கவிதைகள் – கா. சிவா

காரணம்

இயற்கையின் எல்லையற்ற
பேருவை உணர்ந்தபோதெல்லாம்
நெக்குருகி வழிகிறது விழிநீர்

பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில் ,
யாருமற்ற தனிமை
சித்திக்கும் கணத்தில் ,
பெருங்காதலின் ஒருதுளியை
சுவைக்குமொரு பொழுதில் ,
கூற்றுவனை எதிர்பாராமல்
கனவில் சந்திக்கும் போதெல்லாம்…
கசிகிறது விழியோரம்

இவற்றில்
எந்தக் காரணத்திற்காக
ஈரமாகிறதோ ….
அவள் எனைக் கடந்துசெல்லும்
ஒவ்வொரு தடவையும்

oOo

உள்சுடர்

விசையில் அதிரும்
வெள்வால் நுனியென

செம்மஞ்சள் வண்ணம்தோய்ந்த
தூரிகைமுனை அசைவதென

இளவெயில்பட காற்றிலாடும்
மென்தளிரென

வெம்மையும் குளுமையுமாய்

மழைக்கோ புயலுக்கோ
குலைந்திடாமல்
யுகயுகமாய் நிலைப்பதென
என்னுள் சுடர்கிறது …
அத்தீபம்

புகையெதுவும் படியாமல்
எதனையும் எரிக்காமல்
கசடுகள் அண்டாமல்
எப்படிச் சுடர்கிறது அது?

முன்னோரின் செயலா
முன்பிறப்பின் பலனா
மறுமையின் காட்டியாவென

அறிய முயன்று இயலாமல்
அறிவதனால் ஆவதென்ன என
ஆவதைப் பார்க்க எண்ணியகணம்
மினுக்கென்ற துள்ளலுடன்
சுடர்கிறது அது..
அவள் விழிகளின்
எள்ளல் நகையொப்ப

oOo

வேறென்ன வேண்டும்

கருநிலவு நாள் நள்ளிரவிலும்
என் உடன் வரும்

நண்பகல் வெம்மையைத்
தடுத்து எனைச் சூழும்

திரையரங்கின் இருளிலும்
அருகில் அமர்ந்திருக்கும்

மைதானப் பேரொளியுடன்
என் மீது பொழியும்

கனவின் இருட்குகையிலும்
கைவிளக்காய் முன்செல்லும்

கொடுந்துயரிலும் ஆறுதலை மென்துகிலாய் போர்த்தும்

அவளின் நினைவெனும்
நிலவொளியுடனே பயணிக்கும்
யாத்திரிகனாய் எனையாக்கிய
கடவுளே…
வேறென்ன வேண்டும் எனக்கு