ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1

தாமஸ் டிஷ்

தமிழாக்கம்: நம்பி

டெலவேர் நதியையொட்டி காரில் போய்க் கொண்டிருக்கையில், சுவாரஸ்யமான, அனேகமாக இயற்கை சம்பந்தப்பட்ட, காட்சிகளை ப்ரொஃபெஸர் ஹாட்ச் சுட்டிக்காட்டிக் கொண்டே வந்தார். இயற்கை எல்லாம் கே.சி-க்கு ஒரு பொருட்டே அன்று. சிறுவனாக வெஸ்ட் வர்ஜீனியாவிலிருந்தபோது திகட்டத் திகட்ட அதை அனுபவித்திருக்கிறான். மேலும், நதி மற்றும் அங்குபோல் இங்கு சமவெளி கிடையாதென்பதால், மலைகளைச் சுற்றி, வளைந்து நெளிந்து திசைமாறிக் கொண்டே இருக்கும் சாலைகள், இவற்றை தவிர்த்தால் அங்கிருந்த நிலப்பரப்பிற்கும் இங்கிருப்பதற்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசமிருப்பதாக இவனுக்குப் படவில்லை. மற்றபடி அனைத்து இடங்களிலும் இருப்பது போல் இங்கேயும் வழக்கமான – மரங்கள், சாலையோரம் மண்டியிருக்கும் உயரமான களைச்செடிகள், அவற்றிற்குப் பின்னே சில பெரும்பாறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் கடைகளையும், காஸ் ஸ்டேஷன்களையும் தவிர மைல்கணக்கில் இங்கு வேறெதையுமே பார்க்க முடியாது என்று ப்ரொஃபெஸர் ஹாட்ச் கூறினார். அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்றால் இங்கு எஞ்சி இருப்பது இயற்கை மட்டும்தானாம்.

“நிதி, அதுதான் என் பெரிய பிரச்சினை. இந்த இழவெடுத்த நிதியைப் பத்தியே எப்போதும் கவலைப்படாம இருந்திருந்தா நான் என்னெல்லாமோ செஞ்சிருப்பேன்!” என்றான் கே.சி, தான் அப்போது புகைத்து முடித்திருந்த சிகரியோவின் முனையைக் கொண்டு அடுத்த சிகரியோவை பற்ற வைத்துக்கொண்டே…. 

ப்ரொஃபெஸர் ஹாட்ச் அதை அனுசரணையுடன் ஆமோதிப்பது போல் தலையாட்டினார். “தெரியும். எனக்கும் அதே நிலைதான். எல்லா இடங்களிலும் இதே கதிதான்,” என்று அவர் நொந்து கொண்டார். 

“இப்போ இந்த ரத்த விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்,” என்று கே.சி தொடர்ந்தான். “நான் என் காரியங்களுக்கு நிஜ ரத்தத்த பயன்படுத்தறதில்ல. நிஜ ரத்தம்னு சொல்றது மனுஷங்க ரத்தங்கற அர்த்தத்துல… கசாப்புக் கடையில் வாங்கற ரத்தத்ததான் உபயோகிக்கிறேன். வாங்கின உடனேயே ஃப்ரிட்ஜ்ல பத்திரப்படுத்தி விடுவேன். துளி அபாயம்கூட கிடையாது! ஆனாலும் ஓமாஹாவோ அதப் போல ஊர் பேர் தெரியாத இடத்திலிருக்கற மியூசியத்துக்கு ஒரு தபா போனபோது, ரான் ஆத்னீ இரண்டு மாதங்களுக்கு முன் அங்கு போயிருந்தப்போ, எவன் உடம்பிலயோ கொஞ்சம் ரத்தம் இருந்ததுன்னு… இல்ல தெரியாமத்தான் கேக்கறேன் அது என் தப்பா? ஆத்னீ அவருடைய ரத்தத்தையே பயன்படுத்தறவர்னும் நானோ மிருகங்க ரத்தத்த உபயோகிக்கிறேன்னும் அவங்களுக்கு விளக்கினேன். மிருகங்களுக்கும் எய்ட்ஸ் வருமா என்ன? என்ன இழவோ, திடீர்னு என்னை விழாவிலிருந்து நீக்கிட்டாங்க, இப்போ என்னடான்னா ப்ளேன் டிக்கட்டுக்கு குடுத்த காச திருப்பிக் குடுங்கறான்.”

“எனக்கும் இதே மாதிரி நடந்திருக்கு,” என்றார் ப்ரொஃபெஸர் ஹாட்ச், ரோட்டில் ஒடிக்கொண்டிருந்த ஜந்து மீது கார் ஏற்றிக் கொல்வதைத் தவிர்ப்பதற்காக ஸ்டியரிங் வீலை ஒடித்தபடி. 

மயிரிழையில் எந்த ஜந்து உயிர் பிழைத்தது என்பதை அறிந்து கொள்வதற்காக கே.சி திரும்பிப் பார்த்தான். ரக்கூன்.

அவன் ஓட்டுனராக பயணிக்கும்போது நெடுஞ்சாலையில் தன் நினைவாக, அதில் கையொப்பம் இடுவது போல், ரோட்டில் செத்துக் கிடந்த சடலங்களுடன் தொடர்பு கொள்ள முயல்வான் கே.சி. 

“இதைக் காட்டிலும் மோசமானதெல்லாம் எனக்கு நிகழ்ந்திருக்கிறது,” என்று ப்ரொஃபெஸர் ஹாட்ச் தொடர்ந்தார். “என் நாட்டியக் குழு உள்ளே நுழைவதை தடை செய்வதற்காக தேவாலயத்து கதவுகளுக்கு குறுக்கே போலீஸ்காரர்கள் சங்கிலியிட்டிருக்கிறார்கள்.”

“நிஜம்மாவா? ரத்தம் கித்தம் ஏதாவதா?” கே.சி அக்கறையுடன் கேட்டான். 

“இல்லை. உடை அணியாததற்காக. அதுவும் 1987-ல. அதுக்கப்பறம் ரொம்ப நாளா மனசொடிஞ்சு போயிருந்தேன். ஆலிசனும் – அவள் விழாவின் கோ-டெரக்டராக என்னுடன் பணியாற்றினாள்- ஆலிசனும் மனக் கிலேசமடைந்தாள். வக்கீல் ஒருவன், எனக்கு சரியாக தெரியவில்லை, ஒரு அதிகாரி போலிருந்தது, கிறுக்குத்தனமாக சட்ட வரையறைகளை ஒப்பித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு நான்கு போலீஸ்காரர்கள் எங்கள் போஸ்டர்களை கிழித்தெறிந்தார்கள். செய்தித்தாள் புகைப்படக்காரர்கள் அங்கிருந்தார்கள், ஆலிசன் அழுது கொண்டிருந்தாள், நான்கூட மிகப் பதற்றமாக இருந்தேன். என் வாழ்வை அவர்கள் நாசமாக்கிக் கொண்டிருந்தார்கள், என்னைக் கேட்டால் இதுதான் அராஜகத் தணிக்கைக்கான அர்த்தம் – ஒரு யூனிடேரியன் தேவாலயத்தில்கூட இரண்டு பெண்கள் நடனம் ஆட முடியாதென்றால் அதை வேறெப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது?”

கே.சி. ப்ரொஃபெசரை நிர்வாணமாக கற்பனை செய்ய முயற்சித்தான், ஆனால் அவளை முதற்பெயருடன்கூட அவனால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவள் செல்வியா, திருமதியா அல்லது வெறும் திருவா? பேராசிரியராக எங்கு பணியாற்றினாள் என்பதையோ எத்துறையில் பேராசிரியர் என்பதையோ அவளிடமே கேட்பது உசிதமல்ல என்பதை இவன் நன்கறிந்திருந்தான். அவளுக்குப் பேசப் பிடிக்கும் என்றாலும் தற்போது மேற்கொண்டிருக்கும் மனதின் அந்தரங்கமான நெடுஞ்சாலைப் பயணத்தை சுமுகமாக முன் நடத்துவதற்கு ஏதான கேள்விகளைத் தவிர பிற கேள்விகளுக்கு விடையளிக்க அவளுக்கு விருப்பமில்லை. 

“ஆலிசனை பற்றிக் சொல்லிக் கொண்டிருந்தீங்க, அப்போ அவளுக்கும் உங்களுக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்ததா?”

பொடி வைத்து கேள்வி கேட்கவில்லை என்று இவன் நினைத்துக் கொண்டிருந்தாலும் ப்ரொஃபெசர் இவனை கோபத்துடன் முறைத்தார். “என்னைக் காட்டிலும் மிகவும் இளமையானவள் என்பதால் அப்போதும் இப்போதும் எங்களிருவருக்கும் இடையே அதிக வயது வித்தியாசம்தான். ஆனால் அப்போது அவள் மைனர் கிடையாது, அதைத்தானே நீ தெரிந்துகொள்ள விரும்பினாய்?”

‘சே, சே தப்பான அர்த்தத்துல நான் கேக்கல. சாத்தியமானால், எப்போதுமே அவங்க அம்மாதிரியான விஷயங்கள சாக்காக பயன்படுத்திக்குவாங்கங்கற அர்த்தத்திலதான் கேட்டேன். என் சொந்த அனுபவத்துல இத தெரிஞ்சுக்கிட்டேன். பதினாறு வயசுல ஆற்றுகை கலைஞனா ஆகணும்கற விழைவ எனக்குள்ளயே கண்டுகிட்டேன். பிஞ்சிலே பழுத்தவன்னும் சொல்லலாம். ஏர்லி டெத் என்ற குழுவுடன் வேலை செய்து கொண்டிருந்தேன். அனேக விதங்களில் நாங்க ஒரு ராக் குழுவப் போலத்தான் பணியாற்றினோம் என்பதே உண்மை. அது கிடக்கட்டும், என்ன சொல்ல வந்தேன்னா, நார்த் கரோலினா கிளப் ஒன்னுல நான் இன்னமும் வயதுக்கு வரலங்கற காரணத்துக்காக எங்க ஆற்றுகையை தடை செஞ்சாங்க.”

“நார்த் கரோலினா, அந்த ஜெஸ்சி ஹொம்ஸ் இடம்தானே?”

“இருக்கலாம், அங்கயும் ரத்தம்லாம் பிராப்ளம்தான். நீங்க சொன்ன மாதிரி எல்லாமே தணிக்க அராஜகம்தான்.”

நதியிலிருந்து வலப்பக்கமாக விலகிச் சென்ற, இயற்கை சூழ்ந்திருக்கும் பச்சை டனலுக்குள் ப்ரொஃபெஸர் ஹாட்ச் காரை வழிநடத்திச் சென்றார். அவர் பேசிப் பேசி பேச்சை வளர்க்க வேண்டிய கட்டாயமின்றி தற்போது உரையாடல் ஒரு சீரியக்கத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அவர் பார்வை பறவையின் எச்சரிக்கையான விழிப்புணர்வுடன் மின்னியது. இழுத்து இறுக்கப்பட்ட அவர் கழுத்து நரம்புகள் தேவையான அளவிற்கு சரியாக முறுக்கப்பட்டிருக்கும் மின்சுற்றுக் கம்பிகளை கே.சி.க்கு நினைவுறுத்தின.

அவன் புகைபிடிக்க, அவர் காரோட்ட, சாலை சுருளவிழ்ப்பது போல் அவர்கள் முன் உருண்டது. பிறகு, ஸ்லாட்டர் ராக் பாட்டில்ஃபீல்ட்டிற்கான முதல் வழிகாட்டிப் பலகை தென்பட்டது. “அதோ, வந்துவிட்டோம்,” என்றார் ப்ரொஃபெஸர் ஹாட்ச் பிரேக்கை பலமாக அழுத்தியபடியே. வேன் வரலாற்று நினைவுப் பலகையைக் கடந்து சறுக்கிச் சென்றதால் அவர் வண்டியை ரிவெர்சில் இயக்கி அப்பலகையையொட்டி நிப்பாட்டினார். பலகையில் இவ்வாறு இருந்தது:

ஸ்லாட்டர் ராக் போர்க்களம்

ஆகஸ்ட் 15, 1780-இல் புரட்சிப் போரின் மிகக் குருதி தோய்ந்த சண்டையொன்று இவ்விடத்தில் நிகழ்ந்தது. 120-பதிற்கும் மேற்பட்ட குடிப்படை வீரர்களை 27 டோரிகளும் 60 இரக்கோய் இந்தியர்களும் பதுங்கித் தாக்கி கொடூரமாக படுகொலை செய்தார்கள்.

“தங்களில் பாதி நபர்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியர் படைகிட்ட தோத்தத எல்லாம் விளம்பரப்படுத்த விரும்புவாங்கன்னு நம்பளால நினைத்துக்கூட பாக்க முடியாது,” என்று கே.சி கூறினான்.

“இதை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம்,” ப்ரொஃபெஸர் ஹாட்ச் பதிலளித்தார். வேன் நெடுஞ்சாலையை விட்டு ஒரு கணம் சட்டென விலகி சுதாரித்துக் கொண்டு மீண்டும் ரோட்டில் விரைந்தது. “நம் குலப்படை வீரர்களின் படு கேவலமான தோல்வியாகவோ அல்லது இரக்கோயர்களின் மாபெரும் வெற்றியாகவோ இதை ஒருவர் அணுகலாம். இப்பார்க் வளாகம் அமெரிக்க பழங்குடியினரிடம் மிகவும் பிரசித்தி அடைந்திருக்கிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனாலும் வளாகத்தின் வருடாந்திர வருவோர் எண்ணிக்கை அப்படி ஒன்றும் பிரமாதமாக இருக்காது என்பதில் சந்தேகமில்லை. கோடையில், வார இறுதிகளில் நான் இங்கு பிக்னிக் செய்திருக்கிறேன். இது ஏதோ ஈ காக்கா கூட அண்டாத இடம் போலவோ, இல்ல இப்படியொரு இடமே இல்லாதது போலவோ, ஒரு ஆளைக் கூட பார்க்க முடியாது.

“நான் விழாவிற்கு தேவையான நிதியுதவி விண்ணப்பங்கள தயார் செய்தபோது சலிவன் கவுண்டியின் அருமையான பொழுதுபோக்கு வளங்கள் முற்றிலும் உபயோகிக்கப் படாது வீணாகிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினேன். எவருமே மேடை ஏறாத, இயற்கையில் இயல்பாகவே அமைந்திருக்கும் சுற்றடுக்கு வரிசை அரங்கத்தையுடைய இந்த அறியப்படாத பொக்கிஷத்தைப் பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் டாலர்கள் செலவு செய்து கொண்டிருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த நிலைமை நண்பர்களுக்கும், எனக்கும் ஒரு வரப்பிரசாதமாவே அமைந்தது. ஏனெனில், நியூ யார்க் மாநிலத்தின் கலைக்கான நிதித் திட்டங்களை கவுண்டி அடிப்படையில் அமைத்திருந்தார்கள். அதனால், மன்ஹாட்டனில் வசிக்கும் ஒருவர்  நிதி கிடைப்பதற்கான சாத்தியங்களை முற்றிலும் மறந்திடலாம். அவர் ஜூடி சிகாகோவாகவே இருக்கலாம், சல்லி காசு கிடைக்காது.”

“யாரது, ஜூடி சிகாகோ?”  கே.சி கேட்டான்.

புத்தர் புன்னகையொன்றை முறுவலித்தபடியே, “ஜூடி சிகாகோ இருபதாம் நூற்றாண்டின் பாப்லோ பிகாஸோ,” என்று ப்ரொஃபெஸர் ஹாட்ச் கூறினார்.

அவரது மேட்டிமை ஏளனத்தை கே.சி புரிந்துகொண்டாலும் அதை அவன் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

ஸ்லாட்டர் ராக் கலை ஆற்றுகை விழா பஸ் கட்டணத்துடன் இருநூற்றி ஐம்பது டாலர்களையும் அவனுக்கு மதிப்பூதியமாக வழங்கியது. ஆனால் அதைக் காட்டிலும் முக்கியமாக, ஏர்லி டெத் குழு உறுப்பினராக அல்லாது தனிக் கலைஞனாக திறமையை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் அளித்தது. விழாவை காண்பதற்காக, இரண்டு பஸ்களை நிரப்பியபடி, விமர்சகர்கள் நியூ யார்க் நகரத்திலிருந்து வரப்போகிறார்கள் என்றும் அவர்களே விழாவின் உந்துவிசை என்றும் பிரொஃபெஸர் ஹாட்ச் கூறினார். ஆற்றுகைக் கலை உலகின் வளைவு சுளிவுகள் இப்பெண்மணிக்கு அத்துப்படி என்பதால் அவரை ஒரு குருவைப் போல் பாவித்து அவர் கூறுவதனைத்தையும் ஒரு தொண்டனைப் போல் பவ்யமாக செவிமடுக்க கே.சி உத்தேசித்தான். 

” குறுக்க பேசறுதுக்காக மன்னிச்சுக்கோங்க. நியூ யார்க்ல் கவுண்டி அடிப்படைலதான் எல்லாமே நடக்கும்னு நீங்க சொல்லிக்கிட்டிருந்தீங்க,” என்று இடைபுகுந்தான்.

“ஆமாம். அதைக் கணக்கில் கொண்டு யோசித்தால், கலைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் கவுண்டிகளே பயன் தரக்கூடிய சந்தர்ப்பங்களை நமக்களிக்கும், சரிதானே?. கடந்த சில வருடங்களில், அலெகெனி கவுண்டி நடன அமைப்பிற்காகவும், ஆஸ்விகோ கவுண்டி கவிதைக்காகவும் எனக்கு நிதியளித்திருக்கின்றன. ஆனால் ஸ்லாட்டர் ராக் காட்சியகத்தின் திறப்பு உண்மையில் கடவுள் நமக்களித்த வரம் என்றே கூற வேண்டும். அது ஒரு நிறுவனம் என்பதால் ஒவ்வொறு வருடமும் நாம் நிதி விண்ணப்பம் செய்யலாம். அதற்கு மாற்றாக, கலையை உள்ளூர் குடியிருப்புகளுக்கு எடுத்துச் செல்லும் வெளிக்கள பரப்புப் பணிகளை செய்யவேண்டி வரும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இது தவிர்க்க முடியாதது என்றாலும் ஒரு விதத்தில் சரியானதும்கூட. இங்கு வாழும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் நிதி வழங்கப்படுகிறது என்ற பட்சத்தில் அவர்களுக்கு கைமாறாக நாம் எதாவது செய்ய வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே?”

நக்கலடிப்பதை கே.சியால் தவிர்க்க இயலவில்லை: “பஸ் நிலையத்த விட்டு கிளம்பறப்போ ஏதோ நாகரீகத்துக்கே டாடா காட்டிட்டு போறது போலவும், இப்போ போய்க்கிட்டு இருக்கற திசைல சொல்லிக் கொள்ளும்படியா பட்டணங்கள் ஏதும் கிடையாதுங்கறது போலவும் பேசினீங்களே?”

” பட்டணங்கள் கிடையாது – ஆனால் சமூகங்கள் உண்டு. சலிவன் கவுண்டியின் பிரதான தொழில் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறாய்?”

“தெரியாது. வெட்டுமர வணிகமாக இருக்குமோ?”

“ஒருகாலத்தில் சுற்றுலாவாக இருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்னதாக. இல்லை, சீர்திருத்த நிறுவனங்களே இங்கு அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கும் தொழிலாக வளர்ந்துள்ளது. “

“சீர்திருத்த நிறுவனங்களா?”

“சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அனைத்து ரகமான வயது வந்தவர்களுக்கான கிடங்குகள் என்று கூற வேண்டும். மத்திய சிறைச்சாலையும் மூன்று மாநிலச் சிறைச்சாலைகளும் உள்ளன- உள்ளதிலேயே பெரியது பதின்ம வயதினர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

“அவற்றைத் தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக அளவில் சிறிதும் பெரிதுமாக பலதரப்பட்ட மனநோயர் குற்றவாளிகளுக்கான ஹாஃப்வே மற்றும் மறுவாழ்வு இல்லங்கள். – யூடோபியா இன்கார்ப்பரேட்டட், கேள்விப்பட்டிருப்பாயே, அது உட்பட”

“உண்மையாவா, அது இங்கயா இருக்கு? ஏர்லி டெத் குழு உறுப்பினர் ஒருத்தர அங்கதான் அனுப்பி வெச்சாங்க. எனக்குத் தெரிஞ்சவரைல அங்கதான் இன்னமும் அடச்சு வைக்கப்பட்டிருக்கார். இந்த மாதிரி இடங்கள்ல நீங்க என்ன செய்வீங்க? சிறைச்சாலைகளுக்கு போய் ஆற்றுகைகளை நடத்துவீங்களா?”. “துணி போட்டுக்காம?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

“இல்லை. அதெல்லாவற்றையும் விட சிறப்பானதயே நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ஓவியம், தையல் வேலை, கவிதை போன்றவற்றில் பட்டறைகள் நடத்துகிறோம். இத்திட்டம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சுதந்திரம் மறுக்கப்பட்டோரிடத்தே உண்மையான கலைப்பசியை எதிர்கொண்டேன்.”

“கண்டிப்பா! கலைன்னு மட்டுமில்ல எதுக்காகவும் ஏங்கற ஒரு பசி. எனக்குத் தெரியும். நானும் அவங்களோட இருந்தவன்தானே?”

“அப்படியா? உன் விண்ணப்பத்தில் நீ குறிப்பிடவில்லையே.,” அவள் குரலிலொலித்த அம்மாத்தனத்துடன் கலந்த நக்கல் தொனியை கே.சி நன்றாகவே அறிந்திருந்தான்.

“மத்த பசங்க ஆறாப்பு ஏழாப்பு வகுப்புகள்ல அடைபட்டிருக்கையில நான் ஒரு மாநில சீர்திருத்த பள்ளில காலத்த ஓட்டிக்கிட்டிருந்தேன். கோர்ட் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட ஆவணங்கள இப்போ சீல் வெச்சிருக்காங்க. ஆனா நான் எதுக்காக உள்ள போனேன்னு உங்களுக்கு தெரியும் இல்லயா? தீவைப்பும் உடைமை அழிப்பும்தான் அடிப்படை குற்றச்சாட்டுக்கள்.” 

“Plus ça change” என்றார் ப்ரொஃபெஸ்ர், அவனுக்கு அவ்வழக்கு அனேகமாக தெரிந்திருக்காது என்று அவர் நினைத்திருக்கலாம்.

“மிகச் சரியா சொன்னீங்க,” என்று ஆமோதித்தான். “ ஆற்றுகைக் கலையைப் பொறுத்தமட்டில் plus c’est la même chose என்பது சரியே. ஆனா குடும்பநல நீதிமன்றங்கள் இதையெல்லாம் ஒரு தணிக்கை சூழ்நிலையாக பொருட்படுத்தாதுன்னுதான் நினைக்கறேன். அவங்கள பொறுத்தமட்டில் கட்டிடத்த கொளுத்தறது ஒரு குற்ற நடவடிக்கை. அதை ஒருகாலும் அவங்க அழகியல் தேர்வாக ஒப்புக் கொள்ள மாட்டாங்க.” 

“ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் இப்படிப்பட்ட மனப்பாங்கே இருக்கும் என்று தோன்றுகிறது. எவ்வளவு மெலிதான இடைத்தடுப்புகள்?”

இதற்குமுன் ஜூடி டெட்ராய்ட்டை சுட்டியது போல் இப்போதும் வேறெதையோ புதிர்மையாகச் சுட்டி அவனை அவர் திக்குமுக்காடச் செய்தார். ஆனால் விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கப்படும் அளவிற்கு அவன் வீண்பெருமை கொண்டவனல்ல. தெரிந்தவர்களிடம் தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் கல்வியறிவை எப்படிப் பெறுவதாம்? “ஓகே, தோல்வியை ஒப்புக்கறேன், மெலிதான் இடைத்தடுப்புகள் என்றால்?”

“டிரைடன்,” என்றார். ” அசிடொஃபெல்லில்: ‘தனக்கான பாதையை வகுத்துக் கொள்கையில் மூர்க்கமான ஆன்மாவானது / குற்றுடலை அரித்துச் சிதைத்தது,’ என்றும், அதற்கடுத்து, சில வரிகளிலேயே, ‘பெரும் மதிநுட்பத்திற்கும் பித்து நிலைக்குமிடையே அதிக தூரமில்லை / மெல்லிய இடைத்தடுப்புகளே அவற்றின் எல்லைகளை நிர்ணயிக்கின்றன,” என்றும் வருகிறது.”

கோபமுற்றிருப்பது போல் பாவனை செய்யலாமா என்று கே.சி ஒரு கணம் யோசித்தான். தன் உயரத்தை மற்றவர்களுடன் ஒப்புமை செய்யும் வார்த்தைகள் அவனை எப்போதுமே துணுக்குறும் வகையில் நெருடின. ‘குற்றுடல்’ என்பதை அவ்வகையான முகத்திலறைதலாகவே அவன் உணர்ந்தான். ஆனால் சொந்த அணிக்காக வாதிடும் நேரம் இதுவல்ல என்று முடிவு செய்து, அந்த மட்டுதலுக்கான எதிர்வினையை மற்றொரு நாளிற்காக ஒதுக்கி வைத்துவிட்டு, தன் விருந்து இங்கிதங்களை நினைவுகூர்ந்தபடியே கே.சி, “மேதமையும் பித்துநிலையும் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு அந்த வரிகள அர்த்தப்படுத்திக்கறேன்.” அதன்பின் ஆப்பிள் பழத்தை மேலும் மெருகூட்டுவதற்காக பாலிஷ் செய்வதை போல் : “மெலிதான இடைத்தடுப்புகள், இத நான் எப்பவுமே நினைவுல வெச்சுப்பேன்” என்று சொல்லியும் வைத்தான்.

பாதி சிகரியோவைப் புகைத்து முடிக்கும் நேரத்தில் அவர்கள் தொடர்ச்சியாக நீண்ட பல வளைபாதைகள் வழி மேலே சென்று ஸ்லாட்டர் ராக் போர்க்கள நினைவுப் பூங்காவின், காரையிடப்படாத புல்கற்களாலான, மரபுச்சின்னங்கள் பொருந்திய சாயம் பூசப்பட்ட ஒட்டுப்பலகைக் கேடயங்கள் ஏந்தி நிற்கும் இரட்டைத்தூண் வாயிலை வந்தடைந்தார்கள். வலது கேடயத்தில் போர்க் கோடரியும் இடது கேடயத்தில் நீல்குழல் துப்பாக்கியும் தெரிந்தன. ஸ்டீரிங் வளையத்தில் ப்ரொஃபெஸர் ஹாட்ச் தாளம் போட்டுக் கொண்டிருக்க, உட்பாதையை வழிமறைத்த தடைச்சங்கிலியை உருமறைப்புச் சீருடை அணிந்த துணையாள் ஒருவன் கீழிறக்கினான். வாயிலை அவர்கள் கடக்கையில் மிகுந்த கவனத்துடன் மெருகூட்டப்பட்ட பூட்ஸ் குதிகால் சொடுக்குடன் ராணுவ வீரர்கள் அளிக்கும் ஸல்யூட் ஒன்றை ப்ரொஃபெஸர் ஹாட்சிற்கு அவன் வழங்கினான். அவரும் அதை ஒரு ஐந்து நட்சத்திர ஜெனரலின் அலட்சியத்துடன் பெற்றுக் கொண்டார்.

செங்குத்தாக மீண்டும் உயர்ந்து சாலை இரண்டாகப் பிரிந்தது. இடப்பக்கம் பார்க்கிங் வலப்பக்கம் பிக்னிக் திடல்கள். வலப்பக்கம் திரும்பி மற்றுமொரு, ஆனால் முந்தையதைவிட குட்டையான, காரையிடப்படாத புல்கல் இரட்டைத்தூண் வாயில் வழியே நடமாடும் கழிவறைகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த மிகப் பெரிய வின்னிபாகோ பொழுதுபோக்கு ஊர்த்திக்கருகே வண்டியை நிறுத்தினார்கள். வின்னிபாகோவின் மீது,” சலிவன் கவுண்டியின் கலைப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் -ஸ்லாட்டர் ராக் காட்சியகம்,” என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கழிப்பறைகளைத் தாண்டி அங்கும் இங்குமாக, பருத்த அடிமரங்களையுடைய பைன் மரங்களுக்கிடையே கிட்டத்தட்ட ஒரு டஜன் திடமான பிக்னிக் மேஜைகளும் செங்கல்லால் செய்யப்பட்ட பார்பெக்யூ அடுப்புகளும் சிதறிக் கிடந்தன. தொலைவிலிருந்த மேஜையொன்றில் மோஹாக் பழங்குடியினராலான சிறு குழுவொன்று மதிய உணவிற்கு கெண்டகி ஃபிரைட் சிக்கனையும் கெக் பீரையும் ருசித்துக் கொண்டிருந்தது. இந்தியர்கள் பிரொஃபெஸ்ர் ஹாட்ச்சை நோக்கி கையசைத்தார்கள். அவரும் திரும்ப கையசைத்தார். 

“அவர்கள் அசல் இந்தியர்கள் அல்ல என்பது வெளிப்படை. எங்கள் மீள்-நிகழ்த்துனர்கள்,” என்று கூறினார்.

” நானும் அப்படித்தான் யூகித்தேன்,” என்றான் கே.சி.

” நாங்கள் ஸ்லாட்டர் ராக் நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருந்ததால் இளைஞர்களை தன்னார்வலர்களாக பணியாற்ற வைக்க எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. குடிப்படை வீரனாக அல்லாது அனைவருமே தாயெண்டனேகாவின் பக்கமே இருக்க விரும்பினார்கள் என்பதென்னவொ உண்மைதான்.”

“இதிலென்ன ஆச்சரியம். ஹாலோவீன் பண்டிகையைப் போல் இறகுகள், போர்ச்சாயம் இத்யாதி என்று அலங்கரிச்சுக்க யாருக்குத்தான் பிடிக்காது?”

“நாமும் நம் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்,” என்றார் பிரொஃபெஸர் ஹாட்ச், ஸீட் பெல்ட்டை கழட்டி, வேனை விட்டு இறங்கியபடியே. “குறைந்தபட்சத்தில் நான் மட்டுமாவது ஆரம்பிக்க வேண்டும். ஆலிசினுடன் நீ இங்கேயே இரு, நான் மற்றவர்களை சமாளித்துவிட்டு வருகிறேன். அதற்குள் உன் சாமான்களை இறக்கி வைக்க முடியுமா பார்…”

பிரொஃபெஸர் ஹாட்ச் ரிமோட்டைக் கொண்டு வேன் பின்கதவைத் திறந்தார். அதன்பின் வேனை விட்டு கே.சி செவிகளுக்கு எட்டாத தூரம் விலகி , செல்லில் பேசத் தொடங்கினார்.

காம்டென் நியூஜெர்சியிலிருந்து ஒரு பெட்டியில் நெடுந்தூரம் பயணித்திருந்த லிபெர்டி மற்றும் ஜஸ்டிசின் நிலையே கே.சியின் தற்போதைய பிரதான கவலையாக இருந்தது. அதுவரையில் அவ்வளவு குறைவான இடத்தில் அவ்வளவு தூரம் அவை பயணித்ததில்லை. வெப்பத்தால் வாட்டப்பட்டோ அல்லது பஸ்சின் அடிப்புறத்திலிருந்த பயணப்பெட்டிகளை அடுக்குவதற்கான இடத்தில் ஒடுக்கப்பட்டிருந்ததால் முச்சுத்திணறியோ அவை துன்புற்றிருக்குமோ என்று கே.சி கவலைப்பட்டான். நியூ யார்க் நகரத்தில் கிரேஹவுண்ட் பஸ்சிலிருந்து டிரெயில்வேசிற்கு மாறுகையில் பெட்டியை திறந்து பார்க்க எண்ணியிருந்தாலும் அதற்கான போதிய நேரம் அவனுக்கு அமையவில்லை. அதேபோல் பிரொஃபெஸர் ஹாட்ச் அவனுக்காக காத்திருந்த குறுக்குச் சாலையில் கீழிறங்கிய போதும் நேரம் கிடைக்கவில்லை. அவர் எப்போதுமே அவசரத்தில் இருப்பவர் போல இவனுக்குத் தோன்றியது. மேலும் அவர் பாம்பு பல்லி போன்ற ஊர்வன இனத்தைக் கண்டு அச்சுறும் ஹெர்பெடோஃபோபியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பவராக இருக்கலாம் என்று இவன் சந்தேகித்தான். பாம்புகள் ஆதர்ச வளர்ப்பு விலங்குகளென்றும் அவற்றை வைத்திருப்பது ‘சூப்பர்’ என்றும் பேச்சுக்கு கூறுவோர் லிபெர்டியையும் ஜஸ்டிசையும் அறிமுகப்படுத்தினால் அதிர்ச்சிக்கு ஆளாவதை பலமுறை அவன் கவனித்திருக்கிறான்.

அவை இரண்டுமே இறந்து விட்டிருந்தன. அவற்றை தொட்டுப் பார்க்காமலே இவனால் யூகிக்க முடிந்தது. இதுபோல் டிரங்க் பெட்டியில் மணிக்கணக்காக ஒடுக்கப்பட்டிருந்த பிற சமயங்களில், பெட்டியைத் திறந்த உடனேயே அவை அதீத பரபரப்புடன் ஆர்ப்பாட்டம் செய்யும். அனேகமாக இரண்டில் ஒன்றேனும், பெட்டகத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த எஃகு வலைக் கண்ணியைப் பொருட்படுத்தாது, எதைப்பற்றியும் கவலைப்படாதது போல், கொத்துவதற்கு தயரான நிலையில் சுருண்டிருக்கும். இம்முறை அப்படியேதும் நிகழவில்லை. அவை இறந்திருந்தன. 

உணர்வுகளுக்கு பூட்டிடுவதில் கே.சிக்கு நம்பிக்கையில்லை. நெஞ்சில் பட்டதை வார்த்தைகளில் கொட்டி விடுவான். எந்தவொரு கடுமையான அல்லது திடுக்கிடச் செய்யும் வலியுமே அவனிடமிருந்து கீழ் ஸ்தாயி உறுமலாகத் தொடங்கி அலறலாக உருமாறி யோடெலிங் பாணியில் இரண்டு கட்டைகள் உயர்ந்து, “மயிராப் போச்சு, எக்கேடும் கெட்டுப் போகட்டும்,” என்று உக்கிரமான ஆதிகாலத்து ஆத்திரத்துடன் முடிவுறும். பள்ளிக்கூடத்திலிருந்தபோதே அவன் சண்டியர்த்தனமான குமுறல்களுக்கு பேர்போனவன். ஆனால் ஏர்லி டெத் குழுவின் உறுப்பினனாகக் கிடைத்த இரண்டு வருட தொழில்ரீதியான அனுபவம் அவனது இயல்பான திறமையை நிறைவு செய்தது, மரித்துவிட்ட இரண்டு கிலுகிலுப்பை விரியன்களுக்காக அவனிடமிருந்து வெளியேறிய துயர் தோய்ந்த அலறல் கேட்கும் தொலைவிலிருந்த அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தது. பிரொஃபெஸர் ஹாட்ச் விரைத்து நின்றார். பருத்த பெண்மணியொருவர், நாட்டியத்தில் பிரொஃபெஸருக்குத் துணைபோகும் ஆலிசன், வின்னிபாகோவின் கதவைத் சடாலென்று திறந்து வெளியே ஓடி வந்தார். பிக்னிக் திடலிலிருந்து மேஜைகளுக்கிடையே குறுக்கும் நெடுக்குமாக நகல் இந்தியர்கள் கிளர்ச்சியுற்ற கலவரத்துடன் சிதறியபடியே விரைந்தார்கள். 

ஆர்ப்பாட்டமான தோரணைகளை இயல்பாகவே பெற்றிருந்த கே.சி லிபெர்டியை ஒரு கையிலும் ஜஸ்டிசை மற்றொன்றிலும் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னதை விட சத்தம் கூடுதலாக இல்லாவிடினும் அதைக் காட்டிலும் அற்புதமாக நீட்டி முழக்கப்பட்ட கீச்சுக் குரலிலும், மேலதிகமான கலை பாவனைகளுடனும், அதைக் கேட்ட எவரையுமே குழந்தையின் மிக உக்கிரமான அலறலைப் போல் நின்ற இடத்தில் உறையச் செய்யும் நடுக்கத்துடனும், ஒரு கணம் உருமினான். தீவிபத்துகளுக்கு நீர்த்தூவிகள் உடனடியாக எதிர்வினையாற்றுவது போல் மனிதர்களும் அவ்வகையான ஒலிக்கு எதிர்வினையாற்ற ஹார்ட்வைர் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

ஆலிசன் நிலைமையை சரிக்கட்டுவதற்கான அதிகாரத்தை தானாகவே எடுத்துக்கொண்டார். சராசரி உடலின் முண்டப் பகுதி அளவிற்கு புடைத்திருந்த தொடைகளையும், பருத்த பிருஷ்டத்தையும் உடைய பெருத்த பெண்மணி அவர். உடற்கனத்தை அதிகாரத்தின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொண்டார். தொடைமேல் தொடைவைத்து அவர் அணிவகுப்பை ஒத்த நடையுடன் முன் சென்று தொய்வுற்றிருந்த பாம்பின் சடலங்களை கைப்பற்ற முயன்றார். “விடு,” கே.சியிடம் ஆலிசன் கூறினார். 

பாம்புகளை தன்னிடமிருந்து அவள் எடுத்துக் கொள்வதை தடுக்க முயற்சிக்காது, சிறப்பான சுருதி பேதத்திற்கான இசைக் கலைஞரின் நன்றியுணர்ச்சியுடன், உடல் அசைவுகளை ஒடுக்கி தொய்வுற்று நின்றான். முட்டியிட்டு, சரளைக்கற்களின் அழுத்தத்தால் உண்டான மூட்டுவலியை சத்தமற்ற முனகலுடன் பொறுத்துக் கொண்டு, கருவிலிருக்கும் குழந்தையைப் போல் சுருண்டு கைகளில் முகத்தை புதைத்தபடி கண்ணீரின் சாத்தியத்திற்காக காத்திருந்தான். ஆடைகளற்ற தன் சடலத்தை குடும்பத்தாரும் நண்பர்களும் குற்றவுணர்வுடன் விசனமாக சூழ்ந்திருப்பதை கற்பனை செய்து கொண்டான் (சவுத் ஜெர்சியின் கம்யூனிட்டி காலேஜ் ஒன்றில் நடிப்புப் பாடங்களுக்குக்காக சென்றிருந்தபோது இந்த வித்தையை அவன் பயின்றிருந்தான்). எதிர்பார்த்தபடியே, இவ்வளவு வாலிபமும், இவ்வளவு திறமையும் இவ்வளவு மெலிவும் இணைந்திருக்கும் தன் இருப்பு இவ்வாறு துக்ககரமாக வீணாகிக் கிடப்பதை கற்பனை செய்தது, அவன் கண்ணீர் மடையை திறந்து விட்டது. பெருக்கெடுத்து ஓடவில்லை என்றாலும் தலை உயர்த்துகையில் மோஹாக் முடியொப்பனையும், போர்ச்சாயமும் அணிந்திருந்த வியந்திருந்த பார்வையாளர் வட்டம் கண்டு கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. 

“இந்த பாருப்பா கே.சி, கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ,” இந்தியர்களை மிக நுணுக்கமாக நகலித்தவனொருவன் இடைபுகுந்தான்.

“ஜெத்ரோ? டெத்ரோ ஜெத்ரோவா?” 

ஜெத்ரோ அரவணைக்கும் எண்ணத்துடன் கைகளை அகலமாக விரித்தான். கே.சி எழுந்தபின், அவர்களிருவரும் ஆடவர்களுக்கே உரிய வீறார்ந்த தழுவலொன்றை நினைவுறுத்தும் வகையில், ஜீன்ஸ் அணிந்த கால்களை விரித்தபடி, ஒருவர் தோளை மற்றொருவர் இறுகப் பற்றியபடி, தழுவிக் கொண்டார்கள். 

“அந்தப் பேர்ல அழைக்கப்பட்டு ரொம்ப நாளாச்சு, இங்கிருக்கறவங்களுக்கு நான் வெறும் ஜான்தான்,” என்றான் ஜெத்ரோ, தன்னை விடுவித்துக்கொண்டு பின்னால் ஒரு அடி வைத்தபடியே. அவன் இளித்த விதத்திலிருந்து பிரொஃபெஸர் ஹாட்சிற்காகவும் அங்கிருந்த இந்தியர்களுக்காகவும் பொய் சொல்கிறான் என்பதை கே.சி புரிந்துகொண்டான். “ஹோமிசைடல் மேனியாக்” என்ற ஏர்லி டெத்தின் பிரசித்தி பெற்ற ஒரே பாடலின் பாடலாசிரியரும் தலைப்பாடகனுமான அவனது பழக்கமான ஓநாய்ச் சிரிப்பை அவ்விளிப்பில் இவனால் இனம்காண முடிந்தது. உண்மையாகவே சுரந்த கண்ணீரை சட்டை முன்கையால் துடைத்துக் கொண்டு. “ரெண்டு வருஷத்துக்கு முன்ன இருந்ததவிட இப்போ உடல் நலத்துடன் நல்லாவே இருக்க,” என்று கே.சி கூறினான். 

” இது முழுமை மருத்துவம் சார்ந்தது. மேலை மருத்துவத்தப் போல நோய்க்குறிகள மட்டும் குணப்படுத்த முயலாம மனிதனோட எல்லா கூறுகளையும் கணக்கில எடுத்துக்கிட்டு ஒரு முழுமையான சிகிச்சைய அது தேர்வு செய்யுது. மேலும் இப்பல்லாம் நான் நிறைய சாப்படறேன்.” 

துருத்திக் கொண்டிருந்த மெல்லிய தாடையில் முன்பு குறுந்தாடி இருந்த இடத்தை ஜெத்ரோ தடவிக் கொண்டான். ஏர்லி டெத்தின் முதன்மை கிட்டாரிஸ்டாக இருந்த சமயத்தையும் விட, மோஹாக் பாணி தாறுமாறாக வெளிப்படுத்திய கபாலத்துடன், தாடியற்ற ஜெத்ரோவின் முகம் ஒரு மண்டையோட்டை ஒத்திருந்தது. சதை போட்டிருந்தது அவன் அடிப்படை குணங்களை மாற்றியதாகத் தெரியவில்லை. அனைவரும் மரணத்திற்கு உட்பட்டவர்கள் என்றாலும் சிலர் மட்டுமே சற்று கூடுதலாக அதற்கு உட்பட்டிருக்கிறார்கள் என்ற கூற்றிற்கு ஜெத்ரோவே சாட்சி. 

“பாம்புகளுக்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று ஜெத்ரோ பரிவுடன் கூறினான், கே.சியின் தோள் மீது தன் மெல்லிய சரளமான விரல்களைப் பதித்தபடியே. “ஆனா இதனால உன்ன நிகழ்ச்சிலேந்து தூக்கிடுவாங்கனு நெனச்சுக்காத. சிக்கல் இருக்கற இடத்துலதான் தீர்வும் இருக்கும்கறத மறந்துடாத. வின்ஸ்டன் – சேலத்துக்கு போனப்போ, ஒலிபெருக்கிகளை அந்த பட்டிக்காட்டான்கள் உடச்சு நொறுக்கியது உனக்கு நெனவிருக்கா? நாம சும்மாவா இருந்தோம்? கார் அலார்ம்களை பதிலிகளாகப் பயன்படுத்தி அமோகமான வெற்றிய ஈட்டினோமா இல்லயா? சரிதானே? என்ன, நான் சொல்றது சரிதானே?”

“ஆமாம்,” என்று கே.சி சிடுசிடுப்பாக ஒப்புக் கொண்டான், லிபர்டி ஜஸ்டிஸிற்காக துக்கப்படுவதில் இயல்பாகவே அமைந்திருந்த நாடகீயத்தை அவன் துறக்க விரும்பவில்லை. அவர்களிடமிருந்து, குறிப்பாக நிகழ்வு மேலாளர்களாக இருந்த பிரொஃபெஸர் ஹாட்ச், அவர் நண்பி அலிசனிடமிருந்து மேலும் சில அனுதாபங்களை தன்னால் கரந்திருக்க முடியும் என்று நம்பினான். ஆனால் துக்கத்தால் மரை கழண்டுவிட்டதாக அவர்கள் சந்தேகிப்பதற்கான வாய்ப்பளிப்பது அவ்வளவு உசிதமல்ல என்று எண்ணி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்., ஆஸ்கர் அண்ட் ஹாமெர்ஸ்டீனின் ஏதோவொரு கேவலமான மெட்டை அவன் சீட்டியடித்துக் கொண்டிருந்ததையும் மீறி ஜெத்ரோவின் இயல்புணர்வு சரியென்றே தோன்றியது: தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலைமையில் கால்வளை வார்களில் ஈரம் படியாமல் பார்த்துக் கொள். மேலும் கேனையர்களைக் கண்டு அஞ்சாதே.

உணர்வுரீதியான கவனவீச்சு கே.சிக்கு குறைவாக இருந்ததால், அடிவயிற்றிலிருந்து எழும்பி உள்ளுறுப்புகளை உலுக்கிய ஆதிகாலத்து அலறலுக்குப் பின் பொதுவாகவே அவன் வேறு உணர்வு நிலைகளுக்கு உடனேயே செல்ல தயாராக இருப்பான். லிபர்ட்டியும் ஜஸ்டிஸும் மரிந்துவிட்டன என்பதில் மாற்றமேதும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அவ்விழப்பு தன்னுள் ஏற்படுத்திய துயரத்தை அவன் தக்க வழியில் வெளிப்படுத்தியும் விட்டான். பாடல் சொல்வது போல், போய்க் கொண்டே இரு, போய்க்கொண்டே இரு. குடல் நாளத்தை உறையச் செய்யும் வகையில் தாக்கிவிட்டு, உடனேயே பின்வாங்கி சம்பந்தமற்றது போல் தோற்றமளிக்கும் ‘போரடிக்கும்’ பாவனைகளில் சிறிது நேரம் கடத்தி, பின் திடீரென அவர்கள் எதிர்பார்க்காத சமயம் சடாலென்று அவர்களது ஜனன உறுப்புகளில் பலமான ஒரு எத்து… நிகழ்த்து கலையின் ஆதார ஸ்ருதியே இதுதான் என்பதை தேர்ந்த கலைஞனான கே.சி நன்கறிந்திருந்தான். அதிர்ச்சி வைத்தியம். ஒரு நல்ல திகில் படமோ ஸ்டாண்ட்-அப் காமெடியோ அவ்வாறே செயல்பட்டன. அவர்களை சிரிக்க வை, குமட்ட வை, ஆனால் எப்போதும் யூகித்துக் கொண்டே இருக்க வை. 

ஆடவர்களுடன் கைகுலுக்காது நீட்டப்படும் கையை பார்வையிட்டபடியே தலையசைக்கும் கண்டிப்பு பெண்ணியவாதியான ஆலிசன் மற்றும், யுடோபியா இன்கார்பரேட்டடின் மற்ற இராக்கோயர்களான கீனோ, டஸ்டர், விந்த்ரோப், லூ மற்றும் மார்லீனுடன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பின் கே.சி மாற்றுச் சிந்தனையில் ஈடுபடும் எண்ணத்துடன் தன் பழைய நண்பனோடு உடனமர்ந்தான். 

தொடக்கத்தில் ஜெத்ரோவின் உத்வேகங்கள் அனைத்துமே ஆடைகளை துறக்கும் சாத்தியங்களில் குவிந்திருந்ததில் ஆச்சரியமேதும் இல்லை. பெரிய ஆணுறுப்பை பெற்றிருந்த கே.சியே ஏர்லி டெத் குழுவின் ஆரம்ப காலத்து கச்சேரிகளில் கால்சட்டையை முதலில் கழற்றுபவனாக இருந்தான். பிணச்சாயலடித்த ஒருவனுக்கு இப்படி ஒரு அசாத்தியமான உடல்வாகு அமைந்திருந்தது அவனுடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டவர்களுக்கு உத்வேகம் அளித்தது மட்டுமல்லாமல் அனைவரையும் அருவறுக்கச் செய்ததால் அவனுடைய இவ்வகையான அத்துமீறல்கள் குழுவிற்கு சாதகமாகவும் அமைந்தது. 

ஜெத்ரோவை மாற்று சாத்தியங்களில் திசைதிருப்புவது கடினமாக இருந்தாலும் கே.சி விடாப்பிடியாக முயற்சித்தான். அந்தக் கொடிக்கம்பத்தை வைத்து கவனம் ஈர்க்கும்படியாக ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். ஆற்றுகையில் தற்போது பாம்புகளுக்கு இடமில்லை என்றாலும் என்னிடம் கயிறு, கப்பி, சேணம் என்று எக்கச்சக்கமாக இருக்கிறது. அவற்றில் முதலீடு அதிகமென்பதால் என்னால் அவற்றை பயன்படுத்தாமலிருக்க முடியாது.

“சரி, சரி. கொடிக்கம்பம் உண்டு. அது மேல நீ மேல போற காட்சியும் உண்டு. போறுமா?”

“தலைகீழா மேல போற மாதிரி,” கே.சி நினைவு படுத்தினான்.

“சரி. கம்பு மேல, தலைகீழா… கைல விலங்கு மாட்டிக்கிட்டு?”

“ஆமாம், ஆனால் அதெல்லாம வெறும் பாவ்லாதான். எப்போ வேணும்னாலும் என்னால சுளுவா விடுவித்துக் கொள்ள முடியும்.”

“புரியுது! கொடிக்கம்பு மேல எத அனுப்பினா நாச்சுரலா இருக்கும்? கொடி! ஓத்தா நாம ஒரு கொடிய எரிக்கிறோம்,” ஜெத்ரோ கூறினான்.

“அப்படியா சொல்ற?”

“கண்டிப்பா”

“ஒருவாட்டி டர்ஹாம்ல கச்சேரி முடியறச்சே அத செஞ்சு பாத்தோம். அது அப்படி ஒன்னும் ஓகோன்னு வரல்ல, நெனவிருக்கா. ஃபிரெட்டிக்கு கூட ரெண்டு பல்லு போயிடுச்சு.”

“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்த கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள். கொடி, கம்பத்துக்கெல்லாம் முன்னாடி இந்த நிலம், வெறும் மரங்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்த நிலம் அவங்களுக்கு சொந்தமா இருந்துச்சு. பூர்வகுடிகள் உரிமை பெருமையெல்லாம் பிரொஃபெஸருக்கு பெரிய விஷயங்கள், நிச்சயமா நம் கொடி எரிக்கும் திட்டத்தை மிகவுமே விரும்புவார் என்பது உறுதி. மேலும் எதிரிகளின் தலைகள சீவறதத் தவிர மோஹாக்குகள் வேறெதாவது செய்யணுமே. நிகழ்ச்சியில் அவ்வளவு மோஹாக்குகள் இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரும் போர்ச் சாயம் பூசிக்கொண்டு கேட்டுக்கு வெளியில் வாட்ச்மேன் வேல பாத்துக்கொண்டிருக்கப் போவதில்லையே”

“உன் ரீஹாப் குழு மொத்தமுமா?” ஆச்சரியத்துடன் கே.சி கேட்டான். 

“ஆமாம். அத்தன பேருமே நிகழ்ச்சில பங்கேற்கப் போறாங்க,” ஜெத்ரோ தெளிவுபடுத்தினான். “சில பேர் முதல்லேயே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்கலாம் யுடோபியாவிலோ வளாகத்தை அலங்கரிக்கும் போரில் வீழ்ந்த வீரர்களாகவோ பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எது எப்பிடியோ, தோட்டாக்கள எதிர்கொள்ளப் போகும் முதல் வரிசைல நீ இருக்கற பட்சத்தில, எத்தன மொற செஞ்சாலும் பாம்புகள விட கொடிதான் மெர்சலா இருக்கும். “தோட்டாக்கள எதிர்கொள்ளும் முதல் வரிசை” எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.”

“சரி, சரி, புரியுது…”

“குதிகால்ல நீ தலகீழா தொங்கிட்டு இருக்கற உயரத்துக்கு கொடி ஏத்தப் படறச்சே டஸ்டர “த ஸ்டார் ஸ்பாங்கில்ட் பானர்” ஒலி நாடாவ போடச் சொல்லலாம். ஹென்ரிக்ஸ் இசையமைப்பில் வந்தத. என்ன சொல்ற?”

 “கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்,” கே.சி டப்பாவிலிருந்த கடைசி சிகாரியோவை எடுத்துக்கொண்டு, கட்டைவிரல் நகத்தில் உரசி வத்திக்குச்சியைப் பற்ற வைத்தான். ஆனால் அதைக் கொண்டு சிகாரியோ பற்ற வைக்காது படபடக்கும் அதன் மஞ்சள் ஜ்வாலை தன் விரல்கள் நோக்கி ஊர்ந்து வருவதையே வெறித்திருந்தான். சூடு உக்கிரமாகும் வரையில் பிடித்திருந்துவிட்டு வத்திக்குச்சியை விரல்களிலிருந்து நழுவ விட்டான். 

சிறிது நேர யோசனைக்குப் பின், “சரி, சரியா வரும்னு தோணுது. வா, பிரொஃபெஸர் கிட்ட போய் பேசலாம்.”

ஏர்லி டெத்தின் டிரம்மரும் ஆஸ்தான ஆவியுலகத் தொடர்பாளருமான ஃபிரெட்டி பேல்தான் கே.சியை டரோட் சீட்டுகளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கே.சியின் சீட்டுகளை குறிபார்த்த ஃபிரெட்டி அவனை சீட்டுக் கட்டிலிருந்து டரோட் வாசித்தலுக்கான ஆய்ஞர் சீட்டொன்றை எடுக்கச் சொன்னான். கே.சி தூக்கிலிடப்பட்ட மனிதன் சீட்டை தேர்வு செய்தான். டரோட் சீட்டுகளில் முக்கியமான ஆதிப்படிவச் சீட்டுகளிலிருந்து தேர்வு செய்வதற்கு ஃபிரெட்டி ஆட்சேபித்தாலும் தூக்கிலிடப்பட்ட மனிதனே தனது ஆய்ஞராக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் சிறிதும் சந்தேகிக்காது ஸ்திரமாக இருந்தான்- அவன் தந்தை பாதசாரிகளுக்கான பாலமொன்றிலிருந்து, கீழே நெடுஞ்சாலையில் வாகனங்கள் விரைய, தலைகீழாக அவனைத் தொங்க வைத்ததே அவனுடைய முதல் பால்யகாலத்து நினைவாக அமைந்திருந்ததால். தண்டிக்கப்பட்டத்திற்கான காரணத்தை கே.சியால் நினைவுகூர முடிந்ததில்லை.. 

ஆனால் அவன் தந்தை பிறகெப்போதுமே அப்படியேதும் நடக்கவில்லை என்றும், அவனது கனவாகவோ கற்பனையாகவோதான் இருக்க வேண்டும் என்றும் அடித்துக் கூறுவார். அதை ஏதோ அகல்திரையில் டால்பி ஒலியுடன் பார்த்தது போல் அக்காட்சியின் பருண்மை அவனுக்கு அவ்வளவு துல்லியமாக நினைவிலிருந்தது: இயலுறுத் தோற்றக்கோடுகள் தலைகீழ் தொடுவானத்தில் ‘v’ வடிவத்தில் இணைந்ததையும், அவனை நோக்கி விரைந்த கார்கள் வூஷ் என்ற இறைச்சலுடன் மறைந்ததையும், “செமி” இழுவை வண்டியில் ஹார்ன் அறுதித் டிரம்பட்டொன்றின் பிளிறலுடன் ஒலித்ததையும் அவனால் மிகத் தெளிவாகவே நினைவுகூர முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்நிகழ்வின் தாக்கமே அவன் நினைவை ஆக்கிரமித்தது, – அவன் தந்தை உத்தேசித்திருந்ததற்கு முற்றிலும் மாறாக, துளிகூட அச்சுறுத்தாது, ரங்கராட்டினத்தைப் போல் திகிலளிப்பதாக. 

பல வருடங்களுக்குப் பிற்கு, செயிண்ட் லூயிஸ்சிற்கு புறத்தே, மிஸிசிப்பி நதியை காண்பதற்கு ஏதான அண்மையிலிருந்த பெரிய ராட்டினமொன்றில் அமர்ந்திருக்கையில் அவ்வுணர்வை மீட்டெடுக்கும் முயற்சியில், தொங்குகோல் வித்தை பாணியில் அதன் பாதுகாப்புத் தடையிலிருந்து தொங்க முயன்றான். தலைகீழ் கண்ணோட்டத்தினூடே காட்சிகளை உள்வாங்கிக் கொள்வதற்குள் ராட்டினத்தை இயக்கிய ஆசாமி கவலையுற்று ஆர்ப்பாட்டம் செய்ததால் கே.சியின் மரணத்திற்கே “பெப்பே” காட்டியிருக்கக்கூடிய சவாரியானது, கே.சியை ஆசிட் போதையின் உச்சத்திலிருப்போர்க்கு சற்றுமே பொருந்தியிராத பொழுதுபோக்குப் பூங்காவின் பாதுகாப்பு அலுவலகத்தில் கொண்டு நிறுத்தியது. 

தாமஸ் டிஷ்

அவனது தலைகீழ் தொங்குதல் முயற்சிகளில் இப்போதையதே மிகச் சிறப்பானது. எடையைச் சரிசமமாக பகிர்வித்து, கூடுமான வரையில் சிராய்க்காத சாதனங்கள் பகுதி காரணமென்றாலும் பெரும்பாலும் தலைகீழாக காணக் கிடைத்த காட்சியே அவ்வனுபவத்தைச் சிறப்பித்தது. முப்பது அடி தூரம் உயர்ந்த கொடிக்கம்பத்தின் உச்சத்திற்கு அவன் உயர்த்தப்பட்டிருந்தான். கிட்டத்தட்ட அவ்வரங்கின் மிக உயரமான புள்ளியாகவும் அது அமைந்திருந்ததால், பார்வையாளர்கள் அமரவிருக்கும் கல்லால் ஆன மேஜை வரிசைகள் ஒரு திசையிலும், பிரம்மாண்டமாக பரந்து கிடக்கும் அசல் போர்க்களம் மற்றொரு திசையிலும் விரிவது அங்கிருந்து காணக் கிடைத்தது. “களம்” என்று அழைப்பதுகூட அத்தனை சரியல்ல, ஏனெனில் செங்குத்தாக கீழே மரங்கள், பாறைகள் மற்றும் தற்கொலை வீழ்ச்சிகளென விரியும் காட்சியையே அவன் கண்ணுற்றான். தொங்கு சேணத்தில் கே.சி இருந்த இடத்திலிருந்து இலைகள் அடர்ந்து கிடந்த மர உச்சிகளைக் கடந்து அவ்விடத்திற்கு பெயரளித்த அசல் “படுகொலைப் பாறையை” அவனால் பார்க்க முடிந்தது. மீள்-நிகழ்த்துனர்கள் தங்கள் சடலங்களைக் கொண்டு – அந்த தூரத்திலிருந்து அவை மிகத் தத்ரூபமாகவே இருந்தன -அதை அலங்கரித்திருந்தார்கள். இரக்கோயர்கள் வெட்டிச்சாய்த்த யாங்கீ குடிப்படை வீரர்களையே அச்சடலங்கள் நகலித்தன. 

கண்களை இடுக்கிப் பார்த்தால் உண்மையிலேயே தலை சீவப்பட்டிருப்பதைப் போல் காட்சியளித்த சடலமொன்றை அவனால் பார்க்க முடிந்தது. பிரொஃபெஸர் ஹாட்ச்சின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்காரர்களுக்கு உண்மையிலேயே அதிக மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 

அந்த பழங்குடி இரக்கோயர்கள் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. போரின் பெரும் சேதம் அனைத்துமே அங்கே அந்த ஒற்றை செங்கருப்புப் பாறையின் பக்கவிளிம்பின் கீழேதான் நடந்தது என்பது, புரட்சிப் போர் மற்றும் பழங்குடி அமெரிக்கர்களின் சித்திரவதை முறைகளின் ஒரு வித வல்லுனரான ப்ரொஃபெஸர் ஹாட்ச்சின் நண்பர் அலிசனின் கூற்று, மலையின் பிற பகுதிகளில் காயமுற்றிருந்த குடிப்படை வீரர்கள் அங்கு மருத்துவ பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்டதால், எஞ்சியிருந்தவர்களில் தப்பிக்க முடிந்தவர்களெல்லாம் தப்பிச் சென்றபின், இந்தியர்களால் அக்கள மருத்துவமனையையும் அதிலிருந்த காயமுற்றவர்கள்  74 பேரையும் கண்டறிந்து வெட்டிச் சாய்க்க முடிந்தது. அதனால்தான் அவ்விடம் படுகொலைப் பாறை என்று பெயரிடப்பட்டது. ஆலிசன் சுட்டிக்காட்டியது போல், வரலாறென்பது எப்போதுமே வெறும் ஆயிரக்கணக்கான பெயர்கள் தேதிகளின் தொகை மட்டுமே அல்ல. 

———————————————-
Source / Further Reading

Thomas M. Disch, The First Annual Performance Art Festival at the Slaughter Rock Battlefield, The Hudson Review, Vol. 50, No. 1 (Spring, 1997)

(தொடரும்)

Series Navigationஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2 >>

One Reply to “ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.