மகரந்தம்

[இந்த இதழ் குறிப்புகளைக் கொடுத்துதவியவர்: கோரா]

கொம்பிருந்தால் சீவுவார்கள்

‘மூத்தது மோழை ; இளையது காளை’ என்ற சொலவடை உண்டு. வீட்டின் முதல் குழந்தை எல்லாருக்கும் செல்லமாய் வளர்வதாலும் , அதற்குக் கேட்டதெல்லாம் கிடைப்பதாலும் அது எந்த போட்டிக்கும் முன்வராத  மோழையாகி (கொம்பில்லாத மாடு) விடுகிறது . இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் தாமாக வெகு விரைவில் போட்டிபோட வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டு கொம்புள்ள மாடுகளாய்த் தங்கள் பங்கைப் போரிட்டுப் பெறுகிறார்கள் . அவர்கள் தம்  சகோதரர்களில் யாருக்கும் அதிக பங்கோ அல்லது சலுகையோ கிடைத்துவிடாமல், எல்லோருக்கும் சம பங்கும், சலுகையும் கிடைக்கப் போராடக் கூடியவராக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள சொலவடைக்குச் சிறிது உளவியல் அடிப்படையும் இருப்பது தெரியவந்தது .

கூகிள் தேடலுக்கு: Birth order traits: Your Guide to sibling personality differences….

ஆனால், யூரோப்பிய கண்டத்தின் அரச மற்றும் பிரபுக்கள் குடும்பங்களைப் பொறுத்தவரை, இளைய வாரிசுகளுக்கு எப்போதும் போதாத காலம்தான். ஏனெனில், அங்கு ப்ரைமோ ஜெனிச்சர் என்ற வாரிசு முறை, முதல் குழந்தைக்கு மொத்த சொத்தும், பதவியும் கொடுக்கப்படும் வாரிசுரிமை முறை நிலவுகிறது. இதில் சில சிறு வேறுபாடுகள் ஆங்காங்கு காணப்படும், ஆனால் பெருவாரி அரச குடும்பங்களில், பிரபுக் குடும்பங்களில் இதுதான் வாரிசுகளுக்கு உடைமைகள் பிரித்துக் கொடுக்கப்படும் முறை.

இன்றைய இங்கிலாந்து ராணியின் ஆட்சிக் காலம்  பிரித்தானிய சரித்திரத்திலேயே மிகவும் நீண்டது. 2016-ல் தொண்ணூறாம் பிறந்த நாள் கொண்டாடிய ராணி இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் போது , சிம்மாசனத்திற்கு ஆறாவது ரேங்க் -ல் இருக்கும் இளவரசன் ஹாரி-யின் (மறைந்த இளவரசி டயானா- வின் இளைய மகன்) முடி சூடும் வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்? அதுவும் அவர் மணம் செய்து கொண்ட அமெரிக்க நடிகை மெகன் மார்க்ள்-ன் தாயார் ஓர் ஆஃப்ரிக்கன் – அமெரிக்கன் எனும்போது. இந்த நிலையில் பட்டப் பெயரையும் , ராஜ்ய பணிகளையும், அரண்மனை வாழ்வையும் துறந்து, தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டு நிதி சுயாதீனமுள்ள (financially indepedent) சாமான்யராக  வட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலுமாக இருக்க முடிவு செய்து விட்டார்.

1811-ல் வெளியான பிரபலமான புதினம்  Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும்  பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும் நினைக்கிறார்.

இணைப்பில் இருக்கும் கட்டுரை ஜேன் ஆஸ்டின் புதினத்தைப் பற்றியதன்று. லண்டன் ரிவ்யூ ஆப் புக்ஸ் பத்திரிகைக்காக க்ளேர் பக்னெல் (Clare Bucknel) எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை. அறிமுகமாகும் நூல்: Gentlemen of Uncertain Fortune: How Younger Sons Made Their Way in Jane Austen’s England by Rory Muir. 19-ஆம் நூற்றாண்டில், பரம்பரைச் சொத்துக்கு வழியில்லாததால் வேலைக்குப் போகும் நிர்ப்பந்தமிருந்த  மேல்குடி இளைய மகன்கள் எதிர்கொண்ட மன அழுத்தம் தரக் கூடிய அன்றைய உத்தியோகச் சூழலை அது விவரிக்கிறது.

இணைப்பு :https://www.lrb.co.uk/the-paper/v42/n05/clare-bucknell/wanting-legs-arms-eyes  

oOo

கொரோனா வைரஸ் மீது சீனா தொடுத்த போர்

கடந்த புத்தாண்டு கொண்டாட்டம் உச்சத்தைத் தொட்டபோது சீனாவை ஒரு சுகாதார நெருக்கடி தாக்கியது. மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள 11 மில்லியன் ஜனத்தொகை கொண்ட வூஹான் மாநகரத்தில் மையம் கொண்டிருந்த புது கொரோனா வைரஸ் தாக்குதல்தான் அது. ஆரம்பச் சறுக்கல்கள் இருந்த போதிலும், சீனா அசுர பலத்தால் புது கொரோனா வைரஸை முறியடிக்க முயல்கிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று இதுவரை உலகுக்குத் தெரிய வந்தவை:

ஜனவரி மாதம் முதல் நாள் தொற்றுக்கு மூல காரணமாகக் கருதப்பட்ட மீன் -விலங்குச் சந்தையை மூடியது.

வூஹான் நகரம் மொத்தமாக மூடப்பட்டது . அங்கிருந்து மக்கள் வெளியேறவும் உள்ளே செல்லவும் தடை செய்யப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப் பட்டது.

தனிமைப்படுத்தப் பட்டிருந்த வூஹான் மக்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதா என்றறிய ட்ரோன்(Drone )கள் பயன்படுத்தப் பட்டன. அவையே வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் பயன் படுத்தப்பட்டன.

வைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் பயன்பாட்டுக்காகப் புதிய சிறப்பு மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் வூஹான் நகரத்துக்கு வெளியில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உடை, போர்வை உணவு விநியோகம், அழுக்குத் துணிகளைச் சுத்தம் செய்யவும், குப்பைக் கூளங்களை அகற்றவும் சிறப்பு ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டன.

பிற மாநிலங்களில் இருந்து ஹுபை மாநிலத்துக்கு 33,000 மருத்துவப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பல கல்வி நிலையங்களும் சமூக நலக் கூடங்களும் மருத்துவ நிலையங்கள் ஆகின.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளியின் நெஞ்சு எக்ஸ்ரேவைப் பார்த்து, அது சாதாரணக் காய்ச்சலா அல்லது கோவிட் – 19 காய்ச்சலா என்று அறிந்து கொள்ளும் வசதி இருந்ததால் முதல் கட்டத்திலேயே ஆயிரக்கணக்கானோரின் அச்சம் அகற்றப்பட்டது. அதனால் சிறப்பு ஆய்வுக்கூடங்களில் கூட்டம் குறைந்தது. ஆய்வு முடிவுக்காக அதிகக் காத்திருப்பு இல்லாமல், உரிய சிகிச்சைக்கு செல்ல முடிந்தது.

காய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து பிளாஸ்மா என்ற திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தி அவர்களை ஆபத்தான கட்டத்திலிருந்து மீட்டார்கள். இதன் அடிப்படையில், தொற்று நோய் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

கோவிட் – 19 காய்ச்சலுக்கு மூலிகை மருந்து, அலோபதி மருந்து கலவைகள் என்று பல மாற்று மருத்துவ வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.

சீன அரசு தன் பொருளாதார பலம், ராணுவ பலம், மனித வளம், அறிவியல் திறம் அனைத்தையும் பயன்படுத்திப் போராடி கோவிட் -19 என்ற வேதாளத்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. இது வெவ்வேறு கட்டங்களில் இன்று இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் பாடமாக அமையலாம்.

சீனா தொடக்கத்தில் காட்டிய சுணக்கமும்< அதைத் தொடர்ந்து காட்டிய பயங்கரமான பாய்ச்சலும் சில பத்திரிக்கையாளர்களால் விமர்சிக்கப்படுகின்றன. சுட்டியில் உள்ள கட்டுரையில் இதைக் காணலாம்:

https://www.theguardian.com/world/2020/feb/12/what-chinas-empty-new-coronavirus-hospitals-say-about-its-secretive-system

சீனாவிலிருந்து வரும் எந்தச் செய்தியும் நம்பத்தக்கதல்ல என்று ஒரு மனிதக் கூட்டம் சொல்லி வருகிறார்கள். வெளித் தகவல்கள் உள்ளே வராமலும், உள் தகவல்கள் வெளியே போகாமலும் தடுக்க சீனா ஒரு ராணுவமே வைத்திருக்கிறது. ஒரு முழுப் பல்கலைக்கழகமே இந்த வகைத் தகவல் போரை உலகெங்கும் நிகழ்த்தவெனவே நடத்தப்படுகிறது, அது ஒரு ராணுவப் பயிற்சிப் பல்கலை. இருந்தும் தண்ணீரைத் தேக்குவது எத்தனை கடினமான முயற்சியோ அதே போன்றது தகவலைத் தடுப்பதும். சீனாவிலும் சட்டத்தை மீறுவோரும், அதை எதிர்ப்போரும் உண்டு, இந்தியாவில் பெரும்பான்மை இப்படி, சீனாவில் மிகச் சிறுபான்மை அப்படி. அதொன்றுதான் வேறுபாடு. சீனாவின் ‘வெற்றி’ முழுதும் பொய் என்று சொல்ல இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். இரண்டில் யார் கட்சி நிஜம் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும். வரலாம்.

இந்தக் கட்சியின் ஒரு பக்கம் இங்கே: https://news.yahoo.com/chinas-coronavirus-recovery-fake-whistleblowers-191300391.html

மார்ச் 20, 2020 அன்று இதே தளத்தின் தகவல்படி சீனா தன் நடவடிக்கைகளைப் பற்றிய உலகக் கருத்துகளை மாற்றப் பெரும் பாடுபட்டு வருகிறது. https://news.yahoo.com/mask-diplomacy-china-tries-rewrite-virus-narrative-042453059.html

ஆனால், அமெரிக்கத் தளமான யாஹூ செய்தியில் வாசகர்களின் மறுவினைகளைப் பார்த்தால் அந்த முயற்சிகள் வெல்லக் கொஞ்சம் காலம் ஆகும் என்று தெரிகிறது.