தரிசனம்

முன் கதைச் சுருக்கம்

கணிதமேதை என்று பின்னாளில் போற்றப்பட்ட ராமானுஜன் , சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமை காட்டி, தானே கற்றுக் கொண்டு, வாழநாள் முழுவதும் அதிலேயே ஆழ்ந்து இருந்தார். கணிதம் தவிர மற்ற பாடங்களில் ஆர்வம் இல்லாதால் எஃஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) ப்ரீட்சையில் தேறவில்லை. அவருடைய திறமையை கண்டு கொண்ட சிலரின் உதவியால் சென்னையில் போர்ட்-ட்ரஸ்டில் க்ளர்க்காக வேலை பார்த்து, ஜானகியுடன் கல்யாணம் ஆகி, ப்ரொஃபசர் ஹார்டியால் லண்டன் கேம்ப்ரிட்ஜுக்கு சென்று நிறைய ஆராய்ச்சி செய்து, ராயல் சொசைட்டியில் ஃபெல்லோ ஆனார், வெளி நாட்டில் குளிரிலும் வயிற்றுக்கு சரியாக சாப்பிடாததுமாக வியாதி வந்து, அது முற்றி, சென்னைக்குத் திரும்பி வந்து, சரியாக வைத்தியம் இல்லாததால் 1920 இல் இறந்த போது வயது 32.

இன்னும் கூட நிரூபிக்கப்படாத அபூர்வ சூத்திரங்களை கண்டுபிடித்த மேதை, இரவில் கண் விழித்து, எழுத பேப்பர் இல்லாமல் சில சமயம் மணலில் எழுதி, கிடைத்த காகிதத்தில் இரு பக்கமும் நுணுக்கி எழுதி கணிதத்தால் நிரப்பி இறுதிநாள் வரை எழுதி ,கடைசியாக விட்டுச் சென்றது சில நோட்டுப் புத்தகங்களும், பேப்பர்களும். அவற்றில் சில அவர் வீட்டிலிருந்து கிடைத்தன, சில லண்டனில் பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்தன, சில காணாமல் போயின.

oOo

ஏப்ரல் 26, 1920 திங்கள் கிழமை, சேத்துப்பட்டு, மதராஸ்

ரங்கநாதனுக்கு லட்சுமி விஷயத்தைச் சொன்னாள். “உங்க சினேகிதர் ராமானுஜனுக்கு ரொம்ப மோசமா இருக்கு போல”. திங்கள் கிழமை காலை. புரண்டு படுத்த போது “ சூர்யோதயத்துக்கு அப்புறம் என்ன படுக்கை ? “ என்று அவனை எழுப்பி விட்டாள். சினேகிதனா, எவன் சொன்னது ?, இன்னும் கிளம்ப மனம் இல்லை. ஒரு நாளைப்போல இன்றைக்கும் குளித்து, திருமண் இட்டு சந்தியாவந்தனம் செய்து, பழையதை விழுங்கி விட்டு மடிப்பு சரியாக பஞ்சகச்சம், நெடுஞ்சட்டை, அங்கவஸ்திரம், தலைப்பாகை கையில் பித்தளைத் தூக்கில் புளியோதரை,கூடவே கரைத்த மோர், கையில் புத்தகம், பருத்த உடம்பு இத்தனையும் சுமந்து கொண்டு ஓட வேண்டும். தினமும் இதே ஓட்டம். வீட்டிலிருந்தபடியே பேப்பரில் நாலு கணித ஃபார்முலா கிறுக்கி சிலர் பேர் வாங்கி விடுகிறார்கள்.!
லட்சுமி சரகு இலையைப் போட்டு பித்தளை லோட்டாவில் தீர்த்தம் எடுத்து வைத்து விட்டாள். தினமும் அதே பழையது. இங்லிஷ் விசுவநாதன் ஆத்தில் காலையில் இட்டலியாம், வெங்காயம் போட்டு கொத்சுவாம். ராமானுஜன் கேட்டானாம், லண்டனில் சாப்பிட்டது வேணும்னு, அந்த ஜானகி போன வாரம் மிளகு ரசமும் உருளைக்கிழங்க்கு கறியும் பண்ணினாளாம். லட்சுமி “அதென்ன அனாசாரம், நாம வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் சாப்பிடக் கூடாது !” என்பாள்.

சின்ன வயசிலேயே ரங்க நாதனுடைய கணக்கு வாத்தியார் ராகவாச்சாரி அப்பாவிடம் “ஓய், உம்ம புள்ளமாதிரி சீரங்கத்துலேயே ஒரு பய கிடையாது, குடத்து விளக்காட்டம் இவனை இங்கேயே வெச்சிண்டிருந்தா ஒரு ப்ரயோஜனமும் இல்லை, பட்டணத்துக்கு மேல படிக்க அனுப்பும், ஓகோன்னு வருவான், எல்லாம் பெருமாள் பார்த்துப்பார்” என்று சொல்லவும் பட்டணத்துக்கு வந்து, மைலாப்பூரில் சொந்தக்கார வக்கீல் ஆத்தில் தங்கி படிப்பு. கோல்ட் மெடல் வாங்கி, ப்ரெசிடென்சி காலேஜில் கணக்கு லெக்சராக சேர்ந்தவுடன் கும்பகோணத்திலிருந்து ஒண்ணு விட்ட அத்தை பொண்ணுடன் கல்யாணம். லட்சுமி பெரியவளானவுடன் பட்டணத்துக்கு வந்து விட்டாள்.

லக்கிரமத்தில் குழந்தை. சேத்துப் பட்டுல வீடு, அம்மா பெருமையாக சொல்லுவாள் , “எல்லாம் பெருமாள் குடுத்தது”. என்ன குடுத்துட்டார் பெரிசா ? பாண்டித்யம் இருந்து என்ன ப்ரயோஜனம், இப்ப எஃஏ பசங்களுக்கு கணக்கு சொல்லித்தற ஜீவனம். எஃஏ கூட தேறாத ராமானுஜன், லண்டனுக்குப் போனானாம், கேம்ப்ரிட்ஜுல உபகாரச் சம்பளத்தோட ஆராய்ச்சியாம், ராயல் சொசைட்டியில ஃபெல்லோவாம், கூடவே ராயல் மண்டக் கனம். அவனுக்கு மட்டுமா, அவன் ட்யூஷன் சொல்லித்தர பசங்களுக்குக் கூட.
இந்த காலத்து பசங்களுக்கு வாத்தியார்ன்னு ஒரு மரியாத இல்ல, எல்லாம் அதிகப் பிரசங்கிகள். கால்குலஸ் க்லாசில பாடம் நடத்தும்போது எழுந்து நிக்கறான் “ஸார், இத இன்னும் சுலபமா சால்வ் பண்ணாலாம், இத்தன ஸ்டெப் தேவை இல்ல “
ரங்கநாதன் “ சுவாமி, அதெப்படின்னு என்னுடைய சிற்றறிவுக்கு எட்டும்படி விளக்கி சொன்னாப் புரியும் “

அந்தப் பையன் அசராம போர்டுக்கு வந்து எழுதறான். அப்புறமா கூப்பிட்டு, யாருடா உனக்குச் சொல்லிக் குடுத்ததுன்னா “ராமானுஜன் சார் தான் சொல்லிக் குடுத்தார் “ அப்படிங்கறான். அதோடு காலேஜில் நடத்திய ராஜாங்கமும் போச்சு. ட்ராமில் போகும் போது கூட, இன்னிக்கு எந்தப் பையன் என்ன கேள்வி கேட்பானோ அப்படின்னு கவலையோட புத்தகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த ராமானுஜன் நாலு வீடு தள்ளி குடி வந்துட்டான். அவன் குடும்பம்தான் வந்திருக்குன்னு மொதல்ல தெரியாது. அந்த மாமி கோமளத்தம்மாள்தான் ஒரு நாள் காலையில் வந்து லட்சுமியிடம் அஸ்கா சர்க்கரை வேணும்னு கேட்டா. ராமானுஜனுக்கு காலையில் பெரிய ஸ்தாலி நிறைய காபி வேணுமாம், காபிக்கு சர்க்கரை காலி ஆயிடுத்தாம், தினமும் வாசலில் கோலம் போடும்போது பார்த்திருக்கிறாராம். நம்மவா மாதிரி இருக்கேன்னு சங்கோஜப் படாம கேட்க வந்துட்டாராம். அவர் பையன் பெரிய மேதாவியாம், லண்டன் போய் வந்திருக்கிறானாம், இப்போது ஏதோ வியாதியாம்.
லட்சுமி கும்பகோணம்தான் அப்படின்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷம். உங்காத்துகாரர் என்ன பண்ணிண்டிருக்கார் அப்படின்னு கேட்க, லட்சுமியும் ரங்கநாதன் காலேஜில் கணக்கு லெக்சரராக இருப்பதை சொல்லி இருக்கிறாள். உடனே அந்த மாமியும், “கணக்கு வாத்தியாரா, ரொம்ப சந்தோஷம், அப்பப்ப ஆத்துக்கு வந்து பேசினா உபகாரமா இருக்கும்” என்று அழைத்த மரியாதைக்கு ரங்கநாதன் அவர்கள் வீட்டுக்குப் போனான்.
கோமளத்தம்மாள்தான் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் மாடிப்படிக்கு அருகில் ஒரு அறை. ராமானுஜன் தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்தபடி தீவிரமாக ஒரு கற்றை பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தான். பக்கத்துல எழுதிய சித்திரம் போல அவன் மனைவி ஜானகி.

ரங்கநாதன் அருகே போய் “நமஸ்காரம்” என்றான். ராமானுஜன் ஒரு கணம் தலையை நிமிர்த்தி “ம்ஹூம்” என்றான். கண்கள் இருட்டில் மிருகம் மாதிரி பளபளத்தன. கலைந்த தலை, கசங்கி சுருண்ட வேட்டி. ரங்கநாதன், சரி ஏதோ மிக முக்கியமாக எழுதிக் கொண்டிருக்கிறான் போல என்று சுற்றிலும் பார்த்தான். பக்கத்திலேயே விசிறி, வென்னீர், ஒத்தடம் கொடுக்க துண்டு, மருந்து, வியாதி வாசனை எல்லாம் இருந்தன.

படுக்கைக்கு அருகிலேயே மூலையில் ஒரு தோல்பெட்டி இருந்தது. மங்கிய பழுப்பு நிறம், தூசி படிந்து, அங்கங்கே அடி பட்டு,கீறல் விழுந்து மேலே சற்று பாசி பிடித்த மாதிரி, தோல் சுருக்கங்கள் தெரிய இருந்தது. லேசாக அந்த தோல் பெட்டியின் வாசனைகூட வருவதாகத் தோன்றியது.

நீண்ட மௌனம். ஜானகிதான் “ நீங்க காபி சாப்பிடறேளா? “ என்று கேட்டாள். ரங்கநாதன் “இல்லை வேண்டாம்” என்றான். அவள் மறுபடியும் “ இவர் நாலு வீடு தள்ளி இருக்கார், ப்ரெசிடென்சி காலேஜில கணக்கு லெக்சரராம் “ என்று ஆரம்பித்தாள். ராமானுஜன் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு பேப்பரை வைத்து விட்டு, நெற்றியைச் சுருக்கி ரங்கநாதனைப் பார்த்தான். தோல்பெட்டியைத் திறந்து அந்தப் பேப்பர்களை உள்ளே வைத்து ஜாக்கிரதையாக மூடினான். “ நீங்கதான் அந்த ரங்கநாதனா ? அம்மா சொன்னா.”

ரங்கநாதன் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் மறித்து
“ சுலபமான கணக்கை எல்லாம் சிக்கலாக்கி சொல்லிக் குடுப்பேள் போல இருக்கு, உங்க காலேஜில் படிக்கற நிறைய பசங்க ட்யூஷன்ல தடுமாறரான், கேட்டா ரங்கநாதன் சார் இப்படித்தான் சொல்லிக் குடுத்தார் “ அப்படிங்கறான். ரங்கநாதனுக்கு முகம் சிவந்து போனது. ஜானகிதான் உடனே “ ஸ்ரீரங்கத்தில் உங்களுக்கு எந்தத் தெரு, எங்க சித்தப்பா வடக்குச் சித்திர வீதியில இருந்தார்” என்று ஆரம்பித்தாள். ரங்கநாதன் ஒன்றும் பேசாமல் எழுந்தான். கோமளத்தாம்மாள் “ வர வர இப்படித்தான் ஆயிட்டான், வியாதியானா என்ன மனுஷா வேண்டாமா ,அவ கிட்ட மட்டும்தான் முகம் கோடுத்துப் பேசறான், இல்ல எப்பவும் எதாவது எழுதி எழுதி பெட்டியில காகிதத்த பூட்டி வெக்கறான், அந்தப் பெருமாள்தான் காப்பாத்தணும்” என்று கண்ணீர் விட்டாள்.

மறுநாள் லட்சுமியிடம் “அவர் அம்மா கிட்டயே எரிஞ்சு விழறார், எல்லாம் இந்த வியாதி வேதனயாலதான், அவரை தப்பா எடுத்துக்க வேண்டாம்“ என்று ஜானகி சொன்னாளாம்.

ஒரு மாதம் ஆகி இருக்கும், காலேஜில் ஒரு நாள் மதியம் சாப்பிடும் போது விசுவநாதன் ஆரம்பித்தான் “ ராமானுஜனை உடம்பு சற்று தேறியவுடன் நம்ம காலேஜில் ப்ரொஃபசராக நியமனம் செய்யலாம்னு கேள்விப்பட்டேன்.”

ரங்கநாதன் சாப்பிடுவதை நிறுத்தினான்.

“ நான் இங்க இத்தனை வருஷமாச்சு, இன்னும் வெறும் லெக்சரர், இவன் வந்து ப்ரொஃபசரா ?”

“அவனுக்கு என்ன, ராவ் இருக்கார், மானேஜ்மென்டில எல்லோரையும் தெரியும், லண்டனிலிருந்து வேற சிபாரிசு லெட்டர் “
ரங்கநாதன் பாதி சாப்பிடும்போது தூக்கை மூடினான்.

அதற்குப் பிறகு அவன் ராமானுஜன் வீட்டுப் பக்கமே போகவில்லை. லட்சுமி அவர்களைப் பற்றி ஏதாவது சொன்னாலும் இடக்காகப் பேசினான்.

அன்றைக்கு லட்சுமிதான் காலையில் விஷயத்தைச் சொன்னாள். “உங்க சினேகிதர் ராமானுஜனுக்கு ரொம்ப மோசமா இருக்கு போல, ஒரு தடவை போய் பார்த்துட்டு வாருங்களேன்.”

ரங்கநாதன் குரல் உயர்ந்தது “யாரு சினேகிதன் ? விட்டா எனக்கு கணக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி காலேஜிலேர்ந்தே விரட்டி விட்டுட்டு, அவன் ப்ரொஃபசராகி இருப்பான்.“

சற்று நேரம் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தான், தென்னை மர ஓலைகள் அசைந்து கொண்டிருந்தன.

ரங்கநாதன் தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தான். பிரம்பு நாற்காலியில் கோமளத்தம்மாள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. ராத்திரி முழுவதும் தூங்கவில்லை போல. ஸ்நானம் செய்திருக்கவில்லை, தலை கோடாலி முடிச்சு பாதி அவிழ்ந்திருந்தது. புடவை சற்று விலகி இருந்ததுகூட தெரியாமல் வெறித்த பார்வையாக இருந்தாள்.

உள்ளே சின்ன அறையில் வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கள் கூட்டமாகத் தென்பட்டார்கள். ஓரமாக தரையில் படுக்கை, ஜூர வேகத்தில் உடம்பு அதிர ,அரைக் கண்ணைத் திறந்தபடி ராமானுஜன் படுத்திருந்தான். மூச்சு சிரமப் பட்டு வந்தது. பக்கத்தில் கைக்கெட்டும் இடத்தில் சில பேப்பர்கள். இரண்டு நாள் முன்பு கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தாக லட்சுமி சொன்னாள். அருகிலேயே ஜானகி தரையில் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பக்கம் தோல் பெட்டி இருந்தது. ராமசந்திரராவ் நின்றிருந்தார். ராமானுஜனின் தம்பிகள் இரண்டு பேர், கூடவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ராவ்தான் வருகையைக் கண்டு லேசாக தலையை அசைத்தார். மௌனம், ராமானுஜனின் கனத்த மூச்சைத்தவிர. சிறிய அறையில் அத்தனை பேர் இருந்தது புழுக்கம் அதிகமாக இருந்து. ஜானகி புடவைத் தலைப்பால் விசிறி விட்டு, ராமானுஜன் முகத்தைத் துடைத்தாள்.

“டாக்டரக் கூட்டிண்டு வரட்டுமா ?” தம்பி கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. ராமானுஜன் முச்சு விடுவதில் மாற்றம். திணறல் சற்று அதிகம் ஆன மாதிரி இருந்தது, கண்கள் சொருகி விட்டன. ஜானகி கேவினாள். ராமானுஜன் மார்பை ஒருமுறை நீவி விட்டு எழுந்தாள். நெடு நேரமாக அமர்ந்திருக்க வேண்டும், மரத்துப் போன கால் சற்று இடறியது.

“பால் கொண்டு வரேன், ஒரு நிமிஷம் பாத்துக்குங்கோ” குரல் கம்மலாக வந்தது.

அவள் வெளியே சென்றதும், ராமசந்திர ராவ்தான் பேசினார். முதலில் உதட்டைப் பிதுக்கியபடி, மெல்லிய குரலில் “இனிமே ஒண்ணும் பண்ண முடியும்னு தோணல, நேத்திக்கே டாக்டர் சொல்லிட்டார். ” கையை விரித்தார்.

“டேய், ப்ராணன் இருக்கும்போதே பிராயச்சித்தம் பண்ணணும்பா, இவன் வேற கப்பல் ஏறி சமுத்ரம் தாண்டினவன். பண்ணி வைக்கற வாத்யாரை கூட்டிண்டு வரயா ? “ தம்பியிடம் சொன்னார்.

அவன் திடுக்கிட்டுப் பார்த்தான். ராவ் கை சைகையால் அழைத்தார், மெல்லிய குரலில் “வாசல்ல அம்மா இருக்கா, அந்தப் பக்கம் போய் பேசலாம்.”

“நீங்க ஒரு நிமிஷம் இங்க பார்த்துக்கறேளா?”

ராவ் வெளியே செல்ல, பின் தொடர்ந்து ஒவ்வொருவராக சென்றார்கள். ரங்கநாதனும், ராமானுஜனும், தோல் பெட்டியும் மட்டும் அந்த அறையில். ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்களும் பேப்பர்களும் அதில்தான் இருக்க வேண்டும்.

ஜுரத்தில் அரைக்கண் மூடி இருந்த ராமானுஜன் திடீரென்று கண் விழித்தான். ஏதோ பேச முயற்சி செய்வதாகத் தோன்றியது. ரங்கநாதன் அருகே சென்றான்.

“மாக் தீட்டா ஃபங்க் ஷன்” மெல்லிய கரகரத்த குரல், சரியாக கேட்கவில்லை.

ரங்கநாதன் உரக்க “ என்னது தீட்டா ?” என்றான்.

ராமானுஜன் சற்று குரலை உயர்த்தி, “தீட்டா ஃபங்க்ஷன் தெரியாதா? நாமகிரித் தாயார் நேத்திக்கூட கனவுல சொன்னார், இன்னும் எத்தன நாளோ, எல்லாத்தையும் எழுதி வெக்கணும். இங்க யாருக்கும் புரியாது. நான் ஹார்டிக்குதான் லெட்டர் எழுதி கேட்கணும்,“ உதட்டைச் சுழித்து விட்டு, தோல் பெட்டியின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதன் மேல் செல்லமாக கையை வைத்து மூடினான். அவ்வளவு பேசிய களைப்பு, மறுபடியும் கண்கள் மூடி விட்டன. அவன் சொன்னதைப் பார்த்தால் ரங்கநாதனுக்கு நீ எல்லாம் காலேஜில் பாடம் நடத்தற தகுதி இருக்கறவனா என்று கேட்பது போல இருந்தது. தலைக்கு உள்ளே கூடு கலைந்த தேனீக்கள் கோபத்துடன் பறந்தன. கதவுப் பக்கம் ஒருமுறை பார்த்தான். சரேலென்று பெட்டிக்கு அருகே சென்றான். அந்தப் பெட்டியையே முழுசாக எடுத்துக் கொண்டு போய் விடலாமா? எங்காவது கடாசி விடலாம். இல்லை, பெட்டியைத் திறந்து பேப்பர்களையும் நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று விடலாம். வென்னீர் உள்ளில் அடுப்பு எரிய உதவும். அதோடு அந்த கர்வக்கார ராமானுஜன் எழுதி வைத்த எல்லாம் சாம்பல் ஆகி விடும்.

மூடியைத் திறப்பதற்கு தோலின் மேல் கை பட்டதும், தானாக பின்னுக்கு இழுத்துக் கொண்டது. பதற்றத்துடன் மறுபடி வாசலைப் பார்த்தான். யாரும் காணவில்லை. பேச்சுக்குரல் அடுத்த அறையிலிருந்து வந்தது.

முயற்சி செய்ததில் பெட்டி ஒரு பக்கம் திறந்தது. மறுபக்கம் வரவில்லை. பாதி பெட்டி நிறைந்து பேப்பர்கள், ஒரு நோட்டுப் புத்தகம் எடுக்கிற மாதிரி மேலாக இருந்தது. கையை உள்ளே விட்டதில் சில பேப்பர்கள் அகப்பட்டன. கையில் இழுத்ததில் உலோகப் பூண் கீறியது.

இன்னும் யாரையும் காணவில்லை. ராமானுஜன் ஏதோ முனகினான், ஆனால் கண் திறக்கவில்லை. ரங்கநாதன் எழுந்தான், பாதி திறந்த பெட்டியிலிருந்து கிடைத்த வரை ஒரு நோட்டுப்புத்தகத்தையும், காகிதங்களை உருவினான். வேட்டியின் ஒரு முனையைக் கையில் பிடித்தபடி அதற்குள் காகிதங்களை மறைத்தான். திரும்பிப் பார்க்காமல் அறையிலிருந்து வெளியே வந்தான். அடுத்த அறையில் ராவ்தான் இன்னும் பேசிக்கொண்டிருந்தார். தளிப்பண்ற உள்ளிலிருந்து குமட்டியில் கரி தீக்கங்கு, ஏதோ கொதிக்கும் வாசனையும், பாத்திர சப்தமும் வந்து. விருட்டென்று பின்பக்கம் சென்றான். கிணற்றடி தாண்டி, கொல்லைக் கதவு. திறந்து, சத்தமில்லாமல் மூடி , சந்து வழியாக நடந்தான். சந்தில் சாக்கடையும் குப்பையும் கால் வைக்கவே அருவருப்பாக இருந்து. விறு விறுவென்று தன் வீட்டின் பின் பக்கத்துக்கு வந்து சேர்ந்தான்.

கொல்லைக் கதவு தாளிடப்படவில்லை. ஸ்நான அறை கதவு மூடி இருந்தது. லட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.
ரங்கநாதன் அப்படியே துணி தோய்க்கும் கல்லில் உட்கார்ந்தான். மேலாக இருந்த பேப்பர்களை எடுத்தான். கையெழுத்து படிக்கும்படியாக இருந்து. ஆனால் வரிகள் சற்றே கோணல். படுத்துக் கொண்டு எழுதியதாக இருக்க வேண்டும்.
லட்சுமி குளித்து விட்டு நெற்றியில் மஞ்சள் தீற்றலுடன், புடைவையை அரைச் சுற்றாக சுற்றிக் கொண்டு வெளியே வந்த போது, ரங்கநாதன் கிணற்றுக் கட்டைக்குப் பின்னால், துணி தோய்க்கும் கல்லில் உட்கார்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கி இருந்தன.

“என்ன ஆச்சு ? போயிட்டாரா ?”

ரங்கநாதன், நிமிர்ந்தான். ஒருகணம் வெற்றிடத்தில் பார்த்தான். கையை மேல் நோக்கி விரித்தான்.

லட்சுமி புடைவையை சரியாக் கட்டிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு விளக்கேற்றி பாசுரம் சொல்லிவிட்டு திரும்ப வந்த போதும் ரங்கநாதன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்,

பின்கதைச் சுருக்கம் :

ராமானுஜன் விட்டுச் சென்றதாக மூன்று நோட்டுப் புத்தகங்களும் சில பேப்பர்களும் கிடைத்தன. ராமானுஜன் இறந்த பிறகு, நிறைய பேப்பர்கள் சென்னை பல்கலைக் கழகத்துக்கு கொடுக்கப்பட்டன. அவை லண்டனுக்கு அனுப்பப்பட்டன. ராமானுஜன் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றை அவர் இறந்த தினத்தில் யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்று திருமதி ஜானகி சொன்னதாக ப்ருஸ் சி பெர்ன்ட் எழுதி இருக்கிறார். ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்களில் ஒன்று காணாமல் போய் 1976 இல் லண்டனில் திரும்பக் கிடைத்தது. இன்னும் சில எங்காவது இருக்கலாம், இல்லை எங்காவது மளிகைக் கடையில் பொட்டணம் கட்ட உபயோகப்பட்டிருக்கலாம்.

12 Replies to “தரிசனம்”

  1. மிக சாதாரண சூழலில் மரணம் அடையும் ஒரு அசாதாரண அறிவு, அந்த அறிவின் அசாத்திய ஆற்றலை தாங்காத அசூயை, அந்த அசூயை கணத்தில் தோற்றுவிக்கும் கயமை, அந்த கயமை யினால் விளைந்த செய்கை, அதன் முடிவில் வெற்றியா வெறுமையா என்ற அவஸ்தை என்று அனைத்தையும் கண் முன் நிறுத்துகிறார் தருணாதித்தன்.
    இதன் அடித்தளத்தில் வித்யையில் மூழ்கினவனின் விநயமற்ற பாசாங்கற்ற மனோபாவம், அதனால் இடறப்பட்ட, மற்றும் தொழிலிலும் பங்கம் வருமோ என்று கிளறப்பட்ட வெறுப்பு ஏற்ற மற்றவன், கற்பனையில் உதித்த பாத்திரமா, நிகழ்வுகளா, அல்லது மாமேதையின் சூத்திரங்கள் போல தருணாதித்தனுக்கு தரிசனமா?
    அருமை.

  2. Why such genius people were given such short Life and poverty….we could only wonder!!!

    Krishnan has this special style to narrate the incidents as if he has seen in real Life……i.e. his style is so Lively. His another specialty is to include our tradition/culture as part of the story e.g. குளித்து, திருமண் இட்டு சந்தியாவந்தனம் செய்vathu and நெற்றியில் மஞ்சள் etc

    The importance of a hero in a story is felt when there is a Villan. Renganathan appeared to be a villian, but his tears at the end of the story wiped his sins, if any.

    I am so proud of you, Krishnan for being associated with you for 10+ years in ISRO, Bangalore.
    Please keep writing and continue this social service. God bless you excellent Health and strength.

  3. ஒரு கதையின் களம் அதன் கால கட்டம் இவை சமகாலத்தில் எழுதுவது எத்தனைக்கு எத்தனை எளிதோ, அத்தனைக்கு அத்தனை கடினம் நூறாண்டுகள் பின் செல்வது. அந்த வகையில் எழுத்தாளர் தருணாதித்தன் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நாம் கொள்ள வேண்டும் இந்த கதையின் மூலம். வாசிக்கும் நாம் ரங்கநாதனாக ராமானுஜனாக ஜானகியாக கூடுவிட்டு கூடுபாய்ந்து தோல்பெட்டியின் கணித சூத்திரமாக உறைந்து போகிறோம் என்றால் மிகையாகாது.

    என்றும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் தமாம் பாலா

  4. அருமையான கதை. முன்கதை சுருக்கம் பின்கதை சுருக்கம் இவைகளுக்கு இடையிலான புனைவு நிஜம் என்ற தோற்ற மயக்கத்தை தருகிறது. கதை மாந்தர்கள் பெயர்களும் கணிதமேதை வாழ்வின் நிஜ மனிதர்களே.

    ஒரு பொறாமை, வஞ்சம், குற்ற உணர்வு என சுவாரசியத்தை கூட்டுகிறது. அருமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.