கவிதைகள்- வ. அதியமான்

நழுவுதல்

இதோ
இங்கு இப்படி
வந்து அமர்ந்திருக்கிறது

இத்தனை பிறவிகளாய்
நான் தேடி தேடி
அலைந்து கொண்டிருந்த
கண்பறிக்கும்
என் பொன்னுலகு

வீங்கி பெருத்து
யுகத்தில் நீள்கிறது
ஒவ்வொரு கணமும்

இனியும்
காத்திருப்பதில்
பொருளேதும் இல்லை

வேட்டைப் பூனை
காலடிகளால்
அதை
நெருங்கியும் விட்டேன்

ஐம்புலன்களும்
விழியிரண்டில்
தொற்றி ஏறிக்கொள்ள
நடுங்குகிறது
என் தேகம்

இந்த முறையாவது
இந்த முயற்சியாவது
என் பொன்னுலகை
என்னிடமே
சேர்த்துவிடுமா?
சேர்த்தும் விடலாம்

மீளவும் காத்திருந்து
வந்தறைந்த
அந்த கொடுங்கணத்தில்
என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்கும்
இடையில்
வெடுக்கிட்டு
பறந்தோடி நழுவுகிறது

எப்போதும் போலவே
உச்சி மலையிலிருந்து
வெடித்து
தடதடவென உருள்கிறது
உடனிருக்கும் சகாக்களின்
பாறை சிரிப்புகள்

ஒவ்வொரு நொடிக்கும்
ஆயிரம் அதிர்வுகள்
கொட்டும் முரசை
மார்பில் புதைத்தபடி

என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி

பறந்தோடிப் போன
பட்டாம்பூச்சியின்
திசையை
வெறித்து பார்க்கிறேன்
திகைத்து நிற்கிறேன்

oOo

கொடி நஞ்சு

எனை ஆள்கிறது
இதுவரை உன்னிடம்
நான்
பேசாத சொற்கள்
பேசி இருக்க வேண்டிய சொற்கள்
பேசவே முடியாமல் போன சொற்கள்

ஒரு வேளை
உன்னிடமும்
இருக்கவும் கூடும்
இதுவரை என்னிடம்
நீ
பேசாத சொற்கள்
பேசி இருக்க வேண்டிய சொற்கள்
பேசவே முடியாமல் போன சொற்கள்

இக்கணத்தில்
முட்டை பொறித்து
வெடித்து சிதறும்
நதி ஆழத்து
மீன்குஞ்சு திரள்களில்
கூடி கலந்து மகிழ்ந்திருக்கட்டும்
அச்சொற்கள்

என் நாவில்
பத்திரமாய் பதுங்கி
நானிருப்பதை போலவே
உன் நாவில்
கமுக்கமாய் பதுங்கி
நீயும் இரு

கனிந்த ஓர் கணத்தில்
இரு ஊமைகளின்
உரையாடல்
ஏனோ
ஓர் இசையெனவே எழுகிறது
எல்லோருக்கும்

6 Replies to “கவிதைகள்- வ. அதியமான்”

    1. அன்புள்ள ஏகாந்தன் மிக்க நன்றி

      கவிதை என்பதென்ன? அவரவருக்குள்ளிருக்கும் அவரவர் கவிதைகளை நடித்துக் காட்டும் காட்டும் கண்ணாடி தான் அது

      தீரா அன்புடன்
      வ. அதியமான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.