
அந்தி சுருளத் தொடங்கியது. அவன் குடிலுக்கு அவ்வப்போது வந்து போகும் அந்த பட்சியும் கண்ணில் படவில்லை. இல்லை என்றே கருதக்கூடிய வனாந்திரம் அது. மூங்கில் கழிகளில் காற்று நுழைந்து சலசலத்து அந்த அடர் காட்டினை காட்டிக்கொடுக்கத் துவங்கியிருந்தது. தூயன் தன் குடிலில் இருந்த பந்தத்தை ஏற்றினான். பந்த வெளிச்சத்தில் குடில் முழுதுமாக நிழல் தழலாடியது. அந்த தழலாட்டத்தை வலக்கரத் தாலத்தில் சிரம் தாழ்த்திப் படுத்திருந்தவனாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை நாள் கேள்வி இது? செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தாயிற்று. இன்னும் என்ன யோசனை? நாளைப் பொழுது புலர்ந்ததும் சென்றுவிடவேண்டும். சூழ்ந்திருந்த காட்டு முனகல்களின் சுருதியிலேயே உறங்கிப்போனான்.
மூங்கில் கழிகளின் முறிவு சத்தம் கேட்டு எழுந்து கொண்டான். யானைகள் அவன் குடிலருகினில் இருந்த மூங்கில் தோட்டத்தை விட்டு அகன்று சென்றுகொண்டிருந்தன. பொழுது புலர்ந்திருந்தது. வெயிலின் முதற்கதிர் குடிலின் சன்னலுக்குள் நுழைந்து அதன் வழியில் இருந்த தூசி துரும்புகளை ஒளிரச்செய்துகொண்டிருந்தது. அந்த பட்சியை வேறு காணவில்லை. வழக்கமாக செல்லும் சுனைக்கே குளிக்கச்சென்றான்.
சுனையில் தணிந்த நீர். நீர்ப்பரப்பில் முக்கால் பங்கு காட்டுச் சருகுகளால் நிரம்பியிருந்தது. அருகில் இருந்த வெப்பாலை மரம் அதன் வெண்ணிற பூக்களை அந்த சுனையில் மேல் பரப்பில் சிந்தி இருந்தது. அவன் புலி நகங்களை பித்தான்களாகப் பதித்திருந்த தன் மான் தோல் ஆடையை களைந்து நீரில் இறங்கி துழாவிய படி குளித்தான். தான் செல்லவிருப்பதை அவன் மீண்டும் ஊர்ஜிதப் படுத்திக்கொண்டான். “ஆம் நான் செல்லவேண்டும்”. எங்கே எத்திசை என்றெல்லாம் அவன் அறிந்தவனாயில்லை. ஆனால் அவனுக்கு செல்ல வேண்டும். மலையிறங்கவேண்டும்.
குளித்து முடித்து தான் கொண்டு வந்த மூங்கில் குழல்களினால் வேயப்பட்ட கூடையை குளத்து ஆழத்தில் கிடைமட்டமாக முழுக்கி அரை மணிப்பொழுது காத்தான். நீருக்குள் அவன் கையில் எடையேறுவதை உணர்ந்தான். மூங்கில் குழல்களில் காற்று நுழைந்து நிரம்புவதனால் ஏற்படும் ஒலி போல நீருக்குள் அக்குழல்கள் மூழ்கிய பிறகு நீர் ஒழுகிச்சென்று நிரம்புவதனால்
ஏற்படும் ஒலி சுனை மீன்களின் செதில்களுக்கு சென்றடைந்து மீன்களை அதனைத் தேடி வரச்செய்யும். வெளியெடுத்த போது அக்கூடையில் ஐம்பது அறுபது துள்ளல்கள் தென்பட்டன. அனைத்தும் ஆரல் மீன்கள். நீர் ஒழுக சிறிது நேரம் அக்கூடையை கையில் வைத்துக்கொண்டான். பின்னர் தோள் மாட்டில் அதனை சுருக்குப் போட்டுக்கொண்டு ஆடையை சுற்றிக்கொண்டு தன் குடிலுக்கு கிளம்பினான்.
கூடையில் கொண்டு வந்ததை தன் குடிலின் முன்திண்ணையில் பரப்பி வைத்தான். அவனுக்கென அரைப்பங்கு மீன்களை எடுத்துக்கொண்டான். மீதியிருந்ததை பட்சிக்கென வைத்துவிட்டான். அவன் பங்கு மீன்களில் சில மீன்களை தீயில் வாட்டினான். மீதியை உப்புப்பாறையின் ஊற்று நீரை கொதிக்க வைத்து காய்த்து வடித்த உப்பு கொண்டு தடவி கட்டி எடுத்துகொண்டான். அரைத்து வைத்திருந்த கம்பு மாவை கூழாக்கி வாட்டிய மீன்களை அதற்கு தொட்டுக்கொண்டான். பின்னர், போகும் வழியில் தின்பதற்காக தன் தோள்மாட்டு உடும்பு தோல் சுருக்குப்பையில் மும்மரக்கால் தினைமாவினையும் கொஞ்சம் காட்டு வள்ளி கிழங்குகளையும் போட்டுக்கொண்டான். குடிலின் படலை சாத்தி அந்த பட்சி வந்துவிடுமா என்று சிறிது நேரம் பொருத்துப்பார்த்தான். வரவில்லை. மேலும் தாமதிக்காமல் மலையிறங்கினான்.
தூயன் அவனுக்கு நினைவு தெரிந்தநாள் முதல் இக்காட்டிலேயே தான் வசிக்கிறான். எந்த ஒரு மனித உறவும் மனித துணையும் இன்றி. அவன் தான் யாரென்றோ, எப்படி இக்காட்டில் இருக்கிறோம் என்றோ கூட அறிந்தவனாய் இல்லை. அவன் நினைவில் ஒன்று மட்டும் சிறு வயது முதல் நன்றாக பதிந்திருக்கிறது. ஒரு கைக்குழந்தை காட்டின் காய்ந்த இலை சருகுகளை உதைத்து அழுது கொண்டு இருக்கிறது. தன் கூருகிர்களைக் கொண்டு ஒரு பருந்து வந்து அக்குழந்தையின் தலை மாட்டில் அமர்ந்திருக்கிறது. அந்த பருந்தின் வெண்கழுத்தின் ஓயாத அசைவு அக்குழந்தையின் கண்ணுக்கு தென்படுகிறது. அந்த அசைப்பின் லயிப்பிலேயே குழந்தை அழுதோய்ந்து உறங்கிவிடுகிறது. பருந்தோ தன் இரு இறகுகளையும் உயர்த்தி பிடித்திருக்கிறது.
முதிராத சிறுவனாய் இருந்த காலத்தில் இக்காட்சியை அவன் சுமந்தலையாத நாட்களில்லை. அனுதினமும் நினைவுத் தொடர்களில் ஓட்டிப்பார்ப்பான். அக்குழந்தை அவனாகவும் அந்த பருந்து அவன் குடிலுக்கு அவ்வப்போது வந்து போகும் அந்த பட்சியாகவும் எண்ணிக்கொண்டு பொருத்திப்பார்ப்பான்.
பின்னர் இளமை ஏறிய பின்னர் தன்னுள் நிகழும் பருவ மாற்றத்தினை உணர்ந்தவனாகி இப்படிப்பட்ட கனவுகளுக்கு அவனிடம் இடம் இருந்ததில்லை. இப்படியொரு கனவை நீட்டிப்பது அபத்தம் என்று எண்ணத்தொடங்கினான். பருவமடைதல் வேறுவிதமான கனவுகளை அவனுக்கு தோற்றுவித்தன. முதிரா இளமையின் தனிமையில் அவன் தத்தளித்தான். அவ்வப்போது தொடைகளில் இடுக்கில் தன் விந்தின் ஈரப் பிசுபிசுப்பினை உணரும் போது அவனுக்கான துணையின் தேவையை அறிந்துகொள்வான்.
வேற்று மனித நெடி அவன் மீது இதுவரை பட்டதே இல்லை. ஒருமுறை இரவில் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கையில் தான் அவன் தன்னைப் போன்ற பிற மனிதர்களை கண்டிருக்கிறான். அவர்கள் வேட்டையாடிகள். வேட்டையாடிகளில் இருவர் மட்டும் அவ்வப்போது அக்காட்டுக்குள் வந்து போனவாறு இருந்தனர். ஒருமுறை அவர்களில் ஒருவன் தான் வேட்டையாடிய மானை தோலுரித்து மானின் கொம்பையும் தோலையும் ஊனையும் பிரித்தெடுத்துகொண்டிருந்தான். மற்றொருவன் விறகுகளைக் கொண்டு தீ மூட்டி வேறொரு மானின் ஊனை அதன் நெய் வழிய வாட்டிக்கொண்டிருந்தான். தூரத்தில் அவர்கள் பேசும் முணுமுணுப்பு சத்தம் கேட்டு தூயன் அவர்களை அணுகிச் சென்றான். அந்த தீயின் தழலாட அதில் அவர்கள் நிழல் தெரிய அவர்களை அவன் அறிந்து கொண்டான். அவர்களை அணுக அணுக அவர்களது பேச்சுமொழியும் அவன் வசப்பட்டது போல தெரிந்தது. அந்த மொழியை அவன் நினைவில் பதிந்திருந்ததைப் போல எளிதாக மீட்டுவிட்டான். எதோ நேற்று வரை பரிச்சியமாக இருந்து தொலைந்து போனது இன்று கிடைத்தது போல அவன் எளிதில் அந்த மொழியை சென்றடைந்தான். இப்படி பலமுறை அந்த இரு வேட்டையாடிகளை பின் தொடர்ந்து மொழியின் வாகினை அறிந்து கொண்டான். மேலும் தினை, சாமை போன்ற மலைச்சரிவில் விளையும் தானியப் பயிர்களைப் பற்றி அறிந்து கொண்டான். வேட்டையாடும் உத்தியை கற்றுக்கொண்டான். அவன் தன்னை அவர்களின் மூன்றாம் நபராகவே எண்ணிக்கொண்டான். பலமுறை அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் யார் இவர்கள் என்று அறிய அவர்களோடே மலையிறங்க முயற்சி செய்திருக்கிறான். ஆனால் எல்லா முறையும் சரியாக காட்டின் விளிம்பில் அவன் அவர்களை வழி தொலைத்துவிடுவான். காடு அவனை தன்னோடே வைத்திருக்க எண்ணியிருக்கிறதோ என்னவோ?
ஒருமுறை நேராக அவர்கள் முன்பு சென்றுவிடலாம் என்று கூட எண்ணியிருக்கிறான். அவர்கள் அவனை எப்படி எதிர்கொள்வார்கள் என்று அஞ்சி விலகியிருக்கிறான். ஆனால் அந்த பட்சி அவனுக்கு உற்ற துணையாக இருந்து வந்தது. இவன் காட்டில் எங்கு சென்றாலும் அவனது இடந்தேடி வந்துவிடும். அவன் தோள்பட்டையில் வந்து அமர்ந்து கொள்ளும். அதன் இறகுகளின் சடசடப்பில் அவன் அந்த காட்டில் பத்திரமாக இருந்தான்.
ஒருமுறை, வேட்டையாடிகளுள் ஒருவன் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தான். அந்த வேட்டையாடி தன் சக வேட்டையாடி நண்பன் எப்படி இறந்து போனான் என்றும் அவன் இழப்பை எண்ணியும் ஊன் வாட்டுகின்ற தீயின் முன்பு விசும்பிக்கொண்டிருந்தான். அந்த தீயில் தழலில் அந்த வேட்டையாடியின் நிழல் நீண்டு ஏறியிருந்தது. மனிதனுக்கு தனிமையில் நிழல் துணையாகிறது. அந்த வேட்டையாடி தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளமுடியாமல் கள் கலயத்தை வாயில் சாய்த்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். தூயன் அவனது நிழலின் உரு மாற்றங்களையே பார்த்தவனாய் இருந்தான். தனிமை என்னும் தன்னிலையை அவனுக்குள் ஆழ ஊன்றியது அந்நிகழ்வு.
ஒரு மாலை வேளையில் எப்போதும் தான் நீராடச் செல்லும் சுனைக் கரைக்குச் சென்றபோது தற்செயலாய் அதனை உணர்ந்தான். அவன் சுனை நீரள்ளி முகத்தில் தெளித்த போது. நீரின் பிரதிபலிப்பில் வான் நீலத்தோடு அசைந்தாடும் உச்சி மரங்களின் கிளைகள் தெரிந்தது. ஆனால் துணுக்குற்றவனாக இருந்தான். ஒன்று குறைகிறது. அருகில் இருந்த வெப்பாலை மரத்தின் பிம்பத்தை பார்க்க முடிந்தது. அவனது பிம்பத்தை பார்க்க முடியவில்லை. தன் இரு கண்களைக் கொண்டு உற்று நோக்கினான். எங்கே என் பிம்பம்? நீர் நிலையை இரு கைகளாலும் துழாவிப் பார்த்தான். அவனது பிம்பமே இல்லை. வெறும் வானம் தான் கலைந்தது. இது நாள் வரை தன் பிம்பத்தைப் பற்றிய ப்ரக்ஞை அவனிடம் இருந்ததே இல்லை. நாம் ஏன் இப்படி செய்கிறோம் என்று முதலில் எண்ணிக்கொண்டான். அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை. இது நாள் வரையிலும் தான் அவன் கண்டதே இல்லை. அதனை அவன் நன்கு உணர்ந்திருந்தான். இப்போது மட்டும் ஏன் அவனுக்கு தோன்றியது?
அவசர அவசரமாக தன் குடிலுக்கு வந்தான். வழமை போல தீப்பந்தம் ஏற்றி வைத்து அதன் முன்னால் உட்கார்ந்தான். எத்தனையோ பொழுதுகள் அவன் அப்படி அமர்ந்திருக்கிறான் தான். அவனது நிழல் கீழே சாயவில்லை. அன்று தான் அவன் அதை உணர்ந்தான்.
எங்கே என் நிழல்?
அவனுக்கு நாம் எப்படி இருக்கிறோம் என்றே அவ்வளவு நாள் தோன்றியிருக்கவில்லை. எந்த வடிவத்தில் எவ்வுருவில் என்ற ப்ரக்ஞையே இல்லை. அவன் அவனது பிம்பத்தையோ நிழலையோ உணர்ந்தவனாகவே இல்லை. அது சரி தான். நம்மில் எத்தனை பேர் தான் நம் நிழலை ப்ரக்ஞையுடன் அனுகணமும் அணுகியிருப்போம்? நிழல் நம்மில் இருந்து எளிதாக மறக்கப்படக் கூடிய ஒன்றுதானே? உண்மையான தனிமை என்பது இது தானோ என்னவோ? அவன் மனிதர்களிடமிருந்து மட்டும் தனியன் ஆக்கப்படவில்லை. அவன் தனக்குள்ளேயே தனியனாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறான். இல்லை இல்லை தொலைக்கப்பட்டிருக்கிறான்.
அடுத்த நாள் அந்தி எழுகைக்குப் பிறகு ஒவ்வொரு நிழலாய் சென்று கண்டான். மரத்தின் நிழலைக் கண்டான். மலையின் நிழலைக் கண்டான். பூவின் நிழலைக் கண்டான். புல்லின் நிழலைக் கண்டான். தன் நிழல் மட்டும் எங்கே போனது? இக்கேள்வியே அவனை இல்லாமல் ஆக்கியது. பின்பு உணர்ந்தான். தன்னை சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பிம்பமும் நிழலும் உண்டு என்பதை. ஒரு பருப்பொருள் தன்னை நிழலாகவும் பிம்பமாகவும் கூடத்தான் பூமியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. இப்பிரபஞ்சத்தில் ஒளியை வாங்கக் கூடிய அனைத்தும் பிம்பமும் நிழலும் கொண்டிருக்கத்தானே செய்யும். அப்படி என்றால் தான் யாரென்று, இல்லை, இல்லை தான் என்னவென்று தன்னிடமே கேட்டுக்கொண்டான். நான் பூதாகாரமான சிருஷ்டியா? மனிதன் தானா? இல்லை பேயா? உண்மையில் இருக்கிறேனா? உடல் கொண்டு இருக்கிறேனா? இல்லை ஆன்மமாய் அலைகிறேனா? ஒன்றுமே விளங்கவில்லை. என்னை எந்த மனித கண்களுமே உணர்ந்தது இல்லையே. அணுகி வந்ததும் இல்லையே. அன்றே அந்த வேட்டையாடிகளின் முன்பு போய் நின்றிருக்கலாமோ? அவர்கள் ஒருவேளை என இருப்பை அங்கீகரித்திருக்கக்கூடுமோ இல்லை அவர்களுக்கு நான் தெரியாமலேயே போயிருந்திருப்பேனோ?
பிரபஞ்சத்தில் ஒரு பொருளுக்கு சாட்சியானது அது சாய்த்தும் நிழல் தானே. எனக்கு அது இல்லையே? என்ன வகை சாபம் இது? என்ன நிவர்த்தி இதற்கு?
காற்றுக்கு நிழல் உண்டா ? நீருக்கு நிழல் ? பிரபஞ்சத்தின் ஒளியை நான் உள்வாங்கிகொள்ளவே இல்லையா? அது என் மேல படவேயில்லையா?
என்னை அது நிரப்பவில்லையா? என் நிழலுக்கு எங்கே போவேன்? அந்த பட்சிக்கு நான் எவ்வாறு என் இருப்பை உணர்த்துகிறேன்?
போதும் போதும் என்று தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான். மனித துணை நாடிய அவனுக்கு தன் நிழல் துணை நாடவேண்டியதாயிற்று.
அவன் தன் நிழலை தேடிச் செல்வது ஒருவகையில் பூமியில் தன் இருப்பை நிலைக்கொள்ளச் செய்ய செல்வது தானே. நிழலில்லாதவன் எவரேனும் உண்டா? நிழலில்லாமல் போனால் அவன் பூமிக்கு உரியவன் என்கிற தகுதியை இழக்கிறான் அல்லவா? பூமி அவனது இருப்பைத் தானே நிழலாய் கிடத்துகிறது. நிழலென்பது இருப்பின் தடயம் தானே.
தூயனை அவன் காடு வழிவிட்டது. எத்தனையோ தடவை வழிமாற்றி அவனை சுற்றலில் விட்ட அந்த காடு இப்போது அவனுக்கு வழிவிட்டது அவனுக்கு ஆச்சரியத்திற்குரியது தான். பல காடு மேடுகள் கடந்து பொழுது புலரியின் போது கழனிகள் நிறைந்த ஊருக்கு வந்தான். கழனிகளில் மும்முரமாகியிருந்த மனிதர்கள் நிழலுருக்களாக புலரியொளியில் தெரிந்தனர். அவர்களைப் பார்த்தவனாகவே தெரியவில்லை. தான் தேடிவந்தது இங்கில்லை என்பவனைப் போலவோ அந்த மனிதர்களின் இருப்பை இவன் உணராதவன் போல கடந்து சென்றான். அவனுள் இருந்து எது அவனை செலுத்துகிறது? எதன் பாதையில் இயங்கிகொண்டிருக்கிறான்?
இருகாத தூரத்தில் அவன் ஒரு சிற்றூரைக் கண்டடைந்தான். அப்பால் பாலைவெளி இப்பால் மருத நிலம். மருதம் அடிக்கு அடி பாலையாகி போவதை அவன் உணர்ந்தான். பாலையின் விளிம்பில் அவ்வூருக்கு மேலே முகில் கணம் மூடியிருந்தது ஒரு பிறை நுதல் போல அல்லது சிறகு விரித்த எதோ ஒரு பறவை போல. அம்மேகம் எப்போதைக்குமென நிற்பது போல தோன்றியது அவனுக்கு. வானத்தின் ஒளி அம்முகில் கணத்தினுள் கொஞ்சமாக ஊடுருவியிருந்தது. பிறைக்கு இருபக்கங்களிலும் வெயில் பொழிந்துகொண்டிருந்தது.
ஊரின் எல்லையில் மக்கள் நடமாடிக்கொண்டிருந்ததைக் கண்டான். அந்தக் காட்சி விசித்திரமாகப்பட்டது அவனுக்கு. ஊரின் எல்லைக்குள் நுழையும் வரை மக்கள் நிழல் கொண்டிருந்தனர். ஊருக்குள் நுழைந்ததும் நிழல் மறைந்து விட்டது. மேலும் அவ்வூரில் மேகம் கவிந்தமையால் தனித்த எந்த நிழலும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டான். ஆனால் மற்றொரு காட்சி அவனை விசித்திரப்படுத்தியது. ஊருக்குள் நுழைவதற்கு முன் மக்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி விலகி நடந்துகொண்டிருந்தனர். அவன் மனிதர்கள் அனைவரும் கூடி வாழும் இயல்பினைக்கொண்டவர்கள் தானே? இல்லை தான் தான் அப்படி அனுமானித்துவிட்டோமா? கூடிக்கூடி வாழும் மக்களிடையே இருக்கும் இருந்த விசித்திர விலக்கம் ஏன்? என்று எண்ணினான்.
அவ்வூரின் எல்லையில் பரந்து விரிந்த அரசமரம் ஒன்றைக் கண்டான். அதன் அடியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இலைகள் அற்று வெற்று கிளைகளை கொண்டிருந்தது அம்மரம். வெற்றுகிளைகளில் ஓரிரு இலைகள் ஒட்டிக்கொண்டு சலசலத்தன. சற்று தொலைவில் இருந்த அவனுக்கு அந்த சலசலப்பு ஒலி கேட்கவில்லை. கீழே விழுந்திருந்த அவ்விலைகளின் நிழலாட்டத்தைக் கண்டான். அந்த அசைவுகளைக் கொண்டு அந்த சலசலப்பின் சத்தத்தினை நிரப்பமுடிந்தது அவனால். ஊருக்குள் உடனேயே உள் நுழைய அவன் தயக்கம் காட்டினான். எனவே மரத்துப் பக்கம் தஞ்சம் புகுந்தான்.
திடுக்கிட்டு எழுந்து கொண்டான் ஆதிரன். உச்சிப்பொழுதில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மரக்கிளையில் கண்ணயர்ந்தவன் எவராலோ மிதிபட்டவன் போல விழித்துகொண்டான். எவரென்று சினம் கொண்டு பார்த்தான். மரத்திற்கு கீழே தூயன் அமர்ந்துகொண்டிருந்தான்.
மேலிருந்து, “ஆளிருப்பது கண்ணுக்கு புலப்படவில்லையோ?” என்றுவிட்டு மரத்தைவிட்டு கீழே குதித்தான் ஆதிரன்.
திடுக்கிட்ட தூயன் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தான் சிறிது நேரம். இரு வேறு குழப்பங்கள் அவனுக்கு. ஒன்று தன்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட தன் இருப்பை அங்கீகரித்துவிட்ட சக மானிடன். பிறிது, எதற்கு அவன் தன்னை திட்டுகிறான் என்கிற குழப்பம்.
“என்ன சொல்கிறீர்கள்? என்ன ஆனது? என்ன ஆனது அப்படி?”
“ஆள், பார்த்து வரமாட்டீர்களோ ? என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டாயே”
“நான் உங்களை எழுப்பவில்லையே. நீங்கள் மேலிருந்து தானே குதித்தீர்கள்”
“மிக்க நன்று. நான் மேலே படுத்திருந்தாலும் என் நிழல் தரையில் வீழ்கிறது அல்லவா? அது உனக்கு தெரியவில்லையா? அதையும் பார்த்து நடக்கவேண்டும்”
“தங்கள் நிழலை நான் உணரவேயில்லை” தூயன் நகைத்தான். அது ஆதிரனை நினைத்து அல்ல. அவனையே நினைத்து. அவன் நிழலையே உணராதவனுக்கு பிறர் நிழல் எப்படி புரியும்? “தங்கள் நிழலில் என் கால் பட்டா நீங்கள் எழுந்துகொண்டீர்கள்?” என்று கேட்டான்.
“ஆம்.”
“மன்னிக்கவும்” என்றான் தூயன் ஆதிரனிடம். ஆதிரன் சற்று இளகினான்.
பின்னர் “எப்படி அது? ” என்றான் ஆதிரனிடம்.
“இந்த ஊரில் பிறந்த மக்களின் நிழலுக்கே உணர்ச்சி உண்டு. அது ஒரு பழங்கதை. அதோ பார்த்தாயா எங்கள் ஊர் மக்கள் நடந்து செல்வதை?” என்றான் ஆதிரன்.
தூயன் தான் முதல் பார்த்த காட்சியை நினைவு கூர்ந்தான்.
“அவர்கள் ஒருவரின் நிழலை மற்றொருவர் மிதியாமல் செல்கிறார்கள். இவ்வூரில் மனித நிழலுக்கு அப்படியொரு மதிப்பு. ஒரு மனித உடல் மற்றொரு மனித நிழலைத் தொடுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை. எங்கள் ஊரில் நாங்கள் வழிபடுவது நிழலையும் தான்.” என்றான் ஆதிரன்.
தூயன் தான் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் ஆதிரனிடம்,
“இந்த ஊரின் பெயர்?” என்றான்.
“நன்றாக இருக்கிறது. அது தெரியாமலா வந்தாய்?” தூயன் புன்னகைத்தான். “நிழலூர்” என்றான் ஆதிரன்.
“உங்கள் பெயர்?”
“ஆதிரன்”.
“நான் உங்களுக்கு தெரிகிறேன் தானே?” என்றான் தூயன்.
“என்ன கேள்வி இது? நான் என்ன பூதப்பேயிடமா பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சட்டைசெய்யாமல் ”வெளியூர்காரர்களுக்கு இந்த ஊரைப் பற்றி தெரிந்திருப்பதே இல்லை. பலகையில் எழுதி ஒட்டி வழியெங்கும் வைக்கவேண்டும்”
ஆதிரன் அகன்று சென்றான். தூயன் ஆதிரனின் நிழலில் கால் படாதவாறு அவனை பின் தொடர்ந்தான்.
“என்னை ஏன் பின் தொடர்கிறாய். உன் பெயர் என்ன?”
“தூயன்”
“எந்த ஊரையா நீ? ஆள் பார்ப்பதற்கு விலக்கமாக உள்ளாயே? காட்டிலிருந்து இறங்கியவனாக தெரிகிறாயே? ஊருக்கு புதிதோ?”
“ஆம், புதியவன் தான். அதோ தெரிகிறதே வரிவரியாக கரிய நிற திட்டுகள். அவை வானக்கோடுகளோ முகில்தீற்றல்களோ இல்லை. அவை மலைச்சரிவுகள். அந்த சரிவொன்றிலிருந்து வருகிறேன்.
“உங்கள் குலம்? தாய் தந்தையர்?”
“நான் குலமில்லாதவன். தாயில்லாதவன். தந்தையும் இல்லாதவன்”
“இங்கு இல்லாதவர் என்று எவருமில்லை. அறியாதவர் தான் உண்டு” என்றான் ஆதிரன் ஆதரவாக.
“நன்று” என்றான் தூயன்.
“எதற்காக விழைந்து வந்துள்ளீர்கள்?”
“என் நிழலைத் தேடி வந்துள்ளேன். நான் நிழலில்லாதவன்”
“என்ன, என்ன?”
“நான் நிழலில்லாதவன்”
“அப்படியா? நிழலில்லாமல் ஒரு மனிதன் இருக்கமுடியுமா என்ன?” என்று தூயனைச் சுற்றி ஆதிரன் தன் பார்வையை வட்டமடித்தான்.
தூயனின் நிழல் அவன் கண்ணுக்குப்படவேயில்லை.
“ஆம், இருக்க முடியும் அதற்கு நானே சான்று. அதனால் தான் வந்தேன்”
“என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி இது சாத்தியம்? நீங்கள் வந்த திசைக்கு எதிர்திசையில் சுடும் பாலை. இவ்வூரே பாலையின் விளிம்பில் அமைந்திருக்கிறது. பாலைக்கு அப்பால் இருந்து பாலையை கடந்து வருபவர்கள் இந்த நிழலூருக்கு வந்து கொஞ்சம் கண் அயர்ந்து செல்வார்கள். உச்சி வெயிலை மேகம் எப்போதுக்குமாக மறைத்து வைத்திருக்கிறது இந்த ஊரில். இந்த நிழல் பாலையை கடந்தவர்களுக்கு சற்று ஆசுவாசம் அளிக்கிறது. ஆனால் நீங்கள் நிழலினைத் தேடி வந்துள்ளீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.” என்றான் ஆதிரன்.
சிறிது நேரங்கழித்து “சரி எப்படி உங்கள் நிழலை கூட்டிக்கொண்டுப் போகப் போகிறீர்கள்?” என்றான் தூயனிடம்.
“அது தெரியவில்லை. இனிமேல் தான் தெரியவரும். அதுவரை உங்களுடன் நான் தங்கிகொள்ளட்டுமா?” என்றான் தூயன்.
ஆதிரன் முறுவலித்தான். இவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டு தூயன் கேட்டது அவனுக்கு உவப்பானதாக இருந்தது.
“தாராளமாக” என்றான்.
தூயன் ஆதிரனின் குடிலில் தங்கிகொண்டான். பொழுது ஓய்ந்த போது வெளியே கழுத்துமணிகளின் சத்தம் கேட்டது. ஆதிரனின் ஆடுகள் அவன் குடிலுக்கு பின்னால் இருந்த மந்தைக்குள் நுழைந்து கொண்டிருந்தன.
ஆதிரனும் தூயனும் நண்பர்களாகி விட்டிருந்தார்கள். ஆதிரன் பந்தத்தினை கொளுத்தி கூரைக்குள் சொருகினான்.
பின்னர் அரிசி சோறு பொங்க உலையை கொதிக்க வைத்தான். தூயன் கொண்டுவந்த தினைமாவையும் கிழங்குகளையும் உப்பேறிய ஆரல்மீன்களையும் ஆதிரனிடம் தந்தான். ஆதிரனும் வாங்கிக்கொண்டான்.
ஆதிரன் கேட்டான் “உனக்கு தான் யாருமில்லை அங்கே என்றாயே? பிறகு உனக்கு யார் இப்படி பெயர் வைத்தார்கள்?”
“எனக்கு நானே வைத்துக்கொண்டது. வேட்டையாடிகள் பேசிக்கொள்வதைக் கேட்டுக்கொண்டிருந்ததில் இம்மொழி பரிச்சயமாகியது.
அவர்கள் ஒருவர் மற்றொருவரை எதைக் கொண்டோ விளித்தனர். என்னையும் அடையாளப்படுத்திக்கொள்ள எதோ ஒன்று தேவை என்றுபட்டது. ஆனால் என் பெயரை அவ்வார்த்தையை நானே தான் சென்றடைந்தேன். அவர்களிடமிருந்து பெறவில்லை.”
“சரி. உண்மையிலேயே உன் நிழல் எங்கே? நீயே எங்கேயாவது ஒளித்துவைத்திருக்கிறாயா? இதோ பார் என் நிழல் இந்த விளக்கொளியில் இந்த குடிலை நிரப்பியிருக்கிறது பார்” என்று தன் நிழலை காண்பித்தான் ஆதிரன்.
“நிழலை உன் உள்ளங்காலில் ஒரு பொட்டு போல ஒட்டி ஒளித்துவைத்திருக்கிறாயா என்ன? காண்பி“ என்று விளையாட்டாக தூயனின் காலை தூக்கிப்பார்த்தான். நிழலூரைப் பற்றிய ஆச்சரியத்தை தூயனும், தூயனைப் பற்றிய ஆச்சரியத்தை ஆதிரனும் தத்தமது நட்பு வெளிப்பாடுகளில் எள்ளல்களில் கேலிக்கிண்டல்களில் கடந்து சென்றனர்.
இரவுணவுக்குப் பின் இருவரும் படுத்துக்கொண்டனர். ஆதிரனிடம் தூயன் கேட்டான் “எதோ ஒரு பழங்கதை என்று சொன்னாயே அது என்ன?”
ஆதிரன் சொல்ல ஆரம்பித்தான். முன்பு எப்போதோ தலைமுறைகளுக்கு முன்னர் நடந்த கதை. ஆனால் சமீபத்தில் நடந்தது போன்று எங்கள் மனதிற்கு தோன்றும். இந்த ஊரை அடுத்து இருக்கிறதே அந்த பாலை அது இல்லவே இல்லை. முழுவதும் மருத நிலமாகவே இருந்தது. தூரத்தில் எங்கோ கிடந்தது அந்த பாலை. இவ்வூர் செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது. ஊர்த் தலைவர் நிகரற்ற தலைவராக இருந்தார். மக்களை நன்றாக அவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இந்த ஊரும் இப்போது போல சுருங்கியில்லை. ஊரின் நலனுக்கும் ராஜ்ஜிய விஸ்தரிப்புகளுமே அவருக்கு குறிக்கோளாய் இருந்தது. சுத்தியிருக்கும் அத்தனை ஊர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இங்கே அவருக்கென ஒரு மாளிகை கட்டிக்கொண்டார். எந்த விதத்திலும் குறைவில்லாமல் பளிங்குகளாலும் கண்ணாடிகளாலும் இழைத்து எழுந்தது அந்த மாளிகை. அப்பளிங்கு தளங்களிலும் கண்ணாடி தளங்களிலும் அவரது பிம்பங்கள் படுவது போல அம்மாளிகை எங்கிலும் அமைத்தார். வெளியில் இருந்து அம்மாளிகையைப் பார்க்கும் மக்கள் எங்கு பார்த்தாலும் அவரை உணர்வார்கள்.”
ஊர்த் தலைவருக்கு வயது ஏறிச் சென்றுகொண்டிருந்தது. எப்போதும் அலுவல்கள் ஆட்சிப் பொறுப்புகள் என்று அலைவார். சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்தனர். அவர் நாற்பது வயதை நெருங்கியபோது அவரது தாய் அவரது நிலையைக் கண்டு விசனப்பட்டார். இப்படி அந்தரங்கமே இல்லாமல் எவ்வளவு நாள் இவன் இப்படி இருப்பான் என்று எண்ணிக்கொண்டார். ஊர் தலைவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய எண்ணினார். ஊர்த்தலைவர் முதலில் அதற்கு ஈடுபாடில்லாமல் மறுத்துவிட்டார். பின்னர் தாயினை சமாதானப்படுத்த ஒத்துக்கொண்டார். எங்கிருந்தோ ஒரு பெண்ணை அவருக்கு கட்டிவைத்தார் அவரது தாயார். வந்த பெண்ணோ அபலை. மிகவும் நல்லவள். அவர்களின் திருமணம் முடிந்து ஓராண்டுக்குள்ளேயே ஊர்த்தலைவரின் தாயார் நோயுற்று இறந்துவிட்டாள். ஊர்த்தலைவரும் தன் அலுவல்களின் இடையே கிடையாய் கிடந்தார். தன்னை நம்பி வந்த பெண்ணை கண்டு கொள்ளவேயில்லை. அவள் யோசித்தாள், “இவருக்கென தனிமையும் அந்தரங்கமுமே இல்லையா? ஏன் என்னை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்?” என்று, பின்பு அவளே சமாதானப்பட்டுக்கொண்டாள். அவளும் அவரிடம் வெளிப்படையாக இதைப்பற்றி கேட்கத் துணியவில்லை. அவளுக்குள்ளே புழங்கிக்கொள்வாள்.
நாட்கள் கடந்தன. அவளது தாப எடை கூடிக்கொண்டு வந்தது. அவள் அவரது பிம்பங்களையும் நிழலையும் கண்டு காமமுறுபவளாக மாறினாள். அவற்றைக்கொண்டே களிப்புற்றாள். அவர் நிழல் பட்டாளே உடல் கூசுபவளாக மாறினாள். மாற்றிக்கொண்டாள் எனலாம். ஒருநாள் ஊர்த்தலைவருக்கு மாளிகையிலிருந்து செய்தி வந்தது அவள் கருவுற்றிருக்கிறாள் என்று. அந்த கரு எவருடையது என்று அவர் யோசித்தார். அவளை நல்லவள் என்று அவரும் நம்பித்தான் இருந்தார். பிரசவம் வரை அவர் காத்திருந்தார்.
கருவும் பிரசவித்தது. அனைவரும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென சொல்லிவிட்டுச் சென்றனர். மனைவியும் மகிழ்ந்தாள். அவளது மகிழ்ச்சி அவரை சீண்டியது. அவருக்கு நிகழ்வது எதுவுமே புரியவில்லை. அவளிடமே அவர் கேட்டார். “இந்த பிள்ளைக்கு தகப்பன் யார்?” அவள் “நீங்கள் தான்” என்றாள். மேலும் கேட்கமுடியாமல் அவர் தத்தளித்தார். பின்னர், தாந்திரீகன் ஒருவனை வரச்செய்து விஷயத்தினை கேட்டறிந்தார். தாந்திரீகன், “நீங்கள் தங்கள் மனைவியை கண்டு கொள்ளவேயில்லை. அதனால் உங்கள் நிழலையே நீங்கள் என நினைத்து உங்கள் மனைவி காமமுற்றுவிட்டாள். உங்கள் நிழலையும் உங்களையும் அவளால் பிரித்தறிய முடியவில்லை. பாவம். அவள் அபலை.” என்றான்.
அவர் அவனிடம் கேட்டார். “நிழலுக்கு இத்தனை வீரியம் உண்டா?” தாந்திரீகன் பதில் சொன்னான், “உங்கள் அந்தரங்கத்தை நிஜம் தான் தொலைத்திருக்கிறது. நிழல் இல்லை”. ஊர்த் தலைவர் துணுக்குற்றார். ஆனால் அவரது ஆட்சிப் பணிகளை செவ்வன ஆற்றினார். இலை விழுந்து நீரின் ஓட்டம் தடை படுமா என்ன?
பிள்ளை வளர வளர அதனிடம் இருந்த அவர் சாயல் அவரை தொந்தரவு செய்தது. ஒவ்வோர் முறை அவனைப் பார்க்கும் போதும் “என் பிள்ளை இல்லை இவன்” என்று எண்ணச்செய்தது. அவ்வெண்ணம் முளைவிட்டு வளர்ந்து வேராகப் பரவியது. “என் நிழல் பெற்ற மகனே” என்று அவள் முன்பே அவனை சினந்து கொண்டார். பிள்ளைக்கு மூன்று வயது இருக்கும் போது அவ்வெண்ணம் முற்றிப் போய் அவளோடு சண்டையிட்டு அவளிடம் இருந்து அவனை பிரித்து தூரத்தில் இருந்த பாலைக்கோ இல்லை மலைச் சரிவுகளுக்கோ கூட்டிச் சென்று அவனை கொன்றுவிட்டு வந்தார்.
தனியாக திரும்பிய அவரிடம் அவள் கேட்டதற்கு, “அவன் என் நிழல் பெற்ற பிள்ளை. என் பிள்ளை அல்ல. அவனை கழுகுக்கு இரையாக்கிவிட்டு வந்திருக்கிறேன்” என்றார். அவள் அரற்றத் தொடங்கினாள். மாரில் அடித்துக்கொண்டு அழுதாள். அவர் மீது சொற்களை தொடுத்தாள். காரி உமிழ்ந்தாள். அவர் மீது வெம்மையை கக்கினாள். நாட்பட நாட்பட பிறழ்வு கொண்டவள் போல நடமாடினாள். தாளமுடியாமல் ஒருநாள் “நீயும் உன் ஊரும் உன் நாடும் உன் குடியும் இனி இங்கே திகழாது. உன்னால் ஆனது எல்லாம் மலடாய் போகட்டும் நாசமாய் போகட்டும்” என்று சபித்துவிட்டு அந்தரத்தில் தொங்கினாள்.
ஊர்த்தலைவர் அந்த துயரை பெரிதாக பொருட்படுத்தவில்லை. சிறிது காலங்களுக்கு பின்னர் அவரது பாதி ராஜ்ஜியத்தில் பஞ்சம் குடிகொண்டது. மக்கள் துயருற்றனர். மண் மலடாகியது. நீர்வளம் குன்றியது. ஊர்களை காலிசெய்துகொண்டு வேற்று புகலிடம் தேடிச்சென்றனர் மக்கள். தூரத்தில் இருந்த பாலை இந்த ஊர் வரை படர்ந்துவிட்டிருந்தது. அவளது வெம்மையும் துவேஷமும் மண்ணில் பாலையாக பரவுகிறது என்று மக்கள் எண்ணிக்கொண்டனர்.
ஊர்த்தலைவர் தன்னால் இயன்ற உதவியயை அம்மக்களுக்கு செய்தார். வீட்டார்க்கு அவர் நல்ல பிள்ளையோ நல்ல கணவனோ நல்ல தகப்பனாகவோ இல்லாமலிருந்தாலும் ஊரார்க்கு நல்ல தலைவனாகவே இருந்தார். அவர் ஒருகட்டத்தில் தன்னந்தனிமையை உணரத்தொடங்கினார். மாளிகையில் தன் பிம்பங்களைக் கண்டு எரிச்சலுற்றார். அனைத்து பளிங்குதளங்களையும் கண்ணாடித் தளங்களையும் உடைத்து தன் மாளிகையை அடித்து நொறுக்கினார். அனைவரும் சென்றுவிட்டப் பிறகு தான் என்ன செய்யப் போகிறோம் என்று அஞ்சினார். அனைவரும் அகன்ற பின்னர் தன் நிழல் தன்னருகில் இருப்பதை உணர்ந்தார். அதன் மேல் ஒவ்வாமை கொண்டார். “நீ மட்டும் ஏன் என் கூடவே இருக்கிறாய். விலகிச் செல்.” என்று அதனிடம் புலம்பினார். நிழலின் கணம் தாளாமல் அதனை உதறிச்செல்ல முடியாமல் அவ்வப்போது நிலத்திற்கு அடியில் தோண்டிவைத்த இருட்குகைக்குள் போய் தன்னை ஒடுக்கிக்கொண்டார்.
பின்னர், அவர் அந்த தாந்திரீகனை நாடிச் சென்று கேட்டறிந்தார். தாந்திரீகன் “அவளுடன் பேசிப்பாருங்கள். நிவர்த்தி கிட்டும்” என்றான். அவனது உதவியுடன் அவர் அவள் ஆத்துமத்துடன் பேசினார். “என்னை ஏற்றுக்கொண்டு நீ சாந்தம் கொள். என் ராஜ்ஜியத்தையும் என் மக்களையும் விட்டுவிடு. பாலையை படரச் செய்யாதே” என்று அவளிடம் இறைஞ்சினார். அவளும் அதற்கு செவிமடுத்தாள். “உன் பலியை நான் ஏற்கிறேன். இனி ஆனவற்றை என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆகப்போவதை ஆகாமல் மட்டுமே பார்த்துக்கொள்ளமுடியும்” என்றாள் அவள்.
எஞ்சியிருந்த ஊர்க்காரர்களிடம் பலி சடங்குக்கான ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். பெளர்ணமி இரவொன்றில் நின்றிருந்த கோலத்தில் தன் கழுத்தில் வாளினை ஓங்கமுற்பட்டார். பெளர்ணமி நிலவொளியில் அவரது நிழல் பூமியில் படர்ந்து எதிர்பட்டது. அனைத்திற்கும் காரணம் நீ என்று அவர் அந்த நிழலினை தன் வாளால் குத்திக் கிழித்தார். அந்த நிழலில் இருந்தும் கூட குருதி பீறிட்டது. “அகன்று செல் என்னை. என்னை ஏன் துரத்துகிறாய்” என்று வன்மையை அதன் மீது கக்கினார். தன் நிழலிடம் தோல்வியுற்று கையாளாகாதவனாக அவளிடம் இறைஞ்சினார். அவரது கண்களில் கண்ணீர் பெருக பெருக இருள் வானில் முகில் கணங்கள் கூடின. “என் மக்களையும் இந்த மண்ணையும் வாழவிடு” என்று கூவி தன் கழுத்தில் வாளை ஓங்கிகொண்டார். அவர் நிழல் பரப்பு முழுக்க அவரது ரத்தம் பரவியது. நின்றிருந்தவாறு முண்ட திருமேனியாக வலக்கையில் வாலையும் இடக்கையில் தன் தலையையும் கொண்டு ஊர்மக்களுக்கு காட்சியளித்தார். பின்புதான் அவள் ஆவி அடங்கிப்போனது. பாலை ஆக்கப்பட்ட நிலம் போக மிஞ்சிய நிலம் காப்பாற்றப்பட்டது. இந்த பூமியே பாலையாகி போயிருக்க வேண்டியது. ஒருவேளை நீ இருக்கும் மலை வரை கூட பாலை படர்ந்திருக்கக்கூடும். பாலையின் வெந்த மணல் பரப்பில் காற்றின் அழுத்தம் மிகுந்து சூடாவதனால் வெளிக்காற்று எதுவும் உள் நுழைய முடியாமல், அன்று எங்கள் ஊரின் மேல் திரண்டிருந்த மேகம் பாலை வானுக்குள் நுழைய முடியாமல் போகும் அளவுக்கு அந்த பூமி வெப்ப பரிமாற்றமில்லாமல் தன்னளவில் அடர்த்தி கொண்டிருந்து வருகிறது.
இங்குள்ள மக்கள் மிஞ்சிய வாழ்வுக்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றனர். அவர் தன்னை பலியிட்டுக்கொண்ட இடத்தில் காவல் தெய்வமாக இன்னும் நின்றிருக்கிறார். அந்த மேகமே அவரது தியாகத்திற்காகி போன சாட்சி. அவரது நிழலில் தான் நாங்கள் வசிக்கிறோம் என்று கூட நாங்கள் அவ்வப்போது நினைத்துக்கொள்வோம். அந்நிழலை வழிபடுகிறோம்”
“என்னை இப்போது அந்த கோயிலுக்கு கூட்டிச் செல்லேன்” என்றான் தூயன்.
“இப்போதா? சரி” என்று எழுந்து கொண்டான் ஆதிரன். எறிந்து கொண்டிருந்த பந்தத்தில் மற்றோர் பந்தத்தினை ஏற்றி தூயனிடம் கொடுத்தான். கூரையில் எறிந்து கொண்டிருந்தந்ததை அவன் எடுத்துக்கொண்டு “நட” என்றான்.
அடர்ந்த இரவில் பந்த ஒளியின் துணைக்கொண்டு தன் இருகைகளிலும் தலையும் வாளுமாக கொண்டு நிமிர்ந்து நின்றிருந்த முண்ட சிலையை தூயன்
கண்டுகொண்டிருந்தான். இடக்கை சிரசில் உறைந்திருந்த பார்வையை உற்று நோக்கினான். பாலையை நோக்கிக்கொண்டிருந்த அப்பார்வையில் அத்துணை இறைஞ்சல் இன்னும் தேங்கியிருந்ததைக் கண்டான். இறைஞ்சலின் கண்ணீர் துளிகள் பாலையின் வெப்பம் பட்டு ஆவியாகி வெறும் அவ்வகைப் பார்வை மட்டும் மிஞ்சியிருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டான். துண்டுபட்ட கழுத்தில் மருட்சியுற்ற விழிகளைத் தான் அவன் முதலில் எதிர்பார்த்தான். அவன் தன் திசையை கண்டுவிட்டவன் போல முக அசைவு கொண்டான்.
அருகில் இருந்து ஆதிரன் “இதோ பார். இந்த சிலையின் நிழல். இவ்வளவு இருட்டிலும் உன்னால் அதை காண முடிகிறது அல்லவா?” என்றான்.
“ஆம்” என்றான் தூயன்.
“ரத்தச் செம்மை இறுகி இறுகி கருமையாய் படிந்திருக்கிறது பார். என்ன கருமை?” என்று பந்தத்தினை நிழலின் நீளவாக்கில் ஓட்டி ஒளிவித்தான். மண் தரையாக தான் இருந்தது. இருந்தாலும் கருமை கூடி இருந்தது. அது விழிக்கு புலப்பட்டது.
“ஆம்” என்றான் தூயன்.
தூயனுக்கு அந்த நிழலினை தொட கை நீண்டது. ஆதிரன் அவனை தடுத்தான். சில கணங்களுக்குள் இருந்து மீண்டு தூயன் சொன்னான் “ஆதிரா, நிழல் வசீகரமானது. ஆம் வசீகரமானது. பூமியில் இருக்கும் அத்துணைக்கும் தான் இருக்கிறேன் என்பதற்கு ஆதார சாட்சி நிழல் தானே. நம் நிழல் தரையில் சாய்ந்தால் அந்த கணத்திற்கு பூமி நம்மை அதனுடன் பொருத்திப் பார்க்கிறது. அப்போது பூமி நம்மை சூடிக்கொள்கிறது. நம்மை தன்னோடு கொண்டு செல்கிறது. நாம் பூமிக்கானவன் ஆகிப்போகிறோம் அங்கே”.
ஆதிரன் “சரி தான். எங்களின் சிறுவயதில் மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லும் எங்கள் தாதை ஒரு கதை சொல்வார். நிழல் உருவான கதை அது. என் நினைவில் நின்றதை திரட்டி உனக்கு சொல்கிறேன். கேள்”
“தூயா, இந்த பிரபஞ்சம் இருள் பிரவாகம். அனைத்தும் இருள். இருளன்றி வேறில்லை. அருவமாய் இருந்த இருளுக்கு உருவம் கொள்ள இச்சை.
இந்த இச்சை தான் உலக பிறப்புக்கும் உயிர் பிறப்புக்கும் வித்து. “உருவம், உருவம், உருவம்” என்று தேங்கி கிடந்தது இருள். முழு பிரபஞ்சமும் அந்த தேக்கத்தில் நீண்ட காலம் லயித்திருக்க முடியவில்லை. இருளின் இருப்புக்கொள்ளாமையினால் ஒளி பிறந்தது. அது தொடர்ந்து புடவி சமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் பரு உருவம் கொண்டது. இருள் அப்பொருட்களில் நிழலென தன்னை மாற்றிகொண்டது. இருள் உருவடைந்தது. நாமெல்லாம் அந்த இருளின் அசையும் பருவடிவங்கள். அவ்வளவே. அதுவன்றி வேறில்லை.” என்றான்.
மேலும் தொடர்ந்தான், “ஆத்ம-பிரம்மம் போல் நிழல்-இருள்.
பிரம்மம் எப்படி அதன் இருப்பை உடல் விளக்கை தேடி ஆத்தும சுடராய் எரிய விடுகிறதோ அது போல இருள் அதன் இருப்பை நம்மிடம் நிழலுருவாக்கி வைத்து விடுகிறது. பிரம்மத்திற்கு தேவை உயிரான தன் இருப்பை சுமந்தலைய ஒரு உடல்.
இருளுக்கு தேவை நிழலான தன் இருப்பை சுமந்தலைய ஒரு பருப்பொருள்.”
“ஆனால், எனக்கு அது வாய்க்கவில்லையே ஆதிரா?” என்றான் தூயன்.
“இவ்வுலகில் தன்நிழல் இல்லாதவர் தந்தையும் இலாதவராவார். மானுடர் அனைவரும் அவரவர் தந்தையர் வழி நீட்சிகளே. தந்தையர் நம்மை நிழலாய் விட்டு இப்புவியை நீங்கிச்செல்கின்றனர். முதலில் நீ உன் தந்தையை அறிக. தந்தைமையை உணர்க. அதுவழி உன் நீட்சியான நிழலை கண்டடைக. நிழலோடு மீண்டும் ஒருமுறை பிறப்படைக. நிழலில்லாதவர்களை நிலம் நிலை நிறுத்துவதில்லை.”
“என் தந்தையை எவ்வாறு நான் அறிவேன்?”
“மைந்தர்கள் தந்தையரின் உச்ச கணத்தில் பேரண்ட பெருங்களிப்பில் நிகழ்கின்றனர். தந்தையரின் விந்தில் நாம் உற்ற போது மைந்தராகிய நாம் நிகழ்ந்துவிடுகிறோம். பிறத்தல் என்பது பின்னர் தான் நிகழ்கிறது. “தந்தையே, தந்தையே ” என்ற நம் குரலை அவர் அப்பெருங்களிப்பில் இருக்கும் போது செவி மடுக்கவேண்டும். ஆயிரமாயிரம் குரல்களில் எக்குரலுக்கு அவர் செவி மடுக்கிறாரோ அவரையே தந்தையர் தன் மகன்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களே அன்னையரின் கருவில் திகழ்ந்து பிறக்கவைக்கப்படுகின்றனர். ஆகவே அறிக உன் தந்தையை. இறைஞ்சுக அவரிடம்.” என்று முடித்தான் ஆதிரன்.
தூயன் மறுநாள் காலை வரை ஆதிரனுடன் தங்கியிருந்தான். பின்னர் ஆதிரனிடம் தான் பாலைக்கு கிளம்பிச் செல்வதாக சொல்லிக்கொண்டு சென்றான்.
ஆதிரன் “வல்லூறுகளும் கழுகுகளும் வெயிலைப் பருகி வட்டச் சுழலிடும் அப்பாலை வெளியிலா உன் நிழலினை கண்டடையப் போகிறாய்?”
என்று புன்னகைத்து அவனை அனுப்பிவைத்தான்.
வீழ்ந்து கிடந்தது அந்த விரிமணல் பாலை. பொன்னொளி வீசி மென்புழுதி ஓசை அடங்கியிருந்தது. இது காற்று செதுக்கிய பாலை அல்லது மணற்கடல். கணம் தோறும் காற்று மூடி விரிக்கும் அதி பிரம்மாண்ட மணற்பூ. சுடும் பாலையை கடக்கத் துணியும் எவரும் தன் நிழலில் ஏறி நடந்தாக வேண்டும். நிழலில்லாதவனுக்கு சூடு மேலும் தண்டனைதான். தன்னில் படியும் எந்தவொரு நிழலையும் நீரென உறிஞ்சிவிடும் உஷ்ணம் கொண்ட நிலம்.
உச்சிப்பொழுதில் அந்நிலத்தை சூரியன் பட்டவர்த்தனமாகப் பார்த்துகொண்டிருந்தது. “நிழல், நிழல்” என்றான் முதலில். பின்னர் “என் நிழல். என் நிழல்” என்று அப்பாலை வெளியைப் பார்த்துகொண்டே நடந்தான். அப்பாலை வெளியில் நிகழ்ந்த அக எதிரொளிப்பால் பாலை வெளியின் முன்புறத் தோற்றம் அலை அலையாக நெளிந்து நீர்திரைப் போல ஒளிர்ந்தது. அதனுள் அடங்கிவிட துணிந்தவன் போல விரைந்தான்.
முதலில் உடல் வியர்த்தது. வியர்வை மண்ணில் விழுந்து தொடுவதற்கு முன்பாக ஆவியாகி மேல் வந்தது. அவன் செல்ல செல்ல தோல் பரப்பில் உள்ளில் இருந்தே ஆவியாக பிரிந்தது. அவன் இவ்வுலகத்தையே தாண்டிச் செல்பவன் போல அனைத்தையும் நடையால் கடந்தான். அவன் ஒருமுறை தான் வந்த வழியை திரும்பிப்பார்த்தான். தன் காலடி சுவடுகளை அவனால் காணவே முடியவில்லை. பாலையின் மேற்பரப்பில் ஏற்படும் காற்று சலனத்தினால் ஒவ்வோர் கணமும் திசைமாறி திசைமாறி மண் மூடப்பட்டுக்கொண்டிருந்தது. பின்பு அவனுக்கு அவன் வந்த வழியைப் பார்க்கவே தோன்றவில்லை. மணலில் கால் புதைய விண்ணைப்பார்த்து நடந்தான்.
எங்கிருந்தோ வந்த கழுகொன்று அவன் கண்ணில் பட்டது. அதன் வெளிறிய கழுத்தை அவ்வளவு உயரத்திலும் அவன் சரியாக அடையாளம் கண்டுகொண்டுவிட்டான். அதன் நிழல் அப்பாலை வெளியில் மங்காமல் விழுந்தது. அத்தனை கருமை கொண்ட நிழல். அத்தனை கருமையும் தண்மை.
சூரிய ஒளியைச் சுற்றி அக்கழுகு வட்டம் அடிக்கத்துவங்கியது. உஷ்ணம் தாளமுடியாமல் நடையை துரிதப்படுத்திக்கொண்டு அந்த பறவையின் நிழலை அவன் துரத்தினான்.
அக்கழுகின் நிழல் வீழ்ந்த சுற்றுவட்டப்பாதையிலேயே பாலையின் மேடு பள்ளங்களில் ஓடினான். கழுகோ சூரியனைச் சுற்றி இருந்த ஒளிவட்டத்தை வட்டமடித்துகொண்டே இருந்தது. வெயிலைப் பருகிப்பருகியே வெளிறியது போன்று இருந்தது அதன் கழுத்து. ஒளியைப் பருகி திளைக்கிறது போல. சூரியன் வெயிலமுது சுரந்து பொழியும் ஆகப்பெரிய கலயமாக இருந்ததோ என்னவோ? ஒரு கணத்திற்கு பிறகு அவன் ஓட்டமும் அந்த பறவையின் பறத்தலின் வேகமும் ஒத்து இசைவு கொண்டன.
பித்து கொண்டவனைப் போல அந்த நிழலின் மேலேயே ஓடிக்கொண்டிருந்தான். ஒரு நிகழ் கணத்தில் “தந்தையே” என்றான். “தந்தையே, தந்தையே” என்றான். அக்கழுகு எக்குரலையும் செவிமடுத்ததாக தெரியவில்லை. தன் கூருகிர்களைக் கொண்டு கீழிறங்கவும் இல்லை. ஆனால் அதனால் பிடிப்பட்டவன் போல சுழல் வட்டப்பாதையில் மேலே கொண்டு செல்லப்பட்டான். ஒரு ராட்சத கூருகிர் அவனைத் தூக்கிச்செல்வதாக உணர்ந்தான். “தந்தையே. தந்தையே. நிழல் அருளுக. பிறப்பு அருளுக” என்றான் முணங்கியபடி.
வட்டமடித்துகொண்டிருந்த கழுகு அவனை அப்பாலை வெளியில் எங்கோ வீசி எறிந்தது. கண் முழித்துப்பார்த்தான். அந்த பறவை பேரலறலுடன் அவனை கடந்து உயரப் பறந்து சென்றுகொண்டிருந்தது அதன் நிழலை அவனிடத்திலேயே விட்டுவிட்டு. அந்நிழல் பாலையால் உறிஞ்சப்படவில்லை. நீராகவே தெரிந்தது அவனுக்கு. நிழல் பட்ட மண்ணை அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கொண்டான். நீரை அருந்துபவன் போல. அவன் தாகம் பசி எல்லாம் தணிந்து அவன் ஆசுவாசமாகத் திரும்பினான். அவன் முன்னால் அவனது நிழல் அப்பாலை வெளியில் நீண்டு விழுந்திருந்தது. தன் நிழல்பட்ட இடங்களில் கால் வைத்தவாறே அவன் கடந்து சென்றான். வியர்வைத் துளிகள் அவன் நிழல் பரப்பில் வீழ்ந்தபோது “ஸ்ஸ்ஸ்” என்று அவன் காதுகளுக்குள் ஒலித்தது.