திருவண்ணாமலை

கண்ணனுக்கு  வந்த கோபத்தில் தன் சுத்தியல் கைப்பிடியை இறுக்கிக் கொண்டான். எப்பொழுதும் போல பற்களையும் கடித்துக் கொண்டான். அவன் பொருத்திக் கொண்டு இருந்த அந்த சாரைப்பாம்பின் தடிமனை ஒத்த கேபிள் மீது லெக் சொருகப்பட்டு இருந்தது. அதை அதற்கான கிடுக்கியால் அழுத்திப் பிடித்தி இறுக்கியவன், கையிலிருந்த சுத்தியலை ஓங்கி நச்சென அடித்தான். கை நடுங்கிக்கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு அடி. கேபிளைத் திருப்பி வைத்து மீண்டும் ஒரு அடி. மூன்றாம் முறை அடிக்கையில் “தேவ்டியா மவனே” என்று மெல்லமாகக் கூறினான். ’ஹெல்ப்பர் வேணும்னு நானா கேட்டேன். எதுக்கு என் உயிரை எடுக்குறான்னே தெரியல!’ என்று ஓனரை ஒருமுறை சபித்தான். மீண்டும் அடுத்த பேஸ் க்கான மஞ்சள் நிறக் கேபிளை எடுத்து லெக் சொருகி இறுக்கி சுத்தியலால் அடித்தான். ஆனால் பாபு அவன் முகத்தை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். அவன் இன்னும் இவன் பதிலுக்கு காத்திருக்கிறான். அதை நினைக்கையில் கண்ணனுக்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது.. மீண்டும் எப்பொழுதும் போல பற்களைக் கடித்துக் கொண்டான். மீண்டும் சுத்தியலை ஓங்கி நச்சென அடித்தான். அந்த அதிர்வில் இன்னமும் கை நடுங்கிக்கொண்டே இருந்தது. மீண்டும் கேபிளைத் திருப்பி வைத்து இன்னொரு அடி. இந்தமுறை முறை அடிக்கையில் “தேவ்டியா மவனே” என்று வாய்திறந்து  அழுத்தமாக சொல்லிக் கொண்டான். சுத்தியலின் ஓசைக்கு நடுவே அவன் பதிலை எதிர்பார்த்து நின்றருந்த பாபுவினுடைய முகம் உடனே மலர்ந்தது.

“நான் அப்பவே நினைச்சேண்ணா.. நீங்க அதுவாத்தான் இருப்பீங்கண்ணு..சூப்பர்ணா” என்றவாறு டீயை உறிஞ்சினான். 

“எப்படி கண்டு புடிச்சேன் பாத்தீங்களா..”

கண்ணன் அந்த கணத்தில் கையில் இருந்த சுத்தியலால் அவன் தலையை அடித்து இந்த எர்த் குழிக்குள் வைத்து புதைத்துவிட வேண்டும் என்று எழுந்த ஆத்திரத்தை அப்படியே அடக்கிக் கொண்டான். அவன் இவ்வாறு ஆத்திரத்தில் சுத்தியால் அடித்துக் கொன்று புதைக்காதவர்கள் யார்தான் எஞ்சியிருக்கிறார்கள். சினிமா ஹீரோ, கிரிக்கெட் கேப்டன் முதற்கொண்டு அவன் பட்டறையின் செக்யூரிட்டி ரமணய்யா வரை அத்தனை பேரையும் அப்படிச் செய்திருக்கிறான். இந்த டீயை கொண்டு வந்த அந்த டீக்கடை பையனை இதுவரை நாலுமுறை அடித்து துவைத்திருக்கிறான். அந்த வரிசையில் இப்போது பாபு.

தன் அத்தனை கோபத்தையும் மனதிற்குள் ஆற்றியதும்  அவனுக்கு சற்று இளப்பாறுதல் கூட உண்டாகும். அதன்பின்  அந்த ஹீரோவை, கேப்டனை மன்னித்திருக்கிறான். பாவம் டைரக்டர் சொல்லித்தான் பண்ணிருப்பான் இல்ல..  இவன்கூட பிட்ச் சரியா இருந்திருந்தா ஜெயிச்சிருப்பான்தான்

இப்பொழுது பாபு கேட்ட கேள்வியில் பெரிய பிழை ஒன்றும் இல்லை. ஆனால் அதற்குமுன் ஸ்பேனரை கேட்டதற்கு போல்ட்டை எடுத்து வந்ததும் கேபிளில் லெக் ஜ பொறுத்தி அடிக்கும்போது “அண்ணே… டீ வந்துடிச்சிண்ணே” என்று உதவியாக பிடித்திருந்த பிடியை விட்டுப்போனதும் அவனை உசுப்பேற்றியிருந்தது. ஆனால் டீயை உறிஞ்சிய படி அவனைப் பார்த்து, ” கருப்பா இருந்தாலும் உங்க முகம் லட்சணமா இருக்குண்ணே.. எந்த ஊர்னே உங்களுக்கு” என்று கேட்டபடி தம் -மை பற்றவைத்த போது மட்டும் அவனால் தாங்க முடியல..

“ஏண்டா.. உனக்கு வேலை சொல்லி தர்றவன்ங்கிற மரியாதையும் இல்ல, சொன்ன வேலையையும் உருப்படியா செய்யறதில்ல.. உன்னையெல்லாம் எவண்டா ஹெல்ப்பரா சேர்த்தது தேவ்டியா மவனே” என்று கூவியபடி அவனை எட்டி உதைத்து நாலு மிதி மிதித்து மனதை ஆற்றிக்கொண்டான்

இதில் கூவியபடி அவனை எட்டி உதைத்து நாலு மிதி மிதித்தது எல்லாம் அவன் மனதுக்குள் நிகழ்ந்தவை.. கடைசியில் வந்த “தேவ்டியா மவனே” மட்டும் தான் வாயை விட்டுக் கூறினான். அப்போது சுத்தியல் நச்சென அறையும் படியும் பார்த்துக் கொண்டான்

பாபுவின் முகத்தில் புன்னகை அப்படியே இருந்தது..

“திருவண்ணாமலைன்னுதான அண்ணே சொன்னீங்க.. நானும் அந்த பக்கம்தான்” என்றான்

“நீங்க பக்கத்துல எந்த ஊருண்ணா?”

கண்ணன் மீண்டும் சுத்தியலை கேபிள் மீது அடித்தபடி “தேவ்டியாமவனேதான்” என்று எரிச்சலில் முணுமுணுத்தான்

“அப்படியாண்ணே..திருவண்ணாமலையே தானா.. டவுன்லயேவா..”

“சுத்தியல் சத்தத்திலும் ஜெனரேட்டர் சத்தத்திலும்  சரியா கேட்கலைண்ணே.. உங்க வாயசவை வச்சு புரிஞ்சுகிட்டேன்” என்றான்

கண்ணன் அந்த கணநேர கோபம் அடங்கி எப்பவும் போல அனைவரையும் மன்னிக்கும் அடுத்த குணத்துக்கு வந்திருந்தான். 

“எங்கேந்துதான் இந்த கேணையனை இங்க எனக்கு ஹெல்ப்பரா வந்து சேர்ந்தானோ..! கேட்கிற பொருளைத்தான் புரியாம ஒண்ணு கிடக்க ஒண்ணு  கொண்டுவறான்னா.. காதும் கேட்காது போலிருக்கே..”

” பாருங்கண்ணே நாம ஒரே ஊரு! ஆனா இங்கதான் ஒருத்தரை ஒருத்தர் பார்க்குறோம்.. எல்லாம் அவன் லீலைண்ணே.. அந்த ஈஸ்வரன்தாண்ணே, இப்படி நம்மளை ஒண்ணா சேத்திருக்கான்..” என்றான் பாபு அவன் கரங்கள் கூப்பியிருந்தன.. ஒருமுறை கண்களை மூடித்திறந்தான்

தன் ஊரு திருவண்ணாமலையேதான் என்று அவனே முடிவே செய்து கொண்டு விட்டதை விடவும் அவனது அந்த வசனமும் செய்கையும் அவனை மீண்டும் கடுப்பேற்றியது..

“தேவ்டியா மவனே” என்றான் மறக்காமல் சுத்தியலை தட்டியபடி

பாபு இப்போது இன்னும் அருகில் வந்து கண்ணை மூடி,” திருச்சிற்றம்பலம்” என்றான். வலது உள்ளங்கையை விரித்து கையை மார்போடு வைத்து தலையை குனிந்தான்

oOo

இதுவரை கண்ணனுக்கு யாருடனும்  நேராக திட்டியோ சண்டை போட்டோ வழக்கமில்லை. கோபம் வந்தால் சுவற்றுப் பக்கமாக திரும்பிக் கொள்வான். கை நடுங்கும். மனதுக்குள் திட்டத் துவங்குவான். முன்பு ஒருநாள் சில்லறை இல்லாததால் அவனை இறக்கிவிட்ட பல்லவன் கண்டக்டரை இன்றுவரை நினைத்து பார்த்து மனதிற்குள் பலமுறை பலவிதங்களில்  பழிவாங்கிக் கொண்டு இருக்கிறான். ஒருமுறை அவனை இறக்கிவிட்டு சென்ற அந்த வண்டி அவன் கடந்து செல்லும்போது பஞ்சராகி நிலை தடுமாறி பிளாட்பார்மில் ஏறி கவிழ்ந்திருக்கிறது. ஒருமுறை அவனை இறக்கி விட்டபின்தான் அந்த கண்டக்டருக்கு, கண்ணன் அவரோட டிப்போ மேலாளர்னு தெரியும். இப்படி அன்றைய கற்பனை வளத்திற்கு ஏற்றார்போல் அனைத்தும் அவனுக்குள் நிகழும். அதில் உச்சகட்டம் கண்ணன் கண்டக்டராய் இருந்து அவர் குடும்பத்துடன் பயணியாய் பயணிக்கையில் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டதுதான். “நீ எனக்கு பண்ணிய அவமானத்துக்கு உன் குடும்பத்தோட ரோட்டில் நிப்படா..”

  சிலநேரங்களில் கண்ணன் அவன் பட்டறைக்கு வந்தபிறகும் அவன் கோபம் அன்றைக்கு மாட்டிய ஆளுக்கு ஏற்றார்போல நிகழ்ந்து கொண்டிருக்கும். சில நேரங்கிளில் நகத்தை கடித்து சிந்திக்குமளவு அது நிகழும்

” ஆபீஸ்குள்ள ஏண்டா நகத்த கடிக்கிற? இங்க மூதேவி வர்றத்துக்கா? போடா! போய் கைய கழுவுடா’ என்று ஓனர் திட்டும்போது அமைதியாக வெளியில் போய் கையை கழுவி வருவான். ஆனால் அதற்குள் அவன் விட்ட குத்தில் ஓனர் லைட்கம்பத்தில் இடித்து கீழே விழுவார். ஓடிவந்த மேனேஜரை பார்த்து ‘உள்ளே போ’ என்று சொல்லியிருப்பான்

தினமும் லேத்து மிஷின் இன்சார்ஜ் அவன் டீ குடிக்க வரும்போது கூட வருவார்.

“சார்.. டீக்கு நான் காசு கொடுத்துடறேன்”

“கண்ணன்..ரொம்ப பதட்டப் படுவீங்களோ..கோபமா இருக்கிற மாதிரி இருக்கே.”

’என்ன செய்ய சார்.. நாம சுவிட்சை போடும் போதுதான் ஈ.பிகாரன் கரெண்ட்ட புடுங்கறான்’

”சிலது நம்மள மீறி நடக்கும். நாம என்ன செய்யமுடியும் சொல்லுங்க.. புத்தர் மாதிரி அமைதியா இருக்கணும். அது ஒரு தியானம் கண்ணன். அதைப் பழகினா போதும்.. புத்தம் சரணம் கச்சாமி.. அவ்ளோதான். அப்படியே ஒரு ஃபில்டர் கோல்டு ப்ளேக் கொடுப்பா”

கண்ணன் மனதை ஒருநிலைப் படுத்த ஒரு புத்தர் படத்தை வாங்கி பையில் வைத்துக் கொண்டான். அவ்வப்போது நிலை மீறி கோபம் எழும்போது அதை எடுத்துப் பார்ப்பான். புத்தம் சரணம் கச்சாமி!! புத்தர் கண்மூடி மெல்லிய புன்னகையுடன் இருந்தார். ஃப்யூஸ் போகும்போதும், எர்த் கம்பி ஷாக் அடிக்கும்போதும் புத்தர் சிரித்துக் கொண்டுதான் இருந்தார். நாளாக நாளாக புத்தரின் புன்னகையே அவனைக் கொந்தளிக்கச் செய்தது. அவரை நினைக்கையில் இன்னும் கட்டுக்கடங்காத கோபமும் எரிச்சலும் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது ஏதாவது வேலையில் இருந்தால் சுத்தியலை ஓங்கி அடிப்பான்.

.

ஆனால் பாபு மூலம் அவனுக்கு கிடைத்திருந்த வழி மிகவும் வசதியாக இருந்தது. அவன் அவனிடம் எதையாவது எடுத்து வரச் சொல்லும் போது கடைசியில அந்த வசைச் சொல்லை வாயசைவில் சொல்வதும் அவன் பதிலுக்கு” திருச்சிற்றம்பலம்” என்று சொல்வதும் வழக்கமாகி இருந்தது.

பின்னர் டீ குடிக்கச் சென்ற போது டீக்கடையில் வைத்து,, ’ நீங்க ஆளு தங்கம்ணா. ஆனா, இவ்வளவு தங்கமா இருந்தும் ஒண்டியா இருக்கீங்களேன்ணா! சட்டுபுட்டுன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணக்கூடாதா? உங்களுக்கு எப்படியும் முப்பத்ஞ்சுக்கு மேல இருக்குமுல்ல அண்ணா’ என்றான் பாபு

கண்ணன் அவனை முறைத்த படி பல்லைக் கடித்துக் கொண்டே’ கம்முனு இருடா!’ என்று சொல்லி இடைவெளி விட்டு, மெல்லிய குரலில் அந்த வசையை கூறினான்.

டீக்கடைக்காரரும் மற்றவர்களும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாபு சற்று முன்னால் வந்து, ’திருச்சிற்றம்பலம்!’ என்றான்

அன்றுவரை இவர்களுக்குள் மட்டுமாக இருந்தது அடுத்தடுத்த நாட்களில் டீக்கடை வழியே அனைவருக்கும் பரவியது.

“கண்ணன், நீங்க இப்படி  திருவண்ணாமலை ன்னு  சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன்  கிடைக்கும்..தெரியுமா” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்

“அங்க ஒரு இடம் இருக்கு கண்ணன்.. எனக்கு மட்டும்தான் அது தெரியும்.. நான் அங்க போனப்போ ஒரு சித்தர் என் முன்னாடி வந்து என்னைத் தாண்டிப் போனாரு.. சொன்னா நம்ப மாட்டீங்க.. நான் திரும்பி பார்த்தேன் பாருங்க.. ஆளே காணும்! அப்படியே மறைஞ்சேபோயிட்டாரு.. அது ஒரு சித்தர் பூமிங்க.. வாங்க ஒருநாள் போகலாம்.. நான் கூட்டிட்டு போய் காட்டறேன்.. அவரு கண்பார்த்தா போதும்! கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் ஆயிடும் கண்ணன்.. அப்படியே ஒரு ஃபில்டர் கோல்டு ப்ளேக் கொடுப்பா”

“தேவ்டியாமவனே” என்று முணுமுணுத்தான் கண்ணன்

“திருச்சிற்றம்பலம்” என்றார் லேத்து இன்சார்ஜ் சிகரெட்டைப் பற்றவைத்தபடி

கண்ணனுக்கு இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. இப்பொழுது அவன்  திட்டினாலும் அவனைப் பார்த்து அனைவரும் கும்பிட்டுச் சென்றனர். செக்யூரட்டி ரமணய்யா மட்டும் ஏதும் சொல்லாமல் விரைப்பாக நிற்பான். ஸ்வீப்பர் பெண் அருகில் இருக்கும் போது மட்டும் அவன் உடல் நெளிந்தபடி இருக்கும்

’என்னடா கொல்ட்டி..‘ என்றான் கண்ணன் அந்த வசையைச் சொன்னபடி,

‘சலாம் சார்!’ என்றான் ரமணய்யா

நாளடைவில் கண்ணனுக்கு பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தது. யாரையும் மனதில் போட்டு அடித்துத் துவைக்காமல் நாட்கள் ஓடின. அவன் ஆட்டத்தை மிகவும் ரசித்து செய்யத் துவங்கியிருந்தான். எதிரில் இருப்பவரைப் பார்த்து மெல்ல உதட்டை மட்டும் அசைப்பான். அவனைத் தெரியாமல், என்ன? என கேட்டு வருபவரிடம் சப்தமாக ‘திருவண்ணாமலை’ என்பான். அவனைத் தெரிந்தவர்கள் அனைவரும் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லிச் சென்றனர். சிலநாட்களில் தன் சட்டைப்பை புத்தரை எடுத்து அறையின் அலமாரியில் ஓரமாக விசிறி எறிந்தான். புத்தர் புன்னகைத்தபடியே போய் மூலையில் ஒடுங்கிக் கொண்டார்

oOo

பாஸ்டர் அன்புதாஸ் ரமணய்யாவை குழப்பத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார்.  தனக்குத் தெலுங்கு தெரியும் என்று கிண்டி எஸ்டேட்டிலும் ஈக்காட்டுத்தாங்கலிலும் ஒரு  நம்பிக்கை நிலவுவது குறித்து அவர் பெருமிதமே கொண்டிருந்தார். சென்னையின்  தெலுங்குக் காரர்களுடன் பேசுகையில் அவருக்கு பிரச்சனை எதுவுமே நேர்ந்ததில்லை. அவர்கள் பேசும் தெலுங்கில் முக்கால்வாசி தமிழ் இருந்தால், ’ஓ..அலாகா’ ‘நமஸ்காரமண்டி’ என்றும் ‘அந்நி வாடு தயா’ என்று மேல்நோக்கி கை காட்டியும் சமாளித்து வந்திருந்தார். இன்று தெலுங்கானாவின் எல்லை கிராமத்திலிருந்து வந்த இருபது வயது ரமணய்யா அவரைப் படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தை அன்புடன் பார்க்கவே அவர் சிரமப்பட்டார். 

ரமணய்யாவிற்கு பெரும் மனக்குறை நிலவிக் கொண்டிருந்தது. திருவண்ணாமலை என்று அவனைப் பார்த்து கண்ணன் சொல்லும்போதெல்லாம் அனைவரும் பதிலுக்கு சொல்லும் வார்த்தையை அவனால் மட்டும் சொல்ல முடியவில்லை. அவனுக்கு அந்த வார்த்தை பிடிபடவும் இல்லை. எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு ‘திருச்சி டம்ப்ளரு’ என்றே வந்தது. அதை அவன் சொல்லக் கேட்டு ஒருமுறை ஸவீப்பர் பெண் சிரித்தை அவனால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. அதன்பின் ஒவ்வொரு முறையும் அவன் அதைச் சொல்லக் கேட்க அவள் சிரிப்பை அடக்கியபடி காத்திருக்கிறாள். அவளை மூக்குடைக்க வேண்டும். அந்த வார்த்தையை இந்த ஞாயிறுக்குள் அவன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். பாஸ்டருக்குத்தான் நன்றாக தெலுங்கு தெரியும் என்றும் அவன் ஒருவழியாகக் கண்டுபிடித்திருந்தான்

‘ ஏமிரா ரமணய்யா.. ஏமி காவாலி? ‘ (என்னதான் வேணும்?) என்றே பல ஸ்வரங்களில் கேட்டுப் பார்த்த பாஸ்டர் அன்புதாஸ்க்கு அவனது தெலுங்கு புரியவில்லை. ஒரு நல்ல மத்தியான வெய்யிலில் இப்படி மாட்டுவோம் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ”ஒருவாட்டி..நிதானமா செப்பு!’ என்றார் அழாக்குறையாக! அவன் அவருக்குப் புரியும்படி மீண்டும் கூறினான். அதில், “பாஸு திருஅண்ணாமல செப்தே சமாதானம்  திருச்சி டம்ப்ளரு ஏமி ” என்ற வார்த்தைகளே அவன் நிதானமாக பேசி முடித்தபின் இறுதியாக அவருக்கு  நினைவில் நின்றன. திருச்சி பஸ் திருவண்ணாமலை போகுமா என்று கேட்பதாக அவருக்குப் புரிந்தது. அவன் கை கும்பிடுவதைப் போல் இருப்பதைப் பார்த்தார்.

சற்று நேரம் யோசித்தவர், ’ஓ..அலாகா.!.’ என்றார்.. ஏதாவது சொல்லி இவனை அனுப்பியாக வேண்டும்

பின் அவனைப் பார்த்து, ‘அந்நி வாடு தயா.. நமக்கு சமாதானம் தோத்திரம்’ என்றார்

‘திருண்ணாமல?’ என்றான் ரமணய்யா

சிலுவை குறி போட்டபடி, தோத்திரம் செப்பு’ என்றபடி வேகமாக அகன்றார்

‘தொத்ரம்’ என்றான் ரமணய்யா. நுனிநாக்கு இருமுறை வெளித்தள்ளியது

oOo

திங்கன்று இரவு கண்ணனுக்கு வீட்டில் தூக்கம் பிடிக்கவில்லை. சில நாட்களாக இல்லாத பழக்கமாக மீண்டும் நகம் கடிக்கத் துவங்கியிருந்தான்.

’அது நிச்சயமாக கெட்ட வார்த்தையேதான்!’ என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்

இன்று கதவை தாமதமாக திறந்த ரமணய்யாவை  திட்டியபோது அவன் இவனைப் பார்த்து பதிலுக்கு முணுமுணுத்தான். அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் கண்ணன்

“டேய் என்னடா சொன்ன?”

“தொத்ரம்”  என்றான் ரமணய்யா.

” அடிங்கொம்மாள.. அப்படீன்னா என்னடா. அர்த்தம். சொல்றா கொல்ட்டி நாயே..”

அது கடவுள் துதிதான் என்று லேத்து இன்சார்ஜ் அடித்துக் கூறினார்.

’நீங்க சொல்ற மாதிரிதான் அவனும் சொல்றான் கண்ணன்.. சின்னப்பையன்.. சரியா வார்த்த வரல..”

அன்றிரவு கண்ணன் தன் கைபேசியில் தெலுங்கு பேட் வேர்ட்ஸ் என்று தேடினான். அதில் வந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்த்தான். பின் ஒவ்வொரு வார்த்தையும் மற்றொன்றுடன் சேர்த்துச் சொல்லிப் பார்த்தான். அந்த இணைப்புச் சொல்லை வேகமாக சொல்லிப் பார்த்தான். அவற்றில் ஒன்று பொருந்துவதாகத் தோன்றியது

இரவு இரண்டு மணிவரையில், அறையில் உறக்கம் வராமல் நிலைக்கண்ணாடி முன் நின்று திருவண்ணாமலை என்றும் தோத்ரம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். கையை நீட்டி நாக்கைத் துருத்தி “டேய் திருவண்ணாமலை..” “டேய் தோத்ரம்..”  என்று நாலுமுறை திட்டினான். கண்டிப்பாக மோசமான வார்த்தைதான் என்று உறுதியானது. 

அவனுக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நிம்மதியுடன் உறங்கச் சென்றான். இமைகள் மூடும் தருணத்தில், அவன் முன்பு விசிறி அடித்த சட்டைப்பை புத்தரின் பிம்பம் கண்ணாடியின் ஓரமாக அவனுக்குத் தெரிந்தது. புத்தரின் புன்னகை அதில் இன்னும் மாறாதிருப்பதைக் கண்டான் கண்ணன்

One Reply to “திருவண்ணாமலை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.