்டும். நீ அவற்றுக்கு உன்னைத் தயாராக்கிக் கொள்ளவில்லை என்றால், அவை எவற்றையும் கைப்பற்ற உனக்கு இயலாது. இப்போது இங்கிலிஷை ஆளக் கற்பதுதான் உன்னை நன்கு தயார் செய்து கொள்ள இருக்கும் ஒரே வழி, நீ அதை அறிகிறாயா?”

நான் பதிலளிக்கவில்லை.

“அதைப் பற்றி யோசி. உன்னை நாளை பார்க்கிறேன்,” என்றவர், அந்தப் பளுவான ஒலிப்பதிவு எந்திரத்தோடு வெளியேறினார், அதன் பாரம் அவருடைய கால்களைச் சற்று வளையச் செய்தது.

அவருடைய வார்த்தைகள் எனக்கு ஓரளவு ஊக்கமளித்தன. இந்தத் துறையின் மாணவர்கள் அயல் நாட்டு உறவுத் துறையில் வேலை செய்வார்கள் என்பதை இதற்கு முன் நான் கேட்டிருக்கவில்லை. அது வசீகரமான வேலை, வெளிநாடுகளில் பயணம் செய்ய வழி வகுக்கும். எதிர்காலத்தில் இதர நாடுகளுக்குப் போக வேண்டும் என்பது என் கனவு. சிறிது சிறிதாக என் மனதில் நம்பிக்கை ஒளி எழுந்தது. என் முக்கியப் படிப்புத் தேர்வை இனி மாற்ற வழியில்லை, அதனால் ஒருவேளை நான் இப்படிச் சோம்பித் திரிவது மோசமானது. இப்போது கூட வகுப்பின் இதர மாணவர்களை என்னால் எட்டிப் பிடித்து விட முடியும்.

மாணவர் விடுதிக்குத் திரு.ஃபங்கின் மூன்றாவது வருகையின் போது, அடுத்த நாள் வகுப்புக்குச் செல்லுமளவு நான் நலமடைந்து விட்டேன் என்று அவரிடம் சொன்னேன்.

நாளடைவில் நான் கவனமுள்ள மாணவனானேன். காலையில் 4.30 மணிக்கு எழுந்து, வராந்தாக்களிலும், விடுதி முன் அறைகளிலும் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி (வெளியில் போய் உலவ முடியாதபடி குளிர் அதிகமாக இருந்தது) என் பாடங்களை வாய்விட்டுப் படித்தேன், சொல் சேகரிப்புகளை, வழக்காறுகளை, சொல்லமைப்புகள் மற்றும் வாக்கியப் பாணிகளை உருப் போட்டேன். சில புதுமுக மாணவர்கள் என்னையும் விடவும் முன்னதாக எழுந்து படித்தார்கள். நேரத்தை மிச்சம் பிடிக்க, சிலர் இரவில் வகுப்பறையிலேயே தங்கினார்கள், எழுதுபலகைக்குக் கீழே இருந்த நீண்ட மேடைகளில், முழுதும் உடுப்புகளை அணிந்தபடியே மூன்று அல்லது நான்கு மணி நேரமே உறங்கினார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவில் விடுதிக்குத் திரும்புவார்கள். வெளியில் பார்த்தால், நாங்கள் அப்படி விழுந்து விழுந்து படித்ததற்குக் காரணம், எங்கள் தலைமுறையில் பெரும்பான்மையினருக்குக் கல்லூரிப் படிப்பு என்பது எட்டாத கனவாக இருந்தது, அதனால் எங்களுக்குக் கிட்டிய கல்லூரிப் படிப்பு வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்த முனைந்தோம் என்று தோன்றும். எங்கள் துறையினர் எங்களுடைய ஈடுபாட்டைப் பாராட்டினர். ஆனால், இத்தனைக்கும் அடியில் இருந்தது எங்களிடையே இருந்த கடும் போட்டிதான், ஏனெனில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றால், பட்டம் பெற்றதும் நல்ல வேலைகள் எங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதே காரணம். அவ்வளவு தூரம் இங்கிலிஷ் உச்சரிப்பைப் பழகியதில் என் தொண்டை மிகவும் அதிகமாக வேலை வாங்கப்பட்டதால் தினமும் வலி நிவாரணி மாத்திரைகளை நான் விழுங்க வேண்டி இருந்தது.  

கொஞ்ச காலத்தில் திரு.ஃபங் முழுப் பேராசிரியராக உயர்வு பெற்றார். எங்களுக்கெல்லாம் ஏமாற்றம் தரும் விதமாக, அவர் பாடம் நடத்துவதை விட்டு விட்டார். அந்தத் துறையில் அந்தச் சமயத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள்தான் இருந்தனர், திரு.ஃபங் அவர்களில் ஒருவராக இருந்தார். இளம் போதனையாளர்களாலும், மாணவர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்பட்டிருந்தார், அவர்களுக்கு வால்ட்ஸ் அல்லது டாங்கோ நடனங்களை எப்படி ஆடுவது என்று அடிக்கடி சொல்லிக் கொடுத்தார். வியாழக் கிழமைகளில் மாலைகளில் சில ஆசிரியர்கள் நடன விருந்துகளை நடத்துவார்கள், அதில் மாணவர்களாகிய நாங்கள் முழுதும் மூடப்படாது சிறிது திறந்திருந்த கதவு இடுக்கு வழியே அல்லது சாவித் துவாரம் வழியே மட்டுமே பார்க்க முடியும். இருப்பவர்களில் திரு. ஃபங்தான் சிறந்த ஆண் நடனக்காரர். அவருக்குத் தொப்பை இல்லை, ஆனால், நடனம் ஆடும்போது அவர் தன் வயிற்றை முன்னே துருத்தி வைத்துக் கொள்வார், தன்னை ஒரு தொப்பையுள்ள வர்த்தகரைப் போல ஆக்கிக் கொள்வார், இதன் மூலம் அவர் தன்னோடு இணைந்து ஆடும் பெண்களுக்கு அருகில் செல்ல முடிந்தது. நாங்கள் இவற்றால் எல்லாம் அவரை மிக உயர்வாகக் கருதினோம், அவர் நிஜமாகவே பல திறமைகள் கொண்டவர் என்று நினைத்தோம்.  அன்னிய மொழி இலக்கியங்களுக்கான எங்கள் வருடாந்திர மாநாட்டில், அவர் ஃபார் ஹூம் த பெல் டோல்ஸ் நாவல் பற்றி ஒரு நீண்ட கட்டுரையை முன்வைத்தார், அது எங்களுக்கெல்லாம் புதுத் திறப்புகளைக் கொணர்ந்தது, மாடர்ன் லிடரேச்சர் சஞ்சிகையில் பிற்பாடு பிரசுரமாகியது. அதற்கு முன் நான் ஹெமிங்வே பற்றிக் கேட்டது கூட கிடையாது.

என் இளங்கலை வருடங்களில் நான் மகிழ்ச்சியற்றிருந்தேன், ஏனெனில் அப்போது முழுவதுமே நான் இருப்பதில் மிகக் கீழ்நிலை வகுப்பில் இருந்தேன். இது என் சுயமதிப்பைச் சேதப்படுத்தியது. கீழ் நிலை வகுப்பு மாணவர்கள் இரு முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள், திறமையின் அடிப்படையில் வகுப்புகளில் பொருத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இரண்டு வருடங்கள் படித்த பிறகு, கீழ் நிலைப் பிரிவுகளில் இருந்த மாணவர்களில் பலர் முன்னேறி, மேல்நிலைப் பிரிவுகளில் இருந்த சில மாணவர்களை எட்டிப் பிடித்து விட்டிருந்தனர், அவர்களளவு இங்கிலிஷ் தெரிந்தவர்களாக ஆகி இருந்தனர், அந்த உயர்நிலைப் பிரிவு மாணவர்கள் எப்போதுமே பிரிட்டிஷ் அல்லது கனடாவைச் சேர்ந்த வல்லுநர்களிடம் படித்திருந்தனர்.

முசுக்கட்டைப் புழு போன்ற கண் புருவங்களும், வளைந்த கண்களும் கொண்டு காற்றில் ஆடக் கூடியவன் போல ஒல்லியாக இருந்த ட்சாங் மிங்சென், மூன்றாவது வகுப்பிற்கு தலை மாணாக்கன், எழுந்து நின்று சிரிப்புடன் சொன்னான், “ப்ரொஃபஸர் ஃபங், இது கேலிக்குரியது. எங்களை எல்லாம் புத்தி மழுங்கியவர்கள் என்று உணர வைத்திருக்கிறீர்கள். நாங்கள் எப்போதும் ஒரே நிலையிலேயேதான் இருக்கப் போகிறோமா? நாங்கள் ஏன் வளரக் கூடாது? நீங்கள் கூடத்தான் – அந்தஸ்தும், எடையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா?”

நாங்கள் எல்லாம் வெடித்துச் சிரித்தோம். மிங்சென்னை ஆத்திரமாக வெறித்துப் பார்த்தபடி, திரு.ஃபங் தன் உரை மேஜையை அடித்து விட்டுக் கத்தினார், “நீங்களெல்லாம் ஏதோ மார்க் ட்வெய்ன் என்பது போல நடிக்காதீங்க! நீங்க யார் கிட்டே பேசறீங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்!” அவர் தன் தலையை மெதுவாகத் திருப்பி, எல்லாரையும் முறைத்துப் பார்த்தார்.

மாணவர்களிடமிருந்து மேலும் சிரிப்பு எழுந்தது. திடுமென்று பேராசிரியர் ஃபங் கூட்டத்தை முடித்து விட்டு, தன் கருப்பான சிறகு வடிவ இழைகள் கொண்ட மேலங்கியிலிருந்து ஒரு வெள்ளைப் பருத்தி நூல் பிரிந்து தொங்கியதைக் கவனிக்காமல் அறையை விட்டுக் கோபமாக வெளியேறினார். அவர் அத்தனை ஆத்திரப்படுவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் மாறிவிட்ட மனிதராகத் தெரிந்தார், அடக்கமான, கடமையுணர்வுள்ள ஆசிரியராக இப்போது காணப்படவில்லை, ஏதோ தன் வாழ்நாள் பூராவும் உயர் பதவியில் இருந்த அதிகாரியைப் போலத் தெரிந்தார். உண்மையில், சமீபத்தில் புதிதாக அவருக்குக் கிட்டிய உப-தலைவர் பதவியைத் தவிர, அதிகாரம் உள்ள ஒரே ஒரு பட்டம்தான் அவருக்கு இருந்திருந்தது – வட்டார ப்ரிட்ஜ் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் பதவி அது. அதில் இரண்டு டஜன் உறுப்பினர்கள்தான், எல்லாரும் பழைய அறிவு ஜீவிகள், இருந்தனர்.

அடுத்த வசந்தத்தில், திரு. ஃபங் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரைக் கட்சியில் சேர்ப்பது குறித்து எனக்குச் சிறிது தயக்கம் இருந்தது, ஆனால், நான் மாணவர்களின் சார்பில்தான் அங்கு இருந்தேன், கட்சிக் கிளையில் நான் சிறுபான்மையில் இருந்தேன். அவர் என்னிடம் முன்பு பரிவு காட்டியதும், உதவியதும் நான் கட்சியில் இருந்த வெகு சில மாணவர்களில் ஒருவன், அவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கட்சிக் கூட்டங்களில் பேசக் கூடியவன் என்பதாலோ என எனக்கு ஐயம் எழுந்தது. வேறு விதமாகப் பார்த்தால், மாணவர் விடுதிக்கு வந்து எனக்குப் பாடம் நடத்தியதே, அவர் வருங்காலத்தில் கட்சி உறுப்பினராகும் வாய்ப்புக்கு என் ஆதரவைப் பெற அவர் திட்டமிட்டுச் செய்த வேலை என்று சொல்லலாம். என்ன ஒரு கணக்குப் போட்டிருக்கிறார்! ஆனால் இதெல்லாம் சான்று ஏதும் இல்லாத ஊகம்தான், அதனால் என் சந்தேகங்களை கட்சி உறுப்பினர்களிடம் நான் சொல்லவியலவில்லை.

அவரைப் பற்றிய என் சந்தேகம் இன்னொரு சம்பவத்தால் ஆழமாகியது, இது என்னை மிகவும் கிலேசத்துக்குள்ளாக்கியது. அடுத்த வருடம் நாங்கள் பட்டம் வாங்கியபோது, மிங்சென், திரு.ஃபங்கின் பார்வையில் சச்சரவுகளின் மூலகாரணியாக இருந்தவன், லுஒமி மாவட்டத்தில் ஒரு கரிச் சுரங்க நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பப்பட்டான்; எங்கள் துறையின் அந்த வருடத்து வேலை அமர்த்தல்களிலேயே மிக மோசமானது அதுதான். பட்டமளிப்பு தினத்து விருந்தின்போது மிங்சென் குடித்து போதை ஏறி, திரு.ஃபங்கைக் கத்தியால் குத்திக் கொல்லப் போவதாக அறிவித்தான். தன் மேலங்கியின் கீழ் நுனியை உயர்த்தி, அவனுடைய இடுப்பு வாரில் செருகப்பட்டிருந்த மிருக எலும்புப் பிடி கொண்ட கத்தி ஒன்றைக் காட்டினான், அதை அவன் நாடோடி வியாபாரி ஒருவரிடம் பதினைந்து யுவான்களுக்கு வாங்கி இருந்தான். துறையின் தலைவர்கள் உணவுண்ட இடத்தைத் திரும்பி நோக்கினேன். அவருடைய அதிர்ஷ்டம், திரு. ஃபங் அங்கு இல்லை, இருந்திருந்தால் அன்று மாலை நிச்சயம் தன் ரத்தத்தைப் பார்த்திருப்பார். மிங்சென் மயங்கிக் கிடந்த போது, அவனிடமிருந்து அந்தப் பெரிய கத்தியை நான் எடுத்து விட்டேன். அந்த ஆயுதத்தைக் கைவசம் வைத்திருந்தால் நிச்சயம் ஏதாவது ரகளை செய்திருப்பான். இரண்டு நாள்கள் முன்புதான் அவனுடைய காதலி, ஷென்யா(ங்) நகரில் இருந்த ராணுவக் கல்லூரி ஒன்றில் போதிக்க நியமிக்கப்பட்டவள், அவர்கள் பிரிந்துவிட வேண்டும் என்று கோடி காட்டி இருந்தாள். அவளுடைய மன மாற்றத்துக்குக் காரணம் திரு.ஃபங்கின் வஞ்சம் தீர்த்தல்தான் என்று அவன் நம்பினான்.

நல்ல வேளையாக நான் முதுநிலைப் படிப்புக்கான தகுதிப் பரீட்சைகளில் நன்றாகச் செய்திருந்தேன், அதனால் எனக்கு ஹார்பின் பல்கலையில் இங்கிலிஷ் துறையில் இடம் கிடைத்தது; பட்டம் வாங்கியதும் வேலையில் சேர எனக்கு அவசியம் இருக்கவில்லை, அதனால், திரு.ஃபங் மோசமான வேலை ஒன்றை எனக்குக் கொடுத்து என்னைத் தண்டிக்க முடியவில்லை. இல்லாவிடில் நானும் மிங்சென்னைப் போல கடுமையான ஒரு நிலையில் மாட்டிக் கொண்டிருப்பேன், ஏனெனில் திரு. ஃபங்கிற்கு கட்சியில் அவர் சேர்வதற்கு எதிராக நான் வாக்களித்தது தெரிந்திருந்தது. தவிர, நான் அந்த வேலை நிறுத்தங்களைப் பின்னிருந்து இயக்கினேன் என்று அவர் நம்பி இருக்க வேண்டும்.

ஹார்பினில் மூன்று வருடங்கள் நான் முதுநிலைப் படிப்பில் ஈடுபட்டபோது, இந்தக் கல்லூரியில் என்ன நடந்தன என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன், என் வருங்கால மனைவி, தன் பட்டப் படிப்பை முடித்தவுடன், அங்கேயே ஜப்பானிய மொழிப் போதனையாளராக வேலை ஏற்றிருந்தாள்.

திரு. ஃபங் அந்தக் காலகட்டத்தில் முன்னேற்றம் பெற்று வந்தார். நரெடிவ் டெக்னிக்ஸ் என்ற சஞ்சிகையை நிறுவினார், அதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும், ஏனெனில் பல வருடங்களுக்கு அது 90,000 வாசகர்களை அது எட்டியிருந்தது, இளைஞர்களைக் கவர்ந்திருந்தது, குறிப்பாக எழுத்தாளர்களாக விரும்புவோர் நடுவே. வடகிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் கல்லூரிகளில் அவர் உரையாற்றினார், அனேகமாக மேற்கின் மிக முன்னேறிய கலை நுட்பமாக ‘நனவுநிலை ஓட்ட’ எழுத்தைப் பற்றித்தான் அதெல்லாம் இருந்தன. அவர் புனைவுகளை எழுதவும் முயன்றார். அவருடைய சிறுகதைகளில் ஒன்று, ‘மழை பொழியும் மலைக்கு அப்பால்’ என்பது, சோகமான முக்கோணக் காதல் பற்றியது, ஒரு மாநிலப் போட்டியில் பரிசை வென்றது. அது நிறைய தடவை பல தொகுப்புகளில் சேர்க்கப்பட்டு விட்டது. நியாயமாகச் சொன்னால், அவர் திறமையான புனைவெழுத்தாளர்தான். அவருடைய புனைவுகளில் நாம் ஒரு வகை நாகரீகப்படாத தீவிர உணர்ச்சியையும், விவசாயிகளுடைய சூழ்ச்சித் திறனையும் பார்க்கலாம், அவை அனேக பல்கலையாளர் புனைவுகளில் காணப்படாதவை. உண்மையாகச் சொன்னால், அவர் புனைவுப் படைப்பில் முழு கவனம் செலுத்தியிருந்தால் தேர்ந்த நாவலாசிரியராக ஆகி இருப்பார் என்று நான் சில நேரம் எண்ணியதுண்டு. அவர் அந்தச் சஞ்சிகையின் பதிப்பு வேலைகளில் நிறைய நேரம் செலவழித்திருந்தார். அவருடைய சக்தி செலவழிந்து போய், துவக்கத்தில் அவருக்குத் தன் சிறு கதைகளால் கிட்டிய வெற்றி தந்த உந்துதலைத் தொடர்ந்து பெருக்க முடியவில்லை. ஒருக்கால் படைப்புக்கான தொலைநோக்கு அவரிடம் இல்லாததாலோ, அல்லது தன் பெருவிருப்பங்களை அவர் தவறான திக்கில் செலுத்தி, தன் சம காலத்தவரைவிட மேம்பட்ட நிலையைப் பெறுவதில் கிட்டும் தற்காலிகப் பெருமையடைந்ததாலோ அவர் நஷ்டப்பட்டார் என்று தோன்றுகிறது. தேர்ச்சி பெற்ற படைப்பாளியின் பாதையில் பயணிக்க அவர் ஒருபோதும் முனையவில்லை – ஒரு கனமான நாவலையோ, என்றும் நிலைக்கக் கூடிய பெரும் படைப்பையோ, ஓர் இலக்கியப் பிரிவையே மறுபார்வையிட்டு, அதற்குப் புத்துயிரூட்டக் கூடிய படைப்பையோ எழுத அவருக்கு நோக்கமில்லை. இனிமேல் அப்படி ஒரு புத்தகத்தை எழுத அவருக்குத் தெம்பில்லை என்று தோன்றுகிறது. அவர் எப்போதுமே சிறிய, குறுகிய அளவுள்ள படைப்புகளையே எழுதி வந்திருக்கிறார். சுருக்கமாக, அவர் காலம் தாழ்த்தி வந்தாலும் விகசிப்பு அடையக் கூடியவராகத் தெரிந்தார், ஆனால் அவர் முழு மலர்ச்சி பெறவில்லை.

அவருடைய சஞ்சிகைக்கு நான் தொடர்ந்து எழுதத் துவங்கிய பிறகு, அவருடன் எனக்கிருந்த உறவு மேம்பட்டது. அவர் என்னை நன்கு நடத்தினார், என் கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எப்போதும் பிரசுரித்தார், அனேகமாக எனக்கு எழுத்தாளர்களில் உயர் மதிப்புள்ளவர்களுக்குக் கொடுக்கும் சன்மானத்தைக் கொடுத்தார். அன்னிய மொழி இலக்கியத்திலிருந்து மொழிபெயர்ப்புகளையும், விமர்சனங்களையும் பிரசுரிப்பதைத் தவிர, நாரெடிவ் டெக்னிக்ஸ் சஞ்சிகை, சிறுகதைகளும், கவிதைகளும் உள்ள ஒரு பகுதியையும் பிரசுரித்தது. இந்த உருவமைப்பால் நான் சிறிது குழம்பினேன். ஒரு பல்கலைச் சஞ்சிகை எதற்காக புதுப் படைப்பான கவிதைகளைப் பிரசுரித்தது? திரு. ஃபங் கவிதையியலில் எந்தப் பயிற்சியையும் பெற்றிருக்கவில்லை. அந்தச் சஞ்சிகையில் எதற்கு ஒரு டஜன் பக்கங்களில் கவிதைகளைப் பிரசுரித்துக் கொண்டிருந்தார்? இந்த பொருத்தமின்மை பற்றி அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவர் வேறேதோ திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

1984 ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில், என் மேற்படிப்பை முடித்து விட்டு, என் முந்தையப் பல்கலைக்கு நான் திரும்பினேன், அங்கே என் வருங்கால மனைவி ஏற்கனவே போதனையாளராக இருந்தார். அப்போது பேராசிரியர் ஃபங்கின் சஞ்சிகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்று கேள்விப்பட்டேன், சில இளம் பெண்கள், அவர்களில் சிலர் மாணவர்கள், சிலர் போதனையாளர்கள்,  அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தனர் என்பது காரணம். சிலர், அவர் விருப்பத்துக்கு இணங்கினால்தான் தம் படைப்புகளைப் பிரசுரித்தார் என்று சொன்னார்கள், வேறு சிலர் அவர் விருப்பத்துக்கு இணங்க மறுத்ததால் தம் படைப்புகளைப் பிரசுரிக்க மறுத்தார் என்று சொன்னார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தப் பெண்களில் சிலர் தாமே இணங்கித்தான் அவருடன் ஓர் உறவில் ஈடுபட்டனர் என்று நான் சந்தேகப்படுகிறேன். இருந்தாலும், அவர்தான் அப்படி ஒரு முயற்சியை முதலில் செய்திருப்பார் என்பதை நான் மறுக்கவில்லை. அவருடைய மனைவி பல வருடங்களாக உடல் நலமில்லாதவராக இருந்தார்,  அவர்களுடைய திருமணத்தில் பாலுறவு என்பது இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தனிமையை உணர்ந்தவராகி, பாலுறவு விருப்பத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்த வெளி உறவுகளில் ஒன்று சிறிதும் மன்னிக்கப்பட முடியாததாக இருந்தது: அவர் ஒரு மாணவியைக் கர்ப்பமாக்கி விட்டிருந்தார், அதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் தரமில்லாத ஆணுறை என்பது. அந்தப் பெண்ணின் கருக்கலைப்பின் போது அங்கிருந்த ஒரு முதிய செவிலி, இந்த அவலத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பி விட்டார், ஒரே வாரத்தில் அந்த மாணவியின் கர்ப்பம் பற்றிய செய்தி ஊரெங்கும் பரவி விட்டிருந்தது. எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும், அவள் ஒரு துவக்க நிலைக் கவிஞர், நயம் நிறைந்த பெண் என்று சொல்லப்பட வேண்டியவள். பல்லாண்டுகளாக அவளுடைய அண்ணனின் நண்பனாக இருந்திருந்தேன். அவள் என்னை விட இரண்டு வருடங்கள் பிந்தைய வகுப்புகளில் படித்தவள். அவளுடைய ஒரு கவிதை எங்கள் அரங்கில் வாசிக்கப்பட்டிருந்தது, எனக்குக் கண்ணீர் வருமளவு நெகிழ்வைக் கொடுத்திருந்தது, அந்தக் கவிதையால் உடனடியாகப் பல இளைஞர்கள் அவள்பால் கவனம் செலுத்தத் துவங்கி இருந்தனர். அதன் தலைப்பு, ‘என்னிடமுள்ள அன்பு ஒன்றுதான் உனக்கானது’ , அது அத்தனை அருமையான கவிதை என்பதால் எங்கள் கல்லூரியின் வானொலி நிலையம் அந்தக் கவிதையை ஒரு வாரம் முழுதும் தினம் இரண்டு முறை ஒலிபரப்பியது. நேரில் பார்த்தால், அவள் அடக்கமானவளாகவும், எளிதில் முகம் சிவப்பவளாகவும் இருந்தவள், கண்கள் ஓர் ஆட்டுக் குட்டியின் கண்களைப் போல சற்று ஒளி மங்கிய கண்கள் கொண்டவள். அப்படி ஒரு நறுவிசான பெண், அவளுடைய விருப்பத்தை ஏற்று நடக்கத் தயாரான பல இளம் ஆண்கள் இருக்கையில், திரு. ஃபங்கைப் போல ஒரு வயதான ஆண் தன்னை பாலுறவுக்காகத் துழாவுவதை விரும்பி இருப்பாள் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. பிற்பாடு அவளுடைய சகோதரனிடமிருந்து எனக்குத் தெரிய வந்தது, பேராசிரியர் ஃபங் அவளுடைய பல கவிதைகளை கடற்கன்னி என்ற புனைபெயரில் பிரசுரித்திருந்தார் என்றும், அவருக்குத் தொடர்பிருந்த ஓர் அமெரிக்கப் பல்கலையில், அமெரிக்காவில் ப்ளூமிங்டன் நகரிலிருந்த இந்தியானா யூனிவர்ஸிடியின் ஒப்பீட்டு இலக்கியத் துறையில் உபகாரச் சம்பளத்துடன் அவளுக்கு நுழைவு பெற்றுத் தருவதாக உறுதி கொடுத்திருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அந்தப் பல்கலையில் அவருக்கு வலுவான தொடர்புகள் இருந்தன. ஓ, அந்த இளம் பெண்ணின் இதயம் சுலபமாக நிரம்பி வழிந்து விட்டிருந்தது.

திரு. ஃபங் இப்படி – கட்சியிலிருந்து கண்டிக்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்கள், துறையில் தனது உதவித் தலைவர் பதவியை இழந்திருந்தார்- அவமானப்பட்டிருந்தாலும், நான் அவரை வெறுத்து ஒதுக்கவில்லை. ஒரு நாள் ஓர் எளிய இரவு உணவுக்கு அவரை என் அடுக்ககத்துக்கு அழைத்திருந்தேன், என் வருங்கால மனைவி, ட்ஸிட்ஸிஹாருக்குத் தெற்கே, எண்ணை எடுக்கும் களம் ஒன்றில் கோடைக்கால வகுப்புகள் நடத்தப் போயிருந்தாள். யூஜீன் ஓ’நீலின் நாடகம் ஒன்றை மொழி பெயர்த்ததால் எனக்குக் கொஞ்சம் வருமானம் கிட்டி இருந்தது, எனவே நான் வறுத்த கோழி, குழலப்ப கொத்து, மாட்டுக்கறி இரண்டு பௌண்டுகள், தக்காளிகள், ஒரு சிறு பை வெள்ளைச் சர்க்கரை, உப்பிட்ட வாத்து முட்டைகள், மேலும் பத்து லிட்டர்கள் ட்ராஃப்ட் பியர் வாங்கி வைத்தேன். வேறு யாரையும் அழைக்கவில்லை, ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் திரு.ஃபங்கை அந்த சமயத்தில் சந்திக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் உண்டும், குடித்தும் கொண்டுமிருந்தபோது, அவர் தாராளமாகப் பேசத் தொடங்கினார். தன் மனைவி இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப்படுவதாகவும், அவருடைய மகன் நாஞ்சிங் பல்கலையிலிருந்து பட்டம் பெறவிருப்பதாகவும், அவன் பன்னாட்டு வர்த்தகத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறான் எனவும், ஷாங்காய் நகரில் ஒரு ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய மனைவியோ, தன் மகன் திரும்ப மூஜி நகரத்துக்கு வருவான், இங்கேயே திருமணம் செய்து கொண்டு தங்கி இருப்பான் என்றும் எதிர்பார்த்திருந்ததாகவும், அந்த வேலை வாய்ப்பு உயர்ந்த அளவு சம்பளம் கொண்டு வந்தாலும், அது வெகு தொலைவில் உள்ள நகரில் இருப்பதால் கவலைக்குள்ளாகி இருக்கிறாள் என்றும் தெரிவித்தார்.

திரு. ஃபங் வயதானவராகத் தெரியவே இல்லை என்பதை நான் கவனித்தேன். அவருடைய தலைமுடி இன்னும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருந்தது, அவருடைய முகத்துத் தசைகள் இன்னும் சுலபமாக அசைவனவாக இருந்தன. அவருடைய குட்டைக் கை வெள்ளைச் சட்டையின் பின்னே, அவரது வயிறு தட்டையாகவும், வலுவாகவும் இருந்தது. நாற்பதுகளின் துவக்கத்தில் இருப்பவரென்று நீங்கள் நினைப்பது எளிதாக இருக்கும். நான் அவரிடம் பாதி வேடிக்கையாகக் கேட்டேன், அவர் எப்படி இத்தனை இளமையாகத் தோற்றமளிக்கிறார் என்று. எனக்கு ஆச்சரியம் தரும் வகையில், அவர் தன் உள்ளங்கையை நெஞ்சில் பதித்துக் கொண்டு, ஊக்கத்தோடு பதில் சொன்னார், “முதலாவதாக, உனக்குப் பெரிய இதயம் வேண்டும், எதாலும் ஒருபோதும் மன அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது, நன்றாகச் சாப்பிட வேண்டும், மேலும் நன்றாகத் தூங்க வேண்டும். இரண்டாவது, வெப்பமாகவோ, குளிராகவோ எப்படி இருந்தாலும், தினம் காலையில் தேகப்பயிற்சி செய்ய வேண்டும்.” அவர் தன் கண்களில் சாதுரியமான ஒளியுடன் என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் ஓர் இரவு நேரத்து ஆந்தை, இரவில் வெகு நேரம் கழித்துத்தான் படுக்கப் போகிறேன், காலை நேரத்தில் தேகப்பயிற்சி செய்வதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்துவதில்லை என்று அவருக்குத் தெரியும். நான் மறுபடியும் அவருடைய நல்ல தேக ஆரோக்கியத்தின் மீது எனக்கிருந்த அபிமானத்தை அவரிடம் சொன்னேன்.

விரைவில் அவர் போதைக்குள்ளானார், அவருடைய நாக்கு கட்டுப்பாடிழந்தது. அவர் பெருமூச்சு விட்டார், “இப்பவே எனக்கு ஐம்பத்து மூணு வயசாயிடுத்து. என் வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சு போச்சு,” என்றார்.

“அத்தனை மனசை விடக்கூடாது நீங்க,” நான் சொன்னேன்.

“ நான் சீக்கிரமே செத்துப் போகப் போகிறேன். ஆ, எதையும் சாதிக்காமல் செத்துப் போவது என்பது. எத்தனை சோகமானது!”

“அட, இன்னும் கொஞ்சம் பெரிசா இதயத்தை ஆக்குங்க.”

அவர் கண்ணீர் மல்க, பரிதாபமாகத் தெரிந்தார். அவர் ஒரு பெயர் பெற்ற வல்லுநர், அவருடைய சக்திகளின் உச்சியில் இருக்கிறவர், இன்னும் நிறைய காலம் பிரகாசமான பயணம் காத்திருக்கிறது அவருக்கு என்றெல்லாம் சுட்டி அவரைத் தேற்ற முயன்றேன். நான் மேலும் சொல்லச் சொல்ல, அவர் இன்னும் மனமுடைந்தவரானார். “நான் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற பிறகு,” ஓர் அறை நிரம்ப இருந்த பார்வையாளர்களிடம் பேசுவது போல அறிவித்தார், “நான் ரஷ்யாவுக்குப் போய் அழகியல் பற்றிப் படிக்கப் போகிறேன் என்று கனவு கண்டேன். பிறகு ரஷ்யா நம் எதிரியானது, நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் – இங்கிலிஷைப் படிக்கும்படி, பாழாய்ப் போகிற இங்கிலிஷ், அது எனக்குச் சிறிதும் பிடிக்காமல் இருந்தது, டி.எச். லாரன்ஸை மூல மொழியில் படிக்கும் வரை அப்படித்தான் இருந்தது. இப்போது நம் நாடு கடைசியில் திறந்திருக்கிறது, ஆனால் நான் வெளிநாடு போய் மேல்படிப்பு படிக்கக் கூடிய வயதை எல்லாம் தாண்டி விட்டேன். உன்னை மாதிரி இளைஞர்களுக்கு நான் சற்றும் ஈடானவன் இல்லை, ரொம்ப வயதாகி விட்டவன்.” அவர் கண்ணீரில் கரைந்து போனார், குட்டையான விரல்கள் கொண்ட அவரது கையின் பின்புறத்தால் கன்னங்களைத் துடைத்துக் கொண்டார். “நான் ஒரு பி.எச்டி வாங்கி இருக்கணும், அல்லது குறைஞ்சது உன்னை மாதிரி ஒரு எம்.ஏ பட்டம் வாங்கி இருக்கணும்!” அவர் என் மேல்கையைத் தட்டிக் கொடுத்தார்.

அது உளறல். அவர் ஏற்கனவே துணைப் பேராசிரியராகி விட்டிருந்தவர். அவரைத் திசை திருப்ப, நான் இலேசாகப் பேச்சை மாற்றினேன், “அழறதை நிறுத்துங்க, சரியா? நீங்க ஒரு அதிர்ஷ்டக்கார ஆம்பளை, உங்களைச் சுத்தி எத்தனை இளம் பெண்கள் இருக்காங்க. உங்களளவு அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு இருக்கு?” நான் கொஞ்சம் குத்தலாகப் பேசியிருந்தேன், ஆனால் அவர் அதைப் புகழ்ச்சியாக எடுத்துக் கொண்டார், அல்லது அடுத்துப் பேசத் தூண்டுதலாகக் கொண்டார். சிரித்தபடி இன்னொரு கோப்பை பியர் ஊற்றிக் கொண்டார்.

(தொடரும்)


இரண்டாம் பகுதி இங்கே வாசிக்கக் கிடைக்கும்.

குறிப்பு: ஹா ஜின் அமெரிக்காவில், பாஸ்டன் நகரில் உள்ள பாஸ்டன் பல்கலையில், படைப்பு இலக்கியம் போதிக்கும் ஒரு பேராசிரியர். சீன அமெரிக்கர். இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும், ஒரு நீண்ட பேட்டிக்கும் இந்தச் சுட்டியைப் பார்க்கலாம்: https://www.theparisreview.org/interviews/5991/the-art-of-fiction-no-202-ha-jin

இவருடைய பல்கலையின் தளத்தில் உள்ள தகவல் பக்கம்: http://www.bu.edu/creativewriting/people/faculty/ha-jin/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.