வைரம் பாய்ந்த மரம்

இரா. கவியரசு

வைரம் பாய்ந்த மரம்

காதலை வைத்துக் கொண்டு
என்னதான் செய்வது
கனிவதற்குள் விழுங்கிவிட வேண்டும்
அழுகி விட்டாலோ
விதையை சூழும் துயரம்
ஒவ்வொரு பூவையும் ஆக்கிரமிக்கும்.
தூங்காத இலைகளின் கண்களுக்கு
மருத்துவனின் பாடல்
ஆறுதல் அளிப்பதில்லை
அடுத்தடுத்த இலைகள் நோக்கி நகர்பவன்
குழம்பி நிற்கும் மரங்களின் வாயில்
பிளாஸ்திரியை ஒட்டுகிறான்
நேரே வளரும் மரம்
வைரம் உள்ளே ஒளிரும் போதும்
பக்கத்து வீடுகள் நோக்கி
கிளைகளைத் தாழ்த்தும் போது
ஆயுதமேந்துகின்றன மரங்கொத்திகள்
தூய வைரம்
உள்ளே அறுத்தெடுக்கிறது
அழுகிய சதையை.
கிளைகள் மண்ணில் விழுந்த பின்பும்
விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை
எப்போதும்
கிளைகளை உடையதுதான்
என்று உணரும் வைரம்
மரத்திலிருந்து நிரந்தரமாகப் பிரியும் போது
வைர வியாபாரிகள் சந்தையில்
சிறிது நேர கவன ஈர்ப்புக்குப் பிறகு
உடைக்கப்பட்டு நகையாகிறது
அப்போது
அங்கு துளியும் இருப்பதில்லை
பழைய வைரம் .


நித்தியத்தின் வாயில்

தூங்கிக் கொண்டிருக்கும்
குழந்தையின் வாயிலிருந்து
தப்பித்துக் கொண்டே இருக்கிறது
அம்மாவின் முலை
வான் பருக விழையும் சிறு நெஞ்சம்
கை கால்களை உதைத்தாலும்
நித்தமும் இருளைத் தவிர
வேறெதையும் தொடுவதில்லை.
உள்ளே இம்சிக்கும் இந்த மர்மக்குரல்
இதுபோலவே
முன்பு பலரையும்
இம்சித்து வெளியேறிய ஒன்றுதான்.
திடீரென வீட்டின் சுவர்களை இடிப்பது விண்மீன்களை
எந்தத் தொந்தரவும் செய்வதில்லை
அணிந்திருக்கும் சட்டை உறுத்துவது இயல்பு
அவிழ்த்தெறியும் குளியலறையை
ஒவ்வொரு அடியிலும் உருவாக்க
யாரும் இங்கே நிர்ப்பந்திக்கவில்லை.
நிம்மதியாக சுவாசிக்க முடியாமல்
தடுமாறுகிறது நுரையீரல்
கண்ணாடி முன்பு
புதிதாக உருவாக்க முயலும் சுவாசக்காற்றில்
சிரித்துக்கொண்டே நெளிகிறது
தந்தையின் மூச்சு.
இறப்பை உயிரோட்டமாக வரைய
கொலைக்களங்களில் நிற்க வேண்டியதில்லை
வாழ்ந்து முடித்தவனின் வீட்டுக்கூரையிலிருந்து
சப்தமற்று வெளியேறும்
கடைசிச் சொல்லுக்காக
காத்திருந்தால் போதும்.
உனக்குத் தெரியாமல்
அது மேல்நோக்கிச் சென்றுவிடும் கணத்தில்
நித்தியத்தின் வாயிலில்
தோற்றபடி நீ நின்று கொண்டிருப்பாய்

–இரா. கவியரசு

One Reply to “வைரம் பாய்ந்த மரம்”

Comments are closed.